இலக்கியம்கவிதைகள்

அவளுக்கும் ஒரு பெயருண்டு!

கீதா மதிவாணன்

old-indexபட்டுத்தூளியிலிட்டு பாலாடையில் தேன்புகட்டி
அந்நாளில் அவளுக்கும் ஒரு பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும்போதோ,
ரேசன் அட்டை புதுப்பிக்கப்படும்போதோ அன்றி
அவளுக்கென்று ஒரு பெயர் இருப்பது
அவள் நினைவுக்கு வருவதேயில்லை.
தங்கமே வைரமே பவுனே பச்சைக்கிளியே என்று
கொஞ்சுமொழிகளால் கொண்டாடப்பட்டும்
அம்மாடி, கண்ணு, செல்லம், பாப்பாவென்று
ஆசையாயும் அன்பாயும் அழைக்கப்பட்டும்
அடியேய் இவளே…. நாயே பேயே சனியனே என்று
பின்னாளில் பேரெரிச்சலுடன் விளிக்கப்பட்டும்
கடந்துபோன காலத்தின் எந்த முடுக்கிலும்
தன்பெயர் புழங்கப்படாததில் அவளுக்குப் பெருவருத்தம்.
பள்ளிக்குச் சென்று பழக்கப்படாவாழ்வில்
அவள் பெயர் தாங்கியதொரு அஞ்சலட்டைக்கும்
வழியற்றுப்போனவளின் அந்திமக்காலத்தில்
ஏக்கத்தவிப்போடு ஊசலாடிக்கொண்டிருக்கிறது உயிர்க்கூடு,
காலனேனும் அவளைப் பெயரிட்டு அழைக்க
காலத்தே வருவானாவென்ற காத்திருப்போடு!

http://www.shunya.net/Pictures/NorthIndia/Bishnupur/Bishnupur.htm

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

 1. Avatar

  //காலனேனும் அவளைப் பெயரிட்டு அழைக்க
  காலத்தே வருவானாவென்ற காத்திருப்போடு!//
  நெஞ்சைப் பிசைகின்ற வரிகள்!

  அன்றைய பெண்களின் நிலை இவ்வாறு தம் பெயரைத் தாமே மறந்துபோகும் அவல நிலையாகவே இருந்துவந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அந்நிலை இன்று வெகுவாக மாறிப் பெண்கள் சட்டங்கள் செய்யவும் பட்டங்கள் ஆளவும் புறப்பட்டுவிட்டனர். இனி அவர்கள் பெயரை ஊரும் உலகமும் உரக்கச் சொல்லும்!
  உணர்வுகளைக் குழைத்து அருமையாக எழுதப்பட்டுள்ள கவிதை கீதா. மனமார்ந்த பாராட்டுக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!

  அன்புடன்,
  மேகலா

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க