அமெரிக்காவின் சிகாகோ மாநகரில், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

0

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 3 முதல்  7 வரை சிகாகோவில் நடைபெறும் என அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

பெருமதிப்புக்குரிய தமிழ் அறிஞர் பெருமக்களே வணக்கம்.

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ பெருநகரில், 2019-ஆம் ஆண்டு, சூலை திங்கள் 3 முதல் 7ஆம் நாள் வரை நடைபெற இருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும். மற்றைய மாநாடுகள் போல, இந்த 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) துணையோடும், சிறப்பாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடும் நடைபெற உள்ளது. இந்த மாநாடு தமிழ் மக்களின் சமூக அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இம்மாநாடு சிறப்புற நடக்க, வட அமெரிக்காவிலும் உலகெங்கும் உள்ள பிற தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்;  பிற அரசாங்க அமைப்புகளின் உதவிகளையும் நாடி ஏற்றுக்கொள்ளவும் விழைகின்றோம்.

அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் (IATR)

உங்களில் பலருக்கு இந்த ஆய்வு மன்றத்தின் வரலாறு தெரிந்திருக்கலாம். இது 1964-ஆம் ஆண்டு புது டெல்லியில் உலகெலாம் அறிந்த தமிழ்ப் பேரறிஞர், மறைந்த தனிநாயக அடிகளாரின் பெரும் முயற்சியால் நிறுவப்பட்டது. அந்த ஆண்டு உலகக் கீழ்க்கலை அறிஞர்கள் (Orientalists) மாநாடு புது தில்லியில் நடந்தது. அதற்குப் பிரான்சைச் சேர்ந்த அறிஞர் முனைவர் பீலீயோசா,  செக்கசுலோவிக்கியா அறிஞர் பெருமான் கமில் சுலபில், அறிஞர்கள் ஆசர், இங்கிலாந்திலிருந்து வந்திருந்த அறிஞர் பெருமக்கள் பரோ, எமனோ, தமிழகத் தமிழ் அறிஞர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், முனைவர் வி.ஐ.சுப்ரமணியன் ஆகியோர் தனிநாயக அடிகளோரோடு இணைந்து இந்த ஆய்வு மன்றத்தைத் தொடங்கினர். இது ஒரு அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம் ஆகும். இதன் தலை சிறந்த நோக்கம்: “பொதுவாகத் திராவிடம் பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்ய ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும் உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும் ஆகும்.”

இது வரை ஆய்வு மன்றம் நடத்திய மாநாடுகள்:

ஆய்வு மன்றத்தின் அமைப்பாளரும், அப்போது மலேயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகவும் இருந்த தனிநாயக அடிகளார் 1966-ஆம் ஆண்டு, முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் கோலாலம்பூரில் நடத்தினார். இரண்டாம் மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னையில் அன்றைய தமிழக முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. தொடர்ந்து பின் வந்த மாநாடுகள் பாரிசு நகர் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987, 2015), போர்ட் லூயிசு (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய நகரங்களில் நடைபெற்றன. ஆய்வு மன்றத்தின் நோக்கத்திற்கு இணங்க, இம் மாநாடுகள் தமிழ்ப் பேரறிஞர்கள் பலரை வரவழைத்து, தமிழ் மொழி, இலக்கியம், நாகரிகம் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் செய்த ஆய்வுகளை மாநாட்டில் படைக்க வாய்ப்பளித்தன.

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

இம்மாநாடுகளை, அரசியல் தலையீடு இன்றி, தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்துதல் சிறந்தது என மன்றத்தின் அலுவலர்களும், தமிழ் அறிஞர்கள் பலரும் பல காலம் எண்ணி வந்தனர். இக்கருத்தை முன்னெடுத்துச் சென்று, இனி வரும் ஆராய்ச்சி மாநாடுகளைத் தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்த வேண்டும் என்று துணிந்து ஊக்கம் அளித்தவர், முன்னாள் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணைத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியும், பெரும் தமிழ் அறிஞரும், கவிஞரும் ஆன மறைந்த உயர்தனித் தமிழ்மகன், முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்கள். அவரே அமெரிக்கா வாழ் தமிழ்மக்கள் ஒன்று சேர்ந்து அடுத்த ஆராய்ச்சி மாநாட்டை இந்தப் புது வகையில் நடத்த வேண்டும் என்று ஊக்கம் அளித்தார்; இக்கருத்தை உலகளாவிய ஆய்வு மன்ற அலுவலர்களிடமும் தெரிவித்தார். அவர் உந்துதலாலும் அளித்த ஊக்கத்தினாலும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையினரும், சிகாகோத் தமிழ்ச் சங்கத்தினரும்  இணைந்து 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினைப் புதுமுறையில் நடத்த முன்வந்தனர்.

2015-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 9-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட தமிழ் ஆர்வலர் மருத்துவர் சோம. இளங்கோவன் உதவியோடு, மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கியும், தலைமை தாங்கியும் பங்கு கொண்ட தமிழ்ப் புலவர் முனைவர் பிரான்சிசு ச. முத்து அவர்கள், அடுத்த மாநாட்டை வட அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலும் ஊக்கமும் அளித்தல் வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை  அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமும், அதன் தலைவர் முனைவர் மாரிமுத்துவும், துணைத் தலைவர் முனைவர் பொன்னவைக்கோவும் ஏற்றுக்கொண்டனர். எனவே 2019-ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ள 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பெரும் தமிழ் ஆர்வலரும், முன்னாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவருமான  மருத்துவர் சோம. இளங்கோவன், மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவின் (Organizing Committee) தலைவராகப்  பணிபுரிந்து வருகிறார். இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் உயர்திரு சுந்தர் குப்புசாமி அவர்களும், சிகாகோத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உயர்திரு மணி. குணசேகரன் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர். புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து அவர்கள் ஆய்வுக் குழுவின் (Academic Committee) தலைவராகவும், தற்காலத்தில் மிகச்சிறந்த தமிழ் ஆய்வாளராக விளங்கி வரும் பன்மொழிப்புலவர், முனைவர் ப. மருதநாயகம் அவர்கள் ஆய்வுக்கு குழுவின் இணைத்தலைவராகவும் பொறுப்பேற்று உள்ளனர். உலகத் தமிழ்ப் பேரறிஞர் பலர் அறிவுரைக் குழுவிலும் (Advisory Panel), மாநாட்டின் ஆய்வுக் குழுவிலும் (Academic Committee) பங்கேற்றுள்ளனர். ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ஐம்பெரும் தமிழ் அறிஞர்கள் ஆய்வுக்கு குழுவின் துணைத் தலைவர்களாகப்  பணிபுரிகின்றனர்.

மைய ஆய்வுப் பொருளும் (Theme) ஆராய்ச்சித் தலைப்புகளும் (Topics)

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மை நோக்கத்திற்க்கு ஏற்ப இந்த மாநாட்டின் மைய ஆய்வு பொருள் அமைந்துள்ளது.

“தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.”

இந்த மாநாடு சிறப்புற அமைய அறிஞர் பெருமக்கள் சிறந்த ஆராய்ச்சித் தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து ஆய்வுகள் செய்யவும், ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்த மாநாட்டில் வழங்கவும் அழைக்கிறோம்.

ஆராய்ச்சித் தலைப்புகளைப் பற்றியும், “ஆராய்ச்சிக் கட்டுரைச்  சுருக்கத்தையும்” (ABSTRACT), “ஆராய்ச்சி விரிவுக்  கட்டுரையையும்” (RESEARCH PAPER) அனுப்பும் முறை,  அனுப்பவேண்டிய தேதி, ஆகியன பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பின் வரும் இணையதள முகவரியைப் பார்க்கவும்:

http://www.iatrnew.org

E.mail: iatr2019@fetna.org

இந்த மாநாட்டிற்கு வருகை தந்து பங்கு கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.

அன்புடன்

புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து

பொதுச் செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்

தலைவர், ஆய்வுக் குழு

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

மருத்துவர் சோம.  இளங்கோவன்

தலைவர், ஒருங்கிணைப்புக் குழு, 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

பிற செய்திகளுக்கு:

திரு. சுந்தர் குப்புசாமி

தலைவர், தமிழ்ச் சங்கப் பேரவை

மின்னஞ்சல்:president@fetna.org    / www.fetna.org

திரு. மணி. குணசேகரன்

தலைவர், சிகாகோ தமிழ்ச் சங்கம்

மின்னஞ்சல்:president@chicagotamilsangam.org www.chicagotamilsangam.org

செய்தி: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி, இந்தியா muelangovan@gmail.com

ஆராய்ச்சிக் கட்டுரை எங்கும் இதுவரை வெளியிடப்படாத முழுமுதல் ஆராய்ச்சிக் கருத்துக்கள் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

ஆராய்ச்சியாளர்கள் “ஆராய்ச்சி விரிவுக் கட்டுரையை” அனுப்பும் முன்னர் அதன் சுருக்கத்தினை முதலில் அனுப்ப வேண்டும். இந்தச் சுருக்கம் “மைக்ரோசாப்ட்” சொல் செயலியில் (Microsoft Word) இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் “யுனிகோடு” முறையில் (unicode format) இருத்தல் வேண்டும்.

ஆராய்ச்சிச் சுருக்கம் நவம்பர் 30, 2018 ஆம் தேதிக்குள் பின்வரும் மின்னஞ்சல் வழியாக அனுப்புதல் வேண்டும். மின்னஞ்சல் முகவரி “academic-committee@icsts10.org”. பெறப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைச் சுருக்கங்கள் ஆய்வறிஞர் குழுவினரால் (academic committee) சீராய்வு செய்யப்பட்டு அந்த கட்டுரைச் சுருக்கம் ஏற்புடையதா இல்லையா என்ற முடிவுகள் டிசம்பர் 31, 2018 தேதிக்குள் அறிவிக்கப்படும்.

ஏற்கப்பட்ட ஆராய்ச்சிச் சுருக்கத்தின் ஆசிரியர்கள் தங்களது ஆராய்ச்சி விரிவுக் கட்டுரையை மார்ச் 31, 2019 ஆம் தேதிக்குள் அனுப்புதல் வேண்டும். இந்தக் கட்டுரை “மைக்ரோசாப்ட்” சொல் செயலியில் (Microsoft Word) முப்பது பக்கங்களுக்கு மிகாமல், “யுனிகோடு” முறையில் (unicode format), எழுத்தளவு 12-ஆக இருத்தல் வேண்டும். ஆராய்ச்சிக் கட்டுரைச் சுருக்கம், ஆராய்ச்சி விரிவுக் கட்டுரை ஆகிய இரண்டும் தமிழிலோ ஆங்கிலத்திலோ இருத்தல் வேண்டும்.

ஆராய்ச்சியாளர்கள் தங்களது வாழ்க்கைக் குறிப்பினை (biodata/resume), 200 சொற்களுக்கு மிகாமல் ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கத்தோடு இணைத்து அனுப்புதல் வேண்டும்.

ஆய்வரங்கில் படைக்கப்படுகின்ற கட்டுரைகளின் எண்ணிக்கை, ஆராய்ச்சியாளர்கள் விவரங்கள் ஏப்ரல் 30, 2019 ஆம் தேதிக்குள் தெரியப்படுத்தப்படும். கட்டுரையாளரின் அனுமதிக் கட்டணம், தங்கும் செலவு, உணவுச் செலவு, மாநாட்டின் போது ஏற்படுகின்ற உள்ளூர் போக்குவரத்து செலவு ஆகியவற்றை விழாக் குழுவினர் ஏற்றுக்கொள்வர்.

ஆய்வரங்கில் பங்கேற்கும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது சொந்த செலவிலோ அல்லது அரசு, கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் முதலியன தரும் பொருள் உதவியால் தங்களது பயணச் செலவிற்கான ஏற்பாடுகள் செய்து கொள்வதை வரவேற்கின்றோம். பயணம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

ஆராய்ச்சியாளர்கள் தங்களது கடவுச் சீட்டினை (Passport) ஏப்ரல் 30, 2019 ஆம் தேதிக்குள் பெற்று வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் குறித்த நேரத்தில் அமெரிக்காவின் நுழைவுச்சான்றினைப் (Visa) பெற உதவியாக இருக்கும்.

ஆராய்ச்சியாளர்கள், மாநாட்டின் போது தேவைப்படும் எதிர்பாராது வரக்கூடிய மருத்துவச் செலவிற்குத் தேவைப்படும் விதமாக, தங்களுக்கான மருத்துவக் காப்பீட்டினை (Insurance) முன்னரே வாங்கி வைத்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் மாநாட்டின் இணையத் தளத்தில் வெளியிடப்படும். ஆய்வரங்கில் படைக்கப்படுகின்ற கட்டுரைகள் மட்டும் மாநாட்டு மலரில் இடம் பெறும்.

2019-ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் சிகாகோவில் நடைபெற உள்ள உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் சிறப்பு நோக்கங்கள்; தமிழில் உள்ள செவ்விலக்கியங்களை உலகிற்கு அறிமுகப் படுத்துதல்; தமிழர், தமிழ் மொழி, இலக்கியங்கள், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் பழமையும், தனிச்ச்சிறப்பையும் ஆய்வு செய்தல் ஆகியவை ஆகும். அத்துடன் தமிழ் அறிஞர் பெருமக்கள் தற்கால தமிழ் உரைநடை, பாடல்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும் என இந்த மாநாடு ஊக்குவிக்கின்றது. இந்நோக்கங்கள் சிறப்புற, வெற்றிபெற, கீழ்கண்ட தலைப்புகளில் ஆழ்ந்த ஆய்வோடு அழகுற எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், இம்மாநாட்டில் இடம்பெற வரவேற்கப்படுகின்றன.

செவ்விலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள்)
தமிழ்ச் செவ்விலக்கியங்களும் பிறமொழிச் செவ்விலக்கியங்களும்: ஒரு ஒப்பீடு
புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு முதலிய பிற தமிழ்ச் செவ்விலக்கியங்கள் தமிழர்ப் பண்பாட்டுக் கருவூலங்கள்
செவ்விலக்கியங்களில் இயற்கை
தமிழ்ச் செவ்விலக்கியங்களில் பெண்கள்
தமிழ்ச் செவ்விலக்கியங்கள் காட்டும் பண்டைத் தமிழகத் தாழ்நிலைக் குடிமக்கள்
தமிழ்ச் செவ்விலக்கியங்கள் காட்டும் பழங்காலக் கல்விநிலை
இலக்கியமே வரலாறு அல்லது வரலாறே இலக்கியம்; இக்கோட்பாட்டினைப் புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய செவ்விலக்கியங்கள் மூலம் ஆய்வு செய்தல்
தமிழ் நாகரிகத்தின் பழமையும் அது உலகெலாம் பரவிய வகையும்
தமிழர்த் தோற்றத்தையும் அவர் உலகெலாம் பரவிய வகையும் மரபியல் மூலமும் (genetics) மரபியல் காட்டும் வழிமுறை வகையிலும் (genographics) ஆய்வு செய்தல்
தமிழ்ச் சங்கங்களும் தமிழர் நாகரிகமும் வளர்ந்த குமரி நாடு அல்லது குமரிக் கண்டம் ஒன்று இருந்தமையை, வரலாறு, இலக்கியம், அகழ்வாய்வு (archeology), நிலவியல் (geology) போன்ற அறிவியல் சான்றுகளோடு நிறுவ ஆய்வு செய்தல்
பழந்தமிழர்ப் பாண்பாட்டினைக் கீழே காணும் பழம்பெரும் பண்பாடுகளோடு ஒப்பாய்வு செய்தல்
எகிப்தியர் பண்பாடு
எபரேயர் பண்பாடு
கிரேக்கர் பண்பாடு
ரோமையர் பண்பாடு
சீனர் பண்பாடு
உலகத்தின் பழம்பெரும் நாகரிக வளர்ச்சியில் தமிழர்ப் பங்கீடு (contribution); கீழுள்ள நாகரிகம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்க
சிந்துவெளி நாகரிகம்
சுமேரிய நாகரிகம்
மெசபட்டோமியா, அக்கேடின் நாகரிகம்
எகித்திய நாகரிகம்
மத்தியதரைக்கடல் நாகரிகம்
பழந்தமிழர் நாகரிகம் குறித்து இராசு அடிகளாரின் (Rev. Fr. Heras S.J.) கண்டுபிடுப்புகள்
பழந்தமிழர் நாகரிகம் குறித்து பேராசிரியர் அசுகோ பொர்போலாவின் (Asko Parpola) கண்டுபிடுப்புகள்
பழந்தமிழ் நாகரிகம் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் இராசன் அவர்களின் அகழ்வாய்வு கண்டுபிடுப்புகள்
தென்னிந்தியாவில் ஆதிச்சநல்லூர், பொருந்தல், கீழடி முதலிய பிற இடங்களில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள்
தொல்காப்பியம்
தொல்காப்பியமும் தற்கால மொழியியலும்
தொல்காப்பியர் காலம்
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள்
ஐந்திணைக் கருத்தும் தமிழின் அகப்பொருள் மரபும்
தொல்காப்பியமும் கீழே காணும் பிறமொழி இலக்கண நூல்களும்: ஒரு ஒப்பாய்வு. இவற்றில் ஒன்றினை தேர்வு செய்து ஆய்வு செய்க
கிரேக்க இலக்கண நூல்கள்
இலத்தீன் இலக்கண நூல்கள்
எபரேய இலக்கண நூல்கள்
வடமொழி இலக்கண நூல்கள்
கன்னட இலக்கண நூல்கள்
தெலுங்கு இலக்கண நூல்கள்
மலையாள இலக்கண நூல்கள்
பிறமொழி இலக்கண நூல்கள் (மொழியைக் குறிப்பிடுக)
தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை: தொடர்ந்துவரும் தமிழ் இலக்கண மரபுகள்
திருக்குறள்
திருவள்ளுவர், “உலக மக்களின் அறநூல் புலவன்” (‘The Bard of Universal Man’ Dr. G U Pope)
திருக்குறள் பண்டைத்தமிழர்தம் பண்பாட்டு நாகரிகக் கருவூலம்
திருக்குறளும் வாழும் வழிமுறைகளும் (the art of living)
திருக்குறள், தற்கால வாழ்க்கைக்கும் வழிகாட்டும் அறநூல்
திருக்குறளும் கீழே காணும் பிற அறநூல்களும்: ஒப்பாய்வு. கீழுள்ள ஒன்றினைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்க
கிரேக்க அறநூல்கள்
இலத்தீன் அறநூல்கள்
வடமொழி அறநூல்கள்
பிறமொழி அறநூல்கள் (குறிப்பிடுக)
திருக்குறளுக்கு பிற நாடுகளில் இருக்கும் வரவேற்பு: ஆய்வு
அறிஞர் பெருமக்களைப் பற்றிய ஆய்வு
கீழ்கண்ட அறிஞர் பழங்கால, இடைக்கால, மற்றும் தற்காலத் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகிய இவற்றின் ஆய்வுகளுக்குத் தந்த பெரும் பங்களிப்பு (ஒவ்வொருவர் பங்களிப்பையும் தனிப்பட ஆய்வு செய்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவும்)
மறைமலை அடிகளார்
விபுலானந்த அடிகளார்
தனி நாயக அடிகளார்
பரிதிமாற் கலைஞர்
தேவநேயப் பாவாணர்
கமில் சிலபில் (Kamil Zvelebil)
ஏ கே இராமநுசன் (A K Ramanujan)
ஆர் கு அசர் (R K Asher)
சார்சு ஆர்ட் (George Hart)
பிற அறிஞர் பெருமக்கள் (யார் என்று குறிப்பிடுக)
தமிழ் இசையும் கலைகளும்
தமிழ் இசை, கலைகள்; இவற்றின் பழமை
கருநாடக இசையில் தமிழ் இசையின் தாக்கம்
பழங்காலத்தில் வழங்கிய தமிழ் இசைக் கருவிகள்
தற்காலத் திரைப்படப் பாடல்களில் சங்க இலக்கியப் பாடல்களின் தாக்கம்
தற்காலத் தமிழ் இலக்கியங்கள்
தமிழ் உரைநடை, செய்யுட்கள் (பாடல்கள்); இவற்றின் தற்கால போக்கு
தற்கால நாவல்களும் சிறுகதைகைளும்; இவற்றின் புதிய போக்கு
தமிழ்க்கல்விக்கும் ஆய்வுக்கும் கணினி பயன்படும் வகைகள்: ஒர் ஆய்வு
தமிழ் மொழியும் மொழியியலும்
தொல்காப்பியம்: அதில் பொதிந்துள்ள மொழியியல் நுணுக்கங்களும் இலக்கியக் கோட்பாடுகளும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *