நலம் .. நலமறிய ஆவல் – 124
நிர்மலா ராகவன்
மகிழ்ச்சி எங்கே?
ஒரு மாலைப்பொழுதில் தெருவில் போக்குவரத்து நெரிசல். காரில் பயணித்தாலும், எல்லோருடைய முகத்திலும் சோர்வு. பிடிக்காத உத்தியோகமா, இல்லை, `வாழ்க்கையில் உல்லாசமே இல்லாமல் போய்விட்டதே!’ என்ற விரக்தியா என்று என் யோசனை போயிற்று.
முப்பது வயதிற்குமேலும் கலகலப்பாக ஒருவர் இருந்தால், பார்ப்பவர்கள் `சிறுபிள்ளைத்தனம்!’ என்று முகத்தைச் சுளிப்பார்களோ என்று பயந்தே பலரும் கடமை, பொறுப்பு என்று வாழ்க்கையைக் கழித்துக்கொண்டு, எப்போதும் ஏதோ பாரம் வந்து தலையில் இறங்கினாற்போல் காணப்படுவார்கள்.
பெற்றோரின் எதிர்பார்ப்பால் சிலர் – அனேகமாக, குடும்பத்தில் மூத்த குழந்தைகள் – கடமை உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள்.
கதை
“நீதான் மூத்தவள். நீ ஒருத்தி படித்து முன்னுக்கு வந்துவிட்டால் போதுமா? உன் தங்கைகள் உன்னைவிட புத்திசாலிகள்!” என்ற தாயின் வார்த்தைகளை ஏற்றாள் ரெஜினா. அதனால் ஏற்பட்ட வருத்தத்தை நெருங்கிய தோழிகளிடம் மட்டும் பகிர்ந்துகொண்டாள்.
இரு தங்கைகளும் மருத்துவர்களாக, ரெஜினாவோ, பள்ளிப்படிப்புடன் நிறுத்திக்கொள்ள நேரிட்டது.
பல வருடங்கள் ஆன பின்னரும், தன் மகிழ்ச்சிக்காக ஏதாவது செய்துகொண்டால் குற்ற உணர்வே மிகுந்தது. வெளியில் எங்காவது போகவேண்டுமானால், அவளுக்குச் சில நாட்களாவது முன்னெச்சரிக்கை கொடுக்கவேண்டும். எது செய்யும் முன்னரும், `விளைவு எப்படி இருக்குமோ!’ என்று சிந்தனை போனதன் விளைவு.
உல்லாசம், கேளிக்கை இதெல்லாம் சிறுவர்களுக்கு மட்டும்தானா?
கோலாலம்பூரிலிருந்து நாற்பத்து ஐந்து நிமிடங்களில் அடைந்துவிடக்கூடிய கெந்திங் மலை (GENTING HIGHLANDS) `பார்க்க வேண்டிய இடம்!’ என்று வெளிநாட்டுப் பயணிகள் கூடுகிறார்கள். இங்கு வித விதமான கேளிக்கைகள். (காசினோ என்ற சூதாடும் இடத்தைக் குறிக்கவில்லை).
ராட்டினத்தில் இருந்த குதிரைமேல் சவாரி செய்ய, அது பக்கவாட்டில் தொண்ணூறு பாகையில் (degree) பறந்து, திடீரென கீழே சரிவதுபோல் இருக்கும். தெரியாத்தனமாக நான் ஒரு முறை அதன்மேல் ஏற, ஒவ்வொரு சுற்றிலும் மேலே இருந்து கீழே இறங்கும்போதெல்லாம் கண்ணை இறுக மூடிக்கொண்டேன். புவியின் ஈர்ப்பு இல்லாது இருதயம் தொண்டைக்குள்ளேயே போவதுபோன்ற உணர்ச்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது.
ஆனால், சிலருக்கு அந்த அனுபவம் வேண்டியிருக்கிறது.
புடவை அணிந்த ஓர் இந்திய மாது ஒவ்வொரு சுற்றிலும் தலையைப் பின்னால் சாய்த்து, வாயைப் பிளந்து சிரித்ததைப் பார்த்து அதிசயமாக இருந்தது. ஐம்பது வயது இருக்கலாம். `இந்த வயதில் என்ன சிரிப்பும், விளையாட்டும்!’ என்று பிறர் கண்டனம் செய்வார்களே என்று பயந்து, அடக்கமாக இருந்திருக்க வேண்டிய நிலையோ!
`உல்லாசம் எங்கே?’ என்று தேடுபவர்கள்— குறிப்பாக இளைய வயதினர் – தகாத காரியங்களில், ஆபத்தான விளையாட்டுகளில், ஈடுபடுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், தாம் ஓட்டும் வாகனங்களைத் தலை தெறிக்க ஓட்டினால்தான் மகிழ்ச்சி பிறக்கும். இதனால் பிறருக்கும் ஆபத்து விளையும் என்ற முன்யோசனை அவர்களுக்கு ஏன் எழுவதில்லை? `நாம் மகிழ்ந்தால் போதும், பிறர் எப்படிப் போனால் நமக்கென்ன!’ என்ற அசிரத்தை.
கசப்பான வாழ்க்கை
`எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கவில்லை. நினைத்தாலே பூரிப்பு அடையும்படி எதுவும் கிடையாது!’ என்று அரற்றுபவர்களிடம் ஒரு பொதுவான குணத்தைப் பார்க்கலாம். அத்தகையவர்கள் எதிலாவது தோல்வி அடைந்தால் அதையே நினைத்து மறுகிக்கொண்டிருப்பார்கள்.
தோல்வி ஏன்?
`யாருமே என்னை உற்சாகப்படுத்ததால்!’ என்றுதான் பலரும் குறைகூறுவார்கள். தன்னிடம்தான் ஏதோ குறை இருக்கிறது என்று எவரும் ஒப்புக்கொள்வதில்லை.
நாம் செய்வதற்கெல்லாம் பிறரது உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தால், அவர்கள் வேண்டுமானால் பெருமையாக உணரலாம். ஆனால் சுயமுயற்சிக்கு மாற்று கிடையாது. உங்கள் முன்னேற்றத்தில் உங்களைவிட வேறு யாருக்கு அதிக அக்கறை?
பிழைக்கத் தெரிந்த சிலரே காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு, மகிழ்ச்சி குன்றாது வாழ்கிறார்கள்.
நாட்டு நடப்பு
`விலைவாசி ஏறிவிட்டது, எவரும் நான் விற்கும் பொருளை வாங்குவதில்லை!’ என்று பல வியாபாரிகளும் முனகுவார்கள். பொருளாதாரம் அப்படியே இருக்குமா?
ஆன்மிகப் புத்தகங்கள் விற்கும் ஒருவர் தன் கடையை வீடியோ விற்கும் கடையாக மாற்றினார். நல்ல லாபம் வந்தது. கள்ள விசிடி விற்பனை செய்து ஒரு முறை மாட்டிக்கொண்டவர், அதையே பலசரக்குக் கடையாக மாற்றினார். மனிதர்கள் உயிர் வாழ சாப்பாட்டுச் சாமான்கள் வாங்கித்தானே ஆகவேண்டும்!
ஆத்திரக்காரன்
சரியான திசையில் பயணிக்கும் ஒரே ஒருவன் `இதுதான் நியாயம்!’ என்று எல்லாவித அநீதியையும் ஆத்திரத்துடன் எதிர்ப்பான். இவ்வாறு ஆத்திரத்தை மட்டுமே வெளிக்காட்டுபவன் சீக்கிரமே தன் மதிப்பை இழந்துவிடுவான். தகுந்த சமயத்தில் ஆத்திரத்தை வெளிக்காட்டுவது மட்டுமே பலனை அளிக்கும். (உதாரணம்: ஒரு படத்தில் கதாநாயகன் ஆரம்பத்திலிருந்து ஆத்திரத்துடன் பலபேருடன் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார். இறுதிக்காட்சியில் உத்வேகம் சற்று அதிகம். பார்ப்பவர்களுக்கு அலுப்புதான் மிஞ்சியது).
திறமையே பாரமாகிவிடும் அபாயம்
நுண்கலை பயிலும் தம் குழந்தைகளை `ஓயாமல் பயிற்சி செய்!’ என்று விரட்டும் தாயோ, அல்லது அடித்தாலும், திட்டினாலும்தான் திறமை அதிவிரைவில் வளரும் என்றெண்ணி அதன்படி நடக்கும் ஆசிரியையோ இதற்கு எதிரான விளைவை உண்டுபடுத்தி விடுகிறார்கள். இதனால் இசை, நடனப் போட்டிகளில் கலந்துகொள்ளும் சிறுவர்களுக்குள் போட்டி மனப்பான்மை மிகுந்து, தான் வெல்லவேண்டும் என்ற வெறி வந்துவிடுகிறது. அல்லது, அக்கலையே பிடிக்காமல் போய்விடுகிறது.
கதை
குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டி நடந்துகொண்டிருந்தபோதே மேடையில் ஒரு நடன நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு சிறுமியின் கவனம் நடனத்தில் போக, பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த தாய் முறைத்தபடி அவள் தலையைத் திருப்பி, ஒரு விரலால் அவள் செய்யவேண்டிய காரியத்தை நினைவுபடுத்தினாள்.
இன்னொரு தாய், “இங்கே கலர் தீட்டு. அங்கே,” என்று சுட்டியபடி அறிவுறுத்திக்கொண்டே இருந்தாள்.
இந்த இரு குழந்தைகளுக்கும் சித்திரம் வரைதலினால் கிடைக்கும் மகிழ்ச்சி, சுதந்திர உணர்வு, அமைதி எதுவுமே கிடைக்கப்போவதில்லை. அவர்களுடைய திறமையே பாரமாகவே ஆகிவிடும் அபாயமும் உண்டு.
தூற்றினால் உயரமுடியுமா?
மேடையில் உரையாற்றும்போது, தன் துறையில் இருக்கும் ஒருவரை அவர் எதிரிலேயே தூற்றுவது பேசுகிறவருக்கு வேண்டுமானால் உவகை அளிக்கலாம். சிரிப்பாக இருக்கும் என்று நினைத்து வாய்க்குவந்தபடி பேசுகிறார். ஆனால் அதைச் செவிமடுக்க நேர்ந்தவர்களுக்கு தர்மசங்கடமாக இருக்குமே! இதனால் அவர் உயர்ந்துவிட்டார் என்று எவரும் நினைப்பதில்லை.
பிறரைக் கேலி செய்து நகைப்பது வேடிக்கையா? தமிழ் திரைப்படங்களில், `இதுதான் நகைச்சுவை’ என்று வலியப் புகுத்திவிடுகிறார்களே! பாதிக்கப்பட்டவர் மகிழ்வாரா?
தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விப்பவர்
பலர்முன் பாடுவதோ, நாட்டியம் ஆடுவதோ பிறருக்கு உவகை தருவதாக இருக்க வேண்டும். ஆனால் பிறரது மகிழ்ச்சி மட்டுமே குறிக்கோளாக இருப்பவர்களது படைப்பு அக்கலையை நன்கு உணர்ந்த ரசிகர்களுக்குத் திருப்தி அளிப்பதில்லை.
கும்மியடி பெண்ணே!
திருமணங்களில், வயது வித்தியாசமில்லாமல், பல பெண்கள் ஒன்றுசேர்ந்து கும்மி அடிப்பார்கள். பார்த்திருக்கிறீர்கள், அல்லவா? ஒவ்வொருவரும் வெவ்வேறுமாதிரி ஆடுவார்கள். அது வேறு விஷயம். ஆனாலும், அவர்கள் சிரித்தபடி வலம் வருவது பார்ப்பவர்களின் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிடும். ஏனெனில், அங்கு போட்டி கிடையாது. மகிழ்ச்சியான வைபவத்தில் எல்லாரும் அகமகிழ்ந்து ஒரே செயலில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் தம் மகிழ்ச்சியைப் பிறருக்கும் அவர்களால் பகிர்ந்து அளிக்க முடிகிறது.
எந்த ஒருவரும் உற்சாகமாக, அர்ப்பணிப்புடன் செய்யும் காரியங்களால்தான் பிறரது மனதையும் ஈர்க்க இயலும். செய்பவருக்கும் நினைக்கும்போதே மகிழ்ச்சி உண்டாகும்.
தொடருவோம்