Category: Featured

Featured

  • கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?

     

                                                                                                                                    (கட்டுரை – 1)

                                                                                    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


    அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம்.

    தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]

    மின்சாரத்துக்கு எரிசக்தி இல்லாதது போல் விலை மிக்க எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is so costly as No Energy)

    இந்திய அணுசக்திப் பிதா டாக்டர் ஹோமி பாபா.

    அணுமின் எரிசக்தி போல் விலை மிகுந்த வேறோர் எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is as costly as Nuclear Energy)

    கட்டுரை ஆசிரியர்

    “புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் புகுஷிமாவில் ஆய்வு செய்ய ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.”

    நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் 6, 2011)

    “இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

    பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)

    நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக் கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.

    அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்ற வையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

    லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

    “விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

    விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

    கடற்கரையில் நிறுவியுள்ள கூடங்குள அணு உலைகளில் புகுஷிமா விபத்துக்கள் போல் நேருமா ?

    ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் வெப்பத் தணிப்பு நீரனுப்ப முடியாது மேற்தளங்கள் வெடிப்பதைத் தொலைக் காட்சியில் நேராகக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்களுக்குத் தமிழகத்தின் தென்கோடிக் கரையில் கட்டப் பட்டு இயங்கப் போகும் கூடங்குள ரஷ்ய அணு உலைகளின் அபாயப் பாதுகாப்பு பற்றிப் பல ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.  இந்திய அணுமின் நிலையங்களைக் கட்டி வரும் நிறுவகத் தலைமையகம் (Nuclear Power Corporation India Ltd – NPCIL) புகுஷிமாவில் சுனாமிப் பேரலைகள் விளைவித்த அணு உலைப் பேராபத்துகள் போல் கூடங்குளத்தில் நேரா என்று அழுத்தமாய் உறுதி அளித்துள்ளது.  இரு நாட்டு அணுமின் நிலையத் தளங்கள் வெகு தூரத்தில் அமைக்கப் பட்டிருந்தாலும் கடற்கரையைச் சுனாமி தாக்கக் கூடிய அபாயத் தளங்களாக அவை இரண்டும் கருதப் படுகின்றன.  அத்தகைய கோரப் பேரலை விபத்துகள் கூடங்குள அணு உலைகளில் நேருமா என்று தனியாகக் கேரளா பொறியியல் குழுவினர் (Kerala State Centre of The Institution of Engineers India) பங்கெடுத்த கருத்தரங்கு மார்ச் 30, 2011 தேதி திருவனந்தபுரத்தில் நிகழ்ந்தது.  அந்த கருத்தரங்கின் முக்கிய முடிவுகளைத் தான் இக்கட்டுரை விளக்கிக் கூறுகிறது.

    2001 ஆம் ஆண்டில் அடித்தளம் கட்டக் குழி தோண்டி ஆரம்பமான கூடங்குள அணுமின் நிலையம் பல காரணங்களால் பத்தாண்டுகள் வரை நீடித்து இன்னும் ஓரிரு மாதத்தில் (ஆகஸ்டு 2011) இயங்கத் தயாராகி வருகிறது.  முதன்முதல் இரண்டு பெரிய அன்னிய 1000 மெகா வாட் நிலையம் கட்டப் படுவதால் ஈராண்டுகள் தாமதம் ஆகி விட்டது ! அணுமின் உலை இயக்க ஏற்பாடுகள் அனைத்தும் சோதிப்பாகி ‘அணுசக்தி நெறிப்பாடு ஆணைய கத்துக்கு (Atomic Energy Regulatory Board – AERB) விளைவுகள் சமர்ப்பணம் ஆகியுள்ளன.  அது பச்சைக் கொடி காட்டியதும் கூடங்குளம் முதல் யூனிட் இயங்கத் துவங்கும்.  இரண்டாவது யூனிட் 2012 மே மாதத்தில் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சென்னை மாநிலத்துக்கு 2011 இறுதிக்குள் 1000 மெகா வாட் மின்சாரமும், 2012 இறுதிக்குள் அடுத்து 1000 மெகா வாட் மின்சாரமும் (மொத்தம் 2000 மெகா வாட்) பேரளவில் பரிமாறப்படும் என்று அறியப் படுகிறது.

    கூடங்குளத்தில் முதன்முறை இயங்கப் போகும் ரஷ்ய இரட்டை VVER அணுமின் நிலையம் 1986 இல் நேர்ந்த செர்நோபில் விபத்துக்குப் பிறகு ‘மூன்றாம் பிறப்பு முறைப்பாட்டில்’ (Third Generation Design) செம்மைப் படுத்தப் பட்ட முற்போக்கு அணுமின் உலைகள் என்று IAEA அறிவிக்கிறது.  2004 இல் அடித்த இந்து மாக்கடல் சுனாமிப் பேரலை விளைவை ஆய்ந்து அணுமின் உலைச் சாதனங்களும், கட்டடமும் கடல் வெள்ளம் மூழ்க்கி விடாதபடி கடல் மட்டத்துக்கு மேல் 25 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன.

    1.  அணு உலை எரிக்கோல் உருக்கைத் தாங்கும் கும்பா

    அபாய வெப்பத் தணிப்பு நீரின்றிக் கூடங்குளம் அணு உலை எரிக்கோல்கள் உருகிப் போனால் அந்த கனல் உலோகத் திரவத்தை ஏந்தி உருக்கை ஏற்றுக் கொள்ள குவளைச் சாதனம் (Core Melt Catcher) ஒன்று அணு உலைக்கு அடியில் அமைக்கப் பட்டுள்ளது.  வெப்பத் தணிப்பு நீரின்றி எரிக்கோல்களின் உருக்குத் திரவம் உண்டாவது ரஷ்யன் VVER அணு உலைகளில் எதிர்பார்க்க முடியாத ஓர் அபூர்வ நிகழ்ச்சியாகும்.

    ஹைடிரஜன் வாயு பேரளவில் சேமிப்பாகி வெடிப்பைத் தூண்டாதிருக்க கூடங்குள அணுமின் நிலையத்தில் அது ஆக்சிஜனோடு தீவிரமாய்க் கலந்து வெடிக்காது ஹைடிரஜன் இணைப்பிகள் (Hydrogen Recombiners) என்னும் சிறப்புக் சிமிழ்கள் அமைக்கப் பட்டுள்ளன.  அதில் ஹைடிரஜன் மெதுவாய் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து நீராகும்படி செய்யப் படுகிறது.  இந்தச் சிறப்புச் சாதனங்கள் அணு உலையில் ஹைடிரஜன் வாயு தீவிர வெடிப்பளவாய்ச் (< 4%) சேராதபடித் தடுக்கின்றன.  நிலநடுக்கம், சுனாமிப் பேரலை அடிப்புகள் சாதனங்களைப் பாதிக்காதபடி கூடங்குளம் ரஷ்ய அணுமின் உலைகள் டிசைனில் மேம்பாடு செய்யப் பட்டுக் கட்டப் பட்டுள்ளன.

    2.  கூடங்குள அணு உலை இயக்கப் பாதுகாப்பு ஏற்பாடுகள்

    கூடங்குள அணுமின் நிலையத் திட்டத்தின் பாதுகாப்பு நெறிப்பாடுகள் (Safety Aspects of Kudungulam Power Project) என்னும் தலைப்பில் அணுமின் நிலைய டைரக்டர் காசிநாத் பாலாஜி தலைமையில் ஒரு தனிக் கருத்தரங்கு நடந்தது.  அந்தக் கருத்தரங்கில் நிலநடுக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் அணுமின் உலை அரண், கட்டடங்கள், துணைச் சாதனங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆட்சி அறை, டர்பைன் ஜனனி, அவற்றின் துணை ஏற்பாடுகள் ஆகியவற்றின் டிசைன் திட்ட அமைப்பாடுகள் அறிவிக்கப் பட்டன.

    கூடங்குள அணுமின் நிலைய தளம் ‘குன்றிய அபாய எதிர்பார்ப்பு அரங்கம் : 2 இல் (Zone : 2 – Low Damage Risk Area) இருந்தாலும் கட்டடங்களும் சாதனங்களும் 25 அடி (7.5 மீடர்) உயரச் சுனாமிப் பேரலைத் தாக்குதலும் பாதிக்காதபடி பாதுகாக்கப் படும்.  2004 ஆண்டு தாக்கிய இந்து மாக்கடல் சுனாமி அலை அடிப்புக்கு ஏற்ப சாதனங்கள், கட்டடங்கள் செம்மைப்பாடு செய்யப் பட்டன.

    செர்நோபில் விபத்துக்குப் பிறகு ஆழ்ந்து மீளாய்வு செய்யப்பட்டுக் கூடங்குள அணுமின் நிலையம் ரஷ்ய பொறியியல் விஞ்ஞான நிபுணரால் செம்மைப் படுத்தப்பட்டு மேன்மை செய்யப் பட்டது என்று IAEA அறிவிக்கிறது.  அணு உலை நிறுத்தமாகி, அபாய வெப்பத் தணிப்பு வேளை களில் நீரின்றிப் போனால் மாபெரும் 12 நீர் அழுத்தக் கலனிலிருந்து (Huge Water Accumulators) நியூட்ரான் விழுங்கி போரான் (Neutron Absorber Boron) கலந்த நீர் செலுத்தப் பட்டு எப்போதும் எரிக்கோல்களை நிரப்பிச் சூழ்ந்திருக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    அத்துடன் வெப்ப வேறுபாட்டாலும், ஈர்ப்பு விசையாலும் மேலும் கீழும் சுற்றும் நீரோட்டம்  (Natural Circulation By Heat & Gravity) நிகழும்படி நீராவி மாற்றிகள் அணு உலைக்கு மேல் மட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளன.

    ஒவ்வோர் அணுமின் உலைக்கும் அபாயத் தேவைக்கு மின்சாரம் அனுப்ப தனிப்பட்ட நான்கு மின்சார டீசல் எஞ்சின் ஜனனிகள் தானாக இயங்கத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கின்றன.  நான்கில் ஒரு டீசல் மின்சார இணைப்பே அபாயத் தணிப்பு நீரனுப்பப் போதுமானது.  டீசல் ஜனனிகள் கடல் மட்டத்திலிருது 30 அடி (9 மீடர்) உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன.  டீசல் ஜனனிகள் ஓட்டும் நீரனுப்புப் பம்புகளும் பாதுகாப்பான இடத்தில் நிறுவப் பட்டுள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் டீசல் எஞ்சின் இயங்க முடியாது போனால், ஓய்வு வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் (Two Passive Heat Removal Systems) உடனே இயங்க ஆரம்பிக்கும்.  அவற்றில் முதலில் இயங்கும் 12 நீரழுத்த கலன்கள் போரான் நீரை அணு உலைக்குள் விரைவாகச் செலுத்தும்.

    இரட்டை ஓய்வு வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் (Two Passive Heat Removal Systems)

    1. 12 நீரழுத்த கலன்கள் போரான் நீரை விரைவில் அணு உலைக்குள் செலுத்துவது.

    2. ஈர்ப்பு விசையால் அணு உலை எரிக்கோள்களுக்குத் தானாய் இயங்கும் வெப்பத் தணிப்புச் சுற்று நீரோட்டம் நிகழ்த்துவது.

    அணுமின் நிலையம் இயங்குவதற்கு முன்பு இறுதிச் சோதனையாக அபாயப் பாதுகாப்பு பயிற்சிகள் (Emergency Safety Drills) கூடங்குள நகராண்மை மக்களுக்குக் காவல்துறை உதவியோடு நடத்தப்படும்.

    விஞ்ஞானி மிசியா காக்கு புகுஷிமா அணு உலை விபத்து பற்றிப் பேசுகிறார்.

    2011 ஜூன் 17 இல் விஞ்ஞானி மிசியோ காக்கு (Michio Kaku) புகுஷிமா அணு உலை விபத்தைப் பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  பல வாரங்கள் இரும்புத் திரையிட்டு ஜப்பான் டெப்கோ (Tepco) நிறுவகம் இப்போது முன்வந்து சில உண்மைகளை வெளியிட்டுள்ளது என்று கூறுகிறார்.

    1.  அமெரிக்க விஞ்ஞானிகள் ஐயுற்றபடி மூன்று அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் அபாய வெப்பத் தணிப்பு நீரின்றி ஏறக்குறைய முற்றிலும் உருகிப் போயிருக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.  இது நேரடியாக அறியப் படாத செய்தி.  உலக விஞ்ஞானிகள் தமது கணினி மாடல் படைப்பில் உருவாக்கி ஜப்பான் அரசாங்கம் இதுவரை அறிவித்த கதிரியக்க விளைவுகளை விடக் கோரமானது என்று முடிவு செய்கிறார்.

    2.  மூன்று அணு உலைகளின் எரிக்கோல்கள் முற்றிலும் உருகிப்போயின என்றால் ஏன் மூன்று ‘சைனா பேரழிவு விபத்துகள்’ (China Syndrome*) நேரவில்லை என்ற வினா எழுகிறது !  காரணம் :  நீண்ட நாட்கள் கடல் நீரால் மூன்று அணு உலைகளும் வெப்பத் தணிவு செய்யப் பட்டன.  அதனால் உருகிய யுரேனியும் எஃகு அரணில் துளையிட வில்லை.  ஆயினும் அணுமின் உலை இயக்க மேலதிகாரிகள் வெப்பத் தணிப்புக்குக் கடல் நீர் அனுப்புவதை முற்றிலும் ஆதரிக்க வில்லை.  அப்படிச் செய்வதால் கடல் நீர்த் துருவேற்றும் மிகையாகி அணு உலைச் சாதனங்கள் அனைத்தும் இறுதிச் சமாதி நிலை அடையும்.  மேல்நிலை அதிகாரிகள் அணு உலைக்குள் கடல் நீர் அனுப்புதலைத் தடுத்தும் கீழ்நிலை இயக்குநர் ஆணைக்குக் கீழ்ப்படியாது அதைத் தொடர்ந்து நிறைவேற்றினர்.  மேலதிகாரிகள் ஆணையை மீறிய அவர் யாவரும் மெய்யான தீரர் என்று இப்போது பாராட்டப் படுகிறார்.

    3.  வெளியேறிய கதிரியக்கக் கழிவுகளின் மதிப்பளவு 700 டிரில்லியன் பெக்குவரல் என்பதை டெப்கோ நிர்வாகிகள் வற்புறுத்தலுக்குப் பிறகு ஒப்புக் கொண்டனர்.  அந்த அளவு செர்நோபில் விபத்தில் வெளியேறிய அளவில் 20% பங்கு மதிப்பாகும் என்று அறியப் படுகிறது.

    4.  பொதுநபர் வெளியேற்றப் பட்ட பகுதியில் தீவிர கதிர்வீச்சுள்ள நான்கு தளங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.  ஒரு மாவட்டத்தில் பள்ளித் தளங்களில் கதிரியக்கம் பரவியதால்  8000 பள்ளி மாணவர் பள்ளிக்கூடத்துக்குப் போகையில் கதிர்மானிகள் அணிவிக்கப் பட்டார்.  அதனால் சிறுவரின் பெற்றோர்கள் அரசாங்கத்தின் மீதும், டெப்கோ மீதும் சீறினார்.

    5.  புகிஷிமாவின் நான்கு அணுமின் நிலையச் சிதைவுகளைச் சீராக்கிச் செம்மைப் படுத்த 10 ஆண்டுகள் ஆகலாம் என்று டோஷீபா நிறுவகம் (Toshiba Corporation) மதிப்பீடு செய்தது.  ஹிட்டாச்சி நிறுவகம் (Hitachi Corporation) 30 ஆண்டுகள் ஆகலாம் என்று மதிப்பீடு செய்தது.   திரீமைல் தீவு அணு உலைச் சிதைப்பைச் சீர்படுத்த 14 ஆண்டுகள் எடுத்தன.  25 ஆண்டுகள் கடந்தும் செர்நோபில் கதிரியக்கத் தீங்குகள் இன்னும் தொல்லைகள் தருகின்றன.

    6.  புகிஷிமா அணு உலைகளில் 2011 இறுதிக்குள் ‘பூரணத் தணிப்புலை நிறுத்தம்’ (Cold Shutdown State) செய்ய முடியும் என்று நிலைய அதிகாரிகள் கருதுகிறார்.  அதைச் செய்வது கடினம் என்றும் அடுத்த ஆண்டுவரை நீடிக்கலாம் என்று டெப்கோ நிறுவகம் அறிவித்துள்ளது.

    (தொடரும்)

    **************
    China Syndrome* – The China Syndrome is a 1979 American thriller film that tells the story of a reporter and cameraman who discover safety coverups at a nuclear power plant.
    The title is a fanciful term – not intended to be taken literally – that describes one possible worst-case result of a nuclear meltdown, where reactor components melt through their containment structures and into the underlying earth, “all the way to China” (</wiki/China_Syndrome>).

    ***************

    தகவல்:

    1. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

    2 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

    3. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

    4. Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

    5.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

    6. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

    7. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

    8. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

    9. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

    10. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

    11 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant (Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

    12. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

    13. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

    14 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

    15. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

    16. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

    17  2011 Fukushima’s Nuclear Accident is not Chernobyl (March 18, 2011)

    18 Kudankulam Nuclear Plant Equipped to deal with Tsunami Threats By : Vinson Kurian (April 3, 2011) Kerala State Centre of The Institution of Engieers (India) – IEI

    19. Three-Month Update of Fukushima Tragic Accident & Flood of Information Coming Out (June 16, 2011)

    20.  http://www.npcil.nic.in/pdf/Atoms_in_Japan.pdf  (December 19, 2011)  (Nuclear Power Costs Estimated at JP Yen 8.9 per kWh, 

    Matching Wind and Geothermal

     

    ************************
    S. Jayabarathan  (jayabarat@tnt21.com)  November 9, 2012
    http:jayabarathan.wordpress.com/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (31)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    2012 தனது முடிவை நோக்கி அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் எத்தனையோ நிகழ்வுகளைத் தனக்குள்ளே தாங்கியவாறு ஓடிக் கொண்டிருக்கிறது. இவற்றிலே சில மகிழ்ச்சியானவை சில துன்பகரமானவை ஆனால் அனைத்துமே நடந்த நிகழ்வுகளின் நிழல்களாகத்தான் மக்களின் மனங்களிலே பதிந்து போய் இருக்கின்றன.

    எமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளாமல் எம்மை அடக்கி ஆள்பவர்களால் எமக்கு நடத்தப்படும் நிகழ்வுகள் எமது வாழ்க்கையில் பல திருப்பங்களை ஏற்படுத்தி விடுகிறது. இவைகளில் சில எம் வாழ்க்கைகளை முன்னேற்றுகிறது வேரு சிலவோ எமது வாழ்க்கையில் பல இன்னவொன்னா தொல்லைகளைத் தந்து அனுபவம் எனும் அத்தியாயத்தோடு இதயத்தை உறைய வைத்து விடுகிறது.

    என்னடா இது ஏதோ ஒரு பெரிய பீடிகையுடன் ஆரம்பிக்கிறானே என்று எண்ணுவது போலத் தெரிகிறது ! பயப்படாதீர்கள் என்னுடைய ஆரம்பத்திற்கு ஒரு காரணம் உண்டு.

    2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் வாழும் பல வம்சாவழி இந்தியர்களின் மனதினிலே நீங்காத வடுவைத் தாங்கி நிற்கிறது. ஆமாம் உகாண்டா நாட்டின் அதிபதியால் அந்நாட்டில் வாழ்ந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட 40 ஆண்டு நிறைவேயாகும்.

    உலகத்தில் எந்த நாட்டிலுமே கண்டிராத வகையில் மிக அதிக அளவில் மக்கள் நாடு கடத்தப்பட்டமை சமீப காலத்து உலக வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

    எப்படி இந்த இந்தியர்கள் உகாண்டா நாட்டிற்கு இடம், பெயர்ந்தார்கள்.

    1882ம் ஆண்டு வாணிபம் செய்வதற்கு உள்ளே நுழைந்து நாட்டின் அதிகாரத்தையே வாணிபமாக மாற்றிய இங்கிலாந்து அரசியல் வியாபாரிகளே இதற்கு மூல காரணம்.

    உலகின் பல நாடுகளையும் தமது Gun Boat Diplomacy எனும் கட்ற்படை ஆக்கிரமிப்பால் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பிரித்தானிய ஏகாதிபத்திய ராஜ்ஜியத்தில் ஆதவன் மறைவதே இல்லை என்று பறை தட்டிய இங்கிலாந்து அரசாங்கத்தினால் புலம் பெயரப் பண்ணப்பட்டவர்களே இவ்விந்தியர்களின் மூதாதையர்கள் எனலாம்.

    1890களில் உகாண்டா நாட்டில் இரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடுத்த சுமார் 32000 இந்தியர்கள் பிரித்தானிய அரசினால் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

    இப்புகையிரதப் பாதை அமைப்பு முடிவுற்றதும் உயிருடன் எஞ்சிய பலர் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பினர் ஆனால் 6724 பேர் உகாண்டாவைத் தமது நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக் கொண்டனர்.

    இந்தியர்கள் தையல் தொழிலும், வங்கித் தொழிலும் செய்து மேன்மையடைந்தார்கள். இயற்கையாகவே கடும் உழைப்பளிகளான என் தாயக மக்கள் தமது கடும் உழைப்பினால் உகாண்டா நாட்டின் பொருளாதாரத்தில் அதி முக்கிய நிலை வகித்தார்கள்.

    எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் இந்தியர்கள் பெரும்பான்மையான உகாண்டா நாட்டு கறுப்பின மக்களை விட அதியுயர்ந்த நிலையில் இருப்பதா என வெகுண்டெழுந்த சில துவேஷ அரசியல்வாதிகளால் உகாண்டா நாட்டு மக்களுக்கு இந்தியர்கள் மீதிருந்த காழ்ப்புணர்ச்சி ஊதிப் பெருப்பிக்கப்பட்டது.

    1968 ம் ஆண்டே அந்நாளில் உகாண்டா நாட்டு அதிபராக இருந்த மில்டன் ஓபட்டோ என்பவர் உகாண்டா நாட்டின் வணிகத்துறையையும், தொழிற்துறையையும் ஆப்பிரிக்க மக்கள் வசப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முடுக்குவதாகக் கூறி இந்தியர்களின் மீது பாரபட்சமாக நடந்து கொள்ளும் விதிமுறைகளை இயற்றினார்.

    இந்தியர்களின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதற்காக 1969ம் ஆண்டு பல வேலை அனுமதிப் பத்திர முறையும், வியாபார அனுமதிப் பத்திர முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

    மில்டன் ஓபட்டோ , இடி அமீன் எனும் இராணுவ அதிகாரியால் தூக்கியெறியப்பட்டு இடி அமீன் உகாண்டா நாட்டின் அதிபராக பதவி ஏற்றதும் இந்தியர்கள் மீதான துவேஷத்தின் அடிப்படையில் தமது பதியை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேலும் முடுக்கி விட்டார்.

    விளைவு !

    1972ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி உகாண்டா நாட்டு இந்தியர்கள் உகாண்டாவை விட்டு வெளியேறுவதற்கு இடி அமீன் 90 நாட்கள் கெடு விதித்தார்.

    கடுமையான உழைப்பை மூலதனமாகப் போட்டு தமது வியாபாரங்களைக் கட்டி எழுப்பி தமது தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக புலம்பெயர்க்கப்பட்டும் மன உறுதியை இழந்து விடாமல் தமக்கென ஒரு ஸ்திரமான வாழ்வை ஏற்படுத்தி வைத்திருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கண்ணீருடன் தமது வியாபாரங்களையும், தாம் கடினமாக உழைத்துச் சேமித்த தமது உடமைகளையும் கைவிட்டு உகாண்டாவை விட்டு வெளியேறினார்கள்.

    அவர்களுடன் சேர்ந்து உகாண்டா நாட்டின் மனிதாபிமானமும் வெளியேறியது.

    இங்கிலாந்து நாட்டு பிரஜாவுரிமை கொண்டவர்களில் இங்கிலாந்து நாட்டிற்கு இடம்பெயர விரும்பியவர்கள் சுமார் 30000 பேருக்கு இங்கிலாந்தில் அகதிகள் அந்தஸ்து அளிக்கப்பட்டது.

    இவர்களில் பலர் 0 எனும் எண்ணிலிருந்து ஆரம்பித்து இன்று இங்கிலாந்து நாட்டின் கோடிஸ்வரர்களில் இருவர்களாகத் திகழ்ந்து எமது இந்திய நாட்டு மக்களின் உழைப்பின் மகிமைக்கு கிடைத்த வெற்றி என்று இங்கிலாந்து நாட்டின் பழுத்த அரசியல்வாதிகள் பலர் போற்றுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.

    இவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக மிக் ஜட்டெனியா (Mike Jatania) உம் அவரது மூன்று சகோதரர்களும் திகழ்கிறார்கள். உகாண்டா நாட்டிலிருந்து அகதியாக இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்படும் போது நிராதரவாக வந்த இவர்கள் இன்று 850 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளது ஒன்றே இம்மனிதர்களின் கடுமையான உழைப்பிற்கு உதாரணமாகத் திகழ்கிறது.

    தமது தாய்நாட்டிலிருந்து அதனுடன் எந்த சம்பந்தமுமேயில்லாத ஒரு நாட்டின் அதிகாரவர்க்கத்தினால் நாடு கடத்தப்பட்டு தாம் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட நாட்டில் தமக்கென ஒரு வாழ்வைத் தமது கடுமையான உழைப்பினால் எற்படுத்திக் கொண்ட பின்னால் தமது உடமைகள் அனைத்தையும் பறிகொடுத்து மூன்றாம் நாட்டிற்கு அகதியாக இடம் பெயர்ந்து இன்று அந்த நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்களென்றால் அவர்களின் மனத்திடத்தையும், நம்பிக்கையையும் எதற்கு ஒப்பிட முடியும்.

    இத்தகைய வாழ்க்கைகளை அலசுவதன் மூலம் இளய தலைமுறையின் நம்பிக்கை மேலும் வலுவடையும் என்பது எனது நம்பிக்கை.

    இதற்காகத்தான் கவியரசர்,

    வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில்
    மனிதனாக வேண்டும்
    வாசல் தேடி உலகம் உன்னை
    வாழ்த்திப் பாட வேண்டும்!     என்று எழுதி வைத்தாரோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ :: தொடர்-20

     

    பெருவை பார்த்தசாரதி

    புராண காலத்தில் மட்டுமில்லாமல், இன்று கூட நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறவர்களை வெவ்வேறு காலகட்டத்தில் கைக்கொண்டு வாழ்க்கை நலம் பெறவும், வாழ்வில் உயர்ந்த நிலை அடையவும் ஒவ்வொருவரும் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறோம். நாம் நமது சொந்தக்காலில் நிற்கமுடியும், நமது உழைப்பிலே நாம் வாழமுடியும் என்கிற தளராத தன்னம்பிக்கை வளர இவர்கள் காட்டும் வழி நமக்கு ஒளிகாட்டுகிறது. பண்டைக்காலத்தோடு இன்றய காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், தடைக்கற்களை சுட்டிக்காட்டி தன்னம்பிக்கையை வளர்க்கும் சூழ்நிலைகளை உருவாக்கித் தருபவர்களை Counsellors, Advisors, Organisers, TeamLeader, Members என்று பெயர் சூட்டி அழைப்பெதெல்லாம் இன்று பெயரளவிலே தான் மாற்றமே தவிர,  செயல் அளவில் பெரிய மாற்றமிருக்காது. அன்று ‘குரு’ என்று சொல்கிறவர்களை இன்று ‘தலைவர்’, ‘வழிகாட்டுபவர்’ என்று சொல்கிறார்கள் அவ்வளவுதான். ஒரு திறமையான தலைவனாகச் செயல்படக்கூடிய ஒருவர் (Leader) தன்னுடைய உறுப்பினர்களுக்கு (Team Members) வழிகாட்டியாக இருந்தால், அவர் எடுக்கின்ற செயலும், முடிவும் வளரும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. திறமை இருந்தும் ஒரு காரியத்தைத் திறம்பட செய்ய முடியாமல் திணறுபவர்களுக்கு, முதலில் அவர்களை மனக் குழப்பத்தில் இருந்து விடுவித்தால்தான் அவர்கள் திறம்பட செயல்படமுடியும். தன்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, தாம் சொல்கின்ற பணிகளைத் திறம்பட செய்யும் ஊழியனிடத்தில் காணும் மன சஞ்சலங்களை அகற்றி, அவனிடத்தில் இருக்கும் திறமையை எடுத்துக் காட்டுபவன்தான் மற்றவரிடமிருந்து தனிப்பட்டு “தலைவன்” என்ற தகுதியைப் பெறுகிறான்.  அறிவு, திறமை, பொருமை, ஆற்றல் இவை எல்லா அம்சத்திலும் சிறந்து விளங்கினாலும், தலைவனாகச் செயல்படுபவனுக்கு ‘தெளிவான சிந்தனை’ என்பது மிக மிக அவசியம். அப்பொழுதான் அவனைப் பின்பற்றுபவர்களுக்கு எடுத்துக் காட்டாக அமையமுடியும். ஒரு வண்டி சீராக ஓட வேண்டுமானால், இரண்டு சக்கரங்களும் ஒரே அளவாக இருக்கவேண்டும், அதுபோல எண்ணங்கள், செயல்கள் என்ற இரு சக்கரங்கள் ஒன்றாக இருந்தால்தான் வண்டியாகிய செய்கின்ற செயல் சிறப்பாக அமையமுடியும். இந்த எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் மூலக்காரணமாக அமைவது தெளிவான “மனம்”. என்பதை மையமாக வைத்துதான் கவியரசரின் சிந்தனையில் “வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும், அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்” தமது பாடல் வரிகளை அமைத்து இருப்பார்.

    மனதைக் கட்டுப்படுத்தி, ஆசைக்கு அளவிட்டால் கடையனும் கடைத்தேற்றம் பெறலாம் என்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆசையை அடக்க முடியாமல் இன்று பலர் வாழ்வில் வழி தவறுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். எல்லாவித இன்ப துன்பங்களுக்கும் மனம் ஒன்றுதான் காரணமாக அமைகிறது. நல்ல மனைவி, தகராறு செய்யாத குழந்தைகள், உறவாடும் சுற்றத்தார்கள் இவர்களோடு அமைதியான முறையில், தனது வருமானத்திற்கேற்றவாறு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தான் ஒருவன். அக்கம் பக்கத்தில் குடியிருப்போர்கள் எல்லாம் வசதியாக காரில் போவதைப் பார்க்கிறான். இவனுக்கும் லேசாக ஆசை பிறக்கிறது. தன்னிடம் ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும்?..ஆசை துளிர் விடுகிறது. உடனே வாங்கிவிடு என்று மனது சொல்கிறது, மறு நிமிடம் வேண்டாமென்று மறுக்கிறது. அடுத்த நிமிடம் கடன் வாங்கியாவது கார் வாங்கிவிடு என்று உத்தரவிடுகிறது. படிப்படியாக இந்த சாதாரண ஆசை பேராசையாக உருவெடுத்தது. இப்படித்தான் ஒவ்வொரு நிமிடமும் மனம் என்பது குரங்காக மாறிவிடுகிறது. மனதைக் கண்டபடி அலைபாய விட்டதால் அமைதியான வாழ்க்கையில் சூறாவளி வீசத்தொடங்கியது. இதுவரை கடன் என்று அறியாதவன், ஒரு காலகட்டத்தில் கடனைத் திரும்பச் செலுத்தமுடியாத பெரும் கடனாளி ஆகி  விடுகிறான். பணத்திற்காக ஒழுக்கத்திலிருந்து வழுவுகிறான். ஒழுக்கம் கெட்டவன், நடத்தை கெட்டவன் என்று பெயரெடுக்கிறான். முடிவில் தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையையும் சீரழித்துக் விடுகிறான்.

    மக்கள் அறவழியில்  சென்று ஒழுக்கத்தை முறையாகக்  கடைபிடித்து நல்வாழ்க்கை  வாழவேண்டும் என்ற உயரிய  நோக்கத்திற்கு வித்திடுவது ஒழுக்கம் என்பதை வலியுறுத்தினார்கள் பெரியோர்கள். நல்லொழுக்கத்துக்கு முக்கிய வழி ‘மன அடக்கம்’ மற்றும் ‘மனத்தூய்மை’. இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளலார் மனதைக் கட்டுப்படுத்தி தனது வாணாள் முழுவதும் நல்லொழுக்கத்தை பேணிக்காத்து தனது வாழ்வில் அதை முழுமையாகக் கடைபிடித்தும் வந்தார். மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, கருணைக்கும் இரக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி அருட்செயல் புரிந்து மற்றவரிடமிருந்து தன்னை வேறுபடுத்தி சமுதாயத்தை சீர் செய்த சீர்திருத்தவாதியாக, மிகச்சிறந்த மனிதனாக வாழ்ந்து காட்டினார். மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்ற பொருள் படும். நினைப்பதற்கு உறுதுணையான கருவி மனம். மனத்தையுடையவன் மனிதன். அதிலும் மனத்தை அடக்கியவனே சிறந்த மனிதன் என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள். அவருடைய சொற்பொழிவில் இருந்து ஒரு செய்தி, திருவொற்றியூரிலே ஒரு மகான் இருந்தாராம். அவர் ஆலய வழிபாட்டிற்காகச் செல்லும்பொருட்டு, வீதியில் தம்மைக் கடந்து செல்பவர்களைப் பார்த்து அதோ ‘எருமை போகிறது’, ‘நாய் போகிறது’, ‘ஆடு போகிறது’, ‘பூனை போகிறது’ என்று கூறுவாராம். வள்ளலார் தெருவிலே செல்லும்போது அவரைப்பார்த்து “மனிதன் போகின்றான்” என்பாராம். ஆகவே எல்லோரையும் அந்த மகான் மனிதனாகக் கருதவில்லை என்று தெரிகிறது. மண்ணாசை, பொருளாசை, பெண்ணாசையால் நிரம்பி ஆசையினால் லயிக்கப்பட்டுக் கிடந்த மனதை வெறுத்து துறவறம் பூண்ட பட்டினத்தடிகளுக்கு “காதற்ற ஊசியும் வாராதே காணும் கடைவழிக்கே” என்ற வாசகம் தான் அவருக்கு ஞான வழி காட்டியது. ஒரு நொடியில் சட்டென்று மனம் மாறியதால், பெரும் செல்வந்தராக இருந்தும், கடைசியில் சகலத்தையும் துறந்து கோவணம் கட்டிய துறவியானார்

    எண்ணிலடங்கா மஹான்கள், பதினென் சித்தர்கள், இன்றய சிறந்த எழுத்தாளர்கள், மனநல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர் மனதைப் பற்றிய எண்ணற்ற விஷயங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி சொல்லியிருக்கிறார்கள். மனதை ஒடுக்க, ஒடுக்க மனம் விரிவடைந்து விசாலமடைகிறது. மனம் விசாலமாகிவிட்டால் அங்கே ஈகைக் குணம் குடிகொண்டு விடுகிறது. தீக்குணங்களை விரட்டி அடித்து விடுகிறது. சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்கள் பொன்னையும் பொருளையும் புலவர்களுக்கும், வறியவர்களுக்கும் வாரி வழங்கினார்களே, இவர்கள் மனத்தைச் செம்மை படுத்தியது எது?…முன்னூருக்கும் மேற்பட்ட கிராமங்களை புலவர் கபிலருக்கு ஈந்தான் பாரி, முல்லைக்கொடிக்குத் தனது பொற்றேரைக் கொடுத்தான். தன்னிடமுள்ள பொருளைக் கொடுக்க இசைகின்ற அதேமனம், தன்னிடம் சேர்ந்து இருக்கின்ற உடலைக் கொடுக்க இசையுமா?… ஒரு புறாவின் அற்ப உயிருக்காக தன் தசையறுத்து துலாவில் ஏறிய வள்ளல்தன்மையைக் கண்டு வியக்காதவர் உண்டோ?…………அவர்களுடைய விசாலமடைந்த மனதிற்குள் விகாரத்து அங்கே இடமில்லை.

    மனத்தை பேய் என்றே குறிப்பிடுகிறார் பதினென் சித்தர்களில் ஒருவரான  அகப்பை சித்தர். அகம் என்றால் மனம் என்றும் பொருள் படும். இவரது உண்மைப் பெயர் அகப்பேய் சித்தர். இவருடைய பாடல்களில் அகத்தை (மனதை) பேய் என்று சித்தரித்து பாடல் எழுதியதாலேயே இவர் அகப்பேய் சித்தர் எனப் பெயர் பெற்றார். பின்னாளில் அகப்பேய் என்ற பெயர் மருவி அகப்பை ஆகிவிட்டார் என்பது பலரது கருத்து. மனதில் தூய்மையான எண்ணங்கள் எழும்போது, நமது முகம் பிரகாசமடைகிறது. மனம் எப்படி இருக்கிறதோ அப்படியேதான் முகத்தின் அழகு அமையும். இதைத்தான் “அகத்தின் அழகு முகத்திலே தெரியும்”, “ எண்ணம்போல வாழ்வு”, “எண்ணம்போல செயல்” என்பர். “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்பதும் வள்ளுவன் வாக்கு. மனதைப் ஒருநிலைப்படுத்துவது மற்றும் சஞ்சலப்படாமல் எப்படி ஒடுக்குவது என்பது பற்றி அகப்பேய் சித்தர் பாடல்களில் முக்கியத்துவம் பெற்று இருக்கும்.

    குரங்கானது சிறிது நேரமேனும் சும்மாயிராது, ஏதாவது விஷமம் செய்து கொண்டேயிருக்கும். மரத்துக்கு மரம் தாவுவதும், குதிப்பதும், தொங்குவதும் இவற்றுக்குச் சாதாரமான செயல். அதனால்தான் நிலையில்லாத மனித மனத்தையும் குரங்குக்கு ஒப்பிடுகிறார்கள் கவிஞர்கள். ‘மனித மனம் ஒரு குரங்கு’ என்ற கவியரசரின் பாடல்கள் இங்கே  நினைவுக்கு வரவேண்டும்…….மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தன்னிச்சையாக இயங்கவிடாமல் செய்துவிட்டால், மனமானது தூய்மையாகி என்நேரமும் சஞ்சலத்திற்கு இடம் கொடாமல், அமைதியாகவே இருக்கும்.

    ‘’நில்லென்று  மனதை நிலை நிறுத்தவல்லார்க்கு

    கொல்லென்று  வந்த எமன் குடியோடிப் போனாண்டி’’

    என்பது சித்தர்கள் கண்ட வித்தை. மனதை அடக்கி ஒரு நிலைப்படுத்தி விட்டால், மரணத்தையும்கூட வென்றுவிடலாம் என்பதே சித்தர்கள் கூற்று, இக்கலையைக் கைவரப்பெற்றவர்களின் உயிரை எடுக்க வந்த எமன் கூட அருகில் வராமல் ஒடிவிடுவானாம்.

    ‘குறுமுனி’ என்றும் ‘தலைமைச் சித்தர்’ என்றும் புகழ்பெற்ற அகத்தியர் “மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டா’’ என்கிறார். மனதைச் செம்மைப் படுத்தினால் எல்லாவித சித்திகளையும் பெற்றும் விடலாம் என்கிறார். எல்லா வியாதிகளுக்கும் மருந்துண்டு, மன உளைச்சலுக்கும் உண்டு, ஆனால் மருந்தைவிட மனதில் உள்ள அழுக்குகளை அகற்றிடும் பயிற்ச்சியே அருமருந்தென்று அகத்தியமுனி இங்கே உட்கருத்தாக சூசகமாகத் தெரிவிக்கிறார் என்றே பொருள் கொள்ளவேண்டும்.

    தற்காலத்தில்  அனைத்துமே கணிணியில் சேகரிக்கப்பட்டு சேமிக்கப் படுகிறது. இதில் அவ்வப்போது தேவையில்லாத சமாச்சாரங்களை ரிசைக்கிள் பின் (Recycle bin) என்ற இடத்திற்கு தள்ளிவிடுகிறோம். தேவையில்லாமல் கணிணியின் இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் கோப்புகளை (unwanted files) குப்பைத்தொட்டிக்கு (Recycle bin) அனுப்புவது போல, அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனதில் இருத்திக்கொள்ளாமல் உடனே மனதிலிருந்து களைந்து எரிந்து நல்லதைத் தவிர, ஒன்றுக்கும் உபயோகப்படாததை மனதில் சேமித்து வைப்பதை தவிர்க்கவேண்டும்.  இந்தப் பயிற்ச்சி மூலம் விரக்தி, கோபம், துவேஷம், எதற்கெடுத்தாலும் எரிச்சல் போன்றவற்றைத் தவிர்த்து மனதைப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வழி சொல்லுகிறார்கள் மனநல ஆராய்ச்சியாளர்கள்.

    பகவத் கீதையை ஆழ்ந்து படிப்போருக்கு மனதைப் பற்றிய விஷயங்களெல்லாம் தெளிவாக விளங்கும். ஒரு சமயம் மனதைக் கட்டுப்படுத்தமுடியாமல் தடுமாறிய அருச்சுனன், பகவான் கிருஷ்ணனிடம் “ஒரு நிலையில் இல்லாத மனதை எவ்வாறு கட்டுப்படுத்துவது?”…என்று வினவுகிறான். அதற்கு பகவான், நம்முடைய மனதுதான் எல்லாவித செயலுக்கும் காரணமாக அமைகிறது, காற்றைப்போல எந்நேரமும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதைக் கட்டுப்படுத்த இடைவிடாத பயிற்ச்சியினால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் இது யோகத்தினால் கைவரப்பெறும் என்றும் உரைக்கிறார். இறைநம்பிக்கையோடு இடைவிடாத பயிற்சியினால் மனதை ஒரு கட்டுக்குள் வைக்கமுடியும் என்பதை கீதை மூலம் வலியுறுத்தினார். பலவித மனக்குழப்பத்துக்கும் மனசஞ்சலத்துக்கும் அடிமையாகியிருந்த அருச்சுனனக்கு நல்லுபதேசம் செய்து மனிதப் பிறவிக்கும் கீதையுரை மூலம் நல் வழிகாட்டினான் மாயக் கிருட்டினன்.  மனமே ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. மனோதைரியமும், மனக்கட்டுப்பாடும் இருந்தால் மகத்தான சாதனை புரியமுடியும் என்பதை கீதோபதேசத்திலிருந்து எளிதாக அறிந்து கொள்ளமுடியும். சாதனைகளையும், குறிக்கோளையும் எட்டுவதற்கு இந்த ‘மனோதைரியம்’ மனிதனுக்கு மிக அவசியம் என்பதற்கு ஒர் உதாரணத்தை இங்கு எடுத்துச் சொல்ல விழைகிறேன். ஒவ்வொரு வருடமும் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் வீரவிளையாட்டு, அதாவது ‘காளைச்சண்டை’ (Bull Fight) என்பது உலகப் பிரசித்தம். வழக்கமாக நடைபெறும் இந்த மரண விளையாட்டில், ஆக்ரோஷமாக சீறிவரும் காளையை அடக்கி, எப்போதும் வெற்றிவாகை சூடும் ஒரு வாலிபன் கடைசி நேரத்தில் வீரவிளையாட்டில் பங்கேற்கவில்லை என்ற அறிவிப்பு வந்தவுடன் பத்திரிகையாளர்கள் கூட்டம் அவரிடம், ஏன் இந்த திடீர் முடிவு? என்ற கேட்டனர். அதற்கு அவருடைய உடன் பிறந்த சகோதரர் ஒருவர் போட்டியின் போது காளை முட்டி உயிர்துறந்த சம்பவத்தால்தான், வருகின்ற போட்டியில் நான் கலந்து கொள்ள இயலவில்லை என்று பதில் சொன்னார். மைதானத்தில் காளையோடு சண்டைபோடுவதைவிட யாருக்கு வெற்றி?…..யாருக்கு மரணம்?..என்று மனத்துக்குள் நடக்கும் போராட்டமே மேலோங்கி இருக்கிறது. போட்டியில் பங்கேற்கும் ஆறறிவு படைத்த மனிதனுக்கும், ஐந்தறிவு பெற்ற விலங்குக்கும் ஒருவரை ஒருவர் வெல்வதே குறிக்கோள். வெற்றி, தோல்வி, மரணம் என்பதெல்லாம் விலங்குக்குத் தெரியாது, ஒன்று போராடும் அல்லது போராட முடியாமல் தன்னை மாய்த்துக்கொள்ளும். ஆனால் மனிதனோ ஒரு நொடியில் மனம் தளர்ந்து, தன்னம்பிக்கை இழந்து விட்டால் போட்டியிலிருந்து விலகிவிடுகிறான். இப்படித்தான் அந்த வாலிபனும் போட்டி நடக்கும் ஒரு சில வினாடிக்கு முன்பு மனம் மாறிவிட்டான். அன்று பகவான் கீதையில் அருச்சுனனுக்கு வழிகாட்டியதுபோல், அந்த வாலிபனின் திறமையை அறிந்த அவரது ‘கோச்’ என்று சொல்லக்கூடிய(அவரைப் போட்டிக்குத் தயார்படுத்தியவர்) மனக்குழப்பத்தில் இருந்த வீரனுக்கு உற்சாகம் கொடுத்து, போட்டியில் பங்கேற்கச் செய்து காளையை அடக்கி மரணத்தை வென்று வெற்றியைத் தேடித்தந்தார்.

    ஏதோ ஒரு காரணத்தால், சோர்வடைந்த மனதை தக்க சமயத்தில் திசைதிருப்பி உற்சாகமளித்தால், ஆக்கப்பூர்வமான திறமைகள் மனதிலிருந்து வெளிப்படும் என்பதையே இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. ஆக நமது மனதை உற்சாகத்தோடும், உறுதியோடும் பாதுகாத்துக் கொள்ள நாம் பல வகைகளில் முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறோம். மூலைக்கு மூலை வினையகற்றுபவனுக்கு ஆலயம் இருப்பதுபோல, இன்றைக்கு எங்கு நோக்கினும் யோகாசன மையங்கள் ஆக்கிரமித்து விட்டன.  இங்கெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ‘’மனஅமைதிக்கான வழிகள்’’ என்று பெரிய அளவில் விளம்பரம் செய்து வியாபாரமும் செய்கிறார்கள். யோகசன மையங்கள் இன்று வாழ்வில் முக்கியத்துவம் பெற்று மனதையும் உடலையும் பாதுகாக்க வழிசொல்வது அவசியமாகிறது. மருத்துவ மனைகளில் உடல்நிலை பரிசோதனை முடிந்த பிறகு, கடைசியாக ‘மனதை அலசி ஆய்வு செய்யும்’ மனநல மருத்துவரின் சான்றிதழும் (psychiatrist certificate) உடல் நல மருத்துவத்துக்கு அவசியமாகி வருகிறது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

    யார் சொன்னாலும், எங்கு தேடினாலும் எண்ணற்ற  புத்தகங்களைப் புரட்டினாலும், முடிவாக அனைத்தும் ஒரே ஒரு விஷயத்தைத்தான் வலியுருத்துகிறார்கள். அதாவது மனசஞ்சலங்களை அகற்றுவதற்கு எங்கும் செல்லவேண்டாம், மன அமைதியில்லாமல் இருக்கும் போது உங்கள் இஷ்ட தேவதையை மனதில் இருத்தி அலுவலகத்திலோ, வீட்டில் தனியாக இருக்கும் போதோ அல்லது அமைதியான ஏதோவதொரு இடத்தில் அமர்ந்து ஒரு பத்து நிமிட நேரம் அமைதி காத்து தியானம் செய்யுங்கள் போதும் என்பதே இதன் ஒட்டுமொத்த சாராம்சம். இதைத்தான் நமது முன்னோர்களும், முனிவர்களும், சித்தர்களும், யோகிகளும் நமக்கு விட்டுச் சென்ற ‘வாழ்க்கை ரகசியம்’ என்று கூடச் சொல்லலாம்.

    தொடரும

    படத்திற்கு நன்றி :

    http://suddhasanmargham.blogspot.in/2012_02_01_archive.html

    Share
  • உங்களுக்கும் வியர்க்கிறதா

     

    தமிழ்த்தேனீ –              

    தொலைக்காட்சிப் நிகழ்ச்சியில் நடிக நடிகையர் நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!  தினசரி, வாராந்தரி, மாதாந்திரப் பத்திரிகைகளில் கிளு கிளு சமாச்சாரங்கள் படித்து மனதைக் கிளுகிளுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!

    ஆங்கிலப் படங்கள் பார்த்து அதில் வரும் கொச்சையான காட்சிகளை , ரசித்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே ,தகப்பன்மார்களே!  செல்போனில் நண்பர் அனுப்பிய கிளுகிளு தொடுப்பை சொடுக்கி நீலப்படம் பார்த்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே தகப்பன்மார்களே!

    நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை தோலுரிக்கிறோம் பேர்வழியே என்று கண்டதையெல்லாம் , காணாததையெல்லாம் கிசுகிசுக்களாகப் பரப்பி வரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் இனிமை காணும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!    உங்களுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைக் கடிதமாகவே இந்தக் கடிதத்தை வரைகிறேன்.

    உங்களுக்கு பருவ வயதை நெருங்கும் பிள்ளைகள், பெண்கள் இருக்கிறார்களா?  அவர்களை இன்னமும் குழந்தைகள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.? சற்றே விழிப்புணர்வு பெறுங்கள்!

    பல வருடங்களுக்கு முன் என் தாயார் கூறியது காதில் ஒலிக்கிறது.

    1. பெண்கள் முதல் படியில் கால் வைக்கும் போதே மிகுந்த கவனத்துடன் கவனத்துடன் வைக்க வேண்டும்.
    2. தவறான அணுகு முறையில் கால் வைத்து உருண்டு விட்டால் கடைசீப் படி வரை அவளால் எழவே முடியாது.

    3. அதே போல் ஆணோ பெண்ணோ அடிப்படை தர்மத்தை மறந்து வேறுபாதையில் சென்றால் பலன்கள் மிகவும் விபரீதமாக இருக்கும்

    4. எப்போதும் தன் நிலை தவறாமை இருபாலருக்கும் நன்மை செய்யும்

    மேற்கண்ட வாசகங்களை இப்போதும் கவனத்தில் வைத்திருக்கிறேன்.

    தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைக்காமையினால் நேர்மையாக இருப்பது பெரிதல்ல . தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தாலும் தவறு செய்யாதவரே நேர்மையாளர்கள், என்று கூறுவார் என் தாயார்.

    ” தீய வழக்கங்கள் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் நீரைப் போன்றது. ஆனால் நேர்மை என்னும் ஒழுக்கம் அதே நீர் பாதாளத்திலிருந்து மலை உச்சியை அடைவதைப் போன்றது. அதற்கு முயற்சி தேவை. கடினமான முயற்சியும் ஒரு விசையும் தேவை. அந்த விசைதான் ஒழுக்கம் , மனோதிடம், என்பார்கள்.”

    இப்போது நடைமுறையில் இருக்கும் காலம் சிறுவர்களுக்கும் ,சிறுமியர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் மோசமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே சற்றே நினைத்துப் பாருங்கள், எத்தனை மணித் துளிகள் உங்களால் உங்கள் பிள்ளைகளோடு செலவிட முடிகிறது? மிகக் குறைவான நேரமே செலவிடமுடிகிறது என்பதை மனதில் உணருங்கள்.

    அந்தக் குறைவான நேரத்தில் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால மேன்மைக்கு திட்டமிடுகிறீர்களா? உங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச உங்களால் முடிகிறதா? அல்லது நீங்கள் பேசுவதை உங்கள் பிள்ளைகள் காதில் வாங்குகின்றார்களா? அப்படியே காதில் வாங்கினாலும் கடைப் பிடிக்கிறார்களா? எப்படி அறிந்து கொள்வது இவற்றையெல்லாம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இயலாது என்று ஒரு பதிலும் கேட்கிறது.

    நான் காலையில் எழுந்து சமைத்து பள்ளிக்குச் செல்ல பிள்ளைகளுக்கு எடுத்து வைத்து , கணவருக்கு வேண்டியவற்றை செய்து, அவர்களை அனுப்பிவிட்டு மீதமிருக்கும் கடமைகளை முடிக்கவே நேரம் போதவில்லையே என்று வருத்தப் படும் தாய்மார்களே , உங்கள் கஷ்டம் புரிகிறது.

    காலையில் இந்த வாகன நெரிசலில் அலுவலகத்துக்கு சென்று அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு களைத்துப் போய்த் திரும்புகிறோம் நாங்கள் என்று கூறும் உங்கள் குரலும் காதில் விழுகிறது தகப்பன்மார்களே , உங்கள் கஷ்டமும் புரிகிறது.  நாங்களும் உங்கள் வயதில் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தானே உங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கினோம்.  ஆனால் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள் எப்போதும்.

    ஏனென்றால் முடிவில் உங்கள் பிள்ளை அல்லது பெண் எப்படி வளர்ந்திருக்கிறார்கள் என்னும் முடிவை ஆராயும்போது நல்லவிதமாக வளர்ந்திருந்தால் சரி, மாறாக தீய வழிகளில் கவனம் செலுத்தி வழிமாறியிருந்தால்? இந்த வாதங்கள் அனைத்துமே ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களாக மாறும் அல்லவா?

    யாரையும் பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை . உண்மையைச் சொல்கிறேன். உங்கள் பிள்ளைகளைக் கவனியுங்கள்.

    “பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா?
    பேணி வளர்க்க வேணும் தெரியுமா? “    என்று ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

    எங்கள் வாலிப வயதில் இலைமறை காய்மறைவாக இருந்த அத்துணை விஷயங்களும் அம்பலத்துக்கு வந்துவிட்டது இப்போது. தொலைக்காட்சி, இணையம், செல்போன் .எல்லாவற்றிலுமே விரல் நுனியில் உலகம் என்று எல்லாவற்றையும் பார்க்கும் வசதிகள் பெருகிவிட்டன.

    அதனால் பயமாக இருக்கிறது. சரியான நேரத்தில் முறையாக வழிகாட்டி வளர்க்கப்படும் பிள்ளைகளே எதிர்காலத்தில் சரியான பாதையில் வளர்ந்து நல்லவிதமாக வாழ்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

    அலுவலகத்துக்கு போகும் மனைவியையோ, கணவரையோ, அல்லது பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளையோ வேவு பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி நினைத்தாலும் நம்மால் அது இயலாது ,ஆனால் கண் காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

    ஆதரவான, அனுசரணையான, அன்பான கவனிப்பினால் அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு முறையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் பெரியவர்கள்.

     

    1. ஐந்து வயது வரை இளவரசனாக, அல்லது இளவரசியாக வளர்க்க வேண்டும்.

    2. ஐந்து வயதிலிருந்து 12 வயது வரை அடிமையாக வளர்க்க வேண்டும்

    3. 13 வயது முதல் 19 வயது வரை ராஜ குமாரனாக ,அல்லது ராஜ குமாரியாக வளர்க்க வேண்டும்.
    20 வயதிலிருந்து தோழனாக, தோழியாக பழகவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

    ஆனால் அப்போது குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தார்கள். இப்போது ஐந்து வயதுக் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற நம்மால் முடியவில்லை. ஆமாம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, பொது அறிவு வளர்ச்சி போன்றவை முற்காலத்தைவிட அதிகரித்திருக்கிறது. இளம் வயதிலேயே அதிகம் யோசிக்கிறார்கள்,

    அதிகம் தெரிந்து கொள்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களுக்கு இணையாக தெரிந்துகொண்டால்தான் அவர்களைக் கையாள முடியும்.  ஆகவே பழைய காலம் போல் வளர்க்க முடியாது என்னும் நடைமுறை தெரிகிறது இருந்தாலும் இன்னமும் அதிக கவனம் எடுத்துக்கொன்டு அவர்களின் கவனம் வேண்டாத தீய வழக்கங்களை நாடாத அளவுக்கு , அவர்களுக்கு புரியவைத்து, அவர்களுடன் கலந்து பேசி , அவர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.

    இணையத்தில் மேய அவர்களை அனுமதிக்காமல் இருந்தாலோ, செல்போன் போன்ற நவீன கருவிகளை உபயோகிக்க அனுமதி அளிக்காமல் இருந்தாலோ, திரைப்படங்கள் போன்றவற்றை பார்க்க அனுமதிக்காமல் இருந்தாலோ தவிர்த்துவிடலாம் என்னும் குறுகிய மனோபாவத்தை விட்டுவிட்டு.

    எல்லாவற்றுக்கும் அவர்களை அனுமதித்து, அப்படி அனுமதிக்கும்போதே அவற்றிலுள்ள தீயவைகளைச் சுட்டிக் காட்டி அவற்றினால் வரும் கெடுதல்களை எடுத்துச் சொல்லி அவர்களை அதிலிருந்து விலக்கி, இணையம் போன்ற நவீன விஞ்ஞான முன்னேற்றத்தினால் எப்படி நற்பலன்களைப் பெறலாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்களை முன்னேற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம் நாம்.

    பொதுவாக சைக்கிளை குழந்தை ஓட்டினால் உடனே தாய் ஜாக்கிறதை இங்கேயே ஓட்டு ப்ரதான சாலைக்கு செல்லாதே என்று எச்சரிக்கிறாள், இதற்கு காரணம் குழந்தையின் மேலுள்ள அக்கறை ஒருபுறமென்றாலும் அந்தத் தாய்க்கு இருக்கும் பயம் மற்றொரு காரணம்.

    நம் பயத்தையெல்லாம் அந்தப் பிஞ்சு மனதில் ஏற்றக்கூடாது, அப்படி ப்ரதான சாலையில் சைக்கிள் ஓட்டாவிட்டால் அந்தக் குழந்தைக்கு எப்படி சாலை விதிகள், சாலையில் வண்டியோட்டும் முறை, நெளிவு சுளிவுகள் மனதில் பாடமாகும். ஆகவே அனுமதியுங்கள், ஆனால் பாதுகாப்பான முறையை கற்றுக் கொடுங்கள், அதுதான் வாழ்க்கையில் அவர்களை முன்னேற்றும் கருவி.

    இந்த உலகத்தில் இத்தனை தீமைகள் நிறைந்த உலகத்தில்தானே நம் பிள்ளைகள் வாழவேண்டும்? அப்படியானால் இந்த உலகத்தில் வாழ முறையான ,சரியான வழியை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்நாம். இந்தக் கட்டுரை எழுதக் காரணமாயிருந்த ஒரு நிகழ்வை பகிர்ந்துகொள்கிறேன்

    ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றேன், வாயிலில் இருந்து குரல் கொடுத்தேன் எதிர் விளைவு இல்லை ,ஆகவே எப்போது வழக்கமாக செல்லும் நண்பர் வீடுதானே என்று உள்ளே நுழைந்தேன். எதிரே கணிணியில் அந்த நண்பரின் பிள்ளை பள்ளியில் படிக்கும் பிள்ளை தன்னை மறந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.

    அடுத்தவர் கணிணியை எட்டிப் பார்க்கும் வழக்கமில்லாத நான் என் கண்ணைத் திருப்பும் ஒரு வினாடிக்குமுன் என் கண்ணில் பட்ட காட்சி என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. ஆம் அது ஒரு நீலப்படம். நான் வந்தது கூடத் தெரியாமல் அந்தப் பிள்ளை அதிலே மூழ்கியிருக்கிறான். சத்தம் போடாமல் வெளியே வந்தேன்.

    வியர்த்துக் கொட்டியது எனக்கு. எனக்கு ஏன் வியர்க்கிறது என்று எண்ணிப் பார்த்தேன், நம் நாட்டின் ,நம் பாரம்பரியத்தின் நம் வம்சாவழியின் வருங்காலத் தூண்கள் இந்தப் பிள்ளைகள் , அவர்களின் வாழ்க்கை சிதறிவிடுமோ என்கிற பயம் எனக்கு வந்ததால் எனக்கு வியர்த்தது.

    உங்களுக்கும் வியர்க்கிறதா?

     

    Share
  • தமிழார்வம் ‘திரிகடுகம்: தகைமை

     

    இன்னம்பூரான்

    4. தகைமை மூன்று

    தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
    இன்குணத்தார் ஏவின செய்தலும் – நன்குணர்வின்
    நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
    மேன்முறை யாளர் தொழில்.

    4.1. நமது மூதாதையரின் பேரும், புகழும், குணாதிசயங்களும் நீடூழி நிலைத்திருப்பதற்கு நாம் கடமை பட்டிருக்கிறோம். அதற்கு சுயகட்டுப்பாட்டுடன் இயங்கும் நல்லொழுக்கம் (தகைமை) வழி வகுக்கும். அதை கடைப்பிடிப்போமாக.  அழிவிலா கீர்த்தியுடைய நற்குணமுடையோர் இனிமையாக பேசுவார்கள். அவர்கள் இட்ட பணியை செய்வது நன்மை பயக்கும். நான்கு வேதங்களின் அறிவுரை படி நடக்கவேண்டும். இது எல்லாம் மேலோர்களின் பண்பு.  இன்குணத்தாருக்கு ‘அழிவிலா கீர்த்தி’ என்ற அடை மொழி, உரை அளிக்கும் பாடம். ‘இன்குணத்தார் ஏவின செய்தலும் ‘ என்பதற்கு, குணஞ் சான்றவர்க்கு ஆவன செய்தல்’ என்பது விருத்தியுரை அளிக்கும் பாடம்.

    4.2. பௌடிகமும், தைத்திரியமும், சாமவேதமும், தலவகாரமும்’ என்று, நச்சினிக்கினியாரை தழுவி கூறும் விருத்தியுரை, அவற்றை இக் காலத்தவர் இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என்பர் என்று விளக்குகிறது.  உரையாசிரியர்  அக்காலத்திலேயே யசுர், சாம, அதர்வணம் என்று தான் கூறியிருக்கிறார். அதர்வணத்தை, விருத்தியுரை, தலவகாரம் என்று சொல்வது வியப்பை அளிக்கிறது. அது சாமவேதத்தின் ஒரு கூறு என்றும்  எசுர், சாமவேதம் என்ற   பெயர்கள் வால்மீகியார் காலத்திலேயே வழக்கில் இருந்தன என்றும் பேராசிரியர் தி.வே. கோபாலையர் அவர்களும் கூறியிருக்கிறார். திருமங்கையாழ்வார்   அருளிய   பெரிய   திருமொழியிலும்   ‘…சந்தோகா,பௌழியா, தைத்திரியா, சாம   வேதியனே,   நெடுமாலே…’ (7-7-3)   என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடும் பண்டை வேதப் பெயர்கள்  வழங்குகின்றன என்பதையும் சுட்டிய ‘தமிழ்க்கடல்’ அவர்கள், ‘… இராமனை   முதன்முறை   கண்டு   தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அநுமன்   கூற்றினைச்   செவிமடுத்த   இராமன்   இவன் இருக்கு, எசுர்,சாமவேதம்    என்ற   வேதங்களில்   பயிற்சியுடையனாதல்   வேண்டும்.அதனால்தான் இவன் பேச்சு   வணக்கமும்   தொடர்ச்சியும்   இனிமையும் உடையதாய் உள்ளது என்று   இலக்குவனிடம்   குறிப்பிட்டதாக  வான்மீகி குறிப்பிடுகிறார். இருக்கு, எசுர், சாமவேதம் என்ற   பெயர்கள் வான்மீகியார் காலத்திலேயே   வழக்கில்   இருந்தன…’ என்றும் எழுதியுள்ளார்.

    5.3. ‘தண்குணங் குன்றாத் தகைமை’ குடும்பம், குலம், மொழி, தேசாபிமானம், மனித நேயம் ஆகிய பல படிநிலைகளில் இயங்குகிறது என்று நான் கருதுகிறேன். அதன் பொருட்டு அதை சமுதாயத்துக்கே நிவாரணம் அளிக்கும் ஒளஷதம் என்றால் மிகையல்ல. ‘இன்குணத்தார் ஏவின செய்தல்’ அவர்கள் இட்ட பணியாக இருந்தாலும், அவர்களுக்கு ஆவன செய்வதாக இருந்தால், நன்மை தான் பயக்கும். காழ்ப்புணர்ச்சியும், இனபேதமும், தன்னலமும் மேலாண்மை செய்யும் தற்காலத்தில் இன்குணம் அரிய மருந்து என்பதில் ஐயமேதுமில்லை. வேத அத்யயனம் குறைந்து விட்டது. வேத அறிவுரைகளை பொறுப்புடன் எடுத்துக்கூறும் விற்பன்னர்கள் மிகவும் குறைந்து விட்டனர். அதை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன் நல்லாதனாரின் திரிகடுகம் படிப்பது மேல்.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    07 11 2012

    உசாத்துணை:

    திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf

    தமிழ் இணையக் கல்விக்கழகம்

    திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

    தி.வே. கோபாலையர்:http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=11&pno=5

     

    சித்திரத்திற்கு நன்றி:

    http://www.uyirmmai.com/Images/ContentImages/Uyirosai/uyirosai-23/namu1.jpg

     

    Share
  • he Science of Stock Market Investment – Practical Guide to Intelligent Investors

    பிரபு

    பங்குச் சந்தை முதலீடு பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன்ன. எல்லாப் புத்தகமும் தன்னளவில் ஒரு அடிப்படைக் கோணத்தை நமக்கு ஊட்டுகின்றது. சில புத்தகங்கள் அவற்றில் சொல்லியிருக்கிற விஷயத்தின் ஸ்திரத்தன்மை காரணமாக காலத்தை வென்று நீடித்து நிலைத்து விடுகின்றன. சில புத்தகங்கள் செய்தித்தாளைப் போல நாளைக்கு பழசாகிப் போவதும் உண்டு. காலத்தைக் கடந்து நிற்கிற புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படையான ஒரு அம்சம் இருக்கும். அது வாசிக்கிற வாசகர் மனதில் சிந்தனை மாற்றத்தை உண்டுபண்ணுவது. அல்லது ஒரு குறிப்பிட்ட சங்கதியை நோக்கி அணுகும் பார்வையை மாற்றுவது. சரியான பார்வையில் நோக்குமாறு பார்க்கத் தூண்டுவது.

    அப்படியாகப்பட்ட புத்தகங்கள் நிறையவே உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க வாசகர்களுக்காக எழுதப்பட்டு, வேறு வழியில்லாமல் இந்திய வாசகர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்டவை. பங்கு முதலீட்டின் அடிப்படை சாராம்சங்களை இந்திய பங்குச் சந்தை தொடர்பான உதாரணங்களோடு வெளிக்கொணர்ந்த புத்தகங்கள் வெகு சிலவாகவே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு புத்தகம்தான் The Science of Stock Market Investment – Practical Guide to Intelligent Investors by Chellamuthu Kuppusamy (www.amazon.com/dp/B009XUI1X6)

    பொதுவாக ஒரு துறை சார்ந்த நூல்கள் அது தொடர்பான டெக்னிகல் சொற்களைக் கூடுதலாகக் கொண்டிருக்கும். படிக்கிற எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கும் என்ற நினைப்பில் அப்படியான புத்தகங்களை எழுதிகிறார்களா அல்லது நாங்கள்தான் வல்லுனர் கூட்டம், படிக்கிற நீங்களெல்லாம் பாமரர்கள், என்ன வேண்டுமானாலும் எங்களைச் சார்ந்துதான் நீங்கள் இருந்தாக வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்களா தெரியவில்லை. செல்லமுத்து குப்புசாமியின் The Science of Stock Market Investment மிகவும் அடிப்படையான விஷயங்களை, ஆழமாகவும், எளிமையாகவும் விளக்குகிறது.

    பங்குச் சந்தை என்பது பெரிய கம்ப சூத்திரமல்ல. அதே நேரத்தில் அது சூதாட்டமுமல்ல. தொடர்ச்சியாக தன்னை மேம்படுத்திக்கொள்ள முனையும் ஒருவனால் முழுமையான முதலீட்டாளர் ஆக முடியும். நாம் முதலில் முதலிட வேண்டியது நமது அறிவை. பிறகு கொஞ்ச நேரத்தை. அதற்குப் பிறகுதான் பணத்தை என்று இந்தப் புத்தகம் வலியிறுத்துகிறது. (ஆனால் அநேகம் பேர் இந்த வரிசையில் கடைசியில் தொடங்குகிறார்கள். முதல் படியைத் தொடுவதேயில்லை) அறிவை முதலீடு செய்வதென்று முடிவெடுத்தால் அதற்கான முக்கியமான படியாகவும் இந்தப் புத்தகம் அமையும்.

    முதலில் கதை சொல்வதைப் போலத்தான் புத்தகம் ஆரம்பிக்கிறது, கடற்கரையில் காலை நனைப்பதைப் போல. பிறகு போகப் போக நமக்கே தெரியாமல் உள்ளே இழுத்துச் சென்று மூழ்கி முத்தெடுப்பது போன்ற உணர்வு உண்டாகிறது. முத்துக் குளிப்பதும், மூச்சையடக்குவதும் இவ்வளவுதானா என ஆகி விடுகிறது. கம்பெனி என்றால் என்ன, பங்குதாரர்கள் யார், மேனேஜ்மெண்ட் என்ன, டைரக்டர்களின் பாத்திரம் என்ன, பங்குச் சந்தைகள் எனப்படும் ஸ்டாக் எக்சேஞ்ச்களில் என்ன செய்கின்றன, ஷேர் புரோக்கர்கள் யார், அவர்கள் நம்மைப் பயன்படுத்திக்கொள்ளாமல் நாம் அவர்களை எப்படிப் பயன்படுத்துவது,  சென்செக்ஸ்-நிஃப்டி என்றெல்லாம் பேசுகிறார்களே அது என்ன, அதில் என்னென்ன கம்பெனிகள் இருக்கின்றன, அதை ஒரு அளவுகோலாகக் கொண்டு பொதுவான பொருளாதாரத்தையும், ஒரு தனி நபரின் முதலீட்டு வெற்றியையும் ஒப்பிடலாமா, அப்படி ஒப்பிட்டால் எப்படி நம்மை நாமே அளந்து கொள்வது, IPO எனப்படும் பிரைமரி மார்க்கெட் – அதில் கவனிக்க வேண்டிய பல தரப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது புத்தகம்.

    பிறகு முதலீட்டாளர்களுக்கும், சூதாடிகளுக்குமான வேறுபாட்டைப் புலப்படுத்துகிறது. தன்னை முதலீட்டாளர் என நினைத்துக்கொண்டு உண்மையில் சூதாட்டம் செய்துகொண்டிருக்கும் ஆட்களை இது எச்சரிக்கிறது. சூதாடியாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அப்படி இருப்பதே தெரியாமல் இருப்பதில் உள்ள சிக்கலை உணர்த்துக்கிறது. யாரோ சொன்னார்கள், பத்திரிக்கையில் எழுதினார்கள், பிசினஸ் நியூஸ் சேனலில் ஆலோசனை கூறினார்கள் என்றெல்லாம் முதலீடு செய்யாமல் சுயமாக ஆராய்ந்து குறை நிறைகளை சீர் தூக்கிப் பார்த்த பின் முதலீடு செய்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஒரு மனிதன் தான் எடுக்கும் முடிவுகளுக்கும், தனது செயல்களுக்கு தானே பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவது எல்லா இடத்திலும் நல்லது. பங்குச் சந்தையில் கூடுதலாக நல்லது. அதே போல அளவுக்கு அதிகமான ஆசையை வளர்த்து, பங்குச் சந்தையில் ராவோடு ராவாக கோடீஸ்வரர் ஆகி விடலாம் என நம்பும் மடத்தனத்தையும் எச்சரிக்கிறார் செல்லமுத்து குப்புசாமி. அளவான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு இயங்குவோர் நிபுணர்கள் என தம்மை அழைத்துக்கொள்வோரை விட கூடுதலான வெற்றியை ஈட்ட முடியும் என்பதைப் புரிய வைக்கிறார்.

    உலகமே போற்றிய விஞ்ஞானி ஐசக் நியூட்டனே பங்கு விலை அதிகமாக இருக்கிறடு என்று முதலீடு செய்வதத் தவிர்த்திருக்கிறார். மார்க்கெட் ஏறிக்கொண்டே போயிருக்கிறது. அவர் வேண்டாம் என நினைத்த விலையை விட அதிக விலைக்கு பிற்பாடு வாங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் ஒரேயடியாகச் சரிந்து கிட்டத்தட்ட போண்டியாகி விட்டாராம். நியூட்டனுக்கே அந்த நிலையென்றால் யோசிக்க வேண்டும் என்கிறார் செல்லமுத்து. பங்கு முதலீடு முழுக்க முழுக்க கலையுமில்லை, முழுக்க முழுக்க வாய்ப்படுகளால் அடக்கி விட முடிகிற விஞ்ஞானமும் இல்லை. இவை இரண்டும் மானுடமும், உளவியலும் கலந்த கலவை.

    அடுத்தபடியாக, பணவீக்கம், வட்டி வீதம், இவை இரண்டும் பங்குச் சந்தை முதலீட்டையும் ஏனைய பிற முதலீடுகளையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு அத்தியாயம் வருகிறது. பணத்தின் ஆற்றல், காலத்தின் ஆற்றல் மற்றும் இவை இரண்டும் சேர்ந்தால் உண்டாகும் சூப்பர் பவர் பற்றிப் பேசுகிறது. உதாரணங்களோடு தெளிவாக விளக்குகிறது. ஐன்ஸ்டீன் power of compounding ஐ எட்டாவது அதிசயம் என்று சொன்னதை நினைவூட்டுகிறது. அதன் பின்னர், இலாபம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ நஷ்டம் அடையக் கூடாது என்பதை ஒரு அத்தியாயம் வலியுறுத்துகிறது.

    இப்படி விளையாட்டு விதி முறைகளைப் பற்றிச் சொல்லி விட்டு, விளையாடுவதற்குக் கற்றுக்கொடுக்கும் அத்தியாயங்கள் வருகின்றன. பங்குகளை எப்படி ஆராய்வது, ஒரு பிசினசை எப்படி மதிப்பீடு செய்வது, பேலன்ஸ் ஷீட், லாப நட்டக் கணக்கு, பங்கு வல்லுனர்கள் உபயோகப்படுத்தும் பல நம்பர்கள், குறியீடுகள், அளவிகள், அவற்றில் அடங்கியிருக்கும் சூட்சுமங்கள் எல்லாவற்றையும் அலசுகிறது. பிறகு பல்வேறு முதலீட்டு அணுகுமுறைகளை அலசுகிறது. Value investor Vs growth investor, அடிப்படை ஆயுவு Vs டெக்னிகல் ஆய்வு, டிவிடெண்ட்கள், போனஸ், ஸ்பிலிட், உரிமைப் பங்குகள் முதலிய கார்ப்பரேட் நடவடிக்கைகளை நமக்குப் புரிய வைக்கிறது.

    அதன் பிறகு எனக்குப் பிடித்த ஒரு அத்தியாயம் வருகிறது. ராகுல் திராவிட் பேட்டிங் ஸ்டைலை ஆராய்ந்து அதை எப்படி பங்கு முதலீட்டுக்கு முன் மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வெகு இலாவகமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உலகின் மிக வெற்றிகரமான முதலீட்டாளர் வாரன் பஃபட் உபயோகித்த ஆர்பிட்ரேஜ் அணுகுமுறை விளக்கப்படுகிறது. வாரன் பஃபட் மற்றும் அவரது குருநாதர் பெஞ்சமின் கிரஹாம் பயன்படுத்திய, பயன்படுத்தச் சொல்லி மற்றவர்களை ஊக்கப்படுத்திய உத்திகளை எல்லாம் விளக்குகிறார் செல்லமுத்து குப்புசாமி. நல்ல கம்பெனியாக இருந்தாலும் மோசமான மேனேஞ்மெண்ட் இருந்தால் ஆபத்து என்பதற்காக ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியிருக்கிறார். பெரும்பாலான முதலீட்டாளர்கள் செய்யக்கூடிய அடிப்படைத் தவறுகளைப் பட்டியலிடுகிறார். வாரன் பஃபட் கூட ஒரு தருணத்தில் தனது முதலீட்டு வாழ்வில் செய்த அபத்தமான தவறுகளைப் பட்டியலிட்டிருந்தார். தான் செய்த தவறுகளில் இருந்து மட்டுமல்லாமல், பிறரது தவறுகளில் இருந்து பாடம் கற்பதற்கு இந்த அத்தியாயம் உதவும். இன்னும் சில அத்த்தியாயங்களின் பெயர்கள் நான் இங்கே குறிப்பிடவில்லை. அதற்காக அவை முக்கியமில்லை என்றல்ல என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.

    குறிப்பாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு அத்தியாயம் Behavioral Finance தொடர்பானது. பலரும் அலட்சியப்படுத்தும் ஒரு துறை. இதைப் பற்றியே பல ஆயுவுகளை வெளியிட முடியும் என்று சொல்லும் நூலாசிரியர், பங்கு முதலீட்டில் இது செலுத்தும் ஆதிக்கம், அது எவ்வாறு முடிவுகளைத் தீர்மானிக்கிறது என்பதை விளக்குகிறார். பிறகு தன்னைத் தானே தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். கூடவே பொருளாரத் துறையின் பிற சங்கதிகளைப் பற்றி ஒரு அத்தியாயத்தில் பேசுகிறார். அது எவ்வாறு பங்கு முதலீட்டைப் பாதிக்கிறது என்பதை விளக்குகிறார். முடிவாக மேலதிகத் தகவல்களை எப்படிப் பெறுவது, ஏதேவது பிரச்சினை என்றால் எங்கே முறையிடுவது, விதிமுறைகள், நெறிமுறைகள் பற்றியெல்லாம் விளக்குகி ஆல் த பெஸ்ட் சொல்கிறார்.

    The Science of Stock Market Investment – Practical Guide to Intelligent Investors என்ற இந்தப் புத்தகம் அச்சு வடிவில் வெளிவரவில்லை. அமேசான்.காமில் (www.amazon.com/dp/B009XUI1X6) மின் புத்தகமாக வாங்கிக் கொள்ள்ளலாம். வாங்கிய பின் Kindle ரீடர் இருந்தால் அதன் மூலம் வாசிக்கலாம். இல்லையென்றால் Kindle for PC  என்ற இலவச சாஃப்ட்வேரை http://www.amazon.com/gp/feature.html/ref=sv_kstore_1?ie=UTF8&docId=1000493771 இல் இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணிக்கொண்டு நமது கம்ப்யூட்டரிலேயே வாசிக்கலாம்.

    மிகவும் நல்ல முயற்சி. ஊக்குவிக்கப்பட வேண்டியது. ஏனென்றால், இது தியரியாக வறட்சியான விஷயங்களைப் பற்றி மட்டும் பேசாமல் நடைமுறை உதாரணங்களைக் கொண்டிருக்கிறது. படிக்கிற விஷயத்தை இலகுவாக செயல்படுத்துவதில் சிக்கலில்லாத அருமையான நூல்.
    ****

    Share
  • தேர்ப்பாகன் மகன்…(பாகம்-3)

     

    ராமஸ்வாமி ஸம்பத்

    “அன்றிலிருந்து எங்கள் நட்பு மேலும் மேலும் மெருகடைந்து நகமும் சதையும் போல் இணைபிரியாதவர் ஆனோம். எம் நட்பின் நெருக்கம் என்னை அவன் அந்தப்புரத்திற்குள்ளும் தங்கு தடையின்றி செல்லக்கூடிய உரிமையை அளித்தது. அஸ்தினாபுரத்தின் வருங்கால மஹாராணி எனக்கருதப்பட்ட இளவரசி பானுமதியுடன் நான் சொக்கட்டான் ஆடுவதையும் துரியன் வெகுவாக ரசித்தான்.

    “அவ்வாறு ஒருநாள் அவளுடன் தனிமையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அங்கு வந்த தன் நாயகனைக் கண்டு பானுமதி மரியாதை நிமித்தம் எழுந்து நின்றாள். அதை அறியாத நான் ‘ஓஹோ, தோல்விக்குப் பயந்து ஓட நினைக்கிறாயா?’என்று அவளைப் பிடித்து நிறுத்த முயன்றபோது அவள் மேகலாபரணம் சிதைந்து அதில் உள்ள முத்துக்கள் நாலாபுறமும் சிதறி ஓடின. அப்போது துரியன் மலர்ந்த முகத்துடன் என்னை நோக்கி ‘கர்ணா, முத்துக்களை எடுக்கவா கோர்க்கவா?’ என்றான். கண்ணா, இப்போது சொல்லுங்கள். எந்த கணவன், அதுவும் இந்நாட்டின் அரசனாகப் போகிறவன், இப்படி கல்மஷம் இல்லாமல் நட்பைப் போற்றி நடந்துகொள்வான்? இந்த நிகழ்வு ஒன்று போதாதா எங்கள் நட்பின் ஆழத்தினைப் புரிந்துகொள்ள?”

    “நன்று கர்ணா, உண்மை நட்பின் இலக்கணத்தை உங்கள் இருவரின் தோழமை பறைசாற்றுகிறது. எனினும் அறம் பெரிதா நட்பு பெரிதா எனக்கேட்பின் தர்மத்திற்கே முதலிடம் கொடுக்கப் படவேண்டும். அதனையே உன்னிடம் யாசிக்கிறேன்,” என்றான் கண்ணன்.

    சினத்தில் கர்ணன் முகம் சிவந்தது. “நீங்கள் ’பாண்டவ பக்‌ஷபாதி’ என்பது அனைவரும் அறிந்ததல்லவா? அவ்வைவருக்காகத்தானே என்னை துரியனிடமிருந்து பிரிக்க முயலுகிறீர்கள்?”

    ”இல்லை கர்ணா! உன்னை உரியவர்களிடம் சேர்க்கத்தான் துடிக்கிறேன்.”

    கண்ணனின் கூற்று கர்ணனுக்கு விளங்கவில்லை. “என்ன, எனக்கு உரியவரா? யார் அவர்கள்? என்னை உயிருக்கும் மேல் நேசிக்கும் துரியோதனன்தான் எனக்கு உரியவன். இந்தத் தேரோட்டி மகனான ராதேயனுக்கு வேறு எவரும்  உரியவர்கள் இல்லை,” என்றான்.

    “அப்படி சொல்லாதே கர்ணா. உன் பிறப்பின் ரகசியம் உனக்குத் தெரியாது. அது தெரிந்தால் நீ இப்படி அதர்மத்திற்கு அடிவருடமாட்டாய்.”

    “என் பிறப்பின் ரகசியத்தை நீங்கள் அறிந்திருந்தால் அதைத்தெரிந்து கொள்ள எனக்கும் ஆவல்தான். ஆனால் அதற்கும் துரியனுடன் என் நட்புக்கும் என்ன இணைப்பு?”

    கண்ணன் மிக நிதானமாகப் பேச ஆரம்பித்தான்.

    “கர்ணா! உனக்கு மிக்க அதிர்ச்சி அளிக்கப்போகும் அந்த ரகசியத்தை இப்போது வெளிப்படுத்துகிறேன். நீ மூத்த பாண்டவன். மஹாராணி குந்திக்கும் கதிரவனுக்கும் பிறந்தவன். நீ பாண்டவர்களுடன் இருக்கவேண்டியவன். ஆனால் நீயோ அதர்மத்தின் உருவான துரியனின் முகாமில் இருக்கிறாய்.”

    கண்ணனின் இக்கூற்றினைக் கேட்ட கர்ணனுக்குத் தொண்டையில் ஒரு அடைப்பு ஏற்பட்டதுபோல் இருந்தது. பூமி தன் கால்களைவிட்டு நழுவதுபோல் தோன்றியது. தன் முன் ப்ரபஞ்சமே சுற்றுவது போல உணர்ந்தான். ‘நான் குந்தி புத்திரனா?…..நான் குந்தி புத்திரனா?’ என்ற கேள்விக்கணைகள் அவன் உள்ளத்தை துளைக்கத் தொடங்கின.

    “கண்ணா, என்னைக் குழப்புவதற்காக தாங்கள் பிரயோகிக்கும் மாயை இது என நினைக்கிறேன். இதற்கு என்ன ஆதாரம்?” என்றான்.

    “இதற்கான ஆதாரத்தை நாளை காலை என் அத்தையே உன் ஜன்ம விருத்தாந்தத்தைக் கூறி உன் முன் வைப்பாள். நான் சொல்வதை நம்பு. இவ்வுண்மை சூரியனுக்கும் மஹாராணி குந்திக்கும் எனக்கும் விதுரர் மற்றும் பீஷ்மருக்கும் மட்டுமே தெரியும். பாண்டவர்களுக்குக்கூட இது தெரியாது. தெரிந்தால் தர்மபுத்திரன் உன்னையே அஸ்தினாபுரத்து அரசனாக்கி விடுவான். ஐவருக்கு ஊசிமுனை அளவு நிலம் கூட கொடுக்கமாட்டேன் என்று கொக்கரித்த துரியனும் உன்னை அஸ்தினாபுர அரசனாக்க அங்கிகாரம் அளித்து விடுவான். நாளை நடக்க இருக்கும் குருக்‌ஷேத்திரப் போரும் தொலைந்துவிடும். அப்படிப்பட்ட அமைதி நிலவவேண்டும் என்பதே எனது ஆவல். அதற்கு உன் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்” என்று கண்ணன் அடுக்கிக்கொண்டே போனான்.

    “இந்த உண்மையை இத்தனை நாள் ஏன் மறைத்து வைத்தீர்? என்னை எல்லோரும் தேரோட்டி மகன் என்று இழிவாக அழைத்த காலத்தில் நீங்கள் ஏன் அதனை மறுக்க முற்படவில்லை? இப்போது என்னை ஏன் குழப்பத்தில் ஆழ்த்துகிறீர்கள்?”

    “குழப்பம் தேவையில்லை கர்ணா. உண்மையை என்றும் மறைக்க முடியாது. எவ்வாறாகிலும் அதற்குரிய நேரத்தில் தக்க சூழ்நிலையில் அது வெளிப்பட்டே ஆகவேண்டும். அத்தருணம் வந்துவிட்டது இப்போது.”

    “விதி சதி செய்து என்னை என் சகோதரர்களுக்கு எதிராக போரிட வைத்துள்ளதே! ’அண்மையில் வெளிப்பட்ட உடன்பிறப்புகளா அல்லது நெடுநாளைய உற்ற நண்பனா?’ என்ற கேள்வியால் நான் ஒரு  தர்ம சங்கடத்தில் ஆழ்த்தப் பட்டுள்ளேனே. கண்ணா, இது என்ன கொடுமை? நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? இந்த ரகசியத்தை என்னிடம் ஏன் கூறினீர்கள்?”

    “நீ ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், நாம் எப்பாடுபட்டும் நலிந்த தர்மத்தை நிலைநாட்டவேண்டும். இதுதான் என் எண்ணம். அவ்வெண்ணம்  வெற்றி பெறவே இந்த முயற்சி. அது பலிப்பதற்கு உன் ஒத்துழைப்பு தேவை கர்ணா.”

    கண்ணனின் இக்கூற்று மூத்த கெளந்தேயனை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் விரைவில் தெளிவு பெற்றான். சில நொடிகள் அமைதியாக இருந்தபின் கர்ணன் பேசலுற்றான்.

     (தொடரும்)

    படத்திற்கு நன்றி:

    http://www.tamilhindu.com/2010/06/chariot-great-hindu-cultural-symbol/

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 44 (05.11.12)

    மலர் சபா
     
    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை
     
     
    விழா முடிந்தபின் மாதவி அலங்காரக்கோலம் பூண்டு கோவலனுடன் கூடியும் ஊடியும் இருத்தல்
     
     
    விண்ணவரும் வந்திருந்து
    கண்டு களித்திருந்த
    இந்திரவிழாவும்
    மாதவியின் ஆடலும் கோலமும்
    இனிதே நிறைவேறின.
     
     
    பலரும் கண்டு மகிழ்ந்திருந்த
    தன் ஆடல் அழகை, கோலத்தை
    தொடர்ந்தே இராமல்
    சடுதியில் முடித்தனள் மாதவி.
     
    இதன் காரணமாய்
    ஊடல் கொண்டவன் போல்
    கோவலன் அவளுடன் பேசுவது தவிர்த்தனன்.
     
     
    அவனை மகிழ்வித்து
    ஊடல் நீங்க வேண்டி
    அலங்காரக் கோலங்கள் பலவும்
    புனையலானாள் மாதவி.
     
     
    மாதவி நீராடிய முறை
     
     
    பத்துவகை மருந்து மணப்பொருட்கள்
    ஐந்து வகை நறுமணப் பொருட்கள்
    முப்பத்தியிரண்டு வகை நீராடு மணப்பொருட்கள்
    இவையனைத்தும் ஊறிய
    நறுமண நன்னீரிலே
    வாசநெய் பூசிய
    மணம் கமழும் கரிய கூந்தல்
    நலமே பெற்றிட மஞ்சள் நீராடினாள்.
     
     
    கூந்தலுக்குக் கத்தூரி
     
    நீராடிய பின்
    மண அகிற்புகையால் கூந்தல் உலர்த்தி
    ஐந்து பகுதியாய் அதைப் பிரித்துக்
    கொழுவிய கத்தூரிக் குழம்பது ஊட்டினாள்.
     
     
    கால்விரல் அணிகள்
     
     
    செம்பஞ்சுக் குழம்பு பூசிய
    அழகிய சிவந்த சிறிய அடிகளில்
    நன்மை பொருந்திய மென் விரல்களில்
    காலாழி, மகரவாய் மோதிரம், பீலி
    அணிந்திட்டாள்.
     
     
    பாதத்துக்கான அணிகள்
     
     
    காலுக்குப் பொருத்தமான
    பரியகம், நூபுரம், பாடகம்,
    சதங்கை, அரியகம்
    முதலான
    அணிகலன்களை அணிந்திட்டாள்.
     
     
    தொடை அணி
     
    திரள்தொடைப் பகுதியில்
    குறங்குசெறி எனும்
    அணிகலன் அணிந்திட்டாள்.
     
     
    இடை அணி
     
     
    அளவில் பெரிய
    முத்துகள் முப்பத்தியிரண்டால்
    கோவையாகத் தொடுக்கப்பட்ட
    விரிசிகை எனும் அணியைத்
    தன் இடையை அலங்கரித்த
    பூவேலைப்பாடு செய்த
    நீலப்பட்டாடையின் மீது
    மேகலையென அணிந்திட்டாள்.
     
     
    தோள் அணி
     
     
    கண்டவர் காமமுற வைக்கும்
    அழகிய கண்டிகை எனும்
    தூய மணிகள் சேர்த்துக் கோர்த்த
    முத்துவளையைத்
    தம் தோளுக்கு அணியாய்
    அணிந்திட்டாள்.
     
     
    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 74 – 90
     
    படத்துக்கு நன்றி:

    http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=section&layout=blog&id=13&Itemid=59

    Share
  • சிங்கை கொலு & அன்னை நீலாயதாக்ஷி ஊஞ்சல் 2012

     

    நாகை வை. ராமஸ்வாமி

    அனைத்து உலக  ஹிந்துக்கள்  கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு வாய்ந்த நவராத்திரியில்  அன்னை தேவி     துர்கை, லக்ஷ்மி,  சரஸ்வதி ஆகிய சக்திகளாகவும்  பத்தாவது நாளில், விஜயதசமியில்,    வெற்றி தேவியாகவும்   வணங்கப்படுகிறாள்.     

    எங்கள் இல்லத்தில்  ( நாங்கள் எங்கு வசித்தாலும், மும்பை முதல், பங்களூர், தற்சமயம் சிங்கப்பூர் ) பொம்மைக் கொலுவுடன்,  எங்கள் ஊர் நாகப்பட்டினம் அன்னை நீலாயதாக்ஷி தேவியை ஒரு சிறு ஊஞ்சலில் தோரணம் மலர் மாலைகளால்  அலங்கரித்துப போற்றி உற்றம் சுற்றம் அழைத்து பாடல்கள் பாடி, வரும் சுமங்கலிகளுக்கும கன்னியர்களுக்கும் மங்கலப்பொருட்கள் அளித்து மகிழ்ந்து வருகிறோம். 

      இந்த ஆண்டு சிங்கப்பூரில் எங்கள் இல்ல கொலு, ஊஞ்சல் புகைப்படங்கள் இத்துடன்.    அன்னை நீலாயதாக்ஷி போற்றி நான் எழுதி வரும் பாடல்களில் பத்து தேர்வு செய்து இசை வடிவம் அமைத்து குறுந்தகடாகவும் வெளியிட்டிருக்கிறோம்.  சில கணினி இசைத் தளத்திலும் (தள  முகவரி கீழே).    

     
    Amudame Kumudame
    Neelaayadaakshi Vandhaal
    Navarathna Kreedam
    Ulagaalum Umaiyavale
    Kaatharul Purivai
    Nityam Pooji Devi
    Kaarmegham Pozhindhidum
    Vidamunda Kandan
    Kallam Illaa Vellai Ullam
    Thiruvarul Mevidum
     

    Share
  • திருமூலத் தேவரின் சமத்துவ நெறி

     

    சுலோச்சனா

    யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
    யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

    இந்தப் பூவுலகில் பிறந்து சராசரியான மக்களாக சாதாரண வாழ்க்கை வாழும் எண்ணற்ற மக்களின் பொருட்டும் ஏன் மாக்களின் பொருட்டும் மகான்கள் மண்ணுலகிற்கு வருகை தருகின்றனர்.

    இந்த சராசரியான உயிர்கள் உய்யும் பொருட்டு நல்லுரைகள் பல புகல்கின்றனர். மனித மனத்தினிடையே அவைகள் புகுந்து மந்திரம் போல் வேலை செய்கின்றன.
       
                மனிதன் தான் தள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? கொள்ளவேண்டிய விஷயங்கள் என்ன? என்று தெளிவுபட சிந்தித்து வாழும் வழி முறைகளை வகுத்துக் கொள்ள மகான்கள் அருளும் மந்திரங்கள் போன்ற உபதேசங்கள் பெரிதும் உதவுகின்றன.அப்படிப்பட்ட நூல்களில் ஒன்று திருமூலர் எனும் ரிஷியின் திரு மந்திரம் ஆகும்.

                   பசுக்களின் துயர் தீர்க்க “மூலன்” எனும் இடையனின் உடலில் நுழைந்தவர் அவர்தம் பெயரிலேயே அழைக்கப்பட்டவர்.அவர் அருளிய “திரு மந்திரம்” எனும் நூலில் கையாளப்படாத விஷயங்களே இல்லை எனலாம் இந்த “திரு மந்திரம்” எனும் நூல் ‘சைவத் திருமுறைகளில்’ பத்தாம் திரு முறையாக வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கும் இந்நூல் “ஒன்றே குலமும் ஒருவனே தேவன் என்று உலகம் தழுவிய உயர் கருத்தை எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் பொருந்துமறு கூறும் நூலாகும். நாம் எடுத்துக் கொண்டுள்ள பாடலும் யாவருக்கும் மற்றும் எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தாகவும் இருக்கின்றது. முதல் வரியான,

    யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை எனும் வார்த்தைகளின் உள்ளே பொதிந்துள்ள பொருள் ஆழ்ந்த நோக்குடையதாம்.

              ‘பார்க்கும் இடம் எங்கனும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை யாவரும் வழிபட வேண்டும் என்பது பொருள், இன்னொரு பொருள், உள்ளுறையும் பொருள் யாவராயினும் சரி இறை வழிபாட்டைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என்பது மண்ணாளும் மன்னவனானாலும் சரி மண் குடிசையில் வாழ்பவன் ஆயினும் சரி இரு நிலையில் நிற்பவர்க்கும் நடுநாயகமாக பொதுவில் இருப்பது இறைவழிபாடாகும் மன்னவனின் அபிஷேக ஆராதனைகளும் சரி ஏழை அர்ப்பணிக்கும் ,ஒரு துளசி இலையோ வில்வமோ இரண்டும் ஒரே நிறையாகும். இதன் மூலம் சமத்துவம் எனும்  தத்துவத்தை புரிந்து கொள்ள முடிகின்றது.

                  அடுத்த “யாவர்க்கு ஆயினும் பசுவிற்கோர் கையுறை” என்பது.இவ்விடத்தில் பசு என்பது நமக்கு பால் தரும் பசு என்பதோடு விலங்கினங்களோ – பறவைகளோ அல்லது மனிதனை விட குறைந்த அறிவுள்ள அனைத்து உயிரினங்களுக்குமாக என்று புரிந்து கொள்ளலாம்.

                 ஓர் கைப்பிடி அளவு ஏதோ ஒரு உணவு அளிப்பது என்பது உயர் அறிவுள்ள மனிதனின் கடமையாக நினைக்கின்றார் தவயோகி .தனவந்த்ர் தாராளமாக அனைத்து உயிர்களுக்குமே அளவின்றி அன்னமிட்டு பெரும் பிணியான தீராப் பிணியான பசிப்பிணியை போக்கலாம் எனில் எளியவனான ஏழை தன் கையில் ஓர் பிடி அளவாவது தருமம் செய்வது சாலச் சிறந்ததுதானே. தன்னிலையில் இருந்து குறைந்த அறிவுள்ள ஜீவனுக்கு  கருணை புரிய வேண்டும் என்பது கடமை. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடவில்லையா?” நம் வள்ளல் பெருமானார், இராமலிங்க அடிகளார்.

                       யாவர்க்காயினும் உண்ணும் போது ஓர் கைப்பிடி”

    புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் பிறர் உண்ண தான் உண்ணுதல் வேண்டும்
    பிறர் உடுத்த தான் உடுத்துதல்  வேண்டும்.

    எனும் சம நீதிக் கருத்தை அன்றே கூறிய வரிகள் இவையாகும்.வாழ்வின் அடித்தட்டில் உள்ளவனுக்கான-அவனுக்கும் சாத்தியமாகக் கூடிய எளிதாகக் கடைபிடிக்கக் கூடிய வழியைக் கூறும் வரியாகும். ஒரு நாளைக்கு ஒரே வேளை உண்ணுபவன் கூட தன் முன் வைக்கப்பட்டிருக்கும் உணவில் இருந்து ஒரு கைப்பிடியேனும் பசித்தவனோடு பகிர்ந்து உண்பது என்பது தியாகத்தின் திடத்தையும் சகோதரத்துவத்தையும் ஊட்டுவதாக இருக்கின்றது. இந்த சிந்தனைக்கு இடம் கொடுத்துவிட்டால் உலகில் யாரும் யாருக்கும் “பகை” என்பதே இல்லாத இனிய உல்கமாக அல்லவா மாறுகின்றது.

                                 “யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே”

    இனிய உளவாக இன்னாத கூறல்  இனிய கனி இருக்க காயை சுவைப்பது போன்றது என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர் “பிறர்க்கு” என்கிறார் திரு மூலதேவர் தனக்குச் சுற்றமாகவோ- நட்பாகவோ இல்லாத தன்னோடு சம்பந்தம் இல்லாத ஒருவருக்கு ‘இனிய வாய்ச்சொல் அருளல்., ஒருவருக்கு எவ்வளவு ஆறுதலைத் தரும்! கடுஞ்சொல் யாரிடமும் பேசுதல் கூடாது. என்ற கட்டளை போன்ற நீதியும் இதன் மூலம் அறிகின்றோம்.

                பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்ற பாரதியின் பாடல் நம் நினைவிற்கு வருகிறது. எந்த தானமும் தர்மமும் செய்ய இயலாதவர்கள் கூட, ஆண்டவன் அளித்துள்ள பேசும் திறமையை நல்ல விதமாக பயன்படுத்தி இனிய சொற்களைக் கூறி தளர்ச்சியுற்றவனைக் கூட எழுந்து நின்று செயலாற்றும் திறமையை உண்டு பண்ணும் புனித சேவையைச் செய்யலாமே.

                  உலகெங்கும் நன்னெறிகளும் நன் மணிகளாக நிறைந்து கிடக்கின்றன. அனைத்து மகான்களும் சாதி மதபேதமின்றி நற்சிந்தனைகளை நமக்குத் தருகின்றன. நாம்தான் அவைகளை நமதாக்கிக் கொள்வது மட்டுமன்றி அடுத்த தலைமுறைக்கும், கொண்டு சேர்ப்பது நம் தலையாய் கடமையாகும். இளம் தலைமுறையினருக்கு இதைவிட சிறந்த செல்வம் எதுவாக இருக்கும்.

         திருமூலத் தேவரின் தவ நெறிகள் உலகிற்கே உகந்தது. அதனால் உலகம் முழுவதற்கும் உரியது.

    தட்டச்சு உதவி : திருமதி உமா சண்முகம்

    படத்திற்கு நன்றி :

    http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D

    Share
  • நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [DAWN] வக்கிரக் கோள் வெஸ்டாவைச் சுற்றி விட்டு செரிஸ் குள்ளக் கோள் நோக்கிச் செல்கிறது.

     

                                                                                   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா



    நிலவினில் தடம் வைத்தார்
    நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
    செவ்வாய்க் கோள் ஆராயத்
    தளவுளவி சிலவற்றை
    நாசாவும்
    ஈசாவும் உளவ இறக்கின !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    வால்மீனை விரட்டிச் சென்று
    தூசியைப் பற்றிக்
    காசினியில் இறக்கினார் !
    வக்கிரக் கோள் ஒன்றின்
    மாதிரி மண்ணை
    வையத்தில் இறக்கியது
    ஜப்பான் விண்ணுளவி !
    அயான் எஞ்சினை இயக்கி
    பில்லியன் மைல்கள்
    பயணம் செய்து
    முரண் கோள் வெஸ்டாவை
    முற்றுகை இட்டு
    நாசா விண்ணுளவி ஏகும்
    செரிஸ் குள்ளக் கோள்  நோக்கி,
    சூரிய மண்டலத் தோற்றம்
    ஆராய் வதற்கு !

    +++++++++++

     

    “முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்.  வெஸ்டா வக்கிரக் கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது.  அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”

    சார்லஸ் போல்டன் (NASA Administrator)

    “2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன்.  அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”

    ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

    “புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவைச் சுற்றும் போது ஆராய எத்தனை தணிவாகச் செல்ல முடியுமோ அத்தனைத் தணிவு உயரத்தில் பயணம் செய்ய முயல்கிறோம்.  விண்ணுளைவி வக்கிரக் கோளில் தவறி விழுந்து முறிந்து போனால் நாசா எங்கள் மீது படுகோபம் அடையும்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (University of California, LA)

    “வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம்.  பரிதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.

    அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம்.  பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    “வெஸ்டா, செரிஸ் வக்கிரக் கோள்களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும்.  முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது.  பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    நாசா விண்ணுளவி புலர்ச்சி செரிஸ் முரண் கோள் நோக்கிச் செல்கிறது.

    முதல் விண்வெளிக்  குறிக்கோள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி இரண்டாவது குறிப்பணியைத் துவங்க முரண்கோள் “செரிஸ்”  [Asteroid Ceres] நோக்கி இப்போது [2012 நவம்பர்] சென்று கொண்டிருக்கிறது.    2011 ஜூலை 15 ஆம் தேதி விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண் கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதைச் சுற்ற ஆரம்பித்தது.   ஏறக்குறைய  ஒன்பது மாதங்கள்  புலர்ச்சி வெஸ்டாவை வலம் வந்து பல ஆய்வுத் தகவல் அனுப்பி, 2012 ஆகஸ்டு மாதத்தில் ஈர்ப்பி லிருந்து விடுபட்டு அடுத்த முரண் கோள் செரிஸை நோக்கிச் செல்லத் துவங்கியது.

    2007 செப்டம்பர் 7 ஆம் தேதி விண்வெளியில் ஏவப்பட்ட புலர்ச்சி விண்ணுளவி  2008 ஆகஸ்டில் பூமி, செவ்வாய்க் கோள் கடந்து முரண் கோள்கள் நிரம்பிய வக்கிரக் கோள் வளையத்த நெருங்கி 2011 ஜூலை 15 ஆம் தேதி வெஸ்டா ஈர்ப்பு விசையில் இறங்கி  அதைச் சுற்ற ஆரம்பித்தது.   விண்ணுளவி புலர்ச்சி முரண் கோள்கள் வெஸ்டாவும், செரிஸும் போல சூரினைச் சுற்றி வருகிறது.   சூரியனிலிருந்து பூமி சுமார் 93 மில்லியன் மைல்கள் [150 கி.மீ.] சராசரி தூரத்தில் சூரினைச் சுற்றுகிறது.  இந்த தூரமே [One Astronomical Unit (1 AU)] என்று குறிப்பிடப்  படுகிறது.  இப்போது புலர்ச்சி விண்ணுளவி  வெஸ்டாவை விட்டு விலகி செரிஸ் முரண் கோளை நெருங்க தனிப்பட்ட சூரிய நீள்வட்டச் சுற்று வீதியில் பயணம் செய்கிறது.

    இவ்விதம் புலர்ச்சி விண்ணுளவி பல மில்லியன் மைல்கள் எளிதாய், ஆனால் மெதுவாய்ப் பயணம் செய்ய உந்துசக்தி தருவது அதன் : அயான் எஞ்சின் [Ion Propulsion System].   அதன் உந்துசக்தி வேகம் மணிக்கு 16,300  மைல்கள்.  அதாவது வினாடிக்கு 7.3 கி.மீ.  இப்போது [2012 நவம்பர்]  புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 166 மில்லியன் மைல் [267 மில்லியன் கி.மீ.] தூரத்தில் பயணம் செய்கிறது.   புலர்ச்சிக்குச் செரிஸ் முரண் கோள் 37 மில்லியன் மைல் [59 மில்லியன் கி.மீ.] தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

    நாசா விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண்கோளைச் சுற்றி முடித்தது.

    நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, 2011 ஜூலை 17 ஆம் தேதிமுதன் முதல் முரண் கோள் வளையத்தில் (Asteroid Belt) தடம் வைத்துப் பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்தது.  பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன.  நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.  விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது.  வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன.  ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும்.  2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

     

    2007 செப்டம்பர் 27 ஆம் தேதி புலர்ச்சி விண்ணுளவி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவுகணை முனையிலிருந்து டெல்டா -2 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  10 கி. வாட் மின்னாற்றல் கொண்ட சூரிய சக்தி அயான் எஞ்சின் முடுக்கி மெதுவாகச் சென்று 2011 ஆண்டு ஜூலையில் வெஸ்டா முரண்கோளையும், 2015 இல் செரிஸ் முரண்கோளையும் ஆராயத் திட்டமிடப் பட்டது  2015 இல் அதன் விண்ணுளவு முடியும் போது அது சுமார் 3 பில்லியன் (5 பில்லியன் கி.மீ) தூரம் பயணம் செய்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.  இந்த திட்டத் துக்குச்  செலவாகும் நிதித் தொகை 475 மில்லியன் டாலர்.  பூமியைக் கடந்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி செவ்வாய்க் கோளை அண்டி ‘நெருக்க ஈர்ப்பு வீச்சில்’ (Flyby Gravity Force) வேகம் மிகையாகி வெஸ்டாவை விரைவில் அடையத் திட்டமிடப் பட்டது.

    வக்கிரக் கோள் வெஸ்டா 1807 ஆண்டில் பூதக் கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் இடையே உள்ள முரண்கோள் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெஸ்டாவின் குறுக்கு நீளம் 326 மைல் (525 கி.மீ).  தென்புறத்தில் நேர்ந்த பெருத்த மோதலில் வெஸ்டா துருவப் பகுதியில் சிதைவடைந்து சப்பையான கால்பந்து போல் தோற்றம் அளிக்கிறது.  பூமியிலிருந்து சுமார் 117 மில்லியன் மைல் (188 மில்லியன் கி.மீ.) தூரத்தில் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இந்த விந்தை வரலாறு நிகழ்ந்திருக்கிறது !  திட்டத்தில் அடுத்த சிறப்பு முயற்சி என்ன வென்றால் புலர்ச்சி விண்ணுளவி இத்தனை தூரப் பயண நகர்ச்சிக்கும், திசை திருப்பத்துக்கும் ஒரு புதுவித அயான் எஞ்சினைப் (Solar Electric Ion Engine) பயன் படுத்தியுள்ளது.  ஆரம்பத்தில் புலர்ச்சி 6200 மைல் உயரத்தில் பறந்து வெஸ்டாவின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றியது.  சிறிது சிறிதாகப் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இறுதியில் 120 மைல் (200 கி.மீ) உயரத்தில் வலம் வந்து முரண்கோளின் இயற்கைத் தன்மைகளை 9 மாதங்கள் ஆராயும் திட்டம் உள்ளது

    பூமி போன்ற கோள்கள் முதலில் தோன்றிய போது சிதறிய இந்த வக்கிரக் கோள்கள் பரிதி மண்டலத்தின் தோற்றத்தைத் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  வெஸ்டா, கிரிஸ் முரண்கோள்கள் விஞ்ஞானிகளுக்குப் புதிய படைப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கும்.  புதன், பூமி, வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் உருவான பிறகு சிதறி எஞ்சிய மிச்சத் துணுக்குகள்தான் இந்த வக்கிரக் கோள்கள்.!  முரண்கோள் வெஸ்டாவின் மையத்தில் ஓர் உலோகக் கரு உள்ள தாகவும், அதைச் சுற்றிலும் சிலிகேட் பாறைகள் மூடி இருப்ப தாகவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.  வெஸ்டாவின் மேற்தளம் அடித்தள எரிமலைகள் பீறிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.

     

    முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ்.  அதன் பூதளத்  தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி.  செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ).  ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது.  செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது.

    புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

    புலர்ச்சி வெஸ்டாவை 9 மாதங்கள் சுற்றி வரும்,  பிறகு செரிஸை நெருங்கி குறைந்தது 5 மாதங்கள் சுற்றி வரும். புலர்ச்சி முரண்கோளைத் திசை திருப்பி நகர்த்த 10 கி.வாட் சூரிய சக்தி அயான் எஞ்சின் (Solar Electric Ion Engine) பயன்படுத்தப் படுகிறது.  இதுவரைப் பயன் படுத்திய இரசாயன ராக்கெட்டுகள் போலின்றி அயான் எஞ்சின்கள் துடிப்புத் தள்ளு (Push by Impulse) ஆற்றல் உடையது.  உந்து சக்திக்கு எஞ்சினில் ஸீனான் அயான்கள் (Xenon Ions) வெளியே தள்ளப் படுகின்றன.

     

    பூமியின் பெருவாரியான கடல்நீர் வெள்ளம் பற்பல முரண்கோள்களில் உள்ள பனிப்பாறையிலிருந்து மோதலின் போது பரவிச் சேமிப்பானது என்று சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

    புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் :

    1. வெஸ்டா, செரிஸ் முரண் கோள்களின், மேற்தள அமைப்பு, உட்தள அமைப்பு, திணிவை ஆராய்வது.

    2. முரண் கோள்களின் வடிவளவு, உட்கலவை, உருவத் தோற்றம், நிறையை அறிவது.

    3. மேற்தள ஆய்வு, ஆழ்குழிகளை ஆராய்தல்.

    4. முரண் கோள் வடிவ அமைப்பில் பனிநீர்ச் சேமிப்புத் தேக்கம் பற்றி அறிவது.

    புலர்ச்சி விண்ணுளவி தாதுக்கள், மூலக, மூலக்கூறுகளைக் காணும் கருவிகளைச் சுமந்து செல்கிறது.  2011 ஆகஸ்டு மாதத்தில் புலர்ச்சி வெஸ்டா மீது 120 மைல் உயரத்தில் பறந்து கருவிகள் வேலை செய்யத் துவங்கும்.  பூதள வேறுபாடுகள், சூழ்வெளி அமைப்பு, மலைச் சிகரத் தோற்றங்கள், எரிமலைச் சிதைவுகள், எரிமலைக் குழம்போட்டம் ஆகியவற்றை ஆராயும்.

     



    (தொடரும்)

    ************************
    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, JAXA

     

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html (Plasma Rocket Engines)
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
    11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
    12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand
    By : John Matson (June 11, 2010)
    13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
    14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
    15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
    16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
    17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
    18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
    19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
    20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt (July 19, 2011)
    21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
    22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
    23 BBC News : Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
    24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ? (July 19, 2011)
    25. NASA JPL Site on Dawn : http://dawn.jpl.nasa.gov/mission/trajectory.asp [Dawn Update]
    26 ANew Dawn For NASA’s Asteroid Explorer [October 1, 2012]
    27. http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) [October 17, 2012]
    28. Dawn Update : http://dawn.jpl.nasa.gov/mission/journal_10_31_12.asp [October 31, 2012]

    ++++++++++++++++++
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) (November  3, 2012)

    Share
  • சொக்காய்

     

    திவாகர்

    ஹல்லோ.. எங்க இருக்கீங்க..

    டிரைவிங் ல இருக்கேன்

    சரி சரி, வண்டியை கொஞ்சம்  ஓரமா நிறுத்திட்டு எனக்கு போன் பண்ணுங்க.. பார்த்து.. போன  தடவை மாதிரி நோ பார்க்கிங்’ல நிறுத்திட்டு போலீஸ்காரன்கிட்டே திட்டும் வாங்கிண்டு, காசையும் அழுதுட்டு வந்தீங்களே.. அது மாதிரி இல்லாம ஓரமா பார்த்து நிறுத்தி போன் போடுங்க..

    சரி, அதையெல்லாம்  இன்னுமா ஞாபகம் வெச்சிருக்கே.. முதல்ல போனை வை.. நான் பேசறேன்..
    …………………………………………………………….

    ஹெல்லோ.. சொல்லு

    ஒழுங்கா பார்க் பண்ணிங்களா.,. உங்களுக்கென்னு யாராவது  போலீஸ்காரன் வந்து மாட்டுவான்.. தண்டம் அழுவீங்க..

    இதோ பார்.. நம்ம ரோட்’ல பார்க்கிங் கிடைக்கறது கஷ்டம்.. எப்பவோ ஒரே ஒரு தடவை அப்படி போலீஸ்கிட்டே மாட்டிட்டேனு இப்படி சொல்லி சொல்லிக் காட்டாதே..

    யார் சொல்லிக் காட்டறா.. ஒரு தடவை மாட்டினது வாஸ்தவம்தானே.. ஜாக்கிரதை’ன்னு சொன்னேன்.. இப்போ ஷாப்பிங் மால்’ல இருக்கேன்.. அதனாலதான் போன் போட்டேன்..ஆமா.. உங்க சொக்கா சைஸ் என்ன?

    ஹாஃப் ஆ.. ஃபுல்லா.. எதைக்  கேக்கிறே?

    நேத்து ராத்திரி ஏதாச்சும்  பார்ட்டியா.. ஐயோ.. உங்களுக்கு ஏன்தான் இப்படி புத்தி போகறதோ.. சொக்காய்ல ஹாஃப்க்கும்  ஃபுல்’க்கும் ஒரே அளவுதானே..

    ஆமா இல்லே.. ஹி ஹி.. நாற்பதுன்னு  வெச்சுக்கோயேன்..

    என்னத்தை நான் வெச்சுக்கறது.. சரியா சொல்லுங்க.. போன தடவை நாற்பத்திரண்டு எடுத்ததா எனக்கு ஞாபகம்..

    அது போன தடவை.. இப்பதான் எக்ஸெர்ஸைஸ் பாடி ஆக்கிட்டேன்..

    ஆஹா.. கேக்கறதுக்கே சுகமா  இருக்கு..

    கிண்டலா.. கொஞ்ச நாள் கழிச்சுப் பாரு.. இது உன்  புருஷன்தானா ந்னு மலைச்சு  நிப்பே.. சிக்ஸ் பேக் கூட  ட்ரை பண்றேன்.. கிட்டதட்ட  ஷாருக் மாதிரின்னு வெச்சுக்கோயேன்..

    ஐய்யோ போதுமே.. அவங்களுக்கு  அதெல்லாம் காசு.. உங்களுக்கென்ன  வந்துது.. அப்படி ஏதாவது பண்ணி  உடம்பை கெடுத்துக்காம இருந்தா  போதும்..

    உனக்குப் பொறாமை..

    ஐய்யோ அழகே.. எனக்கு பொறாமைன்னா ஊரே சிரிக்கும்.. போன தடவை நீங்களும் நானும் உங்க ஆபீஸ் ஃபங்க்‌ஷன்  போகறச்சே என்னைப் பார்த்து யார் இவங்க.. உங்க பொண்ணா’ன்னு கேட்டாங்களே..  நீங்க ஷாக் ஆகி நின்னீங்களே.. மறந்து போயிட்டிங்களா.. ஆங்.. இப்ப ஞாபகம் வந்திருச்சு.. அதனாலதான் பாடி பில்டப் கொடுக்கறிங்களா..

    ஐய்யோ.. உனக்கு எப்படி இவ்வளோ ஞாபக சக்தி.. நான் இதெல்லாம்  அப்பப்போ மறந்துபோகறேன்  தெரியுமா..

    போதும்.. போதும்.. என்ன கலர்ல வேணும் உங்களுக்கு..

    கலர்ரா

    ஐய்யோ.. நான் சொக்காயைச் சொன்னேன்..

    ஏதானும் லைட்கலர்’ல எடு..

    எதுக்கு லைட் கலர்.. உங்க பீரோல பாருங்க அத்தனையும் லைட் கலர்தான்..

    லைட்கலர் எடுக்காதே’ன்னு சொல்ல வந்தேன்.. நான் லைட் கலர்ன்னு சொன்னா நீ எப்படியும் எடுக்க மாட்டே..  டார்க்கா பாரு.. சரிங்க..இதோ வண்டியை எடுத்துடறேங்க..

    ஐய்யையோ யார்கிட்ட  வண்டியை எடுத்துடறேன்னு சொல்றிங்க..

    அட.. இங்கே கார் பக்கத்துல..

    ஐய்யோ.. போலீஸ்காரனா.. தண்ட இழவுதான்.. போனாப் போகுதுன்னு காசு வேணும்னா கொடுங்க.. கன்னா  பின்னான்னு திட்டு வாங்காதீங்க..

    ஐய்யோ.. பக்கத்துல  பொட்டிக்கடைக்காரர் – கடை  முன்னாடி வண்டியை நிப்பாட்டாதீங்க’ன்னு சொல்றார்.. நீ சொல்லு..

    அவங்க எதுக்கு ரோடு ஃபிளாட்ஃபார்ம் மேல கடையை  வெக்கணும்.. நீங்க அவனுக்கொண்ணும் பதில் சொல்ல வேணாம்..

    சரி, வுடு, நான் பாத்துக்கறேன்..

    சரி, சரி, உங்களுக்கு யாரைக் கண்டாலும் பயம்.. அதனாலதான்  சொல்லறேன்..

    எதுக்கு இப்போ இதெல்லாம்  நடு ஷாப்பிங் மால்’ல கத்திச் சொல்லறே.. எல்லாரும் கேக்கப் போறங்க.. வுட்டுடு..

    டார்க் கலர் டிசைன் எல்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனா உங்களுக்கு சூட் ஆகுமான்னு  தெரியலே..

    மறுபடியும் உனக்குப் பொறாமை.. எனக்கு டார்க்’தான் பிடிக்கும்.. எந்த டிசைன் வேணும்னாலும் எடு.. நான் போட்டுக்கறேன்..

    ஆனா எல்லாம் கட்டம் போட்ட சட்டைங்க.. உங்களுக்கு சூட் ஆகாதுங்க..

    ஆஹா.. கட்டம் போட்ட  சட்டையா.. போனவாரம் டி.வி ல  பார்த்த சுமதி என் சுந்தரி  பட்த்துல சிவாஜி போட்டுண்டு சூபரா பாட்டு பாடுவாரு.. எடு  எடு..

    ஐய்யோ வேணாமே.. அது  சிவாஜிக்கு வேணும்னா அழகா இருக்கும்.. ஆனாலும் அது  பழைய டிசைன்.. சிவாஜியே போயிட்டாரு.. சரி வுடுங்க..

    இப்ப என்னதான் எடுக்கப்போறே.. வந்ததுதான் வந்தே..உனக்கும் டிரெஸ் வேணும்னா அப்படியே செலக்ட் பண்ணிக்கோ..

    ஐய்ய,, நான் காலைலையே வந்து நிதானமா பார்த்துப் பார்த்து சுடிதார்லாம் நல்ல டிசைன்’ல இருக்குன்னு முதல்லயே வாங்கிட்டேன்

    ஓஹோ..

    ஆமாம்.. அப்படியே உங்களுக்கும் ஒரு ஷர்ட் வாங்கலாமேன்னுதான்னு  போன் போட்டேன்..

    சரி, வாங்கிடு.. டார்க் கலர்..

    அட, பேசிண்டே வெளியே வந்துட்டேங்க.. அடுத்த முறை உங்களோட வந்து எனக்குன்னு வாங்கறச்சே உங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டா போச்சு..

    சார்.. இதோ எடுத்துடறேன் சார்..

    யார்கிட்டே சொல்லறீங்க.. மறுபடியும் அந்த கடைக்காரனா..

    இல்லே.. போலீஸ்..

    **********************************************************************

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ……….. (30)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    வாரங்கள் ஓடுகின்றன. வரம்பில்லா நிகழ்வுகள் வாழ்க்கையில் நடந்தேறுகின்றன. ஒரு மனிதன் மறைந்ததும் அவன் தன் நாட்டுக்கும் வீட்டுக்கும் ஆற்றிய செயல்களிலே தான் அவனது புகழ்ச்சியும், இகழ்ச்சியும் அடங்கியிருக்கின்றது.

    நாம் வாழும் மட்டும் வேஷம் போட்டு வாழ்ந்து ஊரையும், உலகத்தையும் ஏமாற்றி வாழ்ந்து விட்டு மறைந்ததும் எமது ஈனச்செயல்கள் அப்படியே எம்முடன் சேர்ந்து புதைக்கப்பட்டு விடுகிறதோ அன்றி எரிக்கப்பட்டு விடுகிறதோ எனும் எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பின் அது எத்தகைய மாயையான நினைப்பு என்பது இன்றைய நடைமுறைகளின் படி நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    மனிதர் இரட்டை வேடம் போட்டு வாழ்வதை சினிமாக்களில் பார்க்கிறோம். பார்த்து விட்டு சிலசமயங்களில் என்ன இது மிகைப்படுத்தப்பட்டு விட்டதோ என்று கூட எண்ணுகிறோம். ஆனால் இப்போ எமது கண்முன்னால் இங்கிலாந்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் இத்தகைய இரட்டை வேட மனிதர்கள் நிஜ வாழ்க்கையில் இருப்பது யதார்த்தமே என்று எமக்கு புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

    எதற்காக இத்தனை ஆலாபனை என்று எண்ணுகிறீர்களா ?

    ஜிம்மி சவைல் (Jimmy Saville) பிரித்தானிய ஊடகங்களில் கடந்த பத்து நாட்களாக வறுத்தெடுக்கப்படும் ஒரு பெயர். 

    அது சரி யார் இந்த ஜிம்மி சவைல் ?

    1926ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31ம் திகதி இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் (Leeds) எனும் நகரில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் 7 பிள்ளைகளில் கடைசிப்பிள்ளையாகப் பிறந்தார்.

    இளவயது முதலே இசையில் நாட்டம் கொண்டு வளர்ந்த இவர் தானே இங்கிலாந்தில் வந்த டிஸ்க் ஜொக்கி (Disc Jokki or DJ) எனப்படும் வகையிலான இசைநிகழ்ச்சி தொகுப்பாளர்களில் முதன் முதலாக வந்தவர்களில் முன்னணியில் திகழ்ந்தவர் என்று கூறிக் கொள்கிறார்.

    இரண்டாவது உலக  மகாயுத்தத்தின் போது நிலக்கரிச் சுரங்க வேலைக்காக கட்டாயப் பணியின் பேரில் சேர்க்கப்பட்டவரார். நாட்டிய ஹால்களிலும், பார்களிலும் இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் DJ ஆக பணிபுரியத் தொடங்கிய இவரின் முதலாவது வானொலிப் பிரவேசம் 1958ம் ஆண்டு ரேடியோ லக்ஸம்பேர்க் (Radio Luxemburg) இலும் முதலாவது தொலைக்காட்சிப் பிரவேசம் டைன் டீஸ் தொலைக்காட்சி ( Tyne Tees Television) யில் 1960 இலும் நிகழ்ந்தது.

    நகைச்சுவைப் பாணியிலும், மிகவும் விசித்திரமான வகையிலும் தனது நிகழ்ச்சித் தொகுப்புகளையும் வழங்கிய இவர் இங்கிலாந்து மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற காரணமாகவிருந்தது இவரது சமூக சேவையும், இவர் பலரது தீராக் கனவுகளை நிறைவேற்றி வைக்கும் தொலைக்காட்சி நிகழ்வான ஜிம் வில் ப்க்ஸ் இட் (Jim`ll Fix It) எனும் பி.பி.ஸி தொலைக்காட்சியில் வந்த நீண்ட தொடராலாகும்.

    தொடர்ந்து பி.பி.ஸி நிறுவனத்தில் பல வருடங்கள் அவரது மறைவு வரைக்கும் பலவித நிகழ்வுகளில் பங்கு பெற்று வந்தார்.

    இவரது சமூக சேவைக்காகவும், மக்களிடையே இவருக்கிருந்த செல்வாக்குக் காரணமாகவும் இவருக்கு இங்கிலாந்து மகாராணியால் “சர்” பட்டம் வழங்கப்பட்டது. இவரது சமூக சேவைகள் முக்கியமாக “ஸ்டோக் மண்டர்வைல் (Stoke Mandervile) ஹாஸ்பிட்டல், “லீட்ஸ் ஜெனரல் இன்வேர்மரி (Leeds General Infermory)” ஹாஸ்பிட்டல், “பிராட்மோர் (Broadmoor) ஹாஸ்பிட்டல் போன்றவற்றில் பிரபலப்பட்டிருந்தன.

    இத்தகைய ஹாஸ்பிட்டல்களில் மனநலம் குன்றிய குழந்தைகள் அதிகமாகப் பராமரிக்கப்பட்டு வந்தன. அதுமட்டுமின்றி மனநலம் குன்றிய இளம் யுவதிகள், இளைஞர்களும் இவற்றில் அடங்குவர்.

    சரி , எதற்காக இந்த ஜிம்மி சவைல் என்பவரைப் பற்றிய இவ்வளவு முன்னோட்டம் எனும் கேள்வி எழுந்திருக்குமே !

    இங்கேதான் இங்கிலாந்து மக்களிடையே அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த சமுதாயப் பெரிய மனிதன், மகாராணியாரின் அதியுயர் விருதைப் பெற்றவர், சமுதாயத்தினால் முன்னோடியாகக் கருதப்பட்டவர் இரட்டை வாழ்வு வாழ்ந்திருக்கும் அந்தரங்கம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

    அப்படி என்னதான் செய்து விட்டார் என்கிறீர்களா?

    யாராலும் எண்ணிப்பார்க்கவே கூசும் வகையில் சிறுவர், சிறிமிகளை இவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருப்பது அம்பலப்படுத்தப் பட்டுள்ளது.

    இவரது ” Jimm`ll Fix It” எனும் நிகழ்ச்சி பொதுவாக சிறுவர் சிறுமியரின் மனதில் இருக்கும் கனவுகளை தொலைக்காட்சியில் நிறைவேற்றி வைக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். இதிலே சம்பந்தப்பட்டிருந்த பல சிறுமியரின் கனவுகளை நிறவேற்றுவதற்குக் கூலியாக அவர்கள் மீது தனது பாலியியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டிருப்பது வெளிவந்துள்ளது.

    இவரால் பாதிக்கப்பட்ட பல சிறுவர்  சிறுமியர் தற்போது வயது முதிர்ந்தவர்கள். பகிரங்கமாக இவர் தம்மீது நிகழ்த்திய பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றித் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் குறிப்பிட்டதன் பின்னாலேயே பல அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இவர் உயிரோடு இருந்த காலங்களிலேயே இவர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்து, சில போலிஸ் பிரிவுகள் அவற்றை விசாரிக்க முற்பட்டு பின் அவ்விசாரணைகள் முடங்கிப் போய்விட்டன.

    இவர் சமுதாயத்தில் வகித்த முன்னணி அந்தஸ்தும், பல சமூக நிறுவனக்களின் நிதிச் சேகரிப்பில் இவர் ஈடுபட்டு அவற்றிற்கு நிதி ஈட்டிக் கொடுக்கும் வல்லமை இவரிடம் இருந்ததுமே இவர் மீதான விசாரணைகள் முடங்கிப் போனதிற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

    இவரது இந்த செய்கைகளினால் பாதிக்கப்பட்டது உலகப்பிரசித்தி பெற்ற பீ.பீ.சீ நிறுவனத்தின் நற்பெயருமேயாகும்.

    ஏன் பீ.பீ.ஸி க்கு மட்டும் அதிகமான அவப்பெயர் என்கிறீர்களா?

    1) பி.பி.ஸி யிலேயே இவர் அதிக காலம் பணியாற்றி வந்துள்ளார். இவரது பாலியல் துஷ்பிரயோகங்களில் பெரும்பாலானவை நிகழ்ந்தது பி.பி.ஸி ஸ்டூடியோவிலேயே.

    2) இவர் மீது சந்தேகங்கள் பல காலகட்டங்களில் துளிர்த்து எழுந்தும் அதனை மேற்கொண்டு விசாரிக்கத் தவறியமை.

    3) 2011ம் ஆண்டு பி.பி.ஸி யின் நியூஸ் நைட் எனும் நிகழ்வு இவரின் மீது இவரது நடத்தையின் மீதான சந்தேகங்களின் அடிப்படையில் ஆக்கிய ஒரு நிகழ்ச்சி பி.பி.ஸி மேலதிகாரிகளால் நிறுத்தப்பட்டதும், அதைத் தொடர்ந்து 2011 கிறீஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் இவருக்கான பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை பி.பி.ஸி நடத்தியமை.

    இவைகளினால் பி.பி.ஸி மீது மக்களுக்கு ஒருவித நம்பிக்கையின்மை தோன்றியுள்ளதோ எனும் ஜயம் எழுந்துள்ளது.

    சென்ற திங்கட்கிழமை பி.பி.ஸி தனது பனோரமா எனும் நிகழ்ச்சியில் இந்நபரின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படாமல் போனதிற்கும், 2011ம் ஆண்டு நடத்தப்படவிருந்த நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டதுக்குமான காரணங்களை ஆராய்ந்து தம்மைத் தாமே கடுமையான கண்ணோட்டத்துடன் விசாரித்துக் கொண்டது.

    இவர் மீது கடந்த காலங்களில் எழுந்த குற்றச்சாட்டுகளை ஏன் அரசாங்க குற்றத்தடுப்புப் பிரிவு விசாரிக்கத் தவறியது என்பதை அரசாங்கக் குற்றத்தடுப்புப் பிரிவு விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

    பி.பி.ஸி தமது நடவடிக்கைகளை ஆராயும் பொருட்டு இரண்டு விசாரணைக் கமிஷன்களை நியமித்துள்ளது.

    இதைத்தவிர பொலீசாரும்  தமது விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    இன்றைய கால்கட்டத்தில் குடும்பங்களின் பிரிவு என்பது சமுதாயத்தில் சாதாரண் நிகழ்வாகி விட்டது. இக்குடும்பங்களின் பிரிவாலும், திருமணமாகாமலே குழந்தைகளை பெற்றெடுக்கும் கலாச்சாரத்தினாலும் இங்கிலாந்து சமுதாயத்தில் மனநலம் குன்றிய பல சிறுவர், சிறுமியர் உருவாக்கப்படுகின்றனர். இவர்களைப் பாதுகாக்கப்படும் மையங்களில் இவர்களை இத்தகைய கொடுமையான மனிதர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டியது இன்றைய சமூகத்தின் முக்கிய கடமையாகிறது. 

    தம்க்கெதிராக நடக்கும் கொடுமைகளை, அக்கொடுமைகளைப் புரிபவரின் சமுதாய அந்தஸ்தின் காரணத்தினால் வெளிப்படுத்த முடியாத நிலை அன்றைய காலகட்டங்களில் இருந்திருக்கலாம். ஆனால் இன்றோ இத்தகைய கொடுமைகளை வெளிப்படுத்த பல சந்தர்ப்பங்க‍ள் அனைவருக்கும் கிடைக்கின்றன. தம்மீது நிகழ்த்தப்பட்ட கொடுமை மற்றையோருக்கும் நடக்கக்கூடாது என்னும் மனப்பான்மையை முன்வைத்து ஏதாவது ஒரு வகையில் இத்தகைய குற்றச்செயல்களைத் தடுப்பது அனைத்து மக்களின் கடமையாகிறது.

    அனைத்து மக்களும் ஒன்றிணைவதே சமுதாயம். இவ்வமைப்பில் நம் அனைவரும் எமக்குரிய பங்கை உளசுத்தியுடன் ஆற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

    இவரது வாழ்க்கையும் அதன் பின்னால் இவருக்கு நடந்த நிகழ்வும் எமக்கு ஒரு விடயத்தை ஜயமின்றித் தெளிவு படுத்துகிறது. நாம் வாழும் வரைக்கும் தவறான வாழ்க்கைமுறையைத் திரைக்குப் பின்னால் வாழ்ந்துவிட்டு நாம் மறைந்ததும் அது எம்மோடு மறைந்து விடும் என்று எண்ணுவதோ அன்றி வெளிவந்தால் நமக்கென்ன என்று எண்ணுவதோ தவறானது. உண்மைகள் என்று மே அழிந்து விடாது. அவை நிச்சயம் வெளிவரத்தான் போகிறது. வாழும் வரைக்கும் மனசாட்சிக்கு விரோதமின்றி வாழ்வதுவே முறையான வாழ்வாகும்.

    இதற்காகத்தான் கவிஞன்,

     “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்றானோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    படங்களுக்கு நன்றி ( விக்கி பீடியா இணையத்தளம் , பி.பி.ஸி இணையத்தளம்)

    Share
  • ‘சதம் “அடித்தேன்

     

    விசாலம்

    வல்லமை‘ என்ற பெரிய கிரிக்கெட் மைதானம்  அதில் பங்கு பெருபவர்கள் பெரிய ஜாம்பவான்கள் தான்   அதற்கு  கேப்டன் திருமதி பவள சங்கரி   மிகத்  திறமையுடன்  டீம் மை கொண்டுச் செல்லும் கேப்டன் .கூடவே  உபதலைவர்கள் போஸ்டில் திருமதி காயத்ரி, திரு இளங்கோ, திருமதி சாந்தி. இந்த வல்லமை  எழுத்து மைதானத்தை முதலில் நடத்திச்சென்றவர்    திரு அண்ணாகண்ணன்  .அவர் மிகவும் திறமை வாய்ந்த கேப்டன் . பல படைப்புகளைக் கொடுத்து எழுத்துலகில் ரன்களைக்  குவித்திருக்கிறார்.  பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவர் முதலில் சிபி .காம் sifi  .com  ல்  இருந்த போது என்னையும் எழுத்துலகத்தில்  சேர்த்துக்கொண்டார் . அப்போது ஆரம்பித்தது  தான்

    “நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்   “என்று  திரு கண்ணதாசன் அவர்களின் பாடலைப்போல்  நானும் அவர் போகுமிடமெல்லாம்  தொடர்ந்தேன்  . சி பி .காமுக்குப்பிறகு சென்னை ஆன் லைன் னில்  விடாமல் எழுதி வந்தேன்  .  அந்த மைதானத்திலும்  செஞ்சரி எடுத்தேன்’  அங்கு கட்டுரைகளுடன் எனக்கு ” வீடும் வாஸ்துவும் ” என்பதைத்தொடராக எழுத வாய்ப்பும் வந்தது  .பின்  அவர் “வல்லமையை ஆரம்பித்தார்  .  நானும்  இங்கு தொடர்ந்தேன் இந்த வல்லமை என்ற மைதானம் ஆரம்பித்திலிருந்தே  தொடர்ந்து  பல  மேதைகள்  ,சேர்ந்து  திறமையாக விளையாட   நானும்  ..இவர்களுடன் சேர்ந்து  பல கற்றும் வருகிறேன் என் பங்கும் இதில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது  இந்த மைதானத்தில் இந்தக்கட்டுரை  என்னுடைய நூறாவது ரன் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சிதான்

    இந்த நூறு என்ற நம்பருக்கு மிகவும் சக்தி உண்டு  . கிரிக்கெட் விளையாடும் போது 95 ரன்  தாண்டியவுடனேயே எல்லோருக்கும் ஒருபுது உற்சாகம் வந்துவிடும் பேட்ஸ் மேனுக்கும்தான்  ….பின்  அவன் மிகவும் கவனமாக ஆடிநூறைத் தொட்டவுடன்   மக்களிடையே கரகோஷம்  எழும் .அவனும் தன் மட்டையைச்சுழற்றி நன்றி தெரிவிப்பான் இதுவே நூறைத் தாண்ட  எல்லாம் நார்மலுக்கு வந்துவிடும்   இனி  அடுத்த  ஐம்பதும்   பின் நூறும் தொடும்போதுதான்   அந்த உற்சாகம் திரும்பும் .இதுவே  சினிமாவுக்கும் சொல்லலாம்  நூறாவது நாள் சினிமா ஓட  அது பெரிய விளம்பரம்  ஆகிவிடும்   நாடகமோ வேறு நடனமோ எல்லாமே நூறு நாட்கள்  தொட அதற்கு தனி மவுசு வந்துவிடுகிறது  ,நியூமரலாஜியில் 100 என்றால்  மிகவும் ஒழுங்குமுறை  எனலாம்  ஆங்கிலத்தில்  perfection . .100 ல்   முதலில் இருக்கும்  1  என்பது சூரியனைக்குறிக்கும்   சூரியன்  எப்போதுமே தன் வேலையை  மிகவும்  சரியாக அப்பழுக்கில்லாமல் செய்து வருவான்  . நம்பர் ஒன்று என்றாலே தனி பராக்கிரமம் , .சக்தி , தன்னம்பிக்கை,  எதையும் சாதிக்கும் திறமை , தலைமை வகித்தல்  . தனித்தனமை  ,ஒருவருக்கும் கிழ்ப்படியாத குணம்  . தைரியம்  ,மனோபலம்  என்று பல குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்  . இத்துடன்  இரண்டு சைபர்  சேர  நூறாகிறது .

    சைபர் என்றாலே சூன்யம்  …. சில தியானத்தில்  சூன்ய மெடிடேஷன்  என்று ஒன்று உண்டு  .அதில் எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி மனதை ஒரு சூன்யமாக  ஆக்கி தியானம் செய்யவேண்டும் .இது மிகவும் கஷ்டமான ஒன்று  ஒரு 15 நிமிடங்கள் செய்வதற்குள் பாம்பு நுழைவதுப்போல்  ஒரு எண்ணம் வந்து நுழைந்து கொள்ளும் . இந்த சூன்ய மெடிடேஷனின் கருத்து   உபனிஷத்தில்  வருகின்ற

    “ஓம் பூர்ணமித  பூர்ணமிதம்  பூர்ணாத்  பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய  பூர்ணமாதாய  பூர்ணமேவாவசிஷ்யதே  ” .…………….என்பதுடன்  ஒத்துப்போகிறதோ என்று எனக்குத்தோன்றுகிறது
    .
    நாம் தியானிக்கும் போது  நாம் ஆக்ஞா சக்கரத்தில் கவனம் செலுத்துகிறோம் இந்த இடத்தை அவிமுகிதம் என்று சொல்வார்கள். இதனின் மூல இயந்திர வடிவம்  சைபரைப்போன்ற வட்டமே .   மூலதெய்வம் சதாசிவம் ,  தேவி மனோன்மனி இதைப்பார்க்கும் போது  100 என்ற எண்ணிற்கு நிறைய சக்தி இருக்கிறது எனத்தோன்றுகிறது

    நூறு என்ற எண் மிகவும் எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதால் முக்கியமான போலீஸ் அழைக்கும் நம்பராக அது உள்ளது . பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் இந்த நூறு புகழைச் சேர்க்கிறது நூற்றுக்கு நூறு கணக்கில்  . என்றால்  அரசின் பரிசும் கிடைக்கிறதுபணத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் நூறு பைசஈ ஒரு ரூபாய் என்றும்   .நூறு பத்துரூபாய்  ஆயிரம் என்றும் நூறை  ஆரம்பமாக வைத்தே    ஒரு பூஜ்யம் சேர்த்தபடி  ஏற்றிக்கொண்டே போகிறோம்  . உடம்பில்  வெப்பமும் நூறு வரை ஏற்றுக்கொள்கிறது .  அது தாண்டிவிட்டால் சுரம் என்று படுத்துவிடுகிறோம்  டெசிமல்  கணக்கிலும் நூறு தான் முக்கிய பங்கு வகிக்கிறது

    கோர்ட்டிலும்  “நான் பேசுவது நூற்றுக்கு நூறு உண்மை   ‘என்று ஆரம்பிப்பதையும் பார்க்கிறோம் .பண்டிகை அல்லது திருவிழாநாட்களில் நாம் பெரியவர்களை  வணங்க  அவர்களும் நூறாண்டு  நோய் நொடியில்லாமல் வாழவேண்டும் என்று வாழ்த்துவார்கள்

    நூறாண்டு வாழ்ந்தவருக்கு கனகாபிஷேகம் செய்வதையும் பார்க்கிறோம் இது போல் நூறுக்கு இருக்கும் சிறப்பை அடுக்கிக்கொண்டே போகலாம்

    இப்போது என் கதைக்கு நான் வருகிறேன் ……. வல்லமையில்  பெரிய பெரிய எழுத்தாள   மேதைகளுக்கு நடுவில்  நானும் புகுந்து  டொக் .டொக்கென்று ஒவ்வொரு ரன்னாக எடுத்து அவுட்டாகாமல் .இடத்தைப்பிடித்து பின் பல மேதைகளிடமிருந்து பாடங்கள் ,அனுபவங்கள் பெற்று பின்  , எழுத்தே  என் மூச்சு என்ற  நிலைமையை  அடைந்துள்ளேன்  விளையாட்டில்    .ஒவ்வொரு சமயம் சௌத்தா  அல்லது சக்காவும்   எடுத்து ……. ஓ ……தில்லி பழக்கம் வந்துவிட்டது .அதான் ஹிந்தி   வந்துவிட்டது. அதான் நாலு ரன்களும் சிக்சரும்  ……அடித்து   அதற்குத்தகுந்த பாராட்டும் பெற்று    இன்று நூறாவதைத் தொட்டிருக்கிறேன்  .கிரிக்கெட் மைதானத்தில் சதம் அடித்தவருக்கு எப்படி கைத்தட்டல்கள் விழுமோ அது போல பெரியவர்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்  சிலர் வயதில் என்னைவிட சிறியவர்கள் ஆனலும் எழுத்துலகில் அவர்கள் பெரிய ஜாம்பவான்களாக இருப்பதால் அவர்களும் என்னை வாழ்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன் . ஒவ்வொருத்தர் எத்தனையோ சாதனைகள் செய்து வரும் போது இது என்ன பெரிய சாதனையா என்று என் மனம் என்னைக்கேட்டாலும்  வாழ்த்துகள் என்பதில் இருக்கும் பாசிடிவ் அலைகள் என் கனவை நனவாக்கும் என்ற நம்பிக்கையினால் இதை எழுதினேன்

    நான்  இதுவரை எழுதி   வரும் குழுமங்கள்    ..திரு  ஆகிரா நடத்தும் மழலைகள்  {,குழந்தைகளுக்கு எழுதுவதே ஒரு தனி ஆனந்தம் தான்}   இல்லம் பிரவாகம்,  முத்தமிழ்   பண்புடன்  நிலாச்சாரல்  தமிழமுதம் அன்புடன் .ரத்னமாலை  ,தமிழ்வாசல்

    இதுவரை எழுதிய படைப்புகள் கூடிய சீக்கரம்  ஆயிரம் தொட்டுவிடும்    ஆயிரம் எப்படியாவது  முடிக்க வேண்டும் என்ற ஆசை  தான்    .  அதற்கு என் உடல் ஒத்துழைக்க வேண்டும்

     என் கட்டுரைகள் வந்த பத்திரிக்கைகள்  , அவள்விகடன் , ஆனந்தவிகடன் , மங்கையர் மலர்  ,ஞான ஆலயம்  ஓம் சரவணபவ  , ஷண்முக கவசம்  வெற்றிநடை. .

     ஒவ்வொருத்தர் எத்தனையோ சாதனைகள் செய்து  உச்சியைத்தொட்டிருக்கிறார்கள் . அவர்கள் முன்னால் நான் சிறு துளிதான் ஆனாலும்  என் கடைசி மூச்சு வரை நான் இந்த மைதானத்தில்  பங்குப்பெற்று என் பங்கை திறம்பட  செயலாற்ற வேண்டும்  என்பதே என் ஆசை . அதற்குத்தகுந்த  மன வலிமையும் உடல் வலிமையும் அந்த பரமேஸ்வரன் தான் அளிக்க வேண்டும்

    2002 ல் ஆங்கிலம் எழுதி வந்த நான்  2006 ல் தமிழ்க் குழுமத்தில் முதன்முதலாக கால் வைத்தேன்  ஆறு வருடங்கள் ஓடிவிட்டன

    இந்த நேரத்தில் என்னை ஊக்கிவித்த  பலர் என் கண் முன் வருகிறார்கள் . முதன் முதலில் என்னைக்கணினியி ன்  முன்னால் தமிழில் எழுதவைத்து  ஆதரித்து என்னை மேலும் மேலும்நம்பிக்கையுடன்  எழுத வைத்த  ” நம்பிக்கை” என்ற குழு நடத்தி வந்த திரு பாசிடிவ் ராமாவுக்கு என் மனமார்ந்த நன்றி .

    முத்தமிழ்  நடத்தி வந்த திரு மஞ்சூர்ராஜா     திருமதி விஜி  ,எனக்கு ஊக்கம் கொடுத்து வாழ்த்திய குருஜி திரு காழியூரார் .  எனக்கு சகோதரராக இருந்து ஆதரித்த  திரு தமிழ்த்தேனீ திரு ஆகிரா திரு இன்னாம்புரான்ஜி  .திருஶ்ரீனிவாசன் ஜி டாக்டர் சங்கர்குமார்ஜி  சிங்கை குமார்ஜி  விக்ஞானி திரு ஜயபாரதன் ஜி  ,திரு அப்துல் ஜப்பார் ஜி   திரு கவியோகி வேதம்ஜி திரு வேந்தன்  திரு திவாகர் ஜி  திரு சிவசிவா திரு சபேராஜி   திரு நடராஜன்   யாவருக்கும் என் நன்றி என் அன்பு மகனாக இருந்து  என்னை ‘சென்னை ஆன் லைன்.’ ” வல்லமை” யில் எழுத வாய்ப்பளித்த  திருஅண்ணா கண்ணனுக்கும் நன்றி  .

    இல்லத்தில் இருக்கும் மூத்தவரான  திரு பர்வமணி அவர்களுக்கும் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன் அழகியைக் கண்டுப்பிடித்த  என் மகனான திரு விஷி என்ற விசுவநாதனுக்கும்  என் நன்றி  இசைக்கவிஞர் திரு ரமணன் ஜி யின் மனதைத்தொடும் பாடல்கள் எனக்குக் கவிதை எழுத  ஒரு தூண்டுகோலாக அமைந்தது .அன்பு சகோதரர் திரு ரமணனுக்கு  என் நன்றி .

     திரு பென்னேஸ்வரன் தமிழ் வாசலையும் திறந்து வைத்ததால் அதில்  எழுதும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது மிக்க நன்றி

    முழுவதும் ஆன்மீக மலராக மலர்ந்து நிற்பது  ரத்னமாலா  .அதை நடத்தி வருபவர் என் சகோதரர் டாக்டர் சங்கர்ஜி என் ஆன்மீகம் வளர அதுவும் ஒன்று   மிக்க நன்றி

    என் அன்பு தோழிகள் திருமதி  ஷைலஜா  திருமதி கீதா சாம்பசிவம்  திருமதி மீனாமுத்து, அன்பு சகோதரி திருமதி சீதாலட்சுமி . திருமதி ஜயஶ்ரீ சங்கர் ,திருமதி காயத்ரி யாவரையும் பாசத்துடன் நினைவுகொள்கிறேன்  மிக்க நன்றி

    திரு சுரேஷ் என்ற என் மகன் பிளாக் போடும் முக்கியத்துவத்தை என்னிடம் கூறியதால்  எனக்கும் ஒரு பிளாக் ஆரம்பிக்கும் எண்ணம் ஏற்பட்டது  அதற்காக நான் டாக்டர் சிவசங்கரை நாடியபோது   அவர் எனக்கு மீராம்பிகா என்ற பிளாக்கை ஆரம்பித்துக்கொடுத்தார் அவரும்  என் அன்பு மகன் தான் அவருக்கும் என் நன்றி .அத்துடன் திரு பாலமுரளி மேலே என் பிளாக்கில் படங்கள் போடும் விதத்தைச் சொல்லிக் கொடுத்து எனக்கு உதவினார் நன்றி பாலா

    என்னை எழுத்துலகில் மேலும் எழுத தூண்டுகோலாக இருந்து  உற்சாகப்படுத்திய மகள்கள்  திருமதி பவளஸ்ரீ  திருமதி  ஜயந்தி , திருமதி விஜி   திருமதி காந்திமதி  ; நிலச்சாரல் நடத்திய திருமதி நிர்மலா  யாவருக்கும் என் நல்லாசிகளுடன்  நன்றி. திரு ஆசீப் மீரான் .திரு உமாநாத் ,திரு பாலமுரளி ,திரு வேணுகோபால், யாவருக்கும் என் நன்றி

    இந்த எல்லா குழுமத்திலும் பல சகோதரர்கள் ,பல மகன்கள் .பல மகள்கள் என்னை ஆசையுடனும் பாசமுடனும் அம்மா என்று அழைத்து  பேசும் போது மனம் நெகிழ்ந்து போகிறது  வாழ்க குழுமங்கள் .

    ஒற்றுமையுடன் ஆக்கப் பாதையில்  எல்லா குழுமங்களும் நன்கு சிறப்பாக  நடக்க என் பிரர்ர்தனையுடன் கூடிய   நல்லாசிகள் .

    அன்புடன்  விசாலம்

    Share
  • அக்டோபர் (2012) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்

     

    அன்பு நண்பர்களே,

     வணக்கம். ஐக்கியா தொண்டு நிறுவனம் மற்றும் நம் வல்லமையும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கு மகத்தான ஆதரவு அளித்து வரும் அனைத்து படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நல்ல படைப்புகள் வாசகர் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றுவிடுகிறது. இது போன்று நிலைத்து நிற்கச் செய்யும் படைப்புகளை ஊக்குவிப்பதே  இப்போட்டியின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் நம் படைப்பாளிகள் அனைவரும் பாராட்டும், வாழ்த்தும் வாசகர்களிடமிருந்து பின்னூட்டமாகவும் பெற்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற ஊக்கங்களே மேலும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கக்கூடியது. ஆக, வாசகர்களின் முழுமையான ஈடுபாடும் மிகஅவசியமாகிறது. தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறோம். தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டிருக்கும் ஐக்கியா தொண்டு நிறுவனர் திரு வையவன் அவர்களுக்கும், சிறுகதைகளை பொறுமையாக வாசித்து அதற்கான மதிப்பீட்டை பாரபட்சமின்றி வழங்கி வரும் பிரபல விமர்சகர் உயர்திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதோ சென்ற அக்டோபர் மாதத்தின் போட்டி முடிவுகள். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெறும்  விடாமுயற்சியில் இருப்பவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே. தொடர்ந்து உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்.

    அன்புடன்
    பவள சங்கரி

    இம்மாதம் முப்பத்தியோரு கதைகள். வல்லமை பிராபல்யமாகி வருகிறது. இந்த மாதக் கதைகளில் மணி ராமலிங்கம் அவர்கள் எழுதிய நோ பால் சிறந்த கதையாக எனக்குப்படுகிறது. இதில் என்னைக் கவர்ந்தது நம் இன்றைய வாழ்க்கையின் முக்கிய கவர்ச்சிகளில் ஒன்றாகிவிட்ட கிரிக்கெட் விளையாட்டும் அதில்  செலவாகும் நேரமும் வாழ்க்கை அனுபவமும்  குறிப்பிடத்தக்க அளவில் இருந்த போதிலும் அது என்னவோ ஒரு விளையாட்டு, அது அவ்வளவு முக்கியமில்லை போல எழுத்தில் அது பிரதிபலிப்பதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் அதற்குரிய அழகுகளோடுதான் இருக்கிறது. குழந்தைப் பருவம், பள்ளி வாழ்க்கை,  போலத் தான் விளையாட்டுப் பருவமும்.  அங்கும் மனித உறவுகள் உண்டு, மனிதனின் பலங்களும் பலவீனங்களும் பங்கு கொள்கின்றன. அது ஒரு கால கட்டம் இருப்பினும் பின்னர் அந்தக் கட்டம் முடிந்து திரும்பிப் பார்க்கும் போது கடந்த உறவுகளும் அதன் சந்தோஷங்களும் மனதை பின்னும் ஒரு nostalgia வோடு பாதிக்கின்றன.  மணி மிகத் திறமையாக, convincing -ஆக அந்த அனுபவங்களையும் பின்னர் ஒரு ஏக்க உணர்வோடு திரும்பிப் பார்த்தலையும் எழுதியுள்ளார். யாரும் தொடாத அனுபவ தளம். வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆக, அவருடைய நோ பால் தான் எனக்கு இந்த மாதச் சிறந்த கதையாகத் தோன்றுகிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    அன்புடன்,

    வெ.சா.

    சென்ற மாத போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் பட்டியல் இதோ:

    1. நீறு பூத்த நெருப்புகள்

    2. நாணயம்

    3. தனியொருவனுக்கு உணவில்லையெனில்!

    4. கொள்ளி எறும்பு

    5. மாற்றான் தோட்டம்

    6.சுழல்

    7. தாசரி

    8. ஒரு முடிவின் மறு பக்கம்

    9. அம்மணி

    10. நாக்பூருக்குப் போ!

    11. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

    12. நோ-பால் – No Ball

    13. கூவமும் கங்கைதான்

    14. ஆண்மீக இச்சை..! (இது எழுத்துப் பிழை அல்ல….மனத்துப் பிழை…)

     

    15. பெட்டைகள்

    16. அம்மாவுக்குக் கடிதம்!

    17. சராசரிகள்

    18. நாத்திகம்

    19. ஈரத்துணி

    20. பேச்சு

    21. வந்து சொல்றேம்மா…

    22. இது என் சொத்து

    23. கனவுச் சாவி

    24. அன்பே தெய்வம்

    25. கோபம்.

    26. மாற்று(ம்) திறனாளி

    27. சொர்க்க வாசல்

    28. மாத்தி யோசி

    29. மௌன ராகம்

    30. நீ என்றுமே என் மகன்தான்

    31.ரகசியம்

    அக்டோபர் மாதப் போட்டியில பரிசை வென்றுள்ள  திரு மணி ராமலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து முயற்சி செய்ய வாழ்த்துக்கள்.

     

    Share