இன்னம்பூரான்

ஜூலை 14, 2917

unnamed

கறுப்புப்பணம் கூடு விட்டு கூடு பாய்வது பல்லாண்டு பல்லாண்டுகளாக தணிக்கைத்துறையில் எங்கள் கண்களை உறுத்தும். வருமான வரி, கலால் வரி, சுங்கவரி ஆகியவை நான் 1955ல் தணிக்கைத்துறையில் சேர்ந்த போது, ‘தணிக்கைக்கு அப்பாற்பட்டவை, கிட்ட வராதீர்கள்’ என்று கதறினார்கள்; எங்களை உதறினார்கள்; அலறினார்கள். விடாக்கொண்டன், தொடாக்கொண்டன் கதை தான். எங்கள் துறை முள்ளை முள்ளால் எடுத்தது. பிறகு என்ன? ‘அம்புட்டுக்கொண்டான் தும்மட்டிக்காய் பட்டர்’ கதை தான்.

வருமானவரி விதிமுறைகள் பாலைத்திணை போல் கரடு முரடானவை. ஏமாற்றுபவனைக் காப்பாற்றி, ஏமாந்தவனைத் தூக்கில் போடக்கூடிய சாமர்த்தியம் உள்ள அதிகாரிகள் அந்த இலாக்காவை ஆட்டிப்படைத்ததும் உண்டு. தற்காலம் விதிகள் புரியக்கூடியவை; எளிய மொழி கையாளப்படுகிறது. தண்டனைகளும் அக்கு வேறு, ஆணி வேறாக, கூவிக்கூவிப் பிரகடனம் செய்யப்படுகின்றன. தப்புத்தவறு செய்யும் அதிகாரிகள்,வங்கி அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் செம்மையாக மாட்டிக்கொள்கிறார்கள். எங்கள் துறையின் பளு குறையலாம் அல்லது அதிகரிக்கலாம்!

இன்றைய செய்தி:

என் வங்கிக்கணக்கில் என்னுடைய ஊதியத்திற்கு மேல் எக்கச்சக்கமாக வரவு வைக்கப்பட்டிருந்தால், அது எப்படி என்று வருமான வரி இலாக்கா விசாரிப்பது அவர்கள் கடமை. நவம்பர் 9, 2016க்கு பிறகு 5.56 லக்ஷம் ஆசாமிகள் அந்த மாதிரி பினாமியாக இயங்கி, கோக்குமாக்கு செய்துள்ளார்கள். அவர்கள் மீது கேள்விக்கணை பாய்கிறது. இது இரண்டாவது கட்டம்.

முதல் கட்டத்தில், தன்னுடைய பற்பல வங்கிக்கணக்குகளைப் பற்றி மெளனம் சாதித்தவர்கள் 1.04 லக்ஷம் நபர்கள். தடபுடலாக, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் லக்ஷக்கணக்கில் வங்கியில் வரவு வைத்தவர்கள் 17.92 லக்ஷம் நபர்கள். அவர்களில் 9.72 லக்ஷம் நபர்கள் மின்னஞ்சலில் பதில் அளித்துள்ளார்கள். வருமான வரி இலாக்காவும் https://incometaxindiaefiling.gov.in. மூலம் தங்களை தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்கலாம். வருமானவரி அலுவலகத்தை முற்றுகையிட தேவையும் இன்றி வரி செலுத்துவோர் ஆன்லைன் விளக்கத்தைச் சமர்ப்பிக்க முடியும். அகப்பட்டுக்கொண்ட தும்மட்டிக்காய் பட்டர்கள் எல்லாருக்கும்

எஸ்எம்எஸ் மூலம் தாக்கீது அனுப்பப்படும். 2 லக்ஷம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் வைப்புத்தொகை தகவல் அவர்கள் தெரிவிக்கவேண்டும் என்று ஆணை.

சுருங்கச்சொல்லின்: உண்மை விளம்புக.

-#-

படித்தது: நாளைய ஹிந்து இதழ்.

சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/Flag_of_Afghanistan_%281880–1901%29.svg/1200px-Flag_of_Afghanistan_%281880–1901%29.svg.png

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *