-நிர்மலா ராகவன்

குணத்திற்கேற்ற வேலை

ஒருவர் தாம் அடைந்த சிறப்புகளைப்பற்றிப் பேசினால், `தற்பெருமை!’ என்று முகத்தைச் சுளிப்பார்கள். அதனால், தம் குறைகளை வெளிப்படுத்திக்கொள்வதே அடக்கத்தின் அடையாளம் என்று சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், `எனக்குப் பொறுமையே கிடையாது!’ என்று பேட்டியின்போது பெருமையாக அலுத்துக்கொள்பவர் பாலர் பள்ளிக்கோ, பள்ளிக்கூடங்களுக்கோ ஆசிரியராக முடியுமா?

`உங்கள் பலவீனம் என்ன?’ என்று கேட்கப்படும்போது, `அப்படி எதுவும் கிடையாது!’ என்பது இன்னொரு ரகம்.

யாராவது நம்புவார்களா, என்ன! முதலில் அவ்வேலையை எந்த விதத்திலும் பாதிக்காத பலவீனங்களை கோடிகாட்டிவிட்டு, பிறகு நம் நல்ல தன்மைகளை எடுத்துச் சொல்லலாம்.

சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி உண்மையைச் சொல்லலாம் என்றாலும், நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பது வேண்டாமே! ஆக்ககரமாக ஏதாவது இருக்காதா, என்ன!

`என்னை நம்பி ஒரு வேலையைக் கொடுத்தால், எப்பாடுபட்டாவது அதை நானே முடித்துவிடுவேன்,’ என்பவர் பிறருக்கும் அவ்வேலையைப் பகிர்ந்து கொடுக்க முடியாத குணத்தை, தம்மையும் அறியாது, ஒத்துக்கொள்கிறார். அப்படியானால், பிறரது கூட்டணியில் இணைந்து வேலை செய்ய எப்படி முடியும்?

மற்றவருடன் இணைந்து செய்யும் ஒரு காரியம் வெற்றி அடையும்போது, `நான்தான் செய்தேன்!’ என்று புகழைத் தட்டிக்கொண்டுபோகப் பார்ப்பவர்களைப்பற்றி என கூறுவது!

தலைமைப் பதவியில் இருந்தபோது, தன்கீழ் இருப்பவர்களின் முயற்சியைப் பாராட்டாது, தானே முனைந்து செய்ததுபோல் பாசாங்கு செய்தவரின் கதை இதோ!

கதை

என் தலைமை ஆசிரியையாக இருந்த திருமதி ராஜன் தன் கீழ் இருப்பவர்கள் – அவர்கள் ஆசிரியர்களோ, அல்லது மாணவியரோ – தவறே செய்யக்கூடாது என்று உறுதியாக நம்பியவள். நடக்கிற காரியமா!

அவளுடைய வசவுகளைப் பொறுக்க முடியாது தினமும் யாராவது ஒருவர் அழுதுகொண்டிருப்பார். புதிது புதிதாக விதிகள் வகுத்துக்கொண்டே இருப்பாள்.

`பைத்தியம் பிடித்துவிடும்போல் இருக்கிறது!’ என்று மூத்த ஆசிரியை ஒருவர் பொதுக்கூட்டத்தில் கூற, எல்லாரும், `நாம் மட்டும் தனியாக இல்லை!’ என்ற நிம்மதியுடன் சிரித்தோம்.

பள்ளி ஆண்டுவிழாவிற்கு நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீன நடனம் ஆடுகையில் இரு மாணவிகள் அடிக்கடி காலைத் தூக்கவேண்டியிருந்தது. அப்போதெல்லாம், நிதானமின்றி அவர்கள் உடல் தளர்ந்து ஆடியது.

நான் அதைத் தவிர்க்க, பயிற்சி சமயத்தில் ஒரு வழி கூறினேன்: “உடல் நேராக இருக்கவேண்டும். மூச்சை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு, அதே சமயம் ஒரு காலைத் தரையில் ஓங்கித் தட்டி, மூச்சை வெளிவிடாது இன்னொரு காலைத் தூக்குங்கள்!” (எல்லாவித நாட்டிய நிகழ்ச்சிகளும் என் பொறுப்பில் இருந்தது).

நிகழ்ச்சியின்போது வந்திருந்த பிரமுகர், `Such perfect balance!” என்று பாராட்டினார், பக்கத்தில் அமர்ந்திருந்த தலைமை ஆசிரியையிடம்.

ஏதோ தான்தான் அவர்களை பழக்குவித்ததைப்போல், பெருமையுடன் அவரது புகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு சிரித்தாள் அவள்.

அவளுக்கு முன்பு இருந்த தலைமை ஆசிரியை, `எங்கள் நல்ல காலம், சிறந்த ஆசிரியை அமைந்திருக்கிறார்!’ என்று என் பெயரை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னாள். மேலும் கடுமையாக உழைக்க எனக்கு உற்சாகம் பிறந்தது. (மாணவ மாணவியரின் பெற்றோருக்கும் அறிவுரை கூறியிருக்கிறேன் – அவர்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டிய முறை சம்பந்தமாக).

எங்களில் பத்து சதவிகித்ததினர்தான் எப்பாடு பட்டாவது நம்மை நம்பி வந்திருக்கும் மாணவிகளை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்று முனைந்திருந்தோம்.

`பாடம் போதிப்பதுடன் என் கடமை முடிந்துவிட்டது. நான் வாங்கும் சம்பளத்திற்கு இவ்வளவுதான் செய்ய முடியும்!’ என்று ஒதுங்கும் ஆசிரியர்களே மிகுந்து இருந்தார்கள்.

கதை

அரசாங்கம் அளித்த சலுகையால் அயல்நாட்டிற்குப் போய் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வந்தவள் அஸ்லீனா. (பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவளாததால் கிடைத்தது அது என்று உணரும் அளவுக்கு அவளுக்கு விவேகம் இருக்கவில்லை). பிற ஆசிரியைகளைவிட தான் உயர்த்தி என்பதுபோல் அலட்டிக்கொண்டாள். பெரிய பதவி என்றால் எதுவும் செய்யாது, சுவற்றை வெறித்துக்கொண்டிருப்பதுதான் என்று நினைத்தவர்களில் அவளும் ஒருத்தி.

ஒரு முறை, “நீங்கள் எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறீர்களே! என் பரீட்சைத்தாளைத் திருத்துவதுதானே!” என்று, அதிகாரமாக ஒரு கட்டை என்முன் போட்டாள்.

என்ன திமிர்!

நான் மிக மிக நிதானமாக, “நான் எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறேன்.  ஏனெனில், என் வேலையை வீட்டிலேயே செய்து முடித்துவிட்டேன். நீயும் உனக்கான வேலையைச் செய் (I suggest you do your own work!)” என்றேன். அடுத்தடுத்து நான்கு வகுப்புகளில் போதித்தபின் நான் சற்று ஓய்வாக இருந்தது அவள் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்.

என் கண்டிப்பான பதிலை சற்றும் எதிர்பாராத அவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாது, என்னையே பார்த்தபடி நின்றாள்.

“Anything else?” என்று தலையை நிமிர்த்தி மிரட்டலாக நான் கேட்க, விரைந்தோடினாள்.

இம்மாதிரியாக, `இன்னும் என்ன?’ என்று கேட்பது, `உரையாடல் முடிந்துவிட்டது, நீ தொலை!’ என்பதற்கு ஒரு வழி. எங்கோ படித்தது. நம்மை துச்சமாக நினைப்பவர்களை விரட்ட நல்ல உபாயம்.

தான் மேலானவள் என்று அஸ்லீனா கருதினாலும், ஒருக்காலும் தலைமைப் பதவிக்கோ, வேறு பொறுப்பான பதவிக்கோ உயரமாட்டாள். ஏனெனில் தன் வேலையைக்கூடச் செய்யப் பிடிக்காத சோம்பேறி அவள். குறித்த காலவரைக்குள் தன் வேலையைச் செய்து முடிக்கும் கட்டொழுங்கும் கிடையாது. தன்னையொத்த பிறரை மதிக்கவும் தெரியவில்லை. அப்படியானால், அவளுக்குக்கீழ் இருப்பவர்களை எப்படி நடத்துவாள்?

`முடியாது!’ என்று சொன்னால் பிறருக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விடுமே!’ என்று அஞ்சுபவர்கள் ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். எல்லாமே அரைகுறைதான்.

பொறுமையுடன் பிறர் கஷ்டங்களைக் கேட்பது நல்ல குணமாக இருக்கலாம். ஆனால், அதற்கும் எல்லை கிடையாதா?

ஒரே வேலைப்பளு!

வேலைப்பளுவால் மன இறுக்கம் அதிகரிக்க, பலருக்கும் பிள்ளைப்பேறு கிட்டாமல் இருக்கிறது என்று ஒரு மருத்துவர் என்னிடம் கூறினார்.

நிறைய வேலை காத்திருக்கிறதா? எது முக்கியம் என்று எழுதி வைத்துக்கொண்டு, மிக அவசியமானதிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான். பொழுதுபோக்கிற்காகச் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்தாலும் காத்திருக்கும் வேலைகளை முடிக்க முடியும். மேலதிகாரி தாக்கினால், அது அவருடைய குறைபாடு என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஐயோ பாவம்!

பலருடன் சேர்ந்து வேலை பார்க்குமிடத்தில் ஒரு சிலர் தம் கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். அவைகளை நாமே அனுபவித்ததுபோல் துயரடைந்தால் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கலாம். ஆனால் நம் நிம்மதிதான் கெடும். அப்படி ஒரு உணர்திறன் (sensitivity) அநாவசியம். எவ்வகையிலாவது உதவ முடிந்தால் போதுமே! அதுவும் முடியவில்லையா? சும்மா கேட்டுவிட்டுப் போகவேண்டியதுதான்.

வீடா, வேலையா?

வேலை நேரத்தில் வீட்டு நினைவே இருந்தாலும் வேலையில் சுணக்கம் ஏற்படாதா! இதற்குத்தான் `நிகழ்காலத்தில் இரு!’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

எந்தச் செயலில் ஈடுபடும் முன்னரும், அதிலிருக்கக்கூடிய நன்மை தீமைகளைத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

தீவிரமான விளையாட்டா? உடலின் பல பாகங்களில் பலத்த அடி படலாம். சில நாட்களோ, மாதங்களோ வலியைத் தாங்க வேண்டிய துணிவு வேண்டும். உடல்நிலை சரியாகி, மீண்டும் அதே விளையாட்டில் ஈடுபட ஆயத்தமாகும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

குணத்திற்கேற்ற உத்தியோகமோ அல்லது பொழுதுபோக்கோ அமைந்தால் வாழ்க்கை இனிக்கும். சலிப்பு ஏன் அண்டுகிறது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.