குறளின் கதிர்களாய்…(239)
-செண்பக ஜெகதீசன்…
சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா
லுழந்து முழவே தலை.
-திருக்குறள் -1031(உழவு)
புதுக் கவிதையில்…
உழவில் வரும்
உடலுழைப்பின் வருத்தம் கண்டு,
வேறுபல தொழில்கள் செய்து
வீணாய் அலைந்தாலும்,
முடிவில்
உழவின் பின்னதாகிறது உலகம்..
அதனால்,
அலைந்து வருந்தினாலும்
உயர்வானது உழவே…!
குறும்பாவில்…
உழவைவிட்டு வேறுதொழில் செய்தலைந்தாலும்,
உழவின் பின்னதாகும் உலகமென்பதால்
அலைந்திடரிலும் உயர்வானது உழவே…!
மரபுக் கவிதையில்…
உடலு ழைப்பின் துன்பமதால்
உழவை விட்டு வேறுதொழில்
தொடர்ந்த லைந்தும் தரணியது
தொடருமே உழவதன் பின்னேதான்,
இடரதில் அலைந்திட வைத்தாலும்
இவ்வுல கதிலே மிகவுயர்ந்த
இடமதி லென்றும் இருந்திடுமே
இணையிலா உழவுத் தொழிலதுவே…!
லிமரைக்கூ..
வேறுதொழில் பார்த்தாலும் உழவினை விட்டு,
உலகம் செல்வது உழவதன் பின்னேயென்பதால்
உழவே வென்றிடும் உயர்நிலையைத் தொட்டு…!
கிராமிய பாணியில்…
ஒசந்தது ஒசந்தது
ஒலகத்தில ஒசந்தது,
ஒழவுத்தொழிலே ஒசந்தது..
ஒடம்பு நோவுதுண்ணு
ஒழவுத்தொழில வுட்டு
வேற தொழிலத் தேடுனாலும்,
ஒலகம் போறது
ஒழவுத்தொழில் பின்னாலதான்..
அதுனால
அலஞ்சி திரிஞ்சி பாத்தாலும்
ஒலகத்துல மிக ஒசந்தது
ஒழவுத்தொழிலு தானே..
எப்பவுமே
ஒசந்தது ஒசந்தது
ஒலகத்தில ஒசந்தது,
ஒழவுத்தொழிலே ஒசந்தது…!