-நிர்மலா ராகவன்

குறையொன்றும் இல்லை

`நம்மைப் பிறரால்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. நாமாவது புரிந்துகொள்ளப் பார்ப்போமே!’ திருமணத்திற்குப்பின் எனக்கு இந்த ஞானோதயம் பிறந்தது.

உளவியல் அறிஞர்கள் வகுத்திருந்த கேள்விகளுக்குப் பதில் எழுதி, நானே என்னைப் பரீட்சித்துக்கொண்டேன்.

விடைகள் எனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் ஒருங்கே அளித்தன.

பின்னே? `முதிர்ச்சி இல்லாதவர் நீங்கள்!’ என்று வந்திருந்தால்?

எனக்கு ஆத்திரம் வரவில்லை. அயர்ச்சியாக இருந்தது. எனது ஒவ்வொரு எதிர்மறையான பதிலையும் மாற்றும் நடத்தையை முயன்று பயின்றேன்.

`You are very sane!’ என்று சிலர் வியக்க, அப்பயிற்சிகளை எடுத்துக்கொண்டதை ஒத்துக்கொண்டேன்.

`உன்னிடம் குறைகள் இருப்பதை நீ ஒத்துக்கொண்டதே உனது நேர்மையைக் காட்டுகிறது!’ என்று ஒரு கவுன்சிலர் பாராட்டினார்.

நகைச்சுவை அற்ற பெண்கள்

`பெண்கள் தம்மைத்தாமே பார்த்துச் சிரிக்கமாட்டார்கள். அதனால்தான் வெகு சிலரே நகைச்சுவை நடிகைகளாக இருக்கிறார்கள்!’ என்று அமெரிக்க நடிகைகளைப்பற்றி ஒரு விமர்சகர் எழுதியிருந்தார். அதையே சவாலாக ஏற்று, அதைப் பொய்ப்பிக்கும் முயற்சியிலும் இறங்கினேன்.

நம்மை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும் நிகழ்ச்சிகளை பிறருக்குத் தெரியாதிருக்க மறைப்பானேன்! அவர்களுக்கு மட்டும் அப்படி எதுவும் நிகழ்ந்திருக்காதா, என்ன!

கதை

நான் இடைநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, தையலும் ஒரு பாடமாக இருந்தது. ஆசிரியை மிஸஸ் ஜோன் வகுப்புக்கு வந்ததுடன் சரி. எதையும் கற்றுக்கொடுக்கவில்லை. நாங்கள்பாட்டில் அரட்டை அடித்துக்கொண்டிருப்போம்.

முழுப்பரீட்சைக்கு வகுப்பினுள் ஆசிரியை எதிரே ஒரு சட்டை தைக்க வேண்டும் என்று அறிவித்தார் மிஸஸ் ஜோன். பெருமையாக, ஒரு கஜம் வெள்ளைத்துணியை எடுத்துப்போனேன்.

துணியைப் பாதியாக மடித்து, கைக்கு வேண்டியதை வெட்டினால் ஒரே மாதிரி இருக்கும். இது புரியாது, நான் ஒன்று மாற்றி ஒன்று வெட்ட, பூனை ரொட்டியைப் பங்கிட்டக் கதையாக ஆயிற்று. ஒரு கை இன்னொன்றைவிட மிகச்சிறியதாக இருந்தது!

எப்போதும்போல், “வீட்டில் தைத்துக்கொண்டு வாருங்கள்!” என்று ஆசிரியை பணித்திருக்கக் கூடாதா! அம்மாவிடம் கெஞ்சி, தைத்து வாங்கிக்கொண்டு போயிருப்பேனே! (அப்படிச் செய்தபோதும் நல்ல மதிப்பெண்களே கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்).

என் தோழி வீட்டுக்குப் போயிருந்தபோது, அவளுடைய சித்திமார்கள், “இது என்ன, உங்கள் தையல் ஆசிரியை இவ்வளவு மோசமாக இருக்கிறாள்! நாங்கள் எவ்வளவு அழகாக துணியில் பூவேலை செய்துகொடுத்தாலும், நூற்றுக்கு நாற்பதுதான் கொடுக்கிறாள்!” என்று கோபமாகக் கேட்டார்கள்.

என் சிநேகிதி, `அதையெல்லாம் சொல்லாதீர்கள்!’ என்று பதைப்புடன் சமிக்ஞை செய்ததை அவர்கள் பொருட்படுத்தவேயில்லை.

நான் அவளிடம் தனிமையில் கூறினேன், “எதற்கு அவ்வளவு பயப்பட்டாய்? எனக்குப் போட்டுக்கொடுப்பதும் என் அம்மாதான்!”

என் தாயார் தையல் வேலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தேசிய ரீதியில் பரிசு வாங்கியவர். இருந்தாலும், ஆசிரியை மிஸஸ் ஜோனுக்கு எங்கள் லட்சணம் தெரியாதா! அதனால்தான், தானே முயன்று, சற்றுக் கோணல்மாணலாக தைத்த மாணவிக்கு எங்களைவிட மிக அதிகமான மதிப்பெண்கள்!

இக்கதையை நான் விவரிக்கையில், என் குடும்பத்தினர் சிரிப்பார்கள். (வாசகரே, நீங்கள் சிரித்தீர்களா, இல்லை, `வெட்கமில்லாமல் இதையெல்லாம் சொல்கிறாளே!’ என்று நினைத்தீர்களா? பள்ளி இறுதியாண்டுக்குப்பின் துணியில் பூவேலைப்பாடு செய்வதை அம்மாவிடமே கற்றுத் தேர்ந்தேன்).

பலத்துடன் பலவீனமும் உண்டு

நம் பலம், பலவீனம் இரண்டையும் ஒத்துக்கொண்டால், அதற்கு ஏற்றபடி நடக்க முடியும்.

நம் உணர்ச்சிகள் எதனால் எழுகின்றன என்று புரிந்தால், நம்மை நாமே புரிந்துகொள்ள முடியும். உண்மையை ஒத்துக்கொள்ளும் மனோபலம் சிலருக்கு (பலருக்கு?) இருப்பதில்லை. இப்படிப்பட்டவர்களுக்குப் பொதுவான சில குணங்கள் உண்டு.

உண்மையை மறுத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். தம்மைப்பற்றிய குறைகளை நினைப்பதற்கே அஞ்சுவதால் இப்படி ஆகிவிடுகிறது.

அவர்களுடைய குறை என்று நினைக்கும் எதையாவது இன்னொருவர் சுட்டிக்காட்டும்போது, அதைப் பொறுக்காது, பேச்சை மாற்றுவார்கள்; அந்த இடத்தைவிட்டு நழுவுவார்கள், இல்லை, சண்டை பிடிப்பார்கள். (`நீ மட்டும் தவறே செய்வதில்லையோ?’).

உன்னால் நான் கெட்டேன்

ஒரு சிலர், `அவனால்தான் நான் இப்படி ஆகிவிட்டேன்!’ என்று எவர்மேலாவது பழி போடுவார்கள். இது சிறுபிள்ளைத்தனம். சிறுகுழந்தைகள்தாம், அம்மாவின் முத்துமாலையை அறுப்பது, குங்குமத்தைக் கொட்டுவது என்று ஏதாவது விஷமம் செய்துவிட்டு, அண்ணன் அல்லது அக்காள்தான் செய்தார்கள் என்று சாதிக்கும். அவர்கள் அப்போது வீட்டிலேயே இருந்திருக்க மாட்டார்கள்!

குடும்பத்தில் அதிகாரம்

கூட்டுக்குடும்பங்களில் அனைத்து அதிகாரமும் யாராவது ஒருவர் கையில்தான் இருக்கும். இருக்கவேண்டும்.

நாடு என்று ஒன்று இருந்தால், எல்லா மக்களும் தம் விருப்பப்படி நடந்தால் என்ன ஆகும்? அதைச் செவ்வனே நிர்வகிக்கத்தான் தலைவர்கள் இருக்கிறார்கள். (அவர்கள் அப்படி நடக்கிறார்களா என்பது வேறு விஷயம்).

அதேபோல்தான் குடும்பமும். அக்குடையின் கீழிருக்கும் ஒவ்வொருவரும் மனம்போனபடி நடக்க முடியுமா? அப்படிப்பட்ட குடும்பங்களில் ஒற்றுமையும் இருக்காது, தம் திறமையை எவரும் பூரணமாகப் பயன்படுத்தவும் முடியாது.

குடும்பத்தலைவி பலருடைய நலனையும் மனதில் கொண்டு, அன்பும் கண்டிப்புமாக அவரவர் குணத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்றபடி விதிமுறைகளை அமைத்து, குடும்பத்தை நல்லபடியாக நடத்திக்கொண்டு போனால் அனைவரும் பயனடைவார்கள். அப்படிப்பட்டவருக்கு குடும்பத்தினரின் மரியாதையும் மதிப்பும் கிடைப்பதில் ஆச்சரியம் என்ன?

பிறரது தன்மை, தேவை எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் உணர்திறன் பெண்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. எதை, எப்படி, எந்த தருணத்தில் கூறுவது என்று முதலிலேயே யோசித்துவைப்பார்கள். இப்போக்கினால் பிறர் மனம் நோகாது.

சிலர், `நான் சொல்கிறபடி கேளுங்கள்!’ என்று அதிகாரம் செலுத்த முனையலாம். பயந்தோ, அல்லது மரியாதை கருதியோ அப்படி நடந்தால், யார்தான் சுயமாகச் சிந்திக்க முடியும்? (அதிகாரமாக நடக்கும் ஆசிரியர்களும் இதே தவற்றைச் செய்துவிட்டு, `இக்காலத்து மாணவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு!’ என்ற முடிவுக்கு வருகிறார்கள்).

சிறுவர்கள் அவர்கள் வயதுக்கு ஏற்றபடிதான் எந்தக் காரியத்தையும் செய்வார்கள். ஓயாது நச்சரிக்காமல், `பிறராலும் நாம் செய்வதைச் செய்யமுடியும்,’ என்று நம்பி, அவர்கள் போக்கில் விட்டால் அவர்கள் தன்னம்பிக்கை தகர்க்கப்படாது. மரியாதை குன்றாது நடப்பார்கள்.

புகழ் மட்டும்தான் வேண்டுமா!

`நீ நல்ல அம்மா!’ என்று மனமகிழ்ந்து பாராட்டும் சிறுமி, `நீ எப்பவும் திட்டறே! பிடிக்கலே!’ என்று வேறோரு சமயம் கூறுகிறாளா?

புகழ்ச்சியைக் கேட்க உவப்பாக இருக்கும். அதேபோல், கண்டனத்தையும் கேட்டு, அதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்தால், அதை எப்படித் திருத்திக்கொள்ளலாம் என்று யோசிக்கலாம்.

`எனக்குப் பொறுமையே கிடையாது. அதற்கு என்ன செய்வது!’ என்று நம்மை நாமே மன்னித்துக்கொள்வதால் என்ன பயன்?

நம் குறைகளை உணர்ந்து, கூடியவரை அவற்றை மாற்ற முயற்சி செய்யவேண்டாமா?

அப்படிச் செய்தால், நமக்கும் பிறருக்கும் பெரும் உதவி செய்வதுபோலாகுமே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.