தானத்திலே சிறந்த தானம்!
பவள சங்கரி
மனிதர்களின் ஐம்புலன்களின் ஆகச்சிறந்த புலன் கண்கள்தான். கண்கள் இல்லையென்றால் ஏற்படும் இழப்பு ஈடுசெய்ய இயலாததொன்று.
உலகில் கிட்டத்தட்ட 3 கோடியே 70 இலட்சம் பேரின் பொழுதுகள் இருண்டே கிடக்கின்றன. பிறவியிலேயே பார்வையின்றி பிறந்தவர்கள், இடையில் நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகளால் பார்வையிழந்தவர்கள் போன்றவர்கள் இதில் அடக்கம். நம் இந்தியாவில் சுமாராக, 27 மில்லியன் பேர்கள் மித பார்வை கோளாறுகளாலும், 9 மில்லியன் பேர்கள் இருகண் பார்வையின்மையாலும், 2,60,000 குழந்தைகள் பார்வையற்றவர்களாகவும் இருக்கின்றனர்.
ஒரு முக்கியமான, மகிழ்ச்சியான விசயம் என்றால் இவர்களில் 70 சதவிகிதம் பேருக்கு மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதுதான். இந்தியாவில் மட்டும் 1 1/2 கோடி பேர் பார்வையற்றவர்கள். அதாவது உலக பார்வையற்றோர் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டும் 25 சதவீதம் பேர் உள்ளனர்.
இதில் 60% பேர் குழந்தைகள் என்பது கொடுமையிலும் கொடுமை. மொத்த பார்வையற்றவர்களில் 90 சதவீதம் பேர் 45 வயதுக்கு கீழே உள்ளவர்கள். இவர்களுக்குப் பார்வை கிடைக்கவேண்டுமானால் ஆண்டொன்றுக்கு 75 ஆயிரம் முதல் 1 லட்சம் கருவிழிகள் தானமாக தேவைப்படுகின்றன. ஆனால், கண்கள் தானமாகப் பெறக்கூடியவைகள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன.
ஆண்டொன்றிற்கு சராசரியாக 80 இலட்சம் பேர் இறக்கிறார்கள். இறையருளால் கண் பார்வை பெற்றுள்ள மனிதர்கள் பார்வையற்றோர் மீது இரக்கம் கொண்டு தங்கள் வாழ்க்கை முடிந்த பின்பு மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் கண்களை தானமாகக் கொடுக்க மனது வைத்து, உற்றார் உறவினரிடம் சொல்லிவைப்பதன் மூலம் உலகத்தில் பார்வையற்றவர்களின் எண்ணிக்கை கனிசமாகக் குறையும் என்பதே நிதர்சனம்.
கண் தானம் கொடுக்க வேண்டியதன் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவதில் இன்று பேர் சொல்லும் வகையில் முன்னணியில் இருப்பவர், பட்டாசு நகரான சிவகாசி அரிமா சங்கத்தின் பட்டயத்தலைவர் அரிமா டாக்டர் கணேஷ் அவர்கள். இதுவரை 7500 விழிகளுக்கு ஒளி வழங்க தம் தன்னிகரில்லா சேவையை வழங்கியுள்ளார். இவர் நீண்ட காலங்களாக கல்லூரி, பள்ளிகளில் தொடர்ந்து கண் தான விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறார். சென்ற 05/7/2017 அன்று தமது 1011 வது கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பெண்கள் கலை& அறிவியல் கல்லூரியில் நடத்தியுள்ளார். கிட்டத்தட்ட 3 மணி நேரங்கள் நடந்த இந்த நிகழ்ச்சியை மாணவர்களுக்கு சிறிதும் சலிப்பு ஏற்படாத வகையில், மிக அழகாகத் திட்டமிட்டு சுவையாக நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கண் தானம் குறித்த பல்வேறு தவறான தகவல்களுக்கும், ஐயங்களுக்கும் சரியான விளக்கமும் அளித்து மாணவர்களை உற்சாகப்படுத்தியதோடு, அவர்கள் சரியான முறையில் அக்கருத்துகளை உள்வாங்கியதற்கான ஆதாரங்களாக அவர்களின் பின்னூட்டங்களும் அமைந்தது பாராட்டுதலுக்குரியது!
இருளின்பிடியில் கருமையின்நெடியில்
கோடிபேர் கொத்தடிமைகளாய்
ஒளியாய் விடியுமென நாடியுள்ளோர்
விழியில் குருதியென வாடியுள்ளோர்
மொழியில் பேதமென சாடியுள்ளோரும்
அருளில் பாவமில்லையென பாடியுள்ளோர்.
பசும் மரங்களும் புல்பூடுகளும்
வண்ண மலர்களும், நீல வானும்
சிற்றலைகளுடன் நீர்நிலைகளும்
பேரிரைச்சல்களுடன் நீர்வீழ்ச்சிகளும்
உலகின் காணக்கிடைக்காத அதிசயங்கள்
அனைத்தும் மொத்தமாய் கருமையாய்
கடக்கும் கொடுமை எதிரிக்கும்
கிடைக்கக் கூடாத சாபம்.
பட்டும் பளபளப்பும் தொட்டு
உணரவியலா உச்சபட்ச இரணங்கள்
ஐந்து நிமிட தியானம் அமைதிக்கு வரமாம்
கண்ணொளியிலா வாழ்நாள் தியானம் சாபமாம்
இருளில் வாடும் வறியோருக்கு
ஒளியில் வாழ்ந்து வானமேகியோர்
மண்ணில் மக்கிப்போகும் கண்ணின்
மணியை தானமாய் அளித்து
விண்ணில் நிலையாய் உயர்ந்தோர்
நிலையைப்பெற்று புண்ணியம் கோடியும்
இயைந்து பெற்று நல்லறம் காப்பீரே!
ஈசனின் திருவடியை உவந்து பெறுவீரே!!