Category: செய்திகள்
-
வல்லமை மின்னிதழ் இணைந்து நடத்தும் நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்-பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்
காஞ்சிபுரம், ஏனாத்தூர் ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
மலேசியா, மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை,
மலேசியா, உலகத் தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம்,
விருபா . காம்
வல்லமை – ஆய்வு மின்னிதழ்
இந்து தமிழ் திசை நாளிதழ்
இணைந்து நடத்தும்
நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்
பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கமும்
படைப்பரங்கமும்
பேரன்புடையீர் வணக்கம்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டு வெள்ளிவிழா கண்ட ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிரந்தர இணைப்புப் பெற்றுள்ளதுடன் 2014 முதல் தன்னாட்சிப் பெற்ற நிறுவனமாகவும் விளங்கிவருகிறது. மேலும், தேசிய தரமதிப்பீட்டுக் குழுவால் ‘A’ உயர்தரத் தகுதியும், AICTE குழுவினால் அங்கீகாரமும் பெற்றுள்ளதுடன் ISO 9001-2008 தரச்சான்று பெற்ற கல்லூரியாகவும் திகழ்கின்றது. இத்தகு பெருமைமிகு கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தமிழாய்வுக்கு வளம்சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் பன்னாட்டுக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இவ்வாண்டு மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், விருபா.காம், வல்லமை ஆய்வு மின்னிதழ், இந்து தமிழ் திசை நாளிதழ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நதிகளும் தமிழ்ச் சமுதாயமும் என்ற பொருண்மையில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கையும் படைப்பரங்கையும் நடத்துகிறது.
நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்
உலக நாகரிகங்கள் நதிக்கரைகளைத் தொடர்புப்படுத்தியே அறியப்படுகின்றன. இமயம் முதல் குமரி வரை பரவியுள்ள பாரத தேசத்திலும் தொன்மங்கள், புராதனச் சடங்குகள், நம்பிக்கைகள், புனித பயணங்கள் யாவும் பெரும்பான்மையும் நதிகளோடு தொடர்புடையன. இன்றைக்கு மனித சமூகம் நதிகளிடமிருந்து அந்நியமாகி வந்தபோதும் அவர்களது வாழ்வோடும் ஆழ்மனத்தோடும் தொடர்ந்து நதிகள் ஆட்சிபெற்றுவருகின்றன. எனவே, நதிகள் அவர்களது படைப்புகளிலும் செயல்களிலும் காலந்தோறும் வெளிப்பட்டுவந்துள்ளன. இந்த சூழலில் எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தாமிரபணி மஹாபுஷ்கரம் என்னும் புனித நீராடல் பெருவிழா நடைபெற இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு ‘நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்’ என்ற பொதுத்தலைப்பில் இந்த ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கையும் படைப்பரங்கையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் தமிழ்ச்சமூகம் நதிகளோடு கொண்டிருந்த உறவையும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டையும் அதன்வழி பண்பாட்டு விழுமியங்களையும் வெளிப்படுத்த விரும்புகிறோம். இது தமிழரின் நீர்மேலாண்மை அறிவையும் இயற்கையோடு இயைந்த வாழ்வையும் வெளிப்படுத்துவதோடு எதிர்கால சிந்தனைகளையும் விதைக்கும் என நம்புகிறோம்.
பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்
இக்கருத்தரங்கில் பேராளர்கள் சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரைகள், நாட்டுப்புற இலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நெடும்பரப்பு முழுவதிலிருந்தும் நதிகள் சார்ந்த பதிவுகளைத் தொகுத்தும் பகுத்தும் தனித்தும் ஆராய்வதாகவும் அவற்றின் வழி தமிழ்ச் சமூகத்தின் விழுமியங்களை ஆராய்வதாகவும் கட்டுரைகள் எழுதலாம். மேலும், தொல்லியல் ஆய்வுகள் வழி அறியலாகும் நதிகள் குறித்த செய்திகள் தொடங்கி, நதிகளோடு தமிழர்கள் கொண்டிருந்த சடங்குகள், நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்கள் சார்ந்த பொருண்மைகளோடு நதிகளின் இன்றைய நிலை வரையிலான கருத்தாக்கங்களில், பல்துறை அணுகுமுறைகளில் கட்டுரைகள் அமையலாம். இதற்கு பதிவுக் கட்டணமாக ஆய்வாளர்கள் உரூ. 500ம், பேராசிரியர்கள், பிறர் உரூ. 700ம் செலுத்தவேண்டும். தேர்வுபெறும் அனைத்துக் கட்டுரைகளும் கருத்தரங்க நாள் அன்று சான்றிதழுடன் நூலாக்கம் செய்யப்பெற்று அளிக்கப்பெறும்.
வரைவோலை எடுக்க வேண்டிய முகவரி
PRINCIPAL
Sri Sankara Arts & Science College, AUTONOMOUS
Enathur, Kanchipuram.
நூலாகும் ஆய்வுக் கட்டுரைகளில் அமைப்புக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் மட்டும், கட்டணம் ஏதுமின்றி இந்திய தேசிய பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழான வல்லமை இணைய இதழிலும் வெளியிடப்பெறும்.
பன்னாட்டு படைப்பரங்கம்
நதிகளும் தமிழ்ச் சமுதாயமும் என்ற பொருண்மையில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்குவது போலவே, தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் நதிகள், நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கட்டுரைகள், கவிதைகள் எழுதி அனுப்பலாம். இதற்குத் தனியே கட்டணம் ஏதும் இல்லை. தேர்வு செய்யப்பெறும் படைப்புகள் மட்டும் நூலாக்கி படைப்பரங்க நாளில் வழங்கப்பெறும்.
வந்து சேரும் இருவகை படைப்புகளிலும் அறிஞர் குழுவால் தேர்வு செய்யப்பெறும் முதல் மூன்று படைப்புகளுக்குப் பரிசுகளும் விழா மேடையிலேயே வழங்கப்படவுள்ளன.
அனுப்பும் முறை
ஆய்வுக் கட்டுரைகளும் படைப்புகளும் ‘யுனிகோடு’ எழுத்துருவில் (UNICODE FONT) 12 என்ற எழுத்தளவில் 1.5 வரி இடைவெளியுடன் தட்டச்சு செய்து A4 தாளில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் கணினித் தட்டச்சு செய்து அதன் மென்படியை thamirabaranisankara@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
அதன் காகிதப் படியைப் பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
ஜெ.இராதாகிருஷ்ணன்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறைத் தலைவர்
ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
தன்னாட்சி,
ஏனாத்தூர், காஞ்சிபுரம் – 631561.
தொலைபேசி : 044 – 27264066 (Ex 42)
thamirabaranisankara@gmail.com
கைப்பேசி : 9486150013, 9786985451
-
அமெரிக்காவின் சிகாகோ மாநகரில், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
பெருமதிப்புக்குரிய தமிழ் அறிஞர் பெருமக்களே வணக்கம்.
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ பெருநகரில், 2019-ஆம் ஆண்டு, சூலை திங்கள் 3 முதல் 7ஆம் நாள் வரை நடைபெற இருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும். மற்றைய மாநாடுகள் போல, இந்த 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) துணையோடும், சிறப்பாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடும் நடைபெற உள்ளது. இந்த மாநாடு தமிழ் மக்களின் சமூக அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இம்மாநாடு சிறப்புற நடக்க, வட அமெரிக்காவிலும் உலகெங்கும் உள்ள பிற தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்; பிற அரசாங்க அமைப்புகளின் உதவிகளையும் நாடி ஏற்றுக்கொள்ளவும் விழைகின்றோம்.
அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் (IATR)
உங்களில் பலருக்கு இந்த ஆய்வு மன்றத்தின் வரலாறு தெரிந்திருக்கலாம். இது 1964-ஆம் ஆண்டு புது டெல்லியில் உலகெலாம் அறிந்த தமிழ்ப் பேரறிஞர், மறைந்த தனிநாயக அடிகளாரின் பெரும் முயற்சியால் நிறுவப்பட்டது. அந்த ஆண்டு உலகக் கீழ்க்கலை அறிஞர்கள் (Orientalists) மாநாடு புது தில்லியில் நடந்தது. அதற்குப் பிரான்சைச் சேர்ந்த அறிஞர் முனைவர் பீலீயோசா, செக்கசுலோவிக்கியா அறிஞர் பெருமான் கமில் சுலபில், அறிஞர்கள் ஆசர், இங்கிலாந்திலிருந்து வந்திருந்த அறிஞர் பெருமக்கள் பரோ, எமனோ, தமிழகத் தமிழ் அறிஞர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், முனைவர் வி.ஐ.சுப்ரமணியன் ஆகியோர் தனிநாயக அடிகளோரோடு இணைந்து இந்த ஆய்வு மன்றத்தைத் தொடங்கினர். இது ஒரு அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம் ஆகும். இதன் தலை சிறந்த நோக்கம்: “பொதுவாகத் திராவிடம் பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்ய ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும் உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும் ஆகும்.”
இது வரை ஆய்வு மன்றம் நடத்திய மாநாடுகள்:
ஆய்வு மன்றத்தின் அமைப்பாளரும், அப்போது மலேயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகவும் இருந்த தனிநாயக அடிகளார் 1966-ஆம் ஆண்டு, முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் கோலாலம்பூரில் நடத்தினார். இரண்டாம் மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னையில் அன்றைய தமிழக முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. தொடர்ந்து பின் வந்த மாநாடுகள் பாரிசு நகர் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987, 2015), போர்ட் லூயிசு (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய நகரங்களில் நடைபெற்றன. ஆய்வு மன்றத்தின் நோக்கத்திற்கு இணங்க, இம் மாநாடுகள் தமிழ்ப் பேரறிஞர்கள் பலரை வரவழைத்து, தமிழ் மொழி, இலக்கியம், நாகரிகம் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் செய்த ஆய்வுகளை மாநாட்டில் படைக்க வாய்ப்பளித்தன.
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
இம்மாநாடுகளை, அரசியல் தலையீடு இன்றி, தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்துதல் சிறந்தது என மன்றத்தின் அலுவலர்களும், தமிழ் அறிஞர்கள் பலரும் பல காலம் எண்ணி வந்தனர். இக்கருத்தை முன்னெடுத்துச் சென்று, இனி வரும் ஆராய்ச்சி மாநாடுகளைத் தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்த வேண்டும் என்று துணிந்து ஊக்கம் அளித்தவர், முன்னாள் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணைத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியும், பெரும் தமிழ் அறிஞரும், கவிஞரும் ஆன மறைந்த உயர்தனித் தமிழ்மகன், முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்கள். அவரே அமெரிக்கா வாழ் தமிழ்மக்கள் ஒன்று சேர்ந்து அடுத்த ஆராய்ச்சி மாநாட்டை இந்தப் புது வகையில் நடத்த வேண்டும் என்று ஊக்கம் அளித்தார்; இக்கருத்தை உலகளாவிய ஆய்வு மன்ற அலுவலர்களிடமும் தெரிவித்தார். அவர் உந்துதலாலும் அளித்த ஊக்கத்தினாலும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையினரும், சிகாகோத் தமிழ்ச் சங்கத்தினரும் இணைந்து 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினைப் புதுமுறையில் நடத்த முன்வந்தனர்.
2015-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 9-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட தமிழ் ஆர்வலர் மருத்துவர் சோம. இளங்கோவன் உதவியோடு, மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கியும், தலைமை தாங்கியும் பங்கு கொண்ட தமிழ்ப் புலவர் முனைவர் பிரான்சிசு ச. முத்து அவர்கள், அடுத்த மாநாட்டை வட அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலும் ஊக்கமும் அளித்தல் வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமும், அதன் தலைவர் முனைவர் மாரிமுத்துவும், துணைத் தலைவர் முனைவர் பொன்னவைக்கோவும் ஏற்றுக்கொண்டனர். எனவே 2019-ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ள 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
பெரும் தமிழ் ஆர்வலரும், முன்னாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவருமான மருத்துவர் சோம. இளங்கோவன், மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவின் (Organizing Committee) தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் உயர்திரு சுந்தர் குப்புசாமி அவர்களும், சிகாகோத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உயர்திரு மணி. குணசேகரன் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர். புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து அவர்கள் ஆய்வுக் குழுவின் (Academic Committee) தலைவராகவும், தற்காலத்தில் மிகச்சிறந்த தமிழ் ஆய்வாளராக விளங்கி வரும் பன்மொழிப்புலவர், முனைவர் ப. மருதநாயகம் அவர்கள் ஆய்வுக்கு குழுவின் இணைத்தலைவராகவும் பொறுப்பேற்று உள்ளனர். உலகத் தமிழ்ப் பேரறிஞர் பலர் அறிவுரைக் குழுவிலும் (Advisory Panel), மாநாட்டின் ஆய்வுக் குழுவிலும் (Academic Committee) பங்கேற்றுள்ளனர். ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ஐம்பெரும் தமிழ் அறிஞர்கள் ஆய்வுக்கு குழுவின் துணைத் தலைவர்களாகப் பணிபுரிகின்றனர்.
மைய ஆய்வுப் பொருளும் (Theme) ஆராய்ச்சித் தலைப்புகளும் (Topics)
அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மை நோக்கத்திற்க்கு ஏற்ப இந்த மாநாட்டின் மைய ஆய்வு பொருள் அமைந்துள்ளது.
“தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.”
இந்த மாநாடு சிறப்புற அமைய அறிஞர் பெருமக்கள் சிறந்த ஆராய்ச்சித் தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து ஆய்வுகள் செய்யவும், ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்த மாநாட்டில் வழங்கவும் அழைக்கிறோம்.
ஆராய்ச்சித் தலைப்புகளைப் பற்றியும், “ஆராய்ச்சிக் கட்டுரைச் சுருக்கத்தையும்” (ABSTRACT), “ஆராய்ச்சி விரிவுக் கட்டுரையையும்” (RESEARCH PAPER) அனுப்பும் முறை, அனுப்பவேண்டிய தேதி, ஆகியன பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பின் வரும் இணையதள முகவரியைப் பார்க்கவும்:
http://www.iatrnew.org
E.mail: iatr2019@fetna.org
இந்த மாநாட்டிற்கு வருகை தந்து பங்கு கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.
அன்புடன்
புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து
பொதுச் செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்
தலைவர், ஆய்வுக் குழு
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
மருத்துவர் சோம. இளங்கோவன்
தலைவர், ஒருங்கிணைப்புக் குழு, 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
பிற செய்திகளுக்கு:
திரு. சுந்தர் குப்புசாமி
தலைவர், தமிழ்ச் சங்கப் பேரவை
மின்னஞ்சல்:president@fetna.org / www.fetna.org
திரு. மணி. குணசேகரன்
தலைவர், சிகாகோ தமிழ்ச் சங்கம்
மின்னஞ்சல்:president@chicagotamilsangam.org www.chicagotamilsangam.org
செய்தி: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி, இந்தியா muelangovan@gmail.com
ஆராய்ச்சிக் கட்டுரை எங்கும் இதுவரை வெளியிடப்படாத முழுமுதல் ஆராய்ச்சிக் கருத்துக்கள் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
ஆராய்ச்சியாளர்கள் “ஆராய்ச்சி விரிவுக் கட்டுரையை” அனுப்பும் முன்னர் அதன் சுருக்கத்தினை முதலில் அனுப்ப வேண்டும். இந்தச் சுருக்கம் “மைக்ரோசாப்ட்” சொல் செயலியில் (Microsoft Word) இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் “யுனிகோடு” முறையில் (unicode format) இருத்தல் வேண்டும்.
ஆராய்ச்சிச் சுருக்கம் நவம்பர் 30, 2018 ஆம் தேதிக்குள் பின்வரும் மின்னஞ்சல் வழியாக அனுப்புதல் வேண்டும். மின்னஞ்சல் முகவரி “academic-committee@icsts10.org”. பெறப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைச் சுருக்கங்கள் ஆய்வறிஞர் குழுவினரால் (academic committee) சீராய்வு செய்யப்பட்டு அந்த கட்டுரைச் சுருக்கம் ஏற்புடையதா இல்லையா என்ற முடிவுகள் டிசம்பர் 31, 2018 தேதிக்குள் அறிவிக்கப்படும்.
ஏற்கப்பட்ட ஆராய்ச்சிச் சுருக்கத்தின் ஆசிரியர்கள் தங்களது ஆராய்ச்சி விரிவுக் கட்டுரையை மார்ச் 31, 2019 ஆம் தேதிக்குள் அனுப்புதல் வேண்டும். இந்தக் கட்டுரை “மைக்ரோசாப்ட்” சொல் செயலியில் (Microsoft Word) முப்பது பக்கங்களுக்கு மிகாமல், “யுனிகோடு” முறையில் (unicode format), எழுத்தளவு 12-ஆக இருத்தல் வேண்டும். ஆராய்ச்சிக் கட்டுரைச் சுருக்கம், ஆராய்ச்சி விரிவுக் கட்டுரை ஆகிய இரண்டும் தமிழிலோ ஆங்கிலத்திலோ இருத்தல் வேண்டும்.
ஆராய்ச்சியாளர்கள் தங்களது வாழ்க்கைக் குறிப்பினை (biodata/resume), 200 சொற்களுக்கு மிகாமல் ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கத்தோடு இணைத்து அனுப்புதல் வேண்டும்.
ஆய்வரங்கில் படைக்கப்படுகின்ற கட்டுரைகளின் எண்ணிக்கை, ஆராய்ச்சியாளர்கள் விவரங்கள் ஏப்ரல் 30, 2019 ஆம் தேதிக்குள் தெரியப்படுத்தப்படும். கட்டுரையாளரின் அனுமதிக் கட்டணம், தங்கும் செலவு, உணவுச் செலவு, மாநாட்டின் போது ஏற்படுகின்ற உள்ளூர் போக்குவரத்து செலவு ஆகியவற்றை விழாக் குழுவினர் ஏற்றுக்கொள்வர்.
ஆய்வரங்கில் பங்கேற்கும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது சொந்த செலவிலோ அல்லது அரசு, கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் முதலியன தரும் பொருள் உதவியால் தங்களது பயணச் செலவிற்கான ஏற்பாடுகள் செய்து கொள்வதை வரவேற்கின்றோம். பயணம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஆராய்ச்சியாளர்கள் தங்களது கடவுச் சீட்டினை (Passport) ஏப்ரல் 30, 2019 ஆம் தேதிக்குள் பெற்று வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் குறித்த நேரத்தில் அமெரிக்காவின் நுழைவுச்சான்றினைப் (Visa) பெற உதவியாக இருக்கும்.
ஆராய்ச்சியாளர்கள், மாநாட்டின் போது தேவைப்படும் எதிர்பாராது வரக்கூடிய மருத்துவச் செலவிற்குத் தேவைப்படும் விதமாக, தங்களுக்கான மருத்துவக் காப்பீட்டினை (Insurance) முன்னரே வாங்கி வைத்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் மாநாட்டின் இணையத் தளத்தில் வெளியிடப்படும். ஆய்வரங்கில் படைக்கப்படுகின்ற கட்டுரைகள் மட்டும் மாநாட்டு மலரில் இடம் பெறும்.
2019-ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் சிகாகோவில் நடைபெற உள்ள உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் சிறப்பு நோக்கங்கள்; தமிழில் உள்ள செவ்விலக்கியங்களை உலகிற்கு அறிமுகப் படுத்துதல்; தமிழர், தமிழ் மொழி, இலக்கியங்கள், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் பழமையும், தனிச்ச்சிறப்பையும் ஆய்வு செய்தல் ஆகியவை ஆகும். அத்துடன் தமிழ் அறிஞர் பெருமக்கள் தற்கால தமிழ் உரைநடை, பாடல்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும் என இந்த மாநாடு ஊக்குவிக்கின்றது. இந்நோக்கங்கள் சிறப்புற, வெற்றிபெற, கீழ்கண்ட தலைப்புகளில் ஆழ்ந்த ஆய்வோடு அழகுற எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், இம்மாநாட்டில் இடம்பெற வரவேற்கப்படுகின்றன.
செவ்விலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள்)
தமிழ்ச் செவ்விலக்கியங்களும் பிறமொழிச் செவ்விலக்கியங்களும்: ஒரு ஒப்பீடு
புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு முதலிய பிற தமிழ்ச் செவ்விலக்கியங்கள் தமிழர்ப் பண்பாட்டுக் கருவூலங்கள்
செவ்விலக்கியங்களில் இயற்கை
தமிழ்ச் செவ்விலக்கியங்களில் பெண்கள்
தமிழ்ச் செவ்விலக்கியங்கள் காட்டும் பண்டைத் தமிழகத் தாழ்நிலைக் குடிமக்கள்
தமிழ்ச் செவ்விலக்கியங்கள் காட்டும் பழங்காலக் கல்விநிலை
இலக்கியமே வரலாறு அல்லது வரலாறே இலக்கியம்; இக்கோட்பாட்டினைப் புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய செவ்விலக்கியங்கள் மூலம் ஆய்வு செய்தல்
தமிழ் நாகரிகத்தின் பழமையும் அது உலகெலாம் பரவிய வகையும்
தமிழர்த் தோற்றத்தையும் அவர் உலகெலாம் பரவிய வகையும் மரபியல் மூலமும் (genetics) மரபியல் காட்டும் வழிமுறை வகையிலும் (genographics) ஆய்வு செய்தல்
தமிழ்ச் சங்கங்களும் தமிழர் நாகரிகமும் வளர்ந்த குமரி நாடு அல்லது குமரிக் கண்டம் ஒன்று இருந்தமையை, வரலாறு, இலக்கியம், அகழ்வாய்வு (archeology), நிலவியல் (geology) போன்ற அறிவியல் சான்றுகளோடு நிறுவ ஆய்வு செய்தல்
பழந்தமிழர்ப் பாண்பாட்டினைக் கீழே காணும் பழம்பெரும் பண்பாடுகளோடு ஒப்பாய்வு செய்தல்
எகிப்தியர் பண்பாடு
எபரேயர் பண்பாடு
கிரேக்கர் பண்பாடு
ரோமையர் பண்பாடு
சீனர் பண்பாடு
உலகத்தின் பழம்பெரும் நாகரிக வளர்ச்சியில் தமிழர்ப் பங்கீடு (contribution); கீழுள்ள நாகரிகம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்க
சிந்துவெளி நாகரிகம்
சுமேரிய நாகரிகம்
மெசபட்டோமியா, அக்கேடின் நாகரிகம்
எகித்திய நாகரிகம்
மத்தியதரைக்கடல் நாகரிகம்
பழந்தமிழர் நாகரிகம் குறித்து இராசு அடிகளாரின் (Rev. Fr. Heras S.J.) கண்டுபிடுப்புகள்
பழந்தமிழர் நாகரிகம் குறித்து பேராசிரியர் அசுகோ பொர்போலாவின் (Asko Parpola) கண்டுபிடுப்புகள்
பழந்தமிழ் நாகரிகம் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் இராசன் அவர்களின் அகழ்வாய்வு கண்டுபிடுப்புகள்
தென்னிந்தியாவில் ஆதிச்சநல்லூர், பொருந்தல், கீழடி முதலிய பிற இடங்களில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள்
தொல்காப்பியம்
தொல்காப்பியமும் தற்கால மொழியியலும்
தொல்காப்பியர் காலம்
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள்
ஐந்திணைக் கருத்தும் தமிழின் அகப்பொருள் மரபும்
தொல்காப்பியமும் கீழே காணும் பிறமொழி இலக்கண நூல்களும்: ஒரு ஒப்பாய்வு. இவற்றில் ஒன்றினை தேர்வு செய்து ஆய்வு செய்க
கிரேக்க இலக்கண நூல்கள்
இலத்தீன் இலக்கண நூல்கள்
எபரேய இலக்கண நூல்கள்
வடமொழி இலக்கண நூல்கள்
கன்னட இலக்கண நூல்கள்
தெலுங்கு இலக்கண நூல்கள்
மலையாள இலக்கண நூல்கள்
பிறமொழி இலக்கண நூல்கள் (மொழியைக் குறிப்பிடுக)
தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை: தொடர்ந்துவரும் தமிழ் இலக்கண மரபுகள்
திருக்குறள்
திருவள்ளுவர், “உலக மக்களின் அறநூல் புலவன்” (‘The Bard of Universal Man’ Dr. G U Pope)
திருக்குறள் பண்டைத்தமிழர்தம் பண்பாட்டு நாகரிகக் கருவூலம்
திருக்குறளும் வாழும் வழிமுறைகளும் (the art of living)
திருக்குறள், தற்கால வாழ்க்கைக்கும் வழிகாட்டும் அறநூல்
திருக்குறளும் கீழே காணும் பிற அறநூல்களும்: ஒப்பாய்வு. கீழுள்ள ஒன்றினைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்க
கிரேக்க அறநூல்கள்
இலத்தீன் அறநூல்கள்
வடமொழி அறநூல்கள்
பிறமொழி அறநூல்கள் (குறிப்பிடுக)
திருக்குறளுக்கு பிற நாடுகளில் இருக்கும் வரவேற்பு: ஆய்வு
அறிஞர் பெருமக்களைப் பற்றிய ஆய்வு
கீழ்கண்ட அறிஞர் பழங்கால, இடைக்கால, மற்றும் தற்காலத் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகிய இவற்றின் ஆய்வுகளுக்குத் தந்த பெரும் பங்களிப்பு (ஒவ்வொருவர் பங்களிப்பையும் தனிப்பட ஆய்வு செய்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவும்)
மறைமலை அடிகளார்
விபுலானந்த அடிகளார்
தனி நாயக அடிகளார்
பரிதிமாற் கலைஞர்
தேவநேயப் பாவாணர்
கமில் சிலபில் (Kamil Zvelebil)
ஏ கே இராமநுசன் (A K Ramanujan)
ஆர் கு அசர் (R K Asher)
சார்சு ஆர்ட் (George Hart)
பிற அறிஞர் பெருமக்கள் (யார் என்று குறிப்பிடுக)
தமிழ் இசையும் கலைகளும்
தமிழ் இசை, கலைகள்; இவற்றின் பழமை
கருநாடக இசையில் தமிழ் இசையின் தாக்கம்
பழங்காலத்தில் வழங்கிய தமிழ் இசைக் கருவிகள்
தற்காலத் திரைப்படப் பாடல்களில் சங்க இலக்கியப் பாடல்களின் தாக்கம்
தற்காலத் தமிழ் இலக்கியங்கள்
தமிழ் உரைநடை, செய்யுட்கள் (பாடல்கள்); இவற்றின் தற்கால போக்கு
தற்கால நாவல்களும் சிறுகதைகைளும்; இவற்றின் புதிய போக்கு
தமிழ்க்கல்விக்கும் ஆய்வுக்கும் கணினி பயன்படும் வகைகள்: ஒர் ஆய்வு
தமிழ் மொழியும் மொழியியலும்
தொல்காப்பியம்: அதில் பொதிந்துள்ள மொழியியல் நுணுக்கங்களும் இலக்கியக் கோட்பாடுகளும். -
எம்.ரிஷான் ஷெரீபின் நூலுக்கு இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம், 11 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ‘அரச இலக்கிய விருது வழங்கல் – 2018’ பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் இலங்கை ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் ‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ எனும் நூலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியத்துக்கான அரச சாகித்திய இலக்கிய விருது’ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த 2300 நூல்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுள் சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
தேசிய கருத்தரங்கம் – அழைப்பிதழ்


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையும் தஞ்சைஅனன்யா பதிப்பகமும் இணைந்து நடத்தும் தேசிய கருத்தரங்க அழைப்பிதழ்.
-
கனடாவில் சந்தவசந்த சந்திப்பு
கவிஞர் பசுபதி
கனடா,
செப்டம்பர் 1 2018
இன்றுகாலை சந்தவசந்தம் இணையக் குழுவின் சந்திப்பு கனடாவில் உள்ள மிஸ்ஸிஸாகாவில் கவியோகி வேதம் அவர்கள் ஏற்பாட்டில் அவரது மகன் ஸ்வாமிநாதன் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இச்சந்திப்பில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியைப் பற்றியும் அதில் கலந்து கொள்பவர்களைப் பற்றியும், சந்தவசந்தத் தலைவர் “கவிமாமணி இலந்தை ராமசுவாமி அவர்கள் தம் அற்புதக் கவிதைகள் மூலம் எடுத்துக் கூறினார். கவிஞர்களை அவர் வெவ்வேறு சந்த ஓசையில் அழைத்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.அரங்கில், முதல் நிகழ்வாக கவியோகி வேதம், பசுபதி, அனந்த் ஆகிய மூன்று கவிஞர்களுக்குக் “கவிப்பெருஞ்சுடர்” என்னும் சந்தவசந்தக் குழுமத்தின் விருதுகள் வழங்கப் பட்டன. புதுச்சேரியில் இருந்து சிவசிவா என்னும் கவிஞருக்குச் சேர வந்திருந்த பாவலர்மணி விருதுப் பட்டயத்தைச் சந்தவசந்தத் தலைவரே பெற்றுக் கொண்டார். அதற்கடுத்து, “இயலிசை அரங்கம்” மிகச் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர்கள் அனந்த், பசுபதி, இலந்தை, வேதம் ஆகியோர் தாங்கள் எழுதிய இசைக் கவிதைகள் பற்றிப் பேசி, அவற்றின் ஒலியையும் (பாடல்மூலம்) இசைத்துக் காட்டினார்கள். மிகஅழகாக, இனிமையாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
அடுத்த நிகழ்வாகக் கவிதையில் சித்திர விசித்திரங்கள் என்னும் மிக அழகிய நூல் புத்தகம் வெளியானது. வெளியீடு செய்து பேராசிரியர் சங்கரன் நகைச்சுவை கூடிய சிறப்பான உரையை வழங்கினார். புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு கவிஞர் சௌந்தர் அவர்கள் மிகஅற்புதமான, விரிவான மதிப்புரை நிகழ்த்தி, அதோடல்லாமல் ஒரு சிறப்பான “மிறைப்பா”வையும் வழங்கினார். நல்ல ஆய்வு அது! நேரத்தின் அருமை கருதி இலந்தை, வேதம், பசுபதி ஆகியோர்.. முறையே “விருத்தம் எழுத வருத்தம் எதற்கு?” “கவியோகியின் அற்புதப் படைப்புகள்” “சங்கச்சுரங்கம்” நூல்கள் பற்றி ஒரு நிமிடம் பேசினார்கள். கவிப்பெருஞ்சுடர் அனந்த் அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு திருமதி பிரபா ஸ்வாமிநாதன் அவர்களின் மிகச் சுவையான சுவையரங்கத்துடன் விழா இனிதே நிறைவுற்றது..
வாழ்க கனடாக் கவியரங்கம்!
விருதளிக்கும் படங்கள்

-
முன்னாள் தமிழக முதலமைச்சர், டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
முன்னாள் தமிழக முதலமைச்சர்,
டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி
தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர், டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்கள் தமிழகத்தில் 5 முறை முதலமைச்சர் ஆகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகவும் இருந்தவர்.
தெளிவான சிந்தனை கொண்ட மாபெரும் தலைவர், தமிழுக்கும் தமிழின மக்களுக்கும் பெருமை சேர்த்தவரும், தமிழ் மொழியை உலகறிய செய்தவர், அரசியல், சினிமா, இலக்கியம், அனைத்திலும் ஈடுபாடு கொண்டு எண்ணற்ற சாதனைகள் படைத்தவர். இவர் நேற்று மாலை 6.10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவ மனையில் மரணமடைந்தார். அவருடைய ஆத்மா சாந்தி அடையவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவினர்கள், கழக நிர்வாகிகள், உடன் பிறப்புகள், தொண்டர்கள், விசுவாசிகள் மன அமைதி பெறவும் தன்வந்திரி பீடத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
—
Blessings from Kayilai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal
FOUNDER
Sri Danvantri Arogya Peedam,
04172-230033, 0944330203,
” நோயற்று வாழட்டும் உலகு “ -
வல்லமை இணையதளத்தில் நடத்திய மூன்று போட்டிகளில் பெறப்பட்ட கட்டுரைகள் புத்தக வடிவம்
காவிரிமைந்தன் வணக்கமுடன் வரையும் மடல். நலம்.. நலமே நாடுகிறேன்!
வல்லமை இணைய தளத்தோடு இணைந்து நான் நடத்திய போட்டிகள் மூன்று..
1. என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைகள் பெறப்பட்டு பேராசிரியர் வ.வே.சுப்பிரமணியன் அவர்கள் நடுவராக இருந்து பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தந்தது நீங்கள் அறிவீர்கள். பெற்றிட்ட கட்டுரைகளோடு இன்னும் எனது இலக்கிய வட்டத்தில் பல பிரமுகர்களிடம் இருந்து மேலும் பல கட்டுரைகள் பெற்று நூறு கட்டுரைகள் ஆக.. அவை ஒவ்வொன்றுக்கும் எனது பின்னூட்டம் சேர்த்து.. இந்தப் புத்தகத்தை..
01.07.2017ல் சென்னையில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் பிறைசூடன் வெளியிட்டார் கடந்த 29.06.2018ல் துபாயில் நடைபெற்ற கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் மறு வெளியீடு நடந்தது.

01.07.2018ல் சென்னையில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் பிறைசூடன் வெளியிட்டார் கடந்த 29.06.2018ல் துபாயில் நடைபெற்ற கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் மறு வெளியீடு நடந்தது.2. மனதில் நிறைந்த மக்கள் திலகம் – கட்டுரைகள் பெறப்பட்டு பேராசிரியை கமலம் ஷங்கர் அவர்கள் நடுவராக இருந்து பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தந்தது நீங்கள் அறிவீர்கள். பெற்றிட்ட கட்டுரைகளோடு இன்னும் எனது இலக்கிய வட்டத்தில் சில பிரமுகர்களிடம் இருந்து மேலும் பல கட்டுரைகள் பெற்று ஐம்பது கட்டுரைகள் ஆக.. எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு உருவான இந்த நூல் துபாயில் 12.01.2018 அன்று வெளியிடப்பட்டது.
3. கர்மவீரர் காமராஜர் – கட்டுரைகள் பெறப்பட்டு தமிழறிஞர் தமிழருவி மணியன் அவர்கள் நடுவராக இருந்து பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தந்தது நீங்கள் அறிவீர்கள். பெற்றிட்ட கட்டுரைகளோடு இன்னும் எனது இலக்கிய வட்டத்தில் பல பிரமுகர்களிடம் இருந்து மேலும் சில கட்டுரைகள் பெற்று 45 கட்டுரைகள் ஆக.. உருவான இந்த நூல் துபாயில் 13.07.2018 அன்று வெளியிடப்பட இருக்கிறது.
வல்லமை இணையதளத்தில் நடத்திய மூன்று போட்டிகளில் பெறப்பட்ட கட்டுரைகள் புத்தக வடிவம் பெற்றுள்ளமை மகிழ்ச்சி தருகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை நமது வல்லமை இணையதள நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
மூன்று புத்தகங்களும் இணைப்பில் உண்டு..
உங்கள் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் என்றும் நன்றி உடையவனாக ஆவேன்.
கூடிய விரைவில் உங்களோடு இணைந்து மீண்டும் வல்லமையில் வலம் வருவேன்…
https://drive.google.com/file/d/1NwDBJXrFXeJ6DUT03MMPQYUSdqZZ9Xsg/view
https://drive.google.com/file/d/1ALNzy9SvabIpSNkqlh2EpaoIM-sJNTFJ/view
அன்புடன்…
காவிரிமைந்தன்
துபாய் -
தச மஹாவித்யா யாகம் நடைபெற்றது
தன்வந்திரி பீடத்தில்
தச மஹாவித்யா யாகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தச மஹாவித்யா ஜபம் மற்றும் ஹோமம் நடைபெற்றது.
தசமகா வித்யா தேவியர்கள்:
பெண்மையின் சக்தியை தாய்மை முதல் சம்ஹாரம் வரை உணர்த்துபவர்கள் இந்த தேவியர்கள். இவர்களே ஸ்ரீசாக்த மார்க்கத்தின் ஆதிதேவியர்கள் ஆவார்கள். மேலும் மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களின் போது இந்த தேவியர்கள் ஒவ்வொருவரும்தான் ஆதார சக்தியாக இருந்தார்கள் என்று ‘முண்டமாலா தந்திரம்’ என்ற நூல் கூறுகிறது. காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, ஸ்ரீ சின்னமஸ்தா, ஸ்ரீ தூமாவதி, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ கமலாத்மிகா என்ற பத்து தேவியர்கள்தான் தசமகா வித்யா தேவியர் என்று அழைக்கப்படுகின்றனர்.
பக்தர்கள் இத்தேவியர்களை வழிபட்டு பலனடைய வேண்டி ஒவ்வொரு தேவியருக்கும் தனித்தனியாக பீடம் அமைத்து கலச ஸ்தாபனம் செய்து மேற்கண்ட 10 தேவியர்களுக்கும் 16 வேத விற்பனர்கள் பங்கேற்று 1000 முறை ஜபம் செய்து ஹோமங்கள் நடைபெற்றது. இதில் தச மஹா தேவியர்களுக்குரிய புஷ்பங்கள், பஷங்கள், நிவேதனங்கள், திரவியங்கள் சேர்க்கப்பட்டு மஹாமேரு மற்றும் காயத்ரி தேவிக்கு 10 விதமான அபிஷேக திரவியங்கள் கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நவாவர்ண பூஜையும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு மஹா பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்ட்து. இதில் வாலாஜாபேட்டை லாவண்யா மருத்துவ மனை நிர்வாகி டாக்டர் தொப்பகவுண்டர், திரு. கோபிநாத் தொப்பகவுண்டர் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதனை தொடர்ந்து இராகு காலத்தை முன்னிட்டு, இராகு கேது ப்ரீதி ஹோமமும், சர்பசாந்தி ஹோமமும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
-
பனுவல் வரலாற்றுப் பயணம் – 8
அன்புள்ள வாசகர்களே,
தூசி, மாமண்டூர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் காஞ்சிபுரம் அருகே உள்ளது. தூசி என்றால் குதிரை படை நிறுத்துமிடம் என்பது பொருள். இவ்வூரில் உள்ள மலை அடிவாரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் கால குடைவரைக் கோயிலும் அவன் பெயரிலேயே அமைக்கப்பட்ட சித்ரமேகத் தடாகம் என்ற மிகப்பெரிய ஏரியும் அமைந்திருக்கின்றன. அக்கோயிலில் உள்ள கல்வெட்டு மிகவும் பெரியது.
இம்மலைமேல் சமண முனிவர்கள் வாழ்ந்த இயற்கையான குகைத்தலமும் அதில் தமிழ்ப் பிராமி கல்வெட்டும் உள்ளன. இது சங்ககாலத்த்தை சேர்ந்தது. இதையெல்லாம் கண்டு களிக்கவும் கல்வெட்டுகள் கூறும் வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ளவும் வரலாற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழி காட்டிகள்:
முனைவர்.ஆ.பத்மாவதி
முனைவர்.மாக்சிய காந்தி
கல்வெட்டு ஆய்வாளர்கள்.
Call 9789-00-9666 or 044-431-00-442 for booking and more details
நாள் : JULY 22,2018
தொடக்கம் : காலை 6:30 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்
திரும்புதல் : இரவு 8:00 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்பயணக் கட்டணம் : ரூ1000/-
காலை உணவு , மதியம் உணவு, தேனீர், நினைவு பரிசு வழங்கப்படும்.
முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
Contact Address:
Panuval Bookstore
112, Thiruvalluvar Salai,
Thiruvanmiyur. Chennai – 41.
Ph: 044-431-00-442 | 9789009666
-
போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம்- புத்தக அறிமுகம்
அழைப்பு
புத்தக அறிமுகம்
போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம்
(அடையாளம் வெளியீடு)
ஆசிரியர்:
நாகேஸ்வரி அண்ணாமலைநிகழ்ச்சித் தலைமை:
சமஸ்
துணை ஆசிரியர், த இந்து (தமிழ்)நாள்: ஜூலை 07 (சனிக்கிழமை)
மாலை 6.00 மணிஇடம்: பனுவல்
112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை, 600041
கைபேசி, வாட்ஸப் 9789009666பங்கு பெறுக
(ஆசிரியரின் பிற நூல்கள்: அமெரிக்காவின் மறுபக்கம், அமெரிக்க அனுபவங்கள், பாலஸ்தீன-இஸ்ரேல்
போர், ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை; ஃபேஸ்புக்: https://www.facebook.com/a.nageswari) -
“தமிழ்நாடு” பெயர்சூட்டல் 50 ஆவது ஆண்டு பொன்விழாக் கொண்டாட்டம்
சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டிற்குத் “தமிழ்நாடு” என்று அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்டு, இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் ஆகின்றது. அதற்கான பொன்விழாக் கொண்டாட்டத்தில் இருக்கும் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை/பேச்சு/கவிதைப் போட்டிகள் 29.06.2018 காலை 9.00 மணி முதல் தொடங்கி சென்னை இராணி மேரி கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த 80க்கும் மெற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தம் திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் வீதம் ஒண்பது மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாயினர். கவிதைப் போட்டிக்குத் “தமிழின் சக்தி” என்றும், கட்டுரைப் போட்டிக்கு “மொழிப்பற்றெங்கே விழிப்புற்றெழுக” என்றும் தலைப்புகள் கொடுக்கப்பட்டன. பேச்சுப் போட்டிக்கு தமிழ் மொழி வளர்ச்சி குறித்து விதவிதமான தலைப்புகள் அளிக்கப்பட்டன. இராணி மேரி கல்லூரியின் தமிழ்த்துறையுடன் தமிழக தமிழ்வளர்ச்சித் துறையின் சென்னை பிரிவும் சேர்ந்து நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியது. மதியம் 2.00 மணி அளவில் நிறைவு விழாவாக பங்களிப்புச் சான்றிதழ் வழங்கப்பெற்று தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநர் திரு. கோ.விசயராகவன் அவர்கள் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கியும், பரிசு பெற்ற மாணவர்களை வாழ்த்தியும் சிறப்புரை ஆற்றினார். இதே போட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரேநாளில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

படம்: பரிசுபெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியிருக்கும் மாணவர்களுடன் தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநர். துணை இயக்குநர், சிறப்பு இயக்குநர் மற்றும் இராணி மேரி கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர்.
-
மலேசியா நூல்கள் அறிமுகமும், குழந்தை எழுத்து உலகமாநாடும்
கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்
————————————————————————–
கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டம் – புதன் மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் : தலைமை:கலாமணி கணேசன், சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.
மலேசியா குழந்தை இலக்கிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன, முதல் குழந்தை எழுத்து உலகமாநாடு கோலாலம்பூரில் சமீபத்தில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் கலந்து கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார், சுப்ரபாரதிமணியன் பேசியதில் :
1. பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள் வாசிக்கும் இலக்கியம் )., 2. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம் 3, சிறுவர்கள் பற்றிய இலக்கியம் என பல்வேறு பிரிவுகள் இருப்பதை சிறுவர்கள் இலக்கியம் பற்றிச் சொல்லலாம். இன்று பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள் வாசிக்கும் இலக்கியம் ) அதிகமாக உள்ளது. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம் அதிகம் வரவேண்டும். அதுதான் ஆரோக்யமானதாகவும் சிறுவர்களின் படைப்புத்திறனைக்காட்டுவதாகவும் இருக்கும்.
சிறுவர் இலக்கியம் என்பது பெரியவர்கள் இலக்கியம் அல்லது பொது இலக்கியம் அல்ல. அது வயது அடிப்படையில் படைக்கப்படுவதை வெளிநாட்டுப்படைப்புகள் காட்டுகின்றன. தமிழில் அப்படி வருவபவை குறைவு.வயதிற்கேற்ப ரசனை, வாசிக்கும் திறன், இயல்பு காரணமாய் இந்த வித்யாசம் தேவை.
குழந்தை பருவத்தின் அடையாளங்கள் இன்றைய தொலைக்காட்சி மற்றும் நுகர்வுக்கலாச்சார முறையில் தொலைந்து நிற்பதை மீட்டெடுக்க வேண்டும்.. கைபேசி, அய் பேடு சந்ததியாக இன்றைய சிறுவர்கள் மாறாமல் இருக்க சிறுவர்கள் இலக்கியம் அதிகம் முன்னெடுக்கப்படவேண்டும். என்றார்.
புலவர் சொக்கலிங்கனார் “ இலக்கிய இன்பம் “ என்றத் தலைப்பில் சிறப்புரையாற்றினார். விஜயா நன்றி கூறினார்.
சுப்ரபாரதிமணியன் மாநாட்டில் படித்த கட்டுரை பின் இணைப்பில் தரப்பட்டுள்ளது.
maleesiyaa மலேசியா குழந்தை இலக்கியம் மாநாட்டில் நான் படித்தக் கட்டுரை.
குழந்தைகளும் குறும்படங்களும்: சுப்ரபாரதிமணியன்
திரைப்படங்களில் குழந்தைகளை முதிர்ந்தவர்களாக , அதிகம் பேசுபவர்களாக ( வயசுக்கு மீறியப் பேச்சு ), வயதுக்கு மீறிய சாகசங்களில் ஈடுபடுபவர்களாக்க் காட்டுகிறார்கள். குறும்படங்களில் யதார்த்தமானக் குழந்தைகள் காணப்படுகிறார்கள். இயல்பாக அவர்களின் பிரச்சினைகளூடே உலவுகிறார்கள்.
எங்களூரை இந்தக்கட்டுரைக்கு மையமாக எடுத்துக் கொள்கிறேன்.எங்களூர் குறும்படங்களில் குழந்தைகள் காட்டப்பட்டத் தன்மை குறித்து கொஞ்சம்.
முதலில் எங்களூரைப்பற்றி சில தகவல்கள்: இந்தாண்டு எங்களூர் திருப்பூருக்கு 100 வயது.. திருப்பூர் நூறாண்டைத்தொட்டு இருப்பது அது நகராட்சியாக உருவாக்கப்பட்டு இருப்பதைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது ( டிசம்.1, 1917 ) ஜன 1 2008 ல் மாநகராட்சியானது. . தற்போது பின்னலாடைத்துறை ஏற்றுமதியால் 30,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியைக் கொடுக்கும் நகரம். 18,000 கோடி ரூபாய் உள்நாட்டு வர்த்தகத்தால் பெறுகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் அது 1 லட்சம் கோடியாக உயரும் வாய்ப்புகள் உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கருதுகிறார்கள். பல்லடம் தாலுக்காவின் சிறு கிராமமாக ஒரு காலத்தில் இருந்தது இப்போது வந்தாரை வாழ வைக்கும் ஊர். நன்னீர் ஓடிய நொய்யல் இன்று மறைந்து போன நதியாகி விடும் அபாயம் உள்ளது. கரிசல் பூமியின் பருத்தி முன்பு நெசவாளர்களுக்கு வாழ்வு தந்தது இபோது பின்னலாடை மூலம் வேலை தேடி வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பைத் தந்து வருகிறது. சுதந்திரப்போராட்டம், தியாகி குமரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான தியாகிகள் இந்திய சுதந்திரத்தில் பங்காற்றிய ஊர். 2009ல் திருப்பூர் மாவட்டமாக உருவாகியிருந்தாலும் நகரின் கட்டமைப்பு, சுகாதாரம், கழிவு நீர் மேலாண்மை , சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தத்தளிக்கிறது
எங்களூர் திருப்பூர் இளம் குறும்படைப்பாளிகளின் களமாக விளங்கி வருகிறது. இளம் படைப்பாளிகளில் மிகவும் இளையவர் ரவிக்குமார்.. இவரின் இன்று நேற்று நாளை திரைப்படம் பெரும் வெற்றி கண்ட்து. லீவு, எட்டாம்வகுப்பு, கழல், எதிர்வினை, சுமங்கலி ஆகிய குறும்படங்களுக்குப் பின்பு இவர் இயக்கி வந்திருக்கும் 15 நிமிடக் குறும்படம் “கண்ணாமூச்சி”.தொடர்ச்சியாக அக்கரையுடனான செயல்பாட்டினால் “கண்ணாமூச்சி”யை வந்தடைந்திருக்கிறார் ரவிக்குமார்.
அவர் சார்ந்த பொதுவுடமை இயக்கச் செயல்பாடுகள் சமூகவியல் சார்ந்த முழு அழுத்தத்தைத் தரும் விஷயங்களையே இதுவரை அவரின் படைப்புகளாக்கியிருக்கிறது. விடுமுறைகூடக் கிடைக்காமல் பனியன் கம்பனியில் உழலும் சிறுவனைப் பற்றிப் படம் எடுத்திருக்கிறார். சரியான கல்வி வசதியும், உதவியும் இல்லாத ஒரு சிறுவன் தொழிற்சாலைக்குள் தள்ளப்படுவதைக் குறும்படமாக்கியிருக்கிறார். பல ஆசைகளில் உடம்பை நிர்மூலமாக்கும் மதுவின் தன்மை பற்றி ஒரு நிமிடக் குறும்படத்தில் காட்டியிருக்கிறார். பின்னலாடை, நூற்பாலைகளில் பதின்பருவப் பெண்கள் கொத்தடிமைகளாய் ஆக்கப்பட்டிருக்கும் கொடுமை பற்றி ‘சுமங்கலி’ பேசுகிறது. ’தழலில்’ சின்னச் சின்ன ஆசைகள் தலைமுறைகளைத் தாண்டி கடந்து போவதாக இருக்கிறது.
‘கண்ணாமூச்சியில் தலைமுறை இடைவெளி கடந்த தாத்தா பேரன் உறவு பற்றிய அழுத்தம் இருக்கிறது.சிறந்த சிறுகதைத் தன்மையை ‘கண்ணாமூச்சி’ அதன் திரைக்கதையாகப் பெற்றிருக்கிறது. திருப்பம் தரும் எதிர்வினை முத்தாய்ப்பாக அமைந்துவிட்டிருக்கிறது. தாத்தா பேரனிடம் கதை சொல்லும்போது யதார்த்த உண்மைகளை மீறி தனது வீரச்செயல்களுக்கான முத்திரையை நிறையச் சொல்லுவார். தனது ஆளுமையை நிலைநிறுத்த அது தேவையானது என்றிருப்பவர். நொய்யல் ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளம் பற்றி பேரனிடம் கதை சொல்கிறார். கதை கேட்டு பேரன் தாத்தாவுடன் நெருங்கியிருக்கிறான். அவனது நண்பன் செஸ்-ஸில் வெல்ல முடியாதவனாக இருப்பதாகக் காட்டி அவனைத் தாத்தா வெல்ல வேண்டும் என்கிறான். “நீங்க செஸ் சேம்பியன் ஆச்சே தாத்தா” … தலையாட்டிவிடும் தாத்தா வேறு வழியின்றி செஸ் கற்றுக்கொள்கிறார்.தனது பழைய நண்பன் ஒருவனை தேடிச்சென்று செஸ் நகர்வுகளைக் கற்றுக்கொண்டும் செஸ் பற்றிய புத்தகங்களை வாசித்தும் ஒருவார இடைவெளியில் பையனை ஞாயிறில் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் கற்றுக்கொள்கிறார். வீட்டில் பலரின் விமர்சனத்திற்கு ஆளாகிறார். “பேரன் கேட்டிருக்கிறான், என்ன செய்ய”? ஞாயிறில் அந்த செஸ் பையன் வருவதில்லை. பேரனுக்காகக் காத்திருந்து அலுத்துப்போகிறார் தாத்தா. கையில் பேட்டுடன் கிரிக்கெட் மைதானத்திலிருந்து வருகிறான் பேரன்.
” இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. செஸ் போட்டி உன் பிரண்டோட இருக்கே. எங்கடா அவன் பயந்து போயிட்டனா?”
“அதிருக்கட்டும் தாத்தா.” என்று கிரிக்கெட்டில் வீரனான அவனின் நண்பனான ஒருவனைக் குறிப்பிட்டு அவ்னைத் தாத்தா தோற்கடிக்க வேண்டும் என்கிறான்.
“தாத்தாதான் கிரிக்கெட்டிலும் சாம்பியனாச்சே”
“ஆமாமா”
காலச்சூழலுக்கேற்ப தன் நண்பர்களையே சக நடிகர்களாக்கி அந்த அனுபவங்களுக்குள் அமிழ்ந்திருக்கிற அவர்களை கதை மாந்தர்களின் மூலம் வெளிப்படுதுவதாய் தனக்கு நெருக்கமானவர்களை நடிக்க வைத்திருக்கும் ரவிக்குமார், அந்த நெருக்கமானவர்களின் பலவீனஙகளை கடந்து திரையில் வெளிப்படுத்த சிரமஙகள் பட்டிருந்தாலும் அவர்களின் அனுபவங்களை நடிப்பிற்கும் உரமாக்கிக் கொள்கிறார். சக மனிதர்களால் வெளிப்படும் படைப்பிற்கான தன்மை யதார்தத்திற்கு வெகு அருகாமையில் இருக்கிற்து. அந்த வகையில் ஜெயபால், கே.பொன்னுசாமி, நந்தகோபால், சபரி ஆகியோர் நடிப்பை சொல்லலாம். உயர்ந்த தொழில் நுட்பக் காமிராவைப் பயன்படுத்தியிருந்தால் இப்படத்தின் தரம் வெகுவாகக் கூடியிருக்கும். சதுரங்கபலகைக் காட்சிகள், பலருடன் விளையாடுவதைக் காட்டியிருப்பது, சூழலை சரியாகக் காட்சிக்குள் கொண்டுவருவதில் நேர்ந்த அக்கறை இருக்கிறது. அக்கறை கொண்ட தலைமுறை குதிரைப்பாய்சசலாய் விரைந்துகொண்டிருக்கிற்து.
எங்களூரில் அரிமா சங்கங்கள் மூலம் உதடுபிளவுக்கு பல குழந்தைகளுக்குச் சிகிச்சைகள் தரப்பட்டிருகிறது. அதற்கு சர்வதேச சமூக அமைப்புகள் உதவியிருக்கின்றன. அந்த வகையில் வடநாட்டில்
பிங்கிகுமாரி என்ற ஆறு வயது பெண்ணிற்கு நிகழ்ந்த சிகிச்சை பற்றி ஒரு படம் பற்றி :பிங்கி ஸ்மைல். இதைத் திரையிட்டு பல இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கிறோம்.
பிங்கிகுமாரி என்ற ஆறு வயது பெண்ணிற்கு உதட்டில் அமைந்த பிளவு முகத்தைக் கோரமாக்கி விட்டது. பள்ளிக்குச் செல்வதும், சமூக வாழ்க்கையில் சகஜமாக இருப்பதும் அவளுக்கு இயல்பானதாக இல்லாமல் போய்விட்டது. எதேச்சையாய் ‘ ஸ்மைல் ட்ரெயின் ‘ என்றத் தன்னர்வத்தொடு நிறுவனம் அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து நடத்திய 45 நிமிட அறுவைச் சிகிச்சை அப் பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறது. இது பற்றின விவரணப்படம் ‘பிங்கி ஸ்மைல் ‘ ஆஸ்கர் பரிசும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சார்ந்த மேகன் மைவன் என்ற பெண் இயக்குனர் இந்த 40 நிமிட படத்தை இயக்கியிருக்கிறார்.
உதடு பிளவு என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பதாகும். ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இது அதிகமாக உள்ளது. மரபியல் ரீதியான காரணங்களூம் இதற்கு உள்ளன. கர்ப்ப காலத்தில் தவறாக உபயோகப்படுத்தப்பட்ட மருந்துகள், கர்ப்ப நோய்கள், போதைப் பொருட்கள், மது பானங்கள் பயன்படுத்தியதன் விளைவாய் இந்த உதடு பிளவு பிறப்பில் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகின்றது..
பிங்கி குமாரியை ஒரு சமூக சேவகர் கண்டு பிடித்து இலவச அறுவைச்சிகிச்சைக்ககாக கூட்டிச் செல்வது பற்றி இப்படம் தெரிவிக்கிறது. ஸ்மைல்ட்ரெயின் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உதடு பிளவு போன்றவற்றுக்கான விழிப்புணர்வு, சிகிச்சையில் அக்கறை செலுத்தி இயங்கி வருகிறது இதற்கான சிகிச்சை குறித்து சமூகப் பணியாளர்கள் , பிங்கியின் தகப்பனார் இடம் விரிவாக எடுத்துச் சொல்கிறார்கள். அவர்களின் கிராமச்சூழலும், அங்கு பள்ளி செல்ல விடாமல் தடுக்கும் குழந்தைகளின் கேலியும் முன் வைக்கப்படுகின்றன். இதை சாப நோயாக எடுத்துக் கொள்ளும் முதியவர்களும் இருக்கிறார்கள். இதை மீறி பிங்கியை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்று வெற்றி பெற்றுத்திரும்பும்போது அப்பெண்ணுக்கு இயல்பாய் பள்ளிக்குப் போகும் சூழ்நிலையும் , மற்றவர்களுடன் பழகும் சகஜநிலையும் ஏற்படுகிறது. பிங்கியோடு சொகான் என்ற பையனுக்கு நேர்ந்த சிகிச்சை முறைகளும் அவன் தன்னம்பிக்கை பெற்று பள்ளி வாழ்க்கையைத் தொடர்வதி இந்தப்படம் சொல்கிறது.
இப்பிரச்சினை குறித்து விழிப்புணர்வின் அடையாளமாக இப்படட்த்தை எடுத்துக் கொள்ளலாம். ரசூல் பூக்குட்டி சிறந்த ஒளிப்பதிவுக்காக இப்படத்திற்கு ஆஸ்கார் பரிசு பெற்றிருக்கிறார். ஆனால் இந்தியாவில் கிடைக்கும் இப்படத்தின் பிரதியில் ஒளிப்பதிவின் பிரத்தியேகத்தன்மை இல்லாமல் சாதாரண கல்யாண வீடியோ காமிராவில் எடுக்கப்பட்டது போல படம் அமைந்திருப்பது அதிர்ச்சி தருகிறது, ஆஸ்கார் பரிசு பெற்ற ஸ்லம் டாக் மில்லினர் படம் பம்பாயைச் சார்ந்த விளிம்புநிலைக்குழந்தைகளை மையமாகக் கொண்டு அமெரிக்காவைச் சார்ந்தவர்களால் எடுக்கப்பட்ட படம். இந்தக்குறும்படமும் அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பெண் இயக்குனரால் , இந்தியாவின் பெனாரசைச் சார்ந்த ஒரு கிராமத்தினரை மையமாக வைத்து அங்கு விளிம்பு நிலையில் வாழும் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ரோட்டரி, அரிமா சங்கத்தினர் உதடு பிளவுக்கான இலவச சிகிச்சைகளை பல ஆண்டுகளாக தங்களின் சமூகப் பணியில் ஒன்றாக செய்து வருவதை இங்கு குறிப்பிடவேண்டும்.
பூக்குட்டி: தாண்டவக்கோனின் குறும்படம். திருப்பூரின் இன்னொரு குறும்பட முகம் ; யதார்த்த நிகழ்வுகளை திரைத் தொடர்பு மொழியில் நாடகீயமாக வெளிப்படுத்துவதில் இருக்கும் சுவாரஸ்யத்தின் பலத்தை திருப்பூர் தாண்டவக்கோனின் குறும்படங்களில் காண முடிவது ஒரு சிறப்பம்சமாகவே எனக்குத் தோன்றுகிறது. அவரின் சமீபத்திய ” பூக்குட்டி” குறும்படத்தில் இடம் பெறும் பல நிகழ்வுகள் அப்படி நாடகீயமாகியிருக்கின்றன.
தாண்டவக்கோனின் முந்திய படமொன்றில் உலக உருண்டை பிளாஸ்டிக பையில் அடைபடும் படிமத்தை ஒரு செய்தியாய் வெளிப்படுத்தியிருந்தார்.இதில் உடல் உறுப்பு தானம் என்ற செய்தி உணர்ச்சிகரமான நாடகமாக வெளிப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகரமான கலைஞர்கள் உணர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் மூலமே தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்.
தாண்டவக்கோனின் பிற குறிப்பிடத்தக்க குறும்படங்கள் ( சற்றே நீளமானவை ) :
பூங்கா, பேராண்டி . இனி பேராண்டி பற்றி
தாண்டவக்கோனின் குறும்பட படைப்புலகத்தில் குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். பள்ளி போகும் மூன்று குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவர்களின் உலகம், அவர்களின் பிரச்சனைகளை அவர் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களூடே பயணம் செய்து அவர்களில் உலகில் நடமாடவும், அவர்களின் பிரச்சனைகளில் பங்கு பெறவும், சிக்கல்கள் அவர்களுக்குள் பூதாகரமாகும்போது கைகொடுக்கவும் அவருக்கு இயல்பாகிறது. குழந்தை மனத்துடன் அவர்களை அணுகுவதற்கு ஏற்ற மனநிலையை உருவாக்குவது சாமான்யமல்ல; அந்த இயல்பான மனநிலையையும் பக்குவத்தையும் கொண்டவராய் அவர் இருப்பது படைப்பு நிலைக்கு வெகு சாதகமாகிறது. இந்த சாத்தியத்தை அவரின் முதல் குறும்படமான ‘பூங்கா’ முதல் விளிம்பு நிலையினரான ஊனமான குழந்தைகளின் பிரச்சி னைகளை முன் வைக்கிற “கை”, குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பற்றிய கல்வி பற்றிய “பாலிபேக்” அவற்றிலும் காணமுடியும்.
“பூங்கா”வில் அன்பிற்காக ஏங்கும் பெண் குழந்தை பக்கத்து வீட்டு ஏழை பையனுடன் கொள்ளும் நட்பு அன்பிற்கு அடைக்கலமாகிறது. “இப்படிக்கு பேராண்டி” படத்தில் இந்தச் சிறுவர்கள் குடும்பங்களின் மூத்தோரான தாத்தா பாட்டிகள் இல்லாத வெறுமையை உணர்ந்து அவர்களை தேடிக் கண்டடைகிறார்கள். இந்த ஏக்கத்தை நமக்குள்ளும் ஆழ விதைத்து விடுகிறார். இது அவரின் கலைத்திறனின் வெற்றியாக இருக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் பள்ளிக் காவலாளி ஒரு சிறு செடி தன் பராமரிப்பில் இருந்து தவறிப் போவதை கவனிக்கிற போது துணுக்குகிறார். அதை முதுமையான கைவிரல்களால் நிலத்தைக் கீறி பதியமிட்டு நீர் ஊற்றவும் செய்கிறார். இந்தப் பரிவை தடுக்கி விழுந்து சாப்பாட்டு கேரியரை சிதறடித்து விடும் சிறுவனிடமும் காட்டுகிறார். பெரியோரின் நேசம் இப்படித்தான் படத்தில் அறிமுகமாகிறது. அது காவலாளி என்ற நிலையிலிருந்து தாத்தா பாட்டி பற்றின ஏக்கமாக விரிகிறது. அவர்கள் இல்லாத உலகத்தை நினைத்து பூதாகரமாக்கிக் கொள்கிறார்கள். தாத்தா பாட்டி உலகில் தங்களுக்கான இடமில்லாதது பற்றி அழுகை இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க இயலாதபடி சூழல் இருக்கிறது (ஆனால் தனிப்பயிற்சி எடுக்கும் ஆசிரியையின் மகள் தன் எதிர்ப்பை சுலபமாகக் காண்பிக்கிறாள். கட்டாய நடனத்தை எதிர்த்த காமிக்ஸ் வாசிப்பில் என்ன தவறு என்று எதிர் கேள்வி எழுப்புகிறாள். அவளுக்குள்ளும் தாத்தா பாட்டி இல்லாத ஏக்கத்தை காமிக்ஸ்க்குள் அடக்க வேண்டியிருக்கிறது.)
குழந்தைகள் இருவரின் ஏக்கம் பெற்றோர்களைத் தொற்றுகிறது. கனவுகளுக்குள் நிரம்பி அதிர்ச்சியடைகிறார்கள். குழந்தைகள் தாத்தா பாட்டி புகைப்பட தேடுதலில் ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது. இதன் முடிவாய் தாத்தா பாட்டிகளை கண்டடைகிறார்கள்.
தாத்தா பாட்டி பற்றின ஏக்கங்களே குழந்தைகளின் பார்வையிலிருந்து விரிகிற வேளையில், தாத்தா பாட்டியின் பார்வையோ, நோக்கிலிருந்தோ குழந்தைகள் மீதான பாசம் குறித்து இன்றும் சில நெகிழ்வுகளை இப்படம் உள்ளடக்கியிருந்திருக்க வேண்டும். அது சமச்சீராக பாச வெளியின் விஸ்தாரத்தை குடும்பமெங்கும் விதைத்து விளைந்திருப் பதைக் காட்டியிருக்கும்.
இப்படத்தின் குளோசப் காட்சிகள் பலமாக அமைந் திருக்கின்றன ஆனால் அழுகை காட்சிகளில் எல்லோரும் “நாடக நடிகர்களாகி” விடுகிறார்கள். பகல், இரவு, கனவு காட்சிகளிலும் ஒரே விதமான முகப்பூச்சு, உடை தரம், ஒளி யமைப்பு உறுத்துகிறது குழந்தைகளின் நுண்ணிய உணர்வு களின் மத்தியில் தனிபயிற்சி எடுக்கும் ஆசிரியை கணவனு டன் மாணவர்களை உட்கார வைத்தபடி தேநீர் அருந்தும் குரோமும் தென்படுகிறது. திரைப்படத்தளம் என்பது ஏற் படுத்தும் அழுத்தமான சுவடுகளை விரல்களை எண்ணுவ திலிருந்து எதிர்ப்புக் குரலுக்காக போராட்ட ஊர்வலம் என்ற தொலைக்காட்சி பிம்பம் ‘தாத்தாபாட்டி வேணும்’ என்று கோசமிட்டபடி ஊர்வலம் செல்லும் வரைக்கும் நீள் கிறது.
இந்த வகை சாதாரண நிகழ்வுகளை யதார்த்த தளத் தின் சாதாரண இயல்பை மீறி திரைப்பட வடிவத்தில் அழுத் தமான காட்சிகளாக்குவதில் தாண்டவக்கோன் அவரின் பெரும் பான்மையான படைப்புகளில் வெளிப்படுத்துகிறார் (சமீபத் திய அவரின் சிறுகதையன்றிலும் இதை நுணுக்க மாக கவனிக்க முடிகிறது) வெறும் யதார்த்த தளம் மீறி சுவாரஸ்யப்படுத்தும் தன்மைக்கு இந்த வகை வெளிப்பாடு அவசியம். அந்த வகையில்தான் குழந்தை களின் குறும்புகள் கூட இடம் பிடிக்கின்றன. அழுகை என்பது குழந்தைகள் காதை மூடும் விபரீதமாகிறது. சித்தப்பா என்ற பணம் மற்றும் பொருள் குறித்த அக்கறை கொண்ட கதாபாத்திரம் கனவிலும் அதே போன்ற செய்கையை தான் வெளிப் படுத்துகிறது.
குழந்தைகளுக்கு ஏற்பட்ட சிறு விபத்து பற்றி அறிகிற தாத்தா மனநிலையும் பதட்டமும் ஊசியில் நூல் கோர்க்க முடியாத சிக்கலால் நுணுக்கமாகக் காட்டப்படுகிறது. அதிலிருக்கும் பதட்டம் அன்பு குறித்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத எல்லோருக்கும் ஏற்படும் அதிர்ச்சிப் படிமமே இப்படத்தின் சாட்சிகளாகும். பள்ளிக் காவலாளி முதல் மருத்துவர் வரை பலரும் பகிர்ந்து கொள்ளும் அறிவுரைகள், கருத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அவை குழந்தைகளுக்கான உலகில் அழுத்தம் விடயங்களாகி விடும் என்பதையும் கவனிக்க நேர்கிறது. தொழில் முறையற்ற நடிகர்களின் நடிப்புப் பயிற்சி பலவீனம் துருத்தித் தெரிகிறது. பலவீனத்தை உதற அவர்களும் முயற்சி செய்கிறார்கள். படத்தில் இழையோடும் சோகத்தை குழந்தைகளின் சேஷ்டைகளும் கதாபாத்திர உருவாக்க சுவாரஸ்யமும் தவிர்க்கச் செய்கின்றன. சோக இழையை தவிர்த்துக் காட்டும் முயற்சியாக படத்தின் எழுத்துக் காட்சியில் கதாபாத்திரங்கள் இயல்பாய் சிரித்து வெளிப்படுவது குடும்ப உறவுகளில் தென்படாத அன்பையும் நேசிப்பையும் நோக்கி எள்ளி நகையாடியே இருப்பதற்கான சாட்சிகளாகக் கூட கொள்ளலாம். குழந்தைகளின் உலகில் அவர்களுடன் நேசக்கரம் நீட்டும் முயற்சிகளில் தொடர்ந்து தாண்டவக்கோன் இயங்குவது படைப்புலகிற்கு வரப்பிரசாதம் தான்.
அன்பையும் பாசத்தையும் நெகிழ்வை யும் பகிர்ந்து கொள்வது அவரின் படைப்பின் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஆதாரத்தை தன் படைப்புகளின் அடிநாதமாக அவர் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் தொடர்ந்த செயல்பாடுகளில் அறிந்து கொள்ள முடிகிறது. அவர் இயங்குகிற கட்சி சார்ந்த செயல்பாடுகள், கலை இலக்கிய முயற்சிகளில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் குழந்தைகள் பற்றிய அக்கறையிலிருந்து தொடங்கப்பட வேண்டிய செயல்களின் ஆதாரங்களை சுட்டிக் காட்டியபடியே இயங்குகிறார் அவர்.(பேராண்டி, குறும்படம். இயக்கம் : தாண்டவக்கோன், திருப்பூர்)
இந்த இரு திருப்பூர் இயக்குனர்களின் படங்களே இந்தியக் குழந்தைகளின் உண்மை முகங்களாய் விளங்குபவை. இவை தமிழ்க் குறும்பட உலகில் முக்கியத்துவம் பெற்றதற்குக் காரணம் அவற்றை யதார்த்த நம்பகத்தன்மையும் ஊடக மொழியை சரியாய் கையாண்டிருப்பதும்தான். அன்பையும் பாசத்தையும் நெகிழ்வை யும் பகிர்ந்து கொள்வது குறும்படப் படைப்பின் ஆதாரமாக இவ்வகையில் இருக்கிறது
சுப்ரபாரதிமணியன்,8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602
9486101003 * subrabharathi@gmail.com
-
மக்கள் சிந்தனைப் பேரவையின் ‘ அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது ’
மக்கள் சிந்தனைப் பேரவையின்
‘ அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது ’
ஈரோடு புத்தகத்திருவிழாவில் வழங்கப்படுகிறது.
————————————————————————————————————————————–
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இளம் அறிவியலாளர் ஒருவருக்கு ‘ அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது ’ வழங்கப்படுகிறது. இவ்விருது பாரட்டு மடல் , தகுதிப்பட்டயம் ஆகியவற்றோடு ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையையும் உள்ளடக்கியதாகும்.
விருதாளர் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு முயற்சிகளில் வெற்றிபெற்றவராக விளங்க வேண்டும்.
தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலுள்ள ஆய்வுக் கூடங்களிலோ அல்லது அங்கிகரிக்கப்பட்ட வேறு ஆய்வுக் கூடங்களிலோ ஆய்வுகள் மேற்கொண்டவராகத் திகழ்வதோடு பெயர் பெற்ற அறிவியல் இதழ்களில் இதுவரை இவரது 10 ஆய்வுக்கட்டுரைகளாவது வெளிவந்திருக்க வேண்டும் .
இத்தகைய அடிப்படைத் தகுதிகள் உள்ளவர்கள் தனது ஆய்வுகள் குறித்த அனைத்துக் குறிப்புகளையும் அனுப்பி வைப்பதோடு எந்தக் கண்டுபிடிப்புக்கு அவர் விருதுக்குரியவராக விளங்குகிறார் என்பதையும் தனியாகக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
அறிவியல் துறையில் மிகமுக்கிய ஆளுமைகளாக விளங்குகிற ஐந்து மூத்த அறிவியலாளர்களடங்கிய தேர்வுக்குழுவே விருதாளரைத் தேர்வு செய்யவுள்ளது. இது தமிழகம் தழுவிய விருது என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்களில். எவரும் தங்களது குறிப்புகளை அனுப்பிப் பங்கேற்கலாம்.
ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுக் குறிப்புகளையும் ஆய்வு தொடர்புள்ள அனைத்து ஆவணங்களையும் 20.07.2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள ஈரோடு புத்தகத் திருவிழா மேடையில் இவ்விருதளிப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்பு முகவரி : மக்கள் சிந்தனைப் பேரவை , A 47 – சம்பத் நகர் , ஈரோடு – 638 011. மின்னஞ்சல் : info@makkalsinthanaiperavai.org
தொடர்பு எண் : 0424 – 2269186 , 94891 23850
————————————————————————–














