தெய்வம் இருப்பது எங்கே
கவிஞர் காவிரி மைந்தன்
தெளிவாகத் தெரிவது ஒன்று! தெளிவின்றி மறைவது ஒன்று! எதை நாம் இருக்கிறது என்று உறுதி செய்ய முடியும்? எதை நாம் இல்லையென்று மறுத்திட முடியும்? கேள்விகள் பல எழலாம்! விடைகள் தான் எங்கே? அறிவுக் கண்ணில் பார்க்கும்போது அதற்கும் எல்லைகள் உண்டு! அகக்கண்ணால் பார்க்கும் போது அதற்கோர் உலகம் உண்டு! விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கு பன்னெடுங்காலம் முன்பாகவே மெய்ஞானம் கண்ட உண்மைகள் கோடி! அறிவின்வழி எதுவுமே உறுதி செய்யப்பட வேண்டும்! ஆன்மீகம் கண்டவர்கள் யார்? அதன்வழியே நின்றவர்கள் யார்? வழிவழியாய் தொடரும் இந்தச் செவி வழிச்சங்கதிகளை செப்பேட்டிலும், பனை ஓலைச்சுவடிகளிலும் காணும்போது விஞ்ஞானத்தை மெய்ஞானம் விஞ்சியிருப்பதை உணரலாம்! சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இவையெல்லாம்.. இந்த ஆண்டில்.. இன்ன தேதியில்.. இன்ன நேரத்தில் ஏற்படும் என்று நவீன உலகம் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, ஞானிகளும் மேதைகளும் தவசிகளும் தங்கள் மெய்யுணர்வால் கணக்கிட்டுச் சொன்னது எப்படி?
அர்த்தமுள்ள இந்து மதத்தில் கவியரசர் கண்ணதாசன் அழகாக குறிப்பிடுகிறார். மாதா.. பிதா.. குரு.. தெய்வம்.. என்கிற பழமொழியில்.. மாதா என்பது சர்வ நிச்சயமான ஒன்று! மாதா சொல்லித்தான் ‘பிதா’ அறிமுகாகிறார் – குழந்தைக்கு! அக்குழந்தையை பிதா – குருவிடம் கொண்டு சேர்க்கிறார்! குருவோ.. தெய்வத்தை உணரச் செய்கிறார்!
இறைவன் இருப்பது எங்கே என்கிற கேள்வி எழுவது இன்று நேற்றல்ல.. மறைபொருளின் கீர்த்தி அறியாத வரையில்.. உள்ளத்தில் உள்ளது கடவுள் என்பது உணராத வரையில்.. தெய்வத்தைத் தேடும் மனிதனின் வாழ்வில் மாற்றமில்லை. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற நம் முன்னோர்கள் ஒவ்வொரு ஊரிலும் கோவிலை உருவாக்கினார்கள். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் பழமொழி தந்தார்கள். கற்பக் கிரகத்தில் கற்சிலையாய் இருந்தாலும் அங்கே கடவுளுக்கு நடத்தப்படும் ஆராதனையின்போது அந்த தீப ஒளி ஒருசில மணித்துளிகளுக்குள் .. சட்டென்று கண்ணில்பட்டு மறைந்தாலும் அங்கே காணும் தெய்வ தரிசனம் மனதில் நின்றுவிடும். ஆலயவழிபாட்டில்கூட அனுஷ்டிக்கப்படும் ஆராதனையிலும் சூட்சுமங்கள் பொதிந்தே உள்ளன. அவ்விடம் நின்று ஆண்டவன் எண்ணி அருளை வேண்டுவோர் உள்ளம் எப்படியிருக்க வேண்டும் என்பதைக்கூட கவியரசு கண்ணதாசன் இலக்கணம் வகுத்தாற்போல் ஒரு திரைப்பாடலில் தருகிறார் பாருங்கள்.. பாடலை மீண்டும் கேளுங்கள்..
தெய்வம் இருப்பது எங்கே
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
தெய்வம் இருப்பது எங்கே
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
தெய்வம் இருப்பது எங்கே
பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
தெய்வம் இருப்பது எங்கே
ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
தெய்வம் ஏற்கும் உனது தொண்டு
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
தெய்வம் இருப்பது எங்கே
திரைப்படம்: சரஸ்வதி சபதம்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்
இந்தப் படத்தில் எல்லா பாடல்களும் பொன்னால் பொறிக்கப்பட்டு பூஜிக்கப் பட வேண்டியவை… கவியரசின் சுனாமிகள்
/*அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை**/ போது சிவாஜியின் பாவங்களும் விஜயாவின் அபிநயங்களும் கவியரசின் வரிகளின் ஜாலம் தான்