-மேகலா இராமமூர்த்தி

வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

நீரில் கால்நனைத்து நிற்கும் கருவேழத்தைத் தன் புகைப்படக் கருவிக்குள் அடைத்து வந்திருப்பவர் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன். ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து இவ்வினிய படத்தைத் தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்தவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

”குன்றுகளுக்கு முன்னே மற்றொரு கருங்குன்றென கம்பீரமாய்க் காட்சியளிக்கும் இக்களிற்றைக் காணும்போது, காஞ்சியை ஒரு காலாலும், வடக்கேயுள்ள உச்சயினியை மற்றொரு காலாலும் மிதித்துவிட்டுத் திரும்பி தெற்கேயுள்ள ஈழத்திலும் கால்பதித்து உறையூர் மீளும் கிள்ளியின் வெற்றிக் களிறு இதுவோ?!” என்றோர் ஐயம் மெல்ல என்னுள் எட்டிப் பார்க்கின்றது.

கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமேநங்
கோழியர்கோக் கிள்ளி களிறு
. (முத்தொள்ளாயிரம் – 73)

களிற்றை வைத்துக் கவின்மிகு கவிதைகள் வடிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் கவிஞர் குழாத்தை வரவேற்று அமைகிறேன் இப்போது!

*****

”களிறு, வேழம், ஒருத்தல், தும்பி என்று எத்தனைப் பெயர்கள் அழகு ஆனையை அழைப்பதற்கு! உரறுதல், முழங்குதல், பூசல் என்று எத்தனை ஒலிகள் அதன் ஓசையைக் குறிப்பதற்கு!” என்று எண்ணி வியக்கிறார் ஆ. செந்தில் குமார்.

அப்பப்பா… அழகு யானை…

பிளிறல் சத்தம் செய்வதனால்.. களிறே என்றதை அழைத்தனரோ…!
வெள்ளைத் தந்தம் உடையதனால்.. வேழம் என்றதை விளித்தனரோ…!
பருத்த உடலாய் இருப்பதனால்.. ஒருத்தல் என்றதைப் பகன்றனரோ…!
கருத்த நிறமாய் உள்ளதனால்.. கரியே என்றதைக் கூவினரோ…!
மிடுக்காய் அதுவும் நடப்பதனால்.. மத்தகயமே என்றனரோ…!
துதிக்கை ஒன்று நீண்டதனால்.. தும்பி என்றதைப் போற்றினரோ…!
எத்தனை.. எத்தனை.. எத்தனை.. எத்தனைப் பெயர்கள் யானைக்கு…!

துன்பத்தில் ஒலித்தல் புலம்பல்.. அச்சத்தில் ஒலித்தல் கதறல்..
விரைந்து ஒலித்தல் கம்பலை.. பெருங்குரல் என்பது பூசல்..
உரறுதல் இயம்புதல் முழங்குதல்.. நரலுதல் சிலைத்தல் இசைத்தல்..
பயிர்க்குரல் உயிர்க்கும் என்ற.. எழுப்பும் ஓசைகள் பற்பல..
எத்தனை.. எத்தனை.. எத்தனை.. எத்தனை ஓசைகள் ஆனைக்கு…!
அப்பப்பா.. ஆனைக்கும் மனிதனுக்கும்.. ஆண்டாண்டாய் ஒரு பிணைப்பு…!
ஆனையை வியப்பதா…? மொழியை உருசிப்பதா…? புரிந்திடவில்லை எனக்கு…!

*****

”சோற்றுவளம் மிக்க சோழநாட்டில் இப்போது சோற்றுக்குப் பஞ்சம்! அதனால் கவளச் சோற்றுக்காகக் கும்பிடு போடும் அவலம் நேர்ந்தது எம் சோதரர்க்கு. மாக்களை இரக்கமின்றித் துன்புறுத்தும் மக்களே! எமக்கு உதவுங்கள்!” என்று இறைஞ்சும் யானை உருக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

சோழன் எங்கே?

முறை தவறா சோழ நாட்டில்
மூதாதையர் போர் அடித்தார்
சோற்றுக்குப் பஞ்சமாமிப்போ
சோழன் எங்கே? தேடுகிறேன்
வளமான அந்நாட்டைக் காண
வனம் விட்டு ஓடி வந்தோம்
மதப்பேய் பிடித்த சிலர் எம்மை
மதயானை எனப் பெயர் சூட்டி
அடித்து அடக்கி அண்ணனை
ஆலயத்தில் முடக்கி விட்டார்
கவளச் சோற்றுக்காக அனைவருக்கும்
கும்பிடு போடுகிறான் தினமும்
இருகாலில் நின்று வித்தை காட்ட
இரும்புச் சங்கிலி பிணைப்பு தம்பிக்கு
தப்பி ஓடி வந்த நான்
திசை தெரியாமல் நடந்த போது
கண்டேன் சோழன் அம்பாரியை
காட்சிப் பொருளாய் பெட்டகத்துள்
நாட்டின் வளமென
நான் செய்த கற்பனை
நிஜ உலகில் இல்லாது
நிழற்படத்தில் கண்ணுற்றேன்
வையகம் ஆண்ட சோழன்
வரலாற்றில் இடம் பிடித்தான்
ஆற்று நீரைக் கொண்டு
அருமையாய் உழவு செய்வீர்
மாக்களைத் துன்புறுத்தம்
மக்கள் தம்மைத் தண்டித்து
நீதி வழங்க எம் சோழன் இல்லை
நீங்களாவது உதவுங்கள்!

*****

”வசிப்பிடங்களாகிவிட்ட எம் வாழ்விடங்கள்; கற்கட்டடங்களாக மாறிப்போன எம் வழித்தடங்கள்; பேராற்றுக்குச் சமாதி கட்டிவிட்டுப் பெருஞ் சிலைக்குத் திறப்புவிழா! பூவுலகு தமக்கே எனும் கேவல மனிதரின் பேராசைத் தாகம் என்று தணியும்? அன்றுதான் தீரும் எம் தாகமும்!” என்று வேதனையுறும் வேழத்தைக் காண்கிறோம் முனைவர். ம. தனப்பிரியாவின் கவிதையில்.

தாகம் தீர்ந்திடுமோ….???

எம் இனத்தின் வாழ்விடங்கள் இன்று மனிதனின் வசிப்பிடம்
கால்சுவடு பதித்திட்ட வழித்தடங்களில்
கற்சுவர்க் கட்டிடங்கள்..

பேராற்றுச் சுவடு அழித்திட்டுப் பெருஞ்சிலைக்குத் திறப்புவிழா
சூழலியலை மறுதலிப்புச் செய்திட்ட சுற்றுலாத்தல உருவாக்கம்…

வழிதனை இழந்து, வலியுடன் வலம் வரும்
எம் இனத்திற்கு நீர்த் தாகம் மட்டும் அல்லவே..

பெருங்காட்டில் பிடியுடனே பிரியாமல்
அலைந்திட்ட தருணங்கள் கனவாகப்
பெரும் தொழிற்சாலைக்கு இடமானதென்ற
தவிப்பின் தாகம்…

கழைமூங்கில்தனைச் சுவைத்திட்ட தினம் இனிக்க
வாழைதனை நட்டு வைத்தே மின்சார வேலியிட்டு
எம் குருதி உறிஞ்சிடும் நிலை குறித்த
தவிப்பின் தாகம்…

நறுமலர் வாசனையோடு குளிர்காற்றை சுவாசித்த நாசியின்றோ
புகைக்காற்றை நுகர்தல் எண்ணிய தவிப்பின் தாகம்..

அறிவியல் கண்டுபிடிப்பு என்ற அறியாமைக்குள் வீழ்ந்திட்ட
அறிவிலி மனித இனம்…

தரணியில் பிற உயிர் வாழத் தடைவிதித்திடில்
இயற்கைப் பேரிடர்முன் தன் இயலாமை உணரும்…

பூலோக உயிர்சுழற்சி மறந்து பூவுலகம் தனக்கே என்ற
பேரவா கொண்ட மனிதனின் தாகம் தீரும் நாள் எந்நாளோ…?
எம் இனத்தின் தாகம் தீரும் நாளும் அந்நாளே!

*****

”காட்டில் வாட்டமின்றித் திரிந்து பழகிய யானையைப் பிடித்துவந்து கோயிலில் அடைத்து இரந்துவாழப் பழக்க வேண்டாமே!” என்று கோரிக்கை விடுக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

அது வேண்டாம்…

காட்டி லெங்கும் அலைந்தேதான்
கண்ட யிடத்தில் நீரருந்தி,
வாட்ட மின்றியே வளர்ந்திருந்த
வனத்து யானையைப் பிடித்துவந்து,
கூட்டமாய் மனிதர் சேர்ந்துவரும்
கோவில் தலங்களில் பழக்கியதை
ஆட்டம் காட்டுதல் அதுபோதும்,
அலைந்தே இரந்திட வேண்டாமே…!

*****

வேழத்தை வைத்துச் சமூகத்துக்குத் தேவையான நற்சிந்தனைகளைப் பேசியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

தனியொருவன்!

இருபெரு கரு உயர்நீல(ள) வரையின்
இரு கரைமருங்கிடை விரிதிரை புனல் நதியில்
கருமை இருள் கலைந்த காலை வேளையில்
கருமை மெய் கலந்த காட்டரசனின் களிப்புறு குளியல்

இறைவன் அளித்த இயற்கைச் சீதனங்கள்
இருபெரும் பொன் வெள்ளித் தந்தங்கள்
இருப்பதனால் வேழம் அவன் இருந்தாலும்
இறந்தாலும் இருக்கிறது பொன் ஆயிரம்

தும்பிக்கைதான் அவன் நம்பிக்கை – அதில்
தூக்கிச் சுமந்தெறிந்த பாரச்சுமைகள் ஏராளம்
தன்னந்தனி திரிந்தாலும் நன்னம்பிக்கை என்னும்
தன்னம்பிக்கையால் தாக்கியழித்த தடைகள் எண்ணிலா

நிலம் அதிரும் அவன் நடந்தால்
நீர் சிதறும் அவன் அலைந்தால் – நிழல்வனம்
நடுங்கும் அவன் சினந்தால் – ஆயினும் பாகனின்
நில் என்ற சொல்லுக்குப் பணிதலில் மிளிரும் அவன் குணம்

வம்புடை வன்முறை மானுடம் தான்வாழ யானை
வழித்தடத்தையும் வாழ்விடத்தையும் வழிமறித்தே
வாரிச்சுருட்டி வாயிலிட்டுவிட்டு அன்புடையவனை
வம்பன் கொம்பன் என வசைபாடுது

நாளைய சந்ததியின் நல்வளங்களைச் சூறையாட
நாடெல்லாம் திரியும் மணல்கொள்ளை மனிதரால்
நாதியற்றுப் போன நதிகளின் மரணத்திற்கு
நீதிகேட்டு வந்த நீ தனியொருவன்!

”இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் மதிப்புடைய வேழத்தின் வழித்தடங்களையும் வாழ்விடங்களையும் வாரிச்சுருட்டி வாயில் போட்டுக்கொண்ட மானுடம், நாதியற்றுப்போன நதிகளின் மரணத்துக்கு நீதிகேட்டுவந்த தனியொருவனான அவனை வம்பனென்றும் கொம்பனென்றும் வசைபாடுவது முறையோ?” என்று வேழத்தின் அவலநிலையினை ஆழமாய்ப் பேசும் இக்கவிதையை யாத்த திரு. யாழ் பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 195-இன் முடிவுகள்

  1. இவ்வாரத்தின் அனைத்து கவிதைகளும் அழகானதே.
    அடியேனை சிறப்பித்த தங்களுக்கு பணிவான நன்றிகள் பல
    யாழ். பாஸ்கரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *