பித்ருக்களுக்கு இரண்டுவார விடுமுறை

0

 

விசாலம்

சம்யமினீ அரசாங்கம் தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது  . இது என்ன அரசாங்கம் என யோசிக்கிறீர்களா !  இதுதான் எமதர்மனின் ஆபீஸ்   ..தெற்கு திசையில் இருக்கிறது அதற்கு மேலே சரியான  முகவரி கொடுக்க ஒருவரும் இல்லை ஏனென்றால் ஒருதடவை அவரது ஆபீஸுக்குப் போனவர்கள் திரும்பி வருவதில்லை . அந்த  இடம்  அவ்வளவு பிடித்துப்போய்விடுமோ என்னவோ! .அதில் தலைமைப் பகுதி ஏற்று கடமைகளைத் திறம்பட நடத்திவருபவர்  திருவாளர் யமன் .அரசனோ ஆண்டியோ அரசியல் மந்திரியோ அல்லது பாமர மக்களோ  எல்லோருக்கும் ஒரே நீதிதான்  அங்கு லஞ்சம் …..சுப் …..மூச்சு .விடக்கூடாது அந்தப்பேச்சுக்கே இடமில்லை .அந்த ஆபீஸுக்குப் போனவர்கள்  “பித்ருக்கள் “என்ற பெயர் பெறுகின்றனர்  இவர்கள் இருக்கும் குவார்டர்ஸின் பெயர்   பித்ருலோகம்   .இந்த  இடம் பூலோகத்திற்கும் சுவர்க லோகத்திற்கும் இடையில் உள்ள இடம்  என்கிறார்கள் .இங்கு ஒவ்வொரு வீட்டிலும்  மூன்று சந்ததிகள் ஒரே கோத்திரம் கொண்டு வசிப்பார்கள் . இந்தக்கோத்திரத்தில் நாலாவதாக பூலோகத்தில்  ஒருவர் காலமாக

  அவர்  மேலே இந்த இடத்திற்கு வருவார் .அவருக்கு இடம் கொடுக்க முதலில் வந்தவர்  தன் இடத்தைக்காலிசெய்து  சுவர்கம் போய்விடுவாராம் அவருக்கு சுவர்க்கலோகத்தில் இடம் கிடைத்துவிடும் ஒரு அட்வான்சும்  தராமலே ………..

 இவர்கள்   தாங்கள்  பல ஆண்டுகள் கூட இருந்து வாழ்ந்த குடும்பத்தையும் அவரது செல்வங்களையும்  உறவினர்களையும் பார்க்க ஆசைப்பட்டு யமனிடம் ஒரு விண்ணப்பம் கொடுத்தனர் . அதாவது  அவர்களுக்கும்  வருடத்தில் ஒரு முறையாவது லீவு  கிடைத்து தங்கள் குடும்பத்தைக்காண பூலோகத்திற்குச் செல்ல வேண்டும்    என்பது தான் யம தர்ம  பாஸும் {boss}  அவர்கள் விருப்பபடி ஒரு  பதினைந்து நாட்களுக்கு ” ஹாலிடே’ சாங்க்‌ஷன் செய்து  வடை ,பாயசம் பச்சடியுடன் நல்ல விருந்தும் சாப்பிட்டு திருப்தியாக வர வாழ்த்தி அனுப்பினார்   இந்த  விடுமுறை புரட்டாசி  மாதம்  சூரியன்  கன்னிராசியில் பிரவேசித்ததும் பௌர்ணமிக்கு மறுநாள் தேய்ப்பிறை பிரதமையிலிருந்து ஆரம்பித்து  அமாவாசை வரை நீடிக்கும். இந்த ஹாலிடேக்குப்பெயர்  “மஹாளயம் ” வருடா வருடம்   இந்த மஹாளய விடுமுறையில் பித்ருக்கள் .,,மூதாதையர்கள்  பூலோகம் வந்து  தாங்கள் யமராஜன் ஆபீஸுக்குக்கிளம்பிய   நக்‌ஷத்திரத்தில் தங்கள் மகன் வீட்டில் ஆஜராகி நல்ல விருந்து உண்டு திருப்தி திருப்தி திருப்தி என்று மூன்று தடவை சொல்லிவிட்டு  அவரது சந்ததிகளை வாழ்த்திவிட்டு வருவார்கள், மகன் இல்லையென்றால்  சகோதரன் வீட்டிலோ வேறு சகோதரன் போல்  இருக்கும் உறவினர்கள் வீட்டினிலோ போய் சாப்பிட்டும் வருவர் ஆனால்    இவர்களுக்கும் தன்மானம் உண்டு ஆகையால் முறையாக எள்ளும் நீரும் இறைத்து   கூப்பிட்டால் தான் இவர்கள்  வருவார்கள்

மூன்று தலைமுறைப் பெயர்கள்   சொல்லி  எள்ளும் நீரும்  விட   இவர்கள் வந்து  ஆசிகள் தந்து வாழ்த்திவிட்டுப்போவார்கள் . கறுப்பு  எள் இவர்களுக்கு மிகவும் பிடிக்குமாம் .எள் திருமாலின் வியர்வையிலிருந்து  பிறந்ததாம்.    மிகவும் பரிசுத்தமான தான்யம் இந்த எள். இந்தப் பித்ருக்களை அழைக்க  உதவும்  மற்றொரு கருவி தர்ப்பை .இதற்கு அமிர்தவீர்யம் என்ற பெயரும்   உண்டு .  தர்ப்பையை  குசம் என்றும் சொல்லுவார்கள் . இந்தத்தர்ப்பை  முனையில்  பிரும்மாவும் நடுப்பாகத்தில் விஷ்ணுவும்  மறுமுனையில் ஈசனும் இருக்கிறார்கள் இதன் விசேஷம் என்னவென்றால் நீரில் அழுகாது .நிலத்தில் வாடாது  விதையில்லாமல் சுயம்புவாக  தோன்றியது ,சிலர் நமது ஆன்மாவையை தர்ப்பைக்கு ஒப்பிடுகிறார்கள் எனக்கு இதைப்பற்றி தெரியாது  நான் ஆன்மாவை இதுவ்ரையிலும் பார்த்ததில்லை .

மஹாளயம் தினங்கள் தவிர்த்து மற்ற அமாவாசை கிரகண புண்ணியகாலங்கள் மாதப்பிறப்பு   அதுவும்  ஆடி  ,தை மாதப்பிறப்பு ,   ஆடி அமாவாசை ,  தை அமாவாசை  இறப்பு பிறப்பு போன்ற நாட்களில் இந்த எள்ளும் தர்ப்பையும் முன்னுக்கு நிற்கின்றனர்  எந்த நேரத்திலும் பித்ருக்கள் வர ரெடியாக இருந்தாலும்  இந்த இயந்திரயுகத்தில் பலர் அவர்களை அழைக்க  அத்தனை சிரத்தைக்  காட்டுவதில்லை

தங்கள் பிறந்த நாட்கள் , தங்கள் குழந்தைகளின்  பிறந்த நாட்கள் எல்லாம் கேக் வெட்டி தடபுடலாக பார்ட்டி கொடுக்க மனம் விழைகிறதே தவிர பித்ருக்களுக்குச் செய்வதை ஒரு பாரமாக நினைத்துக் கொள்கின்றனர் சிலர். அதுவும் வருங்கால சந்ததியர்களுக்கு அதில் நம்பிக்கையும் இல்லை .தர்ப்பணம் செய்து பித்ருக்களை அழைப்பதில் மஹாளய தினங்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது  .எதை விட்டாலும் இந்தத் தினங்களை விடாமல் மூதாதயர்களுக்கு திதி செய்வது மிகவும்  அவசியம் . அவர்கள் உடலைவிட்டுப்போன திதியில் இதைச்செய்ய வேண்டும்  இதில் மஹாளய பரணி நக்‌ஷத்திரம் மிகவும் விசேஷமானதாம்  இதில்ஒருவர் தமக்குத் தெரிந்தவர்கள்  .உயிரைப்போல் பழகினவர்கள் யாவரையும் நினைத்து அவர்கள் பெயர்களைச்சொல்லி திதி செய்யலாம்  மஹாளயத்தின் ஒன்பதாவது நாளில் சுமங்கலியாக இறந்த பெண்மணிகளுக்குத் திதி செய்ய வேண்டும் அத்துடன் குழந்தைகளாக இருந்து  பின் இறந்து விட்ட செல்வங்களுக்கும் இதைச் செய்யவேண்டும்

நடுவில் வரும் அஷ்டமி திதியில்  துர்மரணம் செய்துகொண்டவர்களுக்குத் திதி செய்யவேண்டும் சன்னியாசிகளுக்கு சன்னியாஸ்த மஹாளயம் என்று ஒன்று வரும் அதில் அவர்களை நினைத்து திதி தந்து வழிபடுவார்கள் என நினைக்கிறேன் அவர்களின் பிருந்தாவனத்தில் வழிபாடு செய்வார்கள் போலிருக்கிறது ,.

தர்ப்பணம் செய்யும் போது  எள்ளும் தண்ணீரும் இறைத்து  “தர்ப்பயாமி தர்ப்பயாமி தர்ப்பயாமி என் மூன்றுதடவைகள்  அடிக்கடி  என் அப்பா சொல்வதை நான் பார்த்திருக்கிறேன்   ,

காருணீக பித்ரு தர்ப்பணம் என்று ஒன்று உண்டு இதில்   தெரிந்தவர்கள் தெரியாத  வம்சாவழியில் உலகைவிட்டுப் போனவர்கள் எல்லோருக்கும் அவர்கள் திருப்தி  பெற திதி  செய்யும் வழக்கமாம் என்று ஒரு புரோகிதர் கூறினார் தேவர்களும் தேவலோகவாசிகள்அனவைரும்  திருப்தியடையட்டும் என்றும் சம்ஸ்கிருதத்தில்  முடிவாக வரும்

முன்பெல்லாம் இவர்களுக்கு சாப்பிட பல ஐட்டங்கள் கிடைக்கும்.    வடை பாயசம் எள்ளுரண்டை  என்று  நல்ல ராஜமரியாதைகளுடன்  அவர்களை வரவழைத்து வேஷ்டி .அங்கவஸ்த்திரம் [ பத்தாறு  கணக்கில்} போன்ற உடைகளையும் அளித்து ஆசாரமாக அவர்கள் விருப்பப்படி  எல்லாமே நடத்தி பெரிய நுனி இலையில்  வயிறு புடைக்க  விருந்தளிப்பார்கள் .இதை நடத்தி வைத்த வாத்தியார்களும் மிக சிரத்தையாக   நடத்திக்கொடுப்பார்கள்   இப்போது அதெல்லாம் மிகக்குறைந்து விட்டது   இதை அனுசரித்துசெய்ய ஆசைப்படுபவர்கள் இருந்தாலும்   இதைச்செய்ய வரும் வாத்தியார்கள்  கையில் மொபைலுடன்  டூவீலரில்  அவசர அவசரமாக பல வீடுகளுக்கு ஓடுவதால்    செய்யும்  அவகாசம் மிகவும் குறைந்து  எல்லாமே ஷார்ட் கட்  ஆகிவிடுகிறது ஆகையால்  வாழைக்காயும்.அரிசியும்   கொஞ்சம் பயந்தப்பருப்பும் வைத்துக்கொண்டு காத்திருக்க   எல்லாமே ஒரு 30 நிமிடங்களில்  முடிந்துவிடுகிறது . இத்தனைச்செய்வதே பெரிய காரியம்தான்
மேலும் இந்த புரோகிதர்களின் செல்வங்கள்  இந்த  லயனுக்கு வராமல்  வேறு படிப்பு படித்து  நல்ல வேலைக்குச் சேர்ந்துவிடுவதால்  பிற்காலத்தில் எங்கே இந்த வாத்தியார் தொழிலே   பஞ்சமாகிவிடுமோ என்ற பயம்  மனதில் ஏற்படுகிறது

இந்தக்கால  வீட்டுப்பெண்மணிகளும்  வேலைக்குப்போவதால் இதை சரியாக அனுஷ்டிக்கமுடியாமல் ஏனோதானோ என்று  நடக்கிறது .முன்பு கூட்டுக் குடும்பம் இருந்ததால் பல பெரியவர்கள் இது போன்ற நாடகளில் கடைப்பிடிக்கும் விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பார்கள் தற்போது அதுவும் இல்லை . சிலர் வீட்டில்  சிலரது ஜாதகத்தைப்பார்த்து பித்ரு தோஷம் இருக்கிறது அதனால் தான் வீட்டில்  இப்படிப்படுத்துகிறது என்றுச்சொல்ல கேட்டிருக்கிறேன். அந்த தோஷம் ஏற்படுவதே  இதைப்போன்ற  அனுஷ்டானங்களை விட்டதனால்தான் என்று சாஸ்திரமேதைகள் கூறுகின்றனர் சிலர் வீட்டில் பேரனது பூணலும் அவன்  உடலில் இருப்பதில்லை பல ஆயிரங்கள் செலவழித்து நடத்திய உபநயனம்  அர்த்தமில்லாமல் போய்விடுவதைப் பார்த்தால் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது

சிலருக்கு  பண நெருக்கடி அதிகமாக இருக்க ஆனால் எப்படியும் தன் அப்பாவுக்கு திதி செய்யவேண்டும் என்ற  மனம்  இருக்க  அவர்கள் ஆகாயத்தைப் பார்த்து” பித்ருக்களே   என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை என் உடல் நிலையும்  பொருளாதார நெருக்கடியும் இதைச்   செய்ய முடியாமல் என்னைத் தடுக்கிற்து . மன்னித்து  ஆசி வழங்குங்கள் “என்று சொன்னாலே பாட்டனார் தந்தையார் போன்ற முதாதையர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்களாம்  .மஹாளயக்காலத்தில் ஊரில் இல்லாமல் எதாவது பிரயாணம் வந்து  வேறு எங்கேயாவது போயிருந்தால் பசுவுக்குப் புல்  கொடுத்து அதைத் தர்ப்பணமாக ஏற்கச் சொல்லலாம்  என்றும் சாஸ்திரம் படித்தவர்கள் கூறுகிறார்கள்

இப்போது காக்கையின் கதைக்கு வரலாம்

காகத்திற்கும் மனிதனுக்கும் சில ஒற்றுமைகள்  உண்டு  காகம் எதாவது தின்ன கிடைத்தால் எல்லோரையும் கூவி அழைத்துப்பின் அதைப்பகிர்ந்துக்கொள்ளும்.இதே போல் தான்  முன்பு   கூட்டுக்குடும்ப  அமைப்பு  இருந்த போது அந்தவிட்டுப் பெண்மணி  எல்லோரையும் அழைத்து உணவளிப்பாள் இன்றும் குஜராத்தி  அல்லது மார்வாடி குடும்பத்தில் இதைக் காணலாம் .தவிர  காகம் ஒன்று மினசாரக் கம்பியில் பட்டோ அல்லது வேறுவிதமாகவோ இறந்துவிட்டால்  எல்லா காகங்களும்  “கா  கா  கா  கா  வென்று கத்தி ஊரையேக் கூட்டிவிடும்  அந்த இறந்த காக்காவின் உடலைச் சுற்றிச்சுற்றி   பறந்து கரைந்து தன் சோகத்தை வெளிப்படுத்தும்  பின்  எங்கேயாவது நீர்நிலையிருந்தால் அதில் முக்கி எழுந்து  விட்டு வருமாம . இதே போல் இன்றும் கிராமங்களில் ஒருவர் இறந்தால் பலர்  அங்கு விரைந்து வந்து  மார்பை அடித்துகொண்டு அழுது தங்கள் சோகத்தை வெளிப்படுத்துவார்கள்.   பின் இவர்களும்  ஸ்னானம் செய்துவிட்டு வருகிறார்கள்.  .

இனி இந்தக்காகத்திற்கும் பிதுர்க்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பார்க்கலாம்  என் வீட்டில்  ஒரு வருடத்தில் மூன்று முறை சிரார்த்தம் வரும்  அதைத்தவிர மஹாளய தினங்கள் ஒவ்வொரு தடவையும்  எல்லா கர்மாக்களையும் முடித்தவுடனே காக்காவிற்கு  சுடச்சுட  சாதம் உருண்டையாகப் பிடித்து  என் அம்மா வைப்பார் .   பின்  என் அப்பா  “கா  கா கா  என்று குரல் கொடுத்து அழைப்பார் . அவ்வளவுதான்  உடனேயே   எங்கிருந்தோ ஒரு காகம்  வரும்  அது அண்டக்காக்கா போல்  இருக்கும்  .அது வந்து  தெற்கு திசைப்பார்த்தபடி அமரும்  . பின் தன் தலையைச்சாய்த்து    இங்கும் அங்கும் பார்த்தபடிதன் அலகால் தின்னும்   அது பாதி தின்னும் போதே  தன் சகாக்களையும்  அழைக்கும் இந்தக் காட்சியை நான் எப்போதும் பார்த்து ரசிப்பேன் . இந்தக்காகம் எங்கிருந்தோ வந்து தெற்குதிசைப்பார்த்து அமர்ந்து சாப்பிடுவது ஏன் ?

இந்தப்பித்ருக்களுக்கும் காகத்திற்கும் என்ன சம்பந்தம் ?  

இதைப்பற்றி என் தந்தையின் நண்பரிடம்  கேட்டேன்  . அவர் முன்பு சொன்னதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன் .

திரேதாயுகம் ஆரம்பிக்கும் வரை  திதி செய்யும் நாட்களில் முன்னோர்கள் நேராகவே வந்து  வயிறு நிறைய உண்டு திருப்தியுடன் குடும்பத்தை வாழ்த்திச் சென்றார்களாம்  ராமாயணத்தில் தசரதர்  காலமானவுடன்  அந்தசெய்தி முதலில் பரதனுக்குத் தெரிய வந்த  உடனேயே அவர் உடலை விட்ட நக்‌ஷத்திரத்தில்   காரியங்கள் செய்ய ஆரம்பித்தார் ,தசரதர் பரதனைப் பார்க்கச் சென்றாராம்  . ஹிந்து தர்மப்படி ஒரு குடும்பத்தில் மூத்த மகன் தான் தன் தந்தைக்குக் கர்மா செய்ய கர்த்தாவாகிறார் . ஆகையினால் ராமரும்  தனக்கு   தன் தந்தை இறந்த தகவல் தெரிந்தவுடனே கானகத்திலேயே கர்மா செய்ய ஆரம்பித்தார்  .ஆனால் அங்கு  தசரதர் வரவில்லை ராமருக்கு மிகவும் மனவருத்தம் ஏற்பட்டு  தான் என்ன தவறு செய்தோம்  என்று மனம் குழம்பி இதைக்குறித்து  தன் குருவிடமே கேட்கவேண்டும் என்று நினைத்து கிளம்பினாராம்  அப்போது “நில் ராமா  நான் வந்துவிட்டேன்  “‘ என்று தசரதர் சொல்ல   தன்னுடயை தவறு என்ன என்று ராமர் கேட்க  தசரதர்
” ஹே ராமா  உன்  கர்மாவில் நான் மிகவும் மகிழ்சியடைந்தேன்  உனக்கு என் ஆசிகள் ‘ என்றார் .

“பின்  ஏன் நான் கர்மா செய்ய ஆரம்பித்தவுடன் தாங்கள் வரவில்லை ?”
“உன் சகோதரன் பரதன் நதியின் அக்கரையில் முதலில்    கர்மா செய்து என்னை அழைக்க அங்கு முதலில் சென்று பின் இங்கு வந்ததில் சற்று தாமதம்
ஏற்பட்டுவிட்டது ‘

இதைக்கேட்டதும் ஒரு வினாடி ராமருக்குக் கோபம் வந்து ” இனி எந்த முன்னோர்களும்  திதி செய்து அழைக்கும் போது  தங்கள் செல்வங்களைப் பார்க்க வரக்கூடாது  ” என்று சற்றும் யோசனை செய்யாமல் பேசிவிட்டாராம் ஆனால் அடுத்த நிமிடமே தான் செய்த காரியத்திற்கு வருந்தி தசரதரிடம் மன்னிப்புக் கேட்டாராம்  பின் இதைச் சரிப்படுத்த எதாவது வழி உண்டா என்று அங்கு நின்ற சனி பகவானிடமும் யமனிடமும் கேட்டாராம்   இது மஹாவிஷ்ணுவின் அவதாரமான ராமரே சொன்னதால் இதை மாற்ற முடியாது ஆனால் முன்னோர்களுக்கு  அளிக்கும் உணவு அவர்களிடம் போய்ச்சேர  ஒருவரை நியமித்து இதைச்சரி செய்யலாம்   என்று யமன் சொல்லி இந்தப் பொறுப்பை சனிபகவானிடம் ஒப்படைத்தார்   சனி பகவான்  தனக்கு நேரம் இல்லாததால் தன்  வாகனமான காக்கையிடம் இந்தப் பொறுப்பைக் கொடுப்பதாக யமனிடம் கூறி அவர் சம்மதத்துடன்  கொடுத்தும் விட்டார் அன்றைய தினத்திலிருந்து  காகம் தான் சாப்பிடும் அன்னத்தினால் மூதாதயர்களின்  வயிற்றை நிரப்புகிறது.    இந்தக் கதை எந்த ராமாயணத்தில் வருகிறது என்று தெரியவில்லை .

இராமயணத்தில் வரும்  ஜயந்தனின் கதை பலருக்குத் தெரிந்திருக்கும் தேவேந்திரனின் மகன்  ஜயந்தன்  சீதையின் அழகில் மயங்கினான் கானகத்தில்  ராமர் சீதாபிராட்டியின் மடியில்  தலை வைத்து சயனித்திருக்க அந்த நேரம் பர்த்து  ஜயந்தன்  சீதையின் மார்பில் கொத்தினான் .சீதைக்கு இரத்தம் வர அதன் துளியும் ராமர் மேல் விழ அவர் விழித்து காகாசுரனைப் பார்த்தவுடன் மிகவும் கோபம்கொண்டு   ஒரு புல்லைப்பிடுங்கி பிரும்மாஸ்திர மந்திரத்தைச் சபித்து  அவன் மேல் ஏவினார் , அது அவனைத் துரத்த அவனும் பிரும்மா விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகளிடம் சென்று தஞ்சம் கேட்க   ராமர் ஏவிய பிரும்மாஸ்திரத்தைத் தடுத்து  நிறுத்தும் சக்தி தங்களிடம் இல்லை என்றும் ராமரிடமே  போய் சரணாகதியடையவும் சொன்னார்கள்  பின் ஜயந்தனான காகாசுரன் ஸ்ரீராமரிடம் வந்து அப்படியே தலையைக் கீழே வைத்து விழ கருணை உள்ளம் கொண்ட சீதாபிராட்டி அந்தக்காக்கையை ராமரின் பாதம் மேல் படும்படி  நகர்த்தி விட்டாள், ஸ்ரீராமரும் காகத்தை மன்னித்து  துரத்தி வந்த பிரும்மாஸ்திரத்திற்கு  காகத்தின் ஒரு கண்ணைக் கொடுக்குமபடிச் சொல்லி அவனது உயிரைக் காப்பாற்றிவிட்டார் ,பின் காகாசுரனை எல்லோரும் நினைக்கும்படியான அந்தஸ்தையும் அளித்துவிட்டார் நேபாலில்  மக்கள் தீபாவளிக்கு முதல் நாள் காக்காவுக்குப் பூஜை நடத்துவார்கள் .காகம் தலையைக்கொத்த  குளிக்கும் பழக்கமும் முன்பெல்லாம் மக்களிடமிருந்தது

  பித்ருத்தர்ப்பணம்  செய்ய  சில கோயில்களும் உள்ளன   நாகை மாவடத்தில் பூந்தோட்டம் அருகே  இருக்கும்  திலதர்ப்பணபுரி முக்தீஸ்வரர் ஆலயம் .. வடக்கில் காசி  கயா  , மணிகர்ணிகா   வேதாரண்யம்   திருபுவனம் விஷ்ணுபிரயாக்  ,ருத்ரபிரயாக் .கும்பகோண காவிரி தீரம் ராமேஸ்வரம்   வேதாரண்யம் நாசிக், பஞ்சவடி  ராமேஸ்வரம்  போன்ற இடங்களில் இந்நாட்களில்  நல்ல கூட்டம் இருப்பதைப்பார்த்தால் ஏதோ நமது கலாச்சாரம் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது  என்று கொஞ்சம் திருப்தி ஏற்படுகிறது. மஹாளயம் முடிந்து அமாவாசை வர அம்மனும்   நமது கொலுப்படியில் அமர்ந்து ஆசி கொடுக்க தயார் ஆகிவிடுவாள்

எல்லோருக்கும் பித்ருக்களின் ஆசிகள் இந்த நன்னாளில் கிடைக்கட்டும்.

படங்களுக்கு நன்றி:
விஜய சங்கரி – சோமநாதர் திருக்கோவில், கொளத்தூர், சென்னை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *