– நிலவளம் கு.கதிரவன்

     முத்தலாக் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பினைத் தொடர்ந்து, சமீபத்தில் அனைவராலும் விவாதிக்கப்பட்ட, தனி நபர் அந்தரங்கம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் வழியாக தனிநபர் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

     இத்தகைய தீர்ப்பிற்கான தேவை ஏன் தற்போது எழுந்தது என்றால் சற்றே பின்னோக்கிச் செல்ல வேண்டும்.  ஆதார் அடையாள அட்டை தொடர்பான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டாசாமி அவர்கள் தொடுத்திருந்த வழக்குதான் தனி மனித அந்தரங்கத்துக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு உண்டா என்ற விவாதத்திற்கு வழி வகுத்தது.

     நமது இந்திய அரசியல் சட்டமானது நமக்கு சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது.  சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சமய சுதந்திர உரிமை, பண்பாடு மற்றும் கல்வி உரிமை, மற்றும் அரசியலமைப்பிற்கு தீர்வுகாணும் உரிமை போன்ற உரிமைகள் சட்டப் பிரிவு 14 முதல் 32 வரையிலான பகுதியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 ஆனால் அந்தரங்கம் என்று சொல்லப்படுகின்ற தனியுரிமை சார்ந்த சட்ட விளக்கம் எந்த அகராதியிலும் இல்லை. எனினும் அடிப்படை உரிமை சார்ந்த விளக்கங்களை நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 மற்றும் 21வரையறுத்துக் கூறியுள்ளது.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது பிரிவு ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட அந்தரங்கம் தொடர்பான தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதைத் தடைசெய்துள்ளது. தனிநபர் அந்தரங்கம் தொடர்பான வழக்கில் 1954இல் 8 நீதிபதிகள் கொண்ட அமர்வும், 1962இல் 6 நீதிபதிகள் கொண்ட அமர்வும் தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை அன்று எனத் தீர்ப்புரை வழங்கியது.  தற்பொழுது இதில் சிக்கல் ஏற்படவே, மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் வழியே விவாதித்து அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அனைவராலும் இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால் எது அந்தரங்கம் என்பதில்தான் பிரச்சினையே.  அரசாங்கம் உரிமைகளை உருவாக்குவதில்லை. அவற்றை அனுபவிக்கக் கூடிய சூழலையே ஏற்படுத்திக் கொடுக்கிறது.  இதுதான் உரிமையின் இயல்பு.

ஆரம்பகாலத்தில் நமது உரிமைகளைக் கட்டுப்பாடற்ற முழுமையோடு அனுபவித்து வந்த நாம், நாகரிகச் சமூக வளர்ச்சியின் காரணமாகவும், மக்கள் தொகைப் பெருக்கத்தின் விளைவாகவும்  இதற்கொரு தீர்வாக அரசாங்கம் சட்ட வரையறை செய்தது.

  இது தொடர்பில் மேற்படி பட்டியலிடப்பட்ட உரிமைகளை அனுபவிக்க நமக்கு வழிவகை செய்தது.  அரசியலமைப்பு ஏற்பட்ட காலத்தில் உள்ள சூழ்நிலையில் உரிமை சம்பந்தமாகத் தற்பொழுது ஏற்பட்டுள்ள ஐயங்கள் ஏற்படவில்லை.  கால மாற்றத்தில், நாகரிகச் சமுதாயமாக மேம்பட்ட சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தில் சில மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் பாதுகாப்புக் கருதி ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

     அந்தரங்கம் என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது.  அது உடல் சார்ந்ததாக இருக்கலாம்; அல்லது தனியரின் தகவல் சார்ந்ததாக இருக்கலாம்.  உடல் சார்ந்த அந்தரங்கம் என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.  ஆனால் தனியரின் தகவல் சார்ந்தது என்பது மக்கள்தொகைப் பெருக்கம், தேசப் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் தரவுகள் அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

     இப் பிரச்சினையின் மையப் புள்ளியான ஆதார் தொடர்பான விபரங்கள் அனைத்து பயன்பாடுகளுக்கும் அவசியம் என மத்தியஅரசு கேட்பதுதான். இதில் எந்தத் தவறும் இல்லை.  ஆனால் அரசிடம் அளிக்கின்ற தகவல்கள் பொதுவெளியில் பரவாமல் காப்பது அரசின் கடமை எனக் கேட்பதில் நியாயம் உள்ளது.  இன்றைய எண்ம உலகத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ சமூக ஊடகங்கள், இணைய தளங்கள், மற்றும் திறன்பேசி வழியாக நமது பொது தகவல்களைத் தினமும் அளித்துக்கொண்டு வருகிறோம்.  இதன் வழியே உருவாகும் சாதக பாதகங்களை நாம் எண்ணிப் பார்ப்பதும் இல்லை.  இது தொடர்பில் அரசிடம் முறையிடுவதுமில்லை.

    சமூக ஊடகங்கள், இணையதளங்கள், மற்றும் திறன்பேசி வழியாக நாம் செயல்படுவது தினமும் கண்காணிக்கப்பட்டுதான் வருகிறது.   அது அரசு வழியாகவோ அல்லது மேற்கண்ட வசதிகளை நமக்கு வழங்கும் நிறுவனங்கள் மூலமாகவோ.  இதில் எல்லாம் நமக்கு எவ்வித அக்கறையும் இல்லை.  ஆனால் அரசாங்கம் பாதுகாப்புக் கருதிக் கேட்கும்போது அடிப்படை உரிமை நம் கண்முன் வந்துவிடுகிறது.

     அந்தரங்கம் அடிப்படை உரிமை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால் எது அந்தரங்கம் என்பதில்தான் பிரச்சினையே.  முதலில் இதில் தெளிவு வேண்டும்.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் வழியாக ஆதார் தொடர்பான வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்;  என்றாலும் மக்கள் வழங்கும் தகவல்கள் பொதுவெளியில் கசியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என அரசை கேட்டுக் கொள்வதுதான் நமது முதன்மையான கடமையாக இருக்க வேண்டும்.  தேசப் பாதுகாப்பு, குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வுகளுக்கு ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் தமது தரவுகளை அளிப்பது மிகவும் அவசியமாகும்.

     அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்கும் நாம் ஓட்டுரிமை, சொத்துரிமை போன்றவற்றில் கண்டும் காணாமல் வாளாவிருக்கிறோம்.  தனி நபர் உரிமை சம்பந்தமான இவ்வழக்கு விசாரணையில் இரண்டு நீதிபதிகள், சொத்துரிமை என்பது அடிப்படை உரிமையாக இருந்திருக்க வேண்டும் என்றும், ஓட்டுரிமை என்பது சட்ட உரிமையாகத்தான் உள்ளது என்றும் இவ்விரண்டு உரிமைகளும் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும் என்று கூறியதையும் நாம் கவனித்தில் கொள்ள வேண்டும்.  சொத்துரிமை சம்பந்தமாக மத்தியஅரசு விளக்கம் அளிக்கும்போது, விவசாயச் சீர்திருத்தம் மேற்கொள்ளவும், பொதுப் பணிக்காக, எந்தச் சொத்தையும் அரசு ஆர்ஜிதம் செய்யவும், நஷ்ட ஈடு என்ற பெயரில் அல்லாமல் ஒரு தொகையை அளிக்கவும் 1978ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டது.  ஆனால் உச்ச நீதிமன்றம் மேற்கண்ட விளக்கத்தை ஏற்காமல், இதனால் பாதிக்கப்படுவது சிறிய அளவிலான விவசாயிகள்தாம் எனக் கூறிச் சொத்துரிமையையும் அடிப்படை உரிமையில் சேர்க்க வேண்டும் எனக் கூறியது.

    எனவே இதுபோன்ற தனி மனிதரின் பிற உரிமைகளையும் அடிப்படை உரிமையாகப் பெற நமக்கு விழிப்புணர்வு வரவேண்டும்.  உச்ச நீதி மன்றத்தின் இத்தகைய தீர்ப்பின் வழியாக இனிவரும் வழக்கு விசாரணையின்கீழ் அளிக்கின்ற தீர்ப்பிலும் இது எதிரொலிக்கும் என நம்பலாம்.  இதில் நமக்குள்ள முக்கியக் கடமை எதுவென்றால் நாம் அளிக்கின்ற பொதுத் தகவல்களின் நம்பகத் தன்மையைக் காப்பது, பொது வெளியில் கசியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என மத்திய அரசை கேட்பதாகத்தான் இருக்க வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.