-மேகலா இராமமூர்த்தி

dryleaf

பசும்புல்லின் உச்சிமீது ஒய்யாரமாய் வீற்றிருக்கும் சருகை அருகுசென்று அழகாய்ப் படம்பிடித்து வந்துள்ளார் ஒளிஓவியர் திருமிகு. ராமலக்ஷ்மி. இப்படத்தைக் கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு பெண்மணிகளுக்கும் என் கனிவான நன்றி!

பச்சிலை பழுத்து மண்ணேகுவதுபோல், உடலென்னும் துச்சிலைச் சார்ந்திருக்கும் உயிரும் காலனின் அழைப்புவரும் வேளையில் உடல்நீத்து விண்ணேகுகின்றது! இலை சொல்லும் நிலையாமைப் பாடம் மானுடர் அனைவரும் கற்கவேண்டிய ஒன்றல்லவா?

புல்லையும் சருகையும் வைத்துப் புதுக்கவிதை புனையக் காத்திருக்கிறார்கள் புலவர் பெருமக்கள்; அவர்களை அவைக்கழைப்போம்!

***

”தாத்தனுக்கும் பேரனுக்கும் நடுவிருக்கும் நல்லுறவு, தொடக்கத்திற்கும் முடிவிற்குமான தொடர்கதையின் ஒரு தொகுப்பு” என்று வாழ்க்கையை அனுபவித்தறிந்த முதுமையொன்று இளமையிடம் இன்பமாய்ப் பகிர்ந்துகொள்வதைத் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. இராஜலட்சுமி சுப்ரமணியம்.

தலைமுறை

வையகம் என்ன வென்று
வாழ்ந்து பார்த்து அனுபவித்த
என் நாட்களவை நிறைவடையும்
வயோதிக வேளை தன்னில்

என்ன தான் உலகென்று
வாழ்ந்து பார்க்க வந்தவன் நீ
என் னுலகாக மாறியெனைப்
புதுப்பித்து உயிர் ப் பித்தாய் ….

என்னுள் மறைந் திருக்கும்
குழந்தை யதை எழுப்பிவிட்டு
உன்னுள் தொலைக்கச் செய்யும்
மாயம் உந்தன் விளையாட்டு!!!!

எத்தனை கவலைகள்
எண் ணத்தில் இருந்தாலும்
அத்தனையும் மறைந்து விடும்
முத்தே உன் மொழிகேட்டு….

தத்தித் தத்தி நடந்து வந்து
தாத்தாயென்றழைக் கையிலே
என்தலைமுறை”- யே உனைவாரி
முத்தம் வைக்கத் தோன்றுதடா

தாத்த னுக்கும் பேரனுக்கும்
நடுவி லிருக்கும் நல்லுறவு
தொடக்கத் திற்கும் முடிவிற்குமான
தொடர்கதையின் ஒரு தொகுப்பு

ஓய்வெடுக்கும் வயதி லென்னை
ஓயாமல் உன்தன் பின்னே
ஓட வைக்கும் ஓவியமே கேள்

ஓர் அவாவும் எனக்குள் ளுண்டு

அன்று துளிர்த் தெழுந்து
அகிலம் காண ஆசைப்படும்
பச்சைப் புல்வெளி மேல்
படர்ந்திடும் ஓர் சருகாய்

அனைத்தும் அடங்கி ஆடி ஓய்ந்து
உடல்விட்டு எந்தன் உயிர்நீங்கும் பொழுது
வலி யேதும் அறியாமல்; உனை நீங்கிப் பிரியாமல்
இன்பமே எல்லை யென்று இளைப்பாற வேண்டும்.
உன் மடிமீது நானும்
என் தலை கோதி நீயும்!!!!

***

பழுத்துவீழ்ந்த இலைகண்ட பசும்புல் இளமைச் செருக்கோடு ஏளனமாய்ச் சிரிக்க, வாழ்வின் நிலையற்ற தன்மையை புல்லுக்குப் புரியும்வண்ணம் நல்லசொல்லெடுத்துச் சருகு உரைப்பதைக் கேட்கமுடிகின்றது திருமிகு. ராதா மரியரத்தினத்தின் பாவில்.

காலைக் கதிரவனின்
ஒளி முத்துக்களைக் 
வயிற்றில் தாங்கியபடி 
வளைந்து மிளிர்ந்தன புற்கள்
அவற்றின் கண்களிலோ பெருமிதம்
பசுமைகளுக்கெல்லாம் தாமே
குத்தகை எடுத்தது போலப் பெருமிதம்
கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் பசுமை
தூர நின்ற மரத்தில் 
பழுத்துச் சுருங்கிய இலையொன்று
இனித் தாக்குப்பிடிக்கவியலாத நிலையில்
விடுதலையடைய வீசிய காற்று
அதனை எடுத்துச் சென்று
தூரத்திலிருந்த பசும் தரையில் போட்டது
தீண்டத் தகாதவனைப் போல
பசுமைகள் கொக்கரித்தன
ஏளனமாகப் பார்த்தன
இலை மெதுவாகப் பேசியது
என் தாய் மிக வலிமை மிக்கவள்
இன்று முளைத்து நாளை கருகும் புல்லல்லள் அவள்
அவள் பல நூறு ஆண்டுகள் வாழ்வாள்
பிறப்பு போல இறப்பு நிச்சயம் அது ஒரு நாள் உனக்கும் புரியும் என்றது

***

”பச்சைப் பசேல் பசுமையா? கருகிவீழும் சருகு நிலையா? இதில் எது நிலையானது…நிஜமானது? மண்ணில்தோன்றிய அனைத்தும் சருகாகி மறைவதே வல்லவன் வகுத்த விதி…இதற்கில்லை விலக்கு!” எனத் துலக்கமாய்ச் சொல்லுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

எது நிஜம் ?

கண்ணைக் கவரும்
பச்சைப் புல்தளம் நிஜமா ?
அல்லது
கருகிப் போன சருகுதான்
நிஜமா ?
சிரசிலிருந்து கீழே விழுந்தால்
உரோமத் துக்கு
ஒரு மதிப்பில்லை !
பச்சைக் கம்பளப் பின்புலம்
நிஜமா ?

போலிப் பின்புலம் !
நீர் வறண்ட பாலையில்
வேர் விடுமா
ஆல மரம் ?
பச்சைப் புல் எல்லாம் கரிந்து
நரையாகி
ஒருநாள் சருகாகும் !
சருகெல்லம் மீண்டும் கண்கவர்
பச்சை இலை ஆகுமா ?
பிறந்த ஒவ்வொன்றும் பசுமையாய்
இளமையில் கவர்ந்து
முதுமையில் கூனிக் குறுகிச்
சருகாய்ப் போகும்
இதுவே விதி !

***

”பச்சை நிரந்தரமன்று..உன் பகட்டும் நிரந்தரமன்று” என்று பசும்புல்லுக்குச் சுடச்சுட வாழ்க்கைப் பாடம் புகட்டும் அனுபவசாலியான சருகைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்!

நிலையல்ல

பச்சையாய்த்தான் இருந்தேன்,
பழுத்துதிர்ந்து சருகனேன் இன்று..

உயரத்திலிருந்தேன் ஒயிலாக,
உதிர்ந்த சருகாய் இன்று..

பரிகாசம் செய்யாதே
பச்சைப் புல்லே,
பச்சை நிரந்தரமல்ல
உன்
பகட்டும் நிரந்தரமல்ல..

வான்மழை பொய்த்தால்
வாடிவிடுவாய் நீ,
மனிதன் நினைத்தால் நீ
மாண்டுவிடுவாய்..

காற்று வந்தது,
கொண்டுசென்றது சருகை
கதைசொல்ல வேறிடத்தில்…!

சருகையும் புல்லையும் வைத்து அருமையாய் வாழ்வியல் உண்மைகளை விளம்பியிருக்கின்றனர் நம் வித்தகப் புலவர்கள்; பாராட்டுக்கள் அவர்களுக்கு!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது அடுத்து…

நிலையில்லா நிலை

இலையாய் நான் இருந்த கதை
கேளாயோ பச்சைப் புல்வெளியே!
பூமித்தாய் மடியினிலே விதை ஒன்று
அழகுச் செடியாய் பிறந்ததம்மா!
அச் செடியில் தளிர் இலையாய் இருந்து
வந்த தங்க மகன் நானம்மா!
மொட்டோடும், மலரோடும்

ஆடி மகிழ்ந்ததும் நிசமம்மா!
காயோடும், கனியோடும்
களித்துக் கிடந்ததும் உண்டம்மா!
மரப் பெண்ணின் மானம் காக்க
நானே ஆடையாய் இருந்ததும் உண்டம்மா!
காற்றுத் தேவன் ஆணைப்படி
பூமியில் விழுந்தேன் நானம்மா!
புதிய இலைகள் வாழ்வதற்கு
பழைய இலை நான் உதிர்ந்து விட்டேன்!
சருகாய் நானும் உலர்ந்து விட்டேன்!
மண்ணில் கலந்து மறையுமுன்னே!
மனதில் பட்டதைச் சொல்லிவிட்டேன்!
’நிலையாமை ஒன்றே நிலை’ என்னும்
உண்மை நானும் உணர்ந்து விட்டேன்!
மனிதர்கள் உணர்ந்திட நான் உரைத்தேன்!
வாழ்ந்து முடித்த மனிதர்களே!
வாழ்க்கைத் தத்துவம் தெளிந்திடுங்கள்
இளைய தலைமுறைக்கு இடம் கொடுங்கள்!
இளைய தலைமுறையே, மூத்த தலைமுறை
இளைப்பாற, இதமாய் அவர்களைத் தாங்கிடுங்கள்! !

 ’பழையன கழிதலும் புதியன புகுதலுந்தானே’ வாழ்க்கை நியதி? அதற்கு இலைகளும் விதிவிலக்கிலையே! ’நிலையாமை ஒன்றே நிலையானது’ எனும் வாழ்க்கைத் தத்துவத்தைத் தன்கவி வழியே நம்செவிபுகச் செய்திருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 122-இன் முடிவுகள்

  1. நெஞ்சார்ந்த நன்றிகள், வல்லமைக்கு, வல்லமை ஆசிரியருக்கு, இந்த நிழற் படத்தை எடுத்த திருமதி.ராமலெட்சுமி அவர்களுக்கு, அழகுக் கவிதைகள் படைத்துத் தரும் என், சக கவிஞர்கள், கவிதாயினிகளுக்கு!!! .முக்கியமாக திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு, உளம் நிறைந்த நன்றி.

Leave a Reply

Your email address will not be published.