Category: Featured

Featured

  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-19

    பெருவை பார்த்தசாரதி

     

    கடந்த 01-10-12 அன்று “முதியோர்களின் நிலை” என்ற தலைப்பில் வெளியான தனிக்கட்டுரையோடு (http://www.vallamai.com/literature/articles/26855/), இந்தத் தொடரையும் சேர்த்து வாசிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தோடு இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். 

    ஏழை, பணக்காரன், விலங்குகள், பறவைகள் என்ற பேதமில்ல்லாமல், மண்ணுலகில் பிறவி எடுத்த அனைவருக்கும் ‘முதுமை’ என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி முதுமையில்  துன்பங்களையும் சேர்த்து விடுகிறது. பல குழந்தைகள் அல்லது ஒரே ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஒழுக்கத்துடனும், கட்டுப்பாடு, நற்பண்புகள் கொண்டவனாக வளர்த்து விட்டால், அது முதுமையில் அனுபவிக்கும் பல இன்னல்களுக்குத் தீர்வாக அமைந்துவிடும். 

    எங்காவது நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பத்தில் நாமும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் விஷயங்களில் எத்தகைய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?… ‘தான் பெற்ற குழந்தைகள், தாங்கள் சொல்லுவதைக் கேட்க மறுக்கிறார்கள்’ ‘இப்போது இருக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் விரும்புவதைச் செய்வதில்லை’, ‘இன்றய இளையதலைமுறையினர் தவறான பாதையில் செல்லுகின்றனர்’  போன்ற செய்திகளே அதிக அளவில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் செய்திகளில் இடம்பெறுகின்றன. பெற்றோர்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொள்ளுகின்ற பிள்ளைகள், பெரியோர்களின் அறிவுரையை ஏற்க மறுக்கும் சந்ததிகள் இவர்கள் அனைவரையும் அவரவர் குடும்பத்திலேயே அடையாளம் கண்டுகொள்ளமுடியும். ஒரு குடும்பத்தில் ஒருவர் தவறாக நடந்துகொள்ளும்போது அதை அந்தக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் திருத்த முயற்சித்து, குடும்பம் பிரிந்து விடுவதும் சகஜம். ஒரு பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை, சகோதரர்கள் ஒன்று கூடிச் செய்வதில்தான் பெரும்பாலும் சிக்கல்கள் தோன்றுகின்றன. குடும்பத்தை நல்வழியில் நடத்திச் சென்ற வயதான முதியவர்களை யார் வைத்துக் காப்பாற்றுவது?….என்ற தருணத்தில்தான், அவர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையையும் தேவைப்படுகிறது.  மதிப்பு மிகுந்த இத்தகய வழிகாட்டலுக்குச் செவிசாய்க்க மறுப்பவர்களுக்கு இதிகாச புராணங்களில் வரும் கதாபாத்திரங்கள் வழிகாட்டுகின்றன.          

    வளர்த்த பிள்ளைகளால் கைவிடப்பட்டு, அந்திமக் காலத்தில் உயிர் ஊசலாடும் போது, ஆறுதல் சொல்ல பெற்ற பிள்ளகளே வரவில்லை என்கிறபோது வேறு யார்?….வருவார்கள்.  முக்காலமும் உணரும் முனிவர் போல, இதையெல்லாம் முன்பே உணர்ந்ததுபோல் நமது கவியரசர், 1968ல் வெளிவந்த ‘எங்க ஊர் ராஜா’ என்ற படத்திற்காக எழுதிய

    ‘பெட்டியிலே பணமில்லே, பெத்தபுள்ளே சொந்தமில்லே,

    தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு,

    பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளையின் மனமே கல்லம்மா…….’ 

    என்ற பாடல் வரிகளின் முடிவில் 

    சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே”

    என்று எழுதியிருப்பார். இம்மாதிரி பாடல்கள் வேண்டுமானால் முதியோரின் சங்கடங்களுக்குச் சற்று நேரத்திற்கு ஆறுதல் தரும்.         

    உயிரோடு இருக்கும் போது, பெற்றோர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்தாலும், இறந்த பின்னும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் தொடருகிறது. தன்னைப் பெற்றெடுத்த தாய், தந்தையர் உயிரோடு இருக்கும்போது அவர்களைக் காப்பதும், காலமானபின் அவர்களுக்கு ‘திதிகளைச்’ செய்வதன் மூலம் தொடர்ந்து அவர்களுக்கு மரியாதை அளிப்பதாகக் கூறுகிறார் ‘ஆதிசங்கரர்’. கடமைகளிலேயே மிகச் சிறப்பான கடமை என்பது தனது பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைதான் என்பதை, புராண, இதிகாசங்கள் அவ்வப்போது நமக்கு வலியுறுத்தி உள்ளன. வேத நூல்கள், மனிதன் கடைபிடிக்கவேண்டிய  அறநெறிகள் பற்றிக் குறிப்பிடும்போது, உறவினர்கள் மேல் வைக்கும் பாசத்தையும், பரிவையும், பற்றிக் குறிப்பிடத் தவறுவதில்லை. 

    பன்னிரண்டு ஆண்டுகள் வனவாழ்வு, ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை என்ற துன்பங்களை அனுபவித்த போதும், உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்பினார் தருமர். குடும்ப ஒற்றுமைக்காக, தருமரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர் தம்பியர் அனைவரும். ஒவ்வொரு முறையும் அதர்மத்துக்குத் துணைபோன உறவினர்களை அழிக்கக் கொதித்தெழுந்தனர் தம்பிமார்கள்.  “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” அரசுரிமைக்காக ஒரே குடும்பத்தில் பிறந்த உறவினர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை உலகமறிந்தால், நாம் எப்படி உலகத்தாரின் நலனுக்கு வழிகாட்டமுடியும்?….என்று சமாதானம் சொன்ன தருமரின் சொல்லுக்கு தம்பிமார்கள் அனைவரும் கட்டுப்பட்டது எதற்காக?….என்பதைச் சற்று சிந்தித்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். இன்று கூட கிராமப்புறங்களில் ஒரு குடும்பத்தில் முதலாவதாகப் பிறக்கும் ஆண்குழந்தை, அக்குடும்பத்துக்குக் குலவிலக்காய் இருந்து, குடும்ப நலத்திற்கும், தனது சகோதர, சகோதரிகளிக்கு உற்ற துணையாக இருந்து குடும்பத்தை நல்வழியில் நடத்திச் செல்வான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் “தருமன்” என்ற பெயரைச் சூட்டுவதை வழக்கத்தில் கொண்டிருக்கிறார்கள். 

    பிள்ளைகளின் குணநலன்கள் சிறப்பாக அமைந்துவிட்டால், அதைவிட தாய் தந்தையருக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி வேறு ஒன்றுமில்லை. இதற்கு சிறுவயது முதலே அவர்களுக்கு நீதிநெறிகளை எடுத்துச்சொல்லி, இளவயதிலேயே அவர்கள் மனதில் நற்சிந்தனைகளை விதைக்க வேண்டும் என்பதை நமது முன்னோர்கள் நமக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். மராட்டிய மன்னன் சிவாஜியும், கவி தாகூரும், மஹாத்மாவும் இளமைக் காலத்திலேயே இத்தகைய பாக்கியத்தைப் பெற்றதால்தான், பின்னாளில் உலகம் போற்றும்படி வாழ்ந்தார்கள்.         

    வேதங்கள் காட்டுகின்ற வழிகள் தவிர, பதினெண் புராணங்களும், காப்பியங்களும், மனிதன் பின்பற்றவேண்டிய பல நன்னெறிக் கோட்பாடுகளையும், போதனைகளையும் அளவில்லாமல் அள்ளி வழங்கியிருக்கின்றன. மகாபாரதத்தில் தாய்தந்தையரின் மகிழ்ச்சியே தன்னுடைய மகிழ்சியாகக் கருதிய ஒரு உத்தமரின் வாழ்க்கை எவ்வாறு அமைந்தது?….தந்தைக்காக தன் வாழ்க்கை முழுவதும் துணையின்றியே வாழ்ந்தான். அரசனாக இருந்த அவனுடைய தந்தை, ஒரு பெண்ணை விரும்பியபொது, அப்பெண் ஒரு வாக்குறுதியை தனக்கு அளித்த பிறகே அவனை மணக்க முடியும் என்பதை வலியுறுத்தினாள்.  தனக்குப் பிறக்கும் வாரிசுக்கே அரசுரிமை அளிக்க வேண்டுமென்பதே அவளுடைய நோக்கம்.  இதனைக் கேள்வியுற்று செய்வதறியாது திகைத்தான் மன்னன். அவனுடைய மூத்த மகன், தந்தையின் விருப்பத்திற்காக, வாரிசுரிமையை விட்டுக்கொடுப்பதற்காக, தனது வாணாள் முழுவதும் மணமுடிக்காமலேயே வாழ்ந்து காட்டினான். குடும்ப நலம்தான் பெரிது என்று கருதியதால், குடும்ப ஒற்றுமைக்காக தம்முடைய தன்னுடைய வாக்குக்குக் கட்டுப்பட்டு, ஒருபோதும், ‘தனது உரிமை’ என்று எதையும் வாழ்நாள் முழுவதும் கோரவில்லை என்பதை இங்கே குறிப்பில் கொள்ளவேண்டும். பின்னாளில், உலகுக்கே நீதி நெறிகளை எடுத்துச் சொல்லும் “பிதாமகர்” என்று உலகத்தாரால் போற்றப்பட்டார் “வீடுமர்”. 

    பொருளாதார வசதியுடன், பணமும், உடலில் சக்தியும் இருக்கின்ற வரையில்தான் இவ்வுலகில் மதிப்பு இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஒரு காலகட்டத்தில் “உன்னால் ஏதாவது பிரயோஜனம் உண்டா”?….என்ற கேள்விக்கான பதிலைப் பொருத்துத்தான் அவரவர்களின் வாழ்க்கை முறையும் அமையும். பெற்ற பிள்ளைகள் கூட தாய் தந்தையருக்குச் செய்கின்ற பணிவிடைகளை ஒரு சுமை!… என்று நினைக்கும் இன்றய சூழ்நிலையில்  பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை தவறாத கண்ணியனுக்கு, ஒரு உதாரணம் ஒன்றையும், இதிகாசங்களிருந்து எடுத்துக் கூற விரும்புகிறேன். 

    வயோதிக பருவத்தில், உடல் நலமின்றி, சக்தியற்று படுக்கையில் இருந்த தாய் தந்தையர்களை மிகவும் அன்போடும், மகிழ்ச்சியோடும் தெளிவான சிந்தனையோடும் ஒருவன் கனிவோடு, முகம் சுளிக்காமல் பொருப்பாகக் கவனித்து வருவதை அந்நாட்டு மன்னன் கேள்விப் பட்டு அவனைச் சந்திக்க அவன் இருப்பிடம் வருகிறான். 

    ‘நான் இந்நாட்டு மன்னன் உன்னைச் சந்திக்க வந்திருக்கிறேன்’……என்று வீட்டு வாசலில் நின்று கூக்குரலிடுகிறான். 

    அவனோ சிறிதும் சட்டை செய்யாமல் தனது பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வதில் கவனமாக இருக்கிறான். 

    மறுபடி திரும்பத் திரும்ப அவனை அழைக்கிறான் மன்னன். 

    நம் வீட்டிற்கு யாராவது விருந்தாளியாக வரும்போது, நாம் ஏதாவதொரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருப்போம், அப்போது……. 

    சற்று பொருங்கள்!..இதோ வந்து விடுகிறேன்!…என்று சொல்வதைப் போல், அவனும் 

    சற்று பொறுமய்யா!…நீர் யாராக இருந்தாலும் சரி, நான் எனது பெற்றோர்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறேன், அதை முடித்துவிட்டு உம்மை சந்திக்கிறேன், அதுவரை இதோ இந்தக் கல்லில் உட்காரும், என்று சொல்லி ஒரு செங்கல்லைத் தூக்கி எறிகிறான் அந்தச் சிறுவன். 

    கடமையில் கண்ணாக, இப்படியும் ஒரு சிறுவனா!…இவனைப் பெற்றவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்!……வந்தவன்!……..வழிந்து ஓடுகிற அழுக்குத் தண்ணீரில் விழுந்த அந்தச் செங்கல்லின்மீது நின்ற படியே அவனுக்கு ஆசி வழங்குகிறான். 

    மன்னனாக வந்தவன் ‘பகவான் விட்டல் ஸ்ரீகிருஷ்ணன்’, அவரைச் சந்திக்காமலேயே அருள் பெற்ற நல்லவன் ‘புண்டரீகன்’ என்ற சிறுவன். 

    நற்குடும்பத்தில் பிறந்த சிறுவன் புண்டரீகனுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்குக் கடமை தவறாது பணிவிடை செய்கின்ற நல்லவர்கள் அனைவருக்குமே இன்றும் அதே செங்கல்லின் மீது நின்று கொண்டே “விட்டல் கிருஷ்ணனாக” பண்டரிபுரத்திலிருந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறான். மராத்தியில் ‘விட்’ என்ற சொல்லுக்கு செங்கல் என்ற பொருள் படும். 

    நற்குடும்பத்தில் பிறப்பதே அரிது என்பதை புராணங்கள் கூறுகின்றன. இதுகூட முற்பிறப்பில் செய்த புண்ணிய பலன்களின் வாயிலாகவே இத்தகைய நற்பிறப்பு சாத்தியமாகக் கூடும். ஆக நற்குடும்பம், நற்பிறப்பு என்பதெல்லாம் ஒருவனது நல்ஒழுக்கம், நற்பண்பு, கடமை தவறாமை போன்றவையே தீர்மானிக்கின்றன.  வாழ்க்கையில் மிக உன்னத நிலைக்குச் சென்ற பலரது வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால், அவர்களது முன்னோர்களும் இவர்களைப் போலவே உயர்ந்த நிலையில் வாழ்ந்து இருந்ததை அறியமுடியும். இவர்கள் கூறும் அறிவுரைகளை ஒருகாலும் புறக்கணிக்கக் கூடாது என்பதற்கு, எளிய தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி அமைந்த சித்தர் தத்துவப்பாடல் வரிகளில் ஒன்றிரண்டைக் காண்போம். 

    “நல்லவர் தம்மைத் தள்ளாதே – அறம்

    நாலெட்டிலொன்றை நாடித் தள்ளாதே

    பொல்லாங்கி லொன்றும் கொள்ளாதே – கெட்ட

    பொய் மொழிக் கோள்கள் பொருத்த விள்ளாதே”         

    நல்லவர்களின் வார்த்தைகள், சான்றோர்கள் சொன்ன அறங்கள் இவற்றைப் புறக்கணிக்கக்கூடாது. புறம் பேசாமல், பொல்லாத காரியங்களைச் செய்ய வேண்டாம் என்பதை இப்பாடல் விளக்குகிறது. நன்னெறிகளையும், அறநெறிகளையும், இலக்கியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள் மூலமாக அறிந்துகொண்டாலும், வாழ்க்கைச் சிக்கலுக்குத் தீர்வு காணும் நல் ஆலோசனைகளை, வேறு எங்கும் தேடாமல் நம்மை வளர்த்து ஆளாக்கிய, நமது முன்னோர்களின் அனுபவங்களிலிருந்தே, எளிதாகப் பெற்று விட முடியும்!….அதை இன்றளவும் நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை?……         

    தொடரும்…..

    Share
  • நட்ட நடுவில் (பாடல்)

     

    இசைகவி ரமணன்

    நட்டநடுவில் – சுவைத்து மகிழுங்கள்

    நட்ட நடுவில் பொட்டுவைத்து
    நட்சத்திரங்களை நட்டுவைத்து
    கோள்களினைச் சுழலவைத்து கோளங்களை அலையவைத்து
    வெள்ளம்வடிந்து நாணல்புல்லை நிமிரவைத்தவள்! அந்த
    வானத்திலே முகம்துடைத்துச் சுருட்டி எறிந்தவள்!
     அவள்தான் என்னையும் படைத்தவள்!
     எனக்குள் தன்னையும் அடைத்தவள்!!
    தர்மங்களும் நியாயங்களும் அவள் மனத்தின் இட்டம், நம்
    தர்க்கமெல்லாம் தாழ்வாரத்தில் குழந்தை அடிக்கும் கொட்டம்!
    மர்மமாக இருப்பதிலும் அவளுக்கில்லை திட்டம்
    மனம்தொறந்தா மல்லிகைஉதிர்ந்து மணக்குமவள் கொற்றம்!

    தக்கைபோல மெதந்திடாமல்
    தாயை அறிய முடிந்திடுமா?
    கட்டிப்பிடிக்கவும் முடியாது விட்டுவிலகவும் வழியேது?
    தொட்டுப் பார்க்க முடியாத தொலைவில் ராணி, என்னைத்
    தொட்டுத் தொட்டு வார்த்தைசெல்லும் தோழமை வாணி
     அவள்தான் தொலைவில் ராணி
     அவளே தோழமை வாணி

     
    சாதனையும் வேதனையும் கானலிலே நீரு, அவ
    சோதனையே வைப்பதில்லே தேறுவது யாரு?
    இன்பம் பதநி துன்பம் கள்ளு இப்படிப் பாருநீ
    சரியும் தவறும் அவள்வீணையில் சரிகமபதநி

    பேரைச் சொல்லி அழைத்தாலும்
    பேந்தப் பேந்த முழித்தாலும்
    ஊரைக்கூட்டித் தொழுதாலும் உருண்டு புரண்டு விழுந்தாலும்
    ஒண்ணும்லாபம் இல்லேநானும் சொல்வதைக் கேளு, அவளை
    உயிர்க்குயிரா அம்மான்னு ஒரு தரம் கூவு
     உண்மையைச் சொல்லுறேன் கேளு
     அம்மான்னு ஒருதரம் கூவு

    படத்திற்கு நன்றி :

    https://ramanan50.wordpress.com/2012/09/01/for-childless-couplethirukkarukaavoor-details/

    நட்டநடுவில் – செவி குளிர!

     

    Share
  • அம்பிகையின் அழகு

     

    இசைக்கவி ரமணன்

    அம்பிகையின் அழகைக் கேட்டு மகிழுங்கள்!

    ஜூலை 1976. பாரதி கலைக்கழக அன்பர்கள் ஒரு திருக்கோயிலில் ”தெய்வக் கவியரங்கம்” என்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அது எந்தக் கோயில் என்பது இப்போது நினைவில் இல்லை. ஐந்தாறு கவிஞர்கள் – இளையவன், மதிவண்ணன் போன்றோர், ஆளுக்கொரு தெய்வத்தைப் பாடவேண்டும் என்பதாக ஏற்பாடு.

    “நீ அம்பிகையின் அழகு என்ற தலைப்பில் பாட முடியுமா?” என்று கேட்டார்கள். நான் மிக அலட்சியமாகவும் ஆணவத்தோடும், அது ரொம்ப சுலபம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
     
    அந்தக் கணத்திலிருந்து என்னில் கவிதையைக் காண இயலவில்லை…நான் சொல்வது உங்களுக்கு நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். இருந்தாலும் சொல்கிறேன். ஒரு வார்த்தை கூட எனக்கு வரவில்லை! பேசிக்கொண்டே இருந்தவன் தீடீரென்று நட்ட நடு அவையில் ஊமையாகிப்போனால் எப்படி இருக்கும்? அப்படி, எனக்குத் தமிழே மறந்துவிட்டதுபோல் மனது சூனியமாகி விட்டது.

    யாரிடமும் இதைப் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு துக்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. ஒருநாள் பகற்பொழுது முழுவதும் எனக்குத் தமிழே மறந்ததுபோல், சொல்லே இல்லாமல் துடித்தேன்.

    விளக்கேற்றி வைத்து, பராசக்தியிடம் மன்னிப்புக் கேட்டேன். ஜீவித்திருக்கும் உயிர்களுக்கு எப்படி அடுத்த மூச்சு நிச்சயம் இல்லையோ, அதுபோல் அடுத்த சொல்லுக்கான உத்தரவாதம் இல்லாத கவிஞன்தான் நான்; அவளிட்ட பிச்சையே தவிர என் திறமை என்று ஏதுமில்லை; என்று புரிந்துகொண்டேன்.

     
    பிறகு வந்தன வார்த்தைகள். அதுதான் “அம்பிகையின் அழகு” என்னும் கவிதை. அதை என் குரலில் ஒலிப்பதிவு செய்து இத்துடன் இணைத்துள்ளேன். இதில் இலக்கியம், கவிதை நயம் எதுவும் கிடையாது. ஆனால், எனக்கு இது அம்பிகையுடனான அந்தரங்க அனுபவம். 36 ஆண்டுகளுக்குப் பிறகு இதை ஏன் பொதுவில் கொண்டு வருகிறேன்?

    அவளைத்தான் கேட்கவேண்டும்!

    அம்பிகையின் அழகை செவியாலும் பருகலாம்!

    படத்திற்கு நன்றி :

    http://www.starsai.com/garbarakshambigai-photos/

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 42 (22.1012)

     

    மலர்சபா

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை
     
     
    விஞ்சை வீரன் தன் காதலியுடன் வந்து விழாக் காணுதல்
     
     
    உச்சி உயர்ந்த இமயமலையையும்
    வளமையான நீருடைய கங்கையாற்றையும்
    அழகு பொருந்திய உச்சயினி நகரத்தையும்
    விந்திய மலை சூழ்ந்த காட்டையும்
    வேங்கடம் என்னும் மலையையும்
    நிலம் கொள்ளாத அளவு
    பெருவிளைச்சல் காணும்
    காவிரி பாயும் சோழநாட்டினையும்
    தன் காதலிக்குக் காட்டிய பின்
    இதழ்விரி பூக்கள் நிறைந்த
    தோட்டங்களை உடைய
    புகார்நகரம் அடைந்தனன்
    விஞ்சையன்.
     
     
    இந்திரனைத் தொழுது,
    எல்லா இடங்களையும்
    முறைமைப்படியே
    அவளுக்குக் காட்டியபின்
    வளம் பொருந்திய புகார் நகர்
    இந்திரவிழாவினையும்
    மாதவியின் ஆடலையும்
    காணலுற்றனர்.
     
     
    மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களைக் காதலிக்குக் காட்டி விஞ்சை வீரன் மகிழ்தல்
    (முதல் ஐந்து வகைகள்)

     
    திருமாலைப் புகழும் தேவபாணியும்
    வருணப்பூதர் நால்வரைப் புகழும்
    நால்வகைத் தேவபாணியும்
    பல வகை உயிர்களும் தம் ஒளியால்
    நன்மை பெறும் தன்மையுடைய
    வானூர்ந்து செல்லும்
    நிலவைப் பாடும் தேவபாணியும்
    ஆகிய
    இசைப்பாடல்களைப் பாடிய பின்னர்
    அவதாளம் நீங்கிய
    நல் தாளத்தின் இயல்பு பொருந்த
    மாதவி புரிந்த நடன வகைகள்
    ஒவ்வொன்றையும் தன் காதலிக்குக்
    காட்டி மகிழ்ந்தனன்.
     
     
    1. கொடுகொட்டி
     
     
    பாரதி(பைரவி) ஆடியமையால்
    பாரதியரங்கம் எனப்பட்ட சுடுகாட்டில்…
    திரிபுரத்தையும் எரியச் செய்ய
    தேவர்கள் வேண்டியதால்,
    தீயினைத் தலையாய் உடைய
    திருமாலாகிய அம்பினை
    ஏவிய சிவன்
    திரிபுரத்தைச் சாம்பலாக்கினன்.
     
    அத்தருணத்தில்
    உமையவளைத் தன் ஒருபாகமாகக் கொண்டு
    தேவர் யாவரினும் சிறந்த இறைவன்
    வெற்றிக் களியில் கைகொட்டி ஆடிய
    கொடுகொட்டி ஆடல்
    இது பாராய்!
     
     
    2. பாண்டரங்கம்
     
     
    தன் தேரின் முன்
    பாகன் என நின்றிட்ட
    நான்முகன் காணும்படி
    பாரதி வடிவம் பூண்டு
    திருநீறு அணிந்து
    சிவபெருமான் ஆடிய
    பாண்டரங்கக் கூத்து
    இது பாராய்!
     
     
    3. அல்லியம்
     
     
    கஞ்சனின் வஞ்சனை
    வெல்ல நினைத்து
    அவன் ஏவி அனுப்பிய
    யானையின் கொம்பை ஒடிப்பதற்காக
    அஞ்சன வண்ணன் நின்றாடிய
    அல்லியக் கூத்து
    இது பாராய்!
     
     
    4. மல்லாடல்
     
     
    கஞ்சன் அவன் ஏவிய
    அசுரர்களை வெல்ல
    திருமால் ஆடிய
    மல்லாடல் எனும் கூத்து
    இது பாராய்!
     
     
    5. துடிக் கூத்து
     
     
    கருமையான கடலது நடுவே
    நீர் அலைகளே அரங்கமெனக் கொண்டு
    தன்னை எதிர்த்து முன்நின்ற
    வஞ்சச் சூரனை
    எதிர்த்துக் கொன்ற முருகன்
    துடி கொட்டி ஆடிய
    துடிக் கூத்து
    இது பாராய்!

     

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 28 – 30
     
     
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 31- 51
     
     

    படத்திற்கு நன்றி :

    http://macaulay.cuny.edu/eportfolios/judell12/2012/09/15/the-elegant-dance-form/

    Share
  • நடிக்கிறாள்

     

    இசைக்கவி ரமணன்

    வீசும் ஒளிவிழிப் பார்வையில், எங்கள்
    வீரர் உதிர்த்திடும் வேர்வையில், ஞானத்
    தேசு பெருகிடும் நெஞ்சினில், எங்கள்
    தேசத்து மாதர்கள் நெற்றியில், பொன்னைப்
    பூசிப் பரப்பிய மாலையில், இன்பப்
    புள்ளினம் ஆர்த்திடும் சோலையில், ஒரு
    தூசின் அசைவு முயற்சியில், சக்தி
    துயர்கெடக் கூத்து நடிக்கிறாள்!

    ஆழ நடுக்கருங் காட்டிலே, ஓர்
    ஆளுமில் லாக்குச்சு வீட்டிலே, நன்கு
    வாழ மறந்திட்ட போதிலே, நல்ல
    வார்த்தையொன் றும்விழாக் காதிலே, கண்ணில்
    ஆழத் துயர்சுழல் கையிலே, நித்தம்
    ஆடியின் புற்றுவீழ் பொய்யிலே, தோன்றி
    வாழத் திருவொளி பெய்யவே, சக்தி
    வாழ்வெனும் கூத்து நடிக்கிறாள்!

    எண்ணரியப் பல பந்துகள், தமை
    எட்டி உதைத்துச் சுழற்றுவாள்! நீல
    விண்ணைக் கடலினி இம் மண்ணினை, நூறு
    வித்தைகள் காட்டி இயக்குவாள், மனம்
    எண்ணுமுன்னே சிரம் தாழ்ந்திடும், முன்னோர்
    என்னும் மலர்களைச் சூடுவாள், அவள்
    எண்ணும்படிக் கொன்றுமே இலாத
    என்னிலும் ஓடி நடிக்கிறாள்!

    காதலெனச் சொல்லிக் காமத்தில், இந்தக்
    கட்டுடல் வீழ்ந்து துடிக்கையில், நெஞ்சம்
    சாதலை எண்ணி வருந்தியே, ஒரு
    தத்துவம் இன்றித் தவிக்கையில், வாழ்வில்
    சோதனை யாய்ப்பல துன்பங்கள், வந்து
    சூழ்ந்து விழுந்து கடிக்கையில், இன்ப
    வேத மெனக்கவி வெள்ளமாய், சக்தி
    வேக நடனம் நடிக்கிறாள்!

    பண்ணிய பாவங்கள் எத்தனை! எய்தும்
    பழிகள் ஊறுகள் எத்தனை!
    கண்ணிருந்தும் குருடாகிய, கலி
    காலங்கள் எத்தனை எத்தனை!
    எண்ணி இவைகளை ஓர்கணம், இந்த
    ஏழை அழுது புரள்கையில், எந்தன்
    கண்ணின் றுருண்டிடும் முத்திலும், அந்தக்
    காளி நடனம் நடிக்கிறாள்!

    படத்திற்கு நன்றி :

    http://en.wikipedia.org/wiki/File:Kali_Dakshineswar.jpg

    Share
  • தேர்ப்பாகன் மகன்…(பாகம்-1)

    ராமஸ்வாமி ஸம்பத்

                                            

    ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயான ஆதவனை அருணோதயப் பொழுதினில் போற்றிவிட்டு தன் அறைக்குத்  திரும்பிய அங்கநாட்டு அரசன் கர்ணன், அங்கு அஸ்தினாபுரத்து இளவரசன் துரியோதனன் வீற்றிருப்பதைக் கண்டு துணுக்குற்றான்.

    “ஆருயிர் நண்பரே! தாங்கள் இங்கே? அதுவும் இவ்வேளையில்? இச்சமயத்தில் என்னிடம் ஏதேனும் யாசிப்பவர்கள்தான் இவ்வறையில் காத்திருப்பர்,” என்று பதறிய கர்ணனை துரியன் அணைத்துக் கொண்டான்.

    “நண்பா, பதற்றம் வேண்டாம். நான் இங்கு அந்த நோக்கத்துடன் வரவில்லை. துவாரகையில் எனக்குக் கிடைத்த ருசிகரமான அனுபவத்தை உன்னிடம் பகிர்ந்துகொள்ளவே இங்கு ஓடோடி வந்திருக்கிறேன். நீ கூறியபடி நான் துவாரகைகுச் சென்று அம்மாயாவி கண்ணனைச் சந்தித்து வரப்போகும் போருக்கு அவன் உதவியைக் கேட்டேன். அங்கே அர்ஜுனனும் அதே நோக்கத்துடன் அங்கு வந்திருந்தான். பஞ்சணையில் துயில்கொண்டிருந்த கண்ணன் முன்பே வந்திருந்த என்னைப் புறக்கணித்து அந்த பார்த்தனுக்கே முதல் அவகாசம் அளித்தான். ’இது என்ன நியாயம்?’ என்று கேட்ட என்னைப் பார்த்து, ‘நீங்கள் இருவரும் எனக்கு நெருங்கிய உறவினர்தான். ஆனாலும் அர்ஜுனன் உன்னைவிட இளையவன். மேலும் துயில் எழுந்ததும் முதலில் நான் பார்த்தது பார்த்தனைத்தான். ஆகவேதான் அவனுக்கு முதல் சந்தர்ப்பம் அளித்துள்ளேன்,’ என்று மழுப்பினான்.

    “பின்னர், அர்ஜுனனை நோக்கி, ’என் உதவி உங்கள் இருவருக்கும் கட்டாயம் கிடைக்கும். போரில் என்னுடைய நாராயண சேனை ஒருபக்கமும், எதிர்ப் பக்கத்தில் ஆயுதம் ஏந்தாமல் நானும் இருப்போம். உனக்கு எது தேவையோ அதனை உனக்கு வழங்கி மற்றதனை துரியோதனனுக்கு அளிப்பேன். நன்கு ஆலோசித்து ஒரு முடிவிற்கு வா,’ என்று கண்ணன் கூறினான்.

    “ஆனால் அந்த அறிவிலி அர்ஜுனன் கண்ணனிடம் நாராயண சேனையைக் கோராமல், ‘நீங்கள்தான் எனக்கு வேண்டும்’ என்றான். நானும் ’இளையவன் விருப்பப்படியே நடக்கட்டும். எனக்கு உங்கள் நாராயண சேனையே போதும்’ என்று கூறி விடைபெற்றுக் கொண்டேன்,” என்று துரியன் மகிழ்ச்சியோடு சொல்லி முடித்தான்.

    கர்ணன் முகத்தில் கவலை படர்ந்தது. “நண்பரே! தவறு செய்துவிட்டீர். சாற்றினைப் பறிகொடுத்துவிட்டு சக்கையை கொணர்ந்திருக்கிறீரே! இதன் விளைவைப் பற்றி யோசித்திருக்க வேண்டாமா?” என்றான்.

    “உனக்கு ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை, கர்ணா? நீ என் பக்கம் இருக்கிறாய்,  பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமன் போன்ற மாரத வீரர்கள் என் பக்கமிருக்க, நம்மை நிராயுதபாணியான கண்ணனால் என்ன செய்ய முடியும்? அவனுடைய நாராயண சேனையைக் கொண்டே அவனை முடிக்கிறேனா இல்லையா பார்,” என்று கூறிவிட்டு துரியன் அங்கிருந்து அகன்றான்.

    குழப்பத்தில் வீழ்ந்த கர்ணனை “அங்கதேச மன்னர்க்கு வெற்றி உரித்தாகுக!” என்ற கட்டியம் இவ்வுலகுக்குக் கொண்டு வந்தது. அவன் அந்தரங்க ஒற்றன் அங்கே அழைப்புக்காகக் காத்திருந்தான்.

    “அருகில் வா. என்ன செய்தி?”

    “அரசே! துவாரகையிலிருந்து வருகிறேன். துவராகாதீசர் வரப்போகும் போரில் அர்ஜுனருக்கு தேரோட்டியாக இருக்கப்போகிறார் என்பதே எனக்குக் கிடைத்த தகவல்.”

    “என்ன தேரோட்டியாகவா.. மெய்யாகத்தான் சொல்கிறாயா வீரனே!

    ”அரசே.. துவாரகாதீசர் இப்படித்தான் அர்ஜுனருக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்.. அருஜுனருடைய தேருக்கு கண்ணனே தேரோட்டி!!” 

    வியப்பில் ஆழ்ந்த கர்ணனின் உள்ளம் ’கண்ணா! நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்! அதனால்தான் உன்னைச் சான்றோர்கள் வாசுதேவன் எனப் புகழ்கிறார்கள் போலும்’ என்று முணுமுணுத்தது. அதேநேரம் அவன் மனத்தேர் காலத்தின் அடிச்சுவட்டில் சற்றுப் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அந்த நிகழ்ச்சி கூட அப்படியே பசுமரத்தாணி போல மனதில் பைந்துவிட்ட்தே.. எப்படி மறக்கமுடியும் அந்த நாளை..

     

    றக்குறைய ஒரு திங்களுக்கு முன், வழக்கம்போல் வியோமநாதனுக்குக் வைகறை வணக்கம் செய்துவிட்டு அறைக்கு வந்த கர்ணனை, ”வணக்கம் அங்க மன்னரே,” என்ற இனிமையான குரல் வரவேற்றது.

    (தொடரும்)

    சித்திரத்துக்கு நன்றி:

    http://www.kidsgen.com/fables_and_fairytales/indian_mythology_stories/karnas_plan.htm

    Share
  • தொல்லை காட்சி பெட்டி

    மோகன் குமார்

    தொல்லை காட்சி : 7 C –யும்ஹவுஸ்புல்லும் 

    ஜெயா தொலை காட்சியில் புதிய நிகழ்ச்சி ஹவுஸ்புல்   

    ஒரு கோடி ரூபாய் பரிசு என அறிவிப்புடன் பரபரப்பாய் வருகிறது ஜெயா டிவியில் ஹவுஸ்புல் என்கிற புது நிகழ்ச்சி. அலுவலகம் மற்றும் கல்லூரியில் ” தம்போலா ” என்கிற பெயரில் விளையாடுவோமே அதே விளையாட்டு தான் இது ! தம்போலா ஒரே அறையில் அமர்ந்து ஆடுவோம். இங்கு நடத்துவோர் டிவியிலும், கலந்து கொள்வோர் வீட்டிலும் இருக்கிறோம் அவ்வளவு தான் வித்யாசம் !

    அவர்கள் சொல்கிற தொலைபேசி எண்ணுக்கு நாம் போன் செய்ய வேண்டும். அவர்கள் ” விஸ்வநாதன் ஆனந்த் எந்த விளையாட்டில் புகழ் பெற்றவர் ” போன்ற மிக கடின கேள்விகள் கேட்கிறார்கள். போன் செய்யும் அனைவருமே அவர்கள்  கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி விடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஆயிரக்கணக்கில் பரிசு தருகிறார்கள். 

    பார்க்கிற என் பெண்ணே “என்னப்பா இது கால் பண்ற எல்லாருக்கும், ஒவ்வொரு நிமிஷத்துக்கும் பல ஆயிரம் ரூபாய் தர்றாங்க. இது டூப்பு” என்கிறாள். பார்க்கலாம் நிகழ்ச்சி மக்களிடம் எடுபடுகிறதா என !

    டிவியில் பார்த்த படம் – சேது 

    கே டிவியில் சேது படம் பார்த்தோம். பொதுவாய் கே டிவி பக்கம் போவதே இல்லை. ஒரு படம் பார்க்க ஆரம்பித்தால் விளம்பரத்துடன் சேர்த்து மூன்று மணி நேரம் வீணாகி விடும் என்பதால். அதுவும் பெரும்பாலும் பார்த்த படங்களாக வேறு இருக்கும் ! வார இறுதியில் வேறு நல்ல படம் இல்லாததால் கே டிவி பக்கம் செல்ல வேண்டியதாயிற்று. 

    சேது – இரண்டாம் பகுதி -ஒவ்வொரு முறை பார்க்கிற போதும் மனதை பிசைந்து விடும். விக்ரமுக்கு இந்த படத்துக்கு சிறந்த நடிகர் விருது மத்திய அரசு எப்படி தராமல் போனது என்று புரிய வில்லை !

    பி. ஆர். பந்துலு குறித்த நிகழ்ச்சி

    பி. ஆர். பந்துலு ! மாபெரும் இயக்குனர். சிவாஜி மற்றும் எம். ஜி . ஆரை வைத்து பல ஹிட் படங்கள் தந்தவர். இவரைப்பற்றி இவரது மகள் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி மற்றும் மகன் ஜெயா டிவியின் “திரும்பி பார்க்கிறேன்” நிகழ்ச்சியில் பேசினர்.

    சுதந்திர போராட்டம் குறித்த நல்ல படங்கள் என இந்தியாவில் பத்து படங்கள் தான் உண்டு என்றும் அதில் மூன்றை இயக்கியவர் தங்கள் தந்தை என்றும் கூறியவர்கள், கப்பலோட்டிய தமிழன் பெரும் தோல்வி என்றும் அதில் தங்கள் தந்தைக்கு பெரும் நஷ்டம் என்றும் கூறினர். மேலும் இன்று 125 நாளுக்கு மேல் ஓடும் கர்ணன் படம் வெளிவந்த காலத்தில் பெரும் தோல்வி படமாய் இருந்ததை சற்று வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டனர்.

    ஆரம்பத்தில் சிவாஜியோடு தொடர்ந்து பணியாற்றிய பந்துலு ஏனோ தனது கடைசி பத்து வருடங்களில் எந்த சிவாஜி படமும் இயக்க வில்லை. 1964 – ல் பந்துலு -சிவாஜி காம்பினேஷனில் வெளியான கர்ணன் மற்றும் முரடன் முத்து தான் இந்த ஹிட் காம்பினேஷன் இணைந்து பணியாற்றிய கடைசி படங்கள் !

    சீரியல் பக்கம்:  7 C

    சமீபத்தில் வந்த சாட்டை படத்தின் கதையும் இந்த தொடரின் அவுட்லைனும் ஏறக்குறைய ஒன்று தான் என நினைக்கிறேன். அவ்வப்போது விஜய் டிவி யில் காட்டும் டிரைலரிலேயே இந்த சீரியலின் கதை மற்றும் போக்கை  ஊகிக்க முடிகிறது. வழக்கமாய் சீரியல் பார்க்கும் குடும்ப தலைவிகள் மற்றும் வயதானவர்களை தவிர்த்து விட்டு பள்ளி செல்லும் சிறு வயது மக்கள் பார்த்தால் மற்றவர்களும் பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சீரியல் பற்றி விரிவாக நண்பர் முரளிதரன் எழுதிய பதிவை இங்கு வாசியுங்கள் !

    ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள்

    பல டிவிக்களும்  ஆயுத பூஜைக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் காத்திருக்கின்றன. சண் டிவியில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் திரையிட உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படம் என்பதால் கலைஞர் டிவியில் தானே வரும்? எப்படி சண் டிவி போனது என தெரியவில்லை. மற்றபடி ஏற்கனவே போட்ட பல படங்கள் தான் போடுகிறார்கள். விஷால் மற்றும் சமீரா ரெட்டி என்கிற இரு ஹீரோக்கள் நடித்த வெடி படம் போடும்போது அந்த படம் போடும் சானல் பக்கமே போகாமல் இருக்கவும் என எச்சரிக்கை தருகிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம் !

    சூப்பர் சிங்கர் அப்டேட் 

    அதென்னவோ தெரியலை .. ஜுனியரோ , சீனியரோ எந்த சீசன் நடந்தாலும் சூப்பர் சிங்கரில் இறுதி போட்டிக்கு முன் சென்னை சிட்டி செண்டர் சென்று மாடியில் நின்று கொண்டு பாடி தீத்துடுவாங்க. இம்முறையும் அதும் தொடர்ந்தது. 

    இறுதி போட்டியில் பிரகதி அல்லது சுகன்யா வெல்ல வாய்ப்புகள் மிக மிக அதிகம் என தோன்றுகிறது. பார்க்கலாம் .. என்ன நடக்கிறது என !

    Share
  • நிலவின் பனிப்பாறைச் சேமிப்புக்கு நீர் வாயு பரிதிப் புயல் வீச்சில் பெற்றிருக்கலாம்

     

                                                                          சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா



    நிலவின் துருவங்களில் உறைந்த
    நீர்ப்பனிக் குழிகள்
    இருப்பதாய் நாசா நிபுணர்
    தெரிவிக்கிறார் !
    குடிநீரை விண்கப்பலில்
    கொண்டு செல்வது
    கோடி கோடி வீண் செலவு !
    மறைமுகமாய் நீர்ப்பனிப் பாறைகள்
    பல யுகங்களாய் இறுகி
    உறைந்து கிடக்கும்
    பரிதி ஒளி படாமல் !
    எரிசக்தி உண்டாக்கும்
    அரிய ஹைடிரஜன் வாயுக்கள்
    சோதனை மோதலில் வெளியேறும் !
    சூரியப் புயலில் வெளியாகும்
    வாயுக்கள் சில
    நீரை உண்டாக்கும் நிலவில் !
    செவ்வாயிக்குச் செல்லும்
    பயணிகட்கு
    ஒருவாய் நீ குடிக்க
    வெண்ணிலவுப் பனிப்பாறையில்
    தண்ணீர் வளம் உள்ளது !
    எரிசக்தி ஹீலிய வாயு
    ஏராளமாய்ச் சேர்க்கலாம் நிலவில் !
    மீதேன், மெர்குரி, மெக்னீசியம்
    வெள்ளி, அமோனியா வாயு
    வெண்ணிலவில் கிடைக்கும் !
    வரண்டு போன
    பாலைவன நிலவில்
    பசுஞ்சோலை ஆக்கிட ஆழ்குழியில்
    நீர்ப் பாறை
    நிரந்தர மான தெப்படி ?
    பரிதி ஒளி புகாத
    பாதாளக் குழிகளில்
    பாறை நீரைத் திரவ மாக்கி
    மேற்தளத் துக்கு
    ஏற்றுவது எப்படி ?

    ++++++

     

    “மிச்சிகன் பல்கலைக் கழகச் சோதனையில் “உட்சிவப்பு ஒளிப்பட்டையியல்” [Infrared Spectroscopy] முறைப்படி நீர் எத்தன்மையது [OH, H2O, or CH] என்று சொல்லி விடலாம். ] காலிஃபோர்னியா பொறி நுணுக்கக் கூடத்தில் [Caltech] செய்த “அயான் – நிறை ஒளிப்பட்டையியல் [Ion-Mass Spectroscopy] முறையில் ஹைடிராக்ஸில் [OH] உபரி வாயு பூமிக்குக் கொண்டு வந்த நிலவுத் தூசிகளில் [Lunar Regolith] இருப்பதைக் கண்டோம். அந்த ஹைடிராக்ஸில் நீர்வாயு சூரியப் புயலில் தெறிக்கும் புரோட்டான்கள் [ஹைடிரஜன் அணுக்கரு] நிலவில் உள்ள ஆக்ஸிஜனோடு சேர்ந்து ஹைடிராக்ஸில் [OH] ஆகியிருக்க வேண்டும்.”

    யாங் லியூ [Yang Liu University of Tennessee]

    “சூரியப் புயல் தொடர்ந்து மின்னேறிய பரிதித் தூள்களை [Charged Particles – Protons] நிலவின் மீது தூவி வருகிறது. அவற்றின் ஆற்றல் தானியத் தூசியின் மீது அழுத்தமாய்ப் பதிந்து ஒட்டியுள்ள ஆக்ஸிஜனோடு சேர்ந்து கொள்கிறது. நிலவில் பூமிபோல் பாதுகாப்பு வாயுக் குடையும், நிரந்தரக் காந்தப் புலமும் இல்லாததால் சூரியப் புயல் தொடர்ந்து நிலவைத் தாக்கி ஹைடிராக்ஸில் [OH] உற்பத்தியாகி வருகிறது.”

    யாங் லியூ [Yang Liu University of Tennessee]

    “நிலவில் எங்கும் புழுதித் துகள் [Lunar Regolith] பரவிக் கிடக்கிறது. ஆதலால் எங்கள் ஆய்வில் நிலவில் நீர் உபரி வாயு [OH] இருப்பது உறுதியானது. ஆனால் எதிர்கால விண்வெளிப் பயணிகள் நேரடியாகப் பயன்படுத்தக் கூடிய நீர் பனிப்பாறை வடிவிலோ அல்லது தண்ணீர் வடிவிலோ இருப்பதில்லை.

    யாங் லியூ [Yang Liu University of Tennessee]


    “நிலவின் ஆழ்குழிப் பனிப் பாறையிலிருந்து நீரை எப்படி வெளியேற்றுவது என்பதே முக்கியப் பிரச்சனை ! இது பொறிநுணுக்க நிபுணருக்கு முதலில் தீர்க்க வேண்டிய ஒரு சவாலாக இருக்கும். நிலவின் நீரை அறுவடை செய்து பயன்படுத்த இன்னும் நீண்ட காலம் ஆகலாம். முதலில் நீர் நிலவில் எப்படித் சேர்ந்தது என்பதை அறிவதே அதைச் சேமிக்க ஏறும் முதற்படி.

    டெட்லெஃப் கோஸ்சினி (ESA Chandrayaan -1 Project Scientist)

    “நிலாவில் நீர் இருப்பதாக நாசா உறுதி செய்திருக்கிறது. விண்வெளித் தேடலுக்கு வேண்டிய குடிநீர், மற்றும் மனிதர் சுவாசிக்க ஆக்ஸிஜன், ராக்கெட் எரிசக்திக்குப் பயன்படும் எரிவாயு ஹைடிரஜன் போன்ற முக்கிய தேவைகள் இருப்பதையும் நிரூபித்துள்ளது.”

    மைக்கேல் வார்கோ (பிரதம நிலா உளவு விஞ்ஞானி, நாசா தலைமைக் கூடம்)

    “வாயு மண்டலம் இல்லாத வரண்ட சந்திரனில் நிரந்தமாய் சூரிய வெளிச்சம் இல்லாத ஆழ்குழிகளில் நீண்ட காலம் நீர் இருக்க எப்படிச் சாத்தியமாகிறது ? நிலவின் துருவப் பகுதிகளில் பரிதி வெளிச்சம் 2 டிகிரிக் கோணத்துக்கும் குறைவான தொடுவானில் பட்டும் படாமலும் தெரிகிறது. ஆழ்குழிகளின் விளிம்புகள் நிரந்தரமாய்ப் பள்ளத்தின் கீழ்த்தரையைப் பல பில்லியன் ஆண்டுகளாக முற்றிலும் மறைத்து வந்துள்ளன. அத்தளங்களின் குளிர் உஷ்ணம் (-200 டிகிரி C). அவ்விதம் நீர்ப் பனிக்கட்டி ஆழ்குழிகளில் பேரளவு இருப்பதால் பிற்காலத்து விண்வெளி விமானிகளுக்குக் குடிநீராகவும், சுவாசிப்பு வாயுவாகவும், ஏவுகணை எரிவாயுவாகவும் உபயோகமாகும்.”

    டோனி கொலாபிரீட் லகிராஸ் திட்ட விஞ்ஞானி.

    “நிலவில் கண்ட (LCROSS Spacecraft) நீர் மாதிரிகள் பரிதி மண்டலம் உண்டான தோற்ற வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் அறியப் பயன்படும்.”

    கிரேக் டெலோரி (Greg Delory Senior Fellow Space Sciences Lab & Center)

    “தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது. நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை. கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம். பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

    ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) (ஜனவரி 26, 2008)

    நிலவில் நீர் இருப்பதற்குச் சூரியப் புயல் மூலக் காரணமாய் இருக்கலாம்

    சமீபத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவின் மறைவுத் தளக் குழிகளில் பனிப்பாறை நீர்மை காணப் படுவதற்குச் சூரியப் புயல் வீச்சு மூலக் காரணமாக இருக்கக் கூடும் என்று உறுதியாகக் கருதுகிறார்கள். 1969 – 1972 ஆண்டுகளில் அமெரிக்கா செய்த ஆறு மனிதப் பயணங்களில் பூமிக்குக் கொண்டு வந்த நிலவு மண் மாதிரிகளில், நுண்துகள் விண் கல் தாக்கல் ஏற்பட்டு [Micrometeorite Impacts] ஹைடிராக்ஸில் [OH – Hydroxyl] மூலக்கூறு காணப் பட்டது. 1970 முதல் நிலவில் நீர் இருப்பது விவாதிக்கப் பட்டாலும், 2008 இல் தான் முதன்முதல் பொறி நுணுக்க விருத்தியால் நிலவில் எவ்வளவு நீர் உள்ளது என்பது பரிமாண அளவில் அழுத்தமாக அறியப் பட்டது. அடுத்து 2009 ஆண்டில் நாசாவின் லகிராஸ் [LCROSS – Lunar Crater Observation and Sensing Satellite] நிலவுக்கு ஏவப்பட்டு, சோதனைக்காக ஒரு பனிப்பாறைக் குழியில் விழ ஏற்பாடானது. அப்போது குழியிலிருந்து வெளியே தெறித்த புகை மூட்டத்தில் நீர்ப்பனி மிக்க துளிகள் இருப்பது அறியப் பட்டது. நீரும், நீரைச் சேர்ந்த ஹைடிரஜன் கலவைகளும் [OH, CH, or H2] அந்த நிலவுப் புழுதியில் இருந்தன என்று அறிந்தார்கள்.

     

    மீண்டும் 2010 இல் லகிராஸ் விண்ணுளவி [LCROSS Space Probe] நிலவுத் தூசிப் புழுதியில் [Lunar Regolith] நீர்ப்பனி வடிவில் நீர் உள்ளது கருவி மூலம் தெளிவாய் அறியப் பட்டது. அவ்விதம் நீர்ப்பனி நிலவில் இருப்பது எவ்விதம் நிகழ்ந்திருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி செய்தனர். அதற்குப் பல வழிகள் இருக்கலாம். சூரியப் புயல் அடிப்பு, வால்மீன் நிலவைத் தாக்கல், அல்லது எரிமலை வாயு முடக்கம் [Volcanic Degassing] போன்றவை சில சான்றுகள். ஆய்வுக் கூடத்தில் செய்த போலி இயக்கத்தில் [Laboratory Simulations] சூரியப் புயல் வீச்சு வெற்றிகரமாக ஹைடிராக்ஸில் கலவை [HO – Hydroxyl Compounds] உற்பத்தியானது. இந்த முயற்சியில் பங்கெடுத்த தலைமை ஆய்வாளர் : யாங் லியூ, டென்னஸி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர். அவருடன் கூட்டுழைப்பு செய்தவர்கள், மிச்சிகன் பல்கலைக் கழகத்தையும், காலிஃபோர்னியா பொறிநுணுக்கத் துறையையும் [CALTECH] சேர்ந்தவர்கள்.

    இந்த நீர்ப்பனி சேமிப்பு விண்வெளி விமானிகள் நீண்ட பயணத்துக்குக் குடிநீருக்கு உதவி புரிவது போக, ஹைடிரஜன், ராக்கெட் எரிசக்தியாகவும் பயன்படும். பூமியிலிருந்து இரண்டு கிண்ண நீரை நிலவுக்குச் சுமந்து செல்ல சுமார் 25,000 டாலர் செலவாகிறது. நிலவு நீர்ப்பனியை உருக்கிச் சேமிக்க முடிந்தால் இந்தச் செலவைக் குறைக்க முடியும்.

    நிலவின் இருதுருவங்களிலும் பனிநீர்ப் பாறைகள் இருப்பது உறுதியானது

    2010 அக்டோபர் 22 தேதி மலர்ந்த ஆங்கில விஞ்ஞான வெளியீட்டில் (Journal of Science) பதிவாகியுள்ள ஆறு தனித்தனி அறிக்கைகள் நாசாவின் சோதனை விளைவுகளை மீளாய்வு செய்ததில் தென் துருவத்தில் இருக்கும் காபியஸ் ஆழ்குழியில் (Cabeus Crater) மட்டும் பில்லியன் காலன் அளவு நீர் இருப்பதாக கணித்துள்ளன. நாசா ரேடார் கருவி மூலம் இப்போது நிலவின் வட துருவ ஆழ்குழிகளிலும் பனிநீர் ஏரிகள் இருப்பதாக உறுதிப் படுத்தியுள்ளது. ஓராண்டுக்கு முன் (அக்டோபர் 9, 2009) நாசா லகிராஸ் விண்ணுளவி (LCROSS – Lunar Crater Observation & Sensing Satellite) நிலவில் மோத விடப்பட்டு பரிதி ஒளிபுகாத ஆழ்குழிகளில் பனிநீர் ஏரிகளும் மற்ற உலோக மூலக்கூறுகளும் இருப்பது உறுதி செய்யப் பட்டது. முதல் சோதிப்பில் நாசா, மோதலில் எழுந்த தூசி, துணுக்குகளில் நீரோடு மற்றும் சிறிதளவு ஹைடிரஜன், கார்பன் மானாக்சைடு, அம்மோனியா, மீதேன், மெர்குரி, கந்தகம், வெள்ளி, மெக்னீசியம், சோடியம் ஆகிய உலோகக் கூட்டுகளையும் கண்டுள்ளது. மோதலில் வெளியேறிய தூசி, துணுக்கு களில் குறிப்பாக பனிநீர் மட்டும் 5.6% பகுதி என்று நாசா அறிவித்துள்ளது. 2009 அக்டோபரில் வெளியான முதல் அறிவிப்பில் நாசா 200 பவுண்டு நீர் வெளியேறியது என்று கூறியது. இப்போது (2010 அக்டோபர்) வந்த விஞ்ஞான வெளியீட்டில் நாசா துல்லியமாக 341 பவுண்டு என்று தன் அளவை மிகைப் படுத்தியுள்ளது.

    நிலவில் ஓரளவு நீர் இருப்பதாக வந்த முதல் நாசா அறிக்கை இப்போது நிலவில் உறைந்து கிடக்கும் நீர் ஏரிகள் பற்பல இருப்பதாக மிகைப் படுத்தி, விஞ்ஞான வெளியீட்டில் ஆறு அறிக்கைகள் புதிய தகவலை எழுதியுள்ளன. இந்த அறிவிப்பு நிலவுக்குப் படையெடுக்கும் பல நாடுகளுக்கு (அமெரிக்கா, ரஷ்யா, ஈசா, சைனா, ஜப்பான், இந்தியா) மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்ச்சி. 1960 -1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் அமெரிக்க அபொல்லோ விமானிகளுக்கு விண்கப்பலில் ஒரு பவுண்டு நீர் சுமந்து செல்ல 50,000 டாலர் செலவானது. இப்போது நீர்ச் சுமக்கும் நிர்ப்பந்தம், பணச் செலவு அதிகமில்லை என்பதாகி விட்டது ! ஹைடிரஜன், ஹீலிய-3 எரிவாயு நிலவில் கிடைப்பதால் விண்கப்பலுக்கு எரிசக்தியும் கிடைக்கிறது. அதாவது செவ்வாய்க் கோளுக்கு 2020 ஆண்டுகளில் செல்லும் உலக நாடுகளுக்கு நிலவு ஓர் ஒப்பற்ற ஓய்வுத் தளமாக இருக்கக் எல்லாத் தகுதியும் பெறுகிறது. 1960 -1970 ஆண்டுகளில் உலவிய அமெரிக்க விமானிகள் சுகத் தளங்களில் மட்டும் ஆய்வு செய்து, வெகு பயன் அளிக்கும் ஆழ்குழிகளை ஆராயத் தவறி விட்டனர் !
     
     
    2009 ஆகஸ்டில் நிலவுக்குப் பயணம் செய்த சந்திரயான் -1 இந்திய விண்ணுளவியில் அமைக்கப் பட்ட “சாரா” கருவி (SARA -Sub-keV Atom Reflecting Analyzer) நிலவுத் தளத்தில் மனித வசிப்புக்குத் தேவையான நீரிருப்பதைக் காட்ட வழி வகுத்துள்ளது.
     
    நிலவின் துருவ ஆழ்குழிகளில் நீர் எப்படி உண்டானது ?

    சமீபத்தில்தான் வானியல் விஞ்ஞானிகள் நிலவில் எப்படி நீர் தோன்றியது என்பதற்கு விளக்கம் அறிவித்துள்ளார். சந்திரன் ஒருவித “உறிஞ்சு சேமிப்பியாக” (Sponge) இயங்குகிறது. நிலவின் மேற்தளம் “ரிகோலித்” என்னும் “தூசிப் பரல்கள்” (Dust Grains Called Regolith) தாறுமாறாக மேவிய தளப்பகுதி. ரிகோலித் பரல்கள் பொதுவாக பரிதியிலிருந்து வெளியேறும் மின்னேற்றத் துகள்களை (Electrically Charged Particles) உறிஞ்சும். அந்தத் துகள்கள் ஏற்கனவே நிலவுத் தூசியில் (Dust & Voila) கலந்துள்ள ஆக்சிஜனோடு இணைந்து நீர் உண்டாக்குகின்றன. தூசிப் பரல்களில் பரிதியின் புரோட்டான்கள் பிடிபட்டு ரிகோலித்தில் உள்ள ஆக்சிஜனோடு இணைத்து ஹைடிராக்சியல் (HO) மற்றும் நீர் (H2O) உருவாகின்றன. சந்திரயான் -1 இல் அமைக்கப் பட்ட சாரா கருவி நமது பரிதி மண்டலக் கோள்களைச் சீராக அறிய உதவுகிறது. பரிதியிலிருந்து வரும் புரோட்டான்கள், விண்வெளியில் திரியும் எலக்டிரான்களுடன் சேர்ந்து ஹைடிரஜன் வாயுவாக மாறுகின்றன. அதை நிலவின் ரிகோலித் பரல்கள் பிடித்து வைத்துக் கொள்கின்றன.
    நிலவில் இப்படித்தான் ஹைடிரஜன், ஹைடிராக்சியல், நீர் ஆகியவை உருவாகின்றன. சாரா கருவி மூலம் நிலவின் மேற்தளத்தில் உள்ள மூலகங்களையும், மூலக் கூறுகளையும் நேரிடையாக அறிய முடிகிறது. சந்திரயான் -1 இல் பணிசெய்த சாரா கருவி அமைப்பில் பன்னாட்டுக் கூட்டுழைப்பு (சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜப்பான், இந்தியா) உள்ளது. சமீபத்தில் நாசாவின் சந்திரயான் ரேடார் கருவி நிலவின் வடதுருவக் குழிகளில் குறைந்தது 600 மில்லியன் மெட்ரிக் டன் பனிநீர்க் கட்டி இருக்க வேண்டும் என்று காட்டியுள்ளது. வால்மீன்கள் நிலவில் மோதி நீரைக் கொட்டி இருக்கலாம் என்னும் ஒரு கோட்பாடு இருப்பினும், தற்போது விஞ்ஞானிகள் நிலவின் நீர் “உள்நாட்டுச் சரக்கு” தவிர புற அண்டப் பொழி வில்லை என்று ஊகிக்கிறார். வானியல் ஆய்வாளி டாக்டர் யாங் லியூ இதைத்தான் மேலும் வலியுறுத்துகிறார் : “வால்மீன் போன்ற பிற அண்டங்கள் நீரை வாரி நிலவில் இறைத்திருந்தால் இப்போது காணப்படும் நிலவின் நீரில் சோடியம், பொட்டாசியம் போன்ற எளிதில் ஆவியாகாத மூலகங்கள் (Less Volatile Elements) ஏன் மிகவும் சுருங்கிப் (Strongly Depleted) போயிருக்க வேண்டும் ?” என்று கேட்கிறார். காபியஸ் போன்ற நிரந்தரமாய் பரிதி ஒளி பாயாத ஆழ்குழிகளின் உஷ்ணம் – 387 F (-233 C). இந்தக் கடுங்குளிரில் நீர் பல பில்லியன் ஆண்டுகளாகச் சேர்ந்து திண்ணிய பனிப் பாறையாகப் படிந்துள்ளது. சூரிய மண்டலத்தில் நிலவின் ஒளிமறைவுக் குழிகள் கடுங்குளிர்ப் பகுதிகளாக மாறி விட்டன ! இந்தப் படுபாதாளக் பனிப் பாறைகளை இருட்டில் உருக்கி நீரை மேலேற்றிக் கொண்டு வருவது 21 நூற்றாண்டின் பெரும் சவாலான அசுர சாதனையாக இருக்கும் !
     
     
    வெண்ணிலவில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப்படுத்தியது

    2009 நவம்பர் 13 ஆம் தேதி நிலவின் நிரந்தர நிழல் ஆழ்குழிகளில் (Shadow Craters) கணிச அளவு நீர் இருப்பதை சமீபத்தில் நாசா ஏவிய லகிராஸ் விண்ணுளவியை (LCROSS Spaceship – Lunar Crater Observation & Sensing Satellite) வெகு வேகமாக மோத விட்டு முதன்முதல் உறுதிப்படுத்தியது. லகிராஸ் விண்ணுளவி தெரிந்த பூமி நீரின் நெருங்கிய உட்சிவப்பு ஒளி முத்திரையை (Known Near-Infrared Light Signature of Water) கைவசம் வைத்துக் கொண்டு மோதிய சிதறலில் வெளியேறிய ஒளிப்பட்டைப் பதிவை ஒப்புநோக்கித் தெளிவாக நீரிருப்பதை நிரூபித்தது. உட்சிவப்பு ஒளிப்பட்டைமானி (Infrared Spectrometer) வெளியே சிதறிய துகள்கள் உமிழும் அல்லது விழுங்கும் ஒளியலைகளின் நீளங்களை உளவிக் கனிமங்களில் உள்ள உட்பொருட்களை (Composition of Materials) ஆராய்ந்தது. அத்துடன் இரண்டாவது சோதனை உளவாக லகிராஸின் புறவூதா ஒளிப்பட்டை மானி (LCROSS Ultraviolet Spectrometer) பரிதி ஒளி நீரைப் பிரித்து விளைவிக்கும் ஹைடிராக்சியல் அயனிகளின் சக்தி முத்திரையை (Energy Signature of OH Ions) அளந்து மேலும் நீர் இருப்பை உறுதிப் படுத்தியது. லகிராஸ் ஏவுகணை நிலவைத் தாக்கி வெளி யேறிய நீர் மயம் சுமார் 24 காலன் (7.6 லிட்டர்) என்று கணிக்கப் படுகிறது. நிலவு மோதல் சோதனையை நடத்த நாசா முன்பே தேர்ந்தெடுத்த இருட்பள்ளம் தென் துருவத்தில் உள்ள “காபியஸ் -ஏ” (Shadow Crater Cabeus -A). 25 மைல் (40 கி.மீடர்) அகண்ட இந்தக் குழி சூரிய வெளிச்சம் படாத ஒரு பள்ளம். இதில் படிந்துள்ள பனிநீர்ப் படிவு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் படிந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்.
     
     

    இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து செய்த நிலவுச் சோதனை

    2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன. அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின ! முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது ! அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.
     
     
     
    அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment). நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பி யுள்ளன. இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதியாக உலகுக்கு அறிவிக்கப்படும் ! மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும். இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப்பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும். இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓர் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !

    நிலவில் பனிநீர்க் கண்டுபிடிப்பில் எதிர்காலப் பிரச்சனைகள் நாசா லாகிராஸ் விண்ணுளவியை அனுப்பி நிலவில் மோதவிட்டு நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதிப் படுத்தியது ஒரு முதற்படி வெற்றியே ! அதன் பயன்களை உபயோகப் படுத்த நாசா பன்முகச் சாதனங்களைத் தற்போது அமைக்க வேண்டும். இப்போது விஞ்ஞானிகளுக்கு எழும் வினாக்கள் இவை : பல பில்லியன் ஆண்டுகளாக நிரந்தர நிழற் குழிகளில் நீர்க்கட்டிகள் எவ்விதம் படிந்தன என்று ஆராய்வது முதல் கேள்வி ! அடுத்து அந்தப் படுகுழிப் பனிநீர்க் கட்டியை பரிதி வெளிச்சம் படாத பள்ளத்தில் எப்படி உருக்கி நீர்த் திரவமாக்குவது என்பது இரண்டாவது கேள்வி ! அடுத்து அந்த நீரை எப்படி மின்சாரப் பம்ப்புகள் அங்கே அமைத்து மேலே நிலவின் மேற்தளத்துக்குக் கொண்டு வருவது என்பது மூன்றாவது கேள்வி ! அடுத்து ஹைடிரஜனையும் ஆக்ஸிஜனையும் எப்படிப் பிரிப்பது, எப்படிச் சேகரிப்பது போன்ற வினாக்கள் எழுகின்றன.
     
    அனைத்துக்கும் பரிதியின் வெப்ப சக்தியைப் பயன்படுத்த மாபெரும் சூரியசக்தி சேமிப்புக் கலன்கள் பூமியில் அமைக்கப்பட்டு மற்ற சாதனங்களுடன் நிலவுக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். இவை யாவும் உலக நாடுகள் செய்ய வேண்டிய எதிர்கால அசுர சாதனைகளாக இருக்கும் ! இதற்கு அமெரிக்க அரசாங்கம் இப்போது போதிய நிதித் தொகை ஒதுக்குமா என்பது விடை அறிய முடியாத வினா !
     
    +++++++++++++++++
     
     
    தகவல்:

    Picture Credits : NASA & ESA The Hindu, ISRO & other Science Websites

     

    1. Indian Space Program By: Wikipedia

    2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811131&format=html (இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது)

    3. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811201&format=html (இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரனில் தடம் வைத்தது)

    4. Times Now India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]

    5. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]

    6 Cosmos Magazine The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]

    7. Chandrayaan-1 Enters Lunar Orbit Makes History [Nov 8, 2008]

    8. Latest News Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]

    9 Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]

    10. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]

    11 India Mulls Using Nuclear Energy to Power Chandrayaan -2 (August 8, 2009)

    12 The Search for Ice on the Moon Heats up By : Jeff Salton (August 2, 2009)

    13 Space Spin – LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)

    14 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)

    15 Hindustan Times – Indo-Asian News Service, Bangalore “India’s Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)

    16. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)

    17 Indian Space Research Organization (ISRO) Press Release – ISRO-NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)

    18 ESA Moon Water Report – Hydrogen Offers a New Way to Study the Moon & The Moon Seen By Chandrayaan -1 (Oct 16, 2009)

    19. National Geographic News – Moon Crash, New Maps to Aid Search for Lunar Water By : Anne Minard (June 17, 2009)

    20. Space Flight Now : NASA’s Smashing Way of Answering a Watery Question (June 17, 2009)

    21. National Geographic News – Moon Crash to Put All Eyes on the Crater Cabeus A (Sep 11, 2009)

    22 Water Found on the Moon By : Andrea Thompson (Sep 23, 2009)

    23. Scientific American : LCROSS Impact Plumes Containing Moon Water By : John Matson (Nov 13, 2009)

    24 LCROSS Impact Data Indicates Water on the Moon By : Jonas Dina NASA Ames Research Center (Nov 11, 2009)

    25. National Geographic News – Water on the Moon Confirmed By NASA Crashes By : Ker Than (November 13. 2009)

    26. International – NASA Finds Water on the Moon (Nov 14, 2009)

    27 Daily Galaxy : Moon Water : Will Lunar-Base Humans be Able to Drink it ? (Nov 14, 2009)

    28 Wired Science : Lunar Impacter Finds Clear Evidence of Water Ice on the Moon (Nov 17, 2009)

    29 http://jayabarathan.wordpress.com/2009/08/27/chandrayaan-1-and-nasa-lro-find-ice/ (இந்தியாவும் நாசாவும் நிலவின் துருவப் பகுதியில் நீர்க்கட்டி கண்டுபிடிப்பு) (ஆகஸ்டு 27, 2009)

    30. ESA News – Hydrogen Offers a New Way to Study the Moon, Detlef Koschny, ESA Chandrayaan -1 Project Scientist (October 16, 2009)

    31. Current Affairs, World Evidence of Significant Moon Water By NASA, By [November 14, 2009]

    32 Space.com – Moon Craters Could Be Coldest Place in Solar System By Andrea Thompson (September 18, 2010)

    33. Daily Mail – Scientists Find Even More Evidence of Water on the Moon (July 22, 2010)

    34. Space.com – Tons of Water Ice Found on Moon’s North Pole By Tarq Malik (March 1, 2010)

    35. Space.com – Moon Crater Has More Water than Parts of Earth By Mike Wall (October 21. 2010)

    36. Daily Galaxy – Craters of the Moon – Huge Reservoirs Discovered By Casey Kazan & Rebecca Sato (October 25, 2010)

    37. Moon Daily : Moon Water Could Have Solar Source : Study [Oct 14, 2012]

    38. Daily Galaxy : Solar Winds Found a Source for Moon’s Water [Oct 15, 2012]

    39. University of Tennessee Study Confirms Solar Wind as Source for Moon Water [Oct 16, 2012.

    40. Nature Geoscience : PhysicsWorld. com : Solar wind most likely source of water on the Moon [Oct 17, 2012]

    41. Wikipedia Moon Landings. http://en.wikipedia.org/wiki/Moon_landing [Oct 17, 2012]

    ******************
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) (October 20, 2012)

    Share
  • தேர்தல்களும் பொய்களும்

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது.  இரு கட்சி வேட்பாளர்களும் மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள்.  ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் உதவி ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் இடையே பொது மேடையில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  அமெரிக்கர்கள் அரசியல் தலைவர்கள் இப்படி விவாதங்கள் நடத்துவது தங்கள் நாட்டிற்கே சிறப்பான செயல் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.  அவர்கள் அப்படி பெருமைப்பட்டுக்கொள்வதிலும் நியாயம் இருப்பதாகவேப்படுகிறது.  கலைஞரும் அம்மாவும் இப்படி நேருக்குநேர் விவாதத்தில் கலந்துகொள்வதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.  

    சென்ற 3-ஆம் தேதி ராம்னிக்கும் ஒபாமாவுக்கும் இடையே நடந்த  விவாதத்தில் ஒபாமா அடித்துப் பேசவில்லை என்று பரவலாக ஒரு எண்ணம் எல்லோரிடமும் இருந்தது.  ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சிலர் ஒபாமா ஜெயிக்கும் வாய்ப்புகளையே  அது குறைத்துவிட்டதோ என்று கவலைப்பட்டனர்.  ஏனோ அன்று ஆரம்பத்திலிருந்தே ஒபாமா உற்சாகமாக இல்லாதது போல் தோன்றியது.  ராம்னி அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று பொய்யாகக் கூறிய போதெல்லாம் அவர் அதை எப்படிச் செய்வார் என்று அழுத்திக் கேட்கவில்லை.  இத்தனைக்கும் விவாதம் நடந்த அக்டோபர் மூன்று பாரக் ஒபாமா-மிஷல் ஒபாமாவின் திருமண நாள்.  அவரே அதை விவாதம் ஆரம்பிக்கும் முன் கூறினார்.  அன்று ஏன் உற்சாகமின்றி இருந்தார் என்று புரியவில்லை.

    முதல் விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்பே குடியரசுக் கட்சியினர் சிறந்த பேச்சாளரும் விவாதம் செய்வதில் வல்லமை படைத்தவருமான ஒபாமாவை எப்படி ராம்னி சந்திக்கப் போகிறார் என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.  ராம்னியும் அப்படி பயந்துகொண்டிருந்திருக்க வேண்டும்.  ஒபாமா அவ்வளவு துடியாக இல்லை முதலிலேயே கண்டுபிடித்துவிட்ட ராம்னிக்குத் தைரியம் பிறந்திருக்க வேண்டும்.  தான் சொல்வதெல்லாம் சரி என்பது போல் சரமாரியாகப் பொய்களைச் சொன்னதோடு யாராலும் எளிதாகச் சாதிக்க முடியாதவற்றை எல்லாம் தான் சாதித்துவிடுவேன் என்று அள்ளிவிட்டுக்கொண்டிருந்தார்.  ஆனால் ஒபாமா இது எதையும் மறுக்கவில்லை. விவாதத்திற்குப்பின் தொலைக்காட்சிளில் காமெடியன்கள் ஒபாமாவைக் கேலி பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஒரு காமெடியன், ராம்னி ஒசாமா பின்லாடனைக் கொன்றது தானே என்றார்; ஒபாமா தலையசைத்துக்கொண்டிருந்தார் என்று கிண்டலடித்தார்!

    ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையே விவாதம்  நடந்து முடிந்து ஒன்பது நாட்களில் உதவி ஜனாதிபதிகளுக்கான விவாதம் ஒபாமாவின் உதவி ஜனாதிபதியான ஜோ பைடனுக்கும்  குடியரசுக் கட்சி வேட்பாளரான பால் ரயானுக்கும் இடையே நடந்தது.  பைடன் நாற்பது வருஷங்களாக அமெரிக்க செனட்டில் செனட்டர் பதவி வகித்து நல்ல அனுபவம் பெற்றவர்.  ரயானுக்கு சில வருடங்கள் கீழவை அங்கத்தினராக இருந்த அனுபவம் மட்டுமே உண்டு.  அவரும் அமெரிக்காவின் கடன் சுமையைக் குறைக்கச் சொன்ன சில யோசனைகள் கவைக்கு உதவாதது.  அவர் சில பொய்களை அள்ளிவிடும் போதெல்லாம் பைடன் சும்மா இருக்கவில்லை.  ஏளனமாகச் சிரித்தார்; குறுக்கே பேசிப் பதிலடி கொடுத்தார்.  ஒபாமா செய்யத் தவறியதை பைடன் செய்தார் என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரைப் புகழ்ந்துகொண்டும் பைடன் அத்துமீறலாக நடந்துகொண்டார் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறைகூறிக்கொண்டும் இருந்தனர்.

    அக்டோபர் 16-ஆம் தேதி ராம்னிக்கும் ஒபாமாவிற்கும் இடையே இரண்டாவது விவாதம் நடந்தது.  இதில் உசுப்பிவிட்ட சேவல் போல் ஒபாமா சண்டைக்களத்தில் இறங்கினார்.  இது வரை யாருக்கு ஓட்டுப் போடுவது என்று முடிவுசெய்ய முடியாத எழுபது பேர்களை விவாதம் நடக்கும் இடத்திற்கு அழைத்து  அவர்கள் வேட்பாளர்களைக் கேள்விகள் கேட்கும்படி செய்தனர்.  எல்லாம் உருப்படியான கேள்விகள். முதலிலேயே ஒபாமாவின் பதில்களில் வேகம் இருந்தது.  கடைசி வரை அந்த வேகம் குறையாமல் இருந்தது.  இதைக்கண்டு ராம்னி கொஞ்சம் பயந்துவிட்டது போல் நான் உணர்ந்தேன்.  வழக்கம் போல் ஒபாமா செய்யத் தவறியதாகத் தான் நினைத்ததையே சொல்லிக்கொண்டிருந்தார்.  கடந்த நான்கு வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒபாமா ஏன் இது வரை அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர்செய்யவில்லை என்று அவர் அடிக்கடி கூறுவதை இந்தக் கூட்டத்திலும் கூறினார்.  அதற்குப் பதிலடி கொடுத்த ஒபாமா தான் ஆட்சிக்கு வரும்போது ஜனாதிபதி புஷ்ஷின் கொள்கைகளால் எப்படிப் பொருளாதாரம் சீரழிந்திருந்தது என்றும் தன்னுடைய ஆட்சி அதிலிருந்து மீள்வதற்கு எப்படிப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றும் எடுத்துச் சொன்னார்.  இது வரை ஒபாமா இப்படி புஷ்ஷை நேரடியாகக் குறை கூறியதில்லை.

    கடைசியாக சமீபத்தில் லிபியாவின் பென்ஹாஸி நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக லிபியாவின் அமெரிக்க தூதரும் இன்னும் மூன்று அமெரிக்கர்களும் கொல்லப்பட்ட விவகாரத்தைக் கொண்டுவந்து ஒபாமாவால் அமெரிக்காவைப் பாதுகாக்க முடியாது என்று பாய்ந்தார் ராம்னி.  அந்தச் சம்பவம் நடந்து பதினான்கு நாட்களுக்குப் பிறகே ஒபாமா அது பயங்கரவாதிகளின் செயல் என்று அறிவித்ததாகவும் அது வரை மும்முரமாக கலிபோர்னியாவில் தேர்தல் பிரச்சாரம் செய்துவந்ததாகவும் ராம்னி குற்றம் சாட்டினார்.  அது நடந்த மறு நாளே வெள்ளை மாளிகையின் ரோஜாப்பூத் தோட்டத்தில் தான், அது பயங்கரவாதிகளின் செயல் என்று சொன்னதை ஒபாமா எடுத்துக் கூறினார். அதையடுத்து நடுவராக இருந்தவரும் ’ஆம், ஜனாதிபதி ஒபாமா அப்படிச் சொன்னார்’ என்று கூறியதும் ராம்னிக்கு அசடு வழிந்தாலும், .ஒபாமா பலவீனமானவர் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

    ஒபாமாவின் இரண்டாவது விவாதத்தைக் கேட்ட பிறகு அவரது ஆதரவாளர்கள் மிகவும் குஷியாக இருக்கிறார்கள்.  அவர் ஜெயிக்க வேண்டும் என்று இரவு பகலாக வேண்டிக்கொண்டிருக்கும் ஒரு பெண் ‘இனி நாம் நிம்மதியாக இருக்கலாம்’ என்றார்.

    தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நாளிலிருந்து ராம்னி, ஒபாமா செய்யத் தவறியது, செய்திருக்க வேண்டியது என்று பல விஷயங்களில் பொய் கூறிக்கொண்டிருந்தார்.  ஒரு இந்திய நண்பரிடம் அமெரிக்காவில் அரசியல்வாதிகள் பொய் சொல்கிறார்கள் என்று சொன்னதும் அமெரிக்க அரசியல்வாதிகளும் இந்திய அரசியல்வாதிகளைப் போல் பொய் சொல்லுகிறார்களா என்று கேட்டு மிகவும் மகிழ்ந்து போனார்!  என்னே அரசியல்வாதிகளுக்கிடையே ஒற்றுமை!

    படங்களுக்கு நன்றி :

    http://www.bbc.co.uk/news/world-us-canada-20000409

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …………………… (28)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே,

    இனிய வணக்கங்களுடன், ஈரமான இங்கிலாந்திலிருந்து உங்கள் முன்னே இம்மடல் விழுகிறது. என்ன ஈரமான இங்கிலாந்து என்கிறானே ! என்ன விடயம் என்று சிந்திக்கிறீர்களா ? 

    வேறு ஒன்றுமில்லை, காலநிலையின் கோலத்தைத்தான் குறிப்பிடுகிறேன். இலையுதிர் காலம் எமைத்தேடி படுவேகத்தில் வந்து விட்டது. இருநாட்களுக்கு ஒருமுறை வருணபகவான் தனது அதீத கருணையை அள்ளி வீசுகிறார். இங்கிலாந்து மண்ணின் மீது தோய்ந்த ஈரம் இன்னும் காயவில்லை.

    மண்ணின் மீதுள்ள ஈரம்தான் காயவில்லை,ஆனால் இங்கிலாந்து அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளின் மனதில் ஈரம் காய்ந்து விட்டது போலுள்ளது.

    என்ன புதிருக்கு மேல் புதிரை அடுக்கிக் கொண்டு போகிறானே ஒழிய அவிழ்க்கிற மாதிரித் தோன்றவில்லை என்று நீங்கள் அங்கலாய்ப்பது புரிகிறது. மனதில் எழும் கேள்விகளுக்கு விடைகாணா வகையில் விசித்திரமான எண்ணங்கள் உள்ளத்தில் சதிராடுகின்றன.

    ஆமாம் ……..

    எங்கே போகிறோம் ? என்ன ஆகிக் கொண்டிருக்கிறோம் ?

    மனிதன் தனியாகத் தோன்றிச் சமுதாயமாக மாறினான் என்கிறது மனித சரித்திரம். ஆனால் இன்று 21ம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டங்களிலே அச்சமுதாயக் கட்டமைப்பு உடைந்து மனிதன் மீண்டும் தனியாகப் போய்க்கொண்டிருக்கிறானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    என்ன ? எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு இந்தப் பீடிகை என்று கேட்காதீர்கள். கண்முன்னே நடப்பவை, காதால் கேட்பவை என்பன என்னை இத்தகைய எண்ணங்களால் அமைக்கப்பட்ட சாலைக்குள் இழுத்துச் செல்கின்றன.

    பொதுவாக நாம் வாழும் சமூகத்தை எடுத்துக் கொண்டால், அன்றாட வாழ்க்கையின் வேகம் அடுத்தவரைப் பற்றிச் சிந்திக்கக் கூட நேரம் இல்லாமல் படு கனகதியில் சென்று கொண்டிருக்கிறது. காண்பவை எல்லாமே எமக்குத் தேவை என எண்ணும் எண்ணம் கொண்ட ஒரு இளஞ்சமூகம் முளைப்பது போல் தோன்றுகிறது.

    அத்தியாவசியத் தேவைகளுக்கும், ஆடம்பரங்களுக்கும் வித்தியாசம் தெரியாத சமுதாயங்கள் பரவலாக உலகெங்கும் உருவாகிக் கொண்டு வருகிறது.

    இத்தகைய உருமாற்றத்திற்கு உலகப் பொருளாதாரம் “உலக மயமாக்கப்படுவது (Globalisation)” உதவுகிறது. உலகின் நீளம் மிகவும் குறைந்து கொண்டு வருவது மனிதர்களுக்கிடையில் பரஸ்பரம் நட்பினையும், மனிதாபிமான உள்வாங்கலையும் துரிதப்படுத்தும் எனும் நம்பிக்கை, நடக்கும் நிகழ்வுகளினால் குறைந்து கொண்டே போவது போலத் தெரிகிறது.

    எளிமை, பொறுமை, மனிதாபிமானம் எனும் மூன்று அத்தியாவசியமான பண்புகள் மனித மனங்களில் உறைய மறுக்கின்ற காலம் போலத் தெரிகிறது.

    கல்வி புகட்டும் ஆசிரியர்கள், கண்ணாக வளர்க்கும் பெற்றோர்கள், நல் அறிவைப் பெருக்கிடும் சான்றோரின் கூட்டு என்பன மீதான இளநெஞ்சங்களின் பார்வையின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.

    வரவுக்குள் செலவு எனும் கொள்கை அறவே அற்றுப் போய்விட்டதோ எனும் அச்சம் மனதைக் கவ்விக் கொள்கிறது. 

    இத்தகைய ஒரு சமுதாயத்தின் அடிப்படையில், இவ்வார்ப்புகளினால் வடிவமைக்கப்படுவதே அர்சியல் கட்சிகளின் கொள்கைகளும் அதன் முன்னணித் தலைவர்களும்.

    இன்றைய இங்கிலாந்து அரசியல் கட்சிகளில் முன்னணி வகிக்கும் பிரமுகர்கள், இத்தகைய ஒரு சமுதாயத்தின் பிரதிபலிப்பாகவே அமைகிறார்கள். ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முன்னணி அமைச்சர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக, செல்வமிக்க குடும்பத்தின் வாரிசுகளாக, பிரத்தியேக கெளரவமிக்க கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களாக இருப்பதனால் அன்றாட வாழ்க்கையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் சாதாரண மக்கள், தாம் அவர்களிலிருந்து அந்நியப்பட்டவர்களாக இருப்பது போலத் தெரிவது சகஜமே.

    அதேசமயம் இங்கிலாந்து நாட்டின் முத்திரை பதிக்கும் சமூக நலத் திட்டங்களினால் பயன் பெறும் பலர் தாம் தம்மை வேலையில்லாதவர் எனும் பட்டியலில் இருந்து வெளிக்கொணர்வதற்கான முழுமுயற்சியை எடுக்கிறார்களா? எனும் சந்தேகம் ஒரு வலுவான அடிப்படையைக் கொண்டது என்பது ஏற்றுக் கொள்ள‌ப்பட வேண்டியதொன்றே.

    இந்தப் பின்னணியில் தான் இவ்வாரம் நடந்த அரசாங்கத்தின் முக்கிய கூட்டணிக் கட்சியாகிய “பழமை பேணும் (கன்சர்வேடிவ்) ” கட்சியைச் சேர்ந்த நிதியமைச்சர் “ஜார்ஜ் ஒஸ்போன் (George Osborne). 2015 இல் நடக்கும் தேர்தலில் தமது தேர்தல் விஞ்ஞாபனம் கொண்டிருக்கப் போகும் ஒரு முக்கிய கொள்கைப் பிரகடனத்தைச் சொல்லியதும், அப்பிரகடனம் பலரது மனங்களில் அதிர்வலையைக் கிளப்பியது.

    “கம்பெனி ஊழியர்களிடமிருந்து அவர்களது பணிகளைக் காக்கும் உரிமைகளை அக்கம்பெனியின் பங்குகளை அளிப்பதன் மூலம் அக்கம்பெனி உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் ” என்பதே அப்பிரகடனம்.

    படிக்கும் போது சாதாரணமாகத் தெரியும் இப்பிரகடனத்தின் உள் பதிந்திருக்கும் ஆபத்து அதி பயங்கரமானது. தொழிலாளர் தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தமக்கான நியாயமான உரிமைகளைச் சட்டமூலத்தில் பெற்றுக் கொள்வதற்கு நடத்திய போராட்டங்களும், அவற்றை முன்னெடுத்து அதற்காக தமது வாழ்வைத் தியாகம் செய்த தொழிலாளர் தலைவர்களும் ஏராளம்.

    இப்படியாக பெற்றுக் கொண்ட உரிமைகளை வெறும் கம்பெனி பங்குகளுக்காக கம்பெனிக்கு விற்று விடுவது என்பது ஒரு சாதாரண விடயமா? அது தவிர பங்குகளின் நிலையைப் பற்றி அறியாதவர்கள் யார்? பங்குகளின் விலை எப்போதுமே உயர்ந்து கொண்டு செல்லாது. பங்குகளின் விலை பயங்கரமாக வீழ்ச்சியடையும் தன்மை கொண்டது. அப்படியான நிலையில்லா வெகுமதிக்காக தமது பணியைக் காத்துக் கொள்லும் உரிமையை இழக்கச் செய்யும் வகையில் தமது கட்சியின் கொள்கையை வகுப்பது கன்சர்வேடிவ் கட்சியின் மாறாத முதலாளித்துவ கொள்கைப் போக்கையே காட்டுகிறது என்கிறார்கள் மூத்த அரசியல் விமர்சகர்கள்.

    இந்த இடத்தில் தான் நான், நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் எனும் கேள்வியை மீண்டும் கேட்டுக் கொள்ள விழைகிறேன். மனிதர்களைத் தொழிலாளிகள், முதலாளிகள் எனும் பாகுபாட்டைக் கடந்து மனிதர்கள் என்று பார்க்கும் தன்மையை இழந்து கொண்டு போகிறோமா? என்று எண்ணத் தோன்றுகிறது.

    அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் எனும் ஆசை எமது மனதில் ஓடிக் கொண்டிருந்த சமுதாய உணர்வை மழுங்கடிக்கச் செய்கிறதோ ?

    இங்கேதான் எமது இளைய சமுதாயம் விழிப்படைந்து கொள்ள வேண்டும். உழைப்பது அனைவரினதும் கடமை எனும் அதேநேரம் அந்த உழைப்பைத் தக்க வைத்துக் கொள்லும் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதும் எமது கடமை என்று உணர்ந்து கொள்ள‌ வேண்டும். தொழிலாளர்கள் இல்லையானால் முதலாளிகள் இல்லை.

    அதற்காக மூடத்தனமாக, காலமாற்றத்தின் கட்டாயத்தினால் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ள  வேண்டியவைகளை, நாம் எமது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் எனும் வாதத்தினால் மூடத்தனமாக எதிர்ப்பது அறியாமை.

    ஆற்றிலே வெள்ளம் ஏற்பட்டால் அவ்வெள்ளத்தை எதிர்த்துக் கரையேறுவது முடியாத காரியம். அவ்வெள்ளத்தின் போக்கில் இழுபடுவது போல இழுபட்டு கரையேறுவதே புத்திசாலித்தனம். நாம் கரைசேறும் இடம் போக எண்ணிய இடத்தை விட சிறிது அப்பாலாய் இருந்தாலும் ஆற்றொடு அடிபட்டுச் செல்லாமல் கரைசேர்ந்து விடுவோம்.

    மனிதாபிமானம் எனும் அடிப்படைக் குணாம்சத்தைக் கைவிடக்கூடிய எத்தகைய மாற்றத்திற்கும் சவால் விடக்கூடிய மனதைரியம் கொண்ட இளம் சமுதாயம் உருவாக வேண்டும். நாமும் வாழ்ந்து, மற்றவரும் வாழவேண்டும் எனும் எண்ணம் ஏற்படும் மனப்பக்குவத்தைச் சமுதாயம் இளந்தலைமுறைக்கு தரக்கூடிய வகையில் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

    நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று அஞ்சுவதை விடுத்து, எவ்வழி போயினும் எமது இலட்சியத்தின் குறிக்கோள் எனும் ஊரை அடைந்து விடும் முயற்சியைக் கைபிடிப்பதே சாலச்சிறந்ததாகும்.

    “ஆண்டவன் உலகத்தின் முதலாளி 
    அவனுக்கு நானொரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி”

    எனும் கவிஞரின் வரிகளின் வழி எப்பணி செய்யினும் அப்பணி தெய்வத்தின் பணியே என்பதே விதியாகும்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன். 

    Share
  • நவராத்திரி நவிலும் தத்துவம்!

     

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மனிதன் வாழ்வில் பாடுபடுவது நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே! ஆற்றிவு பெற்று உயர்வுள்ளவனாய் விளங்கும் அவன் உலகில் தனித்து வாழ முடியாது. மற்ற உயிரினங்களைப்பேணி பாதுகாப்பதோடு,  அவனுக்கு பல வளங்களை அள்ளித்தரும் இயற்கையை பாழாக்காமல், சுற்றுப்புற சூழலோடு இணைந்து வாழ வேண்டும் என்பதையும்,  ஆறறிவு உடைய  அவன்   ஆன்மீகப் படிகளில் ஏறி இறைவனை அடைய வேண்டும் என்ற  இரண்டையும் படிப் படியாய் நமக்கு விளக்குவது நவராத்திரியில் வைக்கப்படும் கொலு பொம்மைகள்.
    முதல் படியில் நாம் வைப்பது  ஓரறிவு கொண்டபுல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள். .இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கும்,  மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை கொண்ட, கரையான், எறும்பு போன்ற பொம்மைகளும், நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட தும்பி, வண்டு பொம்மைகளும், ஐந்தாவது படியில் ஐந்தறிவு உடைய விலங்குகள், பறவைகள், பொம்மைகளும் இடம் பெற்றிருக்கும். இந்த ஐந்து படியில் உள்ள  மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் யாவும் மனிதனின் உணவுச் சங்கிலியில்   பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த சங்கிலி அறுபடாமல் மனிதன் பார்த்துக் கொண்டால்தான் அவன் உணவு, உடை, இருப்பிடம் எதிலும் சிக்கல் ஏதுமில்லாமல் இருக்கும். ஆனால் இந்த சங்கிலி சிதைக்கப்பட்டு விட்டது என்பதை   இயற்கை நமக்கு,  அவ்வப்போது, கன மழை,  பஞ்சம், கடும் வெய்யில், பனிப்பாறை உருகுதல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் மூலமாக நமக்கு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே இருக்கிறது!  ஆனால் மனிதன்தான் விழித்துகொள்வதில்லை. மனிதன் விழித்துக் கொண்டு , அவன் வாழ்வின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் இயற்கையை மனிதன் போற்றிக்காக்க வேண்டும் என்பதைத்தான் முதல் ஐந்து படிகளும் உணர்த்துகின்றன.
     ஆறாவது படியில் ஆறறிவு படைத்த  மனிதர்களின் பொம்மைகள் இருக்கும். மனிதன் படைக்கப்பட்டது இறையருளைப்பெற்று உய்ய வேண்டும் என்பதற்காகவே. இதற்கு அவனுக்கு வழிகாட்டியாய் விளங்குவது புராணங்கள் மற்றும் இதிகாசங்கள். அதனால்தான் ஏழாவது படியில் மனிதனுக்கு வழி காட்டியாக விளங்கும் மகான்கள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோரின் பொம்மைகள் இடம் பெற்றிருக்கும். எட்டாவது படியில்  தேவர்கள் மற்றும் இறைவனின் பல்வேறு அவதார உருவங்களும், ஒன்பதாவது படியில்  நவராத்திரி நாயகிகளாய் விளங்கும்  துர்க்கை,  லட்சுமி,  சரஸ்வதி, ஆகியோருடன் பொம்மைகளும் இருக்கும்.
    ஆறாவது படியில் இருக்கும் மனிதன் ,  மன உறுதியுடன், ஒழுக்கமாகவும் இருந்து, ஏழு மற்றும்  எட்டாம் படிகள் காட்டும் வழியைப் பிடித்துக் கொண்டு விட்டால், ஒன்பது படியான இறைஅருளை எட்டிவிடலாம்! அதனால்தான் நவ ராத்திரி என்று ஒன்பது நாள் கொண்டாட்டம்.!  நவம் என்றால் ஒன்பது என்று நம்  எல்லோருக்கும் தெரியும்.   ஆனால் நவம் என்றால், கேண்மை, சினேகம், கார்காலம்,  புதுமை, பூமி என்று பல அர்த்தங்களை தமிழ்மொழி அகராதி நமக்குத் தருகிறது.  கேண்மை என்றால் உறவு,மனிதன் தன் உறவுகளையும், சினேகம் காட்டும் நட்பையும் அழைத்து பெருமைப்படுத்த இந்தப் பண்டிகையை  ஒரு நிலைக்களனாய்  உருவாக்கி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.  அத்துடன் கொலு கொண்டாடும் காலம் மழைக்காலமாகிய கார்காலம்.  புதுமை. என்றால் அற்புதம். பூமியில் மானிடராய் பிறந்த நமக்கு , நல்லபடியாக செல்லும் ஒவ்வொரு நாளும் புதுமைதான், பரம்பொருள்  நமக்கு அளிக்கும் அருட்கொடைதான்! அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒன்பது நாளும் சக்தியை விதவிதமாக ஆராதிப்போம். அன்னையவள் அருளைப் பெறுவோம்! 

    படத்துக்கு நன்றி.

    http://en.wikipedia.org/wiki/File:Navratri_Golu.jpg

    Share
  • அன்பின் மறுபெயர்!

     

    இசைக்கவி ரமணன்

    ஒரு புதிய கவிதை, பழைய பாடல்

    ஒவ்வொரு நாளும் கவிதைகள்
    ஒவ்வொரு வேளையும் கானங்கள்
    ஓங்கி வளர்கிற தோர்பூசை
    ஒய்யா ரிக்கிது தான்சேவை
    ஒவ்வொரு கணமும் ஆனந்தம்
    ஒவ்வொரு கனவும்  மிகவும்நிசம்
    ஒருகணம் போலொரு கணமில்லை
    ஒவ்வொரு பொழுதும் புதுஎல்லை!

    “அம்மா!” என்னும் குரல்கேட்க
    அவளுக் காசை மிகவுண்டு
    அவளது தன்னந் தனிமையிலே
    அனுபவித் துள்ளே நெகிழ்வதுண்டு
    அம்மா என்னும் மந்திரச்சொல்
    அதுபோல் எதுவும் இங்கில்லை
    அவள்செவி வேறெதும் கேட்பதில்லை
    அதுவே அதுவே அவள் எல்லை!

    குட்டியைக் கவ்விய தாய்ச்சிங்கம்
    கொஞ்சம் தரையில் குலவவிடும்
    கூரிய கண்கள் ஒருசிறிதும்
    குட்டியை விட்டு விலகாது
    எட்டும் தொலைவில் அவள்காவல்
    என்றும் ஒளியாய்ச் சூழ்ந்திருக்கும்
    இடையே கவலை களிப்பாட்டம்
    என்னும் நாடகம் தொடர்ந்திருக்கும்

    மறந்த நினைவு மீள்கையிலே
    மடியைத் தேடி மனம்பதறும்
    மறக்கத் தெரியா மனத்தவளின்
    மணத்தில் முகத்தைத் தேய்த்திருக்கும்
    பிறந்து வளர்வது அவளில்தான்
    பின்னும் முன்னும் அவளில்தான்
    பிணியும் குணமும் அவளில்தான்
    பிணக்கும் தீர்வும் அவளேதான்!

    ஆழ மனத்தின் அடியிலிருந்து
    அம்மா என்றே அழைப்பவரை
    அல்லல் ஏதும் அண்டிடுமா?
    அற்ப மரணம் தீண்டிடுமா?
    வேழம் எலிவளை வீழ்ந்திடுமா?
    வேலை நாணல் பிளந்திடுமா?
    வேதனை தீர்க்கும் நாமமிது!
    வேதம் பணியும் நாமமிது!

    ஆயிரம் நாவுகள் இருந்தாலும்
    அதுதான் சொல்லித் தீர்ந்திடுமோ?
    அம்மா அம்மா என்றிடுவோம்
    ஆனந் தக்கூத் தாடிடுவோம்
    வாயினிக்க வரும் வார்த்தைகள்
    வண்ணக் கவிதைக ளாகட்டும்
    வற்றிக் கிடக்கும் தடங்களிலே
    வசந்த நதிகள் பொங்கட்டும்!

    அன்பின் மறுபெயரைச் சுவையுங்கள்!

     

    Share
  • எழில் மிகு அலைமகள்

     

    கவிநயா

    மதியொளி முகத்தினள் கதிரொளி நிறத்தினள்
    தாமரைக் கரத்தினள் தங்கத்தின் குணத்தினள்

    அலைகடல் நடுவினில் அவதரித்தவள் அவள்
    அரிதுயில் மாலவன் மனங்கவர் மனையவள்
    விரிமலர் மீதினில் வீற்றிருப்பவள் அவள்
    பரிகின்ற தாயென புவியினைக் காப்பவள்

    மரகத வண்ணனின் மார்பினில் உறைபவள்
    மறைக ளெல்லாம் போற்றும் மங்கலப் பெண்ணவள்
    கருவிழி இரண்டினால் உறுவினை அழிப்பவள்
    கவிமழை யில்மகிழ்ந்து கனிமழை பொழிந்தவள்

    எழில்மிகு அலைமகள்! (அடானா ராகத்தில் சுப்பு தாத்தா)

    படத்திற்கு நன்றி :

    http://www.astromuni.com/puja/mlk.asp

     

    Share
  • பித்ருக்களுக்கு இரண்டுவார விடுமுறை

     

    விசாலம்

    சம்யமினீ அரசாங்கம் தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது  . இது என்ன அரசாங்கம் என யோசிக்கிறீர்களா !  இதுதான் எமதர்மனின் ஆபீஸ்   ..தெற்கு திசையில் இருக்கிறது அதற்கு மேலே சரியான  முகவரி கொடுக்க ஒருவரும் இல்லை ஏனென்றால் ஒருதடவை அவரது ஆபீஸுக்குப் போனவர்கள் திரும்பி வருவதில்லை . அந்த  இடம்  அவ்வளவு பிடித்துப்போய்விடுமோ என்னவோ! .அதில் தலைமைப் பகுதி ஏற்று கடமைகளைத் திறம்பட நடத்திவருபவர்  திருவாளர் யமன் .அரசனோ ஆண்டியோ அரசியல் மந்திரியோ அல்லது பாமர மக்களோ  எல்லோருக்கும் ஒரே நீதிதான்  அங்கு லஞ்சம் …..சுப் …..மூச்சு .விடக்கூடாது அந்தப்பேச்சுக்கே இடமில்லை .அந்த ஆபீஸுக்குப் போனவர்கள்  “பித்ருக்கள் “என்ற பெயர் பெறுகின்றனர்  இவர்கள் இருக்கும் குவார்டர்ஸின் பெயர்   பித்ருலோகம்   .இந்த  இடம் பூலோகத்திற்கும் சுவர்க லோகத்திற்கும் இடையில் உள்ள இடம்  என்கிறார்கள் .இங்கு ஒவ்வொரு வீட்டிலும்  மூன்று சந்ததிகள் ஒரே கோத்திரம் கொண்டு வசிப்பார்கள் . இந்தக்கோத்திரத்தில் நாலாவதாக பூலோகத்தில்  ஒருவர் காலமாக

      அவர்  மேலே இந்த இடத்திற்கு வருவார் .அவருக்கு இடம் கொடுக்க முதலில் வந்தவர்  தன் இடத்தைக்காலிசெய்து  சுவர்கம் போய்விடுவாராம் அவருக்கு சுவர்க்கலோகத்தில் இடம் கிடைத்துவிடும் ஒரு அட்வான்சும்  தராமலே ………..

     இவர்கள்   தாங்கள்  பல ஆண்டுகள் கூட இருந்து வாழ்ந்த குடும்பத்தையும் அவரது செல்வங்களையும்  உறவினர்களையும் பார்க்க ஆசைப்பட்டு யமனிடம் ஒரு விண்ணப்பம் கொடுத்தனர் . அதாவது  அவர்களுக்கும்  வருடத்தில் ஒரு முறையாவது லீவு  கிடைத்து தங்கள் குடும்பத்தைக்காண பூலோகத்திற்குச் செல்ல வேண்டும்    என்பது தான் யம தர்ம  பாஸும் {boss}  அவர்கள் விருப்பபடி ஒரு  பதினைந்து நாட்களுக்கு ” ஹாலிடே’ சாங்க்‌ஷன் செய்து  வடை ,பாயசம் பச்சடியுடன் நல்ல விருந்தும் சாப்பிட்டு திருப்தியாக வர வாழ்த்தி அனுப்பினார்   இந்த  விடுமுறை புரட்டாசி  மாதம்  சூரியன்  கன்னிராசியில் பிரவேசித்ததும் பௌர்ணமிக்கு மறுநாள் தேய்ப்பிறை பிரதமையிலிருந்து ஆரம்பித்து  அமாவாசை வரை நீடிக்கும். இந்த ஹாலிடேக்குப்பெயர்  “மஹாளயம் ” வருடா வருடம்   இந்த மஹாளய விடுமுறையில் பித்ருக்கள் .,,மூதாதையர்கள்  பூலோகம் வந்து  தாங்கள் யமராஜன் ஆபீஸுக்குக்கிளம்பிய   நக்‌ஷத்திரத்தில் தங்கள் மகன் வீட்டில் ஆஜராகி நல்ல விருந்து உண்டு திருப்தி திருப்தி திருப்தி என்று மூன்று தடவை சொல்லிவிட்டு  அவரது சந்ததிகளை வாழ்த்திவிட்டு வருவார்கள், மகன் இல்லையென்றால்  சகோதரன் வீட்டிலோ வேறு சகோதரன் போல்  இருக்கும் உறவினர்கள் வீட்டினிலோ போய் சாப்பிட்டும் வருவர் ஆனால்    இவர்களுக்கும் தன்மானம் உண்டு ஆகையால் முறையாக எள்ளும் நீரும் இறைத்து   கூப்பிட்டால் தான் இவர்கள்  வருவார்கள்

    மூன்று தலைமுறைப் பெயர்கள்   சொல்லி  எள்ளும் நீரும்  விட   இவர்கள் வந்து  ஆசிகள் தந்து வாழ்த்திவிட்டுப்போவார்கள் . கறுப்பு  எள் இவர்களுக்கு மிகவும் பிடிக்குமாம் .எள் திருமாலின் வியர்வையிலிருந்து  பிறந்ததாம்.    மிகவும் பரிசுத்தமான தான்யம் இந்த எள். இந்தப் பித்ருக்களை அழைக்க  உதவும்  மற்றொரு கருவி தர்ப்பை .இதற்கு அமிர்தவீர்யம் என்ற பெயரும்   உண்டு .  தர்ப்பையை  குசம் என்றும் சொல்லுவார்கள் . இந்தத்தர்ப்பை  முனையில்  பிரும்மாவும் நடுப்பாகத்தில் விஷ்ணுவும்  மறுமுனையில் ஈசனும் இருக்கிறார்கள் இதன் விசேஷம் என்னவென்றால் நீரில் அழுகாது .நிலத்தில் வாடாது  விதையில்லாமல் சுயம்புவாக  தோன்றியது ,சிலர் நமது ஆன்மாவையை தர்ப்பைக்கு ஒப்பிடுகிறார்கள் எனக்கு இதைப்பற்றி தெரியாது  நான் ஆன்மாவை இதுவ்ரையிலும் பார்த்ததில்லை .

    மஹாளயம் தினங்கள் தவிர்த்து மற்ற அமாவாசை கிரகண புண்ணியகாலங்கள் மாதப்பிறப்பு   அதுவும்  ஆடி  ,தை மாதப்பிறப்பு ,   ஆடி அமாவாசை ,  தை அமாவாசை  இறப்பு பிறப்பு போன்ற நாட்களில் இந்த எள்ளும் தர்ப்பையும் முன்னுக்கு நிற்கின்றனர்  எந்த நேரத்திலும் பித்ருக்கள் வர ரெடியாக இருந்தாலும்  இந்த இயந்திரயுகத்தில் பலர் அவர்களை அழைக்க  அத்தனை சிரத்தைக்  காட்டுவதில்லை

    தங்கள் பிறந்த நாட்கள் , தங்கள் குழந்தைகளின்  பிறந்த நாட்கள் எல்லாம் கேக் வெட்டி தடபுடலாக பார்ட்டி கொடுக்க மனம் விழைகிறதே தவிர பித்ருக்களுக்குச் செய்வதை ஒரு பாரமாக நினைத்துக் கொள்கின்றனர் சிலர். அதுவும் வருங்கால சந்ததியர்களுக்கு அதில் நம்பிக்கையும் இல்லை .தர்ப்பணம் செய்து பித்ருக்களை அழைப்பதில் மஹாளய தினங்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது  .எதை விட்டாலும் இந்தத் தினங்களை விடாமல் மூதாதயர்களுக்கு திதி செய்வது மிகவும்  அவசியம் . அவர்கள் உடலைவிட்டுப்போன திதியில் இதைச்செய்ய வேண்டும்  இதில் மஹாளய பரணி நக்‌ஷத்திரம் மிகவும் விசேஷமானதாம்  இதில்ஒருவர் தமக்குத் தெரிந்தவர்கள்  .உயிரைப்போல் பழகினவர்கள் யாவரையும் நினைத்து அவர்கள் பெயர்களைச்சொல்லி திதி செய்யலாம்  மஹாளயத்தின் ஒன்பதாவது நாளில் சுமங்கலியாக இறந்த பெண்மணிகளுக்குத் திதி செய்ய வேண்டும் அத்துடன் குழந்தைகளாக இருந்து  பின் இறந்து விட்ட செல்வங்களுக்கும் இதைச் செய்யவேண்டும்

    நடுவில் வரும் அஷ்டமி திதியில்  துர்மரணம் செய்துகொண்டவர்களுக்குத் திதி செய்யவேண்டும் சன்னியாசிகளுக்கு சன்னியாஸ்த மஹாளயம் என்று ஒன்று வரும் அதில் அவர்களை நினைத்து திதி தந்து வழிபடுவார்கள் என நினைக்கிறேன் அவர்களின் பிருந்தாவனத்தில் வழிபாடு செய்வார்கள் போலிருக்கிறது ,.

    தர்ப்பணம் செய்யும் போது  எள்ளும் தண்ணீரும் இறைத்து  “தர்ப்பயாமி தர்ப்பயாமி தர்ப்பயாமி என் மூன்றுதடவைகள்  அடிக்கடி  என் அப்பா சொல்வதை நான் பார்த்திருக்கிறேன்   ,

    காருணீக பித்ரு தர்ப்பணம் என்று ஒன்று உண்டு இதில்   தெரிந்தவர்கள் தெரியாத  வம்சாவழியில் உலகைவிட்டுப் போனவர்கள் எல்லோருக்கும் அவர்கள் திருப்தி  பெற திதி  செய்யும் வழக்கமாம் என்று ஒரு புரோகிதர் கூறினார் தேவர்களும் தேவலோகவாசிகள்அனவைரும்  திருப்தியடையட்டும் என்றும் சம்ஸ்கிருதத்தில்  முடிவாக வரும்

    முன்பெல்லாம் இவர்களுக்கு சாப்பிட பல ஐட்டங்கள் கிடைக்கும்.    வடை பாயசம் எள்ளுரண்டை  என்று  நல்ல ராஜமரியாதைகளுடன்  அவர்களை வரவழைத்து வேஷ்டி .அங்கவஸ்த்திரம் [ பத்தாறு  கணக்கில்} போன்ற உடைகளையும் அளித்து ஆசாரமாக அவர்கள் விருப்பப்படி  எல்லாமே நடத்தி பெரிய நுனி இலையில்  வயிறு புடைக்க  விருந்தளிப்பார்கள் .இதை நடத்தி வைத்த வாத்தியார்களும் மிக சிரத்தையாக   நடத்திக்கொடுப்பார்கள்   இப்போது அதெல்லாம் மிகக்குறைந்து விட்டது   இதை அனுசரித்துசெய்ய ஆசைப்படுபவர்கள் இருந்தாலும்   இதைச்செய்ய வரும் வாத்தியார்கள்  கையில் மொபைலுடன்  டூவீலரில்  அவசர அவசரமாக பல வீடுகளுக்கு ஓடுவதால்    செய்யும்  அவகாசம் மிகவும் குறைந்து  எல்லாமே ஷார்ட் கட்  ஆகிவிடுகிறது ஆகையால்  வாழைக்காயும்.அரிசியும்   கொஞ்சம் பயந்தப்பருப்பும் வைத்துக்கொண்டு காத்திருக்க   எல்லாமே ஒரு 30 நிமிடங்களில்  முடிந்துவிடுகிறது . இத்தனைச்செய்வதே பெரிய காரியம்தான்
    மேலும் இந்த புரோகிதர்களின் செல்வங்கள்  இந்த  லயனுக்கு வராமல்  வேறு படிப்பு படித்து  நல்ல வேலைக்குச் சேர்ந்துவிடுவதால்  பிற்காலத்தில் எங்கே இந்த வாத்தியார் தொழிலே   பஞ்சமாகிவிடுமோ என்ற பயம்  மனதில் ஏற்படுகிறது

    இந்தக்கால  வீட்டுப்பெண்மணிகளும்  வேலைக்குப்போவதால் இதை சரியாக அனுஷ்டிக்கமுடியாமல் ஏனோதானோ என்று  நடக்கிறது .முன்பு கூட்டுக் குடும்பம் இருந்ததால் பல பெரியவர்கள் இது போன்ற நாடகளில் கடைப்பிடிக்கும் விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பார்கள் தற்போது அதுவும் இல்லை . சிலர் வீட்டில்  சிலரது ஜாதகத்தைப்பார்த்து பித்ரு தோஷம் இருக்கிறது அதனால் தான் வீட்டில்  இப்படிப்படுத்துகிறது என்றுச்சொல்ல கேட்டிருக்கிறேன். அந்த தோஷம் ஏற்படுவதே  இதைப்போன்ற  அனுஷ்டானங்களை விட்டதனால்தான் என்று சாஸ்திரமேதைகள் கூறுகின்றனர் சிலர் வீட்டில் பேரனது பூணலும் அவன்  உடலில் இருப்பதில்லை பல ஆயிரங்கள் செலவழித்து நடத்திய உபநயனம்  அர்த்தமில்லாமல் போய்விடுவதைப் பார்த்தால் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது

    சிலருக்கு  பண நெருக்கடி அதிகமாக இருக்க ஆனால் எப்படியும் தன் அப்பாவுக்கு திதி செய்யவேண்டும் என்ற  மனம்  இருக்க  அவர்கள் ஆகாயத்தைப் பார்த்து” பித்ருக்களே   என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை என் உடல் நிலையும்  பொருளாதார நெருக்கடியும் இதைச்   செய்ய முடியாமல் என்னைத் தடுக்கிற்து . மன்னித்து  ஆசி வழங்குங்கள் “என்று சொன்னாலே பாட்டனார் தந்தையார் போன்ற முதாதையர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்களாம்  .மஹாளயக்காலத்தில் ஊரில் இல்லாமல் எதாவது பிரயாணம் வந்து  வேறு எங்கேயாவது போயிருந்தால் பசுவுக்குப் புல்  கொடுத்து அதைத் தர்ப்பணமாக ஏற்கச் சொல்லலாம்  என்றும் சாஸ்திரம் படித்தவர்கள் கூறுகிறார்கள்

    இப்போது காக்கையின் கதைக்கு வரலாம்

    காகத்திற்கும் மனிதனுக்கும் சில ஒற்றுமைகள்  உண்டு  காகம் எதாவது தின்ன கிடைத்தால் எல்லோரையும் கூவி அழைத்துப்பின் அதைப்பகிர்ந்துக்கொள்ளும்.இதே போல் தான்  முன்பு   கூட்டுக்குடும்ப  அமைப்பு  இருந்த போது அந்தவிட்டுப் பெண்மணி  எல்லோரையும் அழைத்து உணவளிப்பாள் இன்றும் குஜராத்தி  அல்லது மார்வாடி குடும்பத்தில் இதைக் காணலாம் .தவிர  காகம் ஒன்று மினசாரக் கம்பியில் பட்டோ அல்லது வேறுவிதமாகவோ இறந்துவிட்டால்  எல்லா காகங்களும்  “கா  கா  கா  கா  வென்று கத்தி ஊரையேக் கூட்டிவிடும்  அந்த இறந்த காக்காவின் உடலைச் சுற்றிச்சுற்றி   பறந்து கரைந்து தன் சோகத்தை வெளிப்படுத்தும்  பின்  எங்கேயாவது நீர்நிலையிருந்தால் அதில் முக்கி எழுந்து  விட்டு வருமாம . இதே போல் இன்றும் கிராமங்களில் ஒருவர் இறந்தால் பலர்  அங்கு விரைந்து வந்து  மார்பை அடித்துகொண்டு அழுது தங்கள் சோகத்தை வெளிப்படுத்துவார்கள்.   பின் இவர்களும்  ஸ்னானம் செய்துவிட்டு வருகிறார்கள்.  .

    இனி இந்தக்காகத்திற்கும் பிதுர்க்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பார்க்கலாம்  என் வீட்டில்  ஒரு வருடத்தில் மூன்று முறை சிரார்த்தம் வரும்  அதைத்தவிர மஹாளய தினங்கள் ஒவ்வொரு தடவையும்  எல்லா கர்மாக்களையும் முடித்தவுடனே காக்காவிற்கு  சுடச்சுட  சாதம் உருண்டையாகப் பிடித்து  என் அம்மா வைப்பார் .   பின்  என் அப்பா  “கா  கா கா  என்று குரல் கொடுத்து அழைப்பார் . அவ்வளவுதான்  உடனேயே   எங்கிருந்தோ ஒரு காகம்  வரும்  அது அண்டக்காக்கா போல்  இருக்கும்  .அது வந்து  தெற்கு திசைப்பார்த்தபடி அமரும்  . பின் தன் தலையைச்சாய்த்து    இங்கும் அங்கும் பார்த்தபடிதன் அலகால் தின்னும்   அது பாதி தின்னும் போதே  தன் சகாக்களையும்  அழைக்கும் இந்தக் காட்சியை நான் எப்போதும் பார்த்து ரசிப்பேன் . இந்தக்காகம் எங்கிருந்தோ வந்து தெற்குதிசைப்பார்த்து அமர்ந்து சாப்பிடுவது ஏன் ?

    இந்தப்பித்ருக்களுக்கும் காகத்திற்கும் என்ன சம்பந்தம் ?  

    இதைப்பற்றி என் தந்தையின் நண்பரிடம்  கேட்டேன்  . அவர் முன்பு சொன்னதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன் .

    திரேதாயுகம் ஆரம்பிக்கும் வரை  திதி செய்யும் நாட்களில் முன்னோர்கள் நேராகவே வந்து  வயிறு நிறைய உண்டு திருப்தியுடன் குடும்பத்தை வாழ்த்திச் சென்றார்களாம்  ராமாயணத்தில் தசரதர்  காலமானவுடன்  அந்தசெய்தி முதலில் பரதனுக்குத் தெரிய வந்த  உடனேயே அவர் உடலை விட்ட நக்‌ஷத்திரத்தில்   காரியங்கள் செய்ய ஆரம்பித்தார் ,தசரதர் பரதனைப் பார்க்கச் சென்றாராம்  . ஹிந்து தர்மப்படி ஒரு குடும்பத்தில் மூத்த மகன் தான் தன் தந்தைக்குக் கர்மா செய்ய கர்த்தாவாகிறார் . ஆகையினால் ராமரும்  தனக்கு   தன் தந்தை இறந்த தகவல் தெரிந்தவுடனே கானகத்திலேயே கர்மா செய்ய ஆரம்பித்தார்  .ஆனால் அங்கு  தசரதர் வரவில்லை ராமருக்கு மிகவும் மனவருத்தம் ஏற்பட்டு  தான் என்ன தவறு செய்தோம்  என்று மனம் குழம்பி இதைக்குறித்து  தன் குருவிடமே கேட்கவேண்டும் என்று நினைத்து கிளம்பினாராம்  அப்போது “நில் ராமா  நான் வந்துவிட்டேன்  “‘ என்று தசரதர் சொல்ல   தன்னுடயை தவறு என்ன என்று ராமர் கேட்க  தசரதர்
    ” ஹே ராமா  உன்  கர்மாவில் நான் மிகவும் மகிழ்சியடைந்தேன்  உனக்கு என் ஆசிகள் ‘ என்றார் .

    “பின்  ஏன் நான் கர்மா செய்ய ஆரம்பித்தவுடன் தாங்கள் வரவில்லை ?”
    “உன் சகோதரன் பரதன் நதியின் அக்கரையில் முதலில்    கர்மா செய்து என்னை அழைக்க அங்கு முதலில் சென்று பின் இங்கு வந்ததில் சற்று தாமதம்
    ஏற்பட்டுவிட்டது ‘

    இதைக்கேட்டதும் ஒரு வினாடி ராமருக்குக் கோபம் வந்து ” இனி எந்த முன்னோர்களும்  திதி செய்து அழைக்கும் போது  தங்கள் செல்வங்களைப் பார்க்க வரக்கூடாது  ” என்று சற்றும் யோசனை செய்யாமல் பேசிவிட்டாராம் ஆனால் அடுத்த நிமிடமே தான் செய்த காரியத்திற்கு வருந்தி தசரதரிடம் மன்னிப்புக் கேட்டாராம்  பின் இதைச் சரிப்படுத்த எதாவது வழி உண்டா என்று அங்கு நின்ற சனி பகவானிடமும் யமனிடமும் கேட்டாராம்   இது மஹாவிஷ்ணுவின் அவதாரமான ராமரே சொன்னதால் இதை மாற்ற முடியாது ஆனால் முன்னோர்களுக்கு  அளிக்கும் உணவு அவர்களிடம் போய்ச்சேர  ஒருவரை நியமித்து இதைச்சரி செய்யலாம்   என்று யமன் சொல்லி இந்தப் பொறுப்பை சனிபகவானிடம் ஒப்படைத்தார்   சனி பகவான்  தனக்கு நேரம் இல்லாததால் தன்  வாகனமான காக்கையிடம் இந்தப் பொறுப்பைக் கொடுப்பதாக யமனிடம் கூறி அவர் சம்மதத்துடன்  கொடுத்தும் விட்டார் அன்றைய தினத்திலிருந்து  காகம் தான் சாப்பிடும் அன்னத்தினால் மூதாதயர்களின்  வயிற்றை நிரப்புகிறது.    இந்தக் கதை எந்த ராமாயணத்தில் வருகிறது என்று தெரியவில்லை .

    இராமயணத்தில் வரும்  ஜயந்தனின் கதை பலருக்குத் தெரிந்திருக்கும் தேவேந்திரனின் மகன்  ஜயந்தன்  சீதையின் அழகில் மயங்கினான் கானகத்தில்  ராமர் சீதாபிராட்டியின் மடியில்  தலை வைத்து சயனித்திருக்க அந்த நேரம் பர்த்து  ஜயந்தன்  சீதையின் மார்பில் கொத்தினான் .சீதைக்கு இரத்தம் வர அதன் துளியும் ராமர் மேல் விழ அவர் விழித்து காகாசுரனைப் பார்த்தவுடன் மிகவும் கோபம்கொண்டு   ஒரு புல்லைப்பிடுங்கி பிரும்மாஸ்திர மந்திரத்தைச் சபித்து  அவன் மேல் ஏவினார் , அது அவனைத் துரத்த அவனும் பிரும்மா விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகளிடம் சென்று தஞ்சம் கேட்க   ராமர் ஏவிய பிரும்மாஸ்திரத்தைத் தடுத்து  நிறுத்தும் சக்தி தங்களிடம் இல்லை என்றும் ராமரிடமே  போய் சரணாகதியடையவும் சொன்னார்கள்  பின் ஜயந்தனான காகாசுரன் ஸ்ரீராமரிடம் வந்து அப்படியே தலையைக் கீழே வைத்து விழ கருணை உள்ளம் கொண்ட சீதாபிராட்டி அந்தக்காக்கையை ராமரின் பாதம் மேல் படும்படி  நகர்த்தி விட்டாள், ஸ்ரீராமரும் காகத்தை மன்னித்து  துரத்தி வந்த பிரும்மாஸ்திரத்திற்கு  காகத்தின் ஒரு கண்ணைக் கொடுக்குமபடிச் சொல்லி அவனது உயிரைக் காப்பாற்றிவிட்டார் ,பின் காகாசுரனை எல்லோரும் நினைக்கும்படியான அந்தஸ்தையும் அளித்துவிட்டார் நேபாலில்  மக்கள் தீபாவளிக்கு முதல் நாள் காக்காவுக்குப் பூஜை நடத்துவார்கள் .காகம் தலையைக்கொத்த  குளிக்கும் பழக்கமும் முன்பெல்லாம் மக்களிடமிருந்தது

      பித்ருத்தர்ப்பணம்  செய்ய  சில கோயில்களும் உள்ளன   நாகை மாவடத்தில் பூந்தோட்டம் அருகே  இருக்கும்  திலதர்ப்பணபுரி முக்தீஸ்வரர் ஆலயம் .. வடக்கில் காசி  கயா  , மணிகர்ணிகா   வேதாரண்யம்   திருபுவனம் விஷ்ணுபிரயாக்  ,ருத்ரபிரயாக் .கும்பகோண காவிரி தீரம் ராமேஸ்வரம்   வேதாரண்யம் நாசிக், பஞ்சவடி  ராமேஸ்வரம்  போன்ற இடங்களில் இந்நாட்களில்  நல்ல கூட்டம் இருப்பதைப்பார்த்தால் ஏதோ நமது கலாச்சாரம் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது  என்று கொஞ்சம் திருப்தி ஏற்படுகிறது. மஹாளயம் முடிந்து அமாவாசை வர அம்மனும்   நமது கொலுப்படியில் அமர்ந்து ஆசி கொடுக்க தயார் ஆகிவிடுவாள்

    எல்லோருக்கும் பித்ருக்களின் ஆசிகள் இந்த நன்னாளில் கிடைக்கட்டும்.

    படங்களுக்கு நன்றி:
    விஜய சங்கரி – சோமநாதர் திருக்கோவில், கொளத்தூர், சென்னை.

    Share
  • நவராத்திரி….முப்பெரும் சக்தியில் புவனபுரி..!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    பொதுவாக நவராத்திரி  தீபாவாளிக்கு முன்னம்  கொண்டாடப்படும் இந்துப் பண்டிகை. நவராத்திரம் என்னும் வடமொழிச்  சொல் , தமிழில் நவராத்திரி என்று மருவி வழங்குகிறது. இது ஒன்பது இரவைக் குறிக்கும். துன்பத்தைத் துடைத்து, அச்சத்தைப் போக்கி, இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நல்ல வாழ்வையும் அருளச்  செய்த தேவியை வழிபடும் காலமாக நவராத்திரியின் ஒன்பது இரவுகளும் இருக்கிறது.

    நவராத்திரி வந்தாலே போதும்…பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஏக குஷியும்  கொண்டாட்டமும்  தான். வித விதமாக  பட்டுப் பாவாடை உடுத்திக் கொண்டு பூத் தைத்து , கழுத்து நிறைய ஜொலிக்கும்  நகைகளும் போட்டுக்  கொண்டு அசல்  அம்மனாகவே தங்களையும் அலங்கரித்துக் கொண்டு  கோவிலுக்குச் செல்வார்.   அங்கும் அலங்கார தேவிகளைக் கண்டு தொழுது  வீட்டுக்கு கை நிறைய சுண்டல் கொண்டு வரும் மகிழ்ச்சி…..வேறு எந்த விழாவில்  கிடைக்கும்.?  ஒன்பது நாட்களும் பெண் குழந்தைகளை தெய்வ அம்சமாகவே பாவித்து..பாட்டும், சிரிப்பும், சிலிர்ப்பும்…வேறு எந்த பண்டிகையும் இத்தனை நிறைவைத் தருவதில்லை. பத்துப் பதினைந்து குழந்தைகள் ஒன்றாகக் கூடி கோல்களை எடுத்துக் கொண்டு கொலு வைத்திருக்கும் வீட்டுக்குச் சென்று அங்கு கோலாட்டாம் ஆடி….மகிழ்ந்தபடியே…இறுதியாக  தமது வீட்டுக்குள் நுழையும் போது  கை கொள்ளாது…எடுத்துச் செல்லும் பையும்  கொள்ளாது… அவ்வளவு தாம்பூலம்…சுண்டல்…குங்குமச் சிமிழ்…கண்ணாடி என்று மனதும் நிறையும். இதெல்லாம் நாற்பது வருடங்கள் முன்பாக நியதியாக இருந்தாலும் இன்றும்  இது போன்ற சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப் படுவது, தொடர்வது மனதுக்கு இதமாக இருக்கிறது.  இதற்கு தொலைக்காட்சியும் முக்கிய காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது.

     நவராத்திரி என்னும் பெருவிழாவானது  புரட்டாசியில் வரும் மாதப் பிரதமை முதல் நவமி வரை ஆக… ஒன்பது  நாட்கள் காலமாகும். படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் அன்னை பராசக்தியே.முத்தொழில் புரியும் முமூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் வணங்கும் பரம்பொருள் அன்னை பராசக்தி அம்பிகையே.

    நாம் அனுதினமும் அம்பிகையைத் தொழுதாலும் இந்த நவராத்திரி சமயங்களில் ஒன்பது மடங்கு அதிகமாக பூஜிக்க வேண்டும். ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரி வந்தாலும் அனைவரும் தெரிந்து கொண்டாடுவது சாரதா நவராத்திரிக்கு மட்டும் சிறப்புகள் அதிகம்.

    இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி  ஆகிய மூவரும் மகிஷாசுர  மர்த்தினி  சக்தியாக உருவெடுத்து மகிஷனை வதம் செய்து அழித்ததையே  “சாரதா நவராத்திரியாக” இன்றும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

    நவராத்திரி காலம் முழுதும் பெண்களை சக்தி ஸ்வரூபங்களாகவே பாவனை செய்து மகிழ்விப்பது தேவியை ஆராதிப்பதற்கு ஒப்பானது.  அதுவும் பெண் குழந்தைகளை “கன்னிப் பெண்கள்” பாலா திரிபுர சுந்தரியாகவே பாவனை செய்தலும் கன்னியா பூஜை  செய்வதும் மிகுந்த நற்பயனையும் இகபர சுகத்தையும் தரும். அதே போல  இந்த ஒன்பது நாட்களிலும் அன்னதானம் செய்விப்பது தேவியை குளிர்வித்து சகல நன்மைகள் பெற வழி வகுக்கும்.

    சில இக்கட்டான சூழ்நிலையால் நவராத்திரிக்கு ஒன்பது நாட்களும் பூஜிக்க இயலாத நிலை வந்த போதும் 8 வது நாளான அஷ்டமி,அன்று ஒரு நாள் மட்டும் மனதார அம்பாளை வேண்டிக் கொண்டு ஆராதனை செய்தால் கூடப் போதும்;  அவள் அருளைப் பெற்றிடலாம். இந்த ஒருநாளில் கூட சுமங்கலிகளுக்கும், கன்னிப் பெண்களுக்கும் தாம்பூலம்  தந்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். நவராத்திரி அத்துணை விசேஷமானது.

    இந்தியா முழுவதும் இந்த நவராத்திரி பெரிய அளவில் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.

    கர்நாடகாவிலும், வங்காளத்திலும்  வெகு பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் தசரா என்னும் நவராத்திரி தான்.மஹாராஷ்டிரா  பகுதியில் தசரா சமயங்களில்  “தாண்டியா ரஸ் ..” என்னும்  நமது கோலாட்டத்தை மிகவும் உற்சாகமாக பெண்களும் ஆண்களும் தாளத்தோடு ஆடிப் பாடுவது மிகவும் இனிமையாகவும், ரசிக்கும் படியாக இருக்கும்.

    ஆந்திராவில் ஒரு பழக்கம் உண்டு.சிலரது வீடுகளில் சுமங்கலிப் பெண்கள் இந்த ஒன்பது நாட்களும் மௌன விரதத்தை அனுஷ்டித்து ஒரு தனி பூஜை அறையில் அமர்ந்திருப்பார்கள். மிகவும் கஷ்டமான ஆசார அனுஷ்டானத்தை மேற்கொண்டு “ஒக்கப்போது ” என்னும் ஒரு நாளைக்கு ஒரே வேளை  மட்டும் உணவு.  அதுவும் உப்பு, காரம், புளி ,அரிசி  என்று  இதை எதுவும் சேர்க்காமல் உண்பதைக் கடைபிடிப்பார்கள். அதை விடச் சிறப்பான விஷயம் என்னவென்றால்…, “ஒக்க லக்ஷ  பசுப்பு..” அதாவது அந்தப் பெண்கள் தங்களின் முன்பு மலை போல புத்தம் புதிய அல்லது காய்ந்த வரளி  மஞ்சள் இவற்றை மலை போலக் குவித்து வைத்துக் கொண்டு அவர்களைப் பார்க்க வரும் சுமங்கலிகளுக்கு அவர்களது புடைவைத் தலைப்பில் தனது  இரு கைகளின்  முழங்கை வரைக்கும் எடுத்து,  மஞ்சள் கிழங்குகளை அள்ளி தாராளமாக எடுத்து மூன்று முறை நிரப்புவார்கள். அதே போலத் தான் சுத்தமான குங்குமமும்…அள்ளி அள்ளித் தருவார்கள்.

    இந்த ஒன்பது நாட்களுள் மூன்று லக்ஷம் மஞ்சள் கிழங்குகள் வரைக்கும் கூட அள்ளிக் கொடுப்பார்கள் சிலர். இது ஒரு சிறப்பான வேண்டுதல் ஆகும். இதைக் கொடுக்கும் வீட்டின் முன்பு எப்போதும் பெண்களின் கூட்டம் நிறைந்திருக்கும் . இந்த முறையைப் பின் பற்றி தருபவருக்கும் பெறுபவருக்கும் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்
    அதே போல விடியற்காலையில்  நான்கு மணியிலிருந்து அடுத்த நாள் இரவு ஒரு மணி வரைக்கும் கூட நீண்ட வரிசையில் இந்த மஞ்சள் வாங்கிக் கொள்ளப் பெண்கள் வரிசையில் காத்திருந்தபடியே “லலிதா சஹஸ்ரநாமத்தைப்” பாராயணம் செய்து கொண்டே இருப்பார்கள். எனக்கும் இந்த சுகமான அனுபவம் கிடைத்ததை நான் பெற்ற வரமாகவே நினைக்கிறேன்.

    தமிழகத்தில் எப்படி “கொலு” வைத்திருக்கும் வீடுகளுக்குச் சென்று “கொலு பார்க்க வந்திருக்கோம்” என்று சென்று கொலுவைப் பார்த்துவிட்டு தாம்பூலமும் சுண்டலும் வாங்கிச் செல்வார்களோ…அதே போல ஆந்திராவிலும் “லட்சப் பசுப்பு” என்று எழுதி வைத்திருக்கும் வீட்டின் முன்பு பெண்களின் கூட்டம் அலைமோதும்.

    மதுரையிலும்  சம்பிரதாயம் எதுவும் மாறாமல் ஒன்பது படிகள் கொலு வைத்து பெண் குழந்தைகளை அழைத்து “கோலாட்டம்” வைத்துக் கொண்டு ஆடியும்…அந்தந்த நாளுக்கான ராகத்தைப் ..பாடிக்கொண்டே கும்மியடித்தும் அம்பாளை சந்தோஷப் படுத்துவார்கள்.ஒன்பது நாட்களும்    வந்து பாடிவிட்டு மகிழ்வோடு தாம்பூலம் வாங்கிக் கொண்டு செல்வதைக் காணும்போது தான் கொலு வைத்தவர் மனதில் அந்த அம்பிகையே…பராசக்தியே நேரில் வந்திருந்து ஆசீர்வாதம் செய்த திருப்தி இருக்கும்.

    அத்தனை கோயில்களிலும் கூட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷ அலங்காரமும் ஆராதனையும் நடக்கும். கோயில்களில் கொலு பார்க்க வேண்டியே தினமும்  வரும் கூட்டம் கட்டுக்கு அடங்காது.  மீனாக்ஷி அம்மன் கோவிலில் அம்பிகையைக்  கொலு  மண்டபத்தில் நவ வித பூஜையோடு நவ வித அலங்காரத்தோடு வீற்றிருக்கும்  அன்னையைக் காண ஜென்ம பலன் கிட்டும். மண்டபத்தின் வழியெங்கும் இருபக்கமும் ஆறடி உயரத்தில் வெள்ளியில் தங்க முலாம்  பூசப்பட்ட…யானை,மயில்,கிளி,அன்னம்,காமதேனு,கருடன்,சிம்மம்,மூஞ்சூறு,கடோத்கஜன்,நந்தி ..ஆகிய வாகனங்கள்  தக தகவென்று மின்னிக் கொண்டு நிறுத்த வைக்கப் பட்டிருக்கும் அழகு அபாரமானது.
    ஒரு முறை கண்டால் போதும்…என்றென்றும் நெஞ்சத்தை விட்டு அகலாது. பொற்றாமரைக் குளம் முழுதும் விளக்கொளியில் அலங்கரிக்கப் பட்டு ஜக ஜோதியாக மின்னிக் கொண்டிருக்கும் அழகு. சித்திரைத் திருவிழாவைப்  போலவே “நவராத்திரிக்கும்” மதுரையே  ஜே…ஜே.. என்று மல்லிகை, பிச்சி,ஜாதி முல்லை,தாழம்பூ,பன்னீர் ரோஜா ஆகிய சுகந்த மலர்களின் இனிய மணத்தை  தாங்கி மணத்துக்  கொட்டும்.இதுவரை ஒரு முறை கூட கண்டிராதவர்கள் அவசியம் ஒரு முறையேனும் கண்டு வரவேண்டும். அந்த சுகமே அலாதியானது.தேவி பாகவதத்தில் கூறப் பட்டுள்ள படியே இந்த நவராத்திரி பூஜை சிறப்பாக கொண்டாடும் மற்றோர் இடம் சிதம்பரம் ஆகும். கோயிலின் பிரகாரத்தின் உள்ளே பிரம்மாண்டமான முறையில் பொம்மைக் கொலு…! நீளத்திலும் அகலத்திலும் அந்தப் பிரகாரத்தையே சிறப்பிப்பதாக அமையும் வகையில் இருக்கும். ஆயிரக் கணக்கில் மிகவும் புராதனக் களிமண் பொம்மைகள் கூட வீற்றிருக்கும்.நித்தம் சாஸ்திர சம்பிரதாயப் படியே ஹோமங்களும், நித்தியா அன்னதானமும், சுவாசினி பூஜையும், 1008 கன்னியா பூஜை மற்றும் ஒரு லட்சத்தியெட்டு ரவிக்கைத் துண்டுகள்,   ஒன்பது வண்ணங்களில் அர்ச்சனை  செய்வித்து பாலாம்பிகையை வணங்கும் விதத்தைக் காண மனம் நெகிழும்.
    இந்த ஒன்பது நாள் பூஜையின் இறுதியில் மகா சண்டி யாகம் நூற்றி எட்டு குருக்கள் இணைந்து கலந்து கொண்டு வேத கோஷம் முழங்க பூர்ணாகுதி நடக்கும் போது அம்பிகையே நேரில் வந்து ஆசீர்வதிப்பது  போல இருக்கும்.

    விஜயதசமி அன்று நடராஜர் முன்பு இருக்கும்  மண்டபத்தில் பரதம் அறிந்த  குழந்தைகளும் , பெரியவர்களும்  பரதம் ஆடுவார்கள். அன்று பல கோயில்களில் அக்ஷராப்பியாசம்..என்னும் முதன் முதலில் குழந்தைகளுக்கு எழுதக்   கற்றுத்  தருவது வழக்கம். இந்த நாளில் செய்யும் அனைத்துக் காரியமும் நம்மை வெற்றியோடு விளங்கச் செய்யும் என்ற நம்பிக்கை என்றும் உண்டு. புதிதாக வீடு கட்ட ப் போவதன் முன்பு வாஸ்து பூஜையும் இந்த நல்ல நாளில் செய்தால் எவ்விதத் தடங்கலும் இன்றி ஜெயம் உண்டாகும் என்பதும் வழக்கத்தில் உள்ளது.

    கும்பகோணம் அருகில் தமிழ்நாட்டில் இருக்கும் சரஸ்வதிக்கென்று தனிக் கோயில் பூந்தோட்டத்தில் இருக்கிறது.ஒட்டக்கூத்தருக்கு அன்னை அருள் பாலித்த திருத்தலம் அதனால் கூத்தனூர் சரஸ்வதி  என்றே அழைக்கப் படுகிறாள். செல்வம் அழிந்தாலும் கற்ற வித்தை அழியாது எனபதை உணர்த்தும் வண்ணம் அன்னை கலைகளுக்கரசி…வீணையோடு வீற்றிருக்கும் எழிலைக் காண கண் கோடி வேண்டும். இத்தகைய ஞான சக்தி வழிபாடு நமது  நமது அறியாமையை அகற்றி அறிவையும், சத்துவ குணத்தையும் வளர்க்கிறது. கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சிலேட்டு, நோட்டுப் புத்தகம்,பேனா பென்சில் இவற்றை அம்மனின் காலடியில் சமர்ப்பித்து எடுத்து வருவது நல்லது . குழந்தைகளுக்கு கொல்லூர் மூக்காம்பிகை கோயிலில் மற்றும் கேரளக் கோவிலில் நடை பெறுவது போலவே இங்கும் அக்ஷராப்யாசம் வெகு விமரிசையாக நடை பெரும்.

    பூந்தோட்டதிலிருந்து  ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது திருமீயச்சூர்..இங்கு அன்னை லலிதாம்பிகை அருள்பாலிக்கிறார். தேவியின் லலிதா சஹஸ்ரநாமம் தேவியே சொல்ல இங்கு தான் அகஸ்த்தியரால் பாடப் பெற்றது. அமைதியும், எழிலும், கலைவண்ணமும் கொண்ட திருக்கோவில். அம்பாளைக் காண மனம் குளிரும்.
    ஒவ்வொரு நவராத்திரி சமயத்திலும் வேறு எங்குமே இல்லாத வகையில் இங்கு தான் அம்பாளின் முன்பு சர்க்கரைப் பொங்கலைப்பரப்பி பள்ளம்  வெட்டி , அது நிறைய ததும்ப  ததும்ப நெய்யை ஊற்றி அதில் லலிதாம்பிகாவின் பிம்பம் உருகிய நெய்யில் விழும்  காட்சியை  சேவிப்பார்கள். நெய்விளக்கின் ஒளியில் அம்பாளின் உருவம் கண்ணாடியாக மின்னும்…அழகே அழகு. வருடத்தில் ஒருமுறை மட்டுமே காணக் கிடைக்கும் அற்புதக் காட்சியாகும். மாதா ஜெயா ஓம் லாலிதாம்பிகையே …என்ற நவரத்னா மாலையில் பாடுவது போல “காணக் கிடையா கதியானவளே ..” என்ற வரியை உணர்த்தும் அனுபவம்..நிச்சயம் கிடைக்கப் பெறும்.

    நவராத்திரியில் நவாட்சரி மந்திரம் செய்வது 24 அக்ஷரங்கள் கொண்ட நவாட்சரி காயத்ரிக்கு ஈடான மகாமந்திரமாகும். சகல காரிய சித்திக்கும் அற்புத மந்திரம். இந்த மந்திரத்திற்கு மகா லட்சுமியும்  , மகா சரஸ்வதியும் சக்தி தேவியர்களாக  அருள் பாலிக்கிறார்கள். “நவாட்சரி மகாமந்திர ஜபம் கரிஷ்யே என்று கூறி “ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே” என்று 108 முறை ஜபம் செய்து பால் பாயசம் நைவேத்யம் செய்தால் தேவியின் அருள் நிலைத்திருக்கும்.

    இச்சா சக்தி அதாவது துர்க்கை வீரத்தின் தெய்வம், சிவப் பிரியை, வெற்றியின் தேவதை, எருது உருவம் கொண்ட மகிஷன் எனும் அரக்கனை  ஒன்பது இரவுகள் போரிட்டு வெற்றி கண்டவள். அவனை வதம் செய்த நாளே  “விஜயதசமி”. மகிஷனை வதைத்ததால் “மகிஷாசுர  மர்த்தினி” . நவ துர்க்கை வழிபாடு நவராத்திரியில் சிறப்பானது.கொல்லூர் செல்லும் வழியில் தான் கட்டில் வன துர்க்கை (துர்கா பரமேஸ்வரி ) அருள் பாலிக்கிறாள். மிகவும் சாநித்யம் படைத்த கட்டில் துர்க்கைக்கு நிமிஷா நிமிஷம் சூட்டைத் தணிக்க இளநீர் அபிஷேகம் செய்வதைக் கண்கூடாகக் காணலாம் .

    கிரியா சக்தி செல்வத் திருமகள், லட்சுமி. மலரையொத்த மென்மையான அழகு நிரம்பியவள். செல்வத்தின் உறைவிடமே இவளின் இருப்பிடம், விஷ்ணுப் ப்ரியை, பாற்கடலில் அமுதத்துடன் உதித்தவள். சமுத்ரராஜனின் குமாரி. செந்தாமரையில் வீற்றிருப்பவள். திருச்சானூர் நாயகி. நவராத்திரியில் நான்காவது நாளிலிருந்து ஆறாம் நாள் வரை அஷ்டலக்ஷ்மிகளின் தரிசனம் அனைத்து கடாக்ஷத்தையும் நல்கும்.

    ஞான சக்தி, ஆயக் கலைகளுக்கும் சகல கல்விக்கும் அதிபதி சரஸ்வதி..!  பிரகாசம் கொண்ட ஸ்படிகம் போன்ற அறிவின் தன்மையைக் கொண்டவள். பிரம்மாவின் பிரியை.அஷ்ட சரஸ்வதியின் தரிசனம் பெற்று கடைசி மூன்று நாட்களும் வழிபட்டால்…கலைமகளின் பூரண கடாக்ஷத்தைப் பெறலாம்.

    கூத்தனூர் சரஸ்வதியைத் தவிர ஆந்திராவில் இரண்டு இடங்களில், பாசார் மற்றும் பாசரா என்ற இடங்களில் மலை மீது சரஸ்வதிக்கு கோயில் இருக்கிறது. கொல்லூர் மூகாம்பிகையும், சிருங்கேரி சாரதாம்பிகையும், கூட சரஸ்வதி தான். நவராத்திரியில்  நீல சரஸ்வதியைத் தொழுதால் ஞானம் பெறலாம்.

    கலைகளைத் தரும் தேவிக்கு சிலைகள்  பஞ்சலோகத்தில் மூர்த்தம் வடிக்கும்  சில்பிகளைச் சந்திக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது. அத்தனை நேர்த்தியான வேளைகளில்….மெய்மறந்து ரசித்துக் கொண்டே நின்றவள்..அவர்களிடம் கேட்ட கேள்வி…எப்படீங்க எல்லாம் ஒரே மாதிரி அச்சில் வார்த்தாலும்..மேற்கொண்டு உளியில் செதுக்கியும்…அதே நயத்தோடு வருகிறது..ஒவ்வொன்றும் ஒன்றை விட இன்னொன்று என்று கச்சிதமாக சிலா ரூபம் எடுக்கிறது என்று ஆவல் மேலிடக் கேட்டேன். அவர்கள் சொன்ன பதில்…” எல்லாம் அந்த சரஸ்வதி தேவியின் அருள் கடாக்ஷம் தாங்க….”என்று பதிலாகக் கேட்டதும்….”ஆம்..அவளின்று எது கலை…?” இதோ எழுத ஆரம்பிக்கும் போது  அவள் நினைவால் தொடங்கினேன்..எண்ணமெல்லாம் எழுத்தாக அவளே முடிவு வரை நடக்கிறாள்.

    வீரமும், கல்வியும், செல்வமும் ஆக இந்த முப்பெரும் சக்திகள் தான் இந்த புவனத்தையே ஆளுகிறது…அதற்காக வருடத்தில்  ஒன்பது இரவுகள் இந்த மூன்று தேவிகளை ஒவ்வொரு நவராத்திரியிலும் மனம் நிறைந்த பக்தியோடும் கருணையோடும் துதித்து வரம் பெறுவோம்.

     படத்துக்கு நன்றி

     

    Share