கவிஞர் பசுபதி

கனடா,

செப்டம்பர் 1 2018

இன்றுகாலை சந்தவசந்தம் இணையக் குழுவின் சந்திப்பு கனடாவில் உள்ள மிஸ்ஸிஸாகாவில் கவியோகி வேதம் அவர்கள் ஏற்பாட்டில் அவரது மகன் ஸ்வாமிநாதன் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இச்சந்திப்பில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியைப் பற்றியும் அதில் கலந்து கொள்பவர்களைப் பற்றியும், சந்தவசந்தத் தலைவர் “கவிமாமணி இலந்தை ராமசுவாமி அவர்கள் தம் அற்புதக் கவிதைகள் மூலம் எடுத்துக் கூறினார். கவிஞர்களை அவர் வெவ்வேறு சந்த ஓசையில் அழைத்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அரங்கில், முதல் நிகழ்வாக கவியோகி வேதம், பசுபதி, அனந்த் ஆகிய மூன்று கவிஞர்களுக்குக் “கவிப்பெருஞ்சுடர்” என்னும் சந்தவசந்தக் குழுமத்தின் விருதுகள் வழங்கப் பட்டன. புதுச்சேரியில் இருந்து சிவசிவா என்னும் கவிஞருக்குச் சேர வந்திருந்த பாவலர்மணி விருதுப் பட்டயத்தைச் சந்தவசந்தத் தலைவரே பெற்றுக் கொண்டார். அதற்கடுத்து, “இயலிசை அரங்கம்” மிகச் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர்கள் அனந்த், பசுபதி, இலந்தை, வேதம் ஆகியோர் தாங்கள் எழுதிய இசைக் கவிதைகள் பற்றிப் பேசி, அவற்றின் ஒலியையும் (பாடல்மூலம்) இசைத்துக் காட்டினார்கள். மிகஅழகாக, இனிமையாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

அடுத்த நிகழ்வாகக் கவிதையில் சித்திர விசித்திரங்கள் என்னும் மிக அழகிய நூல் புத்தகம் வெளியானது. வெளியீடு செய்து பேராசிரியர் சங்கரன் நகைச்சுவை கூடிய சிறப்பான உரையை வழங்கினார். புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு கவிஞர் சௌந்தர் அவர்கள் மிகஅற்புதமான, விரிவான மதிப்புரை நிகழ்த்தி, அதோடல்லாமல் ஒரு சிறப்பான “மிறைப்பா”வையும் வழங்கினார்.  நல்ல ஆய்வு அது! நேரத்தின் அருமை கருதி இலந்தை, வேதம், பசுபதி ஆகியோர்.. முறையே “விருத்தம் எழுத வருத்தம் எதற்கு?” “கவியோகியின் அற்புதப் படைப்புகள்” “சங்கச்சுரங்கம்” நூல்கள் பற்றி ஒரு நிமிடம் பேசினார்கள். கவிப்பெருஞ்சுடர் அனந்த் அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு திருமதி பிரபா ஸ்வாமிநாதன் அவர்களின் மிகச் சுவையான சுவையரங்கத்துடன் விழா இனிதே நிறைவுற்றது..

வாழ்க கனடாக் கவியரங்கம்!

விருதளிக்கும் படங்கள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.