வல்லமை மின்னிதழ் இணைந்து நடத்தும் நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்-பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்
காஞ்சிபுரம், ஏனாத்தூர் ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
மலேசியா, மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை,
மலேசியா, உலகத் தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம்,
விருபா . காம்
வல்லமை – ஆய்வு மின்னிதழ்
இந்து தமிழ் திசை நாளிதழ்
இணைந்து நடத்தும்
நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்
பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கமும்
படைப்பரங்கமும்
பேரன்புடையீர் வணக்கம்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டு வெள்ளிவிழா கண்ட ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிரந்தர இணைப்புப் பெற்றுள்ளதுடன் 2014 முதல் தன்னாட்சிப் பெற்ற நிறுவனமாகவும் விளங்கிவருகிறது. மேலும், தேசிய தரமதிப்பீட்டுக் குழுவால் ‘A’ உயர்தரத் தகுதியும், AICTE குழுவினால் அங்கீகாரமும் பெற்றுள்ளதுடன் ISO 9001-2008 தரச்சான்று பெற்ற கல்லூரியாகவும் திகழ்கின்றது. இத்தகு பெருமைமிகு கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தமிழாய்வுக்கு வளம்சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் பன்னாட்டுக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இவ்வாண்டு மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், விருபா.காம், வல்லமை ஆய்வு மின்னிதழ், இந்து தமிழ் திசை நாளிதழ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நதிகளும் தமிழ்ச் சமுதாயமும் என்ற பொருண்மையில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கையும் படைப்பரங்கையும் நடத்துகிறது.
நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்
உலக நாகரிகங்கள் நதிக்கரைகளைத் தொடர்புப்படுத்தியே அறியப்படுகின்றன. இமயம் முதல் குமரி வரை பரவியுள்ள பாரத தேசத்திலும் தொன்மங்கள், புராதனச் சடங்குகள், நம்பிக்கைகள், புனித பயணங்கள் யாவும் பெரும்பான்மையும் நதிகளோடு தொடர்புடையன. இன்றைக்கு மனித சமூகம் நதிகளிடமிருந்து அந்நியமாகி வந்தபோதும் அவர்களது வாழ்வோடும் ஆழ்மனத்தோடும் தொடர்ந்து நதிகள் ஆட்சிபெற்றுவருகின்றன. எனவே, நதிகள் அவர்களது படைப்புகளிலும் செயல்களிலும் காலந்தோறும் வெளிப்பட்டுவந்துள்ளன. இந்த சூழலில் எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தாமிரபணி மஹாபுஷ்கரம் என்னும் புனித நீராடல் பெருவிழா நடைபெற இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு ‘நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்’ என்ற பொதுத்தலைப்பில் இந்த ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கையும் படைப்பரங்கையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் தமிழ்ச்சமூகம் நதிகளோடு கொண்டிருந்த உறவையும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டையும் அதன்வழி பண்பாட்டு விழுமியங்களையும் வெளிப்படுத்த விரும்புகிறோம். இது தமிழரின் நீர்மேலாண்மை அறிவையும் இயற்கையோடு இயைந்த வாழ்வையும் வெளிப்படுத்துவதோடு எதிர்கால சிந்தனைகளையும் விதைக்கும் என நம்புகிறோம்.
பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்
இக்கருத்தரங்கில் பேராளர்கள் சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரைகள், நாட்டுப்புற இலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நெடும்பரப்பு முழுவதிலிருந்தும் நதிகள் சார்ந்த பதிவுகளைத் தொகுத்தும் பகுத்தும் தனித்தும் ஆராய்வதாகவும் அவற்றின் வழி தமிழ்ச் சமூகத்தின் விழுமியங்களை ஆராய்வதாகவும் கட்டுரைகள் எழுதலாம். மேலும், தொல்லியல் ஆய்வுகள் வழி அறியலாகும் நதிகள் குறித்த செய்திகள் தொடங்கி, நதிகளோடு தமிழர்கள் கொண்டிருந்த சடங்குகள், நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்கள் சார்ந்த பொருண்மைகளோடு நதிகளின் இன்றைய நிலை வரையிலான கருத்தாக்கங்களில், பல்துறை அணுகுமுறைகளில் கட்டுரைகள் அமையலாம். இதற்கு பதிவுக் கட்டணமாக ஆய்வாளர்கள் உரூ. 500ம், பேராசிரியர்கள், பிறர் உரூ. 700ம் செலுத்தவேண்டும். தேர்வுபெறும் அனைத்துக் கட்டுரைகளும் கருத்தரங்க நாள் அன்று சான்றிதழுடன் நூலாக்கம் செய்யப்பெற்று அளிக்கப்பெறும்.
வரைவோலை எடுக்க வேண்டிய முகவரி
PRINCIPAL
Sri Sankara Arts & Science College, AUTONOMOUS
Enathur, Kanchipuram.
நூலாகும் ஆய்வுக் கட்டுரைகளில் அமைப்புக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் மட்டும், கட்டணம் ஏதுமின்றி இந்திய தேசிய பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழான வல்லமை இணைய இதழிலும் வெளியிடப்பெறும்.
பன்னாட்டு படைப்பரங்கம்
நதிகளும் தமிழ்ச் சமுதாயமும் என்ற பொருண்மையில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்குவது போலவே, தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் நதிகள், நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கட்டுரைகள், கவிதைகள் எழுதி அனுப்பலாம். இதற்குத் தனியே கட்டணம் ஏதும் இல்லை. தேர்வு செய்யப்பெறும் படைப்புகள் மட்டும் நூலாக்கி படைப்பரங்க நாளில் வழங்கப்பெறும்.
வந்து சேரும் இருவகை படைப்புகளிலும் அறிஞர் குழுவால் தேர்வு செய்யப்பெறும் முதல் மூன்று படைப்புகளுக்குப் பரிசுகளும் விழா மேடையிலேயே வழங்கப்படவுள்ளன.
அனுப்பும் முறை
ஆய்வுக் கட்டுரைகளும் படைப்புகளும் ‘யுனிகோடு’ எழுத்துருவில் (UNICODE FONT) 12 என்ற எழுத்தளவில் 1.5 வரி இடைவெளியுடன் தட்டச்சு செய்து A4 தாளில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் கணினித் தட்டச்சு செய்து அதன் மென்படியை thamirabaranisankara@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
அதன் காகிதப் படியைப் பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
ஜெ.இராதாகிருஷ்ணன்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறைத் தலைவர்
ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
தன்னாட்சி,
ஏனாத்தூர், காஞ்சிபுரம் – 631561.
தொலைபேசி : 044 – 27264066 (Ex 42)
thamirabaranisankara@gmail.com
கைப்பேசி : 9486150013, 9786985451
வோ்களைத் தேடிச் செல்லும் உங்கள் கருத்தரங்க முயற்சிக்குப் பாராட்டுகள்.