இந்திய ஜனநாயகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

நாகேஸ்வரி அண்ணாமலை

 

இன்றைய தேதியிட்ட (செப்டம்பர் 18) ‘இந்து’வில் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்திருக்கிறது.  இந்தச் செய்தி வேறு எந்த இடத்திலிருந்து வந்திருந்தாலும் நான் நம்பியிருக்க மாட்டேன்; ஒரு பொறுப்பான பத்திரிக்கையான இந்துவிலிருந்து வந்தது என்ற ஒரே காரணத்திற்காக அதை நம்பித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

பீகார் மாநில ஜார்கன்டில் உள்ள கோத்தா மாவட்டத்தில் நடந்த ஒரு செயலை நினைத்துப் பார்க்கவே குமட்டுகிறது.  கோத்தா மாவட்ட, பி.ஜே.பி.யைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் துபே அங்கு ஒரு பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டச் சென்றிருந்தபோது நடந்த சம்பவம் இது.  நிகழ்ச்சி முடிந்து துபே தன் பேச்சை முடித்துக்கொண்டதும் ஒரு பி.ஜே.பி. கட்சித் தொண்டர் ஒருவர் ஒரு பித்தளைத் தட்டில் தண்ணீர் கொண்டுவந்து துபேயின் பாதங்களைக் கழுவி ஒரு துண்டால் துடைத்துவிட்டுப் பிறகு அந்தத் தண்ணீரை குடித்தாராம்!  அதைக் கண்டு அங்கு கூடியிருந்த கூட்டம், ‘பவான் பாய் ஷா வாழ்க’ என்று கரகோஷம் செய்து அந்தத் தொண்டரை வாழ்த்தியதாம்.  “நான் தவறு எதுவும் செய்யவில்லையே.  அவர் என்னுடைய அண்ணன் போன்றவர், அவரிடம் எனக்கிருக்கும் மரியாதையை இப்படிக் காட்டுகிறேன்” என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினாராம் ஷா. அந்தப் பாராளுமன்ற உறுப்பினரும், “இதில் என்ன தவறு? அவர் அப்படிச் செய்து என்னிடம் அவருக்குள்ள மரியாதையைக் காட்ட விரும்பினால் எந்தத் தவறும் இல்லை” என்றாராம்.  குடியாட்சி இருந்த காலத்தில்கூட மன்னர்களிடம் மரியாதையை இப்படி யாரும் காட்டினார்களா என்று தெரியவில்லை.  இந்தியாவில் குடியாட்சி மலர்ந்து 68 வருடங்கள் ஆகிவிட்டன.  இன்னும் முடியாட்சியில் கூட இல்லாத இந்த வழக்கத்தைப் பின்பற்றுகிறோம்.  நம் மக்களுக்குக் குடியாட்சி தேவைதானா என்ற கேள்வி எழுகிறது?

இந்தியாவின் இன்னொரு மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து வந்த ஒரு செய்தி.  சொத்துக் குவிப்பு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றதாலேயே குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு சிறைக்குச் செல்ல வேண்டியவர். சில அரசியல் காரணங்களுக்காக எழுதப்பட்ட தீர்ப்பு அறிவிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டதால் அவர்  சிறைக்குச் செல்லாமல் தப்பித்துக்கொண்டவர்.  இவருக்கு இந்தியாவின் குடிமக்களுக்குக் கொடுக்கப்படும் உச்ச விருதான ‘பாரத ரத்னா” விருதை வழங்க வேண்டும் என்று இப்போது தமிழ்நாட்டை ஆண்டுவரும் அம்மையாரின் கட்சியைச் சேர்ந்த அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது.   இப்படிப் பரிந்துரைப்பதின் மூலம் தமிழ்நாடு அரசு என்ன சொல்ல முயற்சிக்கிறது?  அம்மையார் செய்த ஊழல் அப்படியொன்றும் பெரிய ஊழல் அல்ல; அதை மன்னிப்பதோடு கௌரவிக்கவும் செய்ய வேண்டும் என்கிறதா?  அப்படியானால் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்புக் கூறியதை யாரும் கண்டுகொள்ள வேண்டியதில்லை என்கிறதா?  இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அம்மையாருக்குப் ‘பாரத ரத்னா’ விருதை வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அம்மையாரின் கண்மூடித் தொண்டர்களின் ஓட்டுக்கள்தான்.  அது எப்படிக் கிடைத்தால் என்ன.

அம்மையாருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஊழல் புரிந்துள்ள பீகாரைச் சேர்ந்த லாலு பிரசாத்திற்கு மன அழுத்தமாம்!  மருத்துவமனையில் எல்லா வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு இரவில் தெரு நாய்கள் குரைக்கும் தொல்லை தாங்க முடியாததால் தன்னுடைய தூக்கம் கெடுகிறது என்று குறை கூறிக்கொண்டும் வாழ்ந்துவரும் லாலுவுக்கு இப்போது மன அழுத்தமாம்.  அரசியலில் இருக்கும், ஒருவரொடொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் தன்னுடைய இரண்டு மகன்களைப் பற்றிக் கவலைப்படுகிறாராம்.  இந்தக் கவலைகளினால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு இவருக்கு மனநோய் மருத்துவர்கள் உதவப் போகிறார்களாம்.  பல லட்சங்கள் அரசுப் பணத்தைக் கையாடி அரசுக்கும் மக்களுக்கும் பெரும் நஷ்டம் விளைவித்த இவருக்கு ராஜ வைத்தியம் நடக்கிறது.

இந்தியா என்ற ஜனநாயக நாட்டில் ஊழல் புரியலாம்; அரசுப் பணத்தைக் கொள்ளையடித்து சொகுசாக வாழலாம்.  யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை . இதுதான் இந்தியச் சுதந்திரம் கற்றுக்கொடுக்கும் பாடமா?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.