எஸ். பழனிச்சாமி

அன்புள்ள மணிமொழிக்கு,

உன் அப்பா எழுதும் மடல். இந்த மடல் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இதை எழுத வேண்டிய அவசியம் என்ன என்றும் கேட்கத் தோன்றலாம். ஆனாலும் பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக உன்னைப் பார்க்காமலும், பார்க்க முடியாமலும் இருக்கின்ற ஏக்கம் என் மனதை அரித்துக் கொண்டிருப்பது உண்மை. அதன் வெளிப்பாடுதான் இந்த மடல்.

இத்தனை நாட்களாக நீயும் உன் தம்பிகளும் ஃபேஸ்புக்கில் எழுதுவதை மட்டுமே படித்து வந்திருக்கிறேன். அது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதையும் அதில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். உன் தம்பிகள் படித்து முடித்து வேலையில் சேர்ந்திருப்பதையும், உனக்குத் திருமணம் ஆனதையும், குழந்தை பிறந்ததையும்கூட அதன் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.

தாய்மை களை பொழியும் உன் அழகான முகத்தைப் பார்க்க வேண்டும், உன் மகனை என் மடியில் வைத்துக் கொஞ்ச வேண்டும் என்று மனது துடிக்கிறது. ஆனால் அதற்குத்தான் எந்த வழியும் இல்லாமல் போய் விட்டதே!

அன்பு மகளே, உன்னுடனும், உன் தம்பிகளுடனும் நாம் எல்லோரும் ஒன்றாக இருந்த நாட்களை மட்டுமே நான் பொக்கிஷமாக நினைத்து இப்போதும் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு சந்தோஷமான, அற்புதமான நாட்கள் அவை.

நீ நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாய். காலையில் எழுந்தவுடன் நான் உங்களுக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுப்பேன். அப்போது உன் தம்பி செய்யும் சேட்டைகளை நான் விளையாட்டாகக் கிண்டல் செய்யும் போது, எல்லோரும் சிரிப்பீர்களே, அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? எவ்வளவு சந்தோஷமான நாட்கள்!

ஐந்தாம் வகுப்பில் நீ படிக்கும் போது, உன்னுடைய வகுப்புத் தோழி திவ்யாதான் எப்போதும் முதல் ரேங்க் வாங்குவாள் என்று நீ சொன்னாய்; நீ நினைத்தால் உன்னாலும் முடியும் என்று, உனக்கு மனதை ஒரு நிலைப்படுத்த கற்றுக் கொடுத்தேனே ஞாபகம் இருக்கிறதா? அந்த மாத பரீட்சையில் நீ முதல் ரேங்க் எடுத்தபோது எவ்வளவு சந்தோஷம் அடைந்தாய்? அன்றிலிருந்து எப்போதும் நீதான் முதல் ரேங்க் எடுத்தாய். அதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது.

அன்பு மகளே, அப்படியெல்லாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று உனக்கு சொல்லிக் கொடுத்த எனக்கு, இத்தனை நாட்களாக உன்னை நேரில் பார்க்கவும், பேசவும் ஒரு வழி தெரியாமல் போய் விட்டதே? என்னுடைய தலைவிதியை நினைத்து பரிதாபப் படுவதா, பச்சாதாபப் படுவதா என்று எனக்குத் தெரியவில்லை.

இத்தனைக்கும் நீ உன்னுடைய தோழி திவ்யாவைப் போல் எங்கோ அமெரிக்காவிலா இருக்கிறாய்? இதே தமிழ்நாட்டில் எட்டு மணி நேரப் பயண தூரத்தில் தானே இருக்கிறாய். அப்படி இருந்தும்கூட நான் உன்னைப் பார்க்கவோ, நீ என்னைப் பார்க்கவோ முடியாமல் போய் விட்ட இந்த காலத்தின் கொடுமையை என்னவென்று சொல்வது?

அதிர்ச்சி தரக்கூடிய அந்தப் பிரிவு, நீ ஆறாவது படிக்கும்போதுதான் ஏற்பட்டது. அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளும் வயது அப்போது உங்களுக்கு இல்லை. இப்போது நீ வளர்ந்து பெரியவளாகி விட்டதால் உலக அனுபவம் உனக்குக் கிடைத்திருக்கும். அதுவுமில்லாமல் டிவி சீரியல்களில் எத்தனையோ வில்லிகளைப் பார்த்திருப்பாய். மனிதர்களின் குணாதிசயங்களைப் புரிந்து கொண்டிருப்பாய்.

அன்பு மகளே, மனிதர்களை விட பணத்தை மட்டுமே பெரிதாக நினைக்கும், நேர்மையில்லாத, திடீர் பணக்காரியாகி விட்ட ஒரு மாமியாரின் புதிய வீட்டில் மருமகன் வாடகைக்கு குடியேறும் ஒரு நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. அதுவும் என் போன்ற தன்மானம் மிக்கவர்களுக்கு அந்த நிலை வரவே கூடாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். இல்லாவிட்டால் உங்களையெல்லாம் அன்றே பிரிந்து தனியே சென்றுவிட வேண்டும் என்றவகையில் மிரட்டப்பட்டேன்.

வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்ட என்னைத் தரக்குறைவாக நடத்தி, தனிமைப் படுத்தி, அவமானப் படுத்தி என்னை வீட்டை விட்டு வெளியேற்ற அவர்கள் முடிவு செய்து விட்ட பிறகு, என்னால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. அதனால் உங்களையெல்லாம் பிரிவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

எங்க ஊர் ராஜா படத்தில் வரும் யாரை நம்பி நான் பிறந்தேன் என்ற பாடலில்

பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா

சோதனையைப் பங்குவச்சா சொந்தமில்லே பந்தமில்லே

என்றும்

குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே

பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்லே

என்றும் கவியரசு கண்ணதாசன் என்னுடைய அப்போதைய நிலையை மிகப் பொருத்தமாக சொல்லியிருப்பார்.

அம்மா, நான் கோழையல்ல. தன்னம்பிக்கையும், தன்மானமும் உள்ளவன். மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியில் நம்பிக்கை கொண்டவன். கடவுள் மீது பக்தி உள்ளவன். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும் என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவன். அதனால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன்.

நீங்கள் வீட்டில் இருக்கும்போது உங்களைப் பிரிந்துவர என்னால் முடியாது என்றுதான், நீங்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு வீட்டை விட்டு வெளியேறினேன். அதன் பிறகு உங்கள் நினைவால் நான் பட்ட அவஸ்தைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது. எப்போது வேண்டுமானாலும் அழுகை வெடித்துக் கிளம்பி விடும் என்ற நிலையில்தான் நான் இருந்தேன். அப்போது என் முக பாவம் அப்படித்தான் இருக்கும்.

எப்படியோ பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. உள்ளத்தில் ஏதோ ஒரு சோகம் நிரந்தரமாகத் தங்கி விட்டது போல் தோன்றுகிறது. பலவீன மனம் கொண்டவனாக இருந்திருந்தால் உயிரையே மாய்த்துக் கொள்ளும் எண்ணம் தோன்றி இருக்கும். ஆனால் கடவுள் அருளால் என்றாவது ஒருநாள் உன்னையும், உன் தம்பிகளையும் மீண்டும் பார்ப்பேன் என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே எனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பைக் கொடுத்திருக்கிறது.

பதினாலு வருடங்கள் ஸ்ரீராமனைப் பிரிந்த தசரதனின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. தசரதனுக்கோ வேறு மனைவிகள் மூலம் மற்ற பல குழந்தைகள் இருந்தனர். ஆனால் எனக்கு குழந்தைகள் நீங்கள் மட்டும்தானே!

இன்று என்னுடைய பொருளாதார நிலைமை அப்படி ஒன்றும் மோசமில்லை. நேர்மையான உழைப்பில் சம்பாதித்து, ஓரளவு வசதியான ஒரு நடுத்தர வாழ்க்கைக்கு தேவையான, குடியிருக்க ஒரு ஃப்ளாட், வாகனங்கள் என்று எல்லாமே இருக்கிறது, குழந்தைகளாகிய நீங்கள் என்னுடன் இல்லை என்பதைத் தவிர.

நான்தான் முயற்சி செய்து உங்களைப் பார்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் சொல்கிறார்கள். ஃபேஸ்புக்கில் கூட ஃப்ரண்ட்ஸ் ரிக்வெஸ்ட் கொடுக்கலாம் என்று ஒரு நப்பாசை தோன்றும். ஆனால் என் மனம் வருந்தும்படி ஏதாவது ஆகிவிட்டால் என்னால் தாங்க முடியாது என்பதால் என்னைக் கட்டுப் படுத்திக் கொள்வேன்.

சரி, இப்போது இந்த மடல் எதற்கு என்று கேட்கிறாயா? சென்ற வாரம் நான் ஊருக்குப் போய் இருந்தேன். அப்போது எனக்குத் தெரிந்தவர்கள் உன்னைப் பார்த்ததாகவும், பேசியதாகவும் சொன்னார்கள். வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் பெற்று, நீயும் உன் தம்பிகளும் வளமான வாழ்க்கை வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

நீங்கள் புத்திசாலி குழந்தைகள் என்பதை நானறிவேன். எனவே நீங்கள் என்னுடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப் படக்கூடாது. எல்லாம் விதித்தபடிதான் நடைபெறும் என்றால் பிறகு கவலைப்பட என்ன இருக்கிறது.

இதன் மூலம் நான் தெரிவித்துக் கொள்வது இதுதான். உன்னையும், உன் தம்பிகளையும் பார்ப்பதற்கு மனத்தில் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னைப் பார்க்கத் தடையில்லாத சூழ்நிலை இப்போது அங்கு இல்லை என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால் காலம் கனியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் வாழ்நாள் முடிவதற்குள் என்றாவது ஒரு நாள் நாம் எல்லோரும் ஒன்றாகச் சேருவோம். அந்த நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பேன்.

இப்படிக்கு

உன் அப்பா

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அன்புள்ள மணிமொழிக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.