ராமஸ்வாமி ஸம்பத்

                                        

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயான ஆதவனை அருணோதயப் பொழுதினில் போற்றிவிட்டு தன் அறைக்குத்  திரும்பிய அங்கநாட்டு அரசன் கர்ணன், அங்கு அஸ்தினாபுரத்து இளவரசன் துரியோதனன் வீற்றிருப்பதைக் கண்டு துணுக்குற்றான்.

“ஆருயிர் நண்பரே! தாங்கள் இங்கே? அதுவும் இவ்வேளையில்? இச்சமயத்தில் என்னிடம் ஏதேனும் யாசிப்பவர்கள்தான் இவ்வறையில் காத்திருப்பர்,” என்று பதறிய கர்ணனை துரியன் அணைத்துக் கொண்டான்.

“நண்பா, பதற்றம் வேண்டாம். நான் இங்கு அந்த நோக்கத்துடன் வரவில்லை. துவாரகையில் எனக்குக் கிடைத்த ருசிகரமான அனுபவத்தை உன்னிடம் பகிர்ந்துகொள்ளவே இங்கு ஓடோடி வந்திருக்கிறேன். நீ கூறியபடி நான் துவாரகைகுச் சென்று அம்மாயாவி கண்ணனைச் சந்தித்து வரப்போகும் போருக்கு அவன் உதவியைக் கேட்டேன். அங்கே அர்ஜுனனும் அதே நோக்கத்துடன் அங்கு வந்திருந்தான். பஞ்சணையில் துயில்கொண்டிருந்த கண்ணன் முன்பே வந்திருந்த என்னைப் புறக்கணித்து அந்த பார்த்தனுக்கே முதல் அவகாசம் அளித்தான். ’இது என்ன நியாயம்?’ என்று கேட்ட என்னைப் பார்த்து, ‘நீங்கள் இருவரும் எனக்கு நெருங்கிய உறவினர்தான். ஆனாலும் அர்ஜுனன் உன்னைவிட இளையவன். மேலும் துயில் எழுந்ததும் முதலில் நான் பார்த்தது பார்த்தனைத்தான். ஆகவேதான் அவனுக்கு முதல் சந்தர்ப்பம் அளித்துள்ளேன்,’ என்று மழுப்பினான்.

“பின்னர், அர்ஜுனனை நோக்கி, ’என் உதவி உங்கள் இருவருக்கும் கட்டாயம் கிடைக்கும். போரில் என்னுடைய நாராயண சேனை ஒருபக்கமும், எதிர்ப் பக்கத்தில் ஆயுதம் ஏந்தாமல் நானும் இருப்போம். உனக்கு எது தேவையோ அதனை உனக்கு வழங்கி மற்றதனை துரியோதனனுக்கு அளிப்பேன். நன்கு ஆலோசித்து ஒரு முடிவிற்கு வா,’ என்று கண்ணன் கூறினான்.

“ஆனால் அந்த அறிவிலி அர்ஜுனன் கண்ணனிடம் நாராயண சேனையைக் கோராமல், ‘நீங்கள்தான் எனக்கு வேண்டும்’ என்றான். நானும் ’இளையவன் விருப்பப்படியே நடக்கட்டும். எனக்கு உங்கள் நாராயண சேனையே போதும்’ என்று கூறி விடைபெற்றுக் கொண்டேன்,” என்று துரியன் மகிழ்ச்சியோடு சொல்லி முடித்தான்.

கர்ணன் முகத்தில் கவலை படர்ந்தது. “நண்பரே! தவறு செய்துவிட்டீர். சாற்றினைப் பறிகொடுத்துவிட்டு சக்கையை கொணர்ந்திருக்கிறீரே! இதன் விளைவைப் பற்றி யோசித்திருக்க வேண்டாமா?” என்றான்.

“உனக்கு ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை, கர்ணா? நீ என் பக்கம் இருக்கிறாய்,  பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமன் போன்ற மாரத வீரர்கள் என் பக்கமிருக்க, நம்மை நிராயுதபாணியான கண்ணனால் என்ன செய்ய முடியும்? அவனுடைய நாராயண சேனையைக் கொண்டே அவனை முடிக்கிறேனா இல்லையா பார்,” என்று கூறிவிட்டு துரியன் அங்கிருந்து அகன்றான்.

குழப்பத்தில் வீழ்ந்த கர்ணனை “அங்கதேச மன்னர்க்கு வெற்றி உரித்தாகுக!” என்ற கட்டியம் இவ்வுலகுக்குக் கொண்டு வந்தது. அவன் அந்தரங்க ஒற்றன் அங்கே அழைப்புக்காகக் காத்திருந்தான்.

“அருகில் வா. என்ன செய்தி?”

“அரசே! துவாரகையிலிருந்து வருகிறேன். துவராகாதீசர் வரப்போகும் போரில் அர்ஜுனருக்கு தேரோட்டியாக இருக்கப்போகிறார் என்பதே எனக்குக் கிடைத்த தகவல்.”

“என்ன தேரோட்டியாகவா.. மெய்யாகத்தான் சொல்கிறாயா வீரனே!

”அரசே.. துவாரகாதீசர் இப்படித்தான் அர்ஜுனருக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்.. அருஜுனருடைய தேருக்கு கண்ணனே தேரோட்டி!!” 

வியப்பில் ஆழ்ந்த கர்ணனின் உள்ளம் ’கண்ணா! நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்! அதனால்தான் உன்னைச் சான்றோர்கள் வாசுதேவன் எனப் புகழ்கிறார்கள் போலும்’ என்று முணுமுணுத்தது. அதேநேரம் அவன் மனத்தேர் காலத்தின் அடிச்சுவட்டில் சற்றுப் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அந்த நிகழ்ச்சி கூட அப்படியே பசுமரத்தாணி போல மனதில் பைந்துவிட்ட்தே.. எப்படி மறக்கமுடியும் அந்த நாளை..

 

றக்குறைய ஒரு திங்களுக்கு முன், வழக்கம்போல் வியோமநாதனுக்குக் வைகறை வணக்கம் செய்துவிட்டு அறைக்கு வந்த கர்ணனை, ”வணக்கம் அங்க மன்னரே,” என்ற இனிமையான குரல் வரவேற்றது.

(தொடரும்)

சித்திரத்துக்கு நன்றி:

http://www.kidsgen.com/fables_and_fairytales/indian_mythology_stories/karnas_plan.htm

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “தேர்ப்பாகன் மகன்…(பாகம்-1)

 1. ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி

  என்று தொடங்கி

  அதேநேரம் கர்ணனின் மனத்தேர் காலத்தின் அடிச்சுவட்டில் சற்றுப் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டதே

  . அந்த நிகழ்ச்சி கூட அப்படியே பசுமரத்தாணி போல மனதில் பைந்துவிட்டதே.. எப்படி மறக்கமுடியும் அந்த நாளை.. என்று நீண்டு

  நம் ஆர்வத்தை தூண்டுகிறாரே திரு ராமஸ்வாமி சம்பத் அவர்கள்

  தொடர்ந்து படித்து இன்புறுவோம்

  அன்புடன் –

  தமிழ்த்தேனீ

 2. ஆவலைத் தூண்டுகிறது.  ஆனாலும் கர்ணன் அப்படி ஒன்றும் நல்லவன் இல்லை என்பதையும் மறக்க முடியவில்லை.  ஆதியில் இருந்தே பாண்டவர்களிடம் விரோதம் பூண்டவன் தானே! 🙁

 3. Nice write up. Easy to read and graceful flow. Looking forward to next episode.
  Narasiah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *