Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 1

    – நாங்குநேரி வாசஸ்ரீ

    வாசகர்களுக்கு வணக்கம்,

    இதை நான் எழுதுவதற்கு, எங்கள் ஊரில் (நாங்குநேரி) கத்தரிக்காய் விற்று வந்த இசக்கித்தாய் என்ற பாம்பட ஆச்சி தான் காரணம்.  திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்காக நாங்கள் பயிலும்போது, ஒவ்வொரு முறையும் திருவள்ளுவரைக் காண்பித்து, இந்தச் சாமி யாரு? இவுங்க சொன்னத தமிழ்ல சொல்லு தாயி. நானும் கேட்டுக்கிடுவேன் இல்ல என்பாள்.  அவளைப் பொறுத்தவரை அவள் பேசுவதுதான் தமிழ்.  இறை எய்திவிட்ட அவள் எங்கிருந்தோ இருந்து கேட்டுக்கொண்டிருப்பாள் என நினைத்து, பல ஆண்டுகளுக்குப் பின் எழுதும் உரை இது. இதனைச் சான்றோர்கள் வாசிக்க வேண்டும் என்ற  சிறிய அவாவுடன் வல்லமை இதழுக்கு அனுப்புகிறேன். பிழை இருந்தால் மன்னிக்கவும். – நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

    குறள் 1:

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

    எல்லா எழுத்தும் ‘அ’ ல தான் தொடங்குது. (அது போல) நாம நிக்க, திங்குத, தூங்குத இந்த ஒலகத்தோட தொடக்கம் கடவுள்.

    குறள் 2:

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்

    எல்லாத்தையும் அறிஞ்ச கடவுள கும்பிடலேன்னா நீ படிச்ச படிப்பால என்ன பிரயோசனம்..

    குறள் 3:

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்

    பூ போல உள்ள மனசுக்குள்ள குடியிருக்க கடவுள நெனக்கவன் சந்தோசமா இந்த உலகத்துல நெறைய நாள் வாழுவான்.

    குறள் 4:

    வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல

    வேணும் வேண்டாம் னு நெனப்பே இல்லாத கடவுளோட திருவடிய கும்பிடுதவனுக்கு ஒருநாளும் தொயரம் அண்டாது.

    குறள் 5:

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

    கடவுளோட உண்மையான புகழ விரும்பி அறிஞ்சவனோட புத்திக்கு நல்லதும் கெட்டதும் ஒண்ணு போலத் தோணும்.

    குறள் 6:

    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்

    கண்ணு, காது, மூக்கு, வாய், ஒடம்பு ங்கற அஞ்சு பொறி லேந்தும் பிறக்குத கெட்ட ஆசைய அவிச்சு ஒழிச்சு இருக்க கடவுளோட பொய்யில்லாத ஒழுக்கத்த கடைபிடிச்சாம்னா அவன் நெறைய நாள் வாழுவான்.

    குறள் 7:

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது

    தனக்கு ஒப்பும சொல்ல ஏலாத கடவுளோட காலப் புடிச்சவன தவிர மத்தவனோட மனத் தொயரத்த மாத்துதது சுளுவான காரியம் இல்ல.

    குறள் 8:

    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது

    அறக்கடலா இருக்க கடவுள நெனயாதவன் மாறி மாறி பொறந்தும் செத்தும் பல சென்மம் எடுத்து பெறவி கடல்ல நீந்த முடியாம கெடந்து சீரளியுவான்.

    குறள் 9:

    கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை

    சோலி பாக்காத கண்ணு, காது, மூக்கு, வாய், ஒடம்பால எவ்ளோ செரையோ அது போல தான் கடவுள வணங்காதவனோட தலயும்.

    குறள் 10:

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்

    கடவுள கும்பிடுதவனால மட்டுந்தான் பிறப்புங்குத கடலுக்குள்ள நீந்தி கரைய கடக்க முடியும். மத்தவனுக்கு சிரமந்தான்.

    ******************************

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நலம்…நலமறிய ஆவல் 143

    -நிர்மலா ராகவன்

    குறையொன்றும் இல்லை

    `நம்மைப் பிறரால்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. நாமாவது புரிந்துகொள்ளப் பார்ப்போமே!’ திருமணத்திற்குப்பின் எனக்கு இந்த ஞானோதயம் பிறந்தது.

    உளவியல் அறிஞர்கள் வகுத்திருந்த கேள்விகளுக்குப் பதில் எழுதி, நானே என்னைப் பரீட்சித்துக்கொண்டேன்.

    விடைகள் எனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் ஒருங்கே அளித்தன.

    பின்னே? `முதிர்ச்சி இல்லாதவர் நீங்கள்!’ என்று வந்திருந்தால்?

    எனக்கு ஆத்திரம் வரவில்லை. அயர்ச்சியாக இருந்தது. எனது ஒவ்வொரு எதிர்மறையான பதிலையும் மாற்றும் நடத்தையை முயன்று பயின்றேன்.

    `You are very sane!’ என்று சிலர் வியக்க, அப்பயிற்சிகளை எடுத்துக்கொண்டதை ஒத்துக்கொண்டேன்.

    `உன்னிடம் குறைகள் இருப்பதை நீ ஒத்துக்கொண்டதே உனது நேர்மையைக் காட்டுகிறது!’ என்று ஒரு கவுன்சிலர் பாராட்டினார்.

    நகைச்சுவை அற்ற பெண்கள்

    `பெண்கள் தம்மைத்தாமே பார்த்துச் சிரிக்கமாட்டார்கள். அதனால்தான் வெகு சிலரே நகைச்சுவை நடிகைகளாக இருக்கிறார்கள்!’ என்று அமெரிக்க நடிகைகளைப்பற்றி ஒரு விமர்சகர் எழுதியிருந்தார். அதையே சவாலாக ஏற்று, அதைப் பொய்ப்பிக்கும் முயற்சியிலும் இறங்கினேன்.

    நம்மை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும் நிகழ்ச்சிகளை பிறருக்குத் தெரியாதிருக்க மறைப்பானேன்! அவர்களுக்கு மட்டும் அப்படி எதுவும் நிகழ்ந்திருக்காதா, என்ன!

    கதை

    நான் இடைநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, தையலும் ஒரு பாடமாக இருந்தது. ஆசிரியை மிஸஸ் ஜோன் வகுப்புக்கு வந்ததுடன் சரி. எதையும் கற்றுக்கொடுக்கவில்லை. நாங்கள்பாட்டில் அரட்டை அடித்துக்கொண்டிருப்போம்.

    முழுப்பரீட்சைக்கு வகுப்பினுள் ஆசிரியை எதிரே ஒரு சட்டை தைக்க வேண்டும் என்று அறிவித்தார் மிஸஸ் ஜோன். பெருமையாக, ஒரு கஜம் வெள்ளைத்துணியை எடுத்துப்போனேன்.

    துணியைப் பாதியாக மடித்து, கைக்கு வேண்டியதை வெட்டினால் ஒரே மாதிரி இருக்கும். இது புரியாது, நான் ஒன்று மாற்றி ஒன்று வெட்ட, பூனை ரொட்டியைப் பங்கிட்டக் கதையாக ஆயிற்று. ஒரு கை இன்னொன்றைவிட மிகச்சிறியதாக இருந்தது!

    எப்போதும்போல், “வீட்டில் தைத்துக்கொண்டு வாருங்கள்!” என்று ஆசிரியை பணித்திருக்கக் கூடாதா! அம்மாவிடம் கெஞ்சி, தைத்து வாங்கிக்கொண்டு போயிருப்பேனே! (அப்படிச் செய்தபோதும் நல்ல மதிப்பெண்களே கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்).

    என் தோழி வீட்டுக்குப் போயிருந்தபோது, அவளுடைய சித்திமார்கள், “இது என்ன, உங்கள் தையல் ஆசிரியை இவ்வளவு மோசமாக இருக்கிறாள்! நாங்கள் எவ்வளவு அழகாக துணியில் பூவேலை செய்துகொடுத்தாலும், நூற்றுக்கு நாற்பதுதான் கொடுக்கிறாள்!” என்று கோபமாகக் கேட்டார்கள்.

    என் சிநேகிதி, `அதையெல்லாம் சொல்லாதீர்கள்!’ என்று பதைப்புடன் சமிக்ஞை செய்ததை அவர்கள் பொருட்படுத்தவேயில்லை.

    நான் அவளிடம் தனிமையில் கூறினேன், “எதற்கு அவ்வளவு பயப்பட்டாய்? எனக்குப் போட்டுக்கொடுப்பதும் என் அம்மாதான்!”

    என் தாயார் தையல் வேலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தேசிய ரீதியில் பரிசு வாங்கியவர். இருந்தாலும், ஆசிரியை மிஸஸ் ஜோனுக்கு எங்கள் லட்சணம் தெரியாதா! அதனால்தான், தானே முயன்று, சற்றுக் கோணல்மாணலாக தைத்த மாணவிக்கு எங்களைவிட மிக அதிகமான மதிப்பெண்கள்!

    இக்கதையை நான் விவரிக்கையில், என் குடும்பத்தினர் சிரிப்பார்கள். (வாசகரே, நீங்கள் சிரித்தீர்களா, இல்லை, `வெட்கமில்லாமல் இதையெல்லாம் சொல்கிறாளே!’ என்று நினைத்தீர்களா? பள்ளி இறுதியாண்டுக்குப்பின் துணியில் பூவேலைப்பாடு செய்வதை அம்மாவிடமே கற்றுத் தேர்ந்தேன்).

    பலத்துடன் பலவீனமும் உண்டு

    நம் பலம், பலவீனம் இரண்டையும் ஒத்துக்கொண்டால், அதற்கு ஏற்றபடி நடக்க முடியும்.

    நம் உணர்ச்சிகள் எதனால் எழுகின்றன என்று புரிந்தால், நம்மை நாமே புரிந்துகொள்ள முடியும். உண்மையை ஒத்துக்கொள்ளும் மனோபலம் சிலருக்கு (பலருக்கு?) இருப்பதில்லை. இப்படிப்பட்டவர்களுக்குப் பொதுவான சில குணங்கள் உண்டு.

    உண்மையை மறுத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். தம்மைப்பற்றிய குறைகளை நினைப்பதற்கே அஞ்சுவதால் இப்படி ஆகிவிடுகிறது.

    அவர்களுடைய குறை என்று நினைக்கும் எதையாவது இன்னொருவர் சுட்டிக்காட்டும்போது, அதைப் பொறுக்காது, பேச்சை மாற்றுவார்கள்; அந்த இடத்தைவிட்டு நழுவுவார்கள், இல்லை, சண்டை பிடிப்பார்கள். (`நீ மட்டும் தவறே செய்வதில்லையோ?’).

    உன்னால் நான் கெட்டேன்

    ஒரு சிலர், `அவனால்தான் நான் இப்படி ஆகிவிட்டேன்!’ என்று எவர்மேலாவது பழி போடுவார்கள். இது சிறுபிள்ளைத்தனம். சிறுகுழந்தைகள்தாம், அம்மாவின் முத்துமாலையை அறுப்பது, குங்குமத்தைக் கொட்டுவது என்று ஏதாவது விஷமம் செய்துவிட்டு, அண்ணன் அல்லது அக்காள்தான் செய்தார்கள் என்று சாதிக்கும். அவர்கள் அப்போது வீட்டிலேயே இருந்திருக்க மாட்டார்கள்!

    குடும்பத்தில் அதிகாரம்

    கூட்டுக்குடும்பங்களில் அனைத்து அதிகாரமும் யாராவது ஒருவர் கையில்தான் இருக்கும். இருக்கவேண்டும்.

    நாடு என்று ஒன்று இருந்தால், எல்லா மக்களும் தம் விருப்பப்படி நடந்தால் என்ன ஆகும்? அதைச் செவ்வனே நிர்வகிக்கத்தான் தலைவர்கள் இருக்கிறார்கள். (அவர்கள் அப்படி நடக்கிறார்களா என்பது வேறு விஷயம்).

    அதேபோல்தான் குடும்பமும். அக்குடையின் கீழிருக்கும் ஒவ்வொருவரும் மனம்போனபடி நடக்க முடியுமா? அப்படிப்பட்ட குடும்பங்களில் ஒற்றுமையும் இருக்காது, தம் திறமையை எவரும் பூரணமாகப் பயன்படுத்தவும் முடியாது.

    குடும்பத்தலைவி பலருடைய நலனையும் மனதில் கொண்டு, அன்பும் கண்டிப்புமாக அவரவர் குணத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்றபடி விதிமுறைகளை அமைத்து, குடும்பத்தை நல்லபடியாக நடத்திக்கொண்டு போனால் அனைவரும் பயனடைவார்கள். அப்படிப்பட்டவருக்கு குடும்பத்தினரின் மரியாதையும் மதிப்பும் கிடைப்பதில் ஆச்சரியம் என்ன?

    பிறரது தன்மை, தேவை எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் உணர்திறன் பெண்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. எதை, எப்படி, எந்த தருணத்தில் கூறுவது என்று முதலிலேயே யோசித்துவைப்பார்கள். இப்போக்கினால் பிறர் மனம் நோகாது.

    சிலர், `நான் சொல்கிறபடி கேளுங்கள்!’ என்று அதிகாரம் செலுத்த முனையலாம். பயந்தோ, அல்லது மரியாதை கருதியோ அப்படி நடந்தால், யார்தான் சுயமாகச் சிந்திக்க முடியும்? (அதிகாரமாக நடக்கும் ஆசிரியர்களும் இதே தவற்றைச் செய்துவிட்டு, `இக்காலத்து மாணவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு!’ என்ற முடிவுக்கு வருகிறார்கள்).

    சிறுவர்கள் அவர்கள் வயதுக்கு ஏற்றபடிதான் எந்தக் காரியத்தையும் செய்வார்கள். ஓயாது நச்சரிக்காமல், `பிறராலும் நாம் செய்வதைச் செய்யமுடியும்,’ என்று நம்பி, அவர்கள் போக்கில் விட்டால் அவர்கள் தன்னம்பிக்கை தகர்க்கப்படாது. மரியாதை குன்றாது நடப்பார்கள்.

    புகழ் மட்டும்தான் வேண்டுமா!

    `நீ நல்ல அம்மா!’ என்று மனமகிழ்ந்து பாராட்டும் சிறுமி, `நீ எப்பவும் திட்டறே! பிடிக்கலே!’ என்று வேறோரு சமயம் கூறுகிறாளா?

    புகழ்ச்சியைக் கேட்க உவப்பாக இருக்கும். அதேபோல், கண்டனத்தையும் கேட்டு, அதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்தால், அதை எப்படித் திருத்திக்கொள்ளலாம் என்று யோசிக்கலாம்.

    `எனக்குப் பொறுமையே கிடையாது. அதற்கு என்ன செய்வது!’ என்று நம்மை நாமே மன்னித்துக்கொள்வதால் என்ன பயன்?

    நம் குறைகளை உணர்ந்து, கூடியவரை அவற்றை மாற்ற முயற்சி செய்யவேண்டாமா?

    அப்படிச் செய்தால், நமக்கும் பிறருக்கும் பெரும் உதவி செய்வதுபோலாகுமே!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (290)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலுடன் உங்களிடையே மனந்திறக்கிறேன். நாளொரு மேடை பொழுதொரு வண்ணமாக இங்கிலாந்து அரசியல் மேடையில் பல நிகழ்வுகள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவ்வரசியல் நிகழ்வுகளில் பார்வையாளர்களாக மர்ந்திருக்கும் மக்களின் வாழ்வில் இவைகள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்பது கேள்விக்குறியே! நடைபெறும் நிகழ்வுகள் அதனால் ஏற்படப் போகும் தாக்கங்கள் இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றுப் புத்தகத்தில் சரித்திர முக்கியத்துவம் நிறைந்த அத்தியாயமாக எழுதப்படப் போகிறது என்பதுவே உண்மை.

    ஜக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று 17.2 மில்லியன் மக்கள் ஆணையிட்டார்கள். அதுவே பெரும்பான்மை முடிவாக இருந்த போதும் வெளியேறக்கூடாது என்று வாக்களித்த 16 மில்லியன் மக்களை மறந்து விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. 2016ம் ஆண்டு நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு ஜரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா? இல்லையா? எனும் பிரச்சனைக்கு முடிவு கட்டியதோ இல்லையோ நாட்டில் புதுவகையான பிரிவினையை உருவாக்கி விட்டது என்பது உண்மை. ஜக்கிய இராச்சியத்தின் வெளியேற்றத்தை விரும்பியவர்களில் பலர் ஜக்கிய இராச்சியம் அன்றொரு காலத்தில் வகித்த உலகின் முக்கியத்துவத்தை மீண்டும் அடையும் எனும் ஒரு கனவில் இருப்பதாகவே தோன்றுகிறது.

    அன்றைய உலகிற்கும் இன்றைய உலகிற்கும் இருக்கும் வித்தியாசத்தை அவர்கள் உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை. வெளிநாட்டவரின் அளவுக்குமீறிய குடியேற்றம் ஜக்கிய இராச்சியத்தில் ஒரு பாரிய பிரச்சனையாக இருப்பது உண்மையே ஆனால் ஜக்கிய இஆராச்சியத்தின் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிகழ்வு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனும் கருத்து எந்தவகையில் யதார்த்தம் என்று தெரியவில்லை. பொருளாதார நெருக்கடிகள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளினாலும் எதிர்கொள்ளப்பட்ட நிகழ்வு அதன் தாக்கமாக நாட்டில் மக்களின் சேவைகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு ஒரே காரணம் வெளிநாட்டவர் ஜக்கிய இராச்சியத்தில் குடியுரிமை பெற்றுக் கொள்வது எனும் வாதம் முற்றிலும் உண்மையாகாது.

    இத்தகைய வாதங்களே இங்கிலாந்தை இந்த “ப்ரெக்ஸிட்” எனும் சிக்கலை நோக்கி இழுத்துச் சென்றது என்பதுவே உண்மை. சர்வஜன வாக்கெடுப்பின் போது தமது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் செய்த வன்மையான பிரச்சாரங்களினால் அவர்கள் அந்த ஒரு சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றியடைந்திருந்தாலும் அதனால் சமுதாயத்தில் மக்களுக்கிடையே ஏற்பட்ட பிரிவினைகளின் தாக்கங்கள் பலருக்கு வாழ்வில் பல அச்சங்களை ஏற்படுத்தியிருப்பது உண்மை.

    ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து அவர்களுடன் எதுவிதமான உடன்பாடும் இல்லாமல் வெளியேறுவதை பெரும்பான்மையான இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை. பிரதமர் தேரேசா மே கடந்த இரண்டரை வருடங்களாக ஜரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் முடிவாக ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார். நேற்று அதாவது ஜனவரி 15ம் திகதி அவ்வுடன்படிக்கை இங்கிலாந்து பாராளுமன்றத்தினால் 202 க்கு 432 எனும் வாக்கு வித்தியாசத்தினால் தோற்கடிக்கப்பட்டது. முன்னைய பாராளுமன்ற ச்ட்டப்பிரகாரம் இங்கிலாந்து மார்ச் மாதம் 29ம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும். இந்நிலையில் எதுவிதமான உடன்படிக்கையும் இன்றி வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோமா? எனும் அச்சம் பலரின் மனதிலும் ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் இன்று அதாவது 16ம் திகதி இங்கிலாந்து அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை இங்கிலாந்துப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கொண்டு வந்தார். அதற்கான வாக்கெடுப்பு இன்று இரவு 7 மணிக்கு நடந்தேறியது. இந்நம்பிக்கையில்லாத்தீர்மானம் அரசுக்கு ஆத்ரவாக 325 வாக்குகள் எதிராக 306 வாக்குகள் எனும் வித்தியாசத்தினால் தோற்கடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் தெரேசா மே இந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளியேறுவதற்காக தான் பாராளுமன்றத்திலிருக்கும் அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்களைத் தனித்தனியாக சந்தித்து உரையாடி எவ்விதமான் உடன்படிக்கையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிடப்போவதாக அறிவித்துள்ளார்.

    இங்கிலாந்தின் பொருளாதார நிபுணர்கள், வியாபார முகவர்கள் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையின்றி வெளியேறுவதின் எதிர்மறையான தாக்கங்களை மிகவும் விளக்கமாக எடுத்துக்கூறுகிறார்கள். ஆனால் இஅக்கிய இராச்சியத்தின் பண்டைய பெருமைகளின் வகை கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் கோஷமெழுப்புவர்களின் செவிகளில் அவை விழுந்ததாகத் தெரியவில்லை.

    சரி அடுத்த கட்டத் தெரிவுகள் பிரதமரின் முன்னால் இருப்பவை எவை?

    தோல்வியடைந்த உடன்படிக்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் வாக்கெடுப்புக்கு விடுவது

    எதுவிதமான உடன்படிக்கையும் இன்றி வெளியேறுவது

    மக்களின் தீர்ப்புக்காக இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவது

    இதில் எந்த முடிவை பிரதமர் எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இன்றைய பிரதமரின் மற்றைய கட்சிகளைக் கலந்தாலோசிப்பது எனும் முடிவை இரண்டரை வருடங்களின் முன்னரே எடுத்திருந்தால் . . . . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • நலம் … நலமறிய ஆவல் (142)

    -நிர்மலா ராகவன்

    குணத்திற்கேற்ற வேலை

    ஒருவர் தாம் அடைந்த சிறப்புகளைப்பற்றிப் பேசினால், `தற்பெருமை!’ என்று முகத்தைச் சுளிப்பார்கள். அதனால், தம் குறைகளை வெளிப்படுத்திக்கொள்வதே அடக்கத்தின் அடையாளம் என்று சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், `எனக்குப் பொறுமையே கிடையாது!’ என்று பேட்டியின்போது பெருமையாக அலுத்துக்கொள்பவர் பாலர் பள்ளிக்கோ, பள்ளிக்கூடங்களுக்கோ ஆசிரியராக முடியுமா?

    `உங்கள் பலவீனம் என்ன?’ என்று கேட்கப்படும்போது, `அப்படி எதுவும் கிடையாது!’ என்பது இன்னொரு ரகம்.

    யாராவது நம்புவார்களா, என்ன! முதலில் அவ்வேலையை எந்த விதத்திலும் பாதிக்காத பலவீனங்களை கோடிகாட்டிவிட்டு, பிறகு நம் நல்ல தன்மைகளை எடுத்துச் சொல்லலாம்.

    சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி உண்மையைச் சொல்லலாம் என்றாலும், நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பது வேண்டாமே! ஆக்ககரமாக ஏதாவது இருக்காதா, என்ன!

    `என்னை நம்பி ஒரு வேலையைக் கொடுத்தால், எப்பாடுபட்டாவது அதை நானே முடித்துவிடுவேன்,’ என்பவர் பிறருக்கும் அவ்வேலையைப் பகிர்ந்து கொடுக்க முடியாத குணத்தை, தம்மையும் அறியாது, ஒத்துக்கொள்கிறார். அப்படியானால், பிறரது கூட்டணியில் இணைந்து வேலை செய்ய எப்படி முடியும்?

    மற்றவருடன் இணைந்து செய்யும் ஒரு காரியம் வெற்றி அடையும்போது, `நான்தான் செய்தேன்!’ என்று புகழைத் தட்டிக்கொண்டுபோகப் பார்ப்பவர்களைப்பற்றி என கூறுவது!

    தலைமைப் பதவியில் இருந்தபோது, தன்கீழ் இருப்பவர்களின் முயற்சியைப் பாராட்டாது, தானே முனைந்து செய்ததுபோல் பாசாங்கு செய்தவரின் கதை இதோ!

    கதை

    என் தலைமை ஆசிரியையாக இருந்த திருமதி ராஜன் தன் கீழ் இருப்பவர்கள் – அவர்கள் ஆசிரியர்களோ, அல்லது மாணவியரோ – தவறே செய்யக்கூடாது என்று உறுதியாக நம்பியவள். நடக்கிற காரியமா!

    அவளுடைய வசவுகளைப் பொறுக்க முடியாது தினமும் யாராவது ஒருவர் அழுதுகொண்டிருப்பார். புதிது புதிதாக விதிகள் வகுத்துக்கொண்டே இருப்பாள்.

    `பைத்தியம் பிடித்துவிடும்போல் இருக்கிறது!’ என்று மூத்த ஆசிரியை ஒருவர் பொதுக்கூட்டத்தில் கூற, எல்லாரும், `நாம் மட்டும் தனியாக இல்லை!’ என்ற நிம்மதியுடன் சிரித்தோம்.

    பள்ளி ஆண்டுவிழாவிற்கு நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீன நடனம் ஆடுகையில் இரு மாணவிகள் அடிக்கடி காலைத் தூக்கவேண்டியிருந்தது. அப்போதெல்லாம், நிதானமின்றி அவர்கள் உடல் தளர்ந்து ஆடியது.

    நான் அதைத் தவிர்க்க, பயிற்சி சமயத்தில் ஒரு வழி கூறினேன்: “உடல் நேராக இருக்கவேண்டும். மூச்சை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு, அதே சமயம் ஒரு காலைத் தரையில் ஓங்கித் தட்டி, மூச்சை வெளிவிடாது இன்னொரு காலைத் தூக்குங்கள்!” (எல்லாவித நாட்டிய நிகழ்ச்சிகளும் என் பொறுப்பில் இருந்தது).

    நிகழ்ச்சியின்போது வந்திருந்த பிரமுகர், `Such perfect balance!” என்று பாராட்டினார், பக்கத்தில் அமர்ந்திருந்த தலைமை ஆசிரியையிடம்.

    ஏதோ தான்தான் அவர்களை பழக்குவித்ததைப்போல், பெருமையுடன் அவரது புகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு சிரித்தாள் அவள்.

    அவளுக்கு முன்பு இருந்த தலைமை ஆசிரியை, `எங்கள் நல்ல காலம், சிறந்த ஆசிரியை அமைந்திருக்கிறார்!’ என்று என் பெயரை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னாள். மேலும் கடுமையாக உழைக்க எனக்கு உற்சாகம் பிறந்தது. (மாணவ மாணவியரின் பெற்றோருக்கும் அறிவுரை கூறியிருக்கிறேன் – அவர்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டிய முறை சம்பந்தமாக).

    எங்களில் பத்து சதவிகித்ததினர்தான் எப்பாடு பட்டாவது நம்மை நம்பி வந்திருக்கும் மாணவிகளை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்று முனைந்திருந்தோம்.

    `பாடம் போதிப்பதுடன் என் கடமை முடிந்துவிட்டது. நான் வாங்கும் சம்பளத்திற்கு இவ்வளவுதான் செய்ய முடியும்!’ என்று ஒதுங்கும் ஆசிரியர்களே மிகுந்து இருந்தார்கள்.

    கதை

    அரசாங்கம் அளித்த சலுகையால் அயல்நாட்டிற்குப் போய் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வந்தவள் அஸ்லீனா. (பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவளாததால் கிடைத்தது அது என்று உணரும் அளவுக்கு அவளுக்கு விவேகம் இருக்கவில்லை). பிற ஆசிரியைகளைவிட தான் உயர்த்தி என்பதுபோல் அலட்டிக்கொண்டாள். பெரிய பதவி என்றால் எதுவும் செய்யாது, சுவற்றை வெறித்துக்கொண்டிருப்பதுதான் என்று நினைத்தவர்களில் அவளும் ஒருத்தி.

    ஒரு முறை, “நீங்கள் எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறீர்களே! என் பரீட்சைத்தாளைத் திருத்துவதுதானே!” என்று, அதிகாரமாக ஒரு கட்டை என்முன் போட்டாள்.

    என்ன திமிர்!

    நான் மிக மிக நிதானமாக, “நான் எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறேன்.  ஏனெனில், என் வேலையை வீட்டிலேயே செய்து முடித்துவிட்டேன். நீயும் உனக்கான வேலையைச் செய் (I suggest you do your own work!)” என்றேன். அடுத்தடுத்து நான்கு வகுப்புகளில் போதித்தபின் நான் சற்று ஓய்வாக இருந்தது அவள் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்.

    என் கண்டிப்பான பதிலை சற்றும் எதிர்பாராத அவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாது, என்னையே பார்த்தபடி நின்றாள்.

    “Anything else?” என்று தலையை நிமிர்த்தி மிரட்டலாக நான் கேட்க, விரைந்தோடினாள்.

    இம்மாதிரியாக, `இன்னும் என்ன?’ என்று கேட்பது, `உரையாடல் முடிந்துவிட்டது, நீ தொலை!’ என்பதற்கு ஒரு வழி. எங்கோ படித்தது. நம்மை துச்சமாக நினைப்பவர்களை விரட்ட நல்ல உபாயம்.

    தான் மேலானவள் என்று அஸ்லீனா கருதினாலும், ஒருக்காலும் தலைமைப் பதவிக்கோ, வேறு பொறுப்பான பதவிக்கோ உயரமாட்டாள். ஏனெனில் தன் வேலையைக்கூடச் செய்யப் பிடிக்காத சோம்பேறி அவள். குறித்த காலவரைக்குள் தன் வேலையைச் செய்து முடிக்கும் கட்டொழுங்கும் கிடையாது. தன்னையொத்த பிறரை மதிக்கவும் தெரியவில்லை. அப்படியானால், அவளுக்குக்கீழ் இருப்பவர்களை எப்படி நடத்துவாள்?

    `முடியாது!’ என்று சொன்னால் பிறருக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விடுமே!’ என்று அஞ்சுபவர்கள் ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். எல்லாமே அரைகுறைதான்.

    பொறுமையுடன் பிறர் கஷ்டங்களைக் கேட்பது நல்ல குணமாக இருக்கலாம். ஆனால், அதற்கும் எல்லை கிடையாதா?

    ஒரே வேலைப்பளு!

    வேலைப்பளுவால் மன இறுக்கம் அதிகரிக்க, பலருக்கும் பிள்ளைப்பேறு கிட்டாமல் இருக்கிறது என்று ஒரு மருத்துவர் என்னிடம் கூறினார்.

    நிறைய வேலை காத்திருக்கிறதா? எது முக்கியம் என்று எழுதி வைத்துக்கொண்டு, மிக அவசியமானதிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான். பொழுதுபோக்கிற்காகச் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்தாலும் காத்திருக்கும் வேலைகளை முடிக்க முடியும். மேலதிகாரி தாக்கினால், அது அவருடைய குறைபாடு என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஐயோ பாவம்!

    பலருடன் சேர்ந்து வேலை பார்க்குமிடத்தில் ஒரு சிலர் தம் கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். அவைகளை நாமே அனுபவித்ததுபோல் துயரடைந்தால் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கலாம். ஆனால் நம் நிம்மதிதான் கெடும். அப்படி ஒரு உணர்திறன் (sensitivity) அநாவசியம். எவ்வகையிலாவது உதவ முடிந்தால் போதுமே! அதுவும் முடியவில்லையா? சும்மா கேட்டுவிட்டுப் போகவேண்டியதுதான்.

    வீடா, வேலையா?

    வேலை நேரத்தில் வீட்டு நினைவே இருந்தாலும் வேலையில் சுணக்கம் ஏற்படாதா! இதற்குத்தான் `நிகழ்காலத்தில் இரு!’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    எந்தச் செயலில் ஈடுபடும் முன்னரும், அதிலிருக்கக்கூடிய நன்மை தீமைகளைத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

    தீவிரமான விளையாட்டா? உடலின் பல பாகங்களில் பலத்த அடி படலாம். சில நாட்களோ, மாதங்களோ வலியைத் தாங்க வேண்டிய துணிவு வேண்டும். உடல்நிலை சரியாகி, மீண்டும் அதே விளையாட்டில் ஈடுபட ஆயத்தமாகும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

    குணத்திற்கேற்ற உத்தியோகமோ அல்லது பொழுதுபோக்கோ அமைந்தால் வாழ்க்கை இனிக்கும். சலிப்பு ஏன் அண்டுகிறது!

    Share
  • சேக்கிழார் பா நயம் 20

    – திருச்சி புலவர் இராமமூர்த்தி

    இறைவன் திருவருள் விருப்பத்தால் மாதவம் செய்த தென்திசையில், திருமுனைப்பாடி நாட்டில், திருநாவலூரில்  சடையனார்க்கும் இசைஞானியார்க்கும்  மைந்தராக,  சுந்தரர் திருவவதாரம் செய்தார். அவர் அவதாரம் செய்த நாடு  தனிச் சிறப்புப் பெற்றது. இந்நாட்டில்தான் அப்பரடிகள் அவதரித்தார். இந்நாட்டில்தான் சைவ சமய சந்தானாசாரியார்களாகிய ஸ்ரீ மெய்கண்டாரும் ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியாரும்  அவதாரம் செய்தனர்!

    இந்தச் சுந்தரர் சிறு குழந்தையாகத் தெருவில் விளையாடிய போது , நகர்வலம் வந்த அரசராகிய நரசிங்க முனையரையர், அக்குழந்தையின் ஒளிபொருந்திய அழகைக் கண்டு , அன்புற்று அவரைத் தம் வளர்ப்பு மைந்தராக ஏற்று மகிழ்ந்தார். ஆனாலும் சிவவேதியர் குடும்பத்தில் பிறந்த அவருக்கு, அவர் பெற்றோர் உரிய முறையில் உபநயனச் சடங்கு செய்தார்கள். பின்னர் உரிய பயிற்சிகள் பெற்று முறையாக வளர்ந்து திருமணத்துக்கு உரிய வயதை அடைந்தார். பின்னர் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார்  திருமகளைக் குலம்,  கோத்திரம், ஆகியவற்றின் பொருத்தம் பார்த்துத் திருமண ஏற்பாடுகள் செய்தனர் . அரசர் வளர்ப்பு மகன் என்பதால் செல்வச்  சிறப்புடன்  அளவில் அவரை அலங்கரித்து யோகப்புரவி மேல் ஏற்றி ஊர்வலம் வந்தனர் .

    திருமணநாளுக்கு  ஏழு நாட்களுக்கு முன் மங்கையர்கள் பன்னிரண்டு சிறுமண் கலயங்களில்  முளைப்பாலிகை எனப்படும் நவதானிய வித்துக்களை இட்டு நீரூற்றினர் . அவை பன்னிரண்டு ஆதித்தர்களைப் போற்றி வழிபாடு செய்து அவர்களின் ஒப்புதல் பெறும் சடங்காகும். அதன் பின் முதல்நாளில் சுந்தரர் திருக்கரத்தில் காப்புக் கயிறு காட்டினார் , திருமணம் நிறைவேறி முழுமையான சடங்குகள் முடிந்து  காப்புக்  கயிற்றை அவிழ்க்கும் வரை எந்த இடையூறும் நேரா வண்ணம் பிரார்த்தித்துக்  கட்டுவதே காப்புக் கயிறாகும்.பின்னர்  அவருக்குத் திருமணத்துக்குரிய மாப்பிள்ளைக் கோலம் புனைவித்தனர்!

    அவர்தம் திருமணக்  கோலம் காண்பதற்கு அனைவரும் அதிகாலையிலேயே திரண்டனர். அப்போது கீழ்த்திசையில் கதிரவன் உதித்தான்! கதிரவன் இயற்கையாக உதிப்பதைச் சேக்கிழார் , ஒரு காரணம் பற்றி உதிப்பதாகத்  தம்  கருத்தை ஏற்றி அழகான  கற்பனை செய்து பாடினார்!    காவியங்களில் கதிரவன் தோற்றத்தைப் பாடுதல் மரபு. சிலப்பதிகாரத்தில் ஞாயிறு போற்றுதும் என்று இளங்கோவடிகள் பாடியுள்ளார்!

    முதல்நாள் இரவெல்லாம் திருமணச் சடங்குகள் வேதியர்கள் மந்திரவிதிப்படி நிகழ்ந்தன. இதனை , ‘’மாமறை விதி வாழாமல் மணத்துறைக்  கடன்கள் ஆற்றி ’’ ,    என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார்! தூய மறையோர் முக்காலமும் வேதம் ஓதும் ஊர் என்பதால்’’ தூமறை மூதூர்’’ என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். அவ்வூரில்  நள்ளிரவில்  மங்கலவாழ்த்து நிறைந்து ஒலித்தது! சுந்தரருக்கு திருமணச் சடங்குகளில் தொடர்ந்து மாலைகள் சூட்டினர்! ‘’அத்தகைய மணமாலை அணிந்து தோன்றும் சுந்தரர் என்ற இயல்பான திருப்பெயர் பெற்ற பேரழகரின் திருமணக் கோலத்தில்  தன்  வெளிச்சக் கதிர்களை வீசி, ஒளியூட்டித் தானும் உலகினரும் கண்டு மகிழ்வதற்காகக்  கீழ்த்திசையில் கதிரவன் உதித்து வந்தான்’’, என்று கதிரவன் உதித்தமைக்குத்  தான் விரும்பிய குறிப்பை ஏற்றிச் சேக்கிழார் பாடுகிறார்! இதனை அணியிலக்கணம் ‘’தற்குறிப்பேற்றம்’’ என்று குறிப்பிடும்! இனி முழுப்பாடலையும் படிப்போம்,  

    ‘’மாமறை   விதிவ  ழாமல்  மணத்துறைக்  கடன்கள்  ஆற்றித்

     தூமறை    மூதூர்க்   கங்குல்  மங்கலம்  துன்றி  ஆர்ப்பத்

     தேமரு   தொடையல்  மார்பன்   திருமணக்   கோலம்  காணக்

     காமுறு   மனத்தான்  போலக்  கதிரவன் உதயம் செய்தான்!

    இப்பாடலில் சுந்தரரின் திருமணத்தைச் சிவபிரான் தடுத்து, ஆட்கொள்ளப் போவதால் , ‘’திருமணம்  காண ‘’ என்று பாடாமல் திருமணக் கோலத்தை மட்டும் காண்பதற்கு  என்ற பொருளில் , ‘’திருமணக் கோலம் காண’’ என்று கூறினார். உதித்தான் என்று கூறாமல்  ‘’உதயம் செய்தான் ‘’ என்று கூறியதன் நுட்பம் உணர்ந்து கொள்ளற்ற்கு உரியது!

    கம்பராமாயணத்தில் காட்டில் இராமனும் சீதையும் அண்ணங்களையும், யானையையும் கண்ட காட்சியை,

    ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும்
    சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான்
    மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும்
    போதகம் நடப்ப நோக்கி புதியது ஓர் முறுவல் பூத்தாள்

    என்று பாடுகிறார்!  இப்பாடலில் , சீதையின் நடையைக் கண்டு ஒதுங்கிய அன்னத்தின் நடையைக்  கண்ட   இராமன், சீதையின்  நடை எதனையும் வெல்லும் இயல்புடையதுதானே என்று, அந்த நடையைச் சிறியது என்று நினைத்து, ஒரு  சிறு முறுவலைச் செய்தான்!    ஆனால் குளத்தில் இறங்கி  நீருண்டபின் தாகம் தீர்ந்த நிறைவுடன் கம்பீரமாக நடக்கும்  யானையின் நடையை விடவும் பெருமிதம் கொண்ட இராமனின் நடையைக் கண்ட  சீதை அதில் ஒரு புதுமை இருப்பதை எண்ணி, புதியது ஓர் முறுவல் பூத்தாள். என்கிறார்கம்பர், முறுவல் செய்தமைக்கும்  முறுவல் பூத்தமைக்கும் இடையில் உள்ள வேறுபாடு   அப்பாட்டில் புலனாகின்றது! இங்கே உதயம் செய்தான் என்பதில் கடமை தெரிகிறதே யன்றி, ஆவல் புலப்பட வில்லை. மேலும் காமுறு மனத்தான் போல என்பதில் , காமுறு  மனத்துடன் உதிப்பது போல என்றில்லாமல் , மனத்தான் போல என்பதில் சிறு வேறுபாடு உண்டு. மக்கள் ஆர்வம் கொண்டார்கள் , ஆனால் கதிரவனுக்குக் கைலை நிகழ்ச்சி தெரிந்திருக்கும் என்பதால்  ‘மனத்தான்போல’ என்றும் , ‘ உதயம் செய்தான்’ என்றும் சற்றே வித்தியாசமாக, நயம்படச்  சேக்கிழார் குறிப்பிடுகிறார்!  

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (288)

    அன்பினியவர்களே !

    இந்தப் புத்தம் புதிய 2019ம் வருடத்தில் உங்களுடன் கலந்துரையாட விழையும் முதலாவது மடலிது. 2018 அவசரமாக ஓடி தன்னை சரித்திரப் புத்தகத்தில் மூடப்பட்ட அத்தியாயம் ஆக்கிக் கொண்டது. 2019 புதிதாகப் பிறந்ததோர் குழந்தை போன்று எம்மிடையே தவழத் தொடங்கியுள்ளது. 2018 தன்னோடு முடிக்காமல் மூடிக் கொண்ட பல விடுகதைகளுக்கான விடைகளை இந்த 2019ல் கண்டெடுக்கும் ஆவலுடன் நாம் பலரும் மிகவும் முனைப்புடன் இயங்க ஆரம்பித்துள்ளோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள் எம் முன்னோர்கள். இந்த வழிதான் என்ன ? இதுவரை அப்படிக் கண்டுபிடிக்க முடியாத வழி ஒன்று எமக்குக் கிடைத்து விடுமா? எனும் எண்ணம் எம்மை நோக்கிப் பரிகசிப்பது போலத் தோன்றுகிறது. உண்மையில் இதன் அர்த்தம் தான் என்ன? மிகவும் இலகுவாக நம்பிக்கை என்பது புரிகிறது. ஆம் நம்பிக்கையே ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கிய திருப்புமுனையாக அமைக்கிறது என்பதனையே எமது முன்னோர்கள் எமக்கு உணர்த்த முயன்றுள்ளார்கள்.

    இதேபோலத்தான் 2018கூட ஒரு புது நம்பிக்கையுடன் தான் எம்மை அதனுள் அழைத்துச் சென்றது ஆனால் அந்த நம்பிக்கை எத்தனைதூரம் வெற்றியளித்துள்ளது என்பது ஒவ்வொருவரைப் பொறுத்தவரையும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. நாம் எதிர்பார்த்தவைகளில் எத்தனை நிறைவேறியதோ அன்றி எத்தனை ஏமாற்றமாக முடிந்தனவோ என்பது ஒருபுறமிருக்க நாமனைவரும் நம்பிக்கையோடு அடுத்த ஆண்டில் நுழையக்கூடிய வகையில் எமக்கு ஒரு சந்தர்ப்பத்தையளித்துள்ளது என்பதே உண்மையாகிறது. வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போன்றதே! நாம் எந்த நிலையத்தில் ஏறுகிறோம் என்பதோ அன்றி இறங்குகிறோம் என்பதே எம்மால் நிர்ணயிக்கப்படமுடியாத விடயமாகிறது. எம்மோடு எத்தனை பேர் பயணம் செய்வார்கள் என்பதோ அன்றி எவ்வளவு தூரம் பயணிப்பார்கள் என்பதும் எமது கைக்களில் இல்லை. எம்முடன் பயணிக்கும் சிலரை மட்டும் தெரிவு செய்யக்கூடிய வல்லமையே எமக்கு உண்டு. இதுதான் வாழ்வின் யதார்த்தம். இந்த வகையில் எம்மோடு பயணித்த சிலரை காலம் இறக்கி விட்டிருக்கலாம், வேரு சிலருடன் பயணிக்கப் பிடிக்காமல் நாமாக இடத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம், வேறு சிலரை நாமாகத் தேடி எமது பயணத்தில் இணைத்திருக்கலாம் இல்லையானல் அவர்களது பயணத்தில் இணைந்திருக்கலாம். இத்தகைய ஒரு சூழலில் தான் எமது வாழ்க்கைப்பயணத்தின் கூட்டல் கழித்தல்களை நாம் எண்ணிப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது.

    நாம் எப்படியான ஒரு உலகில் வாழ வேண்டும் என்று எண்ணுக்கிறோமோ அப்படியான ஒரு உலகத்தை நோக்கியோ அன்ரி அப்பசியான உலகத்தைன் பாதையிலிருந்து விலகியோ செல்லும் வகையிலான நிகழ்வுகளை கடந்த 2018ம் ஆண்டு நிகழ்த்தி விட்டு இலகுவாக தன்னை எம்மிடமிருந்து மறைத்து விட்டது. ஆனால் அவ்வாண்டில் நிகழ்ந்த தாக்கங்களின் விளைவுகளில் இருந்து நாம் எம்மை இலகுவாக விலக்கிக் கொள்ள முடியாது. அதற்கான வழிமுறைகளைத் தேடும் நம்பிக்கையைத் தாங்கியவாறே நாம் இவ்வாண்டினுள் நுழைந்துள்ளோம்.

    சர்வதேச அரங்கில் நிகழ்ந்த பல நிகழ்வுகளின் தாக்கங்கள் உலகை ஒரு சமாதான பூமியாக மாற்றும் வகையில் அல்லாது உலக மக்களிடையே பிரிவினைகளையும், நம்பிக்கையற்ற ஒரு நிலையைத் தோற்றும் வகையிலுமான விளைவுகளைநோக்கியதாக அமைந்துள்ளனவோ எனும் அச்சத்தை பலர் மனங்களிலும் தோற்ருவித்திருக்கிறது என்பது உண்மையே. திடமான ஜனநாயகப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் மேற்குலக நாடுகளின் அரசியல் அரங்குகளில் ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் ஒரு தீவிரவாத போக்கினை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றனவோ எனும் மனக்கிலேசம் அனைவர் மனங்களிலும் ஏற்பட்டிருக்கின்றது என்பது கசப்பான உண்மை. தம் நாட்டின் மீது கொண்ட தீவிரமான பற்று எனும் போர்வையில் தீவிர வலதுசாரப் போக்குக்கொண்ட அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் இனத்துவேஷத்துக்கு வழிகோலுக்கின்றதோ எனும் எண்ணம் மேலோங்குகிறது. வெளிநாட்டிலிருந்து மேர்குலகநாடுகளில் குடியேறுவோரின் எண்ணிக்கைக்குக் எதிரான கோஷம் என்பது இனவாத, இனத்துவேஷ வடிவெடுப்பதைத் தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டிய தேவை எப்போதுமில்லாத வகையில் இப்போது அவசியமாகிறது.

    இத்தகையதோர் பின்னனியில் நாம் 2019 தமிழர் தைத்திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை நோக்கி நடைபயில்கிறோம். சேற்றிலே கால் பதித்து உலகோரெல்லோருக்கும் சோறளிக்கும் உழவுத் தோழர்களின் உன்னத சேவையை உணர்த்திடும் வகையில் இத்திருநாளை அனைவரும் சிறப்பிக்க வேண்டும்.கைகளிலே ரும், கண்களில்லே நீருமாக வாழ்வோர் விவசாயிகள் எனும் நிலை மாறி உழைப்போர் கைகள் உயர்ந்தோங்கும் நிலை வரவேண்டுமெனும் சீரிய எண்ணம் கொண்டு தமிழர் திருநாளைக் கொண்டாடுவோம். அனைவரும் எனது தைத்திங்கள் ம்திருநாள் வாழ்த்துக்கள்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • மகாகவி பாசாவின் ’பிரதிமா’ நாடகக் களன்

    –தி.இரா.மீனா

    வடமொழி இலக்கிய உலகில் நாடகம் என்ற சொல்லைக் கேட்ட அளவில் நினைவில் நிற்கும் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில்  கேரளத்தைச் சேர்ந்த கணபதி சாஸ்திரியால் கண்டு பிடிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. பாசாவின் காலத்தைப் பற்றிய கணிப்புகள் பலவாக இருந்தாலும் சாகுந்தல காளி தாசனுக்கு முற்பட்டவர் என்பதில் இரண்டாவது கருத்து  கிடையாது. மாளவிகாகினி மித்திரத்தில்“ பாசா, கவிபுத்ரா போன்ற மிகச் சிறந்தவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா” என்று காளிதாசன் எழுதியுள்ள குறிப்பு, இதை உறுதி செய்கிறது. காளிதாசன் தன் படைப்புகளில் பாசாவின் உத்திகளைப் பயன்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    சிறந்த ஓவியங்களையும், சிற்பங்களையும்  பார்க்கும் போது படைத்த கலைஞனை விட அவன் படைப்புகளே  சாஸ்வதமாகி  நிற்கின்றன. இந்தியச் சிந்தனையைப் பொறுத்தவரை  படைப்பாளியின்  சுயவரலாறு முக்கிய இடம் பெறாததால் கடந்த கால மனிதர்களின் வரலாறு எவ்விதத் தேடல்களுக்கும்  சிக்காமல் போய் விடுகிறது. பாசாவும் இதற்கு விதி விலக்கல்ல. மகாபாரத, இராமாயணக் கதைகளே இவருடைய படைப்புகளின் கரு. இதில் 6 நாடகங்கள், மகாபாரதப் பின்புலம் கொண்டவை. நாட்டிய சாஸ்திரம் என்ற இலக்கண நூலின் விதிகளுக்குப்  புறம்பான  வகையில் முதலில் அவல முடிவுகளை படைப்புகளில்  வெளிப்படுத்தியவர். அவ்வகையில் உறுபங்கம், கர்ணபாரம்  என்ற இரண்டு நாடகங்களும் அளவில் சிறியவையாக அமைந்து, அவலச் சுவை முடிவு  கொண்டவை. நவீன நாடக   உலகினராலும் பேசப்பட்டும், இயக்கப்பட்டும் வருபவை.

    இராமாயணத்தின் அயோத்தியா, ஆரண்யா காண்டங்களைப் பின்னணியாகக் கொண்டு சமஸ்கிருத நாடக ஆசிரியரான பாஸனின் ’பிரதிமா’ நாடகக் களன் அமைகிறது. இந்நாடகத்தின் மூன்றாவது அங்கத்தில் இடம் பெறும் சிலையை நாடகத்திற்கு மூலமாக பாஸன்    கருதியதால் ’பிரதிமா’[ பிரதிமம்–உருவம்] என்பது நாடகப் பெயராகிறது. சிலை பற்றிய சிந்தனை, ஆசிரியனின் முழுக் கற்பனையாக அமைந்து நாடகத்தின் பெயருக்கும் கருவுக்கும் வலுவூட்டுகிறது.

    இராமனின் முடிசூட்டு விழாவை தசரதன் அறிவிப்பதான நிலையில் இந்நாடகத்தின் முதல் அங்கம்  தொடங்குகிறது.  இந்த அறிவிப்பு எங்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்த, தொடர்ந்து மங்கல முழக்கங்கள் கேட்கின்றன. தன் தோழியர் கூட்டத்தோடு மிக இயல்பாக பேசிக் கொண்டிருக்கும் சீதைக்கு இச்செய்தி ஆச்சர்யமாக உள்ளது. சீதையின் பல நல்லியல்புகளை அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் அவத்திகா என்னும் பணிப்பெண் கையில் மரவுரி ஒன்றை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதைப் பார்த்த சீதை தான் அணிந்தால் அது தனக்கு  அழகாக இருக்குமா எனக் கேட்கிறாள். ஆசையில் உடனடியாக அதை  அணிந்தும் பார்க்கிறாள். அவள் அணிந்த பிறகு மரவுரி  பொன்போல மாறி விட்டதென பெண்கள் சொல்லிச் சிரிக்கின்றனர். முடிசூட்டு விழா நின்றுவிட்டதாக திடீரெனப் பேச்சு எழுகிறது. அது தடைப்பட்டதற்கான காரணத்தை அறியாமல் இராமன், சீதை இருக்குமிடம் வருகிறான். கைகேயி தன் தந்தைக்குத் தசரதன் தந்த வரத்தை நினைவூட்ட, பரதனுக்கு நாடாளும் உரிமை கிடைத்ததாக, கூடியுள்ள அனைவரும் அப்போது பேசுவதைக் கேட்கிறான். இது இராமன், சீதை இருவருக்குமே வருத்தம் தரவில்லை. தசரதன், கைகேயி  இருவரும் வனவாசம் போகும்படி தன்னிடம் சொல்லாதபோதும் இராமன் புறப்படுகிறான். மங்கல ஒலியும் அடங்குகிறது. வனவாசத்திற்குப் புறப்படும் இராம இலக்குவரோடு சீதையும் புறப்படுகிறாள். கைகேயின் இரண்டு வரங்களையும் பாஸன் குறிப்பாகக் கூட இந்த இடத்தில் சுட்டிக் காட்டவில்லை. இந்தக் காட்சி தசரதனையும், கைகேயியையும் பழியிலிருந்து காக்க, ஆசிரியர் செய்யும் முயற்சிதான். கைகேயியை அயோத்தி பழிக்கக் கூடாது என்ற முறையிலேயே இராமனின் வனவாசச் செயல்பாடு அமைகிறது. இராமன் அரண்மனைக்கு வந்தபோது  சீதை மரவுரியை அணிந்து பார்த்ததும் இதே மாதியான மற்றொரு நயமான பாஸனின் சிந்தனை அடையாளம். சீதை விளையாட்டாக அணிந்த தவ ஆடை, கைகேயி வரம் நடைமுறையாவதற்கு முன்பே இயல்பாக அமைந்தது என்ற சிந்தனை வெளிப்பாடு குறிப்பிடத்தக்கது. இந்த அங்கத்தில் மிக முக்கியமான பாத்திரங்களாக அமையும் தசரதன், கைகேயி, மந்தரை ஆகிய மூவரும் மேடையில் பங்கு பெறாததும் குறிப்பிடத்தக்கது.

    இரண்டாவது அங்கத்தில் இராமன் தம்பியோடும், சீதையோடும் வனவாசம் சென்றது தந்தைக்கு அளவில்லாத துயரம் தருகிறது. புலம்பியும் வருந்தியும் தவித்தும், இறந்து போகிறான். இப்பகுதியில் மூலக் கதையிலிருந்து எவ்வித பெரிய மாற்றத்தையும் பாஸன் செய்யவில்லை. நீண்ட காலமாகவே பாட்டன் குடும்பத்தோடிருந்த பரதனுக்கு தந்தையின் மரணச் செய்தி அறிவிக்கப்படவில்லை. அயோத்தி திரும்ப ஆணை மட்டுமே பிறப்பிக்கப்படுகிறது.

    மூன்றாவது அங்கத்தில் ஆசிரியரின் அணுகுமுறை மிகப் பெரிய அளவில் மாறுகிறது. ’பிரதிமா நாடகம்’ என நாடகத்திற்குப் பெயர் தரும் பெருமை இந்த அங்கத்திற்கு உரியதாகும். பாட்டன் வீட்டில் இருக்கும் பரதனுக்குத் தந்தையின் இறப்பு தெரிவிக்கப்படவில்லை. தசரதனுக்கு உடல் நலமில்லையாதலால் பரதன் உடனடியாக வரவேண்டும் என்ற வேண்டுகோளோடு தேரோட்டி பரதனை அழைத்து வருகிறான். வரும் வழியில் தந்தையின் உடல் நலம் குறித்துப் பரதன் விசாரிக்கிறான்.

    பரதன்                  :    இப்பொழுது தந்தை எப்படி இருக்கிறார்?

    தேரோட்டி           :    சித்திரவதைப்பட்டுத்தான்.

    பரதன்                  :    மருத்துவர் என்ன சொல்கிறார்?

    தேரோட்டி            :   அவர்களால் இப்போது எதுவும் செய்ய முடியாது.

    பரதன்                  :   சாப்பிடுவது, தூங்குவது எல்லாம்…?

    தேரோட்டி            :  எதுவும் சாப்பிடாமல் தரையில்தான் படுத்திருக்கிறார்.

    பரதன்                   : என்ன செய்வது?

    தேரோட்டி            :  கடவுள்தான்..

    என்ற உரையாடலில் மறைமுகமாக தசரதனின் நிலையைத்  தேரோட்டி  சொல்வது போலக் காட்சி அமைகிறது. ஆழமாகவும் மிகத் தெளிவாகவும் அமைந்த உரையாடலை உற்று ஆராய்ந்தால் உள்ளமைப்பு புரியும் என்பதான  நாடக ஆசிரியன் பார்வை இங்கு வெளியாகிறது. பேசியபடியே அயோத்தியை நெருங்குகின்றனர். நல்ல நேரம் பார்த்துத் தான் அரண்மனைக்குள் வர வேண்டும் என அப்போது  ஊர்ப்பெரியவர்கள் சொல்கின்றனர். பரதன் அதைக் கேட்டு ஊருக்கு வெளியே இருக்கிறான். மிக அழகான கோயில் போன்ற அமைப்பில் அங்கிருந்த ஓரிடத்தின் அமைதி, சூழல், மணம் ஆகியவை  அவனைக் கவர்கின்றன. உள்ளே சென்று பார்த்து வரப் போகிறான். வரிசையாகச் சிலைகள் உள்ளன. இறந்து போன அரசர்களின் சிலைகள் அவை. அங்குள்ள பாதுகாப்பாளர் அந்தச் சிலைகளின் பெயர்களைச் சொல்கிறார். இறந்தவர்களுக்கு மட்டுமே அங்கு சிலைகள் இருக்கும் என அவர் விளக்கமும் தருகிறார். சிலைகளாக உள்ளவர்கள் தன் தந்தையின் வம்சம் என்று அறிந்து கொண்டு ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறான். அப்போது அவர் அவன் பரதன் என்பதை அறிந்துகொண்டு ‘கைகேயின் மகன்’ எனச்சொல்லி  அவன் தாய், கேட்ட வரத்தால் தான் இராமன் காட்டுக்குப் போனான் என்கிறார். அதே நேரத்தில் வரிசையில் உள்ள  கடைசிச் சிலையைப் பார்த்த பரதன், அதிர்ச்சி அடைகிறான். அது தசரதனின் சிலை. வார்தைகளின்றி மயங்கி விழுகிறான். தெளிந்த போது கோசலை, கைகேயி, சுமித்திரை என்று தாயர் மூவரும் நிற்கின்றனர். சிலைகள் உள்ள இடம் என்பதால் பிரதிமாகிருகம்’ என்ற இடம் [ பிரதிமா-சிலை. கிருகம்-இடம்] நாடகத் தலைப்பாவது இங்கு குறிப்பிடத் தக்கது.  விவரமறிந்து கைகேயியைப் பலவாறு இகழ்ந்து பேசுகிறான். அவள் தன் தாயாக முடியாது என்கிறான். தான் பட்டத்துக்கு வர எந்த நாளிலும் தயாராக இல்லை எனவும் காட்டிற்குச் சென்று இராமனை அழைத்து வரப் போவதாகவும் சொல்கிறான். பரதன் தன் தாயைவிட இராமனிடம் அதிக அன்பு வைத்திருந்தாகக் காட்சியின் போக்கு அமைகிறது. தவிர இந்த பிரதிமா கிருகம் என்ற இட அறிமுகமும், காட்சி நிலையும் இயல்பான சூழலாக ஒருங்கிணைந்து அமைந்துள்ளது. பார்வையாளனாலும் எந்தத் தயக்கமும் இன்றி இதை மிக இயல்பாக உணர முடிவதும் நாடக ஆசிரியனின் கலை வெளிப்பாட்டுத் திறமையாகிறது. இந்த அங்கத்தில் தந்தை சிலையைப் பார்த்ததன் மூலமாக இறப்புச் செய்தியை பரதன் அறிகிறான் என்பதும், தாய் கைகேயியின் மூலம் அது சொல்லப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும். பிரதிமாகிருகக் காட்சி, நாடக அமைப்பிலும் மேடைச் சூழலிலும் தனித்துவம் பெற்றதொரு காட்சியாகிறது, என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    நான்காம் அங்கம் இராமனும் பரதனும் சந்தித்துப் பேசுவதான சூழலாகும். இருவரும் பெற்றோரிடம் கொண்டிருந்த அன்பையும், சகோதரர்கள் தமக்குள் கொண்டிருந்த நெருக்கத்தையும் இக்காட்சி வெளிப்படுத்துகிறது. காட்டு வாழ்க்கையை விட்டுவிட்டுத் தன்னோடு அயோத்தி திரும்ப வேண்டும் என இராமனை அன்பாகவும் பணிவாகவும் பரதன் வேண்டுகிறான். ஆனால் இதை மறுக்கும் இராமன் தாய் கைகேயியின் விருப்பப்படி 14 ஆண்டுகள் கழித்து அயோத்தி வருவதாக உறுதியளிக்கிறான். இராமனின் பிரதிநிதியாகவே தான் நாட்டை ஆள்வதாக பரதன் சொல்கிறான். பரதனைக் குற்றமற்றவனாகக் காட்டும் வகையில் இராமனின் காலணிகளை அரச பொறுப்பில் பரதன் போற்றுவதான உறுதி மொழியும் நாடகத்தில் ஆசிரியரால் வெளிப்படுத்தப்படுகிறது.

    இராமனும் இராவணனும்  போருக்கு முன்னர்ச் சந்திப்பதான நிலையில் ஐந்தாம் அங்கத்தை அமைத்திருப்பது பாஸனின் காட்சி அமைப்பிற்கும், படைப்புத் திறத்திற்கும் சான்றாகும். இராவணன் ஒரு சந்நியாசியைப் போல  இராமன் குடிலுக்கு வருகிறான். தன் குடில் வரும் இராவணனை இராமன் வணங்குவது போலக் காட்சி அமைகிறது. அது இராமன் வனவாசத்தின் இறுதி ஆண்டான 14ஆம் ஆண்டாகும். அடுத்த நாளில்தான் செய்ய வேண்டிய தந்தையின்  திதி குறித்து அப்போது சீதையோடு இராமன் பேசிக்கொண்டிருக்கிறான். திதி சாத்திரங்களில் சிறந்தவனான இராவணன் பேச்சால் இராமனை தன் வயப்படுத்துகிறான். இமய மலையில் மிக அபூர்வமாகக் காணப்படும் பொன்நிறம் கொண்ட உடலுடைய மானின் தோலில் தர்ப்பணம் செய்வது மிகப் புண்ணியமானது என்கிறான். ஆனால் அவ்வகையான பொன்மான் கிடைப்பது அபூர்வம் எனவும் இராவணன் சொல்கிறான். தந்தைக்குத் தர்ப்பணம் செய்வது சிறப்பாக அமைய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இராமனுக்கு எப்படியாவது அந்தச் செயலைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பு எழுகிறது.  அந்த நேரத்தில் சந்நியாசி சொன்ன அடையாளத்தோடான ஒரு பொன்மான் வருகிறது.  அதைப் பிடித்து விட வேண்டும் என்ற ஒரு சிந்தனை மட்டுமே அப்போது இராமன் நெஞ்சில் நிற்கிறது. மானைப் பின் தொடர்ந்து புறப்படும் அவன் சீதையிடம் விடை பெறுகிறான். செல்லுமுன், எப்போதும் உடன் இருக்கும் இலக்குவனை அழைக்கிறான். திதி தொடர்பான குருவை அழைத்து வரப் போயிருக்கிறான் எனச் சீதை இராமனுக்கு தம்பி இல்லாததை நினைவூட்டுகிறாள். இலக்குவனைத் தான் அனுப்பி வைத்ததை மறக்கும் அளவுக்கு அவன் மனத்தில் தந்தையின் திதிச் செயல் பதிந்திருக்கிறது.  சந்நியாசிக்கு வேண்டியதைச் செய்து அவரை அனுப்பி  வைக்கும்படி சீதையிடம் சொல்லி  விட்டு  மானைப் பிடிக்கப் போகிறான். இங்கு எவ்விதச் சந்தேகங்களுக்கும் இடம் தராத வகையில் தன் உரையாடலை திதியோடு தொடர்புபடுத்தி இராவணன் பேசுவதால் அவர்கள் இடையே நடக்கும் உரையாடல்  மிக இயல்பாக இருக்கிறது. இலக்குவனும் வேறு பணி காரணமாகச் சென்றிருக்கிறான் என்ற செய்தி சீதையை இராவணன் கவர சிறந்த  சந்தர்ப்பமாகிவிடுகிறது. வில்லோடு இராமன் சென்று விட்டதைப் பார்த்து மகிழும் இராவணன் தான் யார் என்பதைச் சீதைக்கு அறிவித்து விட்டு அவளைக் கவர்ந்து போகிறான். மான் வேண்டும் என மனைவி கேட்க அவள் விருப்பத்தை  நிறைவேற்ற இராமன் சென்றதாக மூல கதை அமைகிறது. ஆனால் இங்கு தந்தையின் ஆத்ம சாந்திக்கும் திதிக்கும் மிகச் சிறந்தது பொன்மான் தோல் எனச் சந்நியாசி சொன்ன  செய்திதான், அவன் மானைத் தொடர்ந்து போகக் காரணமானது என்று நாடக ஆசிரியனின்  அணுகுமுறை அமைகிறது. இதுவும் பாத்திரப் படைப்பின் உன்னதம்தான். மானைப் பிடித்துத் தரும்படி சீதை வேண்ட  அதை நிறைவேற்றும் வகையில் இராமன் மானைப் பின் தொடர்ந்தான் என்ற சாதாரண வாழ்வுப் பின்னணியில் மனைவி ஆசை, அதை நிறைவேற்ற கணவன் துடிப்பு போன்ற  செயல்கள் இங்கில்லை இராமனின் பாத்திர உயர்வு இப்படித்தான் பாஸனிடமிருந்து வெளிப்படுகிறது.

    ஆறாம் அங்கத்தில் இராமன் காட்டிற்குச் சென்ற பழிக்கு தானே காரணம் என்று கைகேயி  ஒப்புக் கொள்வதான சூழலை பாஸன் காட்டுகிறான். வேட்டைக்குச் சென்ற தசரதன், குளத்தில் யானை தண்ணீர் குடிப்பது போன்ற ஒலியைக் கேட்கிறான். யானை என்று நினைத்து அவன் விட்ட அம்பு  பார்வையற்ற தந்தைக்காக  தண்ணீர் எடுக்க வந்த மகனைக் கொன்று விடுகிறது. தன்னைப் போலவே தசரதனும் புத்திர சோகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற  சாபம், முதிய தந்தையால் தரப் படுகிறது. இது அறியாமல் செய்த பிழையேயாயினும் விதிவலிமை காட்டுவதாகிறது. இதிலிருந்து தசரத னும் இராமனும் விடுபட வேண்டுமென்றால் இராமன் உயிருக்கு எந்தத் தீங்கும் ஏற்படக் கூடாது எனக் கைகேயி நினைக்கிறாள். அதன் எதிரொலிதான்  இராமனைத் தசரதனிடமிருந்து பிரித்துக் காட்டுக்கு அனுப்பும் செயலாகிறது. இதை,

    கைகேயி  :    அரச பதவி மீது வெறி கொண்டு இராமனைக் காட்டுக்கு   அனுப்பவில்லை. இராமன் வனவாசம் சென்றால் ஒழிய இந்தத்  தவிர்க்க முடியாத சாபத்திலிருந்து மீள  முடியாது.  இதனால்   தான் என் மீது பழி விழுந்தது.

    பரதன்   : மகனின் வனவாசம் அப்படி அவசியமானது என்றால் என்னை  அனுப்பி இருக்கலாமே..?

    கைகேயி  : முதலில் இருந்தே நீ தாய்மாமனோடு  இருந்ததால் அந்த  வாழ்க்கை வனவாசம்  போலப்  பிரிந்து இருப்பதுதான்.

    பரதன்      :    பின்பு ஏன்  14 ஆண்டுகள் என்று நிர்ணயித்தீர்கள்  ?

    கைகேயி   : 14  நாட்கள் என்று சொல்ல வந்தது மனக்குழப்பத்தில் 14    ஆண்டுகள் என்று  மாறிவிட்டது.

    பரதன் :    ‘விவேகம்’ என்பது நிதானமாக இருப்பது என்பது. இது  பெரியவர்களுக்குத் தெரியாதா?

    என்ற தாய்-மகன் இடையேயான உரையாடல் பொருள் செறிவும் பாத்திர உயர்வும்  உடையதாகிறது. மகனின் பிரிவு தாங்காமல் தசரதன் இறந்து போகிறான். இந்த உண்மை வசிட்டர், வாமதேவன், சுமந்திரன் ஆகியோருக்குத் தெரியும் என்று கைகேயி பரதனுக்கு விளக்குகிறாள். இராமனிடம் பேரன்பு கொண்டவளாக கைகேயி இருப்பதால்தான் அவனுக்குரிய சாவைத் தவிர்த்து தந்தையிடமிருந்து பிரித்துக் காட்டுக்கு அனுப்பினாள் என்பது பாஸனின் அணுகுமுறையாகும். மகன் பரதனுக்கு ஆட்சியைக் கொடுப்பது அவள் எண்ணமல்ல என்பது அவர் வெளிப்படையாகச் சொல்ல வரும் செய்தியாகும். பரதன் உண்மையை உணர்ந்து தாயிடம் மன்னிப்பு கேட்கிறான். இராமனுக்குப் போர் உதவி செய்யப் போகிறான்.

    ஏழாவது அங்கம், இராமன் போரில் இராவணனை அழித்துவிட்டு வீடணனுக்குப் பட்டம் சூட்டுவதான நிலையில் தொடங்குகிறது. சீதையுடன் இராமன்  மகிழ்ச்சியாக பரத்வாச முனிவரின் ஆசிரமத்திற்கு வருகிறான். கரடி, குரங்குகள், ஆகியவையும் அவனோடு ஆசிரமம் வருவதாக நாடகம் மகிழ்ச்சிப் பின்னணியில் முடிகிறது.

    இராவணன்-இராமன் போர் விரிவாக பாஸனால் காட்டப்படவில்லை. இராவணன் அழிவு பொதுவாகச் சொல்லப்படுகிறதே தவிர தனிக் காட்சிகளாக அவை இடம் பெறவில்லை. மூல கதையில் இடம் பெறும் முக்கிய பாத்திரங்களான அனுமன்,  இந்திரஜித் போன்ற பாத்திரங்கள் இங்கு இடம் பெறவில்லை. வீடணன் பாத்திரம் முடிசூட்டுதல்  என்ற நிலையில் குறிப்பிடப்படுகிறதே தவிர தனியான பாத்திர முக்கியத்துவம் இல்லை. நாடகக் கதை முடிந்ததென்றாலும் பார்வையாளனுக்கு  இராமனைப் பற்றிய முழுக் கதை தெரிந்ததான திருப்தி  இல்லை என்பதைப் பாஸன் உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் இக்கதையின் தொடர்ச்சியாக ’அபிஷேக நாடகம்’ என்ற அடுத்த நாடகம் உருவாகியிருக்கிறது என்பதில் இரண்டாவது அபிப்ராயம் இல்லை.

    ———————–

    படத்துக்கு நன்றி: https://www.exoticindiaart.com/book/details/pratimanataka-of-mahakavi-bhasa-NZB287/

    Share
  • (Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம் (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)

    (Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம்

    (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)

    முனைவர் ப. வேல்முருகன்

    தலைவர் & பேராசிரியர், தமிழ்த்துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

    திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: pdrvelmurugan@gmail.com; செல்பேசி    : 9488264166

    இர. ஆனந்தகுமார்

    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: anadhakumar001@gmail.com; கைப்பேசி            : 9488264166

    முன்னுரை

    மூலபாடம் என்பது ஒரு நூலின் மூல நூலாசிரியர் எழுதிய வடிவம் அல்லது அதை ஒத்த பாடம் ஆகும். இதை முன்னோர் சுத்த பாடம் என்று வழங்குவர். ஒரு நூல் சுவடிகளிலிருந்தும் காகிதப் பிரதிகளிலிருந்தும் பதிப்பு நூலாக வெளிவரும் பொழுது பல்வேறு மாற்றங்களைப் பெறுகின்றது. குறிப்பாகச் சுவடிகளிலும் தொடக்க காலக் காகிதப் பிரதிகளிலும் குறில் நெடில், மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து ஆகியவை ஒன்று போலவே தோன்றுகின்றன. அதனால் ஒரு நூல் ஏட்டுப் படிகளாகவோ அச்சுப் படிகளாகவோ வெளிவரும் பொழுது பல திரிபுகளுடன் அமைகின்றது. சுவடிகள், காகிதப் பிரதிகள், அச்சுப் பதிப்புகள் முதலியவற்றில் காணப்படும் பாடங்களையும், பாட வேறுபாடுகளையும் தொகுத்து, உண்மையான பாடத்தைக் கண்டறிய முயல்வது மூலபாடத் திறனாய்வு ஆகும்.

    ஏவா வில்தன் (EVA WILDEN), நற்றிணைக்குரிய சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியவற்றைத் தொகுத்து, ஆராய்ந்து நற்றிணைக்குச் செம்பதிப்பைக் (2008) கொண்டுவந்துள்ளார். இவரது பதிப்பு, நற்றிணைக்கு இதுவரை வெளிவந்த பதிப்புகளில் காணப் பெறாத வகையில், ஏடுகளில் உள்ள பாடங்களைத் தொகுத்து, அறிவியல் அடிப்படையில் மூலபாடத்தைத் தெரிவுசெய்யும் விதமாக அமைகிறது. இச்செம்பதிப்பிலும் சில விடுபாடுகள் உள்ளன. அவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

    நற்றிணை 11-ஆவது பாடலில் விடுபட்டுள்ள பாடங்களையும், பாட வேறுபாடுகளையும் இலக்கணம், அகராதிப் பொருள், உரைகள், ஒப்புமைப் பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டு மூலபாடத்தை உறுதிப்படுத்துவது இந்த ஆய்வுக் கட்டுரையின் கருதுகோளாக அமைகிறது. இதில் மூலபாட ஆய்வு அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.

    நற்றிணைக்குக் கிடைத்துள்ள சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியவை ஆய்வின் கருதுகோளை நிறுவுவதற்கான முதன்மை ஆதாரங்களாக அமைகின்றன. மேலும்,

    S.M. Katre – Introduction to Indian Textual Criticism, அ.விநாயகமூர்த்தி – மூலபாடஆய்வியல் (1978), த.கோ.பரமசிவம்(ப.ஆ.) – சுவடிப் பதிப்பு நெறிமுறைகள் (1989), வெ.பழனியப்பன் – தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள் (1990),மூ. இராமகிருட்டிணன் – பிரதிபேத ஆராய்ச்சி, வெ. பிரகாஷ் – பாட ஆய்வியல்: புறநானூறு பாடம், வடிவம் குறித்த ஆய்வு (ஆய்வேடு, 2012), ம.சா.அறிவுடைநம்பி – சுவடி ஆய்வு நெறிமுறைகள்(2013),Eva Maria Wilden – Studies in manuscript Cultures (2014), வெ. பிரகாஷ் – பாட ஆய்வியல் கையேடு (2014) முதலியோர்களின் நூல்கள், துணைமை ஆதாரங்களாக அமைகின்றன.

    நற்றிணை 11-ஆவது செய்யுள்

    ஏவா வில்தன் பதிப்பு :       

    “பெய்யாது வைகிய கோதை போல

    மெய்சாயி னையவர் செய்குறி பிழைப்ப

    வுள்ளி நொதுமலர் நேர்புரை தெள்ளிதின்

    வாரா ரென்னும் புலவி யுட்கொள

    லொழிக மாளநின் னெஞ்சத் தானே

    புணரி பொருத பூமண லடைகரை

    யாழி மருங்கி னலவ னோம்பி

    வலவன் வள்பாய்ந் தூர

    நிலவு விரிந்தன்றாற் கான லானே”.

    மூலபாடத்தைத் தெரிவு செய்வதற்குப் பாடலின் சூழல், பொருண்மை போன்றவை துணை நிற்கும். அவ்வகையில் நற்றிணை 11-ஆவது பாடலுக்கான சூழல், பொருள் விளக்கம்.

    கூற்று                         –           தோழி கூற்று (தோழி, தலைவிக்குச் சொல்லியது)

    துறை                          –

    காப்பு மிகுதிக்கண் இடையீடு பட்டு ஆற்றாளாய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

    துறை விளக்கம் –

    காவல் மிகுதியாலே தலைவனைக் தலைவனைக் கூடப்பெறாமல் ஆற்றாது வருந்திய தலைவியைத் தோழி நோக்கி நீ வருந்தாதேகொள், நிலவு விரிந்ததனால் அவர் இன்னே வருவரெனக் கூறுவோள் போன்று, காவல் மிகுதியால் இரவுக்குறி பிறழ்ந்ததும், அதனாலே தலைவி படுந்துன்பமும் சிறைப்புறத்திருந்த தலைவன் கேட்டு வரைவொடு புகுமாறு கூறுவது (நாரா.).

    செய்யுள் பொருள் விளக்கம்

    அவர் செய்த குறி இடையீடுபட்டு தவறுபட்டதனால், சூடாது கிடந்த பூமாலையைப் போல உடல் இளைத்தனை. அயலவர் பேசுகின்ற பழிச்சொல்லை நினைத்து, தெளிவாக வராமாட்டார் என்கின்ற ஐயத்தை உன் மனத்தின்கண் நினைக்காது விட்டொழிவாயாக. அலைகள் வந்து மோதியதால் நுண்மணலாக உள்ள கடற்கரையில், நண்டுகளின் மேல் தேர்ச்சக்கரங்கள் படாதவாறு பாதுகாத்து, தேர்ப்பாகன் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்துச் செலுத்த, கடற்கரைச் சோலையிலே நிலவு விரிந்தது. சுருங்கக் கூறின்,

    ‘அலவனுக்குத் (நண்டு) தீங்கு செய்யாது தேர் செலுத்த வேண்டும் என்று உரைக்கும் தலைவன், நீ பழிச்சொல்லால் வருந்தாதபடி வரைந்து இல்லறம் நிகழ்த்துவான்’ என்றவாறு.

    செய்யுளில் உள்ள பாடவேறுபாடுகள்

                                                              (அட்டவணை)

     

    ஏவா வில்தன் கொண்ட பாடம் ஏவா வில்தன் கொண்ட பாடங்களும் அவை இடம்பெற்ற பிரதிகளும் ஏவா வில்தன் கொண்ட பாடங்களிலிருந்து வேறுபடும் பாடங்களும் அவை இடம்பெற்ற பிரதிகளும்
    பெய்யாது பெய்யாது- G3, EN, VP, ER, EV, ET பெய்யாத       – C1, G1, G2

    பொய்யாது    – ETv

    நொதுமலர் நேர்புரை நொதுமலர் நேர்புரை- VP, ER, EV நொதுமல் ஏர்புரை- C1, C2, G1, G2,G3, EN

    நொதுமலர் ஏர்புரை  – ET

    நொதுமல் ஓருரை      – ETv

    யுட்கொளல் யுட்கொளல் –

    C1, C2, G1, G2,G3, EN, VP, ER, EV, ET

    யுட்கொளாஅல்- ETv
    நிலவுவிரிந்தன்றால் நிலவுவிரிந்தன்றால்- G1, ER, EV நிலவுவிரிந்தன்றால் – G2, EN, ET, VP

    நிலவுவிரிந்தன்றே   – ETv

    குறிப்பு

    C1                 உ.வே.சா. நூலகப் பிரதி (ஓலை)

    C2                உ.வே.சா. நூலகப் பிரதி (காகிதம்)

    G1, G2, G3 அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப்பிரதி (காகிதம்)

    VP                எஸ். வையாபுரிப்பிள்ளை

    EVA             ஏவா.    ஏவா வில்தன்

    EN               அ. நாராயணசாமி ஐயர்

    ER                மர்ரே. எஸ்.ராஜம்

    ET                 ஔவை சு. துரைசாமிப் பிள்ளை

    EV                 ஹச். வேங்கடராமன்

    ETv               ஔவை சு. துரைசாமிப் பிள்ளைப் பாடவேறுபாடு

     

    ஏவா வில்தன் பதிப்பில் விடுபட்ட பாடம்:’வளவன்‘

    அ) வலவன் – வளவன்

    ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில்  ‘வலவன்வள்பாய்ந்தூர’ (11:8) என்ற அடியில் இடம்பெறும் ‘வலவன்’ என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில்‘வளவன்’ என்ற பாடம் உள்ளது. இப்பிரதிகளில் உள்ள பிற பாடவேறுபாடுகளைச் (காண்க – அட்டவணை) சுட்டிக் காட்டும் ஏவா வில்தன்,C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடவேறுபாட்டினைப் பதிவு செய்யாது விட்டுள்ளார்.

    மேலும் செம்பதிப்பு முன்னுரையில் உச்சரிப்பு வேறுபாடுகள் எனும் தலைப்பில் ‘‘ஒள / அவ், ள்/ல, ர/ற கெளவை / கவ்வை ஆகியவை பொருள் மாறுபாடு செய்யாவிடினும் வட்டார (அல்லது ஏடெழுதும் தனிப்பட்ட ஒருவரின்) வழக்காறுகளைத் தெரிந்துகொள்ள உதவுமாதலால் இவை பதிப்புரையில் குறிப்பிடப்படுகின்றன” (ப.34) என்று பதிவு செய்துள்ளார். ஒலி வேறுபாட்டு அடிப்படையில் பாடல்களில் (36:8., 128:11., 295) உள்ள ஒலி வேறுபாட்டுச் சொற்களைச் (கெளவை / கவ்வை.,ஆகின்றியா / ஆகின்ரியா., அவ்வை / ஒளவை) சுட்டிக் காட்டும் இவர், ‘வலவன்’, ‘வளவன்’ என்ற பாடங்களிலுள்ள லகர ளகர ஒலி வேறுபாட்டினைப் பாடவேறுபாட்டுப் பகுதியில் சுட்டிக்காட்டவில்லை. இவ்வாறான முரண்பாடுகள், நற்றிணைச் செம்பதிப்பு என்ற கருத்தாக்கத்தைக் கேள்விக்குள்ளாகின்றன.

    (குறிப்பு: ஒப்புநோக்கி ஆய, பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம்(EFEO), நற்றிணைக்குச் சுவடி, காகிதப் பிரதிகளைத் தந்துதவியது.)

    நற்றிணைச் செம்பதிப்பு 11-ஆவது பாடலில் உள்ள ‘வலவன்’ என்ற பாடத்திற்கும், C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்திற்கும் பொருள் மாறுபாடுகள் உண்டு.

    ‘வலவன்’என்ற சொல் ‘தேர்ப்பாகன்’ என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் ஏழு இடங்களில் (நற்றிணை, 11:8, 78:10, குறுந்தொகை, 311:2, அகநானூறு, 20:15, 104:3, 190:12, 340:4, 354:8, 400:12, புறநானூறு, 27:8) வந்துள்ளது. ‘வளவன் ’என்ற சொல் சோழமன்னன் கிள்ளிவளவன் என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் ஏழு இடங்களில்  (புறநானூறு, 34:16, 60:10-11, 174:14-15, 226:6, 227:9, 393:24, 397:22-23) வந்துள்ளதைக் காண முடிகிறது.

    இருப்பினும் நற்றிணை 11-ஆவது பாடலில் இடம்பெற்ற ‘வலவன் வள்பாய்ந்தூர’ என்ற பாடலடிக்கு உரையாசிரியர்கள் ‘தேர்ப்பாகன் (குதிரையின்) கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்து செலுத்த’ என உரை எழுதியுள்ளனர். ஆனால் ஏவா வில்தனின் செம்பதிப்பில் விடுபட்ட பாடமான ‘வளவன்’ என்ற பாடத்தினை உரையாசிரியர்கள் எவரும் உரையிலும் பாடவேறுபாட்டுப் பகுதியிலும் குறிப்பிடவில்லை.

    காரணம் பாடலின் பொருண்மையை நோக்குகையில் குதிரையின் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்துச் செலுத்துகின்ற தேர்ப்பாகனைக் குறிக்கும் பாடமாக ‘வலவன்’ என்பது பொருத்தமாக உள்ளது. இவ்வாறன்றி C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்தைப் பின்பற்றி ‘வளவன் வள்பாய்ந்தூர’ எனப் பதிப்பித்து உரை எழுதினால்,  ‘சோழ மன்னனான கிள்ளிவளவன் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்து செலுத்த’ என்று உரைகொள்ள நேரிடும். ஆகவே பாடலின் பொருண்மைக்குத் தேர்ப்பாகனைக் குறித்து வரும் ‘வலவன்’ என்ற பாடமே ஏற்புடையதாகும்.

    வலவன் / வளவன் என்ற இருபாடவேறுபாடுகள் பிரதிகளில் காணப்படுகின்றன. அப்பிரதிகளில் ல/ள ஒலி வேறுபாடு பொருள் வேறுபாட்டுத் தன்மையில் அமைந்திருப்பினும் C1, G1, G2 ஆகிய பிரதிகளை எழுதினோர், அவ்வொலி வேறுபாட்டினை உணராது ‘வளவன்’ என்ற பாடத்தைப் பின்பற்றியுள்ளனர். எனவே இலக்கண அடிப்படையில் ஒலி வேறுபாடு உணர்த்தும் பொருண்மையில் ‘வலவன்’ என்ற பாடம் ஏற்புடையது.

    ஏவா வில்தன் பதிப்பில் விடுபட்ட பாடவேறுபாடு

    ஆ) உலோச்சனார் – கயமனார்

    பாடலுக்குள் இருக்கின்ற பாடவேறுபாடுகள் மட்டுமின்றி புலவர் பெயர்களில் காணப்படும் பாடவேறுபாடுகளையும் ஏவா வில்தன் தன்னுடைய பதிப்பில் குறிப்பிடுகிறார். சான்றாக

    பாலத்தனார் (G1+2: பாலாத்தனார்) (52),

    பெருங்கவுசிகனார் (EN, ER: கெளசிகனார், ET: கோசிகனார்) (139)

    ஆனால் இவர் ஒரு பாடலுக்குரிய புலவர் பெயர் முழுவதும் மாறுபடும் இடங்களைப் பாடவேறுபாட்டுப் பகுதியில் குறிப்பிடாமல் விட்டுள்ளார். காட்டாக, ஒளவை.சு. துரைசாமிப்பிள்ளையின் நற்றிணைப் பதிப்பில் “இங்கே உலோச்சனார் என்ற பெயரோடு கயமனார் என்ற பெயரும் ஓர் ஏட்டில் காணப்படுகிறது” (ப.56) என அடிக்குறிப்பில் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.

    துரைசாமிப்பிள்ளை (1966) பாடவேறுபாட்டுப் பகுதியில் இடம்பெற்ற செய்தி

    மேலும் சில பாடல்களில் புலவர்களின் பெயர்கள் முற்றிலும் மாறுபட்டு உள்ளன.

    நற்றிணைச் சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியனவற்றில் நல்விளக்கனார் (85), சல்லியங்குமரனார் (141), பராயனார் (155) ஆகிய புலவர்களின் பெயர்கள் எவ்வித மாறுபாடுகளுமின்றி காணப்படுகின்றன. ஆனால் துரைசாமிப் பிள்ளையின் நற்றிணைப் பதிப்பில் அப்புலவர்களின் பெயர்கள் முறையே நல்விளக்குன்றனார் (85), அரிசிலங்குமரனார் (141), பாரதாயனார் (155) என்று முற்றிலும் மாறுபட்டு உள்ளன.

    மேலும் நற்றிணை 64-ஆவது பாடலை உலோச்சனார் பாடியுள்ளதாக அனைத்துப் பிரதிகளிலும் காணப்படுகிறது.  ஆனால் துரைசாமிப் பிள்ளை, 64-ஆவது பாடலை உரோடகத்தனார் பாடியதாகவே குறிப்பிட்டு, குறிப்புப் பகுதியில் ‘‘ஏடுகளில் உரோடகத்தனார் பெயரே உள்ளது. முன்பாட்டை எழுதிய நினைவால் இப்பாட்டையும் உலோச்சனார் பாடியதாக ஏடெழுதினோர் தவறியிருக்கலாம்” (ப.254) என்று குறிப்பிடுகிறார். ஆகவே ஏவா வில்தன், புலவர்களின் பெயர்கள் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுவதை தமது நற்றிணைச் செம்பதிப்பில் குறிப்பிடவில்லை. ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையின் பாடலுக்குள் காணப்படும் பாடவேறுபாடுகள், புலவர் பெயர்களுக்குள் உள்ள பாடவேறுபாடுகள் ஆகியனவற்றைக் குறிப்பிடும் ஏவா வில்தன், இப்புலவர் பெயர் மாறுபாட்டைச் சுட்டிக் காட்டாதது, நற்றிணையின் செம்பதிப்பு முறையியலைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

    நற்றிணை 11- ஆவது பாடலில் மூலபாடத் தெரிவுகள்

    அ) பெய்யாது – பெய்யாத–பொய்யாது

    ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் ‘பெய்யாது வைகிய கோதை போல’ (11:1) என்ற பாடலடியில் உள்ள ‘பெய்யாது’ என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘பெய்யாத’ என்ற பாடம் உள்ளது. துரைசாமிப்பிள்ளை பதிப்பில் காணப்படும் பாடவேறுபாட்டுப் (ETv) பகுதியில் ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாடு காணப்படுகிறது.

    சங்க இலக்கியத்தில் ‘பெய்யாது’ என்ற பாடம் ‘சூடாது’, ‘பெய்யாது’ ஆகிய பொருள்களில் நான்கு இடங்களில் (நற்றிணை 11:1, 365:6. புறநானூறு.105:4, 266:1) வந்துள்ளது. ‘பெய்யாத’ என்ற பாடம் சங்க இலக்கியத்தில் இல்லை. துரைசாமிப் பிள்ளை பதிப்பு, பாடவேறுபாட்டுப் பகுதியில் காணப்படும் ‘பொய்யாது’ என்பது சங்க இலக்கியத்தில் ‘பொய்த்துப் போதல்’, ‘பொய்’, ‘உண்மைக்குப் புறம்பானது’ என்ற பொருளில் நான்கு (நற்றிணை 38:1, 2. ஐங்குறுநூறு. 66:1, 80:1) இடங்களில் வந்துள்ளது.

    ‘பெய்யாது வைகிய கோதை போல’ (11:1) என்ற பாடலடிக்கு உரையாசிரியர்கள் ‘சூடாது கிடந்த பூமாலையைப் போல’ என்று உரை தருகின்றனர். ஆனால் பெய்யாது என்ற பாடத்திற்கு மாற்றாக C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘பெய்யாத’ என்ற பாடம் உள்ளது. இப்பாடத்தை அடிப்படையாகக் கொண்டு ‘பெய்யாத வைகிய கோதை போல’ என்ற பாடலடிக்கு உரைகொண்டால் ‘சூடாத கிடந்த பூமாலை’ என்று பொருள்படும். ‘பெய்யாத’ என்ற பாடம், சங்க இலக்கியத்தில் இல்லை. இதனடிப்படையில் நோக்கினோமானால் உரையாசிரியர்கள் இதை மூலபாடமாகத் தெரிந்தெடுக்கவில்லை என்பதை உய்த்துணர முடிகிறது.

    துரைசாமிப் பிள்ளை பதிப்பின் பாடவேறுபாட்டுப் பகுதியில் ‘பெய்யாது’ என்ற பாடத்திற்கு ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாடு காணப்படுகிறது. இப்பாடவேறுபாட்டின் அடிப்படையில் ‘பொய்யாது வைகிய கோதை போல’ என்று பதிப்பு அமையும். இவ்விடத்து பொய்யாது என்பதற்கு ‘பொய்’ ‘பொய்த்துப்போதல்’ ஆகிய பொருள்கள் உள்ளன. இப்பொருள்களின் அடிப்படையில் ‘பொய்யாது வைகிய கோதை போல’ என்ற பாடலடிக்கு, ‘பொய்கூறாது கிடந்த பூமாலையைப் போல’ என்று உரைகொள்ள நேரிடும். இவ்வுரை பாடலின் பொருண்மைக்குப் பொருத்தமின்றி அமைவதால் ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாட்டை நீக்கி, G3, EN, VP, ER, EV, ET ஆகிய பிரதிகளில் உள்ள பாடமான ‘பெய்யாது’ என்பது பாடலின் பொருண்மைக்கு (‘சூடாது கிடந்த பூமாலையைப் போல’) ஏற்புடையதாக உள்ளதால் உரையாசிரியர்கள் இதனை மூலபாடமாகத் தெரிவு செய்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

    ஆ) நொதுமல் ஏர்புரை – நொதுமலர் ஏர்புரை – நொதுமலர் நேர்புரை – நொதுமல் ஓருரை

    C1, C2, G1, G2,G3, EN ஆகிய பிரதிகளில் ‘நொதுமல் ஏர்புரை’ என்ற பாடமும் ET பிரதியில் ‘நொதுமலர் ஏர்புரை’ என்ற பாடமும் அதே பிரதியில் ‘நொதுமல் ஓருரை’ (ETv) என்ற பாடவேறுபாடும் இருக்க, ஏவா வில்தன் VP, ER, EV ஆகிய பிரதிகளில் உள்ள ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடத்தையே மூலபாடமாகத் தெரிவு செய்துள்ளார். இருப்பினும் அவர் அப்பாடத்தை உறுதிப்படுத்துவதில் உள்ள சிக்கலைக் குறிப்பிடுகையில் ‘‘here the ER reading looks very much like an conjecture supposed to make sence of a number of unsatisfactory variants. As so Aften, we are not in a position to find out whether there were sources supporting such a reading’’ (ராஜம் பதிப்பில் காணப்படும் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடம்   திருப்தியற்ற பல மாறுபாடுகளைக் (நொதுமல் ஏர்புரை – நொதுமலர் ஏர்புரை – நொதுமலர் நேர்புரை – நொதுமல் ஓருரை) கொண்டுள்ளது.  ராஜம் பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடம் ‘நொதுமலர் நேர்புரை’ என்பது, அனுமானத்தால் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதை   உறுதிப்படுத்த ஆதாரங்கள் உள்ளனவா என்பதை ஆராயும் நிலையில் தான் இல்லை) என்று 11-ஆவது பாடலின் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார் ஏவா வில்தன்.

    இருப்பினும் இப்பாடங்களுக்கு யாப்பு முறைகளின்படியும், உலோச்சனாரின் நற்றிணைப் பாடல்களைத் தவிர ஏனைய பாடல்களை ஆராய்வதன் அடிப்படையிலும், உரையாசிரியர்கள் தரும் பொருண்மைகளின் அடிப்படையிலும் சரியான பாடத்தைத் தேர்வு செய்ய இயலும்.

    யாப்பு அடிப்படையில் -‘நொதுமல் ஏர்புரை”நொதுமலர் நேர்புரை‘

    உரையாசிரியர்கள் ‘நொதுமல் ஏர்புரை’, ‘நொதுமலர் நேர்புரை’ ஆகிய பாடங்களுக்குத் தரும் பொருண்மைகளின் அடிப்படையில் எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் சொல் அடிப்படையிலும் யாப்பு அடிப்படையிலும் வேறுபாடுகள் உள.

    •         நொது / மல்                ஏர் / புரை           மா முன் நேர் = நேரொன்றாசிரியத் தளை

                       நிரை   / நேர்              நேர் / நிரை

    • அ. நொது / மலர்             ஏர் / புரை            விளம் முன் நேர் = இயற்சீர் வெண்டளை

                       நிரை     நிரை           நேர் / நிரை

    • ஆ. நொது / மலர்            நேர் / புரை

                       நிரை   நிரை             நேர் / நிரை         விளம் முன் நேர் = இயற்சீர் வெண்டளை

    யாப்பு முறைப்படி 1)‘நொதுமல் ஏர்புரை’ என்ற பாடத்தைப் பிரித்தால் நேரொன்றாசிரியத் தளை வருகிறது. அதே நேரத்தில் 2) அ.‘நொதுமலர் ஏர்புரை’ மற்றும் ஆ.‘நொதுமலர் நேர்புரை’ ஆகிய பாடங்களைப் பிரித்தால் இயற்சீர் வெண்டளை வருகிறது. ஆகவே ஆசிரியப்பாவில் இயற்சீர் வெண்டளையும் விரவி வரலாம் என்பதால் பாடத்தைத் தெரிவு செய்வதில் மேலும் சிக்கல் ஏற்படுகிறது.

    அகநானூற்று உலோச்சனார் பாடலில் -‘நொதுமலர்‘

    ஒரு புலவர் பாடிய பாடலில் பாடவேறுபாடுகள் இருப்பின், அப்புலவர் பாடிய ஏனைய பாடல்களை ஆராய்ந்து, அதில் உள்ள பாடங்களைக் கொண்டு மூலபாடத்தை உறுதிப்படுத்தலாம். அவ்வகையில் உலோச்சனாரின் பாடல்கள், நற்றிணையில் மட்டுமின்றி குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் உள்ளன. அவற்றினைக் கொண்டு ஒப்பிடுகையில் அகநானூற்றில் ‘நொதுமலர் போல பிரியின் கதுமென’(300:11) என்ற அடியில் ‘நொதுமலர்’ என்ற பாடம் வந்துள்ளது.

    C2 (சுவடி)

    C3(சுவடி)

    C5(காகிதம்)

    C6(காகிதம்)

     

    C9 (காகிதம்)

    (C2, C3, C5, C6, C9 – உ.வே.சா. நூல் நிலையப் பிரதிகள்)

    ராஜகோபாலார்யன் (1933)

    வையாபுரிப்பிள்ளை (1940)

    பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார் (வெளியீடு, 1946)

    (குறிப்பு: ஒப்பு நோக்கி ஆய, பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம்(EFEO), அகநானூற்றுக்குச் சுவடி, காகிதப் பிரதிகளைத் தந்துதவியது.)

    மேற்குறிப்பிட்ட உலோச்சனார் பாடிய அகநானூற்றுப் பாடலைச் சுவடிகள் (C2,C3), காகிதப் பிரதிகள் (C5, C6, C9) பதிப்பு நூல்கள் (ராஜகோபாலார்யன், பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசி விசுவநாதன் செட்டியார், வையாபுரிப்பிள்ளை) ஆகியனவற்றைக் கொண்டு ஆராய்கையில் ‘நொதுமலர்’ என்ற பாடம் உள்ளதை அறிய முடிகிறது. மேலும் இப்பாடத்திற்கு வேறான பாடவேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதைத் தரவுகளின் வழியாக உறுதியிட முடிகிறது. ஆகவே உலோச்சனார் நற்றிணையிலும் ‘நொதுமலர்’ என்ற பாடத்தைத்தான் கையாண்டிருப்பார் என்பதைத் தரவுகளின் வழியாக ஊகிக்க முடிகிறது.

    உரையாசிரியர்கள் தரும் பொருள் –’ஏர்புரை‘, ‘நேர்புரை‘

    வையாபுரிப்பிள்ளை (VP) பதிப்பில் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடம் முதன் முதலில் காணப்படுகிறது. அப்பாடமே மர்ரே ராஜத்தின் (ER) சந்தி பிரித்த நற்றிணைப் பதிப்பிலும் உள்ளது. இவ்விரு பதிப்புகளும் உரையில்லாத மூலப் பதிப்புகள். அடுத்தடுத்த பதிப்புகளாக (உரையுடன்) வந்துள்ள வேங்கடராமன் (EV) மற்றும் ஏவா வில்தன் (EVA) ஆகியோர் தமது பதிப்புகளில் மேற்கண்ட பாடத்தையே மூலமாகக் கொண்டு ‘அயலவர் பழிச்சொல்’ என்று உரை கொள்கின்றனர்.

    பொ.வே.சோமசுந்தரனாரின் (நாராயணசாமி ஐயர் உரையுடன், இலக்கணக் குறிப்பும் ஆய்வுரையும் கொண்ட நற்றிணை உரை) இலக்கண ஆய்வுரையில் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடத்தைப் பாடவேறுபாடாகக் கொண்டு ‘அயலோர் வாய் நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்று குறிப்புப் பகுதியில் குறிப்பிடுகிறார். அவற்றைக் கொண்டு நோக்குகையில் ‘நேர்புரை’ என்பதற்கு ‘நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்ற பொருள் கிடைக்கிறது. இப்பொருள் வேங்கடராமன் பதிப்பிலும் ஏவா வில்தனின் பதிப்பிலும் இல்லை. ஆகவே பாடலின் பொருண்மைக்கு ‘நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்ற பொருளைத் தருகின்ற ‘நேர்புரை’ என்ற பாடத்தைக் கொள்ளாமல், ‘எழுதலையுடைய பழிச்சொல்’ (EN), ‘எடுத்துரைக்கும் அலருரை’ (ET) ஆகிய பொருள்களைத் தருகின்ற ‘ஏர்புரை’ என்ற பாடத்தையே ஏற்புடைய பாடமாகக் கொள்ளலாம்.

    முடிவுகள்

    • ஏவா வில்தன், நற்றிணைக்குக் கிடைத்துள்ள சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள், தொல்காப்பிய உரை மேற்கோளில் காணப்படும் நற்றிணைப் பாடல்கள் ஆகியனவற்றைத் தொகுத்து, பாடவேறுபாடுகளைப் பட்டியலிட்டு ஆராய்ந்து, நற்றிணைக்குச் செம்பதிப்பைக் கொண்டுவந்துள்ளார். இதுவரை வந்த நற்றிணைப் பதிப்புகளில் காணப்பெறாத வகையில், மூலபாடத்தை நிறுவும் முயற்சியை இவரது பதிப்பில் காணலாம். மேலும் நற்றிணைக்குக் கிடைத்துள்ள பிரதிகளில் காணப்படும் பாடங்களைத் தொகுத்துப் பட்டியலிடும் அதே நேரத்தில் பாடலுக்குள் காணப்படும் பாடங்களையும் பாடல் எழுதிய புலவர் பெயர்களில் காணப்படும் மாறுபாடுகளையும் குறிப்பிடாமல் விட்டுள்ளார்.
    • ‘வலவன்’ (11:8) என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘வளவன்’ என்ற பாடம் உள்ளது. இப்பிரதிகளில் உள்ள பிற பாடவேறுபாடுகளைச் சுட்டிக் காட்டும் ஏவா வில்தன், C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்தினைச் சுட்டிக் காட்டவில்லை. அதே போல உலோச்சனார் என்ற பெயரோடு கயமனார் என்ற பெயரும் ஓர் ஏட்டில் காணப்படுகிறது என்ற துரைசாமிப் பிள்ளையின் அடிகுறிப்புச் செய்தியும் இவரது பதிப்பில் விடுபட்டுள்ளது.
    • நற்றிணை 11- ஆவது பாடலில் ‘பெய்யாது’(11:1) என்ற பாடத்திற்கு  ‘பெய்யாத’ , ‘பொய்யாது’ ஆகிய பாடவேறுபாடுகள் உள்ளன. அப்பாடவேறுபாடுகளுள் பாடலின் பொருண்மைக்கு ‘பெய்யாது’ என்ற பாடமே மிக அணுக்கமாக உள்ளது.
    • உலோச்சனாரின் பாடல்கள், நற்றிணையில் மட்டுமின்றி குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் உள்ளன. அவற்றினைக் கொண்டு ஒப்பிடுகையில் ‘நொதுமலர்’ என்ற பாடம் அகநானூற்றில் மட்டும் வந்துள்ளதால் நற்றிணையிலும் ‘நொதுமலர்’ என்ற பாடத்தைத் தான் உலோச்சனார் கையாண்டிருப்பார் என்பதைத் தரவுகளின் வழியாக அறிய முடிகிறது.
    • ‘நேர்புரை’, ‘ஏர்புரை’ ஆகிய பாடங்களில் உரையாசிரியர்கள் பொருள்கொள்ளும் அடிப்படையில் நோக்கும் பொழுது ‘ஏர்புரை’ என்ற பாடம் பொருத்தமுள்ளதாகத் தோன்றுகிறது.
    • ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் விடுபட்ட பாடங்களும் மூலபாடத் தெரிவில் இடர்ப்பாடுகளும் காணப்படுவதால் அவரது நற்றிணைச் செம்பதிப்பு என்பது கேள்விக்குள்ளதாக அமைகிறது. ஆக, ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் (2008) உள்ள ஏனைய பாடல்களையும் மூலபாடவியல், பதிப்பியல் நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தினால் மேலும் சில விடுபட்ட பாடங்களும் மூலபாடத் தெரிவில் உள்ள மாறுபாடுகளும் தெரிய வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆகவே ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பினை மீட்டுருவாக்கம் செய்தால், நற்றிணைச் செம்பதிப்பு என்பது சீர்மை பெறும்.

    துணைநூற்பட்டியல்

    • அறிவுடைநம்பி. ம.சா., சுவடி ஆய்வு நெறிமுறைகள், கருமணி பதிப்பகம், 27, சுப்பிரமணியர் கோயில் குறுக்குத்தெரு, இலாசுப்பேட்டை, புதுச்சேரி. சனவரி 2013.
    • இராமகிருட்டிணன். மூ., பிரதிபேத ஆராய்ச்சி, வேங்கடாசலபுரம், (வழி) தேனி, மதுரை. (ஆண்டு குறிப்பிடவில்லை).
    • ஏவா வில்தன் (ப.ஆ.)., நற்றிணை, சங்க இலக்கியங்கள் – செம்பதிப்பு வரிசை – 1.1., பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம் (EFEO) – 2008, தமிழ்மண்பதிப்பகம்.
    • வேங்கடசாமிநாட்டார். திரு. நாவலர் ந.மு. & வேங்கடாசலம் பிள்ளை. கரந்தைக் கவியரசு R. (பதவுரை, விளக்கவுரை), எட்டுத் தொகையுள் ஒன்றான அகநானூறு – மணிமிடை பவளம் (பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன்செட்டியார் அவர்களால் வெளியிடப்பெற்றது) திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிமிடெட், திருநெல்வேலி.ஜனவரி1946.
    • சுப்பிரமணியன். ச.வே., தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108. மார்ச்.2013.
    • சோமசுந்தரனார். பெருமழைப்புலவர் பொ.வே., (இலக்கணக்குறிப்பும் ஆய்வுரையும்) –           எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை நானூறு (பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் எழுதிய உரையும் விளக்கமும்), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், திருநெல்வேலி – 6, நான்காம் பதிப்பு1967.
    • துரைசாமிப்பிள்ளை.சு (உ.ஆ) ., நற்றிணை, அருணா பப்ளிகேஷன்ஸ், உஸ்மான் ரோடு, தியாகராய நகரம், சென்னை – நவம்பர்.1966& 1968.
    • நாராயணசாமி ஐயர். பின்னத்தூர் அ (உரையாசிரியர்)., எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை, சைவ வித்தியாநு பாலன யந்திரசாலை, சென்னை.1915.
    • பரமசிவம். த.கோ.(பதிப்பாசிரியர்)., சுவடிப்பதிப்பு நெறிமுறைகள் (கருத்தரங்கக்கட்டுரைகள்), தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.மார்ச்1989.
    • பாலசுப்பிரமணியன்.கு.வெ(உரையாசிரியர்)., சங்க இலக்கியம் –நற்றிணை மூலமும் உரையும், நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்(பி) லிட், அம்பத்தூர், சென்னை – 600 098. ஐந்தாம் பதிப்பு. அக்டோபர் 2014.
    • பழனியப்பன்.வெ., தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்.1990.
    • பாகனேரி. வெ. பெரி. பழ. மு., திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், (வெளியீடு) லிமிடெட், திருநெல்வேலி.
    • பிரகாஷ். வெ., பாட ஆய்வியல் கையேடு, அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தா நத்தம், திருச்சி. 2014.
    • பிரகாஷ். வெ., பாட ஆய்வியல்: புறநானூறு பாடம், வடிவம் குறித்த ஆய்வு, முனைவர் பட்ட ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம், 2012,
    • ராஜகோபாலார்யன் (ப.ஆ)., அகநானூறு மூலமும் பழைய உரையும், கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாசம், மயிலாப்பூர்.
    • விநாயகமூர்த்தி.அ., மூலபாட ஆய்வியல், பாலமுருகன் பதிப்பகம், 90, பாரதியார் தெரு, சுப்பிரமணியபுரம், மதுரை – 625 011.
    • வெள்ளை வாரணன். க (ப.ஆ) ., தொல்காப்பியம் செய்யுளியல் – உரைவளம், பதிப்புத் துறை, காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை – 625 021. 1989.
    • வேங்கடராமன்.ஹச்(உ.ஆ)., டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், 2, அருண்டேல், கடற்கரைச் சாலை, பெசண்ட் நகர், சென்னை – 600 098.
    • வையாபுரிப்பிள்ளை. எஸ்(ப.ஆ.)., சங்க இலக்கியம், எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும், சைவ சித்தாந்தம் மகா சமாஜம், மயிலாப்பூர், சென்னை. 1940.
    • Eva Mariya wilden., Studies in Manuscript Cultures, 204 Walter de Gruyter Gmbh & KG Berlin / Munchen / Bosten in Germany.
    • S.M. Katre., Introduction to Indian Textual Criticism, Karanatak Publishing House.
    • தமிழ் லெக்ஸிகன்., சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
    • நிகண்டுகள்., சாந்தி சாதனா, 125 சேமியர்ஸ் சாலை, சென்னை – 600 028.
    • மணியன்.,சங்க இலக்கிய வினை வடிவங்கள், திராவிட மொழியியல் கழகம், திருவனந்தபுரம் – 86.
    • மாதையன்.பெ., சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 310. 2007.
    • பாண்டியராஜா.சு., சங்க இலக்கியத் தொடரடைவு, sangamconcordance.com
    • தமிழிணையக் கல்விக் கழகம்(tamilvu.org)

    ஆய்வுக் கட்டுரையாளர்களின் தன் விவரக் குறிப்பு

    முனைவர் ப. வேல்முருகன்

    தலைவர் & பேராசிரியர், தமிழ்த் துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

    திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: pdrvelmurugan@gmail.com; செல்பேசி    : 9488264166

    இவர் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில்., பி.எட்., பிஎச்.டி. பட்டங்களும் வரலாறு, தகவல் தொடர்பியல், மொழியியல் ஆகிய பாடங்களில் எம்.ஏ. பட்டங்களும் பெற்றுள்ளார். கணினி அறிவியல், ஹிந்தி மொழி, காந்தியச் சிந்தனை ஆகியவற்றில் சான்றிதழ் பயின்றுள்ளார். அடிப்படை மலையாள மொழியறிவு உடையவர்.

    இவர் சங்க இலக்கியம், இலக்கணம், மொழியியல், தொல்லியல், தகவல் தொடர்பியல், கவிதையியல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இப்பொருண்மைகளில் ஐந்து நூல்களை எழுதிய இவர் `எழுத்திலக்கண மாற்றம்’, `தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள்’ ஆகிய நூல்களுக்காக, இந்தியக் குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழ் இளம் அறிஞர் விருதும்,  `இலக்கண மரபும் இலக்கியப் பதிவும்’ என்ற நூலினுக்காகத் தமிழக முதல்வர் வழங்கும் சிறந்த நூலாசிரியர் விருதும் பெற்றுள்ளார். இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அறுபதிற்கும் மேலான எண்ணிக்கையில் வெளிவந்துள்ளன.

    இவர், பதினாறு ஆண்டுகள், ஆசிரியர் பணி அனுபவம் மிக்கவர்; தற்பொழுது திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்  தமிழ்த் துறைத் தலைவராகப் பேராசிரியர் நிலையில் பணி புரிந்து வருகிறார்.

    இர. ஆனந்தகுமார்

    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த் துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: anadhakumar001@gmail.com; கைபேசி        : 9488264166

    இவர் ஆசிரியர் பயிற்சியும், தமிழிலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில்., பட்டமும் பெற்றவர். மேலும் தமிழ் மொழியியலில் முதுகலைப் பட்டமும், மலையாள மொழியில் சான்றிதழ்ப் பட்டமும் (Certificate Course) பெற்றுள்ளார். தற்பொழுது திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில், முனைவர் பட்ட ஆய்வாளராக “நற்றிணைப் பாக்கள்: மொழியியல், இலக்கியவியல், கிளை மொழியியல், மூலபாடவியல் ஆய்வு” (உலோச்சனார் முதலியோரின் 133 பாக்கள் – சொல்லடைவுடன்) எனும் தலைப்பில் ஆய்வு செய்து வருகிறார். இவர், பன்னாட்டு ஆய்விதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

    ===========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பழந்தமிழ் இலக்கியங்களின் உண்மைத் தன்மையை அறிய, அவற்றின் மூலம் கண்டடைதல் என்பது, தேவையான ஒன்று. அந்த வகையில் ஏவா வில்தன் முன்னெடுத்த செம்பதிப்புப் பணி பாராட்டத்தக்கது. இவர் பதிப்பில் உள்ள சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் பதிப்புப் பணியில் ஈடுபடும் பதிப்பாசிரியர்கள் நினைவில் கொள்ளக் கூடிய பதிப்பு அடிப்படைகளையும் நற்றிணைப் பதிப்பில் உள்ள பாடவேறுபாடுகள் குறித்தும் விளக்கும் தன்மையில் கட்டுரை அமைந்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் ஆய்வாளர்கள், பதிப்பாசிரியரின் வலவன், பெய்யாது, நொதுமலர் போன்ற மூலபாடத் தெரிவின் முயற்சிகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மேலும் ஏர்புரை என்பது பொருத்தமான பாடமாகத் தோன்றுகிறது என்று யூகத்தின் அடிப்படையில் கூறுதல் பொருத்தமற்றது. ஆய்விற்குப் பொருத்தமான ஆதாரங்களை முன்வைத்து, பதிப்பாசிரியரின் தவறுகளைச் சுட்டிக் காட்டுதல் நலம் பயக்கும். மேலும், ஆய்வாளர்கள் பிறர் கருத்தை மறுக்கும் பொழுது, தன்மையான முறையில் மறுக்க வேண்டும். ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள், இத்தகைய செம்பதிப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைய வேண்டும். மாறாக, அவர்களின் பணியைப் புறந்தள்ளும் தொனி வந்துவிடக் கூடாது. எனினும், ஆய்வாளர்கள் இதுபோன்ற ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, தமிழுக்கு ஆக்கம் நல்கும்.

    ===========================================================

    Share
  • சேக்கிழார் பா நயம் -19

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி

    கைலை மலையிலிருந்து தமிழகத்துக்கு இறைவனால் அனுப்பப் பெற்ற சுந்தரர், அவதாரம் செய்த திருமுனைப்பாடி நாட்டினைப்பற்றி கடந்த கட்டுரையில் பார்த்தோம். இப்போது அவர் திருஅவதாரம் செய்த சிறப்பைக் குறித்துக் காண்போம்! தமிழ்நாட்டின் வேதியர் குலத்தின் வகைகள் உண்டு! நால்வேதங்களையும் ஓதி அவை கூறும் நன்னெறியில் வாழ்ந்து வரும் வேதியர் ஒருவகை!

    வேதம் வேதியர்கள் பிரமனது முகத்தில் தோன்றியவர்கள் என்று கூறுகிறது! அவ்வகையில் பிரமன் முகத்திலும், தோளிலும், வயிற்றிலும், தொடையிலும் வேதியர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோர் தோன்றினர். இவை பிறந்த இடத்தினால் உயர்வோ, தாழ்வோ பெறவில்லை. முகம் அறிவைக் குறித்து அதனை வழங்கும் ஆசிரியர்களாகிய வேதியரையும், தோள், வீரத்தைக் குறித்து வலிமையால் போர் செய்யும் அரசரையும், வயிறு உணவுப்பொருளை சேமித்து வழங்கும் வணிகர்களையும், கால்கள் வயலில் நடந்து உழவுத்தொழில் புரியும் வேளாளர்களையும் குறித்தது! இவையே உயர்வு தாழ்வற்ற நாள் வருணம்! பிறந்த மனிதன்இளமையில் பெற்றோர் ஆசிரியர் ஆதரவில் ஞான நூல்களைக் கற்றுக்கொள்ளும் போது பிரம்மச்சாரியாகவும், இளைஞனாய்த் திருமணம் புரிந்து கொண்டு குடும்பம் நடத்தும்போது கிரகஸ்தனாகவும், இல்லற இச்சை தீர்ந்தபின் காடுநோக்கி மனைவியுடன் சென்று பிறர்க்குதவி வாழும் வானப்பிரஸ்தனாகவும், முற்றத் துறந்தபின் பற்றே இல்லாமல் வாழும் சன்யாசியாகவும் வாழும் நிலைகளை ஆசிரமங்கள் என்பர். இவை அனைத்திலும் எல்லார் வாழ்க்கையும் அமையும்! இந்த வருணங்களும், ஆசிரமங்களும் வர்ணாசிரமம் என்று கூறப்படும்! இவை உலகியல் வாழ்க்கையாகும்!

    ஆன்மவியல் வாழ்க்கையில் சிவ வேதியர் என்போர், சிவபெருமானின் ஐந்து திருமுகங்களிலிருந்தும் அதிகரித்து வந்து, ஆகமம் முதலியவற்றால் சிவபெருமானை அர்ச்சிக்க உள்ள உரிமை பெற்றவர் ஆவர்! அந்தணர் வேறு, சிவவேதியர் வேறு! இவர்கள் முப்போதும் பெருமானைத் திருமேனி தீண்டி வழிபாடு செய்வர்; மேலும் இவர்கள் பரம்பரை பரம்பரையாய் சிவபிரானுக்கு அணுக்கமாய்த் தொண்டு செய்வதால்சேக்கிழார் இவர்களை ‘வழி வழியடிமை செய்யும் வேதியர்’ என்றார். ‘’இவர்கள் கௌசிகர், காசிபர், அகத்தியர், பரத்துவாசர், கௌதமர் என்ற ஐவரின் கோத்திரங் கொண்ட வர்கள்; இவ்வைவரும் இப்பேர்கொண்ட பிரம புத்திரர்கள் அல்லர்.இவர்கள் சிவமரபினர், இவர்களுக்கு வேதபாரம்மிய மில்லை என்பாரை நோக்கி மறுக்கும்வகையில் வேதியர்குலம் என்றார் .பிரமதேவர் முகத்தினின்று தோன்றிய வேதியர்வேறு; சிவவேதியர்வேறு.!

    பிரமன் வழித் தோன்றியவரே, தக்கயாகத்தில் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டும், தாருகாவனத்து இருடிகள் வழிவழிவந்து இறைவனால் தண்டிக்கப்பட்டும், ததீசி முனிவரால் சபிக்கப்பெற்றும் இவ்வழியே உலகில் அதிகரித்து வருபவர்கள். இவர்களது வரலாறு கந்தபுராணம் முதலியவற்றுட் காண்க. சிவவேதியர்களாகிய இவர்கள் முன் சொல்லிய எவ்விதச் சிவாபராதங்களுக்கும் உட்படாதவர்களாய்ச் சிவபெருமானை எப்போதும் ஆன்மார்த்தம் – பரார்த்தம் என்ற இருநிலையிலும் வழிபட்டுச் சிவநெறித் தலைவர்களாய் உள்ளவர்கள்.இக்காலத்தில் இவர்கள் தம் பெருமையை உணராமல் தாழ்வு மனப்பான்மை கொண்டு வாழ்க்கை நடத்துகின்றன!’’ என்று சிவக்கவிமணி கூறுகிறார்! இவர்களையே சிவபிராமணர் என்பர்,

    ‘வழி வழி யடிமை செய்வோர்’ என்ற தொடரில் வழி வழி என இருமுறை கூறியது, இவர்கள் தந்தை வழி முன்னோர், தாய்வழி முன்னோர் என்ற இருவகையாலும், சிவபிரானுக்கு அடிமைத்தொண்டு புரிந்த மரபினர் என்பதைக் குறிக்கும்.

    ‘’சிவமறையோர் திருக்குலத்தார் அருவி வரை வில்லாளிக்கு அகத்தடிமை யாமதனுக்கு ஒருவர் தமை நிகரில்லார்!’’ என்று பின்னர் சேக்கிழார் கூறுவார்! இனி அவர் இயற்றிய பாடலைக் காண்போம்!

    ‘’மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும்
    வேதியர் குலத்துட் டோன்றி மேம்படு சடைய னாருக்
    கேதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானி யார்பால்
    தீதகன்று உலகம் உய்யத் திருவவ தாரம் செய்தார்!’’

    இப்பாடலில் வேதியர் குலத்துள் தோன்றி என்று இறந்த காலத்தாலும், மேம்படு சடையனாருக்கு என்று எதிர்காலத்தாலும் கூறிய சேக்கிழாரின் சொல்லாட்சி மகிழ்தற்குரியது. சடையனார் தோன்றியது சிவவேதியர் குலம். அவர் சுந்தரரைப் பெறுவதால் இனி அவர் குலம் மேம்படப் போகிறது, என இருகாலத்தாலும் குறிப்பிட்டுள்ளார்!

    ‘சடையனார் ‘ என்பது சுந்தரர் தந்தையார் பெயர்.இது சிவபெருமானுக்கே உரிய சிறப்பான பெயர். அதனை மகனுக்கு இட்டு வழங்குவது சிவவேதியர் வழக்கம்; கடவுட் பெயர்களையும் , பெரியோர் பெயர்களையும் மக்களுக்கு இட்டு வழங்குதல் உலக வழக்கம் ஆகும். அவ்வகையில் சுந்தரர் தந்தையாரைச் சடையனார் என்றும், தாயாரை இசைஞானியார் என்று வழங்கினர்! சடையனார் தம் தந்தையாரின் திருப்பெயராகிய ‘ஆரூரர் ‘’ என்பதைச் சுந்தரருக்கு இட்டு வழங்கினார். இதனைச் சுந்தரரே தம் தேவாரத்தில் ,

    ‘’நண்பு உடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
    நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்’’

    என்று தம்மைப்பற்றிக் குறிக்கிறார்! மேலும்,

    .“இசைஞானி யம்மையார் (திருவாரூர்) கமலாபுரத்திலே சிவகோதம கோத்திரத்திலே ஞான சிவாசாரியார் குடும்பத்தில் அவதரித்த மகாளவார் என்பது கல்வெட்டுக்களாற் கிடைக்கும்செய்தி!’’

    சுந்தரர் தம் அருள்மொழிகளால் சைவம் தழைக்கச் செய்தார், என்பதைக் குறிக்க ‘’ தீதகன்று , உலகம் உய்ய ‘’ என்ற தொடரால் புலப்படுத்தினார். மேலும் அவர் பிறந்தமையால் மற்றையோரும் தீமை நீங்கி உய்ந்தனர் என்பதைக் குறிக்க, ‘’ திருவவதாரம் செய்தார் ‘’ என்று சேக்கிழார் கூறினார்! இவ்வாறு திருக்கையிலையிலிருந்து தென்திசையில் சுந்தரர் தோன்றிய சிறப்பை, சொல்லாட்சி சிறப்புடன் சேக்கிழார் கூறியமை உணர்ந்து மகிழத்த தக்கதாகும்!

     

    Share
  • நலம்….நலமறிய ஆவல் 141

    -நிர்மலா ராகவன்

    கனவுகள் நனவாக

    சிலருடைய கனவுகள்தாம் நனவாகின்றன. அவர்களிடம் அப்படி என்ன சிறப்பு என்று ஆராய்ந்தால், அவர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை என்பது புலனாகும்.

    “தோல்வி என்பது புத்திசாலித்தனத்தை மீண்டும் முயன்று பெற ஒரு வாய்ப்பு,” என்று கூறுகிறார் அந்த அனுபவமுள்ள ஒரு புத்திசாலி.

    தோல்வி வர தவறுகள் மட்டும் காரணமில்லை. அது நிரந்தரமும் இல்லை. இதனால்தான் முயற்சி திருவினையாக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    எண்ணித் துணிக கருமம்

    ஒரு காரியத்தை ஆரம்பிக்குமுன்னரே, `என்னால் முடியுமோ?’ என்ற சந்தேகம் எழுந்தால் நம்மை நாமே பலவீனப்படுத்திக்கொள்கிறோம்.

    `செய்துதான் பார்ப்போமே! வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையேல், அதிலிருந்து ஏதாவது பாடம் கற்கலாம்!’ என்ற துணிவு இருந்தால் சிறக்கலாம்.

    விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு பயந்தயத்திற்கு முன்பும், `இன்று என் கட்சி ஜெயிக்க முடியுமோ?’ என்று ஐயம் கொள்வது கிடையாது. உடல் வலி இருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

    தோல்வியினால் யாராவது இறந்திருக்கிறார்களா? தோல்வியைக் கண்டு அஞ்சி, எடுத்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு, மனச்சோர்வுடன் வாழ்வதே இறப்பிற்குச் சமானம்தான்.

    திறமை, உழைப்பு ஆகியவைகளுடன் விடாமுயற்சியும் இருந்தால், தோல்விகூட படிப்பினை ஆகிவிடுகிறது.

    கர்வமே தோல்விக்கு முதல் படி

    எத்தனையோ வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், `எனக்கு நிகர் யாருமில்லை. எவரால் என்னை வெல்ல முடியும்!’ என்ற திமிரே அவர்களை அடக்கிவிடும் என்று புரிந்துவைத்திருப்பவர்கள்தாம் அடுத்தடுத்து வெற்றி பெறுகிறார்கள். வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாகவே பாவிப்பதால், எப்போதாவது தோல்வி கிடைத்தால் இவர்கள் மனமுடைந்து போய்விடுவதில்லை, வெற்றி கிடைக்கும்போது பிறரை அலட்சியமாகக் கருதுவதும் கிடையாது.

    `வெற்றிதான் கிடைத்துவிட்டதே!’ என்று மெத்தனமாக இருந்தால், தோல்வி அடையும் நாள் நெருங்கிவிட்டது என்று கொள்ளலாம்.

    நடிப்புத் தொழிலையே கனவாகக்கொண்டு, அதில் பெரும் வெற்றியும் பெற்ற ஒரு நடிகரைக் கேட்டார்கள், “நீங்கள்தான் உலகிலேயே தலைசிறந்த நடிகர். ஒப்புக்கொள்வீர்களா?”

    “அப்படி நான் நினைத்தால், அன்றே இறந்துவிடுவது மேல்!”

    நீயே காரணம்

    வெற்றி, தோல்வி இரண்டுமே நம்மால் வருவதுதான். தான் அடைந்த தோல்விக்குப் பிறரைக் குற்றம் சாட்டுபவன் தோல்விமேல் தோல்விதான் அடைய நேரிடும். அவனுடைய எந்தக் கனவும் பலிப்பதில்லை.

    கதை

    “என் மகன் பிரதாப் நீங்கள் கற்பிக்கப்போகும் எல்லாப் பாடங்களிலும் தொண்ணூறுக்குமேல் மதிப்பெண்கள் வாங்குவான் என்று நீங்கள் உறுதி அளிக்க முடியுமா?” அரசாங்கத்தில் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்த தந்தை என்னிடம் சவால் விட்டார்.

    “உள்ளீடு (input) இருக்கும் வெளியீட்டைப்பற்றி நான் எப்படி உறுதி கூற முடியும்?” என்று நான் எதிர்க்கேள்வி கேட்டபோது, “அவன் என் மகன்! அதே ஜீன்ஸ்!’ என்று பெருமையாகப் பேசினார்.

    அவர் நம்பிக்கை பொய்த்தது.

    நடிகர் ஜாக்கி சான் தன் சுயசரிதையில், `நான் ஒரு தந்தையாகத் தோல்வி அடைந்துவிட்டேன்!’ என்று புலம்பி இருக்கிறார்.

    உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றபின் தம் கடந்தகால வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, சில ஆண்களுக்குப் நிறைவைவிட ஏமாற்றமே அதிகமாக இருப்பதைக் காணலாம்.

    ஏதாவது குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் சிறுபிள்ளைகள் அவர்களிடம் வந்தபோது, அவர்களுக்கு அவகாசமோ, `என்ன பிரச்னை?’ என்று கேட்கும் பொறுமையோ இருந்திருக்காது. சிலர் வன்முறையைப் பிரயோகித்திருப்பார்கள். (நாள் தவறாது அடித்தால்தான் ஆண்பிள்ளை உருப்படுவான் என்று எண்ணும் பெற்றோர் அச்செய்கையால் அவர்கள் கெட்டுப்போக வழிவகுக்கிறோம், அல்லது தம்மைவிட்டு விலகிப்போகிறார்கள் என்பதை உணர்வதில்லை).

    நாளடைவில், தந்தையிடமோ, தாயிடமோ தம் அச்சங்களையும் குழப்பங்களையும் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ள பிள்ளைகள் முன்வர மாட்டார்கள். அவ்வளவு அவநம்பிக்கை! அவர்களைப்போன்றே குழப்பத்தில் இருக்கும் நண்பர்களை நாடுவது இயற்கை.

    அப்பிள்ளைகள் தவறான பாதையில் பயணிக்கும்போது, காலங்கடந்து, `நாம் எங்கு தவறிழைத்தோம்?’ என்று எண்ணம் போகிறது பெற்றோருக்கு. நண்பர்களின் பிள்ளைகள் நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதைக் கண்டு ஆற்றாமை ஏற்படுகிறது.

    பிறரது வெற்றி உன் தோல்வியல்ல

    கதை 1

    கணவன், குழந்தைகள் என்று மகிழ்ச்சியாக இருப்பவர்களைப் பார்த்து, என் அயல்நாட்டுத் தோழி ஏஞ்சலா ஆழ்ந்த வருத்தம் கொண்டிருந்தாள். ஏனெனில், அவள் விவாகரத்து ஆனவள்.

    தன் மனநிலையை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள விரும்பாது, அவளது நிலைமையிலிருந்த இன்னொருத்தியைப்பற்றிப் பேசினாள்: “மேரி, பாவம். இல்லை? அவளைவிட இன்னொரு பெண்தான் உயர்த்தி என்று அவள் கணவன் போய்விட்டானே! மேரியின் மனம் எவ்வளவு நொந்துபோயிருக்கும்!”

    மேரி இளம்பெண். அழகாக இருந்தாள். நாட்டியம் போதிப்பவள். (கண்ணையும் கழுத்தையும் எப்படி அசைப்பது என்று ஆர்வத்துடன் என்னிடம் கேட்டுக் கற்றுக்கொண்டாள்). நான் பழகியவரை நல்லவளாகத்தான் தெரிந்தாள்.

    “இவளுடைய அருமை புரியாதவன் மடையன் என்று விட்டுத்கொள்ள வேண்டியதுதான்!” என்று நான் பதிலளித்தபோது, ஏஞ்சலா தன்னைப்பற்றித்தான் கேட்டாள் என்பது எனக்குப் புரியவில்லை.

    இன்னொரு முறை, “வீட்டில் ஆண் ஒருவர் இருந்தால், எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியிருக்காதே என்றிருக்கும்,” என்றாள்.

    “Relaionships have their own problems!” என்றேன் பெருமூச்சுடன். எந்த நெருக்கமான உறவில்தான் பிரச்னைகள் இல்லை?

    ஏஞ்சலா, மேரி இருவருமே தத்தம் கணவன்மார்களைவிட உயர்ந்த நிலையில் இருந்தார்கள். அதைப் பொறுக்க முடியாது, என்றுமே தம்மை மிஞ்ச முடியாத பெண்ணாகப் பார்த்துத் தேடிப்போயிருக்கிறார்கள் அந்த ஆண்கள். விளைவு: விவாகரத்து.

    திருமணம் செய்துகொள்ளும்போது எல்லாருமே இன்பக்கனவுகளுடன்தான் இல்லறத்தில் காலை வைக்கிறார்கள். நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா?

    மணமுறிவு தோல்வியல்ல. ஒரு பகுதி முடிய, புதியதொரு வாழ்க்கையின் தொடக்கம் என்று எடுத்துக்கொண்டால்தான் மனம் நிம்மதி அடையும்.

    கதை 2

    ஒரு நாட்டிய வகுப்பில் சில ஆண்டுகளே பயிற்சி பெற்ற பெண்கள் இருவர் உயர்கல்விக்கென தாற்காலிகமாக விலகிப்போனார்கள். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தபோது, முன்பு சிறுமிகளாக இருந்தவர்கள் நாட்டியத்தில் இப்போது தம்மைவிட மிகச் சிறந்துவிட்டதைக் கண்டு ஆயாசம் ஏற்பட்டது. தம் தோல்வி என்ற வருத்தம் மிக, வகுப்பிலிருந்து நின்றுகொண்டார்கள்.

    சில காலம் கடுமையாக முயன்றிருந்தால், மீண்டும் நன்கு ஆட முடிந்திருக்கும். ஆனால், பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டு, தாம் தோல்வியுற்றதாக அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டார்கள்.

    தோல்வி அடைந்துவிட்டவர்களை `முட்டாள்,’ `பிழைக்கத் தெரியாதவன்!’ என்றெல்லாம் ஏளனமாகக் கருதுபவர்கள்தாமே இவ்வுலகில் அதிகம்! அதனாலோ என்னவோ, வெற்றி பெற்ற பலர் தம் தோல்விகளைக் குறித்துவைப்பது கிடையாது.

    கனவு ஒரு பக்கமிருந்தாலும், மிகுந்த பிரயாசைக்குப்பின் கிடைக்கும் வெற்றியே இனிமையானது.

    கதை

    1897-இல் பிறந்த எமிலியா இயர்ஹார்ட் (Amelia Earhart) உலகிலேயே தன்னந்தனியாக விமானத்தை ஓட்டிய முதல் அமெரிக்கப் பெண்மணி.

    தான் செய்துவந்தது அபாயகரமானது என்று புரிந்தும் அயராது, வெற்றி பெறும் திறமை தனக்கிருக்கிறது என்ற துணிவுடன் ஈடுபட்டார். கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதன் பலனாக பல வாகைகள் சூடினார். முதன் முறையாக அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்தவர் என்ற பெருமைக்குரியவர் எமிலியா. இறுதியில் ஒரு விமானத்தை ஓட்டிப்போகும்போது மரணத்தைத் தழுவினார். அதை யாரும் குறைவாகச் சொல்வதில்லை. அவரது சாதனைகள்தாம் நிலைத்து நிற்கின்றன.
    தோல்வி அடையாதவர் யார்?

    கல்விக்கூடங்களில் பயில்கிறவர்கள் அனைவருமே சிறந்த தேர்ச்சி பெறுகிறார்களா? அவர்களது நாட்டம் வேறு திசையில் இருக்கலாம்.

    பாடுவதிலோ, ஆடுவதிலோ, சித்திரம் வரைவதிலோ நாட்டம் கொண்ட ஆண்குழந்தைகளை பல பெற்றோர் ஏற்காது கடுமையாகத் தண்டிப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை, கல்லூரியில் படித்து, பெரிய உத்தியோகத்திற்குப் போனால்தான் சமூகத்தில் மதிப்பு.

    பெற்றோரின் கணிப்பை ஏற்று, `எனக்கு எல்லாவற்றிலும் தோல்விதான்!’ என்று பிள்ளைகள் தம்மைத்தாமே மட்டமாக எண்ணி, குன்றிப்போவார்கள். தமக்கு வேறு துறைகளில் திறமை இருப்பது அவர்களுக்கே தெரிந்திருந்தாலும், அதை வெளிக்காட்ட வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. கனவுகள் கனவாகவே ஆகிவிடும் கொடுமை இதனால்தான்.

    அவரவருக்குப் பிடித்த துறையில் ஊக்கம் காட்டியிருந்தால், அதில் முழுமனதுடன் ஈடுபட்டு, பெரும் வெற்றி கண்டிருப்பார்களே!

    Share
  • தேமாவில் ஆன திருமாலை

    -முனைவர் அ.மோகனா

    பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
    அச்சுதா வமரரேறே யாயர்தங் கொழுந்தே யென்னு
    மிச்சுவை தவிர யான்போய் யிந்திர லோக மாளுளு
    அச்சுவை பெறினும் வேண்டே னரங்கமா நகரு ளானே

    – தொண்டரடிப் பொடியாழ்வார்

    மார்கழி! திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் உகந்த மாதமாகக் கருதப்படுவது. திருப்பாவையும், திருவெம்பாவையும் தெருக்கள் தோறும் முழங்கக் கூடிய மாதமிது. மாதங்களில் சிறந்த மாதமாகக் கருதப்படுவதும் மார்கழிதான். இம்மாதத்தின் கேட்டை நட்சத்திர நாளில் (ஜனவரி.4 வெள்ளிக்கிழமை) அவதரித்தவர் விப்ரநாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட தொண்டரடிப் பொடியாழ்வார்.

    பக்தி இயக்கத்தின் தோற்றமானது அக்கால மக்கட் சமூகத்தின் வாழ்நிலையில் மட்டுமன்றி இலக்கிய வகைமைகளுககுள்ளும் பல புது மாற்றங்களை ஏற்படுத்திய எனில் அது மிகையாகாது. யாப்பியல் நோக்கில் பல்வேறு புதுமுயற்சிகளைப் பக்தி இலக்கியங்களில் காணமுடியும். குறிப்பாக ஆழ்வார்களின் பாசுரங்கள். திருமாலோடு தாங்கள் பெற்ற அனுபவங்களின் நேரடி பதிவாகவே ஆழ்வார்களின் பாசுரங்கள் அமைந்துள்ளன. உள்ளத்தில் உருக்கத்தையும் நெகிழ்வையும் ஏற்படுத்துபவை இப்பாசுரங்கள். ‘ஆழ்வார்’ என்பதற்கு, “இறைவனுடைய கல்யாண குணங்களாகிய அமுத வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபடுவோர் என்றும், இறைவனுடைய வடிவழகில் ஈடுபட்டு அழுந்தினவர்களாதலின் ஆழ்வார்கள் எனப்பட்டனர் என்றும், மக்கள் படும் துன்பத்தைக் கண்டு பொறாமல் அத்துக்கத்தில் அழுந்தினவர்களாதலின் ஆழ்வார்கள் எனப்பட்டனர் என்றும் பல வகையான பொருட்களைச் சான்றுகளோடு விளக்கிச் செல்கின்றார் ம.பெ.சீனிவாசன் (2017:6). தமிழ்இலக்கிய வரலாற்றில் தவிர்க்க இயலாத வகிபாகத்தைப் பெற்றமைபவை பக்தி இலக்கியங்கள். அவற்றுள் திருமாலின் தொண்டர்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தொண்டர்களின் அடிப்பொடியாக வாழ்ந்த விப்ரநாராயணனின் பாடல்கள் தன்னிகரற்ற பாடல்களாக ஒளிர்பவை.

    சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிரபவ வருடம் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் இவர். ஆழ்வார்களின் வரிசையில் பத்தாமவராக இடம்பெற்றவர். திருமாலின் வனமாலை அம்சமாகப் பிறந்தவர். திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறைவனாகிய அரங்கனுக்குப் பூமாலை சாற்றுவதை வாழ்நாள் பணியாகச் செய்தவர். பூமாலை மட்டுமன்றிப் பாமாலையாலும் அரங்கனைப் பூஜித்தவர். தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருந்த இவர்தம் பக்திப் பெருமித வாழ்வில் சோழ நாட்டுக் கணிகையான தேவதேவியின் இடையீடு ஏற்பட்டது. அனைத்தையும் அரங்கனின் வடிவமாகக் கண்ட விப்ரநாராயணன் தேவ தேவியின் மீதான காதலில் மெய்ம்மறந்து செல்வங்களை இழந்தார். இவரைச் சோதிக்க கருதிய திருமால் சிறுவனின் வேடமிட்டுத் தன் கோயிலின் பொன்வட்டிலைத் தேவதேவியிடம் கொடுக்க பழி விப்ரநாராயணனின் மேல் விழுகின்றது. முடிவில் அரங்கனால் உலகத்திற்கு உண்மை அறிவிக்கப்பட்டு இறுதிவரை அரங்கனுக்காக தம்மை அடிமை பூண்டார். மேலும் அரங்கனின் அடியார்களுக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் விப்ரநாராயணன். அன்றுமுதல் தொண்டரடிப் பொடியாழ்வாரானார்.

    இவர் அரங்கனின் மீது பாடிய திருமாலை, திருப்பள்ளி எழுச்சி ஆகிய பாசுரங்கள் முதல் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. மாலை, பள்ளி எழுச்சி ஆகிய ப்ரபந்த இலக்கிய வகைமைகளுக்கு இவர்தம் பாடல்களை முன்னோடியாகக் கருதமுடியும். முன்னர்க் குறித்தபடி ஆழ்வார்கள் தங்களுக்குத் திருமாலோடு ஏற்பட்ட அனுபவப் பதிவுகளையே பாசுரங்களாக உள்ளம் உருகப் பாடியுள்ளனர். இந்தப் பின்புலத்தில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலை அவர் திருமாலுக்குச் செய்துவந்த கைங்கரியத்தின் விளைவாக எழுந்தது. பூமாலையோடு சேர்த்து அவரால் அளிக்கப்பட்ட பாமாலைதான் திருமாலை. அவ்வாறே பெண்மயக்கமான இருளில் விழுந்து திருமாலின் அருளால் மீண்டு ஒளியை அடைந்த அவர் உறங்கும் திருமாலை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சியினைப் பாடியுள்ளார். அதன்மூலம் இருள்கடந்து ஒளிபெற்ற தம் நிலையினையும் ஊடுபொருளாக்கியுள்ளார். இவருடைய பாடல்கள் பொருண்மையில் மட்டுமன்றி வடிவத்திலும் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன.

    தமிழ் யாப்பியல் மரபில் சீர்களை தேமா, புளிமா உள்ளிட்ட வாய்பாட்டு அலகுகளால் குறிப்பர். தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலைப் பாசுரப் பாடல்கள் யாவும் தேமாச் சீரினால் முடிகின்ற அடிகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரசைச் சீர்களாலான பாடலடிகள் ஓசை நயமும், பொருட்செறிவும் கொண்டவைகளாக அமைந்து பாடுவதற்கு இன்பம் அளிப்பவை. தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாடல்களும் இத்தன்மைத்தாகவே அமைந்துள்ளன. திருமாலைக் கண்முன் காட்சிப்படுத்துகின்ற ‘பச்சைமா மலைபோல் மேனி…’ என்று தொடங்கும் திருமாலைப் பாடல் ஒலிக்காத வைணவத் தலங்களைக் காணமுடியாது. இப்பாடலின் அமைப்பினை நோக்கும்போது அவை ஒரு விளச்சீரினைத் தொடர்ந்து மாச் சீர் மற்றும் தேமாச் சீரினைக் கொண்டமைகின்றன. பாசுரத்தில் உள்ள நாற்பத்தைந்து பாடல்களும் இவ்வமைப்பு மாறாமல் பாடப்பட்டுள்ளமை தனிச்சிறப்பு.

    பெண்டிராற் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு
    உண்டிராக் கிடக்கும்போ துடலுக்கே கரைந்து நைந்து
    தண்டுழாய் மாலை மார்பன் றமர்களாய்ப் பாடி யாடித்
    தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்கு மாறே (1:876)

    தம் சுய அனுபவத்தையே இப்பாடலில் கூறியுள்ளார் தொண்டரடிப் பொடியாழ்வார். இவ்வாறு உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்துவரும் உணர்வுகளை வார்த்தைகளாக்கும் அதே நேரத்தில் அவை குறிப்பிட்ட வடிவத்தோடும் வடிக்கப்படுகின்றன. இது தமிழ்ப் பக்தி இலக்கியங்களின் தனிச்சிறப்பு. இவ்வடிவத்தின் இலக்கணத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய தி.வீரபத்திர முதலியாரின் ‘விருத்தப்பாவியல்’ கீழ்க்கண்டவாறு விளக்கியுள்ளது.

    ‘சீர்வளர் கமலச் செவ்வி திகழ்தரு வதனக் கொண்மூக்
    கார்வள மலிந்த கூந்தற் கன்னலுங் கசக்கு மின்சொ
    லேரிளங் கொங்கை மின்னே ரிடையெழிற் கொடியம் பேதாய்
    சீர்விள மாச்சீர் தேமாச் சீரிணைந் திரட்டு மீங்கே’ (வி.பா.முதற்படலம்:1)

    பிற்காலத்தில் இந்த அறுசீர் ஆசிரிய விருத்த வடிவம் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றது. கம்பராமாயணம், பெரியபுராணம் உள்ளிட்ட காப்பியங்களில் இவ்வடிவம் பெரிதும் பயன்படுத்தப் பெற்றுள்ளது. பெரும்பாலான விருத்த வடிவங்களுக்கு இலக்கணம் வகுத்த நூலாக விருத்தப்பாவியல் உள்ளது. இருப்பினும் இதில் இலக்கணம் பெறாத வடிவங்களும் பக்தி இலக்கியங்களில் உள்ளன. இவர்தம் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் மூன்றுவிளச்சீர்களைத் தொடர்ந்த மாச்சீரினால் முடியும் அமைப்பினைப் பெற்றுள்ளன. சம்பந்தர், சுந்தரர் தேவாரப் பாடல்களில் இவ்வமைப்பிலான பாடல்களைக் காணமுடியும்.

    கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன விவையோ
    கதிரவன் கனைகடன் முளைத்தன னிவனோ
    துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித்
    துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா
    தொடையொத்த துளவமுங் கூடையும் பொலிந்து
    தோன்றிய தோட்டொண்ட ரடிப்பொடி யென்னு
    மடியனை யளியனென் றருளியுன் னடியார்க்
    காட்படுத் தாய்பள்ளி யெழுந்தரு ளாயே (1:926)

    தொடர்கின்ற விளச்சீர்கள் பாடல்களுக்குச் சந்த ஓசையினைத்தரக் கூடியவை. தொண்டரடிப் பொடியாழ்வாரின் இப்பாடல்களைப் பாடித்திருமாலின் அருளினைப் பெறுவதோடு இதன் இலக்கிய வடிவச் சிறப்பினையும் கவனித்து இன்புற வேண்டியது அவசியம்.

    துணை நின்ற நூல்கள்

    1. ஆழ்வார்கள் அருளிச் செயல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (ஆய்வுப் பதிப்பு), சீனிவாசன், ம.பெ., (ப.ஆ.), தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2017.
    2. Viruttappaviyal or The Prosody of Tamil viruttams, T.Viabadura mudaliar. 1938

    கட்டுரையாளர்

    முனைவர் அ.மோகனா
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    தியாகராசர் கல்லூரி, மதுரை

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 50

    வாழ்க்கை – நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் ஒரு பரிசு

    வாழ்க்கையின் குறிக்கோளே மகிழ்ச்சியாக வாழ்வதுதான் என்ற சொற்கள் காதுக்குக் கேட்க இனிமையாக இருக்கின்றது. ஆனால் நம்மால் அப்படி வாழ முடிகின்றதா? நமக்கு எது மகிழ்வைத் தருகின்றது? பணம், புகழ் , பதவி, உறவுகள், ஆளுமை போன்ற பலவற்றை நாம் வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டும் மகிழ்ச்சியை நாம் தொடர்ந்து நிலை நாட்டிக்கொள்ள முடியவில்லையே!  மகிழ்ச்சி என்பது மிகச் சிறிய காலக் கட்டங்களில் வந்து மின்னலைப் போல ஒளிர்ந்துவிட்டு மறையக்கூடியதா அல்லது நீலவானில் குளிர்ந்து ஒளிவிட்டு நிற்கும் முழுநிலவைப்போன்றதா?  அது சரி, நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளத்தில் அமைதியோடு இருக்கின்றோமா? உள்ளத்தில் அமைதியைக் கொடுப்பது மகிழ்ச்சியா, நிறைவா அல்லது ஆளுமையா? நிறைவாக இருக்கும் நேரத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா? பல கேள்விகள் நம் முன்னே தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன? இந்தக் கேள்விகள் புதிதல்ல. நம்முடைய புராண காலத்துக் கதைகளை படிக்கும் பொழுது நமக்குத் தெரியும் இது போன்ற கேள்விகளைத் தான் நசிகேதன் எமனின் அரண்மனை வாசலில் நின்றுகொண்டு எமனிடம் கேட்டான்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் அவனுக்கு பதில் கொடுத்த கூற்றுவன்-ஐம்பொறிகளால் கிடைக்கின்ற மகிழ்வுகளும் மற்றும் நாம் விரும்பும் தேவைகளின் நிறைவில் கிடைக்கின்ற மகிழ்வும் ‘பிரேயஸ்” என்று அழைக்கப்படும். இவைகள் நிரந்தரமல்ல. சிற்றின்பங்கள். அதே நேரத்தில் வாழ்க்கையின் முழுமையை நன்கு அறிந்து எல்லாமே நமக்குச் சொந்தம் என்ற எண்ணத்திலும் எதுவுமே நமக்குச் சொந்தமில்லை என்ற எண்ணத்திலும் பற்றற்ற பற்றை நாம் உணர்ந்து தாமரையிலைத் தண்ணீர்போல் வாழ்ந்தால் வாழ்வின் துயரங்கள் நம்மைத் தாக்காது என்ற ஒரு உண்மையை எடுத்துரைக்கின்றான்.

    அப்படியென்றால் நாம் மனத்தைக் கட்டுப்படுத்தவேண்டுமா? அல்லது நமது மனதில் ஏற்படும் ஆசைகளையும் உணர்வுகளையும் ஓரங்கட்டி ஒதுக்கிவிடவேண்டுமா ? இரண்டுமே மிகவும் கடினமான செயல்கள்தான்? பல துறவிகளால் கூட இந்த நிலையை அடையமுடியவில்லையே!! இதைப்பற்றி அலசி ஆராய்ந்த நமது முன்னோர்கள் மனதை ‘நிலைப்படுத்திடுவது’ மனதை ‘ஒருமுகமாக்குவது’ பற்றிய பல அறிய தத்துவங்களை நம் முன் வைத்தார்கள்.

    இதன் முதல் படியே மனதின் வேகத்தைக் கட்டுப்படுத்தி அங்கே ஏற்படும் சபலங்களையும் சஞ்சலங்களை சூறாவளியில் பறந்துசெல்லும் ஒரு இலையைப் போல் பறக்கவிடாமல் உண்மையை அறிந்து அமைதியாக இருக்கப்  பழக்கப்படுத்துவதான். இதையே யோகதத்துவங்களை விளக்கிக்கூறும் பதஞ்சலி முனிவர் தன்னுடைய முதல் பாடமாகக் கூறுகின்றார். ‘சித்தத்தை ஒருமுகப்படுத்துவதுதான் யோகநிலையென்று’.

    இப்படிப்பட்ட தத்துவங்களெல்லாம் எனக்குப் புரியாது. நடைமுறைக்கு உதவுவதுமாதிரி சொல்லுங்கள் என்கிறார் என் நண்பர். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு என்ன வழி?

    1. வாழ்க்கை இனிமையானது. ஆனால் அந்தப் பாதையில் துயரங்களும் நமக்காகக் காத்திருக்கும். அதை நாம் இன்பத்திற்குச் சமமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
    2. நாம் இருக்கும் இடத்தில் நின்றுகொண்டிருந்தால் மகிழ்ச்சி நம்மைத் தேடி வராது. முயற்சிக்க வேண்டும் வாழ்ந்து பார்க்கவேண்டும். முயற்சி திருவினையாக்கும் .
    3. நமது வாழ்க்கை நமக்கு மட்டும் சொந்தமானது. இதை மற்றவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு நம்முடைய தரத்தையோ தனித்தன்மையையோ குறைத்துக்கொள்ளவோ மாற்றிக்கொள்ளவோ முயற்சி செய்வது தவறானது. நமது வாழ்க்கையை நாம் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.
    4. தனிமரம் தோப்பாகாது. ஒரு சமுதாயத்தில் நாம் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எனவே மற்றவர்கள் துயரப்படும்பொழுது நாம் மட்டும் மகிழ்வோடு இருக்கமுடியாது. நமது வாழ்வின் மகிழ்வே நாம் மற்றவர்களுக்கு எவ்வாறு உபயோகமுள்ளவர்களாக இருக்கின்றோம் என்பதை பொறுத்ததுதான். கூடிவாழ்ந்தால் கோடி நம்மை.
    5. உண்மையான மகிழ்வு பொருட்களையோ அல்லது செல்வத்தையோ சேர்ப்பது அல்ல. “பொருட் செல்வம் ” எவ்வளவுக்கெவ்வளவு தேவையோ அதுபோல ‘அருட் செல்வம்” தேவை. எனவே இறையுணர்வோடு வாழ்ந்து எல்லா உயிர்களிலும் இறைவனின் பிரதிபலிப்பை உணர்ந்து செயல்படுதல் அவசியம்.
    6. வாழ்க்கை ஒரு குதிரைப் பந்தயம் அல்ல. வேகம் தேவையில்லை. நிதானம் தேவை. இறைவனாலும் இயற்கையினாலும் நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தையும் காலத்தையும் சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ளவேண்டும். காலம் பொன்னானது. “உலகத்தில் உன்னை யார் வேண்டுமானாலும் மன்னித்து விடலாம். ஆனால் நீ நழுவவிட்ட நேரம் உன்னை என்றும் மன்னிக்காது.” என ஆங்கிலக் கவிஞர் உருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling) என்பவர் கூறுகின்றார்.
    7. இருப்பதில் நிறைவு இல்லாமல் இல்லாததையோ அல்லது தேவையில்லாதையோ அல்லது நமது சக்திக்கும் முயற்சிக்கும் அப்பாற்பட்டதையோ தேடுதல் அறிவின்மைக்கு அறிகுறி. “நிறைவு” அமைதியான வாழ்க்கைக்கு முதல் படி.
    8. அறிவுக்கண்கள் எப்பபோழுதும் திறந்திருக்க வேண்டும். “கற்றல்” -தொட்டில் முதல் கடைசி மூச்சுவரை நடக்கக் கூடிய ஒரு இயல்பான செயல். கற்றலின் மூலமாக நமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். என்று நமது கற்றலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோமோ அன்றே நமது வாழ்க்கையின் துடிப்புக்கள் அடங்க ஆரம்பித்துவிடும். கற்க மறுக்கின்ற ஒருவன் ஒரு நடைப்பிணத்திற்கு சமமானவன் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
    9. “வெற்றி-தோல்விகள்” வாழ்வில் ஏற்படும் சில நிகழ்வுகள். அவைகள் நம்மை பாதிக்கக்கூடாது. வாழ்வில் என்றும் “மேன்மை” (Excellence)யைத் தேடவேண்டும். “மேன்மையைத்” தேடும் பாதையில் பல வெற்றிகளும் சில தோல்விகளும் நமக்குக் கிடைக்கலாம். ஆனால் மேன்மை (Excellence) என்ற இலக்கு மிகச் சிறப்பானது.
    10. சிறப்பாக வாழ நமது வாழ்க்கைப் பாதைக்குச் சில ஒழுக்கங்களும் கட்டுப்பாடுகளும் தேவை. இவைகளை நமக்கு நாமே கொடுத்துக்கொள்ள வேண்டும். நமக்கு மற்றவர்களால் கொடுக்கப்படும் கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் நம்முடைய கட்டுப்பாடற்ற சிந்தனைக்கு உதாரணங்கள். நமக்கு நாமே முன்னுதாரணமாக இருத்தல் சிறப்பானது.
    11. தன்னம்பிக்கை வாழ்வின் வளர்ச்சிக்கு நாம் இடும் உரம். தன்னம்பிக்கை இல்லாத செயல்களும் தன்னம்பிக்கை இல்லாத ஈடுபாடுகளும் தன்னம்பிக்கையில்லாத முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீர்போல் காலப்போக்கில் தோல்விகளையே தரும்.
    12. மற்றவர்களைப் பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களை நாம் மனம் திறந்து பாராட்டும் பொழுது நம்முடைய ஆணவம் அடிபட்டுப் போகின்றது. ஆணவமற்ற பணிவுடன் கூடிய அறிவும் திறனும் எல்லோராலும் போற்றப்படும்.
    13. உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் பேண வேண்டும். நலமில்லாத உடலும், நலமில்லாத மனமும் முரண்பாடுகள். ஆகவே சிறப்பாகவும், மகிழ்வோடும் வாழ்வதற்கு இந்த இரண்டையும் இணைந்து போற்றினால்தான் முழுமையான வாழ்வுக்கும் வளர்ச்சிக்குமான பலன் கிட்டும்.
    14. எப்பொழுதும் ஆக்கபூர்வமான நேர்மறை எண்ணங்களோடு (Positive Thinking) வாழவேண்டும். நேர்மறையான எண்ணங்கள் கொண்டவர்களின் சூழலில் இருத்தல் அவசியம். எதிர்மறையான எண்ணங்களும் அப்படிப்பட்ட சிந்தனைகளில் வாழ்பவர்களும், கூடஇருந்தே நமது தோல்விக்கு வித்திட்டுக் கொண்டிருப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் நம்மை பின்னோக்கித் தள்ளும்.
    15. “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கை என்றும் இன்பமில்லை.” எதிர்பார்க்காத, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சந்திப்புக்கள் வாழ்க்கையில் நம்முடைய திறன்களைக் காட்டக் கிடைக்கும் வாய்ப்புக்கள். அவைகளை சந்தித்து முன்னேறக் கற்றுக்கொள்ளவேண்டும்.

    வாழ்க்கை வாழ்வதற்கே !  வாழ்ந்து பார்க்கலாமே !!

    (நிறைவு)

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 6.2 (வருகைப்பருவம்)

    – மீனாட்சி பாலகணேஷ்


    குழந்தை முருகனுக்குப் பலவிதமான அலங்காரங்களைச் செய்துபார்க்கும் தாய், ஒரு கட்டத்தில் அவனே முதலும் முடிவுமான பரம்பொருள் எனத்தெளிந்து, மொழிகுழற அவன்புகழைப்பாடி அழைப்பதாக, திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழிலிருந்து கவிதை நயம் பெருகும் ஒரு பாடல்: ‘வா‘ எனும் சொல் பலவிதமான பொருட்களில் பலமுறை பயின்று வரும் நயமிகுந்த பாடல்.

    ‘அன்ன வாகனனாகிய பிரமனின் நாலுமுகங்களும் தொங்கிப்போகும்படி (பிரணவ மந்திரத்தின் பொருளை உணர்ந்து உரைக்காததனால்) அவனை அறைந்தவனே! தேவர்கள் துன்பம் நீங்கிட வாவியான சரவணப்பொய்கையில் மகவானவனே! கார்த்திகைப்பெண்டிர் அறுவர் முலைப்பாலைப் பருகியவனே!

    ‘மின்னல் போலும் பெண்ணான உமை விரும்பும் சடாமுடியன் சிவபிரானின் குருவானவனே! அரக்கர் குலத்தைத் தடிந்தவனே! வலிய வேடர்களின் மகளான வள்ளிமீது மையல் கொண்டலைந்தவனே! உன் பெயரைச் சொல்பவர்கள் மீது குறையாது அருளை வழங்குபவனே!

    ‘முதல்வனே! அனைத்துக்கும் முடிவானவனே! சித்திக்கும் முத்திக்கும் முதலானவனே! முருகா வா வா என மொழிகுழற உருகி வேண்டுவோர் முன்பு வாராதிருப்பது உன் பெருமைக்குத் தகுமோ?’

    ‘பொன்கொழிக்கும் ஆறான பொன்னி எனும் காவிரிநீர் பாயும் வளநாட்டை உடையவனே! வருக! தேவர்கள் அதிபதி இந்திரனும், திருமாலும் அயனும் விருப்பொடு சலாமிட்டு வணங்கும் சுவாமிமலை முருகனே வருகவே!’ என நெகிழ்ந்துருகி உளம்கசியும் பாடலிது.

    ‘அன்னவா கனனாலு முகநாலு முகமா
    அறைந்தவா அமரர் துன்பம்
    அகலவா வியினில் மகவானவா உடுமகளிர்
    அறுவர்முலை அமுதுண்டவா
    மின்னவா வியசடையர் குருவான வாஅசுரர்
    வேரைத் தடிந்தவா வல்
    வேடர்மகள் மால்கொண்ட லைந்தவா சொல்லுவார்
    மீதிலருள் குறையாதவா
    முன்னவா யாவைக்கு முடிவான வாசித்தி
    முத்திக்கு முதலானவா
    முருகவா வாவென்று மொழிகுழற ஓதுவோர்
    முன்னர்வா ராமைதகவா
    சொன்னவா றானநீர்ப் பொன்னிபாய் வளநாட
    சுப்ரமண் யாவருகவே…’

    தெய்வங்களை வழிபடும்போது பாதாதிகேச வருணனை எனப் பெண்தெய்வங்களையும், கேசாதிபாத வருணனை என ஆண்தெய்வங்களையும் போற்றி வழிபடுவது மரபு.

    இதற்கேற்ப ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்யலகரியில் அன்னையின் திருப்பாதங்களை வருணிக்கும் ஸ்லோகம் மிக இலக்கிய நயம் வாய்ந்தது. சௌந்தர்யலஹரியினை வீரை கவிராஜ பண்டிதர் என்பவர் சுவைகுன்றாது தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். இதன் 87-வது பாடல் திருமண காலத்தில் ஐயன் அன்னையின் திருப்பதத்தை அம்மி மீது ஏற்றிவைத்த செயலைக் கூறுகிறது.
    “அன்னையே! உன் பாதங்கள் பஞ்சின்மேல் வைத்தாலும் வாடுகின்ற மென்மையான தன்மையுடையவை; சிவந்த தாமரை மலர் போன்றவை; இவ்வாறு அவற்றைப் போற்றாது சிலர் இதனை ஆமையின் மேல் ஓட்டிற்கு உவமை கூறி வீணாக வியப்பார்கள். கருநிற மிடற்றரானவரும் உனது கையை மணநாளில் பற்றுபவருமான (வரர்= வரிப்பவர், வரைந்து கொள்பவர்) பெருமான் மென்மையான உனது பாதத்தினை அம்மிக்கல் மீதும் ஏற்றி வைப்பாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்ணுற்றோருக்கு வஞ்சகக் கொடியநெஞ்சை உடையவர் அவர் எனவே எண்ணத் தோன்றும். ஆயினும் சிறிது எண்ணிப் பார்த்தால் அவர் அவ்வாறானவர் அல்ல, உன்பால் மெத்த அன்பு கொண்ட ஆண்டகையான் என்பது தெற்றென விளங்கும்,” என்கிறார் புலவனார்.

    ‘பஞ்சு அழுத்தினும் வாடு நின்பத
    பங்கயத்து இணை ஒப்பெனா
    விஞ்சை கற்றவர் வன்புஅக் கம்
    டத்தை வீணில் வியப்பராம்
    அஞ்சனப் புயல் அங்கை நின்வரர்
    அம்மி மீதிலும் வைப்பராம்
    வஞ்சகக் கொடு நெஞ்சர் அத்தனை
    வல்லர் அல்லர் நினைக்கினே.’

    இதே கருத்தினில் அம்மையின் திருப்பாதங்களைப் பற்றிய ஒரு பாடலை திருவுத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் நூலில் காணலாம். ஆனால் அது வருகைப்பருவத்தில் அமையாது ஊசற் பருவத்தில் காணப்படுகிறது. இருப்பினும் பாடலின் நயத்திற்காகவும், பாடுபொருளின் சிறப்பிற்காகவும் இங்கு அது கூறப்பட்டது.

    பார்வதி பரமேசுவரர்களின் தெய்வத்திருமணம், வைதிக முறையில் நிகழ்கின்றது. இத்திருமணத்தைக் காண மறைகள் அனைத்தையும் உணர்ந்தவனான பிரமதேவன், முகுந்தன் எனப்படும் திருமால், குலிசம் எனும் வச்சிராயுதத்தைக் கையில் ஏந்திய தேவர்கள் தலைவனான இந்திரன், எனும் இவர்களைத்தவிர இன்னும் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் எண்ணற்ற புலவோரும் சித்தர்களும் திரண்டெழுந்துள்ளனர். அவர்கள், “இத்தெய்வத் திருமணத்தைக் காண நமக்கு இதுவென்ன பாக்கியம்?” என உள்ளம் நெகிழ்ந்து உருகுகின்றனராம்.

    சித்திரைத் திங்களில் பல திருக்கோவில்களிலும் ஐயன், அம்மையின் திருமண விழா நடைபெறும். அதுதான் இங்கு கூறப்படுகிறது.
    பக்தியினால் உருகும் அன்பர்கள் உள்ளம் பச்சாதாபத்தினாலும் உருகுகிறதாம். எதனால் என்று பார்ப்போமா?

    நமது வைதிகமுறைத் திருமணத்தில் ‘அம்மி மிதித்தல்,’ என ஒரு சடங்கு உண்டு. அதானது, மணப்பெண்ணின் இடது பாதத்தின் பெருவிரலை மணமகன் தனது வலக்கரத்தால் பிடித்தெடுத்து, ஒரு அம்மிக்கல்லின் மீதேற்றி வைப்பதாகும். இதன் பொருள் என்னவென்றால், “இந்தக் கல்லினைப்போல் கடினசித்தம் கொண்டவளாகி, மன உறுதியோடும், வலிமையோடும் வாழ்வில் என்னுடன் இணைந்து இன்பதுன்பங்களில் பங்குகொள்வாயாக,” எனக் கூறுவதாகும். இதற்கான மந்திரங்களை மணமகன் அப்போது உச்சரிப்பது வழக்கம்.

    சிவனுக்கும் பார்வதிக்கும் நடைபெற்ற திருமணத்திலும் இச்சடங்கினை மணமகனாகிய சிவபிரான் செய்தார். அன்பர்களால் புகழ்ந்து துதிக்கப்பட்ட (துதி மணக்கின்ற) அம்பிகையின் பாதங்களிலொன்றை எந்தையாகிய பிரான் எடுத்து அம்மிமேல் வைத்ததால், கடினமான அம்மிக்கல்லில் பட்டுச் சிவந்துபோன அப்பாதத்தைக்கண்டு அடியார்கள் மனம்வருந்தி உருகுகிறார்களாம். பாதத்தைக் கண்டு உருகியது ஒருபுறம்; இவ்வாறு ஐயன் அம்மையின் மலர்ப்பாதத்தைக் கல்லின்மீது வைக்கும் தொழிலைக் கண்டும் உள்ளம் உருகுகிறார்களாம்.

    ஏனெனில் ஒரு பெரியமனிதரை எந்த ஒரு சிறு செயலையும் செய்ய அவருடைய அடியார்களும், அன்பர்களும் விடமாட்டார்கள். அவர் செய்துவிட்டால் பொறுக்கவும் மாட்டார்கள்! சிவபிரான் என்ன சாமானிய மனிதரா?அந்தம் ஆதி அற்ற உயர்வானவனல்லவா? ஆனால் இந்தச் செயலை, சடங்கினை, அவனன்றி அவனுடைய திருமணத்தில் யாராலும் செய்ய இயலாதே! அதுமட்டுமல்ல; இப்போது அன்னையே அத்தன் செய்த அத்தொழிலுக்காக உருகுகிறாளாம்.

    தனது பாதத்தினை அவருடைய திருக்கரத்தாற் தூக்கி அம்மிமேல் இட்ட செய்கை மென்மையான அவளுடைய இதயத்தை உருக்கிவிட்டது. ஏன்? அவளை மணம் புரிந்து கொள்பவன் அகில சராசரங்களுக்கும் நாயகன். அகிலநாயகியான அவளுமே செயற்கரிய தவங்களைச் செய்தே அவனை அடைந்திருக்கிறாள். மற்றும் அவன் காலால் இட்ட பணியைத் தலையால் செய்ய தேவரும் மற்றோரும் காத்திருக்கிறார்கள். அவனோ தனது தகுதிக்கேற்றவண்ணம் பெருமிதம் கொண்டு நில்லாது, ‘இது நம் திருமணம்; இது ஒரு புனிதமான முதன்மையான சடங்கு,’ என்று உள்ளத்தில் கொண்டு, அம்மையின் பூம்பாதத்தைத் தன் திருக்கரத்தால் பற்றி, அதனை எடுத்து மென்மையாக அம்மிமேல் வைக்கிறான்.

    அந்த மெல்லிய பூப்போன்ற பாதத்தை அம்மிமேல் தூக்கிவைக்க அவனுடைய மனமும் ஒப்பியிருக்காதுதான். ஆயினும் ஐயன் செய்வதனை உலகமே பார்த்தபடி உள்ளது. உலகத்தோர் நன்னெறிகளைக் கடைப்பிடிக்க ஐயன் தானே முன்னுதாரணமாகி நிற்கிறான். ‘ரோல் மாடல்’ எனக் கூறுவதுண்டல்லவா? அதுதான் இதுவும்.

    திருமண வைபவத்தைக்கண்டு களித்துருகிய அடியார்கள் ‘அன்னையின் அடி நோகுமே’ என மனமுருக, ‘உலகிற்கே முதல்வன் தன்னடியைப் பற்றி தூக்கினாரே’ என அன்னை உருக, படிக்கும் நம்முள்ளத்தையும் உருக்கும் அழகிய பாடலிது.

    இது திருவுத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் எனும் நூலில் காணப்படும் ஊசற்பருவப் பாடல். இயற்றியவர் பெயர் அறியக் கிடைக்கவில்லை. தமிழ்நயம், சொல்நயம், சந்தநயம் எனப் பல அழகுகளும் கொண்டு பொலியும் நூலாகும் இது. பாடலடிகளைக் காண்போமே!

    ‘பாக்கியம் நமக்கிதென்னப்
    பார்த்துருக வும்சித்தி ரைத்திங்க ளென்னப்
    பதித்திடு மணச்சடங்கில்
    துதிமணக் கின்றநின் பதம் அம்மி மேலெந்தை
    தூக்கிவைத் துச்சிவந்த
    தொழில்கண்டு பின்னுருக நீயுமவர் கையினால்
    தூக்கிய தொழிற்குருகவும்
    …………………………….’

    அடியார்கள் மனதில் முளத்தெழும் எண்ணற்ற கற்பனைகள், வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பெற்றும், பட்டை தீட்டிய வைரங்களாகவும் ஒளிர்கின்ற அழகை பிள்ளைத்தமிழ் நூல்களில் பலவிடங்களில் கண்டு களிக்கலாம்; இறும்பூதெய்தலாம்.
    தளர்நடை பயிலத்துவங்கியுள்ளாள் குழந்தை. இதனையே, ‘கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி,’ என்கிறார் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். தத்தித் தத்தி மயில்போல நடந்து வரும் குழந்தையைக்கண்டு பரவசத்தில் உள்ளம் பறிகொடுத்து, தாயின் நிலையிலும், அடியாரின் நிலையிலும் இருவிதமாகவும் நின்று, அவளைப் பலவிதமாக வருணிக்கிறார் அவர். தெய்வக்குழந்தையல்லவா இந்த மங்களாம்பிகை? ‘இவளைக் கண்ணால் கண்டாலே பிறவிக்கடலில் மூழ்கிப் படும் துயரமெல்லாம் பறந்தோடும்; பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல ஆரவாரிக்கும்,’ என்பது பொருள்!

    சிவபிரானின் பெருமைகள் அனைத்தும் அன்னை மங்களவல்லிக்கே உரித்தாக்கப்படுகின்றன. சிவனும் சக்தியும் இணைபிரியாதவர்களல்லவா? அயனும் திருமாலும் அன்னமாகவும், வராகமாகவும் உருவெடுத்து ஐயனின் அடிமுடி காணப்புகுந்த வரலாறு இது. தீயோர்களை நாசம்செய்யும் சுதரிசனம் எனும் சக்கரப்படையை ஏந்தியவன் திருமால். அவன் ஒரு விலங்காக (பன்றி, வராகம்) வடிவெடுத்து தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானின் இரண்டு திருப்பாதங்களைத் தேடிக்காணமுயன்றான். பூமியின் அடிவரை சென்று தேடியும் காணஇயலாமையால் மனமும் உடலும் துவண்டு மீன்கள் நிறைந்த கடலில் (இங்கு பாற்கடலில் எனப் பொருள்கொள்ள வேண்டும்) விழுந்து இளைப்பாறுகிறான்.

    அடுத்து பிரமன் அன்னப்பறவை வடிவெடுத்து சிவனின் முடிதேடியதனை அழகுற விளக்குகிறார். உயர உயரப்பறந்து தேடியும், முடியைக் காண இயலவில்லை. இனி எங்குபோய்த் தேடுவது எனச் சிந்திப்பவனுக்கு ஒரு எண்ணம் உதிக்கின்றதாம். அவன் தேடிய சிவபிரானின் முடியானது ஊடல்கொண்ட அன்னையின் சின்னஞ்சிறு பாதங்களின்மேல் வைக்கப்பெற்றுள்ளது. ஆகவே, பிரமன் தான் தேடும் சிவபிரானின் முடியைக்காண ‘அன்னையின் பாதங்களை நாடினாலே போதுமே; ஆகவே, அதனைச் செய்வோம்,’ என எண்ணுகிறான். இனிய அரிய கற்பனை.

    குறுக்குவழியில் இலக்கை அடைவது பற்றிய சிந்தனை புராணகாலம் தொட்டு இருந்துள்ளது போலும்!! யாருக்கும் எட்டாத பரம்பொருளின் திவ்விய வடிவை, முடியை, எளிதிலடைந்து விட முடியுமா? முடியாதுதான். அண்ணல் சிவபிரானின் முடி அயன் கண்களுக்கெட்டாத கற்பகக்கனியாகி விட்டது.

    இனி என் செய்வான்? அன்னம் ஆகி (ஓதிமம்) வருந்திக் களைத்து நின்ற அவன் கருத்து குழந்தையாகி நடைபயிலும் அன்னையின் தேன்நிறைந்த மலர்போன்ற திருவடிகளில் பதிகின்றது. அது பயிலும் மென்னடையில் அவன் சிந்தையும் கருத்தும் பதிகின்றது; அயன் தேடிவந்ததென்னவோ, சிவபிரான் திருமுடிக்காட்சியைத்தான். ஆனால், அது எட்டாக்கனியாகிவிட்ட நிலையில், அன்னையின் நடையழகு அவன் கருத்தைக் கவர்ந்துகொண்டுவிட்டது. மற்ற அன்னங்கள் இவள் நடையைக் கற்க ஆவல்மிகுந்து அவளைப் பின் தொடர்கின்றன. தாமரைமலரில் வீற்றிருக்கும் இந்த (பிரம்மா) அன்னமும் அவைகளுடன் அன்னையைப் பின் தொடர்கின்றதாம்.
    இவ்வாறு அன்னங்கள் பின்தொடருமாறு தளர்நடை பயில்பவள், வானளாவ உயர்ந்த இமயமலையில் பிறந்த வனிதையாகிய மங்களவல்லி. இவள் தங்குமிடமோ வேதியர்கள் ஓதும் மறைவாழ்த்தொலி விண்ணளாவ முழங்கும் திருக்குடந்தை நகராகும். அம்மடந்தையை வருக வருகவே எனத் தாயர் அழைப்பதாகப் புலவர் கற்பனை விருந்து படைக்கிறார்.

    ‘ஊன்தோய் சுதரி சனப்படையா னொருமா
    வுருக்கொண்டு உம்பர்பிரான்
    உபய பதமும் காண்பான் புக்கு ஒன்றும்
    காணாது உழிதந்து
    மீன்தோய் பரவைப் புடைவிழுந்தான் விரும்பி
    யிவள்சிற் றடிதொடரின்மேற்
    விழைந்து முயன்ற முடிகாணன் மேவு
    மேவா விடினும் இவள்
    தேன்தோய் மலர்த்தாள் தொடர்பு ஒன்றே திருந்தும்
    …………………………………’

    சிந்தை களிகூர அன்னையின் கால்வண்ணம் கண்டோம். குழந்தையைக் காண்பதே மகிழ்ச்சிதரும். அதுவும், அணிமணி புனைந்து அலங்காரம் செய்விக்கப்பட்ட குழந்தையைக்காண ஆசை இன்னும் பெருகுமல்லவோ? தாயுள்ளத்தின் தாபமும் அன்பும் நிறைந்து ததும்பும் அழகிய கருத்துக்கொண்ட பாடல்கள் இன்னும் பலவுண்டு.

    சிவஞான முனிவர் இயற்றியுள்ள பிள்ளையார் மீதான கலைசை பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று, இருகைகளை ஊன்றித் தவழ்ந்து வரும் சிறு குழந்தை விநாயகனை, அவன் உருவிற்கேற்ப, ஒரு சிறு களிறு செய்யும் செயல்களால் வருணித்து மகிழ்கிறது.
    ‘இளமை பொருந்திய ஏறு எனத் தவழ்ந்து வரும்போழ்தில், தூண்போன்ற தும்பிக்கையால், பெருமூச்செறிந்தபடி நிலத்தைத் தோண்டியும், ஊழித்தீ போல பெருக்கெடுக்கும் செவியின் அசைப்பினால் உண்டான காற்று ஆகாயத்தைப் பிளந்தபடியும் அசைந்தாடி வரும் பீடும் பொருந்தி வரும் சிறு களிறு போன்று வருக,’ என விநாயகனை மழகளிறாகவே கண்டு மகிழ்கிறார்.

    இருகை யூன்றித் தவழ்ந்துமழ ஏற்றின் வருந்தோ றாங்காங்கே
    எறுழ்வன் புழைக்கை நெட்டுயிர்ப்பா னிருமா நிலத்தைக் குழிப்பதுவும்
    பெருகும் கடைக்கால் செயுஞ்செவிவான் பிளப்ப தேய்ப்பப் பல்காலும்
    பெயர்ந்து மடங்கி அசைந்தாடும் பீடும் தத்தம் பொறிதமக்கு
    மருவும் புலைன அவற்றிடமா மண்ணை அகழ்ந்தும் வெளிப்பரப்பை
    வளைத்தும் கவவிக் கொடுத்துதவும் வண்மை காட்ட அசைந்தசைந்து
    முருகுவிரியும் தொடைப்புயத்து முதல்வா வருக வருகவே
    மூரிக் கலைசைச் செங்கழுநீர் முனியே வருக வருகவே.

    இலக்கணப்படி வருகைப்பருவத்தின் பாடுபொருள், குழந்தையின் சிறுபாதங்களும் கால்களுமே ஆகும்.  திருமால் குழந்தையாகக் கால்களால் செய்த செயல்கள் பலவாம்: காளிங்கன் எனும் நச்சுப்பாம்பின் தலைமீது ஏறி நடம் புரிந்து அவன் ஆணவத்தை அடக்கியது, பின் வாமன அவதாரத்தில் மூவுலகும் ஈரடிகளால் முறைதிறம்பா வகையில் அளந்தது, மாயச்சகடத்தைக் காலால் உதைத்து, இறுத்து அரக்கனை அழித்தது எனப் பெரியாழ்வார் அனைத்தையுமே அழகுறப் பாடியுள்ளார்.

    உந்திபறத்தல் எனும் விளையாட்டை சிறுமியர் ஆடிப்பாடுவதாக அமைந்ததொரு அழகிய பெரியாழ்வார் பாசுரம்; இதிலும் கிருஷ்ணனின் திருவடித் தாமரைகள் போற்றப்படுகின்றன. ஸ்ரீராமனாகவும், கிருஷ்ணனாகவும் அவதரித்து, அவன் திருவடிகளால் செய்த கால்வண்ணங்களைப் பாடிப்பாடி மகிழ்கின்றனர் சிறுமியர். இதுவும் அரசனின் வீரச் செயல்களைப் புகழ்ந்துரைப்பது போன்றதே.
    ‘திருமுடி தாங்கி மூன்று உலகங்களையும் ஆண்டு எமக்கு அருள் செய்வாயாக,’ எனக் கானகம் சென்ற காகுத்தனைத் தொடர்ந்து சென்று வேண்டி நின்றான் அவன் தம்பி பரதன். ராமபிரானோவெனில் அவனுக்குத் தனது திருவடி நிலைகளை (பாதுகைகளை)க் கொடுத்து அருளினான்; அவனைப் பாடிப்பரவி உந்தீபற,’ என உந்திபறக்கின்றனர் சிறுமியர்.

    ‘முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு,உன்
    அடியேற் கருளென்று அவன்பின் தொடர்ந்த
    படியில் குணத்துப் பரதநம் பிக்கு,அன்று
    அடிநிலை ஈந்தானைப் பாடிப்பற
    அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.
    (பெரியாழ்வார் பாசுரம்- உந்தி பறத்தல்)

    ஸ்ரீ மகரக் குழைக்காதர் பிள்ளைத்தமிழின் புலவரும் அக்கால்களின் பெருமை வாய்ந்த செயல்களைப் பாடி மகிழ்கிறார்.
    ‘ஆலிலையில், திருவரங்கத்தில், பாற்கடலில் கண்வளரும் பச்சைநிறத்தவனே! நாகரத்தினத்தைத் தலையில் கொண்ட பாம்பான காளிங்கனின் கண்கள் பிதுங்குமாறு உனது சிவந்த தாமரைப்பாதங்களால் மிதித்துத் தள்ளி, அவன் வாலைப்பிடித்துச் சுழற்றி, இடையர்களைக் காக்க அவன் தலைமீது நடம்புரிந்த தலைவனே!’ என அவன் பெருமைகளைப் பேசுகிறார்.

    ‘பண்டா லிலையில்அரங் கத்துப்
    பாதாழியில் கண்துயில் கூரும்
    பச்சைப் புயலே பணா மகுடப் படப்
    பாந்தளின் கண்பிதுங்க நறும்
    தண்தாமரைச் செஞ்சரண் பெயர்த்துத்
    தள்ளிக் கடைவால் பிடித்து நெறி
    தழைக்கும் படிக்கு நடம்புரிந்த
    தலைவா ………………..’

    எனப் போற்றுகிறார்.

    இறையனுபவத்தையும் மழலையின்பத்தையும் ஒருசேரக் காட்டும் சிறப்பினைக் கொண்டமைந்தவை அருமையான இப்பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் எனலாம்.

    (இந்தத்தொடர் முனைவர், பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்கள் தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதி வந்ததன் தொடர்ச்சியாகும். பேராசிரியர் ஐயா முதல் ஐந்து பகுதிகளுடன் நிறுத்திக்கொண்டு இதனைத் தொடர்ந்து எழுதுமாறு என்னைப் பணித்துள்ளார். அன்னார் துவங்கிவைத்த அற்புதமான இத்தொடரை, பேராசிரியர் ஐயாவின் ஆசிகளுடன் எழுதுகிறேன்).

    (பிள்ளைத்தமிழ் பெருகி வளரும்)

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 6.1 (வருகைப்பருவம்)

    -மீனாட்சி பாலகணேஷ் 

    ‘ஓடிவருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ
    ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடீ,’ என்றார் பாரதியார்.

    சின்னஞ்சிறு குழந்தை நடக்கக் கற்றுக்கொள்வதனைக் காண்பது, அதனை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி, உவகைகொள்வது என்பது ஒரு தெய்வீக அனுபவம். சிவந்த தாமரைமலர் போலும் சின்னஞ்சிறு பாதங்கள் தத்தித்தத்தி நடந்துவரும் அழகை, தான் கீழே விழுந்து விடுவோமே எனும் அச்சமேயின்றி ஓடிவரும் இனிய செயலைக் காண ஆயிரம் கண்களும் போதாதுதான்!

    வரிசைக்கிரமமாக அமைந்த பிள்ளைத்தமிழின் ஆறாவது பருவம் வருகை அல்லது வாரானைப் பருவம் எனப்படும். குழந்தையின் பன்னிரண்டாவது மாதத்தில் இது நிகழ்வதாகக் கொள்ளப்படும்.

    நம் மனதுக்கினியவர்களின் நடையும், அதன் அழகும், அதுவே குழந்தையானால் அதன் கால் சதங்கை, சிலம்பு, இவற்றின் ஒலியும் மானிடர் அனைவருக்குமே மிகுந்த உற்சாகத்தைத் தருவதாகும்.

    தத்தித்தத்தித் தளர்நடை பயிலும் குழந்தையை அருகில் நின்று பார்க்கும் தாயின் உள்ளம் பாசத்தில் விம்முகின்றது. அந்தக்கால்களால் அவன் என்ன செயலெல்லாம் செய்யப்போகிறான், எங்கெல்லாம் செல்லப்போகிறான், அதை எவ்வாறெல்லாம் அழகுபடுத்திப் பார்க்கலாம் என்றெல்லாம் அவள் எண்ணங்கள் சிறகடிக்கின்றன. தன் குட்டனை, குழந்தையை, அழகுநடை பயிலும் மயிலாக, அசைந்து நடந்து வரும் அழகு யானைக்குட்டியாக, துள்ளிவரும் மானாக, எனவெல்லாம் பார்க்கிறாள்.

    ‘சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே அதை
    செவிமடுத்து எந்தன் மனம் களித்திடுமே,’

    எனும் ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யரின் பாடல் வரிகள், கண்ணனின் காற்சதங்கை ஒலியை மனதில் நிரப்பி மகிழ்விக்கின்றன.
    ‘நன்னுபாலிம்ப நடசி வச்சிதிவோ?’ என, (என்னைக் காக்கவேண்டி நீ நடந்து வந்தனையோ?) தியாகராஜரும் தமது கீர்த்தனை ஒன்றில் ஸ்ரீராமனைக் கேட்டு உருகுகிறார். ‘உயர்வான பரம்பொருளாகிய நீ ஏழை அடியேனுக்காக, தேரிலன்றி, குதிரை மீதிலன்றி, வெறும் கால்களால் நடந்து வந்தனையோ?’ எனும்போது உள்ளம் ஆனந்தத்திலும், பச்சாதாபத்திலும் விம்முகிறது அவருக்கு.

    இதனைப் பெரியாழ்வாரும் தமது பாசுரங்களில் பாடி மகிழ்ந்துள்ளதனைக் காணலாம். கண்ணன் நடப்பது சிறிய யானை மெல்ல அசைந்து நடப்பது போலிருக்குமாம். யானை தனது மதங்களைப் பெருக விட்டுக்கொண்டும், தனது காலில் இடப்பட்டுள்ள சங்கிலி ‘சலார்பிலார்’ என ஒலி எழுப்பும்படியும் தன் உடலின் இருபுறங்களிலும் தொங்கும் மணிகள் ஒலிக்குமாறும் நடப்பதுபோலக் கண்ணன் நடக்க வேண்டும் எனும் தாயின் ஏக்கத்தைப் பாடுகிறார்.

    ‘தொடர்சங் கிலிகை சலார்பிலார் என்னத்
    தூங்கு பொன்மணி ஒலிப்ப
    படுமும் மதப்புனல் சோர வாரணம்
    பைய நின்று ஊர்வது போல்…’

    திருவடிச் சதங்கைகள் ஓசை எழுப்ப, அரைச்சதங்கையின் மணிகள் ஒலிக்க, என் சார்ங்கபாணி தளர்நடை நடவானோ! என ஆவலாக வேண்டுகிறார்.

    அன்னையின் ஆவலை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பை அழகுறச் சித்தரிக்கும் இப்பாசுரம், அவளுடைய பெருகியோடும் எல்லையற்ற அன்பின் உயர்வை எடுத்துக் காட்டுகிறது.

    ஆயினும் இவ்வாறெல்லாம் தான் போற்றிப் பெருமிதம் கொள்ளும் சிறுகுழந்தை, தான் வழிபடும் திருமாலே சிறு கிருஷ்ணனாக வந்த வடிவம் என அவருக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துள்ளது. ஆகவே அடுத்த பாடலில் அந்தக் குழந்தையான இறைவடிவே வந்து தன் வீடெங்கும், வீதியெங்கும் தன் பிஞ்சுப்பாதங்களின் முத்திரையைப் பதிக்க வேண்டுவது மற்றொரு சிலிர்க்க வைக்கும் அழகு.

    ‘ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம்
    உள்ளடி பொறித்து அமைந்த
    இருகாலும் கொண்டு, அங்கங்கு எழுதினாற்போல்
    இலச்சினை படநடந்து….’

    எனப் பெரியாழ்வாரின் தாயுள்ளம் விழைகின்றது.

    பிள்ளைத்தமிழ் நூல்களின் பாடல்கள் அனைத்துமே தாய், செவிலித்தாய் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் கூற்றாக அமைவது அதன் தனிச்சிறப்பாகும். அடியார்கள் தம்மை இத்தகைய நிலைகளில் இருத்திக்கொண்டு தாம் விரும்பும் இறைவடிவங்களைப் பாடிப்பரவுகின்றனர்.

    கிருஷ்ணனுடைய பாதங்களின் சிறப்பில் ஆழ்ந்துவிட்ட லீலாசுகர் எனுமடியார்ஆனந்த பரவசமாகி அவற்றை வர்ணிப்பது படிக்கின்ற நமக்கும் களிப்பைத் தருகின்றது:

    ‘வேறு புகல் இல்லாதவர்களுக்கு இத்திருவடிகள் ஒன்றே புகலிடமாக (அசரண-சரணாப்யாம்) உள்ளன. குழலூதியபடி கிருஷ்ணன் இத்திருவடிகளால் நடந்து வருகிறான் (ஆயாதி),’ என நெகிழ்கிறார் அடியார்.

    கிருஷ்ணனின் கல்யாண குணங்களில் ஆழ்ந்துவிட்ட நாராயண பட்டத்ரி, நாராயணீயத்தின் ஈற்றயல் ஸ்லோகத்தில் கிருஷ்ணனின் திருவடிகளை வழுத்தி, ஆத்மார்ப்பண லயிப்பில் உருகிக் கரைந்து தன்னையே இழந்து விடுகிறார்.

    ‘உனது சரீரத்திலேயே யோகிகளால் மிகவும் விரும்பப்படுவன உனது திருவடிகளே! ஆதரவற்றவர்களுக்கு அவையே புகலிடம். அடியார்களுக்கு அவை வேண்டியன அனைத்தையும் தரும் கற்பகத்தரு. கிருஷ்ணா! குருவாயூரில் உறைபவனே! (பவனபுரபதே) கருணைக்கடலே! இந்த உனது திருவடிகள் எனது இதயத்தில் எப்போதும் பதிந்து நின்று, எனது துயரங்களை விடுவித்து என்னை மிக உயர்வான பேரின்பச் செல்வத்தில் ஆழ்த்தட்டும்.’

    ‘வேண்டிக்கொள்ள வேண்டிய’வற்றின் உச்சநிலை வேண்டுதல் இது!  பி. லீலா எனவொரு பாடகி இருந்தார். அவருடைய இனிய குரலில், உள்ளத்தை உருக்கும் இந்த ஸ்லோகத்தினைக் கேட்கும்போது பட்டத்ரியின் தேடுதலை, ஆனந்த லயிப்பை ஒருவாறு புரிந்துகொள்ள இயலும். ‘ஒருவாறு’ என்றதன் காரணம், நாமே அந்த நிலைக்குச் சென்றால் தான் துல்லியமாக உணர இயலும். நாமெங்கே, பட்டத்ரி எங்கே?

    ‘யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸோ,’ என்பன ஸ்லோக வரிகள்.

    பிள்ளைத்தமிழுக்குத் திரும்பலாம்!!

    முருகப்பெருமானை, கதிர்காமத்திலுறையும் கந்தவேளை, தளர்நடை பயிலும் குழந்தையாக்கி, தாமே அன்னையாகி, தம்மிடம் நடந்து வருமாறு கைகளை நீட்டி வேண்டுகிறார் இதனை இயற்றிய சிவங். கருணாலயப் பாண்டியப் புலவர்.  தெய்வத்தன்மையினால் முருகனுக்குப் பட்டால் செய்த சிறு ஆடை இயல்பாகவே அமைந்ததாம்; அது நூலால் நூற்கப்படாமலும், ஊசியால் தைக்கப்படாமலும் விளங்குவது. அது நோன்பிருந்து நின்னையே நினைந்துருகும் அடியாரின் உள்ளம்போல அசைந்தாடுகிறது என்றார் புலவர்.

    ‘நூலாத நூலாடை ஊசியொடு குயிலாத
    நொய்யசின் மெய்யுறையது
    நோன்பிற்ற ழும்பிநின் னுள்ளுமுள மெனவாட…’

    மிகவும் உயர்வானவையே தன் தெய்வக்குழந்தைக்குப் பொருந்தும் என எண்ணும் தாயுள்ளத்தின் அன்பு இதில் புலப்படுகின்றது. இன்னும் கூறுவார்: அழகான பூச்செண்டு முடிக்கப்பட்ட கொண்டை ஆடுகிறது; (அவனருளால்) பூமியில் அறம் வழுவாமல் நடமாடுகிறது; உணவே அருந்தாது தவம் செய்வோர் உள்ளம் இறை எண்ணத்தில் அசைந்தாடுகின்றது; தளர்நடை நடக்கும் குழந்தையின் உடலும் தள்ளாடுகிறதாம். எட்டுக்கரங்களையும், நான்கு முகங்களையும் கொண்ட பிரமனின் பெருமிதம் சிதைந்தோட, தேவர்கள் சிறைநீங்கி ஓட, அசுரர்கள் படை தோற்று ஓடிடுமாறு செய்து, நாய்போன்ற எமது அவலம் தெறித்தோடுமாறும், உன்மீது அன்புகொண்டு நாங்கள் மெழுகுபோல உள்ளம் கசிந்து என்புருகிக் கண்களில் மழைநீர் போலக் கண்ணீர் பெருகி ஓடுமாறும் நீ எம்முன்பு நடைபயின்று வரவேண்டும்,’ எனும் வேண்டுதல்.

    தளர்நடை நடக்கும் குழந்தை ஆடி அசைந்து வருவதும் ஒரு தனியழகு.
    அதைக்கண்டு உள்ளம் மகிழ்வது அன்னையின் இயல்பு;
    கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பாடுவது அடியார் மரபு!
    ‘மாலாகி யாம் அழல் மெழுகின் நெக்கென்புருகி
    மழையோடவே வருகவே.’

    பிள்ளைத்தமிழ்ப் பாடல்களின் சிறப்பு தெய்வத்தின் பெருமையை குழந்தைப்பருவங்களுக்கான செயல்களில் வைத்துப் போற்றுவது. குழந்தையின் தெய்வத்தன்மையை உணராத அடியார் இல்லை! ஆகவே தாம் போற்றும் குழந்தையை, தெய்வத்தின் சிறப்புகளைக்கூறித் தம்முன் வருமாறு வேண்டுதல் இன்னொரு அழகு. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் தடாதகைப்பிராட்டியாகிய சிறு பெண்மகவை, குமரகுருபரனார் ‘வருக’வென அழைக்கும் பாடல்கள் நமது உள்ளத்தைக் கசிய வைப்பனவாகும்.
    ‘தேன்சிந்தும் மலர்கள் பொருந்திய நறுமணம் மிகுந்த கூந்தலை உடைய பெண்யானையே! வருக! முழுமையான ஞானவெள்ளமே வருக! பிறைசூடிய பெருமானின் மூன்று கண்களுக்கும் விருந்தாக அமைந்தவளே வருக!  ‘பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மூவருக்கும் மூலமாக விளங்கும் சத்தியே வருக! விதை இல்லாமலே விளைகின்ற பரமானந்தம் எனும் தெய்வீக விளைவே வருக!
    ‘பழமையான மறைகள் எனும் வேதங்களின் இளந்தளிரே வருக! அருள் பழுத்துக் கனிந்துள்ள கொம்பாயுள்ளவளே வருக! நின் அழகான கடைக்கண்ணின் கோடியில் பெருகிய அருள்வெள்ளத்தில் மூழ்கியுள்ள அடியார்களின் பிறவியாகிய நோய்க்கு மருந்தாக விளங்குபவளே வருக! இனிய பசிய குதலைமொழி பேசும் கிளியே வருக! மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே!’

    ‘பெருந்தேன் இறைக்கும் நறைகூந்தற்
    பிடியே வருக முழுஞானப்
    பெருக்கே வருக பிறைமௌலிப்
    பெம்மன் முக்கண் சுடர்க்கிடுநல்
    விருந்தே வருக…..’ என்பது பாடல்.

    தான் வழிபடும் அன்னை தெய்வத்தை ஒரு சிறு பெண்மகவாக்கி, தாமே தாயாகி, அவளுடைய அருமைபெருமைகளையெல்லாம் பாடி, அவளை ‘வருக’வென அழைத்துச் சீராட்டும் அடியாரின் உள்ளம் எப்படிப்பட்ட பேரானந்தத்தில் மூழ்கித் திளைக்கின்றதென்பதனைப் பிறிதொரு பாடலிலும் காணலாம்.

    ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
    தொடையின் பயனே நறைபழுத்த
    துறைத்தீந் தமிழின் ஒழுகுநறும்
    சுவையே அகந்தைக் கிழங்கைஅகழ்ந்து
    எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
    ஏற்றும் விளக்கே வளர்சிமய
    இமயப் பொருப்பில் விளையாடும்
    இளமென் பிடியே எறிதரங்கம்
    உடுக்கும் புவனம் கடந்துநின்ற
    ஒருவன் திருவுள்ளத்தில் அழ
    கொழுக எழுதிப் பார்த்திருக்கும்
    உயிரோ வியமே மதுகரம்வாய்
    மடுக்கும் குழற்கா டேந்தும் இள
    வஞ்சிக் கொடியே வருகவே..’

    என்றார். இதில் ‘அகந்தையெனும் ஆழ்ந்த வேரோடிய ஆணவக் கிழங்கை, அகழ்ந்து எடுத்து எறிந்து விடும் ஞானிகளின் உள்ளத்தில் ஏற்றிவைக்கப்படும் ஒளிவிளக்காக இருப்பவளே,’ என அன்னையின் பெருமையை உணர்த்தியது எண்ணவொண்ணாததொரு நயம் ஆகும். மேலும், ‘சிவபெருமான் தன் உள்ளத்தில் அழகாக எழுதிவைத்துக் கண்டு களிகொள்ளும் உயிரோவியமானவளே மீனாட்சியன்னை,’ என்றும் உரைக்கிறார். இப்பாடலுக்கு இன்னொரு சிறப்புமுண்டு. இளம் வயதிலேயே பெரும் ஞானியான குமரகுருபரனார் அன்னை மீனாட்சி மீது இப்பிள்ளைத்தமிழ் நூலை யாத்தனர். அன்னை மீனாட்சியம்மை மன்னர் திருமலை நாயக்கர் கனவில் தோன்றித் தன் திருமுன்பு அதனை அரங்கேற்றப் பணித்தாள். அவ்வாறே அரங்கேற்றமும் அம்மையின் திருக்கோயிலில் அவள் சந்நிதியில் நிகழ்ந்தது. மேற்காணும் இப்பாடலுக்குக் குமரகுருபரனார் பொருளுரைக்கும் போது அன்னையே அருச்சகரின் ஐந்தாறு வயது மகள் போலத் தோன்றி அரசர் திருமலை நாயக்கரின் மடியிலமர்ந்து இப்பாடலைக் கேட்டு ரசித்தாள். பாடல் முடிந்ததும் அரசர் கழுத்திலிருந்த முத்துவடத்தைக் கழற்றிக் குமரகுருபரர் கழுத்திலிட்டு மறைந்தனள். ஆகவே, அன்னையின் ஆமோதிப்பைப் பெற்றதொரு பிள்ளைத்தமிழ் நூலும் இதுவே எனப் பெருமை கொள்ளலாம். அன்னை தெய்வம் மீதான பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றிய அடியார் பலரும் சக்தி உபாசகர்களாகவும் இருந்துள்ளனர். தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையத்தினர் சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் எனவொரு நூலை வெளியிட்டுள்ளனர். இயற்றியவர் பெயர் தெரியவில்லை. இவர் ஐயத்திற்கிடமின்றி சக்தி உபாசகர். ஏனெனில், வாரானைப் பருவத்துப் பாடலொன்றில் ஸ்ரீசக்கரத்தில் உறையும் அம்பிகையான அவளைப் போற்றுகிறார். அம்பிகையின் ஸ்ரீ சக்கர வருணனை விரிவாகத் தரப் பட்டுள்ளது.

    ‘முச்சதுர மூவட்டம் ஈரெட்டும் ஓரெட்டு
    முளரியிதழ் சூழ்ந்ததற்குள்
    முகனையிற் பதினான்கு பத்துடன் பத்தெட்டு
    முக்கோண நடுவிந்துவாய்…..’ என ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பை விவரித்து,

    ‘சச்சபுட முதலான தாளங்கள் தாள்பொரச்
    சதகோடி திருமாதரார்
    சந்ததம் நடம்புரியும் நாற்பத்து முக்கோண
    சக்கர நாயகி வருகவே’ எனப்போற்றுகிறது.

    இவையனைத்தும் சக்தி உபாசகர்களின் துதிகள் தாமே? இது கிடக்க, வேறொரு இனியகாட்சியைக் காணச் செல்லலாமா?
    பிடிவாதம் செய்யும் ஒரு சிறு பெண்குழந்தை. அதனிடம் பொய்யாகச் சினம்கொண்டுபேசும் தாய்! இனிமையான காட்சி!
    “வா கண்ணே! முகம்கழுவி, உன்னைச் சிங்காரிக்கிறேன்,” என ஆசையாகத் தாய் அழைக்கிறாள். குழந்தைக்கோ விளையாட்டு மும்முரம். சிறு செப்புகளில் மண்சோறு சமைக்கிறாள். இலைகளைப் பறித்துப் பொரியல்செய்கிறாள். “அம்மா வா, நான் சமைத்த சோற்றைச்சாப்பிடு,” என்று மழலையில் அன்னைக்கும் கொஞ்சம் தருகிறாள்.

    கையில் பட்டுப்பாவாடை, கழுத்திற்கான அணிகலன்கள், மை, திலகம் முதலானவற்றை ஏந்தியபடி தாயின் அருகில் பணிப்பெண் நிற்கிறாள். குழந்தையின் புழுதிபடிந்த உடைகளையும் கைகால்களையும் கண்ட தாய் சலித்துக்கொள்கிறாள்.
    “நான் அழைக்கஅழைக்க நீ வராமலே இருந்தால், நான் இங்கிருந்து போய்விடுவேன். உனக்கு முகம், கைகால் கழுவி, உனது அழகான வேல்போலும் விழிகளுக்கு மைதீட்டமாட்டேன். பிறைமதிபோன்ற நெற்றியில் அழகிய திலகத்தையும் எழுதமாட்டேன். அழகான மணிகளால் செய்யப்பட்ட இந்த ஆபரணத்தை உனக்கு அணிவிக்கமாட்டேன்.”

    குழந்தைக்கு அலங்காரம் செய்துகொள்ள ஆசை; பெண்குழந்தையல்லவா? அலங்காரப்பிரியை அவள்! தனது விளையாட்டை விட்டுவிட்டுவர மனமில்லாமல் தாயை ஏக்கத்தோடு பார்க்கிறாள். இதுதான் வாய்ப்பெனத் தாய் தனது அச்சுறுத்தல்களைத் தொடர்கிறாள்.  “உன்னிடம் அன்பாகப் பேசவும் மாட்டேன் குழந்தாய்! புழுதிபடிந்த உன் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன் போ! அலங்காரம் செய்தபின் எனது முலைப்பாலையும் ஊட்டமாட்டேன். ஆசையாக எனது இடுப்பில் உன்னைத் தூக்கிவைத்துக்கொண்டு தேரோடும் வீதியில் சென்று நித்தமும் வேடிக்கை காட்டுவேனல்லவா? அதையும் செய்யமாட்டேனடி பெண்ணே!” குழந்தைக்குத் தாளவில்லை! இவையனைத்தும் அன்னையிடம் அவளுக்குண்டான தினசரி சலுகைகள். எப்படி அவற்றை இழக்கமுடியும்? குழப்பத்துடன் அன்னையைப் பார்க்கிறாள். அன்னையோ விடுவதாயில்லை! விரலால் எச்சரித்தபடி, “உனது சிவந்த கனிவாயில் முத்தமிட்டு உன்னைக் கொஞ்சமாட்டேனடி பார்த்துக்கொள்! அழகான மணிகள் குலுங்கும் தொட்டிலில் படுக்கவைத்து, உன்னை உறங்கவைக்கப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டும் பாடமாட்டேன் தெரியுமா?” என்கிறாள். இதற்குமேல் குழந்தைக்குத் தாங்கவில்லை. தனது சிறுசோற்றுச் செப்புக்களை வீசியெறிந்து விட்டு உதடுகள்நெளிய அழுகைபொங்கிவர ஓடோடிவந்து தாயின் சேலையில் முகம் புதைத்துக்கொண்டு அவளை அணைத்துக்கொள்கிறாள். தாயும் தனது பொய்க்கோபத்தினை விட்டொழித்து, குழந்தையை இறுக அணைத்துக்கொள்கிறாள். பார்க்கும் நம் முகங்களில் புன்னகை அரும்புகிறது இல்லையா?
    இவள் இமவானின் அகன்றமார்பில் (விசாலமான இமயமலையில்) தவழும் குழந்தையல்லவோ? இவளையா கோபிப்பது?
    ‘வருக வருக என் குழந்தையே! சாலிப்பதி எனப்படும் நெல்லையில் வாழ்கின்ற காந்திமதித்தாயே, விரைந்து வருகவே!’ என நாமும் பாடியவாறே குழந்தையை எண்ணத்தில் அணைத்துக் கொள்கிறோம்.

    ‘வாரா திருந்தா லினிநானுன் வடிவேல்
    விழிக்கு மையெழுதேன்
    மதிவாள் நுதற்குத் திலகமிடேன் மணியால்
    இழைத்த பணிபுனையேன்
    …………………………………………….
    தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய
    கனிவாய் முத்தமிடேன்
    திகழு மணித்தொட் டிலிலேற்றித் திருக்கண்
    வளரச் சீராட்டேன்…..’

    பேராதரம்- மிகுந்த அன்பு; ஒக்கலை- இடை.
    (நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்
    வித்துவான் அழகிய சொக்கநாதப்பிள்ளை)

    அன்னைத் தெய்வத்தைக் குழந்தையாக்கி இவ்வாறு வருந்தியும், வேண்டியும், உரிமையுடன் கோபித்தும், பின் கொஞ்சியும் அழைத்தால் அவள் வந்து அருள்செய்யாமல் இருப்பாளா?
    திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் பகழிக்கூத்தரும் இதுபோன்றே தாய் குழந்தை முருகனிடம் பொய்யாகச் சினம் கொள்வதாகப் பாடியுள்ளார். ‘உன் அரைஞாண் இறுக்கமாக உள்ளது. அதனை வாகாக தளர்த்திப் பூட்ட மாட்டேன். இலங்கும் மகர குண்டலத்தை எடுத்துக் குழைமீது அணிவிக்க மாட்டேன்; நெற்றியில் திலகம் தீட்ட மாட்டேன்,’ எனவெல்லாம் தாயின் பலவிதமான பொய்யானஅச்சுறுத்தல்கள்! இது போன்றே பழனி முருகனின் தாய்மாரும் பலவிதமாகக் கூறிக் கொஞ்சி அவனை வருமாறு அழைக்கின்றனர். சீர்காழி கோவிந்தராஜனின் இனிய தெய்வீகக் குரலில் இப்பாடலைக்கேட்டு ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

    ‘பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்ட வருக சிறுசதங்கை
    புனைய வருக மணிப்பதக்கம் பூண வருக
    ………………………………………………..
    முத்த மிடற்கு வருகஎதிர் மொழிகள் மழலை சொலவருக
    தன்னே ரில்லா நுதல்திலகம் தரிக்க வருக விழியினில்மை
    சாத்த வருக ……………………………….
    வளஞ்சேர் பழனிச் சிவகிரிவாழ் வடிவேல் முருகா வருகவே!’
    (பழனிப்பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்- சின்னப்ப நாயக்கர்)

    இங்கு புலவர் முருகனின் தெய்வத்தன்மையைப் பாடுகிறார்; ஆயினும் அவனுடைய குழந்தை வடிவிற்கு அலங்காரம் செய்து, பொன்னும் மணியும் புனைவித்து, முகத்தோடணைத்துச் சீராட்டி மகிழ விரும்பும் தாயினது பேராவலையும் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு அணிகலனாகத் தன் குழந்தைக்கு அணிவித்து அழகுபார்க்க விழையும் தாயுள்ளத்தின் பேராவலையும் அன்பையும் இப்பாடல்கள் பதிவு செய்துள்ளன. இங்கு மெய்யடியார்களின் ஒரு அருமையான சிந்தனைத்துளியை எண்ணிப்பார்க்கலாம். தன் பிரியத்துக்குரிய தெய்வக்குழந்தை காலில் தண்டையும் சதங்கையும் கொஞ்ச அருகே வந்தால் எவ்வாறிருக்கும் எனும் எண்ணமே அவர்களைத் தாயன்பில் இன்புறுத்துகிறது. பக்தியில் நெகிழவைத்தும் அன்பில் மகிழ வைத்தும் சிலிர்ப்பூட்டுகின்றது.

    ‘தண்டையணி வெண்டையம் கிண்கிணிச தங்கையும்
    தண்கழல்சி லம்புடன் கொஞ்சவே…’

    எனும் அருணகிரிநாதரின் திருப்புகழின் சந்தநயத்தில் மகிழாதவர்கள் இல்லை.  ‘அந்தகன் வரும் தினம்’ எனும் மற்றொரு திருப்புகழில் அருணகிரிநாதர், முருகனை அழைப்பதும் மிகவழகான சந்தநயமும் கருத்துச் செறிவும் கொண்ட பாடல். தாயான உமையவளின் உள்ளம் மகிழுமாறு கால்களில் சின்னஞ்சிறு சதங்கைகள் கொஞ்சிட குழந்தை முருகன் ஓடோடி வருகிறான். அன்னையின் அன்புள்ளம், அவன் தன்னிடம் வந்து அளிக்கப்போகும் ஆசை முத்தத்திற்காக- ‘சங்கரி மனம் குழைந்துருக முத்தம்தர வரும் சரவணனுக்காக’- ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டுள்ளது என்பதனைக் கூறும் வரிகள் சிறப்பானவை.

    ‘தந்தன தனந்தனந் தனவெனச்
    செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
    தண்டைகள் கலின்கலின் கலின்எனத் திருவான
    சங்கரி மனங்குழைந் துருகமுத்
    தம்தர வரும்செழுந் தளர்நடைச்
    சந்ததி சகந்தொழும் சரவணப் பெருமாளே,’

    என்பன பாடலின் ஈற்றடிகள்.
    இதே போன்று முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழிலும் குழந்தை முருகனை, ‘பொன்னால் செய்தபெரிய கழல்கள் பாதச்சிலம்புகளோடு சேர்ந்து கலின் கலின் எனும் ஒலியினை எழுப்பவும், திருவரையில் உடைமணி கிணின் கிணின் என ஒலிக்கவும், மற்றும் பலவாபரணங்கள் பொலியவும் எம்மிடம் வருவாயாக!’ எனத்தாய் வேண்டும் பாடல் காணப்படுகிறது.

    ‘செம்பொற் கருங்குழல் அரிக்குரல் கிண்கிணி
    சிலம்பொடு கலின்கலினெனத்
    திருவரையில் அரைமணி கிணின்கிணின் எனப்பொலந்
    திண்டோளின் வளைகலிப்ப…’

    கேட்டவரம் தர ஒடிவரும் குழந்தை தெய்வம், கிண்கிணி சதங்கையொலிக்க ஆடியசைந்து வரும் குழந்தை எனக் கொஞ்சி, சிறுகுழந்தைத் தெய்வங்களை வாரியணைத்து உச்சிமுகர்ந்து கொண்டாட அன்னைமார் போன்று அடியார்களுக்கும் ஆவல் மிகுகிறது. தமது பக்திப்பெருக்கினையும் கவிதைச் சிறப்பினையும் சொற்களில் குழைத்தெடுத்துப் பாடல்களைப் புனைந்து வைத்துள்ளனர்.
    (இந்தத்தொடர் முனைவர், பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்கள் தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதி வந்ததன் தொடர்ச்சியாகும். பேராசிரியர் ஐயா முதல் ஐந்து பகுதிகளுடன் நிறுத்திக்கொண்டு இதனைத் தொடர்ந்து எழுதுமாறு என்னைப் பணித்துள்ளார். அன்னார் துவங்கிவைத்த அற்புதமான இத்தொடரை, பேராசிரியர் ஐயாவின் ஆசிகளுடன் எழுதுகிறேன்).

    (பிள்ளைத்தமிழ் பெருகி வளரும்)

    Share
  • சேக்கிழார் பா நயம் – 18

    -திருச்சி புலவர் இரா இராமமூர்த்தி

    கைலையில் இறைவன் சுந்தரமூர்த்தி சுவாமிகளை, அவர் மாதர்களுடன் கலந்து வாழும் பொருட்டுத் தென்பாரதத்தை நோக்கிச் செல் என்று ஆணையிட்டார்! அவ்வகையில் சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் அவதரித்தார்!அந்த நாட்டின் சிறப்பை சேக்கிழார் பெருந்தகை பாடுகிறார்! சிவபிரான் தம் முடிமேல் கங்கை, பிறை, பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றைத் தாங்கியவர்!

    இத்தொடரால் சிவபெருமானின் அருஞ்செயல்கள் கூறப்பெறுகின்றன! வானிலிருந்து விரைந்து ஓடிப்பாய்ந்த கங்கையின் வேகத்தைத் தடுத்துத் தம் சடையின் சிறுபகுதியில் தாங்கி,வழிந்து நாடெங்கும்ஓட விட்டார்! இது குறிப்பாக கைலை மலையிலிருந்து கீழிறங்கித் தமிழ் நாடெங்கும் சென்று திருவருட் பாடல்களஅருளிச் செய்த சுந்தரரின் அருள் வரலாற்றைப் புலப்படுத்து கிறது! அடுத்து இயல்பாகவே முரண்பட்ட மதியையும் பாம்பையும் அருகருகே இருத்திய செயல், குறிப்பாக சுந்தரர் காரணமாகத் தமக்குள் முரண்பட்ட பரவை நாச்சியாரையும், சங்கிலியாரையும் ஊடல் தீர்த்து அவருடன் வாழச் செய்த அருள் வரலாற்றைக் குறிக்கிறது! அடுத்துக் கொன்றை மாலையைத் தலைமேல் சூடிய செயல் குறிப்பாக நிறமும், மணமும் நிறைந்த கொன்றை மலரை யாரும் சூடாமல் ஒதுக்கிய போதும், சிவபிரான் தானே விரும்பித் தலைமேலணிந்து சிறப்புச் செய்தது போல் மையல் மானுடமாய் மயங்கிக் காதல் வயப்பட்ட சுந்தரரை, அவர் பாடலின் பக்திமணம் பாரெங்கும் பரவச் செய்யும் பொருட்டுத் தம் தோழராய் ஏற்றுக்கொண்ட பெருமையைப் புலப்படுத்துகிறது! அதுமட்டுமல்ல, பிரணவ சொரூபம் படைத்த கொன்றை மாலை போன்று, இறைவர் சிறப்பை உணர்த்தும் திருத்தொண்டத்தொகை, தேவாரம் போன்ற பாடல்களை ஏற்று மகிழ்ந்த அழகைக் காட்டுகிறது. இவற்றையே சேக்கிழார்,

    ‘’கங்கையும் மதியும் பாம்பும் கடுகையும் முடிமேல் வைத்த அங்கணர் ‘’ என்ற தொடரால் குறிப்பிட்டார்! முன்பு கைலையில் சுந்தரரைத் தென்திசையில் மெல்லியலாருடன் காதல் இன்பம் கலந்து அணைவாய் என்று போக்கிய போது,

    ‘’செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன்
    மையல் மானுட மாய்மயங் கும்வழி
    ஐய னேதடுத் தாண்டருள் செய் என
    அங்க ணாளன் அதற்கருள் செய்தபின் ‘’

    என்ற பாடலில் அங்கணாளன் என்று சிவபிரானை நினைவுடன் குறித்தார்! இத்தகைய சிவபெருமான், திருமுனைப்பாடி நாட்டில், திருவெண்ணை நல்லூரில் சுந்தரரை ஆள்ஓலை காட்டித் தடுத்தாட்கொண்டார்! அந்த ஆண்டவர் எழுந்தருளிய நாடே திருமுனைப்பாடி நாடு! என்று பாடுகிறார்!

    அந்தத் திருமுனைப்பாடி நாட்டின் பெண்களைப் பற்றியும் சேக்கிழார் பாடுகிறார்! அம்மங்கையரின் குளிர்ந்த நிலவு போன்ற திருமுகத்தில், செங்கயல்களாகத் திகழும் விழிகள் இருமருங்கிலும் உள்ள செவிகளில் அசையும் குழைகளை நாடிப் பாய்கின்றன! என்பதை.,

    ‘’அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
    மங்கையர் வதன சீத மதியிரு மருங்கும் நாடிச்
    செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப் பாடிநாடு!’’

    என்று பாடுகிறார்! இத்தொடரில் , மங்கையர் கண்களின் சிறப்பைச் சேக்கிழார் பாடுகிறார்! கம்பரும் கோசல நாட்டை வருணிக்கும் போது,

    ‘’ஆச லம்புரி ஐம்பொறி வாளியும்
    காசலம்பு முலையவர் கண்எனும்
    பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
    கோசலம்!’’

    என்று பாடுகிறார்!அந்நாட்டின் பெண்களின் கண்கள் நன்னெறிக்கு மாறான வழியில் செல்லாவாம்! அவ்வாறே இந்தத் திருமுனைப்பாடி நாட்டின் மங்கையர் கண்களும் உள்ளன! உலகினர் கண்ணால் காண்பதை விசாரித்துச் செவியால் கேட்டபின் உறுதிப் படுத்திக்கொள்வார்கள்! அவ்வாறே அவ்வூரினர், சுந்தரர் சிவபெருமானின் அடியார் என்று செவியால் கேட்டதை , மூல ஓலையைக் கண்ணால் கண்டு உறுதிப்படுத்திய வரலாற்றை இது வேறுவகையில் கூறுகிறது! இதற்கு மேலும் விளக்கமாக ,

    ‘’இப்பகுதியிலே பின்னர்ச் சரித நிகழ்ச்சியிற் பரவையார் ஆரூர் நம்பிகளைப் “பண்டைவிதி கடைகூட்டக்“ கண்களாற் கண்டபின் “எதிர் வந்தவர் யார்?“ என்று சேடியை வினவி, அவள் சொல்லத் தமது காதுகள் மூலம் அறிந்துகொண்டாராகும். காட்சித் துறையிலே கண்ணால் தலைவனைக் கண்ட தலைவி, பின்னர் அவனை இன்னார் என்று காதாற்கேட்டறிந்துய்வள். ஆதலின் கண்கள் காதுகளை நாடிற்று என்ற குறிப்பை இச்சரித நிகழ்ச்சியிற் காண்போம்’’ என்று சிவக்கவிமணி கூறுகிறார்!

    இப்பாடலில்தான் சுந்தரர் அவதரித்த நாடாகிய திருமுனைப்பாடி நாடும், குறிப்பாக அந்நாட்டை ஆண்ட அரசராகிய நரசிங்க முனையரையர் திருப்பெயரும் கூறப்பெற்றன! இனி முழுப்பாடலையும் பயில்வோம்!

    ‘’கங்கையின் மதியும் பாம்பும்
    கடுக்கையும் முடிமேல் வைத்த
    அங்கணர் ஓலை காட்டி
    ஆண்டவர் தமக்கு நாடு
    மங்கையர் வதன சீத
    மதியிரு மருங்கும் ஓடிச்
    செங்கயல் குழைக்கள் நாடும்
    திருமுனைப் பாடி நாடு!’’

    சிவபிரானின் பெருமை, சுந்தரர் வரலாற்றுச் சிறப்பு, பெண்களின் பெருமை, நாட்டின் அறிமுகம் ஆகிய அனைத்தையும் புலப்படுத்தும் சேக்கிழார் திருப் பாடலின் சிறப்பே சிறப்பு!

    Share