Advertisements
Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

நலம்….நலமறிய ஆவல் 141

-நிர்மலா ராகவன்

கனவுகள் நனவாக

சிலருடைய கனவுகள்தாம் நனவாகின்றன. அவர்களிடம் அப்படி என்ன சிறப்பு என்று ஆராய்ந்தால், அவர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை என்பது புலனாகும்.

“தோல்வி என்பது புத்திசாலித்தனத்தை மீண்டும் முயன்று பெற ஒரு வாய்ப்பு,” என்று கூறுகிறார் அந்த அனுபவமுள்ள ஒரு புத்திசாலி.

தோல்வி வர தவறுகள் மட்டும் காரணமில்லை. அது நிரந்தரமும் இல்லை. இதனால்தான் முயற்சி திருவினையாக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

எண்ணித் துணிக கருமம்

ஒரு காரியத்தை ஆரம்பிக்குமுன்னரே, `என்னால் முடியுமோ?’ என்ற சந்தேகம் எழுந்தால் நம்மை நாமே பலவீனப்படுத்திக்கொள்கிறோம்.

`செய்துதான் பார்ப்போமே! வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையேல், அதிலிருந்து ஏதாவது பாடம் கற்கலாம்!’ என்ற துணிவு இருந்தால் சிறக்கலாம்.

விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு பயந்தயத்திற்கு முன்பும், `இன்று என் கட்சி ஜெயிக்க முடியுமோ?’ என்று ஐயம் கொள்வது கிடையாது. உடல் வலி இருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

தோல்வியினால் யாராவது இறந்திருக்கிறார்களா? தோல்வியைக் கண்டு அஞ்சி, எடுத்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு, மனச்சோர்வுடன் வாழ்வதே இறப்பிற்குச் சமானம்தான்.

திறமை, உழைப்பு ஆகியவைகளுடன் விடாமுயற்சியும் இருந்தால், தோல்விகூட படிப்பினை ஆகிவிடுகிறது.

கர்வமே தோல்விக்கு முதல் படி

எத்தனையோ வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், `எனக்கு நிகர் யாருமில்லை. எவரால் என்னை வெல்ல முடியும்!’ என்ற திமிரே அவர்களை அடக்கிவிடும் என்று புரிந்துவைத்திருப்பவர்கள்தாம் அடுத்தடுத்து வெற்றி பெறுகிறார்கள். வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாகவே பாவிப்பதால், எப்போதாவது தோல்வி கிடைத்தால் இவர்கள் மனமுடைந்து போய்விடுவதில்லை, வெற்றி கிடைக்கும்போது பிறரை அலட்சியமாகக் கருதுவதும் கிடையாது.

`வெற்றிதான் கிடைத்துவிட்டதே!’ என்று மெத்தனமாக இருந்தால், தோல்வி அடையும் நாள் நெருங்கிவிட்டது என்று கொள்ளலாம்.

நடிப்புத் தொழிலையே கனவாகக்கொண்டு, அதில் பெரும் வெற்றியும் பெற்ற ஒரு நடிகரைக் கேட்டார்கள், “நீங்கள்தான் உலகிலேயே தலைசிறந்த நடிகர். ஒப்புக்கொள்வீர்களா?”

“அப்படி நான் நினைத்தால், அன்றே இறந்துவிடுவது மேல்!”

நீயே காரணம்

வெற்றி, தோல்வி இரண்டுமே நம்மால் வருவதுதான். தான் அடைந்த தோல்விக்குப் பிறரைக் குற்றம் சாட்டுபவன் தோல்விமேல் தோல்விதான் அடைய நேரிடும். அவனுடைய எந்தக் கனவும் பலிப்பதில்லை.

கதை

“என் மகன் பிரதாப் நீங்கள் கற்பிக்கப்போகும் எல்லாப் பாடங்களிலும் தொண்ணூறுக்குமேல் மதிப்பெண்கள் வாங்குவான் என்று நீங்கள் உறுதி அளிக்க முடியுமா?” அரசாங்கத்தில் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்த தந்தை என்னிடம் சவால் விட்டார்.

“உள்ளீடு (input) இருக்கும் வெளியீட்டைப்பற்றி நான் எப்படி உறுதி கூற முடியும்?” என்று நான் எதிர்க்கேள்வி கேட்டபோது, “அவன் என் மகன்! அதே ஜீன்ஸ்!’ என்று பெருமையாகப் பேசினார்.

அவர் நம்பிக்கை பொய்த்தது.

நடிகர் ஜாக்கி சான் தன் சுயசரிதையில், `நான் ஒரு தந்தையாகத் தோல்வி அடைந்துவிட்டேன்!’ என்று புலம்பி இருக்கிறார்.

உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றபின் தம் கடந்தகால வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, சில ஆண்களுக்குப் நிறைவைவிட ஏமாற்றமே அதிகமாக இருப்பதைக் காணலாம்.

ஏதாவது குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் சிறுபிள்ளைகள் அவர்களிடம் வந்தபோது, அவர்களுக்கு அவகாசமோ, `என்ன பிரச்னை?’ என்று கேட்கும் பொறுமையோ இருந்திருக்காது. சிலர் வன்முறையைப் பிரயோகித்திருப்பார்கள். (நாள் தவறாது அடித்தால்தான் ஆண்பிள்ளை உருப்படுவான் என்று எண்ணும் பெற்றோர் அச்செய்கையால் அவர்கள் கெட்டுப்போக வழிவகுக்கிறோம், அல்லது தம்மைவிட்டு விலகிப்போகிறார்கள் என்பதை உணர்வதில்லை).

நாளடைவில், தந்தையிடமோ, தாயிடமோ தம் அச்சங்களையும் குழப்பங்களையும் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ள பிள்ளைகள் முன்வர மாட்டார்கள். அவ்வளவு அவநம்பிக்கை! அவர்களைப்போன்றே குழப்பத்தில் இருக்கும் நண்பர்களை நாடுவது இயற்கை.

அப்பிள்ளைகள் தவறான பாதையில் பயணிக்கும்போது, காலங்கடந்து, `நாம் எங்கு தவறிழைத்தோம்?’ என்று எண்ணம் போகிறது பெற்றோருக்கு. நண்பர்களின் பிள்ளைகள் நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதைக் கண்டு ஆற்றாமை ஏற்படுகிறது.

பிறரது வெற்றி உன் தோல்வியல்ல

கதை 1

கணவன், குழந்தைகள் என்று மகிழ்ச்சியாக இருப்பவர்களைப் பார்த்து, என் அயல்நாட்டுத் தோழி ஏஞ்சலா ஆழ்ந்த வருத்தம் கொண்டிருந்தாள். ஏனெனில், அவள் விவாகரத்து ஆனவள்.

தன் மனநிலையை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள விரும்பாது, அவளது நிலைமையிலிருந்த இன்னொருத்தியைப்பற்றிப் பேசினாள்: “மேரி, பாவம். இல்லை? அவளைவிட இன்னொரு பெண்தான் உயர்த்தி என்று அவள் கணவன் போய்விட்டானே! மேரியின் மனம் எவ்வளவு நொந்துபோயிருக்கும்!”

மேரி இளம்பெண். அழகாக இருந்தாள். நாட்டியம் போதிப்பவள். (கண்ணையும் கழுத்தையும் எப்படி அசைப்பது என்று ஆர்வத்துடன் என்னிடம் கேட்டுக் கற்றுக்கொண்டாள்). நான் பழகியவரை நல்லவளாகத்தான் தெரிந்தாள்.

“இவளுடைய அருமை புரியாதவன் மடையன் என்று விட்டுத்கொள்ள வேண்டியதுதான்!” என்று நான் பதிலளித்தபோது, ஏஞ்சலா தன்னைப்பற்றித்தான் கேட்டாள் என்பது எனக்குப் புரியவில்லை.

இன்னொரு முறை, “வீட்டில் ஆண் ஒருவர் இருந்தால், எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியிருக்காதே என்றிருக்கும்,” என்றாள்.

“Relaionships have their own problems!” என்றேன் பெருமூச்சுடன். எந்த நெருக்கமான உறவில்தான் பிரச்னைகள் இல்லை?

ஏஞ்சலா, மேரி இருவருமே தத்தம் கணவன்மார்களைவிட உயர்ந்த நிலையில் இருந்தார்கள். அதைப் பொறுக்க முடியாது, என்றுமே தம்மை மிஞ்ச முடியாத பெண்ணாகப் பார்த்துத் தேடிப்போயிருக்கிறார்கள் அந்த ஆண்கள். விளைவு: விவாகரத்து.

திருமணம் செய்துகொள்ளும்போது எல்லாருமே இன்பக்கனவுகளுடன்தான் இல்லறத்தில் காலை வைக்கிறார்கள். நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா?

மணமுறிவு தோல்வியல்ல. ஒரு பகுதி முடிய, புதியதொரு வாழ்க்கையின் தொடக்கம் என்று எடுத்துக்கொண்டால்தான் மனம் நிம்மதி அடையும்.

கதை 2

ஒரு நாட்டிய வகுப்பில் சில ஆண்டுகளே பயிற்சி பெற்ற பெண்கள் இருவர் உயர்கல்விக்கென தாற்காலிகமாக விலகிப்போனார்கள். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தபோது, முன்பு சிறுமிகளாக இருந்தவர்கள் நாட்டியத்தில் இப்போது தம்மைவிட மிகச் சிறந்துவிட்டதைக் கண்டு ஆயாசம் ஏற்பட்டது. தம் தோல்வி என்ற வருத்தம் மிக, வகுப்பிலிருந்து நின்றுகொண்டார்கள்.

சில காலம் கடுமையாக முயன்றிருந்தால், மீண்டும் நன்கு ஆட முடிந்திருக்கும். ஆனால், பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டு, தாம் தோல்வியுற்றதாக அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டார்கள்.

தோல்வி அடைந்துவிட்டவர்களை `முட்டாள்,’ `பிழைக்கத் தெரியாதவன்!’ என்றெல்லாம் ஏளனமாகக் கருதுபவர்கள்தாமே இவ்வுலகில் அதிகம்! அதனாலோ என்னவோ, வெற்றி பெற்ற பலர் தம் தோல்விகளைக் குறித்துவைப்பது கிடையாது.

கனவு ஒரு பக்கமிருந்தாலும், மிகுந்த பிரயாசைக்குப்பின் கிடைக்கும் வெற்றியே இனிமையானது.

கதை

1897-இல் பிறந்த எமிலியா இயர்ஹார்ட் (Amelia Earhart) உலகிலேயே தன்னந்தனியாக விமானத்தை ஓட்டிய முதல் அமெரிக்கப் பெண்மணி.

தான் செய்துவந்தது அபாயகரமானது என்று புரிந்தும் அயராது, வெற்றி பெறும் திறமை தனக்கிருக்கிறது என்ற துணிவுடன் ஈடுபட்டார். கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதன் பலனாக பல வாகைகள் சூடினார். முதன் முறையாக அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்தவர் என்ற பெருமைக்குரியவர் எமிலியா. இறுதியில் ஒரு விமானத்தை ஓட்டிப்போகும்போது மரணத்தைத் தழுவினார். அதை யாரும் குறைவாகச் சொல்வதில்லை. அவரது சாதனைகள்தாம் நிலைத்து நிற்கின்றன.
தோல்வி அடையாதவர் யார்?

கல்விக்கூடங்களில் பயில்கிறவர்கள் அனைவருமே சிறந்த தேர்ச்சி பெறுகிறார்களா? அவர்களது நாட்டம் வேறு திசையில் இருக்கலாம்.

பாடுவதிலோ, ஆடுவதிலோ, சித்திரம் வரைவதிலோ நாட்டம் கொண்ட ஆண்குழந்தைகளை பல பெற்றோர் ஏற்காது கடுமையாகத் தண்டிப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை, கல்லூரியில் படித்து, பெரிய உத்தியோகத்திற்குப் போனால்தான் சமூகத்தில் மதிப்பு.

பெற்றோரின் கணிப்பை ஏற்று, `எனக்கு எல்லாவற்றிலும் தோல்விதான்!’ என்று பிள்ளைகள் தம்மைத்தாமே மட்டமாக எண்ணி, குன்றிப்போவார்கள். தமக்கு வேறு துறைகளில் திறமை இருப்பது அவர்களுக்கே தெரிந்திருந்தாலும், அதை வெளிக்காட்ட வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. கனவுகள் கனவாகவே ஆகிவிடும் கொடுமை இதனால்தான்.

அவரவருக்குப் பிடித்த துறையில் ஊக்கம் காட்டியிருந்தால், அதில் முழுமனதுடன் ஈடுபட்டு, பெரும் வெற்றி கண்டிருப்பார்களே!

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here