“ஸ்ரீராம தர்ம சரிதம்” (6)
மீ.விசுவநாதன்
பகுதி: ஆறு
பாலகாண்டம்
காவியம் இயற்றினார் வால்மீகி
உருவாய் தருமம் உலகில் பிறந்து
திருவாய் நடந்த தெய்வக் கதையை
அகத்தி லாழ்த்தி அமுதாய்ச் சொல்ல
சுகமாய்த் தனித்துச் சூழல் மறந்து
நாத வீணை நலந்தரும் இசையை
வேத நரம்பெலாம் விருப்புடன் கேட்டல்போல்
வால்மீகி உள்ளே வந்து குவிந்தது
ஆல்போல் வம்ச அத்தனை செய்தியும்
உண்மை ஒலியாய் உரக்கக் கேட்டது !
மண்ணில் நடந்த மனித தருமனை
கண்ணில் ஒற்றிக் கவிதை செய்ய
எண்ண எண்ண இராமன் விரிந்தான் !
உண்ணும் உணவிலும் உத்தமன் ருசியைத்
திண்ணமாய் உணர்ந்து தீட்டினான் காவியம்!
சீதையின் மகாவரலாறு
பிறப்பும் வளர்ப்பும் பிரிந்த நிகழ்வும்
துறந்த முனிகளின் தூய வழியும்
சிறந்த நட்பும், சிறிய செய்கையால்
இறந்த உயிரிலும் இருந்த மேன்மையும்,
ஆசை கொண்ட அற்ப உறவும்
ஆசை விட்ட ஆண்மைத் திறமும்
அப்படியே ஏதும் அழுக்கின்றிச் சொல்லி
இப்படிதான் வாழ்ந்தான் இராமன் என்று
எடுத்துச் சொன்ன ஈடிலாச் சரித்திரம்
தொடுத்துக் கொடுத்த தூயோன் வால்மீகி !
“இலவ-குசன்” இசைத்த இராமாயணம்
இராம கதையை எழுதி முடித்தவன்
நாம மேன்மையை நாட்டு மக்கள்
அறிந்திடச் செய்ய ஆசை கொண்டார் !
செறிந்த ஞானம் சிறந்த பண்புடன்
இணைந்து விளங்கும் “இலவகுச” ரெட்டையர்
இணைந்திதைப் பாடினால் எப்போதும் உயிர்ப்புடன்
இருக்கு(ம்) என்று நினைத்த வேளை
உருக்கும் இசையால் உலகை மயக்கும்
“இலவனும் குசனும்” இணையிலா முனிமுன்
தலைவணங்கி நின்றனர் ! தாயாய்த் தந்தையாய்
தானே இருந்து தங்களை ஆக்கிய”ஆ
சானே” என்றவர் தாளினைப் பற்றினர் !
சீதையின் வரலாறைச் சிறப்பாகப் பாட
மேதைகள் கிடைத்ததாய் மிகவும் மகிழ்ந்தார் !
படிப்பதற்கும் நன்றாகப் பாடுதற்கும் ஏற்ற
துடிப்பான குழந்தையெனப் போற்றித் தேர்ந்தார் !
நன்றாகக் கற்று ஞானம் பெற்றனர் !
ஒன்றாக இருவரும் ஊரூராய்ச் சென்று
இராமா யணத்தை இசையுடன் வழங்கினர் !
கிராம மக்களும் கீர்த்திமிகு முனிகளும்
பக்திப் பெருக்கிலே பதறாது கேட்டனர் !
புத்தியில் தருமநெறி புதைத்துக் கொண்டனர் !
பரிசுப் பொருள்களைப் பாடிய பிள்ளைக்குப்
பெரிய வாழ்த்துடன் பிரியமாய்த் தந்தனர் !
“பிற்காலம் இக்கதை பேர்சொல்லும்! ஊன்றிக்
கற்றோரின் கவலைகள் களியாக மாறும் !”
என்று முனிவர்கள் இனிதுற வாழ்த்தினர் !
கன்றுக ளிருவரும் கர்வம் துறந்தனர் !
அந்த அயோத்தி அரசன் இராமனும்
இந்தக் கதையை தெருவோரங் கேட்டு
அரச சபைக்கு அழைத்துவரச் சொன்னார் !
முரசு முழங்க முகத்தில் சூரிய
குலமே ஒளிர குழந்தைகள் வந்தனர் !
நிலவே இரண்டாய் நிலத்தில் நிற்பதை
அனைவரும் பார்த்து அதிச யித்தனர் !
இனியவன் இராமன் இப்படிச் சொன்னார்”
“மங்களங்கள் வாரி வழங்கிடும் கதையை
உங்களுக்காய் இசைக்க உள்ளனர் இவர்கள் !
நானும் கேட்டேன் நல்லவள் சீதையின்
மானங் காத்த மகத்தான வரலாற்றை !
மீண்டும் என்மனம் கேட்கத் துடித்தது
ஆண்ட, ஆளும் அயோத்தி அரசரின்
இரகுகுல சரித்திரம் ரத்தின ஒளியுடன்
இரகுகுல “லவகுசன்” இசையிலே கேட்கலாம் !”
குழந்தைகள் கதையைக் கூறத் தொடங்கினர்!
குழந்தைபோல் இராமனும் முன்னே அமர்ந்து
கதையில் கரைந்தார் ! கவனம்
சிதையா சபையும் சேர்ந்து கொண்டதே ! (44)
(தர்ம சரிதம் வளரும்)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் மூன்றாவது, நான்காவது பகுதி நிறைந்தது)