அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ஷாமினி எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.01.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 196

  1. வாழ்த்துவோம்…

    மார்கழிப் பனியில் நனைந்தேதான்
    மங்கைய ரெல்லாம் தெருவிலொன்றாய்ச்
    சேர்ந்தே காலையில் கோலமிட்ட
    சீரிய காலம் மாறிடினும்,
    தேர்வுகள் வைத்தே அவற்றிற்குத்
    திறமை சார்ந்த பரிசளித்தும்
    ஆர்வ மோடு படம்பிடிக்கும்
    ஆர்வ முள்ளோர் வாழியவே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. நிமிர்தல் செய்
    ——————–
    முற்றுப்புள்ளிகளை முழுமையாக்கி அழகு கோலமிடும்
    முகம் காட்டா சகோதரியே முழுக்க மூழ்கியது போதும்
    முதுகுப்பக்கம் கொஞ்சம் முகம் திருப்பு- உன்னை முற்றுகையிட்டுள்ள
    மூன்றாம் கண்ணின் பார்வைகள் முற்றுப் பெறட்டும்

    மாக்கோலம் தவறானால் மலர்க்கோலம் தீட்டிடலாம்
    பூக்கோலம் சிதறிவிட்டால் புதுக்கோலம் போட்டிலாம்
    நிலக்கோலமிட்டது போதும் நிமிர்தல் செய் சற்றே இல்லையேல்
    வாழ்கைக் கோலம் அலங்கோலம் ஆகிவிட்டும்

    காட்சிப்பிழைகளையே ஆட்சியில் ஏற்றும்
    மாட்சிமை மறந்த பூகோள மானுட சமூகத்தின்
    காட்சி ஊடக கலிகாலம் இதில் சிறுகவன சிதைவும்
    சாட்சியாகி சங்கடங்கள் பல தந்துவிடும்

    பழுதடைந்த பார்வை விழிமூடர்களின்
    பாலின வன்முறை வெறியாட்டங்களினால்
    பலத்காரமாய் சீரழிக்கப்பட்டு பாவம் பெண்மையே
    பழியாடுகளாய் எப்போதும் வெட்டுப்படுகிறது

    ஒளிக்கோலங்களின் ஒவ்வாமை மொழிகளால் உன்
    விழிக்கோளங்களில் வெம்மை நீர்வீழ்சிகள் உருவாகலாம்
    வேலியற்ற இணைய வெளியின் வழிகளில் முட்களாய்
    போலிக் கலைகாலிகள் பசுத்தோல் போர்த்தியபடி

    இலைமறைகாயாய் இருந்தன எல்லாம்
    இலவசமாய் இங்கு பதிவிறக்க கிட(டை)க்கிறது
    இளந்தாரிகளின் இலக்கற்ற விடுதலை உரிமைக்கும்
    இலக்குவன் கோடுகள் சில இங்கே தேவையாகிறது

    யாழ். பாஸ்கரன்
    ஓலப்பாளையம்
    கரூர்- 639136
    9789739679

  3. வாழ்க்கைக் கோலம்
    ___________________

    நெளிந்து கொடுக்கக் கற்றால்
    நேராகும் நம் வாழ்வு என
    வாழ்க்கைப் பாதையை
    விளக்கும் பாதைக் கோலம்
    அழகான இடைப்புள்ளி
    அன்றைய உன் துன்பங்கள்
    வரிசையாக உன் இடர்களை
    வகையான புள்ளிகளாய் இட்டு
    நெளி வலைக்குள் சிறையாக்கு
    நிஜ வாழ்வின் சோகங்களை
    கண்டவர் படமெடுக்க விழையும்
    கண்கவர் காட்சியாய்
    அழகாக மாறும் வாழ்வு
    அருமையான நெளிக்கோலமாய்
    முகம் காட்டா நங்கை சொல்லும்
    முத்தான பாடமிது
    இடர்களை சிறையாக்கி
    இயன்றவரை வளைந்து கொடு
    மீண்டும் அசைபோடாது
    மீளாத் துயரத்தில் வீழாது
    வெளிவந்த பின்னே வாழ்க்கை
    வெளிச்சமாகும் வசந்தமாகும்.

  4. மேலைநாட்டு மாதரசியின்.. மாக்கோலம்..!!
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    -ஆ. செந்தில் குமார்.

    சிதறிக்கிடந்த விண்மீன் தொகுப்பை..
    சிறைக்குள் அடக்கிய இரும்புக் கம்பிகளாய்..
    வளைந்து நெளிந்த கம்பிக்கோலம்..!!

    பூசலால் சிதறிய உறவுகள் இடையே..
    பாலமாய் அமைந்து இணையச் செய்த..
    நல்ல உள்ளமாய் புள்ளிக்கோலம்..!!

    காலத்தால் அழியாது என்றென்றும்..
    ஞாலத்து மக்களெல்லாம் வியக்கும்..
    நம்தமிழர் பண்பாடாய் பூக்கோலம்..!!

    எறும்பினமும் வாழவேண்டும் எல்லாமே..
    உயிர்தானே என்று மதித்த..
    எம்தமிழரின் வான்போன்ற வண்ணக்கோலம்..!!

    கொடியில் பூத்த பூவாய் வான..
    வெடியில் தோன்றிய வண்ண நிகழ்வாய்..
    விடியலில் பூத்த எண்ணக்கோலம்.!!

    கோலமென்ன கோலமென்று.. நினைந்துமுகம்..
    கோணாதிருக்கும் வண்ணம்.. இருக்கிறது..
    இம்மேலைநாட்டு மாதரசியின்.. மாக்கோலம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.