புத்தக விமர்சனம்: திவாகர்

 

தி ஐடல் தீஃப், ஆசிரியர் விஜயகுமார்

 

தெய்வமென்றால் அது தெய்வம்

வெறும் சிலை என்றால் அது சிலைதான்

கவியரசரின் தத்துவார்த்தமான உயிர்வரிகள். நம் கண்களுக்குத் தெய்வமாகப் பட்டது, திருடர்கள் கண்களுக்கு சிலையாகத் தென்பட்டு. அது சிலையே ஆனாலும் அது தெய்வம், அழகு என்று நாம் கொண்டாடுவதால் விலையே மதிக்கமுடியாத அந்த சிலைக்கென ஒரு விலையை நிர்ணயித்து வெளிநாடுகளில் கொள்ளை கொள்ளையாக பணம் பறிக்கும் ஒரு நீசக் கூட்டத்தின் நாற்பதாண்டு காலச் செய்கை ‘தி ஐடல் தீஃப்’ புத்தகம் மூலம் அப்படியே ஒரு திகில் திரைப்படம் பார்க்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் எழுதப்பட்டது என்பது  சாதாரணமாக மற்றவர்களின் போற்றுதலை பாராட்டைப் பெறும் செயல் அல்ல. இப்புத்தகத்தின் மூலம் ஏற்படப்போகும் பயன்கள் நம் நாட்டின், போற்றுதலுக்குரிய பண்பாட்டின் கலைச் சிற்பங்களை நாம் திரும்பப் பெறவேண்டுமே என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது என்பது கண்கூடு. இந்த ஒரு விஷயத்துகாகவே ஆசிரியரான விஜயகுமாரை நான் மனமாறப் போற்றுகிறேன்.

 

விஜயகுமாரின் எழுத்து நம்மை வசீகரம் செய்கிறதென்றால் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்துக்குமாக அவர் உழைத்திருக்கும் உழைப்பு, அடேயப்பா, மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. ஏறத்தாழ வீரதீர சாகஸம் செய்தால் மட்டுமே இன்று வரை அவர் மூலம் நம் மண் திரும்பப் பெற்ற சிலைகள் நம்மை அடைந்திருக்கமுடியும். ஐடல் விங் புத்தகத்தில் அவர் விவரித்த ஒவ்வொரு அத்தியாயமும் அவர் பட்ட கஷ்டங்களை உணரவைக்கிறது. ஒவ்வொரு பக்கமும் அவரின் மிகப் பெரிய உழைப்பையும், சிலைகள் மீது கொண்ட பற்றினையும், அவற்றை எப்பாடுபட்டாவது திரும்பக் கொணரவேண்டுமே என்ற கவலையும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

 

இந்தப் புத்தகத்தின் ஹீரோ ’இண்டி’ என்ற பெயர் கொண்ட அந்த அமெரிக்க சிலைத் தடுப்புக் காவல் அதிகாரிதான் என்றாலும் அவருக்கு பக்கபலமாக செயல்பட்ட நம் தமிழகத்து வீரரான விஜயகுமாரை இண்டியுடன் சேர்த்தே கொண்டாடவேண்டும். சிலை கொள்ளையன் சுபாஷ் கபூர் இன்று புழல் சிறையில் களி தின்று கொண்டிருந்தாலும் அவனால் ஆயுளுக்கும் சிறை தண்டனையில் இருந்து மீளவே முடியாத வகையில் அவன் செய்த சிலை திருட்டு செயல்கள் இருந்திருக்கின்றன என்பதை ’ஐடல் தீஃப்’ புத்தகம் மூலம் விஜயகுமார் குறிப்பிட்டிருந்தாலும், இந்த தண்டனைகள் எல்லாம் அவனுக்குப் போதுமா அல்லது அவன் அடைந்திருக்கும் இந்த தண்டனைகள் அடுத்த சிலை கொள்ளைக்காரனுக்கு ஒரு பாடமாக அமையுமா என்பதெல்லாம் காலம் செல்லச் செல்லத்தான் தெரியும். ஏனெனில் சுபாஷ் கபூர் இன்னமும் கோர்ட்டில் நிரூபிக்கப்படாத ‘அக்யூஸ்ட்’ என்ற நிலையில்தான் இருக்கிறான் என்பதை நினைவில் கொண்டு நாம் இன்னமும் விழிப்புடன் இருந்து அவனை முழுமையாக தண்டிக்க உழைக்க வேண்டும்.

ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ‘ஐடல் தீஃப்’ என்கிற இந்த ஒரு புத்தகமே ‘எந்த ஊர் நீதிமன்றத்திலும்’ சாட்சிப் புத்தகமாகப் பயன்படும் என்பதுதான்.

சிங்கப்பூரில் உள்ள ஆசிய அருங்காட்சியகத்தில் ‘உமாதேவி’யின் சிலையை நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்து ரசித்து அவள் எப்படி இங்கு கொண்டு வரப்பட்டாளோ என்று வருந்தியவர்களில் நானும் ஒருவன். இந்த சிலை எப்படி திருடப்பட்டது என்பதையும் எப்படி நம் தேசத்துக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டது என்பதை மிக ஆழமாக விவரிக்கிறார் விஜயகுமார். நான் செல்லும் இடங்களில் குறிப்பாக அயல்நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ள நம் கோயில் சிலைகளில் எல்லாம் பார்த்துக் கண் கலங்கி வணங்கியதை நான் மட்டுமே உணர்வேன்.  நம் கோயில்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சிற்பி தன் கலைத் திறன் முழுவதையும் காண்பித்து சிலை வடித்து அந்த சிலைகள் அத்தனைக்கும் நம் சாத்திரப்படி மந்திரம் ஓதி பிராணம் கொடுத்து அவைகள் தெய்வம் என்று உணரப்பட்டு நாம் வணங்குவதற்காக ஏற்பட்ட சிலைகள் அவை என்பது நான் ஒவ்வொரு சிலையைப் பார்க்கும்போதெல்லாம் என் மனதுக்குள் சொல்லிக் கொள்வேன். இவரைக் களவாடி, கஸ்டம்ஸை ஏமாற்றி கடல் தாண்டி கண்டெய்னரில் வெளியூர் கொண்டுவந்து மிகப் பெரிய கட்டடங்களில் கண்ணாடிச் சிறைக்குள் சிறைப்படுத்தி இருக்கிறார்களே! எங்கள் ஊர்க் கோயிலில் மட்டும் இவர் களவாடப்படாமல் இருந்திருந்தால் இவருக்கு தினம் அலங்காரம் செய்து மாலை அணிவித்து மந்திரம் ஓதி பூசித்து மனமெல்லாம் ஆனந்தக் களிப்போடு வீதிகளில் ஊர்வலம் எடுத்துச் சென்று ஊர்மக்கள் அனைவரையும் சொல்வதறியா ஒரு ஆத்ம திருப்தியில் ஆழ்த்தும் இந்தச் சிலைகளா இங்கு சிறையிலிருப்பது என்றுதான் தோன்றும்.

 

பொதுவாக நம் தெய்வச் சிலைகள் எல்லாமே மந்திரசக்தியால் உயிர்க்கப்பட்டு வணங்கத்தக்கவை. சாட்சி பூதம் என்பார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சாட்சியாக இருக்கிறது. தவறு செய்தால் தண்டனையும் நல்லதைக் கேட்டால் நல்லதையும் தரும் அன்புத் தெய்வங்கள். அவைகளைத் துன்புறுத்தினால் அவதிப்படப்போவது சிலைகள் அல்ல. நம் தேசமும் இந்த தேசத்தில் வாழும் மக்களும்தான். இது ஒரு யதார்த்தமான உண்மை.

 

நம் மக்கள் ஒன்றை ஞாபகம் வைத்திருக்கவேண்டும். உலகத்தின் எந்த ஒரு மூலையில் இருக்கும் அருங்காட்சியகத்தில் உள்ள நம் தெய்வச்சிலைகள் அத்தனையும் ஒவ்வொன்றும் களவாடப்பட்டதுதான். நமக்கு ஆத்ம திருப்தியைத் தரும் தெய்வச்சிலைகளை நாம் யாருமே ”சும்மா எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி இருக்கவே முடியாது. எந்தக் கோவிலிலும் அப்படித் தூக்கிக் கொடுத்திருக்கவும் முடியாது. பின் எந்த தைரியத்தில் அந்தந்த அருங்காட்சியகங்கள் ‘இவரிடமிருந்து வாங்கப்பட்டது அல்லது இன்னாரிடமிருந்து கொடையாகப் பெறப்பட்டது என எழுதுகிறார்கள்?.. உள்ளூர் கொள்ளையர்களை ஊக்குவித்து சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் திருடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள் இவை. உலகத்து அருங்காட்சியகங்கள் மூலம் திருடப்பட்ட நம் தெய்வச் சிலைகள் வெளியுலகப் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பது என்பது அவர்கள் வெளிப்படையாகவே தைரியமாகவே அந்தந்த அரசாங்கங்கள் ஆதரவுடன் செய்யும் குற்றப்பணி. இதுதான் உண்மை.

 

இந்த உண்மையை இந்த ’ஐடல் தீஃப்’ புத்தகத்தின் மூலம் ஆதாரத்துடன் உலக அரங்கத்துக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார் விஜயகுமார். இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியது மிகவும் பொருத்தம் என்று கூடச் சொல்வேன். இந்தப் புத்தகம் உலகத்தில் உள்ள அத்தனை மியூசியங்களுக்கும் சென்றாக வேண்டும். இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் அவர்கள் மனம் மாறவேண்டும். தங்களிடம் உள்ளவை தெய்வீகச் சிலைகள். அவைகள் வணங்குவதற்காக வடிக்கப்பட்டவை. அலங்காரத்துகாகவோ அல்லது அழகு பார்க்கவோ அல்லது ரசித்து மகிழ்வதற்காகவோ செய்யப்பட்டவை அல்ல என்பதையும் அவர்கள் உணர்ந்து தாமாக முன்வந்து இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும். சாதாரணமாகப் பார்த்தால் களவு போன பண்டம் காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டால் அதை உரியவர்களிடம் சேர்ப்பிப்பது என்பது தார்மீகச் செயல். தர்மம் வெல்லவேண்டும். நம்மைச் சேர்ந்த சிலைகளெல்லாம் திரும்பவரவேண்டும்.

 

விஜயகுமார் இந்தப் புத்தகம் எழுதியதன் மூலம் இந்தப் பணி நிறைவேறினால் அதைவிடப் பெரிய வெற்றி இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அந்தப் பெரிய வெற்றியை இறைவன் விஜயகுமாரின் ’ஐடல் தீஃப்’ புத்தகம் மூலம் பெற்றுத்தரவேண்டும் என வேண்டுகிறேன்.

 

விஜயகுமார் எழுதிய முதல் அத்தியாயத்தின் கடந்த கால சிற்பி மறுபடி திரும்பி வந்து இவரை வாழ்த்துவான். வாழ்த்தவேண்டும். இப்புத்தகத்தைப் படித்து முடித்தபின் இப்படித்தான் நான் நினைத்தேன்.. நான் மட்டுமல்ல, படித்த அனைவருமே அப்படித்தான் நினைப்பார்கள். நம் கடவுள், நம் சிற்பி, நம் நாடு நம் நாட்டின் பண்பாடு உயர்ந்தது என்ற பூரண உணர்வோடு நாம் இருந்தால் அத்தனை சிலைகளும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை இப்புத்தகத்தைப் படித்தபின் பிறக்கிறது.

 

தி ஐடல் தீஃப் (ஆங்கிலம்)

ஆசிரியர் : விஜயகுமார்

விலை ரூ 499.

Jaggernaut Books, KS House, 118, Shapur Jat,

New Delhi 110049

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க