இந்த வார வல்லமையாளர்! (234)
சங்கர் கொலை குறித்த நிகழ்வில் பேசிய எவிடன்ஸ் கதிர், “இளவரசனின் திவ்யா, கோகுல்ராஜின் ஸ்வாதி ஆகியோர் இன்று நம்முடன் இல்லை.. ஆனால் சங்கரை இழந்த கெளசல்யா இன்று நம்முடன் இணைந்து நீதிக்காக போராடிக்கொண்டு இருக்கிறார். தேசிய சட்ட ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் ஆகியவை சாதிய படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தும், இன்னும் இந்த அரசாங்கம் அதை நிறைவேற்றாமல் கிடப்பில்போட்டு வைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் 22 மாநில அரசுகள் தங்களின் மாநிலங்களில் சாதியப் படுகொலையில் நிகழ்வதை ஒப்புக்கொண்டபோதும், கலப்பு திருமணங்கள் அதிகம் நடக்காத மாநிலங்களில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழக அரசு தங்கள் மாநிலத்தில் சாதிய படுகொலைகள் நிகழ்வதே இல்லை என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 175 சாதிய படுகொலைகள் இங்கு அரங்கேறி உள்ளன. அவற்றில் கொலையுண்டவர்களில் 80% பேர், தலித் இளைஞர்களைக் காதலித்து மணமுடித்தப் பெண்களே. ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தாலும் சாதி எதிர்ப்புக்காகத் தங்களின் இன்னுயிரை நீத்த அந்த பெண்கள் அனைவரும் தியாகிகள் தான்.
சங்கரின் படுகொலைக்கு பிறகு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரண தொகையில் சுமார் 1.75 லட்சம் ரூபாய் இன்னும் வரவேண்டியுள்ளது. இருந்தாலும் கொலை நடந்து ஒரு வருட காலம் ஆகியும், குற்றவாளிகளுக்குப் பிணை கிடைக்காமல் பார்த்துக்கொண்ட அரசு தரப்பு வழக்கறிஞர்களை நாம் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்.
திரு வின்செண்ட் ராஜ் அவர்களுக்கும், சரியான தேர்வு செய்த செல்வனுக்கும் என் வாழ்த்துக்கள், இதன் தொடர்பாக ஒரு கோப்பு கட்டியிருக்கிறேன். நன்றி.