ராணி அப்பக்கா தேவி

நம் நாட்டில், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட எத்தனையோ வீரப் பெண்மணிகளை நாம் அறிவோம்!… ஆயினும் அவ்வளவாக அறியப்படாத சிலரின் வீர வரலாறுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களில் ஒருவரே, கர்நாடகாவின் கடற்கரையோரப் பகுதிகளில், ஒரு சிறு பிராந்தியத்தை அரசாண்ட ராணி அப்பக்கா தேவி..

200701272171040116ம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பக்கா தேவி, இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்ட வீராங்கனைகளுள் ஒருவர். போர்ச்சுகீசிய அரசாங்கத்தின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட தீரப் பெண்மணியாகிய இந்த ராணியைக் குறித்த வரலாற்றுப் பதிவுகள் அதிகம் இல்லை..ஆயினும் கிராமியப் பாடல்களில் இந்த ராணி இன்றும் வலம் வருகிறாள்.. வழி வழியாக, இந்த ராணியின் பெருமையை, பாடல்கள் வாயிலாக, அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கிறார்கள் கர்நாடக மக்கள். ‘யக்ஷகானம்’ போன்ற கிராமியக் கலைகள் ராணியின் புகழ் பாடுகின்றன.

இந்த ராணி, தன் வீரத்தினால், மக்களிடையே ‘அபய ராணி’ (பயமற்றவள்) என்று புகழப்படுகின்றாள்.

இந்த ராணி, ‘துளுநாடு’ என்றழைக்கப்படும் கர்நாடக கடற்கரையோரப் பிராந்தியங்களில் அரசாண்ட  ‘சௌதா’ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவர்களின் தலைநகரம் ‘புட்டிகே’…’உல்லால் என்னும் பிரசித்தி பெற்ற துறைமுக நகரம், இரண்டாவது தலைநகராகவே அறியப்பட்டிருந்தது… ராணி அப்பக்கா, உல்லாலை மையமாகக் கொண்ட பிராந்தியத்தின் ராணியாகவே அறியப்படுகிறார். வரலாறும் இவரை ‘உல்லாலின் ராணி’ என்றே குறிப்பிடுகின்றது. இவரது காலம், ‘ஜான்சி ராணி’க்கு கிட்டத்தட்ட 300 வருடங்கள் முற்பட்டதென்று அறியப்படுகின்றது..

இந்த ராணி, ஜைன மதத்தைச் சேர்ந்தவர்…ஆயினும் இவரது அரசாங்கத்தில், எல்லா மதத்தினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருந்தது.. மக்கள் நலனையே பெரிதும் மதித்து அரசாண்டவர் இவர். ஆகவே இவர் மக்களுக்குப் பிரியமான ராணியாகத் திகழ்ந்தார்.

இளமைப் பருவம்:

இளமையிலேயே மிகுந்த புத்தி கூர்மையும், சாதுர்யமும் பெற்றிருந்தார் அப்பக்கா.. போர்ப்பயிற்சிகள் பெற்று, வியூகங்கள் வகுத்து, படை நடத்துவதில் மிகுந்த திறமைசாலியென அறியப்பட்டார் இவர்.

‘அலிய சந்தானா’ (கேரளத்தின் மருமக்கள் தாயம் முறையை ஒத்தது) முறைப்படி, உல்லாலின் ராணியாக‌, தன் மாமா திருமலைராயனால் முடிசூட்டப்பட்ட இவருக்கு, ‘ ல‌க்ஷ்மப்ப‌ அரசா’ என்னும் அண்டை நாட்டு மன்னனோடு திருமணம் நிகழ்ந்தது.. விதி வசத்தால், அந்த மணவாழ்வு நீடிக்கவில்லை.. மீண்டும் உல்லால் வந்தார் அப்பக்கா. தனக்கு ல‌க்ஷ்மப்பா அளித்த நகைகளைத் திருப்பி அளித்து, மண உறவினைத் துண்டித்துக் கொண்டார்.  இதனால் கோபமடைந்த  ல‌க்ஷ்மப்பா, ராணியையும், அவளது அரசாங்கத்தையும் அழிக்க சபதமேற்று, அந்தச் சமயத்தில் ராணியை எதிர்த்த போர்ச்சுகீசியர்களுடன் நட்புறவு பூண்டான்.

ராணி அப்பக்காவுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் வெளிப்படையான போர், கி.பி.1555ம் ஆண்டு துவங்கியது.. ராணி அப்பக்கா, கப்பம் கட்ட மறுத்ததே இதன் காரணமாகச் சொல்லப்படுகின்றது..

கி.பி.1558ம் ஆண்டு, போர்ச்சுகீசியப் படை, மங்களூரைத் தாக்கி, கொடூரமான முறையில் போர் நிகழ்த்தி, ஆண், பெண் அனைவரையும் கொன்று குவித்து, நகரைக் கைப்பற்றியது… உல்லாலுக்கு குறிவைத்தது.

கி.பி.1567ல், மிகக் கடுமையான போர் ஆரம்பமாகியது.. மிக அதிக அளவில், பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்ட போதிலும், ராணி அதைத் தீரமுடன் எதிர்கொண்டார்.. எதிர்ப்பினை முறியடித்தார்.

அதே வருடத்தில், ஜெனரல் பெய்க்ஸ்ஸோடோவின் தலைமையிலான படை, உல்லாலைக் கைப்பற்றி, அரண்மனைக்குள் நுழைந்தது.. ராணி, அங்கிருந்து தப்பி, ஒரு மசூதியில் தஞ்சம் புகுந்தார். அன்றிரவே, நம்பிக்கையான 200 வீரர்களுடன், அரண்மனையில் புகுந்து, ஜெனரல்  பெய்க்ஸ்ஸோடாவையும் 70 போர்ச்சுகீசிய வீரர்களையும் போர் புரிந்து  கொன்றார்.

போர்ச்சுகீசியரை எதிர்க்க வேண்டுமென்பதற்காக, ராணி அப்பக்கா பீஜப்பூர் சுல்தானோடும், கோழிக்கோடு அரச குடும்பத்தினரோடும் உடன்படிக்கைகள் செய்து கொண்டார். அதன் காரணமாக, படையுதவியும் பெற்றார்.

அக்னி வாணங்களைப் பயன்படுத்தி, போர் செய்யும் முறையில் வல்லவரான இவரை முறியடிப்பது போர்ச்சுகீசியருக்கு அத்தனை சுலபமாக இருக்கவில்லை.. இவர், நட்பு அரசர்களிடமிருந்து பெற்ற படையுதவியும் இவருக்குப் பெரும் பலமாக நின்றது. எனினும், இவரது போர்த்தந்திரங்களை,  இவரது கணவரே ஒற்றறிந்து போர்ச்சுகீசியருக்கு அம்பலப்படுத்தியதன் காரணமாக, இவர் இறுதியில் தோற்கடிக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டார். இவர் சிறையிலும், அடக்கு முறைக்கு ஆட்படாமல் போரிட்டே மடிந்தார்.

இந்த ராணியின் புகழ்பாடும் கிராமியப் பாடல்கள், இந்த ராணியின் இரு வீர மகள்களையும் சேர்த்தே போற்றுகிறது… மூவருமே ‘அப்பக்கா’ என்ற பெயரோடு அறியப்படுகின்றார்கள். மூவரையும் ஒருவராகவே கருதிப் பாடப்படும் நாட்டுப் பாடல்களும் உண்டு..

உல்லாலில் ஒவ்வொரு வருடமும், ‘வீர ராணி அப்பக்கா உற்சவம்’ நடைபெறுகிறது..சாதனைப் பெண்களுக்கு ராணியின் பெயரால் விருது வழங்கி கௌரவிக்கிறது அரசு. பெங்களூரில் இந்த ராணியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

தன் சொந்த வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்பட்ட போதும், சோர்ந்து விடாது, விடாமுயற்சியுடன் அந்நியரை எதிர்த்து உயிர்விட்ட ராணி அப்பக்காவின் புகழ், என்றென்றும் மங்காது ஒளி வீசி நிற்கும்…

அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!

படத்துக்கு நன்றி:  http://www.hindu.com/2007/01/27/images/2007012721710401.jpg

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on "ராணி அப்பக்கா தேவி"

  1. அன்பு பார்வதி நானும் இவரைப்பற்றி   கொஞ்சம்  படித்திருக்கிறேன்  உங்கள் கட்டுரை மூலம் விவரமாக தெரிந்துக்கொண்டேன் . நன்றி  மகளிர் தின வாழ்த்துகள்

  2. அறிந்திராத செய்தி அறிய தந்தமைக்கு நன்றி. மகளிர் தின வாழ்த்துக்கள்.

  3. கட்டுரையை வெளியிட்ட வல்லமை மின்னிதழுக்கு என் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரையைப் படித்து கருத்துரைத்த திருமிகு.விசாலம் அம்மா, சகோதரர் தனுசு இருவருக்கும் மனமார்ந்த நன்றி!.. 

  4. மக்கள் அதிகம் அறிந்திராத ‘அபய ராணியான’ அப்பக்கா தேவியைப் பற்றி அறியத் தந்ததற்கு மிக்க நன்றி பார்வதி. இது போன்ற வீர மங்கையரின் வரலாற்றை இளம் தலைமுறையினருக்கு நாம் அறிமுகப்படுத்துவது மிக அவசியம். அந்த அரும்பணியை உங்கள் கட்டுரை வாயிலாகச் செய்துள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்!

  5. நல்லதொரு கட்டுரை! ராணி அப்பக்காவின் துணிச்சல் மேல் சிலிர்க்க வைக்கிறது. பாராட்டுக்கள் சகோதரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.