இன்னம்பூரான்

2018-09-18

மக்களை கட்டி மேய்ப்பது எளிது அன்று. உயிரினங்களில் மனித இனம் மட்டும் தான் கட்டுப்பாடு இல்லையெனில் ஊரையே மேயும்.கரையை கரைக்கும். மரையை கழட்டும். கூறையை பிரிக்கும். சூறையாடும். கூறு போடும், பொது சொத்தை.

சிங்கம், புலி, புரவி, எருது, பசு மாடு எல்லாவற்றின் மீதும் ஆளுமை செலுத்தும் மனிதனை அவனுடைய தனயன் கூட மதிக்காததைக் கண்கூடாக பர்க்கிறோம். மனித இனம் கூடி வாழ்வதை விரும்புகிறது. அதற்காக, தன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கி வைக்கவும் கற்றுக்கொள்கிறது. அது சமுதாய நலன் பொருட்டு இன்றியமையாத தியாகம் என்று தோன்றினாலும், உண்மையில் தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளும் தந்திரம் எனலாம். சமுதாய நலனும், சுயநலமும் ஒரே பாட்டையில் பயணிக்க இயலவில்லை என்றால், உதட்டளவில் சமுதாய நலம் நாடி, செயலில் சுயநலம் தேடி இயங்குபவர்களை சமூக விரோதிகள் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை. நீதி அவர்களை இனம் கண்டு தண்டிக்கவேண்டும். நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது கூட ஒரு உருவகம் தான். பாரத தேசமும், குறிப்பாக தமிழகமும் தொன்மையானவை, அவற்றின் வரலாறு, இலக்கியம், தத்துவம், கலாச்சாரம்,பழமை ஆகியவை போற்றத்தக்கவை என்பது போல கிரேக்க/ ரோமானிய வரலாறு, இலக்கியம், தத்துவம், கலாச்சாரம்,பழமை ஆகியவையும் போற்றத்தக்கவை என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை.

ஜஸ்டியா அகஸ்டா என்ற ரோமானிய நீதி தேவதை ஒரு அலங்கரிக்கப்பட்ட அரியாசனத்தில் அமர்ந்து அருள் பாலிப்பது ஜனவரி மாதம் 8ம் தேதி 13 கி.மு. முதல் ஒரு ஆலயத்தைல் துவக்கப்பட்டதாக ரோமானிய தொன்மை கூறுகிறது. அகஸ்டஸ் என்ற ராஜாதி ராஜன் தான் நீதி தேவதையை நிர்மாணித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அவள் திறந்தக் கண்ணிளாள். கி.பி. 16ம் நூற்றாண்டில் தான் அவளது கண்மலர்கள் மூடப்பட்டன, பாரபக்ஷமில்லால் இயங்குபவள் என்பதை முன்னிறுத்த. அவளுக்கு செல்வம், அதிகாரம், பதவி ஆகியவற்றுக்கு முக்கியத்வம் கொடுக்கத் தெரியாது. கண்கட்டுடன் காணப்படும் நீதி தேவதை முதலில் ஸ்விட்சர்லாந்தில் பெர்ன் நகரில் 1543ல் அவதரித்தாள். லண்டனில் இருக்கும் ஓல்ட் பெய்லி நீதி மன்றம் பழமையானது மட்டுமல்ல; பிரபல வழக்குகள் அங்கு மன்றாடப்பட்டன. அங்கு அருள் பாலிக்கும் நீதி தேவதைக்கு ‘கண்மூடி’ கிடையாது. அந்த கோர்ட்டாரின் தலபுராணம் நல்லதொரு விளக்கம் தருகிறது. புராதன ரோமானிய தேவதை விழிப்புடன் தான் இருந்தாள். அவள் ஒரு கன்னிகை தேவதை என்பதால் பாரபக்ஷமின்மைக்கு உத்தரவாதம் உளது என்கிறது. இப்போது தேவதா விசுவாசத்தை சற்றே நகற்றி வைத்து விட்டு, நீதி பரிபாலனத்தைப் பற்றி சில வரிகள்.

மக்களை கட்டி மேய்க்க சமுதாய விதிகள் தேவை. அவற்றில் சில வேலியை மேய்க்கும் என்பது வரலாறு

அடிக்கடி கூறும் கசப்பான உண்மை. கட்டை பஞ்சாயத்து முரட்டுத்தனமாக குருட்டு நீதி வழங்குவதை ஊடகங்கள் அவ்வப்பொழுது சன்னமான குரலில் எடுத்துரைக்கின்றன. பிறகு யாவரும் மறந்து விடுவார்கள். சில சமுதாயங்கள் சட்டம் அனுமதிக்கும்/ வரவேற்கும் கலப்பு மணங்களை தடை செய்யும், சட்ட விரோதமான வன்முறை எதிர்ப்புக்களை கண்டு கொள்ளாது. அரசாங்கம் என்றதொரு அதிகார மையம் இருந்தால், சமுதாய நலன் அக்கறையுடன் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. விதிகள், அதற்கேற்ப இயற்றப்படும்; அவற்றை அரசு நிர்வகிக்கும்; நீதி மன்றங்கள் சட்டத்தை பாதுகாக்கும். மாண்டெஸ்கோ என்ற சிந்தனையாளர் Separation of Powers என்று எழுதிய அரசியல் கோட்பாடுகளை இதற்கு முந்திய ஒரு வரியில் அடக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே தொடரவேண்டி இருக்கிறது. இது ஒரு முகாந்திரம் மட்டுமே.

(தொடரும்)

சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/b/ba/NewarkJustice1.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.