காயத்ரி பாலசுப்ரமணியன்

மனிதன் வாழ்வில் பாடுபடுவது நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே! ஆற்றிவு பெற்று உயர்வுள்ளவனாய் விளங்கும் அவன் உலகில் தனித்து வாழ முடியாது. மற்ற உயிரினங்களைப்பேணி பாதுகாப்பதோடு,  அவனுக்கு பல வளங்களை அள்ளித்தரும் இயற்கையை பாழாக்காமல், சுற்றுப்புற சூழலோடு இணைந்து வாழ வேண்டும் என்பதையும்,  ஆறறிவு உடைய  அவன்   ஆன்மீகப் படிகளில் ஏறி இறைவனை அடைய வேண்டும் என்ற  இரண்டையும் படிப் படியாய் நமக்கு விளக்குவது நவராத்திரியில் வைக்கப்படும் கொலு பொம்மைகள்.
முதல் படியில் நாம் வைப்பது  ஓரறிவு கொண்டபுல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள். .இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கும்,  மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை கொண்ட, கரையான், எறும்பு போன்ற பொம்மைகளும், நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட தும்பி, வண்டு பொம்மைகளும், ஐந்தாவது படியில் ஐந்தறிவு உடைய விலங்குகள், பறவைகள், பொம்மைகளும் இடம் பெற்றிருக்கும். இந்த ஐந்து படியில் உள்ள  மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் யாவும் மனிதனின் உணவுச் சங்கிலியில்   பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த சங்கிலி அறுபடாமல் மனிதன் பார்த்துக் கொண்டால்தான் அவன் உணவு, உடை, இருப்பிடம் எதிலும் சிக்கல் ஏதுமில்லாமல் இருக்கும். ஆனால் இந்த சங்கிலி சிதைக்கப்பட்டு விட்டது என்பதை   இயற்கை நமக்கு,  அவ்வப்போது, கன மழை,  பஞ்சம், கடும் வெய்யில், பனிப்பாறை உருகுதல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் மூலமாக நமக்கு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே இருக்கிறது!  ஆனால் மனிதன்தான் விழித்துகொள்வதில்லை. மனிதன் விழித்துக் கொண்டு , அவன் வாழ்வின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் இயற்கையை மனிதன் போற்றிக்காக்க வேண்டும் என்பதைத்தான் முதல் ஐந்து படிகளும் உணர்த்துகின்றன.
 ஆறாவது படியில் ஆறறிவு படைத்த  மனிதர்களின் பொம்மைகள் இருக்கும். மனிதன் படைக்கப்பட்டது இறையருளைப்பெற்று உய்ய வேண்டும் என்பதற்காகவே. இதற்கு அவனுக்கு வழிகாட்டியாய் விளங்குவது புராணங்கள் மற்றும் இதிகாசங்கள். அதனால்தான் ஏழாவது படியில் மனிதனுக்கு வழி காட்டியாக விளங்கும் மகான்கள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோரின் பொம்மைகள் இடம் பெற்றிருக்கும். எட்டாவது படியில்  தேவர்கள் மற்றும் இறைவனின் பல்வேறு அவதார உருவங்களும், ஒன்பதாவது படியில்  நவராத்திரி நாயகிகளாய் விளங்கும்  துர்க்கை,  லட்சுமி,  சரஸ்வதி, ஆகியோருடன் பொம்மைகளும் இருக்கும்.
ஆறாவது படியில் இருக்கும் மனிதன் ,  மன உறுதியுடன், ஒழுக்கமாகவும் இருந்து, ஏழு மற்றும்  எட்டாம் படிகள் காட்டும் வழியைப் பிடித்துக் கொண்டு விட்டால், ஒன்பது படியான இறைஅருளை எட்டிவிடலாம்! அதனால்தான் நவ ராத்திரி என்று ஒன்பது நாள் கொண்டாட்டம்.!  நவம் என்றால் ஒன்பது என்று நம்  எல்லோருக்கும் தெரியும்.   ஆனால் நவம் என்றால், கேண்மை, சினேகம், கார்காலம்,  புதுமை, பூமி என்று பல அர்த்தங்களை தமிழ்மொழி அகராதி நமக்குத் தருகிறது.  கேண்மை என்றால் உறவு,மனிதன் தன் உறவுகளையும், சினேகம் காட்டும் நட்பையும் அழைத்து பெருமைப்படுத்த இந்தப் பண்டிகையை  ஒரு நிலைக்களனாய்  உருவாக்கி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.  அத்துடன் கொலு கொண்டாடும் காலம் மழைக்காலமாகிய கார்காலம்.  புதுமை. என்றால் அற்புதம். பூமியில் மானிடராய் பிறந்த நமக்கு , நல்லபடியாக செல்லும் ஒவ்வொரு நாளும் புதுமைதான், பரம்பொருள்  நமக்கு அளிக்கும் அருட்கொடைதான்! அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒன்பது நாளும் சக்தியை விதவிதமாக ஆராதிப்போம். அன்னையவள் அருளைப் பெறுவோம்! 

படத்துக்கு நன்றி.

http://en.wikipedia.org/wiki/File:Navratri_Golu.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *