-முனைவர் அ.மோகனா

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா வமரரேறே யாயர்தங் கொழுந்தே யென்னு
மிச்சுவை தவிர யான்போய் யிந்திர லோக மாளுளு
அச்சுவை பெறினும் வேண்டே னரங்கமா நகரு ளானே

– தொண்டரடிப் பொடியாழ்வார்

மார்கழி! திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் உகந்த மாதமாகக் கருதப்படுவது. திருப்பாவையும், திருவெம்பாவையும் தெருக்கள் தோறும் முழங்கக் கூடிய மாதமிது. மாதங்களில் சிறந்த மாதமாகக் கருதப்படுவதும் மார்கழிதான். இம்மாதத்தின் கேட்டை நட்சத்திர நாளில் (ஜனவரி.4 வெள்ளிக்கிழமை) அவதரித்தவர் விப்ரநாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட தொண்டரடிப் பொடியாழ்வார்.

பக்தி இயக்கத்தின் தோற்றமானது அக்கால மக்கட் சமூகத்தின் வாழ்நிலையில் மட்டுமன்றி இலக்கிய வகைமைகளுககுள்ளும் பல புது மாற்றங்களை ஏற்படுத்திய எனில் அது மிகையாகாது. யாப்பியல் நோக்கில் பல்வேறு புதுமுயற்சிகளைப் பக்தி இலக்கியங்களில் காணமுடியும். குறிப்பாக ஆழ்வார்களின் பாசுரங்கள். திருமாலோடு தாங்கள் பெற்ற அனுபவங்களின் நேரடி பதிவாகவே ஆழ்வார்களின் பாசுரங்கள் அமைந்துள்ளன. உள்ளத்தில் உருக்கத்தையும் நெகிழ்வையும் ஏற்படுத்துபவை இப்பாசுரங்கள். ‘ஆழ்வார்’ என்பதற்கு, “இறைவனுடைய கல்யாண குணங்களாகிய அமுத வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபடுவோர் என்றும், இறைவனுடைய வடிவழகில் ஈடுபட்டு அழுந்தினவர்களாதலின் ஆழ்வார்கள் எனப்பட்டனர் என்றும், மக்கள் படும் துன்பத்தைக் கண்டு பொறாமல் அத்துக்கத்தில் அழுந்தினவர்களாதலின் ஆழ்வார்கள் எனப்பட்டனர் என்றும் பல வகையான பொருட்களைச் சான்றுகளோடு விளக்கிச் செல்கின்றார் ம.பெ.சீனிவாசன் (2017:6). தமிழ்இலக்கிய வரலாற்றில் தவிர்க்க இயலாத வகிபாகத்தைப் பெற்றமைபவை பக்தி இலக்கியங்கள். அவற்றுள் திருமாலின் தொண்டர்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தொண்டர்களின் அடிப்பொடியாக வாழ்ந்த விப்ரநாராயணனின் பாடல்கள் தன்னிகரற்ற பாடல்களாக ஒளிர்பவை.

சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிரபவ வருடம் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் இவர். ஆழ்வார்களின் வரிசையில் பத்தாமவராக இடம்பெற்றவர். திருமாலின் வனமாலை அம்சமாகப் பிறந்தவர். திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறைவனாகிய அரங்கனுக்குப் பூமாலை சாற்றுவதை வாழ்நாள் பணியாகச் செய்தவர். பூமாலை மட்டுமன்றிப் பாமாலையாலும் அரங்கனைப் பூஜித்தவர். தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருந்த இவர்தம் பக்திப் பெருமித வாழ்வில் சோழ நாட்டுக் கணிகையான தேவதேவியின் இடையீடு ஏற்பட்டது. அனைத்தையும் அரங்கனின் வடிவமாகக் கண்ட விப்ரநாராயணன் தேவ தேவியின் மீதான காதலில் மெய்ம்மறந்து செல்வங்களை இழந்தார். இவரைச் சோதிக்க கருதிய திருமால் சிறுவனின் வேடமிட்டுத் தன் கோயிலின் பொன்வட்டிலைத் தேவதேவியிடம் கொடுக்க பழி விப்ரநாராயணனின் மேல் விழுகின்றது. முடிவில் அரங்கனால் உலகத்திற்கு உண்மை அறிவிக்கப்பட்டு இறுதிவரை அரங்கனுக்காக தம்மை அடிமை பூண்டார். மேலும் அரங்கனின் அடியார்களுக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் விப்ரநாராயணன். அன்றுமுதல் தொண்டரடிப் பொடியாழ்வாரானார்.

இவர் அரங்கனின் மீது பாடிய திருமாலை, திருப்பள்ளி எழுச்சி ஆகிய பாசுரங்கள் முதல் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. மாலை, பள்ளி எழுச்சி ஆகிய ப்ரபந்த இலக்கிய வகைமைகளுக்கு இவர்தம் பாடல்களை முன்னோடியாகக் கருதமுடியும். முன்னர்க் குறித்தபடி ஆழ்வார்கள் தங்களுக்குத் திருமாலோடு ஏற்பட்ட அனுபவப் பதிவுகளையே பாசுரங்களாக உள்ளம் உருகப் பாடியுள்ளனர். இந்தப் பின்புலத்தில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலை அவர் திருமாலுக்குச் செய்துவந்த கைங்கரியத்தின் விளைவாக எழுந்தது. பூமாலையோடு சேர்த்து அவரால் அளிக்கப்பட்ட பாமாலைதான் திருமாலை. அவ்வாறே பெண்மயக்கமான இருளில் விழுந்து திருமாலின் அருளால் மீண்டு ஒளியை அடைந்த அவர் உறங்கும் திருமாலை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சியினைப் பாடியுள்ளார். அதன்மூலம் இருள்கடந்து ஒளிபெற்ற தம் நிலையினையும் ஊடுபொருளாக்கியுள்ளார். இவருடைய பாடல்கள் பொருண்மையில் மட்டுமன்றி வடிவத்திலும் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன.

தமிழ் யாப்பியல் மரபில் சீர்களை தேமா, புளிமா உள்ளிட்ட வாய்பாட்டு அலகுகளால் குறிப்பர். தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலைப் பாசுரப் பாடல்கள் யாவும் தேமாச் சீரினால் முடிகின்ற அடிகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரசைச் சீர்களாலான பாடலடிகள் ஓசை நயமும், பொருட்செறிவும் கொண்டவைகளாக அமைந்து பாடுவதற்கு இன்பம் அளிப்பவை. தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாடல்களும் இத்தன்மைத்தாகவே அமைந்துள்ளன. திருமாலைக் கண்முன் காட்சிப்படுத்துகின்ற ‘பச்சைமா மலைபோல் மேனி…’ என்று தொடங்கும் திருமாலைப் பாடல் ஒலிக்காத வைணவத் தலங்களைக் காணமுடியாது. இப்பாடலின் அமைப்பினை நோக்கும்போது அவை ஒரு விளச்சீரினைத் தொடர்ந்து மாச் சீர் மற்றும் தேமாச் சீரினைக் கொண்டமைகின்றன. பாசுரத்தில் உள்ள நாற்பத்தைந்து பாடல்களும் இவ்வமைப்பு மாறாமல் பாடப்பட்டுள்ளமை தனிச்சிறப்பு.

பெண்டிராற் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும்போ துடலுக்கே கரைந்து நைந்து
தண்டுழாய் மாலை மார்பன் றமர்களாய்ப் பாடி யாடித்
தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்கு மாறே (1:876)

தம் சுய அனுபவத்தையே இப்பாடலில் கூறியுள்ளார் தொண்டரடிப் பொடியாழ்வார். இவ்வாறு உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்துவரும் உணர்வுகளை வார்த்தைகளாக்கும் அதே நேரத்தில் அவை குறிப்பிட்ட வடிவத்தோடும் வடிக்கப்படுகின்றன. இது தமிழ்ப் பக்தி இலக்கியங்களின் தனிச்சிறப்பு. இவ்வடிவத்தின் இலக்கணத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய தி.வீரபத்திர முதலியாரின் ‘விருத்தப்பாவியல்’ கீழ்க்கண்டவாறு விளக்கியுள்ளது.

‘சீர்வளர் கமலச் செவ்வி திகழ்தரு வதனக் கொண்மூக்
கார்வள மலிந்த கூந்தற் கன்னலுங் கசக்கு மின்சொ
லேரிளங் கொங்கை மின்னே ரிடையெழிற் கொடியம் பேதாய்
சீர்விள மாச்சீர் தேமாச் சீரிணைந் திரட்டு மீங்கே’ (வி.பா.முதற்படலம்:1)

பிற்காலத்தில் இந்த அறுசீர் ஆசிரிய விருத்த வடிவம் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றது. கம்பராமாயணம், பெரியபுராணம் உள்ளிட்ட காப்பியங்களில் இவ்வடிவம் பெரிதும் பயன்படுத்தப் பெற்றுள்ளது. பெரும்பாலான விருத்த வடிவங்களுக்கு இலக்கணம் வகுத்த நூலாக விருத்தப்பாவியல் உள்ளது. இருப்பினும் இதில் இலக்கணம் பெறாத வடிவங்களும் பக்தி இலக்கியங்களில் உள்ளன. இவர்தம் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் மூன்றுவிளச்சீர்களைத் தொடர்ந்த மாச்சீரினால் முடியும் அமைப்பினைப் பெற்றுள்ளன. சம்பந்தர், சுந்தரர் தேவாரப் பாடல்களில் இவ்வமைப்பிலான பாடல்களைக் காணமுடியும்.

கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன விவையோ
கதிரவன் கனைகடன் முளைத்தன னிவனோ
துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித்
துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா
தொடையொத்த துளவமுங் கூடையும் பொலிந்து
தோன்றிய தோட்டொண்ட ரடிப்பொடி யென்னு
மடியனை யளியனென் றருளியுன் னடியார்க்
காட்படுத் தாய்பள்ளி யெழுந்தரு ளாயே (1:926)

தொடர்கின்ற விளச்சீர்கள் பாடல்களுக்குச் சந்த ஓசையினைத்தரக் கூடியவை. தொண்டரடிப் பொடியாழ்வாரின் இப்பாடல்களைப் பாடித்திருமாலின் அருளினைப் பெறுவதோடு இதன் இலக்கிய வடிவச் சிறப்பினையும் கவனித்து இன்புற வேண்டியது அவசியம்.

துணை நின்ற நூல்கள்

1. ஆழ்வார்கள் அருளிச் செயல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (ஆய்வுப் பதிப்பு), சீனிவாசன், ம.பெ., (ப.ஆ.), தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2017.
2. Viruttappaviyal or The Prosody of Tamil viruttams, T.Viabadura mudaliar. 1938

கட்டுரையாளர்

முனைவர் அ.மோகனா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
தியாகராசர் கல்லூரி, மதுரை

2 thoughts on “தேமாவில் ஆன திருமாலை

  1. கட்டுரை நன்றாக உள்ளது. ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள். மேலும் சில எழுத்துப் பிழைகள் உள்ளன. அவற்றை கவனிக்கவும். நன்றி.

  2. கட்டுரை அருமையாக உள்ளது. தொடர்ந்து பயனுள்ள கட்டுரைகளை வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க