படக்கவிதைப் போட்டி (123)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
முருகானந்தன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.08.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
கோமாதா என் குலமாதா என்று சொல்வதில்தான் பெருமை
தனியே பசுவினை வீதியில் உணவுக்காக அலையவிடுவது சிறுமை
நான் பால் கொடுத்தால்தான் எனக்கு நல்ல உணவு
பாலை நிறுத்தினால் அலையவிடுவதோ நடைபாதைத் தெருவு !
வயிறுக்காக கண்டதை தின்று நான் உயிர் வாழ்கின்றேன்
என் உடம்பு பாழானாலும் ஊசிப் போட்டு பால் கறக்கின்றான்
தவிர, வைக்கோல் கன்றை வைத்தும் ஏமாற்றி பால் கறக்கின்றான்
ஏனோ, இன்று வரை காப்பாற்றியதற்கு நான் பாலை கொடுத்தேன் !
என் பாலிலும் தண்ணீர் கலந்து, கலப்படம் செய்து விற்கின்றான்
என் முதுமையை உணர்ந்து என்னை தெருவில் அலைய விடுகிறான்
என் கன்றுகளை சொத்தாக கொடுத்து அவனை மேம்படுத்தினேன்
என்னை சொத்தையாக நினைத்து அடிமாடாய் நினைக்கின்றான் !
நம் உயிரையும், உடலையும் வளர்ப்பது தாயும், பசுவுமே
பால் தரும்வரை அதனை தெய்வமாய் நினைக்கின்றோம்
முதிர்ந்த பசுவினை கோசாலையில் விட தோன்றவில்லை
தாயை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்துவர மனமில்லை !
பறவைகளும், மிருகங்களும் ஜாதி மதம் பார்ப்பதில்லை,
பணத்தால், ஏழை, பணக்கார ஜாதி தோன்றாமல் இல்லை
தாயாரையும், பசுவினையும் தெய்வமாக கருதவில்லை
ஆறறிவிற்கும் , ஐந்தறிவிற்கும் இவ்வுலகில் மதிப்பில்லை !
. ரா.பார்த்தசாரதி
விதியோ?
‘பசு பால் கொடுக்கும்’ என்றுதான்
பள்ளியில் கற்றோம்.
பசுவின் பசி பற்றியும்
அதன் உணவின் ருசி பற்றியும்
பாடத்தில் இல்லை.
புல்லும், நெல்லும் விளைந்த மண்ணில்
கட்டிடங்கள் முளைத்துவிட்டன.
இந்த,
நகரப் பசுக்களுக்கு
ருசிக்க அல்ல, பசிக்குக்கூட,
எத்தனை தேடியும், பாவம்,
கழிவுகள் மட்டுமே காணக் கிடைக்கின்றன.
நெகிழியைத் தின்று கழிந்து சாக விதியோ?
‘கோ மாதா’ என்று போற்றுதலும் வேண்டாம்.
அடிமாடு என்று அழித்தலும் வேண்டாம்.
அது பற்றியதான
அரசியல் உரசல்களும் வேண்டாம்.
நம் போல்
ரத்தமும் சதையும் கொண்ட
இன்னொரு உயிர்.
வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே.
(நெகிழி = பாலித்தீன் காகிதங்கள்)
அ.இராஜகோபாலன்
பட்டணந்தான்…
கழனியில் இன்று பயிரில்லை
கட்டிடம் பயிராய் வளர்ந்ததுவே,
உழவனும் இங்கே தங்கவில்லை
ஊரை விட்டே போய்விட்டான்,
பழகிய மாடும் அவனுடனே
பட்டணம் வந்து சேர்ந்ததம்மா,
வழக்கமாய்த் தின்னும் புல்லில்லை
வாய்க்குக் கிடைத்தது குப்பைகளே…!
-செண்பக ஜெகதீசன்…
ஒரு பசுவின் சுய சரிதை
‘கோ’ என்றால் குலமகளாகக்
கொண்டாடிய தேசம் ஒன்றில்
கன்றுக்குக் குட்டி யாக நானும்
அன்றொரு நாள் அவதரித்தேன்
பச்சைப்பசேல் கழனித் தோட்டம்
படுத்துறங்க மாட்டுத் தொழுவம்
பழகித் திரிய அத்துணை சொந்தம்
பண்ணை வீட்டில் நாளும் இன்பம் !!!!
வளமை எல்லாம் வானில் மறைய
வந்ததன்றோ வறட்சியும் பஞ்சம்
நதி நீரைத் தடுத்க ஓர் கூட்டம்
எரிவாயு எடுக்க ஓர் கூட்டம்
அவரவர் செயும் அரசியல் சூதில்
பகடைக் காயானதினாலே
பல தூரம் நடந்து நடந்து
அபலை நான் நகரம் சேர்ந்தேன்
சிறு புல்லும் தென்பட வில்லை
சீண்டு பவர் எவரும் இல்லை
பெரு நகரின் பேருந்துக் கிடையில்
நடப்பதுவே தினம் ஒரு தொல்லை
அடைக்கலம் புக தொழுவமும் இல்லை
அணைத்துக் கொள்ள உழவனும் இல்லை
எஞ்சிய தென்றன் உணவாய் இன்று
எச்சில் குப்பை கழிவுகள் மட்டும் !!!!
பட்டணத்தில் புல் முளைக்காது !
சி. ஜெயபாரதன், கனடா
கெட்டுப்
பட்டணம் போ !
பட்டி யெல்லாம் வெறும்
பாலை யானது !
ஆறெல்லாம் நீரின்றி
அழுது கொண்டி ருக்குது !
மழை யின்றிப்
பட்டியிலே புல் இல்லை !
பட்டணத்தில்
பச்சைப் புல் முளைக்குமா ?
கண்ணீர் வரவும்
தண்ணீர் இன்றி முகமும்
காய்ந்து விட்டது !
பட்டணத்தில் பட்டினிக்குப்
பஞ்சம் இல்லை !
லஞ்சம் வாங்கிய அரசினர்
லட்சாதி பதியாகிக்
கோடீஸ்வர ராகிச் சிறையில்
வாடி வதங்கி
தேடுகிறார் தெய்வத்தை !
பால் கறந்த பசு மாடு
பட்டினியில்
தோலும் எலும்பு மானதில்
வியப்புண்டா ?
புல் முளைத்துப் பசு மேயும்
பொற்காலம்
புலர்வது எக்காலம் ?
++++++++++++
பட்டணத்து மாடுகள் : மாடென்றால் செல்வம் என்று வான் மறை பேசும்!
மாடென்றால் தியாகம் என்று என் மன மொழி பேசும்!
அயராமல் உழைப்பவரை மாடென்று சொல்வதுண்டு!
அன்னைக்கு ஈடாய் , அவனியிலே பசுவன்றி யாருண்டு!
உதிரத்தை, அமுதாக்கித் குழந்தைக்குத் தருபவள் தாயன்றோ!
உதிரத்தை, பாலாக்கி, மனிதருக்குத் தருகின்ற. பசு மாடு தாய்க்கும் மேலன்றோ!
ஈசனை சுமப்பதும் மாடன்றோ!
நிலத்தை உழுவதும் மாடன்றோ!
தன் தோலைக் கூட செருப்பாய் தருவதும் மாடன்றோ!
தன்னைக் கொடுப்பதில், வாழைக்கீடு மாடன்றோ!
இத்தனை சிறப்புகள் இருந்தாலும் மாட்டின்
இன்றைய நிலையைப் பாருங்கள்!
வயிற்றுப் பசிக்கு கண்டதை திண்ணும்
கொடுமையை இங்கே பாருங்கள்!
காகிதம் தின்று, நமக்கு பாலைத் தரும்
அவலத்தை இங்கே பாருங்கள்!
பசு வதை சட்டம். உண்மையாய் வரட்டும்!
பசியால் மாடுகள் பரிதவித்துப் போகாமல்!
உணவு தரும் உணர்வு, பட்டணத்து மனிதருக்கு ,உடனடியாய் வரட்டும்!
அன்ன தானம் மனிதருக்கு மட்டுமன்றி,
உணவு தானம் மாட்டிற்கும் நடக்கட்டும்!
ஆவின் குரல்..!
============
நஞ்சையும் புஞ்சையும் நான்கு போகமும்..
……..நலமாய் விளைந்திட்ட நன்னிலம் தான்.!
தஞ்சைத் தரணியென்று போற்றிப் புகழ்ந்த..
……..தாரணி அறிந்த நெற்களஞ்சிய நகரம்தான்.!
வஞ்சகர் கைக் குளிப்போது அடைபட்டே..
……..வயல் நிலமெல்லாம் பாழ்பட்டுப் போனது.!
தஞ்சமடைந்து தாழ்கிறோம் தரணியிலே இன்று..
……..பஞ்ச முண்டானதால்…பச்சைப் புல்லுக்கே.!
விண்ணை முட்டும் வானுயர் கோபுரம்தனை..
……..வியந்து மனிதர்கள் மட்டுமே நோக்கமுடியும்.!
பண்ணை நிலமுழுதும் பங்களாக்கள் ஆனது..
……..பச்சை வயல்களெலாம் சாலைகள் ஆனதே.!
கண்ணை முட்டும் கண்ணீர்க் காட்சியாக..
……..கழினியும் காடுமெங்கே காணாமல் போனது.!
மண்மறைக்கும் தார்சாலை யெங்கும் குப்பை..
……..மலையால் பச்சைப் புல்லுக்குக் கூடப்பஞ்சம்.!
ஆறில்லை என்றாகிப் போனது எங்கும்..
……..அனைத்தும் அறிவியல் ஆன பின்புதான்.!
சோறில்லை என்றாகிப் போனது எங்கும்..
……..நீரில்லை நிலத்தடியில் என்றாகிப் போனதாலே.!
பாரிலிலை இதுபோல் கொடுமையென…பச்சை
……..பசேலென இருந்த வயல்வெளி யழித்தசெயல்.!
ஊரில்லை பசுமைப் புல்வெளி இனிவாயில்லா..
……..உயிர்களுக்குப் பசித்தால் குப்பைதான் உணவு.!
கோவின் ஆட்சியில் ஆவுக்கும் நிலத்துக்கும்..
……..கோவிலுக்கும்…குந்தக மென்றுமில்லை மகனே.!
நாவினை யடக்கி நாங்கள் இளைத்து விட்டோம்..
……..நற்செயலாகப் பாலைக் கொடுத்தே பழகிவந்தோம்.!
ஆவின் பசிக்கு அருகம்புல்லாவது கிடைக்குமா.?
……..அம்மாவெனும் குரலில்..ஆவின்குரல் கேட்கிறதா.?
பாவின் துணையொடு புலவர்களே நீர்..ஆவின்..
……..பசிக்கொரு உபாயமுந்தன் பாட்டிலே கூறுவீரே..!
பிழை::ஊரில்லை
திருத்தம்:: ஊரிலில்லை