Category: Featured

Featured

  • அன்புள்ள மணிமொழிக்கு

    எஸ். பழனிச்சாமி

    அன்புள்ள மணிமொழிக்கு,

    உன் அப்பா எழுதும் மடல். இந்த மடல் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இதை எழுத வேண்டிய அவசியம் என்ன என்றும் கேட்கத் தோன்றலாம். ஆனாலும் பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக உன்னைப் பார்க்காமலும், பார்க்க முடியாமலும் இருக்கின்ற ஏக்கம் என் மனதை அரித்துக் கொண்டிருப்பது உண்மை. அதன் வெளிப்பாடுதான் இந்த மடல்.

    இத்தனை நாட்களாக நீயும் உன் தம்பிகளும் ஃபேஸ்புக்கில் எழுதுவதை மட்டுமே படித்து வந்திருக்கிறேன். அது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதையும் அதில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். உன் தம்பிகள் படித்து முடித்து வேலையில் சேர்ந்திருப்பதையும், உனக்குத் திருமணம் ஆனதையும், குழந்தை பிறந்ததையும்கூட அதன் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.

    தாய்மை களை பொழியும் உன் அழகான முகத்தைப் பார்க்க வேண்டும், உன் மகனை என் மடியில் வைத்துக் கொஞ்ச வேண்டும் என்று மனது துடிக்கிறது. ஆனால் அதற்குத்தான் எந்த வழியும் இல்லாமல் போய் விட்டதே!

    அன்பு மகளே, உன்னுடனும், உன் தம்பிகளுடனும் நாம் எல்லோரும் ஒன்றாக இருந்த நாட்களை மட்டுமே நான் பொக்கிஷமாக நினைத்து இப்போதும் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு சந்தோஷமான, அற்புதமான நாட்கள் அவை.

    நீ நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாய். காலையில் எழுந்தவுடன் நான் உங்களுக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுப்பேன். அப்போது உன் தம்பி செய்யும் சேட்டைகளை நான் விளையாட்டாகக் கிண்டல் செய்யும் போது, எல்லோரும் சிரிப்பீர்களே, அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? எவ்வளவு சந்தோஷமான நாட்கள்!

    ஐந்தாம் வகுப்பில் நீ படிக்கும் போது, உன்னுடைய வகுப்புத் தோழி திவ்யாதான் எப்போதும் முதல் ரேங்க் வாங்குவாள் என்று நீ சொன்னாய்; நீ நினைத்தால் உன்னாலும் முடியும் என்று, உனக்கு மனதை ஒரு நிலைப்படுத்த கற்றுக் கொடுத்தேனே ஞாபகம் இருக்கிறதா? அந்த மாத பரீட்சையில் நீ முதல் ரேங்க் எடுத்தபோது எவ்வளவு சந்தோஷம் அடைந்தாய்? அன்றிலிருந்து எப்போதும் நீதான் முதல் ரேங்க் எடுத்தாய். அதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது.

    அன்பு மகளே, அப்படியெல்லாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று உனக்கு சொல்லிக் கொடுத்த எனக்கு, இத்தனை நாட்களாக உன்னை நேரில் பார்க்கவும், பேசவும் ஒரு வழி தெரியாமல் போய் விட்டதே? என்னுடைய தலைவிதியை நினைத்து பரிதாபப் படுவதா, பச்சாதாபப் படுவதா என்று எனக்குத் தெரியவில்லை.

    இத்தனைக்கும் நீ உன்னுடைய தோழி திவ்யாவைப் போல் எங்கோ அமெரிக்காவிலா இருக்கிறாய்? இதே தமிழ்நாட்டில் எட்டு மணி நேரப் பயண தூரத்தில் தானே இருக்கிறாய். அப்படி இருந்தும்கூட நான் உன்னைப் பார்க்கவோ, நீ என்னைப் பார்க்கவோ முடியாமல் போய் விட்ட இந்த காலத்தின் கொடுமையை என்னவென்று சொல்வது?

    அதிர்ச்சி தரக்கூடிய அந்தப் பிரிவு, நீ ஆறாவது படிக்கும்போதுதான் ஏற்பட்டது. அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளும் வயது அப்போது உங்களுக்கு இல்லை. இப்போது நீ வளர்ந்து பெரியவளாகி விட்டதால் உலக அனுபவம் உனக்குக் கிடைத்திருக்கும். அதுவுமில்லாமல் டிவி சீரியல்களில் எத்தனையோ வில்லிகளைப் பார்த்திருப்பாய். மனிதர்களின் குணாதிசயங்களைப் புரிந்து கொண்டிருப்பாய்.

    அன்பு மகளே, மனிதர்களை விட பணத்தை மட்டுமே பெரிதாக நினைக்கும், நேர்மையில்லாத, திடீர் பணக்காரியாகி விட்ட ஒரு மாமியாரின் புதிய வீட்டில் மருமகன் வாடகைக்கு குடியேறும் ஒரு நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. அதுவும் என் போன்ற தன்மானம் மிக்கவர்களுக்கு அந்த நிலை வரவே கூடாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். இல்லாவிட்டால் உங்களையெல்லாம் அன்றே பிரிந்து தனியே சென்றுவிட வேண்டும் என்றவகையில் மிரட்டப்பட்டேன்.

    வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்ட என்னைத் தரக்குறைவாக நடத்தி, தனிமைப் படுத்தி, அவமானப் படுத்தி என்னை வீட்டை விட்டு வெளியேற்ற அவர்கள் முடிவு செய்து விட்ட பிறகு, என்னால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. அதனால் உங்களையெல்லாம் பிரிவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

    எங்க ஊர் ராஜா படத்தில் வரும் யாரை நம்பி நான் பிறந்தேன் என்ற பாடலில்

    பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா

    சோதனையைப் பங்குவச்சா சொந்தமில்லே பந்தமில்லே

    என்றும்

    குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே

    பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்லே

    என்றும் கவியரசு கண்ணதாசன் என்னுடைய அப்போதைய நிலையை மிகப் பொருத்தமாக சொல்லியிருப்பார்.

    அம்மா, நான் கோழையல்ல. தன்னம்பிக்கையும், தன்மானமும் உள்ளவன். மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியில் நம்பிக்கை கொண்டவன். கடவுள் மீது பக்தி உள்ளவன். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும் என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவன். அதனால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன்.

    நீங்கள் வீட்டில் இருக்கும்போது உங்களைப் பிரிந்துவர என்னால் முடியாது என்றுதான், நீங்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு வீட்டை விட்டு வெளியேறினேன். அதன் பிறகு உங்கள் நினைவால் நான் பட்ட அவஸ்தைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது. எப்போது வேண்டுமானாலும் அழுகை வெடித்துக் கிளம்பி விடும் என்ற நிலையில்தான் நான் இருந்தேன். அப்போது என் முக பாவம் அப்படித்தான் இருக்கும்.

    எப்படியோ பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. உள்ளத்தில் ஏதோ ஒரு சோகம் நிரந்தரமாகத் தங்கி விட்டது போல் தோன்றுகிறது. பலவீன மனம் கொண்டவனாக இருந்திருந்தால் உயிரையே மாய்த்துக் கொள்ளும் எண்ணம் தோன்றி இருக்கும். ஆனால் கடவுள் அருளால் என்றாவது ஒருநாள் உன்னையும், உன் தம்பிகளையும் மீண்டும் பார்ப்பேன் என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே எனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பைக் கொடுத்திருக்கிறது.

    பதினாலு வருடங்கள் ஸ்ரீராமனைப் பிரிந்த தசரதனின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. தசரதனுக்கோ வேறு மனைவிகள் மூலம் மற்ற பல குழந்தைகள் இருந்தனர். ஆனால் எனக்கு குழந்தைகள் நீங்கள் மட்டும்தானே!

    இன்று என்னுடைய பொருளாதார நிலைமை அப்படி ஒன்றும் மோசமில்லை. நேர்மையான உழைப்பில் சம்பாதித்து, ஓரளவு வசதியான ஒரு நடுத்தர வாழ்க்கைக்கு தேவையான, குடியிருக்க ஒரு ஃப்ளாட், வாகனங்கள் என்று எல்லாமே இருக்கிறது, குழந்தைகளாகிய நீங்கள் என்னுடன் இல்லை என்பதைத் தவிர.

    நான்தான் முயற்சி செய்து உங்களைப் பார்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் சொல்கிறார்கள். ஃபேஸ்புக்கில் கூட ஃப்ரண்ட்ஸ் ரிக்வெஸ்ட் கொடுக்கலாம் என்று ஒரு நப்பாசை தோன்றும். ஆனால் என் மனம் வருந்தும்படி ஏதாவது ஆகிவிட்டால் என்னால் தாங்க முடியாது என்பதால் என்னைக் கட்டுப் படுத்திக் கொள்வேன்.

    சரி, இப்போது இந்த மடல் எதற்கு என்று கேட்கிறாயா? சென்ற வாரம் நான் ஊருக்குப் போய் இருந்தேன். அப்போது எனக்குத் தெரிந்தவர்கள் உன்னைப் பார்த்ததாகவும், பேசியதாகவும் சொன்னார்கள். வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் பெற்று, நீயும் உன் தம்பிகளும் வளமான வாழ்க்கை வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    நீங்கள் புத்திசாலி குழந்தைகள் என்பதை நானறிவேன். எனவே நீங்கள் என்னுடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப் படக்கூடாது. எல்லாம் விதித்தபடிதான் நடைபெறும் என்றால் பிறகு கவலைப்பட என்ன இருக்கிறது.

    இதன் மூலம் நான் தெரிவித்துக் கொள்வது இதுதான். உன்னையும், உன் தம்பிகளையும் பார்ப்பதற்கு மனத்தில் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னைப் பார்க்கத் தடையில்லாத சூழ்நிலை இப்போது அங்கு இல்லை என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

    ஆனால் காலம் கனியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் வாழ்நாள் முடிவதற்குள் என்றாவது ஒரு நாள் நாம் எல்லோரும் ஒன்றாகச் சேருவோம். அந்த நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பேன்.

    இப்படிக்கு

    உன் அப்பா

    Share
  • தெய்வம் இருப்பது எங்கே

    கவிஞர் காவிரி மைந்தன்

    தெளிவாகத் தெரிவது ஒன்று! தெளிவின்றி மறைவது ஒன்று! எதை நாம் இருக்கிறது என்று உறுதி செய்ய முடியும்? எதை நாம் இல்லையென்று மறுத்திட முடியும்? கேள்விகள் பல எழலாம்! விடைகள் தான் எங்கே? அறிவுக் கண்ணில் பார்க்கும்போது அதற்கும் எல்லைகள் உண்டு! அகக்கண்ணால் பார்க்கும் போது அதற்கோர் உலகம் உண்டு! விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கு பன்னெடுங்காலம் முன்பாகவே மெய்ஞானம் கண்ட உண்மைகள் கோடி! அறிவின்வழி எதுவுமே உறுதி செய்யப்பட வேண்டும்! ஆன்மீகம் கண்டவர்கள் யார்? அதன்வழியே நின்றவர்கள் யார்? வழிவழியாய் தொடரும் இந்தச் செவி வழிச்சங்கதிகளை செப்பேட்டிலும், பனை ஓலைச்சுவடிகளிலும் காணும்போது விஞ்ஞானத்தை மெய்ஞானம் விஞ்சியிருப்பதை உணரலாம்! சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இவையெல்லாம்.. இந்த ஆண்டில்.. இன்ன தேதியில்.. இன்ன நேரத்தில் ஏற்படும் என்று நவீன உலகம் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, ஞானிகளும் மேதைகளும் தவசிகளும் தங்கள் மெய்யுணர்வால் கணக்கிட்டுச் சொன்னது எப்படி?

    அர்த்தமுள்ள இந்து மதத்தில் கவியரசர் கண்ணதாசன் அழகாக குறிப்பிடுகிறார். மாதா.. பிதா.. குரு.. தெய்வம்.. என்கிற பழமொழியில்.. மாதா என்பது சர்வ நிச்சயமான ஒன்று! மாதா சொல்லித்தான் ‘பிதா’ அறிமுகாகிறார் – குழந்தைக்கு! அக்குழந்தையை பிதா – குருவிடம் கொண்டு சேர்க்கிறார்! குருவோ.. தெய்வத்தை உணரச் செய்கிறார்!

    இறைவன் இருப்பது எங்கே என்கிற கேள்வி எழுவது இன்று நேற்றல்ல.. மறைபொருளின் கீர்த்தி அறியாத வரையில்.. உள்ளத்தில் உள்ளது கடவுள் என்பது உணராத வரையில்.. தெய்வத்தைத் தேடும் மனிதனின் வாழ்வில் மாற்றமில்லை. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற நம் முன்னோர்கள் ஒவ்வொரு ஊரிலும் கோவிலை உருவாக்கினார்கள். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் பழமொழி தந்தார்கள். கற்பக் கிரகத்தில் கற்சிலையாய் இருந்தாலும் அங்கே கடவுளுக்கு நடத்தப்படும் ஆராதனையின்போது அந்த தீப ஒளி ஒருசில மணித்துளிகளுக்குள் .. சட்டென்று கண்ணில்பட்டு மறைந்தாலும் அங்கே காணும் தெய்வ தரிசனம் மனதில் நின்றுவிடும். ஆலயவழிபாட்டில்கூட அனுஷ்டிக்கப்படும் ஆராதனையிலும் சூட்சுமங்கள் பொதிந்தே உள்ளன. அவ்விடம் நின்று ஆண்டவன் எண்ணி அருளை வேண்டுவோர் உள்ளம் எப்படியிருக்க வேண்டும் என்பதைக்கூட கவியரசு கண்ணதாசன் இலக்கணம் வகுத்தாற்போல் ஒரு திரைப்பாடலில் தருகிறார் பாருங்கள்.. பாடலை மீண்டும் கேளுங்கள்..

    தெய்வம் இருப்பது எங்கே
    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே
    தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
    தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
    தெய்வம் இருப்பது எங்கே

    பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
    பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
    எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
    எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
    தெய்வம் இருப்பது எங்கே

    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
    ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
    அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
    அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை

    இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
    இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
    இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
    இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
    தெய்வம் ஏற்கும் உனது தொண்டு

    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
    தெய்வம் இருப்பது எங்கே

    திரைப்படம்: சரஸ்வதி சபதம்
    பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: K.V. மஹாதேவன்

    http://www.youtube.com/watch?v=vbwcFTkjtJI

    Share
  • புன்னகையை விற்பவளின் கதை

    திலினி தயானந்த

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. உங்களைப் போலவே நானும் துயருருவதை சொல்வதற்கும் இயலவில்லை. புன்னகையால் துயரக் கண்ணீரை மறைத்தபடி, ஒப்பனைகளால் பிரச்சினைகளை மூடி, இந் நிறுவனத்துக்கு வரும் உங்களை வரவேற்கிறேன்.

    இரு விழிகளிலும் மையிட்டு விழிநீரை மறைத்த போதிலும், இதழ்களுக்குச் சாயமிட்டு மெருகூட்டிய போதிலும், ஆத்மாவை இரு கைகளிலேந்தி புன்னகையால் உங்களை வரவேற்ற போதிலும், இப் புன்னகையால் மூடப்பட்டிருக்கும் எனது வாழ்க்கையானது முட்கள் நிறைந்ததென எவ்வாறு உரைப்பேன்? தேவதையொருத்தியாக நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள் எனினும் நான் ஒரு பொம்மையல்ல. இந் நிறுவனத்துக்குள் நுழையும் கணம்தொட்டு உங்களுக்கு காணிக்கையாக்கும் புன்னகைகளுக்கு ஊதியம் கிடைக்கிறதெனக்கு. வாய் நிறைய ‘வணக்கம்’ சொல்லி உங்களை வரவேற்று பணப்பையின் சுமைக்கேற்ப கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தும் நீங்களும் நானும் அறியாமல் எங்களை விற்கும் நடைமுறையிது. தலைமை அதிகாரியின் மனநிலையை சாந்தப்படுத்தவும் எனது புன்னகைதான் தேவைப்படுகிறது.

    அதனை விருப்பத்துடன்தான் செய்கிறேனா என்பதை யாரும் அறிய மாட்டார்கள். அழகாகப் புன்னகைத்தபடியே இருந்த போதிலும் அப் புன்னகைக்குள் கண்ணீரும் வெளியே குதித்திடவென அலைபாய்கிறது. இச் சமூகத்தில் மிகவும் கௌரவமாக மதிக்கப்படும் ஒரு தொழிலை நான் செய்கிறேன். எனினும் சிலர் இதனை மோசமான கோணத்தில் பார்க்கிறார்கள். நிறுவனத்துக்குள் பிரவேசிக்கும் தலைவாசலிலிருந்து புன்னகையை விற்பது உண்மைதான். உங்களை எமது நிறுவனம் பக்கம் ஈர்க்க நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதுதான் எனது தொழில். இலகுவானதும் நிம்மதி தரக்கூடியதுமான தொழிலென நீங்கள் எண்ணிய போதிலும், இது உண்மையில் இலகுவானதா என்ன? புன்னகைக்கக் காசு செலவழியாது என ஒரு பேச்சுக்குச் சொல்வார்கள். எனினும் நான் புன்னகைக்க எனக்கு பணம் கொடுக்கப்படுகிறது. நான் புன்னகைத்தால் மாத்திரமே எனது நிலைப்பாடு உறுதியாகிறது. வாழ்க்கையை வாழ்ந்து செல்லவே இன்று நான் புன்னகைக்கிறேன்.

    சில மாதர்கள், தங்களது காரியங்களை ஆற்றிக் கொள்ளவென கனவான்களின் கைகளில் தொங்கிப் புன்னகைக்கிறார்கள். எனினும் எனக்குக் கவலையில்லை. நான் எனது தொழிலைச் செய்கிறேன். பொருளாதாரத்தை வளம் மிக்கதாக்கும் செயன்முறை இது. யார் எவ்விதத்தில் அதனை நோக்கிய போதும், மாதக் கடைசியில் கிடைக்கப் போகும் ஊதியத்தைப் பற்றியே நான் சிந்திக்கிறேன். அதற்காகத்தான் நான் புன்னகைக்கிறேன்.

    Share
  • என் மனம் நிறைந்த மணிமொழிக்கு!…

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    என் மனம் நிறைந்த மணிமொழிக்கு,

    ஆச்சரியப்படாதே…நான் தான்…!

    உனது விழிகள் விரிவதை நானும் பார்க்கிறேன். கள்ளி….! மொதல்ல இதைப் படியேன்.

    இது மாதிரி ஒரு கடிதத்தை நீ என்கிட்டேர்ந்து எதிர்பார்த்திருக்கவே மாட்டேல்ல. அது தான் ‘நாம்’.

    மாறுதல் மட்டுமே சமயத்தில் மனசுல ஒரு புத்துணர்வைக் கொண்டு தரும்னு நான் தான் அடிக்கடி உன்கிட்ட சொல்லுவேனே. அதான்
    ‘ ஒரு கைபேசி கடிதமாய் கைக்குள் மாறியது’ . எப்பப்பாரு என் குரலைக் கேட்கிற உன் காதுக்கு இன்னிக்கி மட்டும் ரெஸ்ட்.

    இந்த லெட்டரை நீ ரசிச்சுப் படிச்சா கண்டிப்பா ஏதாவது ஒரு பரிசை அனுப்பி வை.. பின்னே…..’சும்மா கிடைக்குமா சந்தோஷம் ?’ உன்னோட இந்த நேரம் கண்டிப்பா உன்னை கொஞ்ச நிமிஷம் நாம பழகின அந்தக் நாட்களுக்கு ‘விசா இல்லாமே இலவசமா’ கூட்டீட்டு போகுமே. அதுக்கு தான் நான் கேட்கிறேன் பரிசு.

    இதுக்கெல்லாமா பரிசுன்னு முணுமுணுக்காத. ! கஞ்சூஸ்….! இணையத்துல போயி பாரு…இதுக்கெல்லாம் தான் ஆயிரம் ரூபாயைப் பரிசா அள்ளித் தராங்களாம்.

    அதுக்குன்னு இந்த லெட்டரை அப்படியே ஜெராக்ஸ் பண்ணி அவுங்களுக்கு அனுப்பி வெச்சுடாதே . இது நமக்கே நமக்கு மட்டும்.
    பரிசுப் பணத்தை விட பெரிசு…. இல்லையா? நமது நட்பு.

    எனக்குப் பரிசெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மணிமொழி….இப்போ நீ மகிழ்வா இருந்தா அதுவே போதும். என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா என்ன?

    ம்ம்ம்…தலைய தலைய ஆட்டு…! ஆமாம்….ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையைப் பத்திப் பேசிப் பேசி நாமளும் தான் நாளைத் தள்ளறோம். இன்னிக்காவது எந்தப் பிரச்சனையைப் பத்தியும் நினைக்காமே இப்படியே சந்தோஷமா நீயும் நானுமா கொஞ்ச நேரம் ‘போவோமா…..ஊர்கோலம்…..’ ன்னு ஊர் சுத்தலாம் வா..மணிமொழி.

    ஹையா…நான் ரெடி…!

    நீ ரெடியா….. அப்ப ஜூட்…..கதவைச் சார்த்து…நல்ல திண்டுக்கல் பூட்டாப் போட்டு வீட்டைப் பூட்டிட்டு ‘சிறகை’ எடுத்து மாட்டு.. !

    ‘இரு மனம் அன்பாலே ஒன்றானது
    நேசத்திலே உள்ளம் பண்பாடுது

    பறவைகள் போலே பறந்திடுவோம்
    மகிழ்வுடன் வாழ்வோம் எந்நாளுமே

    இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
    இதோ….இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்….

    அதோ..அதோ..என் பாட்டில் ஒரே ராகம்…
    கொடி நீ கிளை நான்

    மலர் போல் வாழ்வோம்
    துணை…நீ…..ஈ ஈ ஈ ஈ !

    பார்த்தியா….பார்த்தியா…..மணிமொழி…..நமக்காகவே ரேடியோல கூட நம்ம பாட்டையே போடறான் கேளு…!

    ஏய்…..இந்த ஆலமரம் எப்பிடி சூப்பரா இருக்கு பாரேன் ஜெயா …..! கொஞ்ச நேரம் இங்கயே உட்கார்லாம்டி.

    அந்த விழுது பாவம்டி…பச்சைப் புள்ளயாட்டம்….அதுல போயி இந்தத் தொங்கு தொங்குறே..நம்ம சைஸுக்கெல்லாம் இந்த ஆசை வரலாமா…?.விழுதுகள் கையை வாரி விட்டா, நமக்கு இடுப்பு எலும்பு நகுந்து போகும்…ஜாக்கிரதை…!

    கனவு தானே…..சும்மா நீ கண்ணை மூடு…! கண்டுக்காத…!
    “ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
    நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா

    தோழமை உறவுக்கு ஈடேதம்மா
    நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா”………

    என்னமா….பாடல் வரி எழுதிருக்கார்ல….சரி இங்கயே இப்படி உட்காரலாம்.

    சரி…கொஞ்ச நேரம் நீ பேசாமே இருப்பியாம்….நான் மட்டும் கடிதத்தைப் படிப்பேனாம் …முடிஞ்சா நீ “ம்ம்ம்..” கொட்டு….! இல்லாட்டியும் பரவால்ல.
    ஆனாத் தூங்கிடாதடி….என்னாலெல்லாம் உன்னைத் தூக்கிட்டுப் போக முடியாது. தாஜ்மகால் சைஸ்ஸுக்கு இருக்கே. பார்க்குறவுங்க என்ன சொல்லுவாங்க தெரியுமா?

    மிலிட்டரி டிரக்குல தாஜ்மகால் திருட்டுப் போகுதுன்னு சொல்லுவாங்க…! ஹ் ஹ் ஹஹஹா ..!

    சரி..நீ சிரிச்சது போதும்..இடி சத்தமா…கேக்குது .மழை வரும் போலிருக்கே…..? நீ .சீக்கிரமா மேல படிடி. பையன் காலேஜுலேர்ந்து வர்ற நேரம்.

    போச்சுடா……ஆரம்பிச்சுட்டியா…! அந்த இடத்தை கொஞ்சம் விட்டுட்டு வரமாட்டியே….! இரு..! க் க்க்க்க் கும்..!

    மணிமொழி…இதைக் கேளேன்…!

    நாம் சந்தித்துக் கொண்டு நான்கு வருடங்கள் கழிந்து விட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. எல்லாம் நேற்று நடந்தது போலிருக்கிறது. ஏதோ நேற்று தான் இரயில் ஏறி “காசி யாத்திரைக்கு” கூட்டத்தோட கூட்டமாப் புறப்பட்டது போலிருக்கிறது எனக்கு. நான்கு வருடங்களுக்கு முன்பு மணிமொழி என்ற உந்தன் பெயர் கூட எனக்கு அந்நியம் தான். ஆனால் இன்று அப்படியா ….? கால்கள் இல்லாமல் ஓடும் காலத்துடன் யாரும் போட்டி போட முடியாது. ஆறு ஆண்டுகளை ஓரந்தள்ளி ஓடிக் கொண்டிருக்கிறது காலம். இருப்பினும்,என் மனம் மட்டும் ஐம்பது வயதை விழுங்கி வெறும் நாலு வயதாகப் பொய்க் கணக்கு சொல்லிச் சமாளிக்கிறது தெரியுமா உனக்கு?

    ஹி ஹி ஹி ஹி ஹி ஹி …..!

    சிரிக்காதே. அது தான் நிஜம்.

    நாம் சந்தித்ததும் பிரிந்ததும் இரயிலில் தான். இடைப்பட்ட பதினைந்தே நாட்களில்,’ஆன்மீக சுற்றுலா’ என்று எண்ணிக் கொண்டு நூறு பேர்களில் ஒருத்தியாக கலந்து கொண்ட நாம் மட்டும் நம்மில் வளர்த்துக் கொண்ட நட்பு தான் நாம் வாழ்ந்த காலங்களுக்கு ஈடானது. இல்லையா?

    “ஓடுது ரயில் பாதை மனம் போலவே
    பாடுது குயில் அங்கே தினம் போலவே
    மா மரம் பூ பூத்து விளையாடுது
    காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
    பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்
    புதுமைகள் காண்போம் என்னாளுமே
    இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே”

    ஷ்….ஷ்….ஷ்….! கொஞ்சம். லெட்டரைப் படிக்க விடேன்.

    அன்று,இரயிலில் உனது ஊர் வந்துவிடும் அவசரத்தில் எனது கைகளை இறுக்கிப் பற்றிய வண்ணம் ….”இன்னும் இரண்டு நிமிடங்களில் நான் ‘கடலூரில் ‘இறங்கிடுவேன்…நீ உன் வீட்டுக்குப் போனதும் என்னை மறந்துடாதே….நினைவு வெச்சுக்கோ ஜெயா..என்ன..இந்த காசியாத்திரை பயணத்துல உனது நட்பும் பாசமும் தான் இறைவன் தந்தது “இறைவன் இதயங்களை இணைப்பதில் இணையற்றவன்…” நீ கடைசியாகச் சொல்லிச் சென்ற வாக்கியம் இன்னும் முற்றுப்புள்ளி இன்றி உனது அடுத்த வாக்கியத்திற்காக காத்திருக்கிறது மணிமொழி.

    ‘திருப்பாதிரிபுலியூர்” மஞ்சள் நிறத்தில் கறுப்பு வண்ண எழுத்துக்கள் என் கண்களை மறைத்தது. நீ இரயிலை விட்டு இறங்கியதும் உன் கலங்கிய கண்கள் என்னைப் பார்த்துத் திரும்பவும், உனது குழந்தைகளும் கணவரும் ஓடி வந்து உன்னைக் கட்டிக் கொண்டதும், அதைப் பார்த்த என் மனம் ஆனந்தம் அடைந்ததும், ஏதோ நினைவுக்கு வந்து மறந்ததைச் சொல்ல வந்தவளாக நீ திரும்பும்போது தண்டவாளத்தை விட்டு ஊர்ந்து வேகம் பிடித்தது ரயில்..என்ன சொல்ல நினைத்து திரும்பியிருப்பாள்? . விடை தெரியாத கேள்விகள் என்னுள் இன்றுவரையில்.

    நீ இறங்கிச் சென்றபின், நீ அமர்ந்த இருக்கை காலியாகி எனக்குள் எதையோ உணர்த்தியது. முகத்தைத் ஜன்னல் பக்கமாகத் திருப்பிக் கொண்டேன். அருகில் இருந்த சக பயணி அம்மையார் என் கவனத்தைக் கலைத்து , நீங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சிங்க இல்லையா…..? நான் அப்படில்ல நினைச்சேன்..அவுங்க அங்கிட்டு எறங்கிப் போறாங்க….நீங்க எங்கிட்டு போகணும் …? என்று கேட்கவும், ….எனக்குள் பெருமை பொங்கியது.

    நாங்க இதே இரயிலில் பதினைந்து நாட்கள் முன்பு காசி யாத்திரைக்காக போனோம்.. அவங்க ரயில் சினேகிதி தான் . ஆனால் பதினைந்து நாட்கள் கூடவே வந்தவங்க…என்றேன். மனம் ஏனோ துணுக்குற்றது.

    கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் என்னால் உன்னை நினைக்காமல் இருக்க முடியாது. நீயும் சொல்லிக் கொள்வாயே….அதெப்படி….பிரம்மன் ஒரே அச்சை பயன்படுத்தி .என்னையும் உன்னையும் அடுத்தடுத்துப் படைச்சாராடி….?
    என்று கேட்டு என் பதிலுக்காக ஆவலாகக் காத்திருப்பாய்.

    பதில் சொல்லத் தெரியாத நானும், அதை விட அதிசயம்…..உன்னையும் என்னையும் இப்படி இரயில் சினேகிதமாக்கி திருவிளையாடல் பண்றாரே அதை என்னன்னு சொல்வது? என்பேன்.

    நாம் சிரித்துக் கொள்வோம். வாழ்வின் அதிசயத்திற்கு அளவேயில்லை மணிமொழி என்பேன். நீயும் “தலையை ஆட்டி ஆமாமாமாம்’ என்று ஆமோதிப்பாய்.

    இன்னும் சிதம்பரம் சென்று சேர ஒரு மணி நேரம் இருக்கும். கண்கள் ஜன்னலின் வழியாக வெளியே நோக்கியது. பூமி தனது பச்சைப் பட்டுப் புடவையை வெய்யிலில் காய வைத்திருப்பது போல பசுமை கண்களைத் தாலாட்டியது. இளந்தென்றல் முகத்தைத் தடவிச் சென்றது. கனத்த மனம் இலவம் பஞ்சானது..

    ஆச்சு…..இன்னியோடு யாத்திரை முடிந்து வீட்டுக்குச் சென்று பழையபடி அதே..சமையல் பாத்திரத்தைக் கையிலெடுக்க வேண்டியது தான்…நானும் வீட்டைக் கூட்டிக் கழித்துப் பெருக்கி வகுத்து விடை தெரியாத வீட்டுக் கணக்கைப் போட்டுப் போட்டு அழிக்க வேண்டும். இத்தனை நாட்கள் கூடவே நடந்து வந்த உனக்கும் அங்கே உன் வீட்டில் அதே நிலை தான். எனக்கும் தெரியும்..

    ஆனால் என்ன, ஒவ்வொரு நாளும் நாம் நினைத்து நினைத்து புளங்காகிதம் அடைய இந்தப் பதினைந்து நாட்களில் எத்தனை விஷயங்கள் விஸ்வரூபமாய்….வாழ்கையை, உயிரை, அன்பை பாசத்தை, வாழ வேண்டும் என்ற வெறியை, உயிர் மீது மரியாதையை , மரண பயத்தை, நாம் அனுபவிக்கும் சுகமான வாழ்வை….ஏழ்மையை இயற்கையை,இயற்கையின் சீற்றத்தை, அதன் ஆளுமையை நமக்கு நாம் வாழும் உலகத்தில் மறு பகுதியை நம் கண் முன்னே அனுபவமாய் உணர்வு பூர்வமாக காண்பித்து புத்தி சொன்னது. இந்த அனுபவம் நமக்கு இந்த யாத்திரை சென்றிராவிட்டால் என்றைக்குமே கிடைத்திருக்காது.இல்லையா மணிமொழி.

    நடந்ததெல்லாம் கடந்து போய் பல வருடங்களானாலும் என்னுள் அந்த நினைவுகள் இன்று வரை அகலாமல் இருப்பதை நீ இந்தக் கடிதம் மூலம் படிக்கும் போது, எனது நினைவுப் படுகையுள் புகுந்திருக்கும் அத்தனை நிஜங்களும் உனக்குள்ளும் பதிவாகியிருக்கும் அல்லவா அதனால் தானோ என்னவோ உன்னைப் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம் நாம் சேர்ந்து கடந்த அந்த நிழல் நாட்களும் நம்முடன் நினைவுகளாக மீண்டும் பயணிக்குமே என்பதால் இதையெல்லாம் இப்போது இங்கே எழுதுகிறேன்.

    எதிரெதிரே உட்கார்ந்திருந்தும் நாம் ஓரிரு முறைகள் மட்டும் பார்வைகள் பரிமாற்றத்துடன் ஒருவருக்கொருவர் சம்மந்தமே இல்லாமல் அமர்ந்திருந்தோம். அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான் வருகிறது. நீ தான் முதலில் பேசினாய் “அந்த புத்தகத்தைத் தரீங்களா கொஞ்சம்..பார்த்துட்டு தரேன்” கொடுத்ததும் வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு திருப்பி கொடுத்து விட்டாய்.

    ஏன்….? என் மௌனமான கேள்வி உனக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

    அந்தப் புத்தகத்தில் ஒன்றும் இல்லை….என்றாய்.

    என்ன எதிர்பார்க்கிறீங்க? என்றேன்.

    காசிக்குப் போறமே…ஏதாச்சும் தேவாரம்..திருவாசகம்…என்று அடுக்கியவளை….இந்தாங்க….தேவாரம்…! என்று என் கைப்பையிலிருந்து எடுத்துக் கொடுத்தேன்.

    சிரித்துக் கொண்டே வாங்கியவள்..உங்க பேரு ? என்றதும்….நமக்குள் பரஸ்பர பரிமாற்றம். கேள்வியும் பதிலுமாய் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அந்த சில நொடிகள் போதுமானதாக இருந்ததே.

    ரயிலின் தாளஜதி காதோடு பேசிக் கொண்டே இருந்தது. எனது கண்கள் ஜன்னல் வெளியே தூரத்து மேகங்களை அளவெடுத்தது. திடீரென்று உனது கைபேசி பாட ஆரம்பித்தது.
    ‘யாரோ யாருக்குள் இங்கு யாரோ
    யார் என்று கண்டு யார் சொல்வாரோ

    கடல் கொண்ட மழை நீரை
    இனம் காண முடியாது

    உண்ணும் சோறு நூறாகும்
    ஒன்றுக்கொன்று வேறாகும்

    உப்பில்லாமல் என்னாகும்
    உப்பைப்போல
    நட்பை எண்ணுவோம்”
    நான் சிரித்ததை நீ பார்த்துவிட, என்னாச்சு? என்ற உனது கேள்விக்கு…கொஞ்ச நேரம் முன்னாடி ‘தேவாரம்’ கேட்டதை நினைச்சேன்….சிரிச்சேன். என்றேன்.

    ‘தேவாரம்’ படிச்சா இந்தப் பாட்டு கேட்கக் கூடாதாக்கும்…நீங்க போட்ட சட்டமா? என்று கூலாகக் நீ கேட்டதும்.
    அட….இது நன்னாருக்கே…..! என்ற நான்…ஆமாம்…நான் சட்டம் போட்டா நீ கேட்டுடப் போறியாக்கும்…என்றேன் உரிமையோடு.

    அதன் பின்பு நமக்குள் ஒரு புரிதலும் கூடவே நடந்ததை நமது பேச்சுவார்த்தைகள் பிரமாணம் செய்து கொண்டே வந்தது.

    இரயிலில் சள சள வென்று பலரும் பேசிக் கொண்டே வந்தார்கள். நீயும் நானும் மட்டும் பல வேளைகளில் ஒன்றும் பேசாமல்…! மௌனம் நம்மைச் சுற்றி வேடிக்கை பார்த்தது. இரவு ஓடிப் போனது. வாரணாசியில் சென்று நம்மை இறக்கி விட்ட இரயிலைத் தட்டி நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

    நூறு பேர்களோடு இருந்தாலும் கூட…அதில் நாம் இருவர் மட்டும் தனியாகிப் போனோம். ‘மந்தைகளோடு சேராத ஆடுகளா நீங்க ரெண்டு பேரும்’ என்று நம் குழுமத் தலைவர் கேலி செய்ததும் நீ அவரைப் பிலு பிலு வெனப் பிடித்துக் கொண்டதும், இதோ இவ இருக்கா மாமா…ஹிந்தி தெரியுமாம்….பார்த்துப்பா…ச்சே..இங்கயும் நமக்கு சுதந்திரமே இல்லையா …என்றதும் அவர் ‘துண்டைக் காணோம்….ரகத்தில் ‘அம்மா…மணிமொழி, உங்க ரெண்டு பேர் வம்புக்கே நான் வரலை….பத்திரமா வந்து சேருங்க என்று சொல்லிவிட்டு நம்ம திசைக்கே கும்புடு போட்டுட்டுப் போனதை இப்போ நினைத்தால் கூட சிரிப்பு வருகிறது.

    நம்மைக் ஏன் என்று கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் விடியும் முன்னமே கிளம்பி கங்கைக் கரைப் படித்துறைக்குச் சென்று அமர்ந்து கொண்டோம். உன் கைபேசியில் மெல்லிய புல்லாங்குழல் இசைக்க, மூடிய கண்களுக்குள் கிருஷ்ண பகவான் எங்கேயோ குழலூதுவது போல கற்பனை செய்ய வைத்தது. குளிர் காற்று மெல்ல வீச, இருள் விலக விலக கண்முன்னே பரந்து விரிந்த கங்கை மெல்ல மெல்ல கண்விழிப்பது போல அலையலையாய் ஒளிக்குள் சிக்கிக் கொள்ளும் இனிமையை கண்கள் இரண்டும் நிழற்படம் எடுத்துக் கொண்டது.
    ஆங்காங்கே படகுகள் ஆயத்தமாக நாமும் அந்த இளங்காலைப் பொழுதில் படகு சவாரி செய்தோமே…நினைத்தே பார்த்திராத திவ்ய தருணம் அது. அதிகாலை நேரத்தில் கங்கையில் படகு சவாரி நினைத்த போதேல்லாம் கிடைத்து விடுமா என்ன?

    எனக்கு மிகவும் பிடித்தமான
    “கங்கே……
    துடியில் உணரும் த்ரிபுட கேட்டு
    துயிலுணர்னு வா…..டி எண்டே…..
    நடன மண்டபம் துறந்து வா…..
    கங்கே…..கங்கே……!

    பாடகர் ஜேசுதாஸ் அவர்களின் மந்திரக் குரலில் வடக்குநாதன் படப்பாடலை மானசிகமாக மனதுக்குள் இசைத்து லயிக்கிறேன்..

    எத்தனை அருமை….எத்தனை இனிமை…என்று அமைதியை உள்வாங்கிக் கொள்ளும்போது தானே வாழ்வின் அர்த்தம் புரிகிறது.
    அரைமணிநேரப் படகு சவாரி அதுவும் இயற்கைச் சூழலோடு இனிமையான இசையோடு அன்றைய பொழுதின் ஊக்கபானம் நமக்கு.
    மெல்ல இறங்கி அப்படியே கங்கையில் முழுக்குப் போட்டுவிட்டு நாம் தங்கியிருந்த இடத்தை நோக்கி நடையைக் கட்டினோமே ஞாபகம் வருதா?

    காலையில் காசி விஸ்வநாதர் தரிசனம் என்று நம் எல்லோரையும் அழைத்துச் செல்ல, சின்ன சந்துகள், முட்டுச் சந்துகளை கடந்து தெருக்களைத் தாண்டி நடந்தே சென்றதும் ஒரே கால்வலி நாம இங்கேர்ந்து ஒரு சைக்கிள் ரிக்சா வெச்சுண்டு போயிடலாம் என்று சொன்னதும், இருவரும் ஒரு சைக்கிள் ரிக்சாவில் ஏறி ‘மந்திர் ஜானா ஹை ‘ என்று ஏறி உட்கார…அவனும் மெல்ல ரிக்சாவில் ஏறி உட்கார்ந்தவன் ‘அந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை ” எனும் ஸ்டைலில் மெல்ல ஓட்ட …..பொறுமை இழந்தவளாக “ஜல்தி ஜானா ஹை ….தோடா ஜல்தி சலோ..” என்று அவசரப்படுத்த…அவன் வேகமாக சந்து சந்தாகச் சுற்றிக் கொண்டு வந்து நம்மை இறக்கி விட்டு விட்டு “பீஸ் தேதோ….என்றான்.

    இருபது ரூபாயாம்…என்று கொடுத்துவிட்டு இறங்கினதும் அவன் ஏனோ தலை தப்பியது என்பது போல விருட்டென்று பறந்தான். பிறகு தான் தெரிந்தது நாம் இருவரும் எங்கு ஏறினோமோ அதே இடத்திலேயே வந்து இறங்கினோம் என்று. கண்முன்னே….சிறு சந்து..அதன் உள்ளே தான் கோயில்.என்ற விஷயம் புரிந்ததும் நம் இருவர் முகத்திலும் ஈயாடலை. அரைமணிநேரம் வேஸ்ட் என்று சொல்லி என்னை அடிக்க வந்தாயே….உன்னை நம்பினேன் பாரு…..ஹிந்தி தெரிஞ்சுமா உன்னை ஏமாத்தினான்…என்று நீ கேட்டதும். இல்ல பக்கத்தில நீ இருந்ததால தான் ஏமாத்தினான் என்று நானும் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டேன்.

    டீ …ஏமாத்துறாங்க…ஏமாந்துடாதே….ஜாக்கிரதை….இப்படிச் சொல்லிக் கொண்டே நாம் ஏமாந்த இடங்கள் தான் ஜாஸ்தி…!

    ஹரித்வாரில், பதஞ்சலி ராம்தேவ் பாபா ஆஷ்ரம் சென்று பார்த்துவிட்டு அங்கிருந்த கடையில் இரண்டு பாட்டிலைத் தூக்கிக் கொண்டு வரும் என்னைப் பார்த்து, அது என்ன என்று துளைத்தெடுத்தாய். உனக்கு மட்டும் கேட்கும் குரலில் “கோமியம்” என்றேனே..உடனே நீ அடிப்பாவி அதை ஏண்டி பணத்தைக் கொடுத்து வாங்கறே நம்ம ஊரு தெருவுலயே ஒரு நாளைக்கு ஓசிலயே ஒன்பது லிட்டர் பிடிச்சுக்கலாமேடி என்று நீ சொன்னதும் நம் அருகில் கூட இருந்த அத்தனை பேருமே சிரித்த சிரிப்பும் என் முகம் போன போக்கும் இன்னைக்கும் உனக்கு நினைவு இருக்கும் தானே?

    ரிஷிகேஷில் சென்று லக்ஷ்மன் ஜூலாவில் ஆடி ஆடி நடந்து சென்று அந்தக் கடைசியில் செருப்பைக் கழட்டி வைத்துவிட்டு பின்பு அதை அப்படியே மறந்து போய் திரும்பி வந்தபின் செருப்பின் நினைவு வர அந்தத் தொங்கு பாலத்தைப் பார்த்து மீண்டும் அது வரை சென்று வர பயந்து செருப்பையே நினைத்துக் கொண்டு வெறுங்காலில் ரிஷிகேஷ் முழுக்க நடக்க நடக்க…..”உனக்குப் புண்ணியந்தாண்டி …..” என்று நீ உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்க….எத்தனை மறக்க முடியாத நிகழ்ச்சியை நாம அனுபவிச்சிருக்கோம் இல்லையா மணிமொழி?

    நம்ம ரஜனிகாந்த் அவர்கள் வழக்கமாகத் தங்கும் அறையை நீ உனது கைபேசியில் படம் பிடித்துக் கொண்டு ஊருக்குப் போனதும் உனக்கொரு காப்பி தரேன்ன்னு சொல்லிவிட்டு இத்தனை வருஷமா நீ தரவேயில்லை…..என்று உன்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பேனே நினைவு இருக்கா…மொதல்ல ஒரு காப்பி போட்டு வை..! நரசுஸ் காப்பி இல்லடி….நன்னாக் காதுல வாங்கிக்கோ. ஃபோட்டோ காப்பி…அது..!

    ரிஷிகேஷ் மேலே சஹஸ்ராரம் என்ற ஒரு இடத்திற்குப் போனதையும், அங்கிருந்த நீர்வீழ்ச்சியைப் பார்த்து விட்டு அந்த ஸ்படிக நீரை பாட்டிலில் பிடித்துக் கொண்டு நாம் வருவதற்குள் நம்மை விட்டுவிட்டு பஸ் கிளம்பிவிட ரெண்டு பேரும் தனித்து விடப் பட்டு தவித்துப் போனோமே….அந்த சில நிமிடங்கள்…உனது கைபேசியில் சார்ஜ் தீர்ந்து விட, அந்தி மயங்கி இருள் சூழ, மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட…நீ என்னை திட்டோ திட்டு திட்ட…நான் அழாத குறையா, ரஜனி ஸ்டைல்ல ‘கடவுளே…கடவுளே….கடவுளே….’ என்று படபடக்க…
    எப்படி வந்து சேர்ந்தோம் என்றே இன்னும் புரியவில்லை..எல்லாம் அந்த ஈசன் செயல் தான். என்ன சொல்ற? திரும்பி வந்து ஆளுயர ஸ்படிக இலிங்கத்துக்கு அந்த சஹஸ்ராரத்தில் பிடித்த நீரை விட்டு வழிபட்டதும் பட்ட துன்பம் சட்டென மறந்து போனதே….!

    பத்ரிநாத் பார்க்க கிளம்பியாச்சு. நூறு பேரும் இரண்டு சொகுசு பஸ்ஸில் பிரிந்து கல கலப்பாக ஏறி அமர்ந்ததும் ஒன்றன் பின் ஒன்றாக பஸ் கிளம்பியது. வெளியில் ஒரே மழை..குளிர்…அதிகமாக ரிஷ்கேஷில் மினெரல் வாட்டர் பிஸினெஸ் தான் இருந்தது . தண்ணீர் பாட்டில் ரெண்டு வாங்கிக் கொண்டோம்.அப்போது தெரியாது அந்தத் தண்ணீர் பாட்டிலின் எப்படி உதவும் என்பது..

    நான்கு மணிநேரம் இமயத்தின் மலையில் பஸ் வளைந்து நெளிந்து நம்மை இழுத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தது. அதள பாதாளத்தில் கங்கை கரை புரண்டு ஓடுகிறாள். காசியில் பார்த்த அமைதியான கங்கை ஆற்றிற்கும், ஹரித்வாரில் பார்த்த கங்கை நதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத காட்டாற்று வெள்ளமாகக் கரை புரண்டு ஓடியது ரிஷிகேஷ் மலையில்.

    நம்மோடு வந்த ஒரு டாக்டர் அனைவரிடமும் சொல்லுகிறார்….”நான் இங்க ஒரு டாக்டர்…இந்த பஸ்ஸுல உங்களோட வரதுல உங்களுக்கெல்லாம் ஒரு சௌகரியம்…என்னன்னா…என்கிட்டே எல்லா விதமான மாத்திரைகளும், மருந்தும் இருக்கு…உங்க யாருக்காவது ஏதாவது ஒண்ணுன்னா உடனே என்கிட்டே சொல்லுங்கோ…” வாமிட் , தலை சுற்றல், மயக்கம்..என்று அடுக்கிக் கொண்டே போனார். கூடவே பெருமை பொங்கப் பார்த்தார் அவரது மனைவி.

    நல்லவேளையா….நம் பஸ்ஸில் ஒரு டாக்டர் இருக்கார் இல்லையா? என்று நிம்மதியானோம். இமயம்…….வானளாவ உயர்ந்த மலை..பல இடங்களில் மலையைப் பார்த்தால் பயமாகவே இருந்தது. மேலே ஏற ஏற…..காதை அடைத்துக் கொண்டோமே….திடீரென்று நம் பஸ்ஸின் முன்னே ஒரு பெரிய பாறாங்கல் பெருத்த ஒலியோடு வந்து விழுந்து வழிமறித்தது. ஊஊஊஊஒஈஈஈ..என்ற சத்தம் நாம் எல்லோருமே ஒரு கணம் பயந்து வீரிட்டோம் இல்லையா? அந்த பயம் இது வரை வந்ததில்லை. பஸ் அதே இடத்தில் சத்தியாகிரகம் செய்தது. பஸ் உள்ளிருந்து ஒவொருவராக இறங்கி எப்படியாவது அந்த பாறையை உருட்டி தள்ளி விடலாம் என்று பிரயத்தனம் செய்தார்களே..மழை வேறு விடாமல் பெய்தது. அடுத்தது வேற பாறை எதாச்சும் வந்து விழுமோ….? தலையில் பாறாங்கல்லைப் போட்டார் என்று சொல்லுவோமே….என்றெல்லாம் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருந்தோம்.

    முப்பது பேர்களின் முயற்சியால் கூட அந்தப் பாறையை நகர்த்த முடியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு கிரேன் வந்து தனது இரும்புக் கையால் அலாக்காகத் தூக்கி அந்தப் பக்கமாக எறிந்ததே….பஸ் மீண்டும் விடாக் கண்டனாக மேலே கிளம்பியது. இன்னும் ஏழே கிலோமீட்டர் தூரம் தான். கௌரி குண்ட் வருவதற்கு. அப்பாடா என்று பெருமூச்சு விடும்போது…வண்டி இனிமேல் போகாது என்று சொல்லி நிறுத்தி விட்டானே.

    அத்தனை பேரின் என்னாச்சு? என்ற கோரஸான ஆவலும்….அதோ மலையிலிருந்து சரிவு…..விழுகிறது….அவன் சொன்ன இடத்தில் செக்கச் செவேல் என்று செம்மண் குழம்பு அருவியாக வழிந்து விழுந்து கொண்டிருந்தது. அதில் ஒரு டையர் ஏறினாலும் அவ்ளோ தானாம்….பஸ் வழுக்கிக் கொண்டு அதள பாதாளத்தில் விழுந்து விடுமாம். அவன் சொல்லிவிட்டு எல்லாரும் ஜன்னலை இழுத்து மூடிக்கங்க . இனிமேல் நாளைக்கு காலை தான் வண்டி திரும்பும்..மேற்கொண்டு போகாது. பத்ரியும் இல்லை கேதாரும் இல்லை…என்று சொல்லிவிட்டான்.

    அத்தனை மனங்களும் இருளில் மூழ்க பயத்தின் உச்சத்தில்…..மெல்ல மெல்ல சூழ்நிலையைப் புரிந்து கொள்ள எத்தனை சிரமப் பட்டோம் இல்லையா?

    நாம் ஏறிவந்த பஸ்ஸில் இருந்த ஒவ்வொருவரும் முதலில் சள சல வென்று பேசினார்கள்…பின்பு மெல்ல மெல்ல பேச்சு அடங்கியது…மௌனம்…..அமைதி….பயம்…..பல ஆயிரம் அடிகள் உயரத்தில் இமய மலை உச்சியில் ஒரே ஒரு பஸ் மட்டும் போகும் அளவுக்கு இருக்கும் இடத்தில் பஸ் நின்றுவிட, ஒரு பக்கம் உயர்ந்த மலை இந்தப் பக்கம் படு பாதாளம்….கீழே கரை புரண்டு ஓடும் நதி…எப்போ வேண்டுமானாலும் மேலிருந்து பாறை பெயர்ந்து பஸ் மீது விழலாம்…நிலச் சரிவு உண்டாகலாம்…..எதுவும் நடக்கலாம். உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

    முதல்லயே கைபேசி எல்லாம் உயிர் விட்டது. உண்மையின் சாரம் நமக்குப் புரிந்த போது பயம் பற்றிக் கொண்டதே….நீயும் நானும்…..
    கைகளைப் பற்றிக் கொண்டோம்….நான் என் குடும்பத்தையும், நீ உன் குடும்பத்தையும் மனசுக்குள் நினைக்க ஆரம்பித்தோம். இங்கெல்லாம் வந்திருக்கவே வேண்டாமோ…..என்று கூட முனுமுணுத்தோம் . அதற்குள் தானே அது நடந்தது..

    அந்த டாக்டரின் மனைவி வீல் என்று கத்திக் கதற ……அய்யய்யோ…..என்னாச்சுன்னா….என்று சொல்லி அழ ஆரம்பித்தாள் ….அவருக்கு உடல் முழுதும் வியர்த்து விட, மூச்சுத் திணறல் எடுக்க…..மயக்கம் வர..மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்ததன் அறிகுறி அனைத்தும் தெரிய வந்தது. அத்தனை பேருமே நடுங்கிப் போனோமே…உடனே விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தோம்….மறுபடியும் மறுபடியும் சொன்னோமே…அத்தனை பேரின் பெட்டிகளும் அடுத்த பஸ்ஸில் வர, நாம் மட்டும் இங்கே மாட்டிக் கொள்ள…அந்த மாமி..இவரோட மாத்திரைகள் எல்லாம் அந்த பஸ்ல மாட்டிண்டுடுத்து….இப்ப நான் என்ன செய்வேன்..? .என்று கதற, ஒரு வழியா அவரை அப்படியே பஸ்சுக்கு உள்ளயே தரையில் படுக்க வைத்து, நாம் கொண்டு போன தண்ணீரை அவர் மேல் தெளித்துக் குடிக்க வைத்து சிறிது நேரத்தில் அவர் மெல்லக் கண் விழித்தார்..அவருக்கு உயிர் வந்ததோ இல்லையே நமக்கெல்லாம் உயிர் வந்தது…இல்லையா…? ஆனாலும் ஒருத்தர் முகத்தில் சிரிப்புக்கான அறிகுறி கூட இல்லையே…..பின்னே…எப்படி? நம்ம உயிரே இங்க பெரிய கேள்விக்குறி மாதிரி இருக்கே…எப்படிச் சிரிக்கறது.

    மணிமொழி…..!

    ஜெயா….!

    நமது குரல்கள் மட்டுமே நம்மை இங்கு இருக்கிறோம் என்று அடையாளம் தெரிந்து கொள்வதற்கு…..!
    எங்கும் இருள் சூழ்ந்து விட்டது. மலை, மரங்கள்.வானம்,பள்ளம்,ஆறு,பஸ்…என்று எதுவுமே அடையாளம் இல்லாத ஒரே கும்மிருட்டு…அசுரக் காற்று பஸ்ஸை அசைத்துப் பார்த்தது…..! காற்றுத் தோற்றுப் போனதில் நமக்கு கொஞ்சம் சந்தோஷம். பசி…..தாகம்….பயம்……கவலை…என்னென்னவோ கற்பனைகள், சிந்தனைகள்…..இன்றோடு இப்படம் கடைசிடி……! என்று சொன்னதற்கு…..அத்தனை பேரிடமும் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டேன். நினைவிருக்கா…..?

    ஐயோ….மணிமொழி…..வாழ்க்கையில் இந்த நிலை வேற யாருக்குமே வந்துடக் கூடாதுடி….பஸ் மேலே பாறை உருண்டு விழுமா? பஸ்ஸே மலைச் சரிவுல உருண்டு விழுமா….? எப்போ எது நடக்குமோ? என்ற கவலையில்…..வெறும் சப்தத்தை மட்டும் வைத்து திகிலோடு தூங்காமல் விடிய விடிய உட்கார்ந்திருந்தோமே நினைவிருக்கு இல்லையா?

    பின்னே…மறக்க முடியுமா…?

    நமக்கு பத்ரியும் வேண்டாம் கேதாரும் வேண்டாம்….வீட்டுக்குப் போனால் போதும்….! அதுவாவது நடக்குமா?

    மழை விடாமல் பெய்தது…..! அருகில் அப்பப்போ டப்டப டப் டப என்று சத்தம் கேட்கும்…பாறைகள் எங்கோ உருளும் சப்தம்…நாம் திகிலுடன் கைகளைப் பற்றிக் கொள்வோம்…கண்களுக்குள் ‘ கமலும் ரேகாவும்’ “என்ன சத்தம் இந்த நேரம்” பாடிவிட்டு பயந்த நிமிடத்தை நினைவுக்கு கொண்டு வந்து நீட்டும். சீ…..போ….என்று துரத்தினாலும் மீண்டும் …ஒன் …டூ…த்ரீ….என்று காதுக்குள் கேட்கும்.

    மணிமொழி…நெஜம்மா பயம்மா இருக்குடி….!

    எனக்கும் தாண்டி…ஜெயா…!

    அந்த நேரத்திலும் ஒரு பாட்டு…..சட்டி சுட்டதடா…கை விட்டதடா…..புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா…..! போனால் போகட்டும் போடா….!

    என்னடி…..இந்த மாதிரி பாட்டெல்லாம் பாடறே….! வேண்டாம் ஜெயா…..பயமா இருக்கு….என்று எனது கைவிரல்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடுங்கினியே. அதை உணர்ந்ததும், நானும்….அச்சமில்லை….அச்சமில்லை….அச்சமென்பதில்லையே…உச்சி மீது இமயம் வந்து கல் சொரிந்த போதிலும்…அச்சமில்லை…அச்சமில்லை……என்று எனது நடுங்கும் குரலில் …….நா…நா….நான்….ப் ப் ப் ப் பா ட ….!

    அப்படியே…கண்ணை மூடித் தூங்கிருவோம்….பொழைச்சுக் கிடந்தா நாளைக்குப் பார்ப்போம்…என்றபடி .பஸ்ஸுக்குள் நம்மையும் மீறி உறங்கிப் போனோம்…காலையில் கண்விழித்தபோது…..நாம் அனைவரும் உயிருடன்…இருக்கிறோம் !

    எத்தனை சந்தோஷம் நம்முள்..!…மலைகளும், மரங்களும், பளிச்சென்று வண்ணப் படங்களாகத் தெரிந்தது.மழை சுத்தமாக நின்று விட்டிருந்தது..

    இன்று பிழைத்தது இறைவன் நமக்குப் போட்ட உயிர் பிச்சை தான். நேற்று இரவு எதுவும் நடந்திருக்கலாம்….நமக்கு ! அது தான் நிஜம். இல்லையா?

    ஒரு நாள் தூக்கம், ஒரு நாள் பசி, ஒரு நாள் எங்கும் இறங்கி நடக்க இடமில்லாமல்……..கண்ணாடி வழியாக ஒரே மலையைப் பயந்தபடி பார்த்துக்கொண்டு……”அந்த ஒருநாள் பீதியில் உறைந்தோம்…..இன்று நினைத்தால் என்னென்ன பயமோ”
    பாதி விழிகள் மூடிக் கிடந்தே….நடுங்கும் வேளையிலே…நீ சாட்சியடி மணிமொழியே ….! அன்றொருநாள்….இமய மலையில்….
    நீ இருந்தாய் என் அருகே…!

    அந்தப் பொழுதிலும் நான் பாட….அதை நீ ரசிக்க…இன்னும் நாம மலை இறங்கலை நினைவு வெச்சுக்க…என்று நீ சொன்னது இன்னும் என்
    நெஞ்சுக்குள் திக் திக் திக்..!

    மீண்டும் ரிஷிகேஷ்…அங்கு ஒரு ஆஷ்ரம் அருகே….ஒரு பெரிய மரம்…இது நினைவு இருக்கா மணிமொழி…!
    இந்த மரம் தான் ருத்திராட்ச மரம் என்று நாம் நினைத்துக் கொண்டு அதை தொட்டுத் தொழவும், இன்னும் பலர் வேக வேகமாக வந்து அந்த மரத்தை கட்டித் தழுவி, அதற்கு நமஸ்காரம் செய்து, கண்ணில் ஒத்திக் கொண்டு …”இதுவா..இதுவா…ஹேய்…இது ருத்திராட்ச மரமாம்…” என்று இன்னும் சிலரை அழைக்க… நம் கண்கள் வேறு திசையில் பார்த்ததும், அங்கு சுற்றிலும் இரும்பு வலை போட்டு அதனுள்ளே ஒரு மரம்….’ருத்ராட்ச மரம்’ என்று ஹிந்தியில் எழுதி இருந்தது. அப்போ இந்த மரம் என்று நாம் தலையை உசத்திப் பார்க்கையில்…இது ஒரு காட்டு மரம்…என்று தெரியவர…..நாம் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோமே. அதற்குள்..”நாம எத்தனை புண்ணியம் பண்ணிருக்கோம்..தெரியுமா….இப்படி ஒரு ருத்திராட்ச மரத்தையே கட்டிப்பிடிக்க…!” என்று பில்ட் அப் வேற..

    ஹேய்….மணிமொழி….என்னாச்சு…இப்படிக் கொறட்டை விடறே…! ஹேய்…இப்பவே தூங்கிட்டியா? பாதி லெட்டர் தான் படிச்சேன்…இன்னும் எவ்ளோ இருக்கு தெரியுமா? அதுக்குள்ளே இப்டி தூங்கிட்டியே !….கண்டிப்பா…..என்னால.இந்தத் தாஜ்மகாலைத் தூக்க முடியாதுடி….என்று சொல்லிச் சிரித்தபடி தண்ணீரை எடுத்து மணிமொழி மீது தெளித்து எழுப்புகிறேன்..

    “ஐயய்யோ …இடி….மழை…” என்று நாகேஷ் ஸ்டைலில் துள்ளி எழுந்து பேந்தப் பேந்த விழிக்கிறாள் மணிமொழி.

    ஜெயா…மனியாச்சுடி….பையன் காலேஜ்லேர்ந்து வர நேரம்…என்றவள்…வீட்டுக்குப் போகணும்…..என்று சிறகை விரித்துச் சிட்டாகப் பறந்தாள் மணிமொழி. அவளது கைகளுக்குள் கடிதமும் பத்திரமாக.

    மணிமொழி….கடைசி ஒரு வரியை வீட்டுக்குப் போய் படி….என்ன….?

    எனது ஐம்பது வருட கால வாழ்வில் ஒரு பதினைந்தே நாட்கள் என் இதயத்தை விட்டு அகலாமல் பச்சைக் குத்திக் கொண்டது அந்த நாட்கள். உனக்குள்ளும் அந்தத் தாக்கம் ஏற்பட்டு இன்னும் அப்படியே இருக்கும் என்ற என் நம்பிக்கையை நீ புறந்தள்ள மாட்டாய் என்றறிவேன். இனிமேல் அடுத்த ஆன்மீகச் சுற்றுலா…..!

    வாயை மூடு…நாம எங்கயும் இனிமேல் இப்படிப் போகவேண்டாம்……!

    சரி…சரி…மணிமொழி…இந்தக் கடிதம் உன் கண்ணை நிறைத்தால் கண்டிப்பாக என் மனம் நிறைக்க பதில் போடுவாய் என்று நம்புகிறேன்.

    என்றும் உனது நினைவாக,

    ஜெயா….

    Share
  • வாசிப்புகளின் வாசலில்…. (1)

    தி.சுபாஷிணி

    வாசிக்கப்படாத நூல் வாழுமா?

    ஒரேர் உழவன் கணபதியா பிள்ளை மகனார் நாஞ்சில் நாடன்.

    unnamed

    தலைவி தலைவன்பால் காதல்வயப்பட்டு, தன்மனம் முழுவதும் அவனை அமர்த்திப் பரவசப்பட்டுக் கொண்டிருக்குங்காலை, தலைவனே அவள் எதிரே தோன்றிவிடுகின்றான். தன் காதலைத் தானே ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, எங்கிருந்துதான் நாணம் வந்துவிடுகின்றதோ, தன்னையறியாது தன் கரங்களால் கண்கள் இரண்டையும் பொத்தி மறைத்துக் கொள்கிறாள். நாணத்தின் செம்மை முகத்தில் பரவ, முகம் பொன்னாலான தாமரையாய் மலர்ந்து மிளர்கின்றது. தலைவனுக்கோ, மதுரை மீனாட்சியம்மன் கோயில் குளத்தில் உலவும் பொற்றாமரை நினைவிற்கு வந்து விடுகின்றது. அங்குதான் மீன்கள் இருக்காது. தாமரை மட்டும் இருக்கும் எனக் கொள்கின்றான்.

    “தோற்றும் இயலை மறைத்தீர். பொற்கஞ்சமும் தோற்றுவித்தீர்

    சாற்றும் பொழுதினிலே நீரோ மதுரைத் தடம் பொய்கையே!”

    என்பவை பாடல்வரிகள்.

    இதை “நாணிக் கண் புதைத்தல்” என்கிறார், தளவாய் இரகுநாத சேதுபதியின் ஆஸ்தான வித்வான் அமிர்தக் கவிராயர். “நாணிக் கண் புதைத்தல்” என்னும் சொல்லாட்சியே அற்புதமாக இருக்கின்றது.

    ஆண், பெண் உணர்வுகளை முழுமையாகச் சொல்லும் அக இலக்கியம் கோவையாகும். இக்கோவை இலக்கிய வகையின் உச்சம்தான் ஒரு துறைக் கோவையாகும். இதன் புதுத்தடம்தான் “நாணிக்கண் புதைத்தல்”. இதை “வல்லான் வெட்டிய வாய்க்கால்” என்கிறார் வித்வான் கா.நயினார் முகமது.

    “சங்கொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொழுது

    வந்திழியும் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை”

    என்று ஆண்டாள் பாடும் அழகர்மலைபால் உறையும் கள்ளழகர் பால் காதல் கொள்கிறாள் தலைவி. தன் காதலை யார் மூலம் அழகர் பெருமானுக்குத் தெரிவிப்பது? தான் அன்பாய் வளர்க்கும் கிளியைத் தெரிந்தெடுக்கிறாள். ஏனெனில் அதுதான் அவளுடன் சதா சர்வகாலமும் இருக்கின்றது. அவளது உள்ளத்தை அறிந்தது என அவள் எண்ணுகின்றாள் போலும். எனவே தன் கிளியிடம், அழகரிடம் தூது அனுப்புகிறாள். கிளியே! நீ திருமாலிருஞ்சோலை மலையை அடைந்து அங்கிருக்கும் அழகரிடம் செல். ஆனால் அவனிருக்கும் நிலையை முதலில் தெரிந்துகொள். அவனைத் தொழும் அடியார்களுக்கும், அவனருகில் இருக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும், அவர்பால் குடிகொண்டிருக்கும் சவுந்தரவல்லித் தாயாருக்கும், இடையூறு வராது, அவன் எள்ளளவும் சினம் கொள்ளாத வகையில் ரகசியமாய் என் நிலையை, என் காதலின் தவிப்பை எடுத்துக்கூறி, உலகின் துயர் தீர்க்கும் சங்கணிந்தவன் அணிந்த மலர் மாலையை வாங்கி வருவாயாக” என வேண்டிக்கொண்டு தன் காதலுக்கு தூதாய் அனுப்புகின்றாள் தலைவி.

    “அடியார்கள்

    அங்கிருந்தால் கீர்த்தனம் செய்வாய். அடுத்து நாச்சியார்

    பங்கிருந்தால் கையில் பறந்து இருப்பாய் & எங்கிருந்து

    வந்தாய் என்றால் மாலிருஞ்சோலையில் இருந்து

    எந்தாய் உனைத் தொழ வந்தேன் என்பாய் & அந்த

    சவுந்தர வல்லி எனும் தற்சொரூபிக்-கும்

    உவந்து அலர் சூடிக் கொடுத்தாளுக்கும் & சிவந்த

    கடுகிலேசம் கோபம் காணாமல் என் மால்

    வடுகிலே சொல்வாய் வகையாய் & அருகிலே

    சம்கெடுப்பாய் சங்கெடுக்கும். சச்சிதானந்தர் அணி

    கொங்கெடுக்கும் தாமம் கொடு வருவாய்”

    இப்பாடல் இடம் பெறும் நூல் திருமாலிருஞ்சோலை அழகர் கிள்ளை விடு தூது. இதன் ஆசிரியர் மதுரையைச் சேர்ந்த பலபட்டடைச் சொக்கநாதபிள்ளை. சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தூது.

    மூத்த பள்ளியின் நாடான ஆசூர் நாட்டின் பெருமையைப் புகழ்ந்து பாடுகிறான்.

    “கறைபட்டுள்ளது வெண்கலைத் திங்கள்

    கடம் பட்டுள்ளது கம்பத்து வேழம்

    சிறைபட்டுள்ளது விண்ணெழும் புள்ளு

    திரிபட்டுள்ளது வல்லியம் கொம்பு

    மறைபட்டுள்ளது அரும்பொருட் செய்யுள்

    வளமை ஆசூர் வடகரை நாடே”

    உடனே, இதற்குப் பதிலாக இளையபள்ளி, தன் நாடான சீவல மங்கைத் தென்கரை நாட்டைப் போற்றிப் பாடுகிறாள். தனது நாட்டில் காய்வது சூரியன் மட்டும்தான். மத்தால் கடையப்பட்டுக் கலங்கி நிற்பது கட்டித் தயிர்  மட்டும்தான். அழிந்து போவது நாள்களும் கிழமைகளுமே. வான்மழை பொழிந்த வெள்ளம் மட்டுமே சுழன்று வரும். சுமை தாங்காது சாய்வது நெற்கதிர். ஆசைகளை ஒடுக்குவது தவமியற்றுவோர் மனம். தேய்ந்து போவது உரைக்கப்படும் சந்தனம் மட்டுமே.

    “காயக் கண்டது சூரிய காந்தி

    கலங்கக் கண்டது வெண் தயிர்க் கண்டம்

    மாயக் கண்டது நாழிகை வாரம்

    மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்

    சாயக் கண்டது காய்க்குலைச் செந்நெல்

    தணிப்பக் கண்டது தாபதர் உள்ளம்

    தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம்

    சீவல மங்கைத் தென்கரை “நாடே”

    இவ்வாறு முக்கடல் பள்ளுவில் தமிழ்பாடிச் செழிக்கின்றனர்.

    மந்தர முலைகள் ஏசலாட மகரக் குழைகள் ஊசலாட

    சுந்தர விழிகள் பூசலாட தொங்கத் தொங்கத் தொம்மெனப்

    பந்தடித் தனளே. வசந்த சுந்தரி விந்தையாகவே!”

    பாடலைப் பாடும் போதே, வசந்தவல்லியின்

    பந்தாட்டத்தின் ஒய்யாரம் நம் கண்முன் காட்சியாய்

    விரிகின்றது. மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்ட குற்றாலக் குறவஞ்சியில் பாடிய பாடல் இது.

    பாட்டுடைத் தலைவனின்பால் காதல் கொண்ட தலைவியைக் கண்டு குறத்தி குறி கூறுவதே ‘குறம்’ என்று கூறப்படும் வகைப்பாடல்கள். இங்கு தலைவி அங்கயற்கண்ணியாகிய மீனாட்சி சொக்கேசனைக் கூடக் குறி சொல்கிறது குறம். முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

    செந்நெல் முத்தும் கன்னல் முத்தும் ஒளி

    திகழ் மதுரை அங்கயற்கண்ணி அம்மை

    பொன்னும், முத்தும் சொரியும் வெள்ளருவிப்

    பொதியமலைக் குறத்தி நான் அம்மே!

    குமரகுருபரர் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து, 52 வயது வரை வாய் பேசாது இருந்தபோது, இவரது தாய் திருச்செந்தூர் முருகனை கசிந்து கண்ணீர் மல்க வேண்டினாள். அப்போது அம்மா என்று அழைத்து ‘கந்தர் கலிவெண்பா’ பாடினார் என்பர். அவர் இயற்றியது இம்மீனாட்சியம்மை குறம். மதுரையைத் திருமலை நாயக்கர் ஆண்டகாலத்து அவர் முன்னிலையில் அங்கயற்கண்ணி சன்னிதியில் “மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்” பாடினார்.

    திருநெல்வேலி தச்சநல்லூர் வித்துவான் அழகிய சொக்கநாத பிள்ளை இயற்றியது, காந்திமதியம்மைப் பிள்ளைத்தமிழ்.

    “வாராது இருந்தால் இனி நான் உன்வடிவேல்

    விழிக்கு மை எழுதேன்

    மதிவான் நுதல்க்குத் திலகம் இடேன் மணியால்

    இழைத்த பணி புனையேன்

    பேர் ஆதரத்தினொடு பழக்கம் பேசேன்

    சிறிதும் முகம் பாரேன்

    பிறங்கு முலைப்பால் இனிது ஊட்டேன், பிரியமுடன்

    ஒக்கலையில் வைத்துத்

    தேர் ஆர் வீதி வளம் காட்டேன், செய்ய

    கனிவாய் முத்தம் இடேன்.

    திகழும்  மணித் தொட்டிலில் ஏற்றித் திருக்கண்

    வளரச் சீராட்டேன்

    தார் ஆர் இமவான் தடமார்பில் தவழும்

    குழந்தாய் வருகவே!

    சாலிப்பதி வாழ காந்திமதித் தாயே

    வருக வருகவே!”

    மாதுளம் பூ நிறத்தவளாகிய, பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், செப்பும் கனக கலசமும்  போலும் திருமுலைமேல் அப்பும் சுவை, சிந்தூர வண்ணப் பெண்ணாகிய திருக்காவூர் அபிராம வல்லியை, அபிராமிபட்டர், கிண்கிணியில் மெல்லிய சிலம்பின் சிலம்பலில், புலர் காலை புள்ளின இசையில், சிற்றருவித் துள்ளலில், பெருங்கடல் ஓசையில், வண்டினத்தின் ரீங்காரத்தில், திகட்டாத தமிழில் 100 பாடல்கள் கொண்ட அந்தாதியை ஆக்கினார்.

    “ஆசைக் கடலில் அகப்பட்டு

    அருளற்ற அந்தகன் கைப்

    பாசத்தில் அல்லல் பட இருந்த

    எனை நின் பாதம் என்னும்

    வாசக் கமலம் தலை மேல்

    வலிய வைத்து கண்டு கொண்ட

    நேசத்தை என் சொல்லு வேன் ஈசர்

    பாகத்து நேரிழையே!”

    எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி. வெண்பாக்களால் ஆனவை.

    “அழலாட அங்கை சிவந்ததோ அங்கை

    அழகால் அழல் சிவந்த வாறோ & கழலாடப்

    பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்

    தீயோடு வாய் இதனைச் செப்பு!”

    கால்களில் கழல் ஆட, கானகத்தில் போயோடு அனல் ஏந்தித் தீயாடுகிறவனே! தீயேந்தி ஆடுவதால் உன் அழகிய கை சிவந்து காணப்படுகிறதா? அல்லால்  அழகிய உன் கையின் அழகாய் தீ சிவந்த வாறோ? இதை நீ சொல்வாயாக?

    சேரமான் பெருமாள் நாயனார் அருளியது பொன் வண்ணத்து அந்தாதி. இப்பாடலில் முதற் பாடலைப் பார்க்கலாம்.

    பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்

    மேனி, பொலிந்து இலங்கும்

    மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்

    வீழ்சடை, வெள்ளிக்குன்றம்

    தன் வண்ணம் எவ்வண்மை அவ்வண்ணம்

    மால்விடை, தன்னைக் கண்ட

    என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்

    ஆகிய ஈசனுக்கே!

    இதில் பன்னிரண்டு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி திருவண்பரிகாரத்து திருவாழி மார்பனைப் பாடுகிறது.

    “முதலாம் திருவுருவம் மூன்றென்பார்: ஒன்றே

    முதலாடும் மூன்றும் என்பர் & முதல்வா!

    நிகர் இலகு கார் உருவா? நின் ஆகத்து அன்றே

    புகர் இலகு தாமரையின் பூ?”

    எல்லா சமயத்தாருக்கும் பொதுவான பாடல் ஒன்று இதில் உண்டு.

    “பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற

    காவிமலர் என்றும் காண்தொறும் & பாவியேன்

    மெய்ஆவி, மெய் மிகவே யூகிக்கும் அவ்அவை

    எல்லாம் பிரான் உருவே என்று”

    யாவும் இறைவடிவம் என்பதுதான் இப்பாடலின் நுட்பம்.

    கலம்பகம் பாடுவது என்பது எளிதன்று. தெள்ளாற்றுப் போர் வென்ற நந்திவர்ம பல்லவனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது நந்திக்கலம்பகம். பாடியவர் பெயர் அறியவில்லை. பெரும்பாலும் சிற்றிலக்கியங்கள் இயற்கை அழகு, தலைவனின் வீரம், தலைவனைச் சேரும் தலைவியின் ஏக்கம், எனப்பாடி தமிழும் கவிதையும் காதலுமாய் துளிர்த்து நிற்பவை. நந்தியைப் பற்றி பல பாடல்கள் தனிப்பாடல்களாக கலம்பகப் படிகளில் ஒருசேர கிடைத்திருக்கின்றன. அவை மிகவும் சுவாரஸ்யமானவை. பைந்தமிழை ஆய்கின்ற நந்திவர்ம பல்லவனின் மார்பினைத்  தழுவ மாட்டாமல் வேகின்ற பாவியாகிய என் மீது செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுமையான குளிர்ச்சியான சந்தனம் என்று யாரோ தடவிப் போனார் என்பது தலைவியின் எதிர்பார்ப்பின் அவஸ்தை மிகு பாடல் இது.

    செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்

    சந்தனம் என்று யாரோ தடவினார் & பைந்தமிழை

    ஆய்கின்ற கோன் நந்தி அகம் தழுவாமல்

    வேகின்ற பாவியேன் மேல்!

    தலைவி திருவாழி மார்பன் திருவரங்கன்பால் தீராக்

    காதல் கொண்டு, அவனிடம் வண்டைத் தூது விடுகிறாள். அது

    திரும்பி வராததால் தன் நெஞ்சோடு கிளர்த்திய பாடல் இது.

    மறக்குமோ? காலில் மது அருந்தி, அப்பால்

    பறக்குமோ? சந்நிதி முன்பு ஆமோ? & சிறக்கத்

    தருவரங்கன் கேட்டுமோ? தாழ்க்குமோ? & நெஞ்சே!

    திருவரங்கர் பால் போன தேன்?

    திருவரங்கர் கலம்பகத்தில் உள்ள பாடல். பிள்ளைப்

    பெருமாள் அய்யங்கார் பாடியது.

    மேலே குறிப்பிட்ட பாடல்கள் இலக்கியங்கள் வாசிக்கப்படாது வாழ்விழந்து போய்விடுமோ என்ற கவலையில் பிறந்தது “சிற்றிலக்கியங்கள்” என்னும் நூல். கவலைப்பட்டது சாகித்திய விருதாளர், மரபு இலக்கியத்தின் மாண்பினை இன்னமும் கையிலேந்திக் கொண்டிருக்கும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.

    “செவிநூர் கனிகளாய், மனத்திற்கினியவாய்

    நம்முன் நாட்டியமாடும் தமிழை, எப்போதும் எங்கிருந்தும்

    கற்கலாம் என்கின்ற வகையிலே, இளைய வாசகருக்கு

    மரபிலக்கிய வாசிப்பைத்  தொடங்குவதற்கு உதவும் வகையிலே”

    இந்நூலை உருவாக்கியுள்ளார் நாஞ்சில் நாடன்.

    நூல்கள் பயிலப்  பயில, சொல்லச் சொல்ல, அனுபவிக்க அனுபவிக்கத்தான் அவைகள் உயிர்ப்புடன் இருக்கும். இல்லாவிடில் மரணத்தைத் தழுவ வேண்டியதுதான். இந்தக் கவலைதான் சிற்றிலக்கியங்களைத் தொகுத்து அளித்திருக்கின்றார் ஆசிரியர். ஆம் பெரிதினும் பெரிய செயல்தான்.

    கோவை, மும்மணிக் கோவை, உலா, தூது, பள்ளு, குறவஞ்சி, குறம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, கலம்பகம், பரண், சதகம், மாயை என வகைப்படுத்தி, அவ்வகையிலே காணப்படும் அத்துணை நூல்களையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அதில் தமிழின் சுவையாயும், பக்தியின் ரஸமாயும் சுவாரஸ்யமான பாடல்களையும் தெரிந்தெடுத்து, அனுபவித்து அளித்திருக்கிறார். சிலவற்றை விளக்கியும், விளக்கமும் விளம்பியிருக்கின்றார். இலக்கிய வகைகளின் பட்டியல்களை சோம்பல் இல்லாது நேர்மையாய் நல்கி இருக்கின்றார்.

    “உ.வே.சா ஒருமுறை தானே தேடித்தருவார்? தண்ணீர் மூழ்குபவனை மூன்று முறை வெளிக்காட்டும் என்பார்கள். தமிழன்னை திரும்பத் திரும்பத் தொலைப்பவனுக்கு தேடித்தருவாளா? தேடித் தந்தவருக்குத்தான் என்ன திருப்பி செய்துவிட்டோம்? எதுவோ கிடந்து விட்டுப் போகட்டும். கரையான் அரித்து மட்கி மண்ணாக இருந்தவற்றை ஒருமுறை மீட்போம். நமது அலட்சியத்தால், பொறுப்பற்ற தன்மையினால், ஆர்வம் இன்மையால், வாசிப்புப் புறக்கணிப்பால் மீண்டும் தொலைத்து விடலாகாது என்ற வேண்டுகோளுடன் இந்தக் கட்டுரைகளை உங்கள் முன் வைக்கின்றேன்” என்று ஆதங்கத்துடன் படைத்திருக்கின்றார் “சிற்றிலக்கியங்கள்” என்னும் நூலை, நாஞ்சில் நாடன்.

    இந்நூலை “பல பண்டைய நூல்களைக் காப்பாற்றித் தந்த பெருமான் மகாமகோபாத்யாயை  தக்ஷிணாஷ்ய கலாநிதி டாக்டர். உ.வே.சாமிநாதய்யர் தமிழ் சேவைக்கு காணிக்கையாக்கி, தன் நன்றியைத் தெரிவித்துக்  கொள்கிறார் நாஞ்சிலார்.

    தலைப்பு         & சிற்றிலக்கியங்கள்

    ஆசிரியர்        & நாஞ்சில் நாடன்

    பக்கம்                               & 300 பக்கங்கள்& கனமான அட்டை

    விலை                             & ரூ.300

    பதிப்பகம்       & தமிழினி,

    25ஏ. தரைதளம் முதல் பகுதி,

    ஸ்பென்சர் பிளாசா, 769, அண்ணா சாலை, சென்னை & 600 002.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 111 (10.03.14)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை
    கண்ணகியும் கோவலனும் கவுந்தி அடிகளை வணங்கி, சாபத்தை நீக்கியருள வேண்டுதல்

    கவுந்தியடிகள் இட்ட சாபம்
    தவத்தின் பயனாய் விளைந்த சாபம் என்பதால்
    சபிக்கப்பட்ட இருவரும்
    என்ன என்று உணரும் முன்னே
    அச்சாபம் பலித்து விட்டது.
    அவ்விருவரும் உடனே
    நரி உருவம் கொண்டு
    ஊளையிட்ட படி ஓடினர்.

    அந்தச் சத்தம் கேட்டு
    நறுமலர் அணிந்த கண்ணகியும் கோவலனும்
    “அறநெறியிலிருந்து விலகிச் சென்ற
    இவர்கள் இங்ஙனம் பேசுவது
    அவர்களின் அறியாமையால்தான்..
    சிறந்த தவம் செய்தவரே!
    இக்கயவர்கள் இச்சாபம் நீங்கி வாழும்
    கால எல்லையையும்
    நிங்கள் தயவுசெய்து கூறவேண்டும்”
    என்று கவுந்தியடிகளிடம் வேண்டினர்.

    கவுந்தியடிகள் சாபத்துக்கு எல்லை கூறுதல்

    “தமது அறியாமையால் இழிபிறப்பு பெற்ற இவர்கள்
    உறையூர் மதிற்புறத்தில் காவற்காட்டில்
    பன்னிரு மாதங்கள் அலைந்து திரிந்து
    தம் நிலையை நினைத்து வருந்திய பின்
    இவர்கள் தங்களுடைய
    பழைய உருவம் பெறுவார்களாக” என்று
    கவுந்தியடிகள் சாபவிமோசனம் தந்தார்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  233 – 244

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை….

     கவிஞர் காவிரி மைந்தன்

    வரம்புகள் மீறாமல் வார்த்தைகளைப் பிரயோகப்படுத்த வேண்டும். அதிலும் வசப்படுத்தும் வரிகள் அமைக்க வேண்டும். கத்திமேல் நத்தை நகர்வது போன்றதொரு வித்தைதான் இது! மேயர் மீனாட்சி திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாணிஜெயராம் குரல்களில் மெல்லிசை மன்னர் வடித்த இசையில்..

    மன்மத அம்புகள் பாய்ந்திடும்போதும் இலையிடையே காய்போல் இலக்கியம் அறிந்த கவிஞருக்கு உரித்தான பாணியில் ரத்தினச் சுருக்கமாய் வார்த்தைகள் வாய்திறக்கின்றன!

    உரிமையத் தந்து உடமையைத் தந்து நங்கை நாயகன் வசமானபின் சங்கமத்திருக்கோலம் சரிவிகிதக் கலவைதானே!

    இப்பிறவி மட்டுமின்றி வரும்பிறவி யாவிலுமே.. இணைய வேண்டும் மனம் – இதோ காதல் மாளிகையில் எதிரொலிக்கிறது!

    எஸ்பி.பாலசுப்பிரமணியத்தின் கொஞ்சும் தமிழில் கொள்ளை போகாத உள்ளம் எங்கே? வாணிஜெயராம் வழங்கியிருக்கும் தெள்ளமுதம் வழிகிறது இப்பாடலில்! மீண்டும் கேட்போமா? ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை!!

    ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
    ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
    மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
    இன்னும் தீராத
    இன்னும் தீராத ஆசைகள் என்ன
    இங்கு நீராடும் வேளையில் சொல்ல

    ரொம்ப நாளாக
    ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
    மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
    இன்னும் தீராத
    இன்னும் தீராத ஆசைகள் என்ன
    இங்கு நீராடும் வேளையில் சொல்ல
    ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
    மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

    நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
    நேரிழை மார்பிலே மேடை போடவோ
    நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
    நேரிழை மார்பிலே மேடை போடவோ

    சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை
    சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை
    இன்னும் என்னவோ…நீயும் கண்ணனோ

    ரொம்ப நாளாக
    ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
    மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

    தாமரைப்பூவிதழ் அங்கம் அல்லவோ
    தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ
    மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து
    மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து
    கன்றிவிட்டதோ கண்ணில் பட்டதோ

    ரொம்ப நாளாக
    ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
    மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

    எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
    என் மனம் உன்னிடம் வாழ வந்தது
    எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
    என் மனம் உன்னிடம் வாழ வந்தது
    அன்றில் பறவை கண்ட உறவை
    அன்றில் பறவை கண்ட உறவை
    பெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ

    ரொம்ப நாளாக
    ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
    மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
    இன்னும் தீராத
    இன்னும் தீராத ஆசைகள் என்ன
    இங்கு நீராடும் வேளையில் சொல்ல
    ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை தாளாமல் துடித்திடும் ஓசை

    http://www.inbaminge.com/t/e/Ennadi%20Meenatchi/Romba%20Nalaga%20Enakkoru.eng.html

    Share
  • செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்

     

    Spheroidal Features in Yamato Meteorite From Mars

     

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

     

     

    தனித்துவப் பண்பாடுகளைக் காட்டிய 30 பவுண்டு [13.7 கி.கி.] செவ்வாய்க் கோள்  “யமட்டோ விண் எறிகல்”  [Meteorite : Yamato -000593]  நீர்மை பின்னி மாறிய களிமண்ணுடன் கலந்த கரிவியல் பிண்டத்தைக் [Carbonaceous Matter] கொண்டிருந்தது.   அந்த கலவை உயிரியல் இயக்கத்தால் உருவான வாய்ப்பைப் பெற்றிருக்கலாம்.  செவ்வாய்க் கோள் கரி கலந்த [Carbon] இயக்கமுள்ள நீர் ஏரியைக் கொண்டிருக்கலாம் என்பதை அது காட்டுகிறது.

    எவரெட் கிப்ஸன் [நாசா ஜான்சன் விண்வெளி மையம், ஹூஸ்டன்]

    செவ்வாய்க் கோள் தேர்ச்சி ஆய்வின் குறிக்கோள் : செவ்வாய்க் கோளின் கரி [Martian Carbon] எவ்விதம் இயல்பாய்ப் பரவிக் கலந்துள்ளது என்பதை அறிவதே.  செவ்வாய்க் கோள் தளக்கரியை  [Indigenous Carbon] நாங்கள் பல மாதிரிச் செவ்வாய் எறிகற்களில் கண்டதால், எங்கள் உயிரின இயக்க யூகிப்பு மெய்யாகிறது.

    எவரெட் கிப்ஸன் [நாசா ஜான்சன் விண்வெளி மையம், ஹூஸ்டன்]

     

    Oxygen molecles

     

    நாக்லா விண் எறிகல்  [Nakhla Meteorite] மாதிரி மூலம் உயிரினத் தோற்றத்துக்குப்  புது ஆதாரம்

    கிளாஸ்கோ பல்கலைக் கழக விஞ்ஞானக் குழுவினர் முதன்முதலாகச் செவ்வாய்க் கோளில் நீர் மூழ்க்கிய தளத்தைக் கண்டுபிடித்துள்ளார்.  அந்த அறிவிப்பு மேப்ஸ் [MAPS – Meteoritical Society’s Journal] என்னும் விஞ்ஞான வெளியீட்டில் வெளியாகியுள்ளது.   விஞ்ஞானிகள் அந்த அறிவிப்பில் 1.7 கிராம் நிறையுள்ள நாக்லா செவ்வாய் எறிகல் [Martian Meteorite] மாதிரிச் சோதனை யின் முடிவுகளைக் கூற்யுள்ளார்.   அந்த மாதிரி விண் எறிகல்லைச் சோதிக்க அளித்தது : லண்டன் இயற்கை வரலாறு காட்சிக்கூடம் [Natural History Museum].  அந்த எறிகல்  10 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு நிகழ்ந்த செவ்வாய்க் கோள் வெடிப்பில் சிதறி, 1911 ஆம் ஆண்டு எகிப்தில் விழுந்து கிடந்தது !  ஏறக் குறைய நூறு ஆண்டுகளாக அது ஆய்வு செய்யப் படுகிறது.  நாக்லா என்பது செவ்வாய் மாதிரி எறிகல் விழுந்த எகிப்தின் ஓர் சிற்றூர்.

    எலெக்டிரான் நுண்ணோக்கி [Electron Microscope] மூல சோதித்ததில் விண் எறிகல்லில் “கீறிய குழிகள்” [Etch Pits], மற்றும் தாது மணிகள் [Grains of Minerals] காணப் பட்டன !  முந்தைய ஆய்வில் செவ்வாய்க் கோளின் தாதுக்கள் நீரோடு இயங்கிய இரசாயனக் கலவைகள் [carbonates, Sulphates & Hydrous Silicates] இருந்தன.  30 பவுண்டு [13.7 கி.கி.] நிறையுள்ள செவ்வாய்க் கோள் எறிகல் மாதிரி [Yamato : Y000593]  பல மில்லியன் ஆண்டுக்கு முன்பு அங்கே உயிரியல் இயக்கம் [Biological Activity] இருந்திருக்கலாம் என்பதற்குப் புது ஆதாரம் காட்டுகிறது.

    Nakhla Sample

    அண்டவெளிக் கோள்களில்தான்  ஒத்த உரு உயிர் வாயு மூலக்கூறுகள்   [Oxygen Dimer Molecules -Molecules composed of two identical, simpler molecules.] அடிக்கடிக் காணப்படுகின்றன.  உயிரின நிலைப்பாடுக்கு முக்கிய மானவை அவை.  ஒளிச்சேர்க்கை [Photosynthesis] இயக்கத்தோடு உடன்பாடனவை அவை.  பயிரினச் செடி கொடிகள்,  நீர்மயக் கடற் பாசிகள் [Plants or Algae] இல்லாமல் அப்படி மிகையான அளவு உயிர் வாயு மூலக்கூறுகள் செவ்வாய்க் கோளில் உருவாக முடியாது.

    அமித் மிஸ்ரா,  [வாஷிங்டன் பல்கலைக் கழக வானியல்  விஞ்ஞனக் குழு]

    நாசாவின் செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வகத் தளவுளவி [Mars Science Laboratory Rover] குறிப்பணி யாகச் செவ்வாய்த் தளத்தில் பூர்வீக நீரோட்டம் இருந்ததற்கு உறுதியாக உலர்ந்த சிற்றாற்றுக் கூழாங் கற்களைப் படமெடுத்துச் சான்றாகக் காட்டியுள்ளது.  அந்தப் பன்முகக் கலவைப் படிவுகள் [Sedimentary Conglomerates] பூமியில்  உள்ளது போல் மற்றோர் அண்டக்கோளில்  இருப்பதை முதன்முறையாக நாசாவின் தளவுளவி கண்டுபிடித்துள்ளது.

    டாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ் [அண்டக்கோள் விஞ்ஞான மூத்த விஞ்ஞானி]

    New Evidence

    செவ்வாய்க் கோளில் உள்ள இவ்விதப் பாறைத் தோற்றங்கள், கடந்த காலத்தில் வெப்பச் சூழ்நிலை இருந்து, தளத்தின் ஈரடிப்புப் பகுதிகள் நெடுந்தூரம் ஓடும் நீரோட்டத் தகுதியை ஏற்படுத்தி யுள்ளன.   இவ்விதம் பூர்வீக ஆற்றுப் படிவுகளைக் கண்டுபிடித்தது, செவ்வாய்க் கோள் தளத்தில் நெடுந்தூரம் ஓடி நீடித்த நீரோட்டம் நிலவி, உயிரின விருத்திக்கு வசதி அளித்திருக்க முடியும் என்று நாம் கருத இடமளிக்கிறது.

    லிண்டா கா [Linda Kah, Associate Professor of Earth & Planetary Science, University of Tennessee, Knoxville]

    சிற்றாறு நீரோட்டத்தின் வேகம் சுமாராக மனித நடை அளவே என்பதுதான் எங்களுடைய ஊகிப்பு.   இவற்றை மீளியக்க முறையில் செய்து காட்ட முடியாது.   ஒரு கண்ணோட்ட ஒப்பளவில்தான் நாங்கள் குறைந்த அளவாகச் சொல்ல முடியும்.

    பேராசிரியர் சஞ்சீவ் குப்தா [லண்டன் இம்பீரியல் கல்லூரி, இங்கிலாந்து]

     

    Pebbles in Mars

     

    நெடுந்தூர, நீண்டகால நீரோட்டத் தேய்வு இருந்தால்தான் அத்ததைய உருண்டைக் கூழாங்கற்கள்  உருவாக ஏதுவாகும்.  அதாவது ஏற்புடைய காலநிலைத் தகுதி முறைகளே திரவ நீரோட்டத்தைச் செவ்வாய்க் கோள் தளத்தில் நீடித்திருக்க முடியும்.  பன்முகக் கலவை நீரோட்டப் படிவு பூமியில் பொதுவாக இருப்பது.   இப்போது நாங்கள் அதைச் செவ்வாய்க் கோளிலும் காண்கிறோம்.  அவற்றின்   அறிகுறிகளை வைத்து, பூதளவியல் நிபுணர்கள் நீரோட்டத்தின் கொள்ளளவு, நீரின் ஆழம், ஓடும் வேகத்தையும் கணித்துக் கொள்கிறார்.   தற்போது உறுதிப் படுத்தப் பட்ட சிற்றாறின் நீரோட்ட வேகம் குறைந்த அளவு : [விநாடிக்கு ஒரு மீடர்] [விநாடிக்கு 3 அடி தூரம்], [நீரோட்டம் முழங்கால் ஆழம் அல்லது இடுப்பளவு உயரம்.]

    டாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ்.

     

    Ocean of Mars

    நீரோட்டக் கூழாங்கற்கள் கண்டுபிடிப்பு  செவ்வாய்க் கோள் பூர்வீக காலத்தில் நீர்வளமாய் இருந்ததை நிரூபிக்கிறது

    ஜூன் மாதம் 4 ஆம் தேதி விஞ்ஞான அறிவிப்பில் நாசாவின் செவ்வாய்த் தளவுளவி [MSL Curiosity Rover] [MSL : Mars Science Laboratory]  150 கி.மீ. அகண்ட  (90 மைல்) கேல் பள்ளத்தாக்கில் [Gale Crater] ஓடி உலர்ந்த சிற்றாறும்,  அதனில் உருண்டையான கூழாங்கற்கள் பற்கலவைப் படிவுகளில் [Rounded Pebbles within Sedimentary Conglomerate] இருந்ததை முதன்முறை காட்டிச் செவ்வாய்க் கோள் தளம் பூர்வ காலத்தில் நீர்வளமாய் இருந்திருப்பதை நிரூபிக்கிறது.  கேல் பள்ளத் தாக்கு 2012 செப்டம்பரில் கண்டுபிடிக்கப் பட்டது. உலர்ந்த இந்தப் புழுதிப் படிவில் கிடக்கும் கற்களின் அளவு, வடிவு, படிமப் பதிவுகளைப் பார்த்தால் கால்ஃப் [Golf] பந்தளவில் சப்பையாக உருண்டு, திரண்டு நீரோட்டம் உருவாக்கியது போல் தெரிகின்றன.   கற்களின் நெளிவு, சுழிவுகள் நீரோட்டம் பன்முறை மோதிச் செதுக்கிய வடிவில் உருண்டது போல் காட்சி தருகின்றன.   அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானி ஐலீன் இங்ஸ்ட் [Aileen Yingst]  தற்போது கண்டுள்ள கூழாங்கற்கள் முன்பு கண்டவற்றை விட உருட்டி இருந்ததாக அறிவித்தார்.   இந்த வியப்பான விளைவுத் தகவல் தளவுளவி 275 மீடர் [900 அடி தூரம்] பயணம் செய்து, மூன்று படிமப் பாறைகளைச் சோதித்ததின் பலாபலனே.

    Martian water

    செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுகிறது.   தூசிப் புயலை மின்னியல் தாக்கும் போது வெளிவரும் மின்னிகள் [Dischargesச்] கரியமில வாயுவையும் [CO2] நீரையும் அயனிகளாக்கி அவற்றின் விளைவாக செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு உற்பத்தியாகிறது.

    ஆர்டுரோ ரொபிலிடோ மார்டின்ஸ் [Arturo Robledo-Martinez, Mexican Geo-physical Team]

    “செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.”

    டக்ளஸ் மெக்குயிஸ்டியான் (Douglas McCuistion, Director of Mars Exploration Program NASA Headquarters)

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் (German Astronomer Johannes Kepler) (1571-1630)

     

    Water flow in Mars -2

    தளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள்  (Sediment Rocks).   அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையாய் இருக்கும்.     எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.

    ஜாய் கிரிஸ்ப் (Mars Science Lab Dy Project Scientist NASA)

    (2012  ஆகஸ்டு முதல் வாரத்தில் )  செவ்வாய்த் தளவுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம்  (Mound at the center of Gale Crater) MFF  உருவாக்கக் காட்சியை   (Medusae Fossae Formation  Exposure) ஒத்தது.   (MFF on Mars is an intensely eroded deposit ..)  அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை.   முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும்.   இதுவரை எந்த விண்ணுளவியும்  MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை.  அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.

    ஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர்  National Air & Space Museum)

     

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BudlaGh1A0o  

    [Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation]

     

    “நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம்.  செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ஃபீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு. “ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது.  உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது.  ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”

    பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

    “ரோவர் ஊர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன!”

    ஸ்டாவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.

     

    Water flow in Mars -1

    “ஆர்க்டிக் கடலில் உள்ள ஸ்வால்பார்டு தீவில் [Svalbard Island] காணப்படும் நீலப் பனிக்கட்டியின் இயற்கைத் துளைகளில் ‘நுணுக்க உயிரியல் ஊறணி ‘ [Microbiological Oasis] ஒன்றைக் கண்டுபிடித் துள்ளோம். அசாத்தியமான அந்த உச்சக் குளிர்ப் பகுதிகளில் அவ்வித உயிரியல் ஆதாரங்கள் கிடத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. 1996 ஆம் ஆண்டு அண்டார்க்டிக்கில் கண்டெடுத்த செவ்வாய்க் கோளின் விண்கல்லைப் [Meteorite] போன்று, அந்த ஒரே தீவின் எரிமலையில் தோண்டி எடுத்த காந்த உலோகப் பாறைப் பளிங்கு [Magnetite Crystals] மாதிரிகள் உள்ளன.”

    ஹான்ஸ் அமுட்ஸன், ஆய்வாள அதிபதி, ஆஸ்லோ பல்கலைக் கழகம்

    “பாறை அடுக்குகள் செவ்வாய்க் கோளின் வரலாற்றைக் கூறும் பட்டைக் குறிப்பதிப்புகள் [Barcodes]. புதிதாய்க் காணும் ஒவ்வோர் அடுக்கும் மற்றுமோர் புதிரை விடுவிக்கும் பிணைப்புத் துண்டாக உள்ளது.

    ‘ ஜான் கிராட்ஸிங்கர் [John Grotzinger, Science Team Member நாசா M.I.T.]

     

     

    செவ்வாய்க் கோளில் இம்மி உயிர்கள் வாழ மீதேன் வாயு இருக்கிறதா ? 

    கடந்த பத்தாண்டு செய்த செவ்வாய்க் கோள் தள ஆராய்ச்சிகள் மூலம் மிகச் சிறு கால வேளையில் மீதேன் முகில் கோடை காலத்தில் செவ்வாய்ச் சூழ்வெளியில் தோன்றுகிறது என்பது தெரிய வருகிறது.    விந்தையான இந்த மீதேன் நிகழ்ச்சி வானியல் விஞ்ஞானிகளை பெரு வியப்பில் ஆழ்த்தி உள்ளது.    இந்தப் புதிர் செவ்வாய்க் கோளின் எந்த வித சூழ்வெளி மாடலுக்கும் ஒத்து வரவில்லை.   முதலாண்டு நோக்கிச் செவ்வாய்க் கோள் சூழ்நிலை ஆய்வு செய்த விளைவுகளில் ஏற்பட்ட தர்க்க வினாக்களுக்கு நாசாவின் கியூரியாசிட்டி தளவுளவி பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.   உற்பத்தியாகும் மீதேன் வாயு சில நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்க வேண்டும்.   2010 டிசம்பர் வெளியீட்டில் நாசா அமெஸ் ஆய்வு மைய விஞ்ஞானி கெவின் ஸாநெல் [Kevin Zajnle] செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு இருப்பது பற்றி மிகவும் ஐயப்பாடு தெரிவித்தார். ஆனால் அதே சமயத்தில் எதிர்பாரத விதமாக மெக்ஸிகோ ஆய்வாளர்கள் வேறோர் நியதியுடன் செவ்வாய்க் கோளில் மீதேன் உற்பத்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    Methane Detection in Mars

    அதாவது செந்நிறக் கோளில் நிகழும் “தூசிப் புயல்களே ” [Dust Storms & Dust Devilsச்] மீதேன் உருவாகக் காரணமாகி வருபவை.   மெக்ஸிகோ ஆய்வுக் குழுவினர் மீதேன் உண்டாவதற்கு ஒரு புது முறையை வகுத்துக் காட்டினர்.   செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுவ தாகக் கூறினர்.   ஆய்வுக் கூடத்தில் நிரூபித்துக் காட்ட பனிக்கட்டி மீது மின்னியல் தாக்கல் செய்து, போலி இயக்கத்தைப் [Laboratory Simulation] புரிந்த போது மீதேன் மூலக்கூறுகள் [1.41 x 1016 molecule of Methane per joule] தோன்றின.  40 ஆண்டுகளாக  செவ்வாய்க் கோளில் மீதேன் சிறிதளவு இருப்பது பற்றிப் பேசப் பட்ட வருகிறது.  மீதேன் இருப்பு உயிரின ஜீவிகள் வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும்.   நமது பூமியில் உள்ள உயிரின ஜீவிகளே பெரும் பான்மை மீதேன் வாயு உண்டாகக் காரணமாகின்றன. நாசாவின் செவ்வாய்த் தளவுளவி “கியூரியாசிட்டி” செவ்வாய்க் கோள் எப்படித் தன் வாயுச் சூழ்வெளி   இழந்தது என்பதை அறியத் திட்டமிடப் பட்டுள்ளது.   தற்போதைய செவ்வாய்க் கோள் சூழ்வெளி அழுத்தம் பூமியை விட [100 இல் 1 ஆக] நலிவாக உள்ளது.

    Kasei Valles Maps of Mars

    நாசாவின் செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி தேர்ந்தெடுப்பு

    2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் சூழ்வெளிக் காலநிலை வரலாற்றை விளக்கமாகப் பதிவு செய்ய இறக்கப் போகும் “மேவன்” காலநிலை அறிவிப்பு விண்ணுளவியை (Mars Climate Mission -2) ஏவுதற்கு அனுமதி கிடைத்து விட்டது என்று நாசா முதன்முறையாக அறிவித்தது !  அந்த செவ்வாய் விண்ணுளவி எட்டுக் கருவிகளை ஏற்றிக் கொண்டு தணிந்த உயரத்தில் (90 – 3870) மைல் நீள்வட்ட வீதியில் சுற்றி வந்து சூழ்வெளி வாயு மண்டலத்தை ஆராயும்.  மூன்று ஆண்டுகள் விண்ணுளவி புரியும் அந்தக் குறிப்பணித் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு 485 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.  நாசாவின் மிதச் செலவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது “மேவன்” (Maven – Mars Atmosphere & Volatile Environment Probe) விண்வெளி ஆய்வுத் திட்டம்.  1998 ஆம் ஆண்டில் 327 மில்லியன் டாலர் செலவில் முதன்முதல் காலநிலை உளவ ஏவப்பட்ட விண்ணுளவி -1 (Mars Climate Orbiter -1) செவ்வாய்க் கோளை நெருங்கினாலும், மனிதத் தவறால் (மெட்டிரிக் அளவியலைப் பயன்படுத்தாது பிரிட்டீஷ் அளவியலைப் புகுத்திய தால்) உந்துசக்தி மிகையாகிச் செவ்வாய்க் கோளில் முறிந்து விழுந்து விட்டது !

    fig-1b-maven-spacecraft-instruments

    செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளின் பதிவுகளை வெளிப்படுத்தும்,  இப்போது விஞ்ஞானிகள் காணும் செவ்வாய்க் கோள் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய செவ்வாய்க் கோளைப் போல் இருக்கவில்லை !  ஆரம்பத்தில் செவ்வாய்க் கோள் அடர்ந்த வாயுச் சூழ்வெளியைக் கொண்டிருந்த தென்றும், அந்த பாதுக்காப்புக் குடைத் தளத்திலே நீரைத் திரவமாக வைத்திருந்த தென்றும் ஊகிக்கப் படுகிறது.  திடீரென ஒரு திரிபு ஏற்பட்டுக் காலநிலை மாறுபட்டுப் பெரும்பான் மையான வாயு மண்டலம் மறைந்து போய் நீர் வளம் எல்லாம் பாலைவனம் போல் வெறுமையானது ! பல அண்டக் கோள் விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளின் பூர்வீக காந்தக் களம் மறைந்து போனது மிக முக்கிய மாறுதல் என்று நம்புகிறார்கள்.  மேவன் விண்ணுளவி பரிதி உமிழ்ந்திடும் மின்னேறிய துகள்களின் (Solar Charged Particles) பாதிப்புச் செவ்வாய்க் கோளின் தற்போதைய வாயு மண்டலக் கசிவுக்குக் காரணமாக இருக்குமா என்று ஆய்ந்து கண்டுபிடிக்கும்.  செவ்வாய்க் கோளின் சக்தி வாய்ந்த காந்தத் தள இழப்பால் பரிதியின் தீவிரப் புயல் (Solar Wind) வாயு மண்டலத்தைத் தாக்கி விடுவிப்பு செய்திருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள் !
    fig-1c-climate-orbiter-equipment

    மேவன் விண்ணுளவியின் திட்டப்பணிகள் என்ன ?

    2013 ஆம் ஆண்டில் பயணம் செய்யப் போகும் மேவன் விண்ணுளவி மூன்றாண்டுகள் செவ்வாய்க் கோளைச் சுற்றி வரும்.  மேவன் விண்ணுளவி செவ்வாயின் வாயு மண்டலம், காலநிலை வரலாறு,  உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான அமைப்பு போன்ற விஞ்ஞான விளக்கங்களைத் தெளிவாகக் கண்டறியும்.  மேலும்

    1.  செவ்வாய்ச் சூழ்வெளியிலிருந்து விண்வெளிக்கு வெளியேறிய “ஆவிக் கிளம்பிகள்” (Volatiles) இழப்பால் நேர்ந்த கால நெடுப் பாதிப்புகள்.  அது செவ்வாயின் சூழ்வெளி வரலாற்றையும், காலநிலை, திரவ நீர், கோளின் குடிவசிப்புத் தன்மை (Planetary Habitability) ஆகியவற்றை விளக்கமாக அறிவது.

    2. செவ்வாய்க் கோளின் மேல் மண்டல வாயுச் சூழ்வெளியின் (Upper Atmosphere) தற்போதைய நிலமை, மின்னியல் கோளம் (Ionosphere), மற்றும் பரிதிப் புயலுடன் அவற்றின் இயக்கப்பாட்டு மோதல் விளைவுகளை (Interactions with Solar Wind) உளவிக் காண்பது.

    3. விண்வெளிக்குக் கசியும் அயனிகள் (Ions) மற்றும் முடக்குகள் (Neutrals) ஆகியவை தப்பிச் செல்வதைக் கண்டறிவது. 4. கால நெடுவே இழப்பு வரலாற்றைச் சொல்லும் வாயுக்களின் நிலையான ஏகமூலங்களின் வீதத்தைக் (Ratio of Stable Isotopes) காண்பது.

     

    மேவன் விண்ணுளவியில் அமைப்பாகும் தொடர்புத் தகுதிகள்

    செவ்வாய்க் கோளை அண்டிய மேவன் விண்ணுளவி தனது உந்துக் கணைகளை (Thruster Boosters) இயக்கிச் செவ்வாயின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி முதலில் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கும்.  அவ்விதம் சுற்றும் போது நீள்வட்ட ஆரங்கள் 90 மைல் (குட்டை ஆரம்) 3870 மைல் (நெட்டை ஆரம்) அளவில் கட்டுபாடாகி ஆய்வுத் திட்டங்களை நிகழ்த்த ஆரம்பிக்கும். (வட்ட வீதியில் நெட்டை ஆரமும், குட்டை ஆரமும் சமமானவை).  அப்போது மேவன் விண்ணுளவி செவ்வாய்த் தளத்துக்கு 80 மைல் உயரத்தில் தணிந்து சுற்றி மேற்தள வாய் மாதிரிகளைச் சோதிக்கும்.  அத்துடன் செவ்வாய்த் தளத்தில் ஊர்ந்து செல்லும் தள வாகங்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதி செய்யப் படும். நாசா முன்னேவிய இரண்டு விண்ணுளவிகள் (Mars Reconnaissance Orbiter & Mars Odyssey Spacecraft) தொடர்ந்து சுற்றி வருகின்றன !  அவை இரண்டும் இன்னும் தொடர்ந்து பணி செய்து செந்நிறக் கோளின் “தளவியல் இரசாய னத்தை” (Geochemistry) ஆராய்ந்து கொண்டு வருகின்றன.  தளங்களில் ஊர்ந்து செல்லும் வயதான இரண்டு “தளவுளவிகள்” மற்றும் சமீபத்தில் இறங்கிய ·பீனிக்ஸ் தளவுளவி (Land Rovers : Spirit & Opportunity, Later Phoenix Lander) ஆக மூன்று தளச் சாதனங்கள் பணிபுரிந்து வருகின்றன.

     

    Flood waters on Mars -1

    புதியதாக “செவ்வாய் விஞ்ஞானத் தள ஆய்வி” (Mars Science Laboratory MSL) எனப்படும் அடுத்தொரு தளவுளவி இதுவரை இல்லாத பத்து மடங்கு நுட்பக் கருவிகளுடன் உலவிடப் போகிறது !  அவற்றில் செவ்வாய்க் கோளில் நுண்ணுயிர் ஜந்துகள் வாழத் தகுதியுள்ள  சூழ்வெளி நிலை இன்னும் இருக்கிறதா வென்று ஆழமாய் உளவும் கருவிகளும் அமைக்கப் படும்.  அத்துடன் மேவன் விண்ணுளவி அடுத்து ஈசா அனுப்பப் போகும் “எக்ஸோ-மார்ஸ் வாகனத்துடன்” (ExoMars Rover) தொடர்பு கொள்ளும் வசதியும் பெற்றிருக்கும்.

    மேவன் விண்ணுளவியில் உள்ள கருவிகள்

    மேவன் செவ்வாய்க் கோளின் மேற்தள வாயுச் சூழ்நிலை பற்றியும் பரிதிம் வீசும் புயல் அதனைத் தாக்கும் பாதிப்புகளையும் ஆராயும்.  அதன் கருவிகள் செவ்வாயின் வாயு மண்டலத்தின் வாயுக்கள், பரிதியின் புயல் வீச்சு, அயனிக் கோளம் (Ionosphere) ஆகியவற்றை அளந்தறிவிக்கும்.

    மேவன் விண்ணுளவியில் உள்ள முக்கிய கருவிகள் :

    1. (Particles & Field Package PAF) – துகள்கள், காந்தத் தளம் அளப்பது.

    2. (Solar Wind Electron Analyser SWEA) – பரிதியின் புயல் அயனிக் கோளம் எலெக்டிரான்களை அளப்பது.

     

    Kasei Valles of Mars

    3. (Solar Wind Ion Analyser SWIA) – பரிதியின் புயல், காந்தத் தளக் கவசம், அயான்களின் திரட்சி, வேகத்தை அளப்பது.

    4. (Suprathermal & Thermal Ion Composition STATIC) – தப்பிச் செல்லும் மித சக்தி வெப்ப சக்தி அயான்களை அளப்பது.

    5. (Solar Energetic Particle SEP) – பரிதியின் தீவிர சக்தித் துகள்கள் செவ்வாய்க் கோள் மேற்தள வாயு மண்டலத்தைத் தாக்கி விளையும் பாதிப்புக்களை அளப்பது.

    6. (Lagmuir Probe & Waves LPW) – அயனிக் கோளத்தின் பண்பாட்டைத் தீர்மானிக்கும்.  தப்பிச் செல்லும் அயனிகளின் அலைச் சூடாக்கம், வாயு மண்டலத்தில் பரிதியின் தீவிர புறவூதா திணிப்பு.  (Solar EUV Input to Atmosphere)

    7. (Magetometer MAG) – அகிலாண்டப் பரிதிப் புயல் & அயனிக் கோள காந்தத் தளத்தை அளப்பது.

    8. (Remote Sensing Package RS) – தொலை உணர்வுக் கருவித் தொகுப்பு.

    9. (Imaging Ultraviolet Spectrometer IUVS) – மேற்தள & அயனிக் கோள பொதுப் பண்பாடு அளப்பது.

    10. (Natural Gas & Ion Mass Spectrometer NGIMS) – அயனிகள், வெப்ப முடக்கிகள் ஆகியற்றின் ஏகமூங்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கத் தனிமங்களை அளப்பது. (Measures the Composition & Isotopes of Thermal Neutrals & Ions).

     

    fig-1g-climate-orbiter-details

     

    முதன்முதல் செவ்வாய்க் கோளின் காலநிலை அறிவிப்பு !

    ஃபீனிக்ஸ் தளவுளவியில் அமைக்கப்பட்டுள்ள கனடாவின் காலநிலை அறிவிக்கும் சாதனம் தனது முதல் அறிவிப்பை வெளியிட்டது.  தளவுளவி தடம்வைத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த உபகரணங்கள் இயங்க பூமியின் விண்கப்பல் ஆட்சி அரங்கிலிருந்து ஆணை அனுப்பப்பட்டது.  தற்போது தொடர்ந்து காலநிலை அறிவிப்புகள் பதிவாகி வருகின்றன.  முதல் 18 மணி நேரக் காலத்தின் அறிவிப்பில் : . . . வானம் வெறுமையாக இருந்தது.  அடுத்துக் காற்று நீர்மை (Humidity) சோதிக்கபடும். . . . குறைந்த நிலை உஷ்ணம் : -80 டிகிரி செல்ஸியஸ் (-112 F) . . . பகல் தாண்டி உச்ச நிலை உஷ்ணம் : -30 டிகிரி செல்ஸியஸ் (-22 F) . . . சராசரி வாயு அழுத்தம் 8.55 மில்லிபார். (பூமியின் கடற்தள அழுத்தத்தில் 100 இல் 1 பாகம்) . . . காற்று வேகம் : 13 mph (20 km/h) வட மேற்குத் திசைநோக்கி.

     

    fig-2-mars-earth-atmospheres

     

    ஃபீனிக்ஸ் செவ்வாய்ப் பயணம் ஒரு மீள் எழுச்சித் திட்டம் !

    செவ்வாய்க் கோளில் விண்ணுளவிகளை நுணுக்கமாக இறக்குவது என்பது இமாலயச் சிரமங்கள் அளிப்பது !  இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின ! 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன.  துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன !  தற்போதைய வெற்றிகரமான ஃபீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளி லிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே !1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது ! அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது !  அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது !  இப்போது செவ்வாய்க் கோளில் தடம் வைத்துள்ள ·பீனிக்ஸ் தளவுளவி முன்பு இழந்து போன செவ்வாய்த் துருவ உளவியை ஒத்த இரட்டை விண்ணுளவியின் சாதனங் களையும், நிறுத்தப்பட்ட செவ்வாய் 2001 தளவுளவிச் சாதனங் களையும் பயன்படுத்தி இப்போது இயங்குகிறது.  அவ்விதம் முந்தி முடக்கிய சாதனங்களை மீண்டும் அமைத்து உண்டாக்கப் பட்டத்தால் “·பீனிக்ஸ்” (Phoenix) என்று இத்திட்டம் பெயரிடப்பட்டது !

    Mars Exploration

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: ESA, NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Mars Dry out ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace  By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002) 12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

    20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (Mars Probe Spacecrafts) 20 (A)http://www.thinnai.com/?module=displaystory&story_id=40803131&format=html (செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ?)

    21 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)

    22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)

    23 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html (செவ்வாய்த் துருவப் பனித் தொப்பிகள்)

    24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html (செவ்வாய்க் கோளுக்கு ஃபீனிக்ஸ் தளவுளவி)

    25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40903261&format=html (செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு, பெர்குலரேட் உப்பு கண்டுபிடிப்பு)

    26 NASA’s Reconnaissance Orbiter [May 15, 2008]

    27 BBC News : NASA Selects Mars Climate Mission -(2) (September 16, 2008)

    28 Mars Climate Orbiter -(1) Update By Wikipedia (March 22, 2009)

    29 Space Flight Now : Mars Story Spawns Kudos & Controversy By Craig Covault (Mar 24, 2009)

    30 BBC News : Q & A Liquid Water on Mars (Mar 22, 2009)

    31 BBC News : New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)

    32 BBC News : Briny Pools May Exist on Mars By Paul Rincon (March 24, 2009)

    33 The Mars Climate Orbiter Mission (Internet Sources)

    34 BBC News – NASA Selects Mars Climate Mission (Sep 16, 2008)

    35 BBC News New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)

    36 FoxNews.com Space Center – NASA Space Probe Projects Cost Overruns (Apr 10, 2009)

    37 The Future of Things – Maven New NASA (Climate) Mission to Mars By : Shalhevet Bar-Asher [Oct 13, 2008]

    38 Wikimedia Source – Maven Mars Program Overview (Jan 29, 2009)

    39. http://jayabarathan.wordpress.com/2012/08/10/curiosity-2/ NASA’s Land Probe -Curiosity [August 2012]

    40. Daily galaxy : Mar’s Methane Debate – A Sign of Life or a Mirage ? [September 11, 2012]

    41. Wired Science : Life on Mars ? Non-Detection of Methane Suggests No Modern-Day Microbes. [November 2, 2012]

    42. NASA Land Probe Curiosity Close to Solving Mystery of Mars’ Missing Atmosphere [November 2, 2012]

    43.  http://news.nationalgeographic.com/news/2012/09/120927-nasa-mars-science-laboratory-curiosity-rover-water-life-jpl/[September 27, 2012]

    44.  http://www.nasa.gov/mission_pages/msl/news/msl20120927.html   [September 27, 2012]

    45.   http://www.utk.edu/tntoday/2013/05/30/mars-curiosity-rover-strong-evidence-flowing-water/ [May 30, 2013]

    46.  http://www.thehindu.com/sci-tech/science/rounded-pebbles-on-mars-point-to-water-flow/article4769911.ece  [June 1, 2013]

    47.http://www.naturalnews.com/040610_water_on_Mars_pebbles_space_exploration.html  [June 4, 2013]

    48.http://www.esa.int/Our_Activities/Space_Science/Mars_Express/The_floodwaters_of_Mars [June 6, 2013]

    49.  http://en.wikipedia.org/wiki/Viking_program  [February 2, 2014]

    50. www.dailygalaxy.com/my_weblog/2014/02/image-of-the-day-clues-found-that-liquid-water-may-exist-on-mars-today-.html [February 12, 2014]

    51.  www.dailygalaxy.com/my_weblog/2014/02/a-vast-oceanus-borealis-may-have-once-covered-13-of-mars.html  [February 17, 2014]

    52.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/05/nasa-curiosity-disovery-solid-evidence-of-an-old-streambed-on-mars.html?  [March 31, 2013]

    53.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/01/-ancient-mars-water-flows-hint-life-was-once-possible.html  [January 30, 2014]

    54.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/water-on-mars-10-million-years-ago-not-long-enough-to-support-life-evidence-from-the-nakhla-meteorit.html  [February 5, 2014]

    55.  http://www.dailygalaxy.com/my_weblog/2014/03/new-nasa-evidence-points-to-biological-processes-active-on-mars-hundreds-of-millions-of-years-ago.html?   [March 1, 2014]

     

    (தொடரும்)

    ++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  March 8, 2014

    http://jayabarathan.wordpress.com/  

    Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation
    Share
  • ஆனந்த மகளிர் தின வாழ்த்துகள்..

    இராஜேஸ்வரி ஜெகமணி

    women

    வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே பெ‌ண்ணைப்பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர்களை மாய்த்துவிட்டு வீறுகொண்டு எழுந்து பெண்கள் சமுதாய‌ம் த‌ற்போது பல்வேறு துறைகளிலும் கோலோச்சிக்கொண்டு வா‌னளாவி பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம்.

    உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டமு‌ம், அத‌‌ன் வெ‌ற்‌றிகளு‌ம் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கி‌ட்டியத‌ல்ல‌்.

    ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த பெருமை மிக்க நாள் இது.

    ஆதிகாலத்தில் சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த பெண்களின் நிலை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.

    ஆண்களுக்கு இணையாக சரிநிகர் சமானமாக வாழ்ந்து வந்த அவர்களின் உரிமைகள் பிடுங்கப்பட்டு, அவர்களை வீட்டு வேலை செய்யும் அடிமைகளாக்கி, போகப் பொருளாக்கி, அவர்கள் ஆண்களின் உடைமைப் பொருளாக ஆக்கப்பட்டனர்வீட்டு வேலைகளை செ‌ய்யு‌ம் பொரு‌ட்டு வீடுகளில் முட‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த பெண்கள் ஆரம்பக் கல்வி ,. மரு‌த்துவ‌ம், சுத‌ந்‌திரமம் போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு அடிமைத்தளையில் அகப்பட்டிருந்த 18 ஆம் நூற்றாண்டின் பெண்கள் காலத்தின் கட்டாயத்தால் வெளி உலகை சந்திக்கவேண்டி வந்தது..!

    1உலகப்போரின் காரணமாக ஏராளமான ஆ‌ண்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ம், படுகாயமடை‌ந்து நட‌க்க முடியாத ‌நிலை‌க்கு உ‌ள்ளானது‌ம் ‌நிக‌ழ்‌ந்தது

    இந்த ச‌ந்த‌ர்‌ப்ப‌ம்தா‌ன் அடு‌ப்பூது‌ம் பெ‌ண்களா‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ளிலு‌ம் ‌திறமையாக ப‌ணியா‌ற்ற முடியு‌ம் எ‌ன்பதை உல‌கி‌ற்கு ‌நிரூ‌பி‌த்தது.

    ஆ‌ண்களு‌க்கு ‌நிகராகப் பெ‌ண்களாலு‌ம் வேலை செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்று தன் சக்தியை விஸ்வரூப அனுமனாக பு‌ரி‌ந்து கொ‌ண்ட பெ‌ண் சமுதாயம் அட‌க்‌கி வை‌த்தா‌ல் அட‌ங்‌கி‌ப் போவது அடிமை‌த் தன‌ம் எ‌ன்று டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது.

    இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின..

    ஓர் ஆணுக்கு இயல்பாகவே கிடைக்கின்ற கல்வி, ஆன்மிகம், வீரம், வேலை, தொழில் இவை எல்லாமே பாகுபாடின்றி பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் சுவாமி விவேகானந்தர். குறிப்பாக பெண்களின் பலம் அவர்களுக்குத் தெரியவில்லை என்பதையும் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளார்.

    உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்ததையடுத்து 1921ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கி இ‌ன்று வரை ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை மக‌ளி‌ர் ‌தினமாக‌க் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம்

    பெண்ணின் பெருமையை உலகிற்கு பறைசாற்றி பெண்கள் அறிவை வளர்த்தால் இந்த வையகம் பேதைமை அற்றிடும்’ மேதமை உற்றிடும் என்பது பாரதியாரின் அழுத்தம் திருத்தமான – ஆணித்தரமான கருத்து.

    ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்பது நம் இந்தியப் பெண்களைப் பற்றி பொதுவாகக் கூறப்படும் கருத்து.

    ஆனால், இன்றைய பெண்கள் அந்த நிலையையும் மீறி தன்னையும் வெற்றிபெறச் செய்து கொண்டு, தன்னைச் சார்ந்திருப்பவர்களையும் வெற்றியடையச் செய்கிறாள்

    சக்தி இல்லாமல் உலகிற்கு முன்னேற்றம் கிடையாது. நம் நாடு அனைத்து நாடுகளிலும் கடைசியில் இருப்பது ஏன்? பலமிழந்து கிடப்பது ஏன்? நம் நாட்டில் சக்தி அவமதிக்கப்படுவது தான்
    -என்று சுவாமிஜி விவேகானந்தர் ஆணித்தரமாக உரைக்கிறார்.

    எத்தனையோ இன்னல்களை எல்லாம் மீறி இன்றைய பெண்களின் நிலை பெரிய அளவில் முன்னேறியிருப்பதற்கு மிக முக்கியக் காரணம் கல்வி.

    ஒருபக்கம் பெண்களின் கல்வியறிவு, மறுபக்கம் தொழில் வளர்ச்சியால் பெருக்கெடுத்த வேலைவாய்ப்புகள். அறிவார்ந்த படிப்பும், கைநிறைய சம்பளமும் பெண்களுக்கு ஆழ்ந்த தன்னம்பிக்கையைக் கொடுக்க ஆரம்பித்துள்ளன.

    பெண்களுக்கு இந்தக் காலகட்டம் பொற்காலம் ஆகும்.

    இந்தக் காலகட்டத்தில் தான் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    ‘வீக்கர் செக்ஸ்’ (பலவீனமானவர்கள்) என்று பெண்களை முடக்கிப் போட்டக் காலத்தில் இருந்து பலர் போராடிப் பெற்ற இந்த சுதந்திரக் காற்றை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்

    ஒரு பெண் தன்னுடைய திறமைகளால் மட்டுமே அடையாளம் காணப்பெற வேண்டும்.

    உடலின் எடை, உயரம், நிறம் மற்றும் இன்ன பிற கவர்ச்சிகளினாலோ, ஆடை, அணிகலன்களினாலோ, வெளிப்புற அலங்காரத்தினாலோ, அடையாளம் கண்டு கொள்ளப்படக் கூடாது.

    எந்த ஒரு பெண், இந்த மனோநிலையை எப்போது அடைந்து மனதளவில் முதிர்ச்சி அடைகிறாளோ அவளே மிகவும் சுதந்திரமான பெண் ஆவார்.

    அத்தகைய பெண்ணே, சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட பெண்ணாக விளங்கி, இந்த உலகைப் புதுப்பிக்க முடியும்.

    Share
  • டவுன் வித் அப்ஸ்கர்ட் பிக்ச்சர்ஸ்

    தேமொழி

    மேடையில் பரதநாட்டியம் ஆடிய அந்த மாணவி மெய் மறந்து, கலையுடன் தன்னை இணைத்துக் கொண்டு பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள். அது அந்தப் பல்கலைக் கழகத்தின் முதுகலை மாணவ மாணவியரின் பிரிவுஉபச்சார விழா. அவளும் இறுதியாண்டில் பயிலும் மாணவிதான். ஆடிக்கொண்டிருக்கும் மாணவியை அதன் பிறகு அந்தக் கல்லூரி வளாகத்தில் பார்ப்பதென்பதே அரிதாகிவிடும். அவள் எங்கு போவாளோ, மேற்கொண்டு படிப்பாளோ, பணியில் அமர்வாளோ, கலைப்பயணத்தைத் தொடர்வாளோ என்பது போன்ற கேள்விகள் அவள் ஆடிய விதத்தைக் கண்ட பொழுது மனதில் எழுந்தது. அந்த விழாவில் அந்தத்துறையைச் சார்ந்த அனைவருமே பங்கு பெற்றனர். மூத்த மாணாக்கர்கள், இளைய மாணாக்கர்கள், பேராசிரியர்கள், கல்லூரியின் ஊழியர்கள் யாவரும் நடனத்தைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

    அவள் வகுப்பில் படிக்கும் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட உடன் பயிலும் மாணவன் ஒருவன் அவர்கள் வகுப்பு நிகழ்சிகளை, விழா நடனங்களை, உல்லாசப் பயணங்களை உற்சாகமாகப் படம் பிடிப்பான். படங்களை வேண்டுபவருக்கும் பிரதி எடுத்து வழங்குவான். அன்றும் வழக்கம் போலவே புகைப்படம் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தனது வகுப்புத் தோழியின் நடனத்தைப் பல கோணங்களிலும் ஓடி ஓடிப் படம் பிடித்தான். திடீரென யாரும் எதிர்பாராவண்ணம் நடனமாடியவளின் முந்தானை இருக்க வேண்டிய இடத்தை விட்டு நெகிழ்ந்து நழுவியது, அவள் அணிந்திருந்த சோளி, அவளது மார்பு சேலையினால் சரிவர மறைக்கபடாமல் போனது.

    ஆண்களும் பெண்களும் கலந்து இருந்த அவையில் அவ்வாறு நிகழ்ந்ததும் பெண்கள் அனைவருக்கும் சங்கடமானது. கூச்ச உணர்வில் நெளிந்தனர். நடனமாடிய மாணவிக்கு இது தெரியவில்லையா அல்லது நடனத்தில் இருந்த தீவிர ஈடுபாட்டில் அதனைப் பொருட்படுத்தவில்லையா என்றும் புரியவில்லை. அவளது வகுப்புத் தோழன் அத்துடன் மேற்கொண்டு படம் பிடிப்பதை நிறுத்தினான். கேமேராவின் லென்ஸ் கவரைப் போட்டு மூடிக் கொண்டே தனது இடத்திற்குத் திரும்பிவிட்டான். அவனது அந்த செய்கை மனதை விட்டு அகலாமல் கால்நூற்றாண்டு ஆகியும் நினைவில் தங்கி அவன் மீது அளவு கடந்த மதிப்பைத் தந்த வண்ணம் இருக்கிறது. இது ஓர் உண்மை நிகழ்ச்சியே.

    அன்று பெண்கள் மதிப்பில் மிகவும் உயர்ந்த இடத்தைப் பிடித்தான் அவன். அவன் தொடர்ந்து படம் எடுப்பது தவறா இல்லையா? அதில் என்ன தவறு? என்பது ஒவ்வொருவர் கோணத்திலும் வேறுபடலாம். ஆனால் அவன் செய்த செய்கையை அறிந்தால் அவனது தாய் மிகவும் பெருமைப் பட்டிருப்பார். சகோதரிகள் (இருந்திருந்தால்) அவர்களும் மகிழ்ந்திருப்பர். அதுவரை அவனுடன் படித்த அவனது வகுப்புத் தோழியரான மாணவிகளும், ஆசிரியைகளும் அவனை மனதிற்குள் பாராட்டியிருப்பார்கள் என்பதை அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அத்துறை மாணவியர் அவன் பண்பாட்டைக் குறிப்பிட்டுப் பேசிய பொழுது தெரிந்தது.

    இது பண்பாட்டிற்கு, பெண்களை மதிக்கும் பண்பிற்கு நல்லதோர் சான்று. ஆனால் நாம் வாழும் உலகில் இருப்பவர் அனைவருமே இந்த மாணவனைப் போன்றவர்களாக இல்லாதிருப்பதே பெண்களுக்குத் துயரம் தரும் விதமாக அமைந்துவிடுகிறது.

    இந்நாட்களில் படம்பிடிக்கும் கருவியுடன் கைபேசி வந்ததும், பெண்கள் அறியாவண்ணம் அவர்கள் மீது நிகழ்த்தும் அத்துமீறல்கள் அதிகமாகிவிட்டன. அனுமதியின்றி யாரையும் படம் எடுப்பது தவறு. அது தனிமனித உரிமை மீறல். பொது இடங்களில் பெண்கள் கவனிக்காத பொழுது, அவர்கள் குனிந்து நிமிரும் பொழுதும், அரக்கப் பரக்க அவசர அவசரமாக ஓடும்பொழுதும், பேருந்துகளில் அமர்ந்திரருக்கும் பொழுது நின்றவண்ணம் மேலிருந்து பார்த்துத் தங்களுக்குக் கிடைக்கும் கோணத்தில் அவர்களது மார்பு, பின்புறம், இடை என  அவர்களது உடல் உறுப்புக் காட்சிகளைப் படம் பிடித்து வைத்துக் கொள்வதும், அதை இணையத்தில் பரப்புவதும் விரைவில் வெகுவாகப் பரவிவிட்டது. அது போலவே நம்பிக்கைக்குரிய தோழர்களாக இருந்த பொழுது எடுத்த படங்களை நட்பு முறிந்தவுடன் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதும், பெண்கள் தங்கள் காதல் துணையுடன் தனிமையில் இருக்கும் நிகழ்வுகளையும், குளிக்கும் அறையில் ஆடையற்று உள்ள நிலைகளையும் காணொளியாக எடுத்து வைத்துக் கொண்டு அதை வைத்தே அவர்களை மிரட்டி அலைக்கழிப்பதும், தன்னிசையைத் தீர்த்துக் கொள்வதும் தொழில்நுட்பம் வந்தபிறகு அதன் மூலம் பெண்கள் மீது நிகழ்த்தும் புதிய வகை வன்முறையாக மாறியுள்ளது.

    தானே வலிய விரும்பி அரைகுறை ஆடையுடன் அலையும் பெண்களையும், அது போன்ற ஆபாசக் கோணங்களில் தங்களைப் படம் எடுத்துக் கொள்ள விரும்பும் பெண்களையும் இணைத்து இங்குக் குழப்புவது நிலைமையின் தீவிரத்தை, கண்டனத்திற்குரிய செய்கையை மட்டுப்படுத்தி நீர்த்துப் போகும் என்பதால், அதனைத் தவிர்ப்போம். பெண்களே ஆபாசமாக அலையும் பொழுது அப்படித்தான் படம் எடுக்க விரும்புவார்கள் என்று கூறுவது பிரச்சனையைத் திசைத் திருப்ப விரும்பும் விதண்டாவாதம். கண்ணியத்தைக் கடைபிடிக்க விரும்புபவர்கள் இது போன்ற வாதங்களைத் தவிர்க்க வேண்டும். யாரும் எப்படியும் இருந்தாலும் நான் ஒழுக்க நெறியைப் பின்பற்றுவேன் என்பதுதான் பண்பாடாக இருக்க வேண்டுமே அல்லாமல், வீடு திறந்து இருந்தால் திருடுவதில் என்ன தவறு என்று கேட்பது ஒழுக்கத்தில் அடங்காது. கள்ளத்தனத்தில் அடங்கும். இது போன்ற நோக்கம் கொண்டு விவாதிப்பவர்களால் குற்றவாளிகளும் தப்பிப்பது எளிதாகிவிடும். பெண்களையும் சிறுமிகளையும், அவர்களது அனுமதியின்றி, அதுவும் அவர்கள் விரும்பத்தகாதவகையில் படம் பிடித்து மகிழும் கீழ்த்தர எண்ணம் கொண்டவர்களை கண்டிப்பது ஒன்றே இங்கு நமது நோக்கம்.

    என்றோ உருவாக்கிய சட்டம் தற்காலக் குற்றத்தைத் தண்டிக்க இயலாத வகையில் அதில் ஓட்டைகளுடன் குற்றவாளிகளைத் தப்பவிட நேர்ந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியை நிலைநிறுத்த ஒத்துழைக்காவிட்டால், அதனை நாம் அன்றே மாற்றவேண்டும். இக்கருத்தை வலியுறுத்த இவ்வார நிகழ்ச்சி ஒன்றினைச் சான்றாக முன் வைக்கிறேன். இந்நிகழ்ச்சி, மேலை நாட்டினர் என்றாலே பண்பாட்டில் குறைந்தவர்கள், கலாச்சாரமற்றவர்கள், பெண்களை போகப்பொருளாக மதிப்பவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நம் பாரத மக்களின் அறியாமையைக் கண்களைத் திறக்கும்.

    பெண்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் செயலைச் செய்து அற்ப மகிழ்ச்சி அடையும் ஆண்கள், இன்று நேற்றல்ல, பல காலமாக இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் அவர்களை ‘பீப்பிங் டாம்’ (Peeping Tom) என்ற அடைமொழியிட்டு அழைப்பார்கள். அத்துடன் பொது இடங்களில் இருக்கும் பெண்களின் ஆடைக்குள் காமெராவை நுழைத்து அவர்களது உள்ளாடையை, பிறப்புறுப்பை இக்கயவர்கள் எடுக்கும் படங்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ (upskirt photos) என்று அழைப்பார்கள்.

    சென்ற புதனன்று (மார்ச் 5, 2014), அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் அவ்வாறு பெண்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ பிடித்த தடியன் ஒருவனை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அம்மாநிலத்தின் சட்டப்படி முடிவெடுக்க வேண்டுமானால், அவன் செய்ததில் தவறில்லை என்ற தீர்ப்பை எழுதும் நிலைக்கு நீதிபதிகள் உள்ளானார்கள். அம்மாநிலத்தின் ‘பீப்பிங் டாம்’ சட்டப்படி ஒரு பெண் தனியிடமான ஆடைமாற்றும் அறையிலோ, குளியலறையிலோ, அவள் ஆடையற்று அல்லது அரைகுறை ஆடையுடன் இருக்கும் பொழுது படம் எடுப்பதையே சட்டப்படித் தண்டிக்க முடியும். ஆனால் நிர்வாண நிலையில் இல்லாமல், உடல் முழுவதும் மறைக்கும் ஆடை அணிந்து, பொது இடத்தில் உள்ள பெண்ணை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுப்பதைத் தண்டிக்கச் சட்டத்தில் வழியில்லை என்று கூறியது அம்மாநில உயர்நீதிமன்றம்.

    இத்தீர்ப்பால் கொதித்தெழுந்த அம்மாநில மக்களும் சட்டமன்ற உறுபினர்களும் மறுநாளே (வியாழக்கிழமை, மார்ச் 6, 2014) பெண்களை அவமதித்து இவ்வாறு ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுத்து அவர்களைப் பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்யும் நிலையைப் போக்க வேண்டும் என்று அறிவித்ததுடன், குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டரை ஆண்டுகளிலிருந்து பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 டாலர்கள் வரை அபராதமும் கட்ட வேண்டும் என்ற சட்டமியற்றி அதனை நடைமுறைப்படுத்தவும் வழி செய்துவிட்டனர். முதல்நாள் குற்றமற்றவன் என்று கருதப்பட்டவன், மறுநாளே மாற்றி எழுதப்பட்ட சட்டத்தினால் குற்றவாளியாகித் தண்டனை அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான். அம்மாநிலப் பெண்களுக்கு இது இந்த ஆண்டிற்கான சிறந்த “உலக மகளிர் தினப்பரிசு” என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

    உலகில் பல நாடுகளில் இவ்வாறு தனி மனுத உரிமைக்கு ஊறு விளைவிக்கும் செயலைத் தண்டிக்கப்பட வேண்டியக் குற்றம் எனச் சட்டமியற்றப் பட்டாகிவிட்டது, அதில் இந்தியாவும் அடங்கும். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66இ பிரிவுப்படி (under section 66E, of the Information Technology Act) இது போன்ற செயல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

    தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் பெண்கள் முன்னைவிட எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எதையும், யாரையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து எச்சரிக்கையாக இருப்பது இன்றியமையாததாகிறது. ஸ்கைப் போன்ற காணொளி வழி அலுவலக தொழிலின் காரணமாக கலந்துரையாடல் நடக்கும் பொழுது, ஆண்கள் பெண்களுடன் உரையாடுவதை சாக்காக்கிக் கொண்டு அவர்களை மார்புவரை காமெரா கோணத்தை வைக்கச் சொல்லும் பொழுது பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ஆண் ஒரு முதியோராக இருந்தாலும் கூட இந்த அறிவுரை பொருந்தும். பெரும்பாலும் வயோதிக ஆண் என்றால், தங்கள் தந்தை வயது உள்ளவர் என்று அன்புடனும் பாசத்துடனும் அவர்களை நினைப்பது பெண்களின் வழக்கம். ஆனால் பல முதியோர்களும் வல்லூறுகள் போலவே நடந்து கொள்வார்கள் என்பதையும், தனது ஒத்த வயது தோழர்களிடம் கூட எதிர்பார்க்க இயலாத முறையற்ற செயல்களுக்கும் அம்முதியோர்கள் துணிந்தவர்கள் என்பதையும் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும். யாரையும் நம்பக்கூடாது என்பதே பெண்கள் முதலில் படிக்க வேண்டிய அரிச்சுவடிப் பாடம். தாங்கள் அறிந்த பெண்களையும், தங்களது மகள்களையும் இதனை நினைவுபடுத்தி நல்வழி காட்டவேண்டியது இன்றையத் தாய்க்குலச் சக்திகளின் கடமை.

    Share
  • புது மாப்பிள்ளை, பெண்ணுக்கு

    நிர்மலா ராகவன்

    உங்கள் திருமணத்துக்கு நாள் குறித்தாகிவிட்டது. நீங்கள் மாப்பிள்ளையாகின், சற்று வீரமாக, பொறுப்பானவனாக உணர்வீர்கள். ஏனெனில், இதுவரை பெற்றோர், அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள் யாவரும் சொற்படி நடந்த உங்களுக்கு, இப்போது நம் அதிகாரத்தைப் பிரயோகிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் என்ற பெருமை எழக்கூடும்.

    புது மனைவியிடம், `உனக்கு சிவப்புப் புடவைதான் அழகாக இருக்கிறது. பச்சை வேண்டாமே!’ என்னும்போது, `கணவருக்குத்தான் நம்மீது எவ்வளவு ஆழ்ந்த அன்பு!’ என்று அவளும் உங்கள் விருப்பப்படியே நடக்கிறாள்.

    தான் சொல்வதை மந்திரமாக ஏற்று நடக்கும் மனைவியால் உங்கள் சுயமதிப்பு கூடுகிறது. அவளை இன்னும் அதிகமாக அடக்க முயற்சிக்கிறீர்கள். அதைப்பற்றி நண்பர்களிடமும் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறீர்கள்.  அவளும் விட்டுக்கொடுத்துக் கொண்டே போகிறாளா? பத்திரம்! ஒட்டகத்தின் மேல் சுமத்தப்பட்ட கடைசி இழை வைக்கோலைப்போல் அவள் முதுகு உடையும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

    ஒரு பெண் சுரத்தின்றி, எதிர்ப்பேச்சு பேசாது அடங்கிவிட்டால்,  அவள் கலகலப்பாக இல்லையே என்ற குறை கணவனுக்கு எழும். வெளியுலகில் பார்க்கும் பிற சுதந்திரமான பெண்களைப் பார்த்து, `எனக்கு ஏன் இப்படி ஒரு ஜடம் வாய்த்தது!’ என்று குறைபடுகிறான்.

    தன் பேச்சுக்கு மறுபேச்சே இருக்கக்கூடாது என்பதுபோல் நடக்கும் ஆண்களின் நிலை இதுதான்.

    (இப்படிப்பட்ட ஒருவரின் மனைவியை எனக்குத் தெரியும்.  நன்கு படித்து, உத்தியோகத்தில் இருப்பவள் ஆயினும், யாராவது பேசினால், அவர்களுடைய ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் சிரித்து வைப்பாள். அவளுடைய அபிப்ராயத்தைச் சொல்லும் உரிமை கல்யாணம் ஆனதுமே அவளிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. காலங்கடந்து அவர் விசனப்படுகிறார்).

    தனது ஆண்மையைத் தானே மெச்சி, மனைவியை நாலு பேர் முன்னிலையில் `முட்டாள்’ என்று திட்டி, அல்லது காரணமில்லாமல் பலத்த குரலில் திட்டி, அல்லது அவள் செய்த `முட்டாள்தனமான’ காரியம் எதையாவது தண்டோரா போட்டுச் சொல்லும் ஆண்கள் சற்று யோசிக்க வேண்டும். இப்படிச் செய்வதால், நீங்கள் உயர்ந்துவிட்டதாக யாரும் எண்ணப் போவதில்லை — உங்களைத் தவிர்த்து.

    பரிதாபத்துக்குரிய மனைவியோ, முகத்தில் எந்த சலனமும் இல்லாது உட்கார்ந்திருப்பாள். அவளுக்கு அவருடைய ஏச்சுப்பேச்சு பழகிவிட்டது. `எனக்கு வருத்தமாக இருக்கிறது. இப்படி என்னை மட்டம் தட்டிப் பேசாதீர்கள்,’ என்று கெஞ்சினாலும் அவர் மாற மாட்டார் என்பதை நடைமுறையில் கண்டவள் அவள்.

    “திரும்பக் கத்திப் பாருங்களேன்! எதற்காக இவ்வளவு  அவமரியாதையைப் பொறுத்துப் போகிறீர்கள்?”– கேட்டது நான்.

    பதில் உடனே வந்தது. “அது மரியாதை இல்லை!”

    பெண் மட்டும்தானா மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும்? யோசியுங்கள்!

    நீங்கள் பெண்ணானால்:

    பெண்பார்க்கும் வைபவம் முடிந்து, உங்களை மணக்கவும் சம்மதம் தெரிவித்துவிட்டார் ஒருவர். மூன்று மாதங்களுக்குப் பிறகு திருமணம் — நீங்கள் ஆவலோடு காத்திருந்த நன்னாள்.

    நிம்மதியுடன், இனி என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற நிம்மதி ஏற்படுகிறதா? (`நீ இப்படி குண்டா, வாயாடியா இருந்தா, ஒருத்தனும் ஒன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்!’ நம் பெண்களுக்கு அடிக்கடி வழங்கப்படும் இலவச போதனை).

    ஓர் ஆண்மகனை வளைத்துப்போடவா இத்தனை வருடங்களும் நீங்கள் உங்கள் மேனியழகைப் பாதுகாத்து வந்தீர்கள்?

    இல்லை, பிற ஆண்கள் உங்கள் அழகை ரசித்தால், கணவருக்குப் பிடிக்காதோ என்ற அச்சமா?

    எதுவாக இருந்தாலும், உங்கள் போக்கு சரியல்ல. உடம்பைச் சரிவர பராமரிப்பது வெளியழகுக்காக மட்டுமல்ல. ஆரோக்கியம் என்று ஒன்று இருக்கிறதே, தெரியாது? அளவுக்கு  அதிகமாகச் சாப்பிட்டு, நாற்பத்தைந்து வயதிலேயே சர்க்கரை வியாதி, ஓயாத கால்வலி, ரத்த அழுத்தம் என்றெல்லாம் நீங்கள் புலம்ப ஆரம்பித்தால், யாருக்கும் சுகமில்லை.

    கல்யாணமான முதல் கொஞ்ச நாட்கள் கணவர் நைச்சியமாகப் பேசி உங்களை `விரட்ட’ ஆரம்பித்தால் (அதாவது, அவருக்குப் பிடித்தமாதிரியே நீங்கள் எப்போதும் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தால்), ஒரேயடியாகப் பணிந்து போகாதீர்கள். உங்கள் தனித்தன்மையை இழந்து விடுவீர்கள். `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று பயந்தே வாழ்க்கையைக் கழிப்பது நமக்கு தாமே அளித்துக்கொள்ளும் தண்டனை.

    எந்த ஒரு பந்தத்திலும், சந்தோஷம் அல்லது துயரம் மட்டுமே நிலைத்திருப்பது கிடையாது. உங்கள் போக்கிற்கு ஒருவர் விடவில்லை என்றால், உடனே உறவை முறித்துக்கொள்வதும் தகுந்த தீர்வு இல்லை. வாரத்தில் ஒரு நாளாவது சண்டை போடாமல், இருவரும் சேர்ந்து எங்காவது சென்று வந்தால்கூடப் போதும். மற்ற நாட்களில் கிடைக்காத மன ஒற்றுமை கிட்டிவிடும். (இது என் சொந்த அனுபவம்).

    மணந்தவரை (மணந்தவளை) மாற்ற முயல்வது ஒரு நாயைப் பூனையாக்கும் முயற்சிதான். ஒருவரையொருவர் அப்படியே ஏற்றுக்கொண்டால், புரிந்துணர்வு ஏற்பட, உறவு பலப்படும்.

    (இந்த ரீதியில் நான் மலேசிய ஆங்கில தினசரி ஒன்றில் எழுதியவைகளைப் படித்த சில ஆண்கள்,`My marriage has improved because of you!’ என்று நேரில் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்).

    Share
  • பெண்கள் உலகின் கண்கள்

       விமலா ரமணி

    மீண்டும் ஒரு மகளிர் தினம்.

    ஒவ்வொரு   வருடமும் நாம் இந்த நாளைக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த நாளில் என்ன சாதிக்கறோம்  ?

    பெண்மைக்கு  என்ன பெருமை சேர்க்கிறோம்?

    எத்தனையோ தடைகளைத் தாண்டி வந்த பெண்மைக்கு என்ன மதிப்புத் தருகிறோம் ?

    இன்றும் செய்தி  தாள்களைப் புரட்டினால் ஆங்காங்கே பெண்கள் கற்பழிக்கப் பட்ட செய்திகள்..

    கணவனால் கொடுமைப் படுத்தப் பட்ட பெண்கள்..

    வரதஷிணைக் கொடுமைக்காக எரிக்கப்பட்ட பெண்கள்

    தந்தையே  தன் மகளைக் கற்பழிக்க முற்பட்ட  கயமைத் தனம் கல்வி கற்பிக்கும்  ஆசானே  மாணவியைக் கற்பழித்தல்….இப்படி எத்தனை எத்தனை செய்திகள்..

    ஆசானுக்கே அரிச்சுவடியில்  சந்தேகம் வரலாமா ?

    இன்னமும் அறியாமையிலும்  அவலத்திலும்  அடிபட்டு மிதிபட்டு அரைப் பைத்திய நிலையில்  அவதியுறும் பெண்கள்.

    இந்தக் குடும்ப வன்முறை பற்றிய ஒரு கட்டுரையை  ‘இந்து ’   செய்தித் தாளில் சமீபத்தில் படித்தேன்.

    நம் பாரதத்தின்   கிராமங்களில்  கூட அறிவியல் வளர்ச்சி வந்துவிட்டது.பெண்கள் கல்வி கற்க கிராமப் புறங்களிலுருந்து நகர்ப் புறங்களுக்கு வருகிறார்கள் கிராமம்  நகரம் என்ற நிலை மாறி. அனைவரும் நாகரீக வாழ்வைத் தேடி அலைகிறார்கள்.

    தொழில் நுட்ப நிலையிலும்  பல கிராமப் பெண்கள் சாதனை புரிந்துள்ளார்கள்.

    வாட்ச் மேன் மகள் சப் கலெக்டர் ஆகிறாள்.

    ஏழ்மை நிலையிலும படிக்கும் ஆர்வத்தால் தொழில் கல்வி பயின்று

     கல்லுரியில்  முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் பெறுகிறாள்.  ஒரு மாணவி.

    ஆனால் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வரும் பெண்களின் மனநிலை என்ன என்பதை அந்தக் கட்டுரை விளக்குகிறது.

    தகப்பனால் அடி உதை வாங்கி அரைப்  பைத்திய நிலையில் இருக்கும் தாய்  ,எப்போதும் வறுமை எதிர் காலம் பற்றிய அச்சம்  ,தன் கற்புக்கு உத்திரவாதம் அற்ற நிலை , சமூகத்தின் பாலியல் பலாத்காரக்  கொடுமை …..

    இந்நிலையில் குடும்ப  வன்முறைச் சட்டங்கள் எப்படி உதவுகின்றன?

    தனி நீதி மன்றங்கள்   உதவும் அமைப்புக்கள் அத்தனையும் இருக்கின்றன.

    இத்தனை இருந்தும் எப்படி இத்தனை அக்கிரமங்கள் நிகழு

    கின்றன. ?

    ஒரு பீட்சாவுக்கு ஆர்டர் கொடுத்தால் அரை மணியில்  பீட்சா நம் இல்லம் தேடி வந்து விடுகிறது.

    அவதியுறும் பெண்மைக்குப் பாதுகாப்பு  தர அரை மணி  நேரம் போதாதா?  என்று வினா எழுப்புகிறார் கட்டுரையாளர்.

    அரசாங்கம்   இதற்குத் தனி ஏற்பாடு செய்ய வேண்டும்  அவசரகால  உதவியாக ஏதாவது ஒரு ஏஜன்ஸியை  ஏற்படுத்த வேண்டும் என்கிறார் அவ்ர்.

    ஒரு கதை உண்டு.

    ஒரு தவளையை ராமபிரானின் வில் அழுத்தி கொண்டிருந்ததாம்

    அதை உணர்ந்த ராமர் தன் வில்லை விலக்கிக் கொண்டு தவளையை பார்த்துக் கேட்டாராம்   ஏன் முன்பே நீ என்னிடம் முறையிடவில்லை?

     தவளை பதில் சொல்லியதாம்

     எனக்கு யாராவது துன்பம் தந்தால்  ராமா  என்று அழைப்பேன்

    ஆனால் அந்த ராமனாலேயே எனக்குத் துன்பம் ஏற்பட்டால் யாரை அழைப்பேன்?

    பல தகுதிகள் இருந்தும் திறமை இருந்தும் தன் திறமைகளைப் பெண்களால் முழுமையாக வெளிக் காட்ட முடியாமல் போவதின் காரணம் அவர்கள் குடும்ப சூழ்நிலைகளே

    குடும்ப வன்முறையால் பெண் இனம் அழிந்து கொண்டிருக்கிறது.

    வறுமையும் விரக்தியும்  அச்சமும் ஆட்க் கொண்ட நிலையில் அவர்களால் தம் இலக்கை  அடைய முடிவதில்லை.

    தவிர தற்கால நவநாகரீகப் போக்கும் போலி விளம்பரங்களின்  ஆதிக்கங்களும் இவர்களைத் திசைமாறச் செய்கின்றன.

    சிகப்பழகு தான் அழகு எனக் கூறும் விளம்பரங்கள்  முகச் சுருக்கம் இல்லாமல்  இருக்க செய்து கொள்ளப்படும் பொட்டக்ஸ் சிகிச்சை பற்றிய அறிவிப்புக்கள் அரை குறை ஆடைகளும் குட்டைப் பாவாடைகளும் இது தான் நாகரீகம் எனப் பறைசாற்றும் விளம்பரங்களும் பெண்மையின் அழகை ஜட்டி தெரிய  கீழே இருந்தபடி படம் பிடிக்கும் காமிராக் கோணங்களும்

    இவைகள் எல்லாமே பெண்மையைப் பெருமையைப் படுத்தவில்லை

    காதலர் தினத்தன்று பப்புக்குப் போய் பெண்கள் பீர் அருந்துவது  நாகரீகமல்ல

    சரிநிகர் சமானம் என்பது இதுவல்ல என்பதைப் பெண்களும் உணரவேண்டும்

    கணினியை திறந்தால் அது நம்மை டேட்டிங்கிற்கு அழைக்கிறது.

    தனிமையாக இருப்பவர்களுக்கு ஜோடி சேர்க்கிறது.

    நல்ல விஷயங்கள் எத்தனையோ கணினியில் இருக்க நாம் தேர்ந்ததெடுப்பது இதைத் தான்.

    பேஸ் புக்கில் ஆரம்பிக்கும் நட்பு கடைசியில் நாசமாகி தற்கொலைக்கு வித்திடுகிறது இது அறிவியல் வளர்ச்சி அல்ல அறியாமையின் தளர்ச்சி

    நடனப் போட்டி என்ற பெயரில் முன் பின் அறிமுகம் இல்லா  சிறுமிகள்  சிறுவர்களுடன் ஆட வைக்கப்படுகின்றனர்.

    பெற்றோர்களும் அதைப் பார்த்து ஆனத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

    அசிங்கமான அசைவுகள் ஆபாசப் பாடல்கள்  அர்த்தம் புரியாமலே ஆடும் இளம் சிறார்கள் பெற்றவர்களுக்குக் கூடவா அர்த்தம் தெரியாது.?

    ஒரு  கேரள நடிகை தன் பிரசவத்தை  நேரடி ஒளிபரப்புச் செய்ய

     டி வி சேனல்களுக்கு  அனுமதி அளிக்க பாவம் அந்தச் சேனல்காரர்கள்  கையில் வீடியோ காமிராக்களுடன் அவருக்கு பிரசவ வலி எடுக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தனர். பாவம் அவர் கணவருக்குக் கூட இல்லாத அக்கறை  புகைப் பட நிபுணர்களுக்கு

      காரணம்…?பணம் மணி துட்டு

    கடத்தல் கதையைச் சொல்லித் தரும் திரைப்படங்கள் அதைக் கடைப்பிடிக்கும்  மனிதர்கள்

    பாட்டு இல்லாத சினிமாக்கள் கூட வரலாம் பாட்டில் இல்லாத சினிமாக்கள் இல்லை

    இது நாகரீக வளர்ச்சியா? நச்சுத் தன்மை  வளர்ச்சியா?

    இந்த நச்சுத்  தான் சமுதாயத்தில் புறையோடி பாலியல் வன்முறைக்கு வித்திடுகிறது.

    அந்த்க காலப்பள்ளிகளில் மாரல் சயின்ஸ் என்றொரு வகுப்பு உண்டு.

    நல்ல நல்ல கருத்துக்களை கூறும் வகுப்பு

    இப்போது கூறுவதற்கும் ஆள் இல்லை கேட்கவும் காதுகள் இல்லை

    குறிப்பாக இளைய சமுதாயம்

    பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வருவது போல்

    ஆடை குலைவுற்று நின்றாள்.

    ஆவெனத் துடித்தழுதாள்  வெறும்

    மாடு நிகர்த்த துச்சாதனன் 

    மைக்குழல் பற்றி இழுத்தான்

     என்பது போல்  இப்போது துச்சாதனர்கள் அதிகமாகி விட்டனர்.

    பெண் அடிமைக்கு எதிராக முப்பதுகளில் பாரதி குரல் கொடுத்தான்.

    மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்றான்.

    நாம் அர்த்தம் புரிந்து கொள்ளாமல் பெண்களைக் கொளுத்திக் கொண்டிருக்கிறோம்

    நாம் கட்டப் பஞ்சாயத்துப் பண்ணிக் கொண்டிருக்கிறோம்

    வார்ட் பாயால் கற்பழிக்கப் பட்ட பெண் கோமா நிலைக்குத் தள்ளப் பட்டு கருணைக் கொலைக்கும் மறுப்பு கூறப்பட்டு மருத்துவமனையின் தாதிகளால் பல வருடங்கள் பராமரிக்கப் பட்டு இன்னமும்  நடைப் பிணமாய் உயிர் வாழ்ந்து கொண்டிக்கிற அவரைப்போல்  அபலைப் பெண்கள்  இன்னும் எத்தனை பேர்..

    ஆசிட் வீசப்பட்டு அநியாமாய்  பலியான வித்யாக்களும். நிர்பயாக்களும்  எத்தனை பேர்..

    ஐந்து வயதிலும்  பத்து வயதிலும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் கற்பழிக்கப் படுகிற கொடுமை

    கற்புக்கு அர்த்தம் கூடத்  தெரியாத அந்தப் பிஞ்சு மலர்களைக் கசக்கிப்போட  எப்படி மனம் வருகிறது?

    காரணம்,,,? குடி வெறி…?

    நாமும் இந்தச் சமுதாயத்தில் தான் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம்.

    ஒரு செய்தி உண்மைச் செய்தி  தில்லியில் நடந்தது.

    கணவன் மனைவி இருவர் ஒரு ஹோட்டலில்   அறை எடுத்துத் தங்க

    கணவன்  தன் வேலை நிமித்தம் வெளியே செல்ல

    அரைக்கு வந்த அட்டண்டர் பையன்  தனியாக இருக்கும் அந்தப் பெண்ணிடம் பலாத்காரம் செய்ய

    உதவி கேட்டு அந்தப் பெண் கதற

    பக்கத்து அறைக்காரர் ஓடி வர

    தனக்கு உதவி கிடைத்ததென்று அந்தப் பெண் மகிழ்ந்த நேரத்தில்  அந்தப் பெண்ணுக்குக் கிடைத்த உதவி என்ன தெரியுமா  ?

    மேற்படி மனிதரும்  தன் வாய்ப்புக்காக க்யூவில் காத்திருக்கிறார்.

    என்ன  கொடுமை இது ?

    இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன ?நாம் மனிதாபிமானத்தை இழந்து விட்டோம்.

    பெண்ணின் பெருமை எல்லாம் மேடைப் பேச்சோடு சரி என்ற நிலைக்கு வந்துவிட்டோம்

    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எல்லாத் துறைகளிலும் பரவிக் கிடக்கிறது.

    அவர்களின் வறுமை இயலாமை குடும்பச் சூழ்நிலை  இதை வைத்து அவர்கள் சூறையாடப் படுகிறார்கள்.

    மனம் ஆரோக்கியமான இருந்ததால் செயலில்  நேர்த்தி வரும்.

    அந்த  ஆரோக்கியம் சமுதாயத்திலும்  எதிரொலிக்க வேண்டும்

    தனி மனித சுதந்திரம் சுற்றுப் புறத்தையும்  செம்மைப் படுத்த வேண்டும்

    நினைவு நல்லது வேண்டும் என்று பாரதி கேட்டதும் இதைத் தான்.

    இது பெண்கள்  மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல.

    நாட்டுப் பிரச்சனை

    சமுதாயப் பிரச்சனை

    அகலிகைக்கு சாப விமோசனம் கிட்டியது பழைய கதை

    இன்று காத்திருக்கும் பெண்களுக்கு சாப விமோசனம் கிடைக்காது.

    காரணம்,,,?அவள் எதிரே வருவது ராமர் பாதங்கள் அல்ல

    ராவண பாதங்கள்

    இவளுக்குக் காத்திருக்க நேரமும் இல்லை

    நளாயினியைப் போல்  சூரியனை உதிக்காதே என்று  சாபமிட தவ வலிமையும் இல்லை

    அதனால் தான் இவளுக்குச் சமுதாயப் பாதுகாப்பு தேவை

    அரசாங்கத்தின் அரவணைப்புத் தேவை

    சக நண்பர்களின்  ஒத்துழைப்புத் தேவை

    சட்டத்தால் மட்டுமே இவளுக்குப் பாதுகாப்புக் கிடைக்காது

    இது  நாம் இழந்துவிட்ட மனிதாபிமானத்தின்  பிரச்சனை

    நான் இந்தியன் என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் போது

    நான் நல்ல மனிதன் பாரதமாதா கி ஜெய் என்று என் நாட்டைத் தாயாக வணங்குவதைப்  போல்

    பெண்கள் அனைவரையும்  (மனைவி நீங்கலாக) என் தாயாக சகோதரியாக  வணங்குவேன் என்று ஒவ்வொரு ஆணும் சபதம்

    எடுத்துக் கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.

    அன்று தான் உண்மையான பெண்கள் தினம்

    பெருமைக் குரிய தினம்.

    பெண்கள் உலகின் கண்கள் என்பார்கள்.

    அந்தக் கண்களில் காட்டிராக்ட் வந்திருக்கிறது.

    தக்க காலத்தில்  உரிய நேரத்தில் மருத்துவம் பார்க்க வேண்டும்

    இல்லையென்றால்  குருட்டுப் பெண்ணின் வறட்டுப் பெருமையைத் தான் நாம் பேசிக் கொண்டிருப்போம்.

    வாழ்க பெருமை

    வாழ்க  பெண்கள் தினம்

    *******************************************************

    Share
  • மகளிர் அடைந்துள்ள ஏற்றங்களும், எதிர்நோக்கும் மாற்றங்களும்!

    மேகலா இராமமூர்த்தி

    மகளிர் தமது அடிப்படை உரிமைகளை அடைவதற்கும், வாழ்வில் சந்தித்த பல்வேறு அவலங்களை அகற்றுதற்கும் பெருமளவில் போராட்டங்களை நடத்தவேண்டிய சூழல் சென்ற நூற்றாண்டில் நிலவியது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்ற அம்மையார் (a freedom fighter, significant women activist and a social reformer) பெண்களுக்கெதிரான தேவதாசி முறையை ஒழித்துப் பள்ளியறைப் பதுமைகளாக இருந்த பெண்கள் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பதற்கு வழிகோலினார். பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியார் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் நடத்தப்பட வேண்டும்; அவர்தம் விருப்பங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று கொள்கை முழக்கமிட்டார்.

    ’பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!

    பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!’ என்று பெண்மையை வாழ்த்திப்பாடி அவர்களை நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட புதுமைப் பெண்களாய் வாழ வலியுறுத்தினான் மானுடம் போற்றும் மாகவி பாரதி!

    ’கல்வியில் லாத பெண்கள்
    களர்நிலம் அந்நி லத்தில்
    புல்விளைந் திடலாம் நல்ல
    புதல்வர்கள் விளைதல் இல்லை!’
    என்றான் புரட்சிக்கவி.

    களர் நிலங்களாக இருந்த பெண்களின் தளர்நிலை இன்று வெகுவாக மாறியுள்ளது எனலாம். கல்வியெனும் விதையால் அறிவுப்பயிர் செழித்து வளர்ந்து சிந்தனைமலர்கள் மணம்வீசி வெற்றிக்கனிகளை எட்டிப்பறித்து வருகின்றனர் இன்றைய பெண்கள்! பள்ளிகளும் கல்லூரிகளும் ஆண்களுக்கே ஏகபோக உரிமையாய் இருந்ததுபோக இன்று ’எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்று ஆனந்தக் கூத்தாடும் வகையில் சக்தி வடிவங்களான பெண்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அதிக அளவில் பயின்று வருகின்றனர். அதுமட்டுமா? ஆண்களைக் காட்டிலும் மங்கையர் திலகங்களே தேர்வுகளிலும் அதிக விழுக்காட்டில் தேர்ச்சி பெறுகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள்.

    இல்லத்தரசி என்ற பட்டத்தோடு பெயரளவில் ’அரசியாய்’ உண்மையில் அடுக்களை துடைத்தும், படுக்கையை விரித்தும் வீட்டினர் அனைவர்க்கும் அடிமையாய் வா(தா)ழ்ந்து வந்த பெண்கள் இன்று நாட்டையே ஆள்கின்றனர்! சந்திரனைக் காட்டிக் குழந்தைக்குச் சோறூட்டிக்கொண்டிருந்த மகளிர் இன்று சந்திர மண்டலத்திற்கே சென்று வருகின்றனர். அன்ன நடையால் வீட்டை மட்டுமே அளந்து கொண்டிருந்தவர்கள் இன்று வானை அளக்கின்றனர்; கடல் மீனை அளக்கின்றனர்.

    அலுவலகங்களிலும், ஆராய்ச்சிக் கூடங்களிலும், கணினி நிறுவனங்களிலும், கார்பரேட் கம்பெனிகளிலும் அற்புதமாய்ப் பணியாற்றி வருகின்றனர் இன்றைய பெண்கள் என்பதை எண்ண எண்ண இனிக்கவே செய்கின்றது! வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர்கள் இன்று தலைகுனிவைச் சந்தித்துவருவது மகளிர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி தருவதாய் உள்ளது.

    இவ்வாறு பெண்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் இந்த 21-ஆம் நூற்றாண்டில் கணிசமான அளவில் உள்ளது என்றபோதிலும், அவர்களின் வெற்றியைக் குலைக்கவும், நிம்மதியைக் கெடுக்கவும், நல்வாழ்வை நாசமாக்கவும் நடைபெற்றுவரும் முயற்சிகளுக்கும், சதிகளுக்கும் பஞ்சமேயில்லை.

    வன்கொடுமைகள், பாலியல் தொந்தரவுகள் போன்றவற்றைப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்களும், அலுவலங்களில் பணிபுரியும் பெண்களும் அதிக அளவில் சந்தித்துவருகின்றனர். இத்தகைய கொடுமைகளால் உடலாலும், உள்ளத்தாலும் பாதிக்கப்படும் பெண்களில் சிலர் தற்கொலை செய்துகொள்வதும் தொடர்கதையாகி வருவதைப் பத்திரிகைகள் தினமும் பத்தி பத்தியாய் வெளியிடுகின்றனவே!

    இத்துணைப் பிரச்சனைகளுக்கு இடையிலும் விடாமுயற்சியுடன் தளராது பணியிடங்களில் உழைக்கும் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான அங்கிகாரமும், பதவி உயர்வும் கிடைப்பதில்லை என்பது கசப்பான உண்மையாகும். ஓரளவிற்குமேல் பெண்கள் உயர்பதவிகளுக்குச் செல்வதை ஆணாதிக்கச் சமுதாயம் பல்வேறு வகைகளில் தடைசெய்கின்றது; அனுமதிக்க மறுக்கின்றது. ’Glass Ceiling’ எனும் கண்ணுக்குத் தெரியாத இந்தத் தடுப்புச்சுவர் பெண்களின் உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய முட்டுக்கட்டையாய் இருப்பது வேதனையளிக்கின்றது. அதுபோல் ஒரே வேலையைச் செய்கின்ற ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே அளவிலான ஊதியமும் (சில இடங்களில்) வழங்கப்படுவதில்லை. தினக்கூலித் தொழிலாளர்களிடையே ’gender pay gap’ எனும் இவ்வூதிய வேற்றுமையை இன்றும்  நாம் கண்கூடாகக் காணமுடியும். இவையெல்லாம் பெண்களின் வளர்ச்சி கண்டு பொறுக்காத, அழுக்காறு மிகுந்த ஆண் அதிகாரவர்க்கத்தின் வேலையே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா!

    வெளியில் பெண்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளும் தொல்லைகளும் ஒருபுறம் என்றால்….மறுபுறம் வீடுகளில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அவற்றிற்குச் சற்றும் குறைந்தவையல்ல. திருமணமான பெண்களில் சிலர் புக்ககத்தினரின் நாகரிகமற்ற பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் பொறுமையோடு தாங்கிக்கொள்ளவேண்டியுள்ள அவலநிலை இன்றும் நீடிக்கின்றது. திருமணமான உடனே பெண் பிள்ளைபெறத் தவறினால் சொல்லவே நாக்கூசும் ‘மலடி’ என்ற பட்டத்தை எந்தப் பல்கலைக்கழகத்திடமும் அனுமதி பெறாமல் இந்தச் சமூகம் அவளுக்குச் சூட்டுகின்றது! அதுபோக, குடும்பத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் அடுத்தடுத்துப் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டாலோ….அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கும் வசவுகளுக்கோர் அளவில்லை.

    மருத்துவ உண்மைகள் அனைத்தையும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து வழங்கிவிட்டுப் போகின்ற இந்த நவீன யுகத்தில் மெத்தப் படித்ததாய் மார்தட்டிக்கொள்ளும் இன்றைய சமூகத்தினர் குழந்தைப்பேறு வாய்க்காமல் போவதற்கும், பெண் குழந்தைகள் தொடர்ந்து பிறப்பதற்கும், பெண்ணை மட்டுமே குறைசொல்லும் மடமையை, சிறுபிள்ளைத்தனத்தை எங்கு கற்றார்கள்?? ஆடவர்க்கென்று ஒரு (பொன்) தராசும் பெண்களுக்கென்று வேறொரு (மண்) தராசும் வாங்கி எடைபோடும் அற்புதப் பயிற்சியை எங்கு பெற்றார்கள்??

    இவையல்லாமல், குடியைக் கெடுக்கும் குடிக்கு அடிமையான கணவன்மார்களை மணந்துகொண்ட பெண்களின் துயர நிலையோ வார்த்தைகளின் விவரணைகளுக்கு அப்பாற்பட்டது!!

    அடுத்து, வரதட்சணை என்ற பெயரில் நடத்தப்படும் ’பணக்கொள்ளை’ இன்னமும் ஒழிந்தபாடில்லை; சொல்லப்போனால் அதிகரித்திருக்கின்றது என்பதே இன்றைய உண்மை நிலை. இதனால் வசதியில்லாத பெற்றோர்பலர் தங்கள் பெண்களின் எதிர்காலத்தை எண்ணி எண்ணிக் கலங்குகின்றனர்.

    ’பெண்ணியம்’ என்ற கொள்கை இப்பொழுது பலராலும் பரவலாகப் பேசவும் விவாதிக்கவும்படுகின்றது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பெறுவதும், வேலை வாய்ப்புக்களிலும், ஊதிய அளவுகளிலும் சமநிலை காண்பதும் அதன் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும். அத்தோடு நில்லாமல், பெண்களின் சிந்தனைச் சுதந்திரத்தைத் தடைசெய்து அவர்களின் விருப்பத்திற்கெதிரான செயல்களை அவர்கள்மீது திணிப்பதையும், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளையும் பெண்ணியம் கடுமையாகக் கண்டிக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்!

    இத்தகைய பெண்ணியச் சிந்தனைகள் இன்று எந்த அளவிற்குச் செயல்வடிவம் கண்டிருக்கின்றன என்பதை நடுநிலையான பார்வையோடு சிந்தித்துப் பார்த்தால் பெண்களின் நிலை இன்றைய சமூகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது என்றபோதிலும் இவ்வளர்ச்சி போதுமானது என்று சொல்வதற்கில்லை. அரசியலிலும், பொதுப்பணிகளிலும் இப்போதும் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவே. இந்நிலை மாறவேண்டும். அரசியலிலும் பொதுப்பணிகளிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். ’பெண்கள் தங்கள் உரிமைகளைத் தவறாது பெறுவதற்கு அவர்கள் தயக்கமின்றிப் பொதுப்பணிகளில் ஈடுபடவேண்டும்!’ என்று தந்தை பெரியார் கூறியதை நாம் இவ்வேளையில் நினைவுகூர்வது நல்லது!

    மேடைகளில் மட்டும் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதையும், வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு பெண்களின் நலன் குறித்து விவாதிப்பதையும் விடுத்துப் பெண்கள் ஒன்றுகூடி வீதிகளில் போராட வேண்டும். ‘கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்’ என்றோர் பழமொழி உண்டு. நாட்டின் எந்த மூலையில் எந்தப் பெண்ணுக்குப் பிரச்சனை என்றாலும் எல்லாப் பெண்களும், பெண்ணுரிமை அமைப்புக்களும் ஒன்றுபட்டுத் தட்டிக்கேட்க வேண்டும், எதிர்ப்புக்குரல் எழுப்பவேண்டும். கிராமங்களுக்கும், நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் சென்று பெண்ணுரிமை குறித்தும், அவை மறுக்கப்படும்போது மேற்கொள்ளவேண்டிய சட்ட வழிமுறைகள் குறித்தும் மகளிர் அமைப்புக்கள் கிராமப்புறப் பெண்களுக்குக் கற்பிக்கவேண்டும்.

    அணு மிகச்சிறியதுதான்; ஆனால் அது பிளக்கப்படும்போது வெளிப்படும் ஆற்றல் அளப்பரியது! அதுபோல் பலவீனமானவர்கள் (weaker sex) என்ற எண்ணத்தில் அநீதிகளுக்கு உட்படுத்தப்படும், அவலங்களுக்கு ஆட்படுத்தப்படும் பெண்ணினமும் ஒன்றுதிரண்டால் ‘ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி!’ என்று பாரதி எக்காளமிட்டதுபோல் மீண்டும் ஓர் யுகப்புரட்சியை நாடு சந்திக்கும் நிலை வரலாம். எனவே சமுதாயம் பெண்களைச் சுயமாகச் சிந்தித்துச் செயற்படவும், சுயமரியாதையோடு வாழவும் அனுமதிக்க வேண்டும். அதுபோல், பெண்களும் தம் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவதற்கான முயற்சிகளில் தாமே ஈடுபடுவதும், அதற்கு ஏற்படும் தடைகளைத் தகர்த்துத் துணிச்சலோடு முன்னேறுவதும் அவர்களுக்கு ஏற்றத்தையும் எதிர்நோக்கும் மாற்றத்தையும் உறுதியாகத் தரும் என்பதில் ஐயமில்லை.

    ’உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
    ஓது பற்பல நூல்வகை கற்கவும்
    இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
    யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
    திலக வாணுத லார்நங்கள் பாரத
    தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்
    விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
    வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்’

    என்ற முண்டாசுக் கவிஞனின் முத்தான வரிகளை மனத்தில் கொண்டு அயராது உழைத்தால் இந்தப் பாரையே வென்று சரித்திரம் படைப்பர் பாவையர்!

    Share
  • பெண் சுதந்திரம் எதுவரை?

    தஞ்சை வெ.கோபாலன்

    பெண்ணுரிமை, ஆண் பெண் சமத்துவம் போன்ற கருத்துக்கள் பல வடிவங்களில் விவாதிக்கப்படுகின்றன. பெண்ணியம் என்பது ஆண்களுக்குச் சமமானது, எந்த விதத்திலும் பெண்கள் ஆண்களுக்குக் குறைந்தவர்கள் இல்லை என்பது போன்ற கருத்துக்கள் இன்று நிலைபெற்றுவிட்டது. இன்னும் சில நேரங்களில் நவீன யுகப் பெண்கள் மேடைகளில் முழங்கும் கருத்துக்களைக் கேட்கும்போது இந்த நாட்டில் இன்னமும் பெண்கள் கவணைகளில் அடைக்கப்பட்ட மாடுகள் போல அடைக்கப்பட்டிருக்கிறார்களோ, எந்தவித சுதந்திரமும் இவர்களுக்கு இல்லையோ என்றுகூட கவலை கொள்ள வைத்து விடுகிறது.

    ஆனால் நாட்டு நடப்பைக் கூர்ந்து கவனித்தால் நிலைமை அப்படி அல்ல என்பதும், சில பெண்ணியத் தலைவர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் இப்படியெல்லாம் பேசுவதன் மூலம் தாங்கள் ஒரு சுதந்திரப் பறவைகள், பெண்களின் முன்னேற்றத்துக்காகத் தங்களைச் சர்வபரித்தியாகம் செய்து கொண்டவர்கள் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தவே இப்படிப் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது. இவர்கள் பேச்சில் இருக்கும் உண்மைகள் என்ன, இவர்கள் பேசும் சுதந்திரம் என்பது எதுவரை ஆண், பெண் பேதங்கள் எதிலெல்லாம் இருக்க வேண்டும் போன்ற கருத்துக்கள் வரையறை செய்யப்படவேண்டும்.

    பெண் கல்வி வளர்ச்சியடைந்து உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், கம்ப்யூட்டர் யுகப் பெண்கள் ஆணுக்குப் பெண் சமம் என்பதில் மட்டுமல்ல, சில நேரங்களில் அவர்களைக் காட்டிலும் அதிக நாகரிகத்தில் முன்னேறியவர்கள் என்றும் காட்டிக் கொள்கிறார்கள். மென்பொருள் துறையில் பணியாற்றும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டைவிட்டு வெளிவந்து விடுதிகளில் அல்லது சிலர் கூடி ஒரு வீட்டை எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். விடுமுறை நாட்களில் ஆண் பெண் பேதமின்றி இவர்கள் ஓட்டல், சினிமா, பார்ட்டி என்றெல்லாம் சென்று தொட்டு விளையாடி பிறர் முகம் சுளிக்கும்படியும் நடந்து கொள்கிறார்கள். இந்த உண்மையை யாராவ்து சுட்டிக் காட்டினால் அவர்கள் ‘பத்தாம் பசலிகள்’, ‘நாகரிகம் தெரியாதவர்கள்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

    இன்று தி நியு இந்தியன் எக்ஸ்பிரசில் ஒரு செய்தி. கோவையில் எட்டிமடை எனும் இடத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பயிலும் இரட்டையர்களான இரு மாணவர்கள் தங்கள் கல்லூரியில் ஜூனியர் வகுப்பில் படிக்கும் ஒரு கேரளத்துப் பெண்ணுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள். அவர்கள் வழக்கில் சொல்ல வேண்டுமானால், இவர்கள் மிகவும் சோஷலாக பழகி வந்திருக்கிறார்கள். இதைத் தவறு ஆண் பெண் பழக்கத்திலும் ஒரு எல்லைக்கோடு உண்டு என்று யாராவது சொன்னால் அவர்களை இவர்கள் நார் நாராகக் கிழித்துத் தொங்க விட்டுவிடுவார்கள். இந்த இரட்டையர்கள் அந்தப் பெண்ணுடன் ஒரு திரைப்படம் பார்க்க ஒன்றாக இன்னொரு பெண்ணுடனும் சென்றிருக்கிறார்கள். திரைப்படம் முடிந்த நிலையில் இன்னமும் பகல் பொழுது இருந்தமையால் அந்த இரட்டையர்கள் அந்த கேரளத்துப் பெண்ணை இடையர்பாளையம் எனுமிடத்திலுள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். இவர்கள்தான் சோஷலாகப் பழகுபவர்களாயிற்றே, இரண்டு இளைஞர்கள் ஒரு பெண்ணைத் தங்கள் வீட்டுக்குக் கூப்பிட்டது சரியா, அப்படிக் கூப்பிட்டவுடன் அந்தப் பெண் அவர்களுடன் போவது சரியா என்றெல்லாம் யாரும் கேள்விகள் கேட்டுவிடக் கூடாது, அது பெண்ணிய உரிமைகளுக்கு எதிரானது.

    அந்தப் பெண்ணும் அவர்கள் அழைப்பை ஏற்று அவர்களுடன் இடையர்பாளையம் சென்று அவர்கள் வீட்டில் அந்த இளைஞர்கள் கொடுத்த பானத்தை அருந்தியிருக்கிறாள். இதில் கொடுமை என்னவென்றால், அந்த பானத்தில் மயக்க மாத்திரை கலக்கப்பட்டிருந்தது. அவள் நினைவு இழந்தாள், அவ்விருவரும் அந்தப் பெண்ணை மாற்றி மாற்றி அனுபவித்திருக்கிறார்கள், பின்னர் அவளுக்கு நினைவு திரும்பியதும் அவளை விடுதியில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அந்தப் பெண் என்ன செய்தாள் என்பது தெரியவில்லை. அவள் அதன்பின் துபாயில் இருக்கும் தங்கள் பெற்றோருக்குத் தகவல் கொடுத்து அவர்கள் வந்து போலீசில் புகார் கொடுத்து அந்த இருவரில் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். மற்றொருவன் தலைமறைவாகி யிருக்கிறான்.

    இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் உண்டு. முதலில் பெண்ணிய உரிமைகள் பேசும் மாதரசிகள் இதுபோன்ற சோஷல் பழக்கங்களை ஆதரிக்கிறார்களா என்பதைச் சொல்ல வேண்டும். அவர்கள் விரும்பும் பெண் விடுதலை, அல்லது பெண்ணுரிமை என்பது எதுவரை என்பதை விளக்க வேண்டும். மகாகவி பாரதி பெண் விடுதலை பற்றி அதிகம் பேசுவான். அவன் கருத்து இதுபோன்ற சுதந்திரத்தை ஆதரிப்பது அல்ல. நேர்மையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத போக்கும், நேர்மை தவறாத, பாதை மாறாத பண்பும்தான் அவன் சொன்ன பெண் விடுதலை. இந்த கோவை சம்பவத்தில் நடந்தவைகளைக் கொண்டு பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் அனேகம்.

    வயதில் தந்தை அல்லது தாத்தா போல இருந்தாலும், ஆண் ஆண்தான். அவனிடம் பழகும் இளம் பெண்கள் ஒரு எல்லைக்கோட்டைத் தாண்டுவது என்பது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆண் எந்த வயதினனாக இருந்தாலும் மனம் கோணலாக இருக்குமாயின் நிச்சயம் அவன் சமயம் வாய்க்கும்போது வக்கிரச் செயல்களில் இறங்குவான். அதுபோலவே நேர்மை எண்ணமும், பண்பாட்டில் நம்பிக்கையும் கொண்ட ஆண் இளம் வயதினனாக இருந்தாலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள், தனிமையில் ஒரு இளம் பெண்ணோடு இருக்கும் நிலையிலும் அவன் நிலை தடுமாற மாட்டான். எல்லா ஆண்களும் தவறு செய்பவர்கள் அல்ல, அது போலவே எல்லோருமே அயோக்கியர்களும் அல்ல. இந்த பேதத்தை இத்தனை காலம் பழகிய பின்னும் ஒரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியவில்லை, இரு ஆண்களுடன் சினிமாவுக்குப் போகிறாள், அவன் கூப்பிட்டவுடன் அவன் வீட்டுக்குப் போகிறாள் என்றால் அது பெண்களின் சுதந்திரப் போக்கைக் காட்டுகிறதா, பேதைத் தனத்தைக் காட்டுகிறதா. நெஞ்சு கொதிக்கிறது இந்த நிலைகெட்ட மனிதரை நினந்து விட்டால். பட்டது போதாதோ, பெண்ணிய சிந்தனையாளர்கள் நல்லது செய்யாமல் போனாலும் போகட்டும், பெண்களைத் தூண்டிவிட்டு நாகரிகம், முன்னேற்றம் எனும் பெயரால் பலிகடாக்கள் ஆக்காமல் இருக்கட்டும்.

    Share
  • ராணி அப்பக்கா தேவி

    பார்வதி இராமச்சந்திரன்

    நம் நாட்டில், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட எத்தனையோ வீரப் பெண்மணிகளை நாம் அறிவோம்!… ஆயினும் அவ்வளவாக அறியப்படாத சிலரின் வீர வரலாறுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களில் ஒருவரே, கர்நாடகாவின் கடற்கரையோரப் பகுதிகளில், ஒரு சிறு பிராந்தியத்தை அரசாண்ட ராணி அப்பக்கா தேவி..

    200701272171040116ம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பக்கா தேவி, இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்ட வீராங்கனைகளுள் ஒருவர். போர்ச்சுகீசிய அரசாங்கத்தின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட தீரப் பெண்மணியாகிய இந்த ராணியைக் குறித்த வரலாற்றுப் பதிவுகள் அதிகம் இல்லை..ஆயினும் கிராமியப் பாடல்களில் இந்த ராணி இன்றும் வலம் வருகிறாள்.. வழி வழியாக, இந்த ராணியின் பெருமையை, பாடல்கள் வாயிலாக, அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கிறார்கள் கர்நாடக மக்கள். ‘யக்ஷகானம்’ போன்ற கிராமியக் கலைகள் ராணியின் புகழ் பாடுகின்றன.

    இந்த ராணி, தன் வீரத்தினால், மக்களிடையே ‘அபய ராணி’ (பயமற்றவள்) என்று புகழப்படுகின்றாள்.

    இந்த ராணி, ‘துளுநாடு’ என்றழைக்கப்படும் கர்நாடக கடற்கரையோரப் பிராந்தியங்களில் அரசாண்ட  ‘சௌதா’ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.

    இவர்களின் தலைநகரம் ‘புட்டிகே’…’உல்லால் என்னும் பிரசித்தி பெற்ற துறைமுக நகரம், இரண்டாவது தலைநகராகவே அறியப்பட்டிருந்தது… ராணி அப்பக்கா, உல்லாலை மையமாகக் கொண்ட பிராந்தியத்தின் ராணியாகவே அறியப்படுகிறார். வரலாறும் இவரை ‘உல்லாலின் ராணி’ என்றே குறிப்பிடுகின்றது. இவரது காலம், ‘ஜான்சி ராணி’க்கு கிட்டத்தட்ட 300 வருடங்கள் முற்பட்டதென்று அறியப்படுகின்றது..

    இந்த ராணி, ஜைன மதத்தைச் சேர்ந்தவர்…ஆயினும் இவரது அரசாங்கத்தில், எல்லா மதத்தினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருந்தது.. மக்கள் நலனையே பெரிதும் மதித்து அரசாண்டவர் இவர். ஆகவே இவர் மக்களுக்குப் பிரியமான ராணியாகத் திகழ்ந்தார்.

    இளமைப் பருவம்:

    இளமையிலேயே மிகுந்த புத்தி கூர்மையும், சாதுர்யமும் பெற்றிருந்தார் அப்பக்கா.. போர்ப்பயிற்சிகள் பெற்று, வியூகங்கள் வகுத்து, படை நடத்துவதில் மிகுந்த திறமைசாலியென அறியப்பட்டார் இவர்.

    ‘அலிய சந்தானா’ (கேரளத்தின் மருமக்கள் தாயம் முறையை ஒத்தது) முறைப்படி, உல்லாலின் ராணியாக‌, தன் மாமா திருமலைராயனால் முடிசூட்டப்பட்ட இவருக்கு, ‘ ல‌க்ஷ்மப்ப‌ அரசா’ என்னும் அண்டை நாட்டு மன்னனோடு திருமணம் நிகழ்ந்தது.. விதி வசத்தால், அந்த மணவாழ்வு நீடிக்கவில்லை.. மீண்டும் உல்லால் வந்தார் அப்பக்கா. தனக்கு ல‌க்ஷ்மப்பா அளித்த நகைகளைத் திருப்பி அளித்து, மண உறவினைத் துண்டித்துக் கொண்டார்.  இதனால் கோபமடைந்த  ல‌க்ஷ்மப்பா, ராணியையும், அவளது அரசாங்கத்தையும் அழிக்க சபதமேற்று, அந்தச் சமயத்தில் ராணியை எதிர்த்த போர்ச்சுகீசியர்களுடன் நட்புறவு பூண்டான்.

    ராணி அப்பக்காவுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் வெளிப்படையான போர், கி.பி.1555ம் ஆண்டு துவங்கியது.. ராணி அப்பக்கா, கப்பம் கட்ட மறுத்ததே இதன் காரணமாகச் சொல்லப்படுகின்றது..

    கி.பி.1558ம் ஆண்டு, போர்ச்சுகீசியப் படை, மங்களூரைத் தாக்கி, கொடூரமான முறையில் போர் நிகழ்த்தி, ஆண், பெண் அனைவரையும் கொன்று குவித்து, நகரைக் கைப்பற்றியது… உல்லாலுக்கு குறிவைத்தது.

    கி.பி.1567ல், மிகக் கடுமையான போர் ஆரம்பமாகியது.. மிக அதிக அளவில், பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்ட போதிலும், ராணி அதைத் தீரமுடன் எதிர்கொண்டார்.. எதிர்ப்பினை முறியடித்தார்.

    அதே வருடத்தில், ஜெனரல் பெய்க்ஸ்ஸோடோவின் தலைமையிலான படை, உல்லாலைக் கைப்பற்றி, அரண்மனைக்குள் நுழைந்தது.. ராணி, அங்கிருந்து தப்பி, ஒரு மசூதியில் தஞ்சம் புகுந்தார். அன்றிரவே, நம்பிக்கையான 200 வீரர்களுடன், அரண்மனையில் புகுந்து, ஜெனரல்  பெய்க்ஸ்ஸோடாவையும் 70 போர்ச்சுகீசிய வீரர்களையும் போர் புரிந்து  கொன்றார்.

    போர்ச்சுகீசியரை எதிர்க்க வேண்டுமென்பதற்காக, ராணி அப்பக்கா பீஜப்பூர் சுல்தானோடும், கோழிக்கோடு அரச குடும்பத்தினரோடும் உடன்படிக்கைகள் செய்து கொண்டார். அதன் காரணமாக, படையுதவியும் பெற்றார்.

    அக்னி வாணங்களைப் பயன்படுத்தி, போர் செய்யும் முறையில் வல்லவரான இவரை முறியடிப்பது போர்ச்சுகீசியருக்கு அத்தனை சுலபமாக இருக்கவில்லை.. இவர், நட்பு அரசர்களிடமிருந்து பெற்ற படையுதவியும் இவருக்குப் பெரும் பலமாக நின்றது. எனினும், இவரது போர்த்தந்திரங்களை,  இவரது கணவரே ஒற்றறிந்து போர்ச்சுகீசியருக்கு அம்பலப்படுத்தியதன் காரணமாக, இவர் இறுதியில் தோற்கடிக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டார். இவர் சிறையிலும், அடக்கு முறைக்கு ஆட்படாமல் போரிட்டே மடிந்தார்.

    இந்த ராணியின் புகழ்பாடும் கிராமியப் பாடல்கள், இந்த ராணியின் இரு வீர மகள்களையும் சேர்த்தே போற்றுகிறது… மூவருமே ‘அப்பக்கா’ என்ற பெயரோடு அறியப்படுகின்றார்கள். மூவரையும் ஒருவராகவே கருதிப் பாடப்படும் நாட்டுப் பாடல்களும் உண்டு..

    உல்லாலில் ஒவ்வொரு வருடமும், ‘வீர ராணி அப்பக்கா உற்சவம்’ நடைபெறுகிறது..சாதனைப் பெண்களுக்கு ராணியின் பெயரால் விருது வழங்கி கௌரவிக்கிறது அரசு. பெங்களூரில் இந்த ராணியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

    தன் சொந்த வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்பட்ட போதும், சோர்ந்து விடாது, விடாமுயற்சியுடன் அந்நியரை எதிர்த்து உயிர்விட்ட ராணி அப்பக்காவின் புகழ், என்றென்றும் மங்காது ஒளி வீசி நிற்கும்…

    அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!

    படத்துக்கு நன்றி:  http://www.hindu.com/2007/01/27/images/2007012721710401.jpg

    Share