Category: சிறுகதைகள்

கதைகள்

  • வலி

    வலி

    பாஸ்கர் சேஷாத்ரி

    நான் அந்த பஸ் ஸ்டாண்டில் அமர்ந்திருந்த போது ஒரு சின்ன கார் வந்து நின்றது. உள்ளிருந்து வெளியே வந்தவர் பக்கத்தில் பாதை ஓரம் படுத்துக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் சென்றார். அப்போது ஒரு பழைய முகம் நிழலாடியது.

    நடராஜனா அது? உடனே, ‘நட்டு’ எனக் குரல் கொடுத்தேன்.

    அவன் செவியில் கேட்டதோ இல்லையோ திரும்பி பார்க்காமல் பாட்டியிடம் என்ன வேண்டும் எனக் கேட்டான். இருப்பினும், அருகே சென்று நீங்கள் நடராஜனா என வினவினேன்.

    ‘ஆமாம்’ நீங்க… என்றார்.

    ‘டேய் .. நான் பாஸ்கர் ’. உடனே, ‘பாச்சு’ என்றேன்,

    ‘டேய் கடன்காரா. எப்படிடா இருக்கே?

    ம்…. என்றேன்.

    நீ எங்கே இங்கு வந்த?

    ‘சேத்பட்’ போறேன். பஸ்சுக்கு நிக்கிறேன்.

    ‘பாட்டி… எதனா சாப்பிடறயா?’ அவள் வாயை திறந்து பல் இல்லை என்றாள். அழகாய் இருந்தது அந்த சிரிப்பு.

    ‘அப்ப பால் குடிக்கறயா?’

    வேண்டாம்…. ‘ஒரு பால் கோவா வாங்கி தா’ என்றாள்.ஆனால் சுற்றிலும் கடை ஏதும் இல்லை.

    ‘சாரிடா. உங்க கிட்ட பேசணும்’

    என்னோடு வரயா?

    எங்கே?

    என் வீட்டுக்கு. சிம்ப்சன் பின்னாடி.

    நட்டுவின் காரில் அமர்ந்தேன் .வண்டி மிக மெதுவாக சென்றது.

    ‘என்ன நட்டு’. இந்த அமைதி கொஞ்சம் கலவரமா இருக்கே?

    ஒன்னுமில்லை. அந்த பாட்டிக்கு வண்டிய நிறுத்தி பால்கோவா வாங்கிக் கொண்டான்.
    ‘உனக்கு’ எனக் கேட்டான்.

    ‘வேண்டாம்’ என்றேன்.

    ‘எப்படிடா இருக்கே? பார்த்து நாப்பது வருஷம் இருக்குமா?’

    ‘கிட்டத்தட்ட.’

    ‘நீ என்ன பண்ற?’

    ‘ஹிக்கின்பாதம்ஸ்ல’ இருந்தேன். இருபது வருஷம். அப்புறம் வெளிய வந்துட்டேன்
    ஏன்?

    அனுப்பிட்டாங்க. இனி கம்ப்யூட்டர் தான் எல்லாம் என்றார்கள். அம்பது வயசை தாண்டியாச்சு.         சீ ஆர் எஸ்

    ‘இப்ப லாரி கம்பனில எல்லார் போடறேன்.’

    என் கல்லூரி படிப்பு, பேச்சு திறமை எதுவும் உதவலை .

    குழந்தைங்க?

    இரண்டு பொண்ணு. ‘ரெண்டும் லவ் மாரேஜ்.’

    அப்பாவுக்கு மறைமுக உதவி. ‘என் பணத்துல ஒரு மண்ணும் செய்ய முடியாது.’ தங்கமான மாப்பிள்ளை. ஆனால் பெரிசா படிக்கல.

    சட்டென வண்டி நின்றது .

    என்னடா….

    ஒண்ணுமில்லை. ‘போலாம்’ என்றான்

    வீடு வந்தது. பெரிய வீடு

    ‘என்ன பிசினஸ் பண்ற?’

    ‘ஃபினான்ஸ்’ என்றான்.

    யாரும் இல்லை? வீட்டில்.

    ‘எங்கடா உன் ஒய்ப்.’

    ‘போய் நாலு மாசம் ஆச்சு.’  படத்தைக் காட்டினான்.

    ‘டேய் இவ ரேணு இல்லை!’

    ஆமா. உனக்கு ஞாபகம் இருக்கா?

    ‘லேசா இருக்கு.’

    அறைக்கு சென்று கதவை மூடி ஏசி-யை போட்டு என்னிடம் வந்தான் .

    ‘நட்டு’ – என சொல்லும்போதே கண்கள் கலங்கின .

    ‘டேய் பீ ரிலாக்ஸ்ட்.’

    சொல்லும் போதே என்னை கட்டி பிடித்து அழத் தொடங்கினான் .

    என்ன நட்டு? குழந்தை மாதிரி. ‘வாட்ஸ் ராங்’ என்றேன்.

    ‘ரொம்ப நாள் துக்கம்டா . நீங்களெல்லாம் காலேஜுக்கு போய் படிச்சீங்க. என்னால எஸ் எஸ் எல் சியை கூட தாண்ட முடியல. நாலு முறை எழுதினேன் …பெயில்.’

    அழுதான்.

    டேய். நீ இப்ப வெற்றிகரமான முதலாளி ‘அத பார்ரா.’

    அட போடா. என் கஷ்டம் உனக்கு புரியாது. ‘படிக்கலைன்ற குறை எனக்கு கொஞ்சம் கூட போலட. தூங்கி எழுந்தவுடன் அந்த பழைய காலிகோ எஸ் எஸ் எல் சீ புஸ்தகம் தான் நினைவுக்கு வருது.’

    ‘டேய் . அது உன் காம்ளெக்ஸ்.’

    உன் வசதி வாழ்க்கையைப் பார்.

    ‘ரெண்டையும் என்னால ஒண்ணா பாக்க முடியல டா.’ ஒரு குற்ற உணர்ச்சி என்று கண்களைத் துடைத்துக் கொண்டான்.

    ‘சாரிடா. ஏதோ ஒரு அழுத்தம் . உன்னை பார்த்து வெளிய வந்துட்டுது.’

    ‘இட்ஸ் ஒகே’ என்றேன்.

    ‘உன்னை எங்கே இறக்கி விடனும்’

    ‘ஹௌசிங் போர்டு’ என்றேன்.

    ‘போகும் போது ஒரு காபி குடித்து விட்டு பாட்டியிடம் பால் கோவா கொடுத்தோம்
    வர்ற சண்டே என்னை கூப்பிடு . ஒரு செல் வாங்கிக்கோ’ என உபாயம் சொன்னான் .

    ‘சரி’ என்றேன்.

    கண்ணாடி கதவை மூடும்போது ‘ டேய் அந்த விஷயத்தை அடியோடு விட்டுடு.’

    படிப்புக்கும் ஒரு எல்லை உண்டு. நீ ரொம்ப கலங்காதே என்றேன்.

    ‘போடா.. இது நாப்பது வருஷ வலி. உனக்கு இது புரியாது.’

    என்ன சொல்ல வர்ற?

    ‘டேய். இது வடு. சுட்ட வடு. புத்தியில்லாதவனின் அவஸ்தை. எங்க போனாலும் தள்ளியே வக்கிறான். தீண்டாமை போல.’

    அப்ப உன் வசதி எல்லாம்?

    ‘அப்பன் சொத்து.’

    ‘நீ என்ன பண்ண?’

    ‘ஒரு பையனை பெத்தேன்.’

    ‘அவ்வளவுதான்.’ இது இனி அவர்கள் உலகம். அவன் உன்னை ‘தாண்டுவாண்டா பாரு’ என்றேன்.

    ‘நிறுத்துடா?’

    ‘ஏண்டா நட்டு, இப்படி கத்தறே?’

    ‘அவனும் என்னை போலவே படிக்கல.’ அது தான் சொன்னேன் ‘வலின்னு’ .

    Share
  • சட்டை

    சட்டை

    -சேஷாத்ரி பாஸ்கர்

    ”இப்ப இந்த செலவு தேவையா?”
    மகன் பதில் சொல்லவில்லை

    ”இரண்டாயிரம் பெரிய தொகை என்பதே உனக்கு உறைக்கவில்லையா?”

    ”அப்பா ப்ளீஸ்! சில சுதந்திரம் எனக்கும் வேண்டும்”

    ”நான் தப்பு சொல்லலே. ஆனாலும் கொஞ்சம் யோசி ஒரு சொக்காய் இரண்டாயிரமா? என் கடைசி மாச சம்பளம் இதை விட கம்மி.”

    ”அதைத்தான் சொல்றேன்! அது அந்தக் காலம்! இப்ப என்ன மாதிரி யோசி. இது மொத மாச சம்பளம். நான் ஆசையாய் வாங்கினேன்.”

    ”சாரி. யூ ஆர் லாவிஷ்”

    ”அம்மா இருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பா”

    ”ஒரு தகப்பன் மனசை நீ புரிஞ்சுக்கல. அப்புறம் உன் இஷ்டம்.”

    ”தப்பு! நீ தான் மகனோட மனசை தெரிஞ்சிக்கல.”

    ”கோபப்படாமல் இதை ஒரு தப்பாய் பார்த்து விட்டு மன்னித்து விடு. ஆனால் என் செயலில் இருக்கும் மனசைப் பார்.”

    ”உன் அகலக்கால் எனக்கு பயமாய் இருக்கு”

    ”தப்பாய் சொல்றப்பா! விசாலமா யோசிச்சு பாரு”

    ”நீ லட்ச ரூபாய் சம்பாதிச்சா கூட, இதைத்தான் சொல்வேன்”

    தலைக்கவசம் அணிந்து கொண்டே சொன்னான்.
    ”அப்பா! இன்னும் ஒன்னு சொல்றேன். உன் கோபம் அதிகமாகும்.”

    ”சொல்லு. என்ன பேண்ட் மூவாயிரமா?”

    ”இல்ல! இந்தச் சட்டை உனக்கு தாம்பா!”

    Share
  • சக்கரத்தை எடுப்பது ஒரு கணம்

    சக்கரத்தை எடுப்பது ஒரு கணம்

    -வையவன்

    அமுதசுரபி தீபாவளி மலர் 2019 இல் வெளிவந்தது… 

    “ஒரே ஒரு கணம் ..ஒரு கணம் பொறுங்கள். புதைந்திருக்கிற சக்கரத்தைச் சேற்றிலிருந்து எடுத்து விடுகிறேன். பிறகு நம் போர் தொடரட்டும்” கர்ணனது கெஞ்சல் இருவர் காதிலும் விழவில்லை. உத்தரவு வந்தது. வரவேண்டிய இடத்திலிருந்து வந்தது.

    “கொல்”

    வில்லை ஏந்தி நின்ற அர்ஜுனனை ஏவிக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்

    “நில்”

    திடீரென்று வானம் கறுத்தது. இடி முழக்கம் கேட்டது.

    மண்ணில் புதைந்திருந்த தேர்ச் சக்கரத்தை பிடுங்கி எடுக்கக் குனிந்தபடி வேண்டுகோள் விட்ட கர்ணன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள் கால்களை உயர்த்திக் கனைத்ததால் சாரதி இல்லாத தேர், வலமும் இடமும் தள்ளாடி அசைந்தது . தேரோட்டி கைவிட்டுச் சென்று விட்டான். தேரோட்டுவதில் நிகரற்ற சல்லியன் ”நீயே ஓட்டிக்கொண்டு சென்று நீயே மாண்டு போ” என்பது போல் சென்றுவிட்டான்.

    பெருமழை பெய்து குருக்ஷேத்திர பூமியை வெள்ளப் பெருக்கால் மூழ்கடித்து யுத்தத்தை நிறுத்திவிடுமா?

    இல்லை. வானம் பயமுறுத்துகிறது. ஒருக்காலும் மழை பெய்து யுத்தத்தை நிறுத்திவிட முடியாது. அப்படியே மழை பெய்தாலும் கோவர்த்தன கிரியை இடையர்களுக்காக ஒற்றை விரலில் உயர்த்தி நிறுத்திய கிருஷ்ணனா விட்டுவிடுவான்?

    அர்ஜுனனுக்குத் தேரோட்டியாகி, வில்லில் அம்பைப் பூட்டி நிற்கிறவனுக்கு உத்தரவு கொடுப்பவனைத் திரும்பிப் பார்த்தான். அவன் மட்டுமல்ல. குருக்ஷேத்திரத்தில் எல்லாத்தலைகளும் உயர்ந்து வானையே பார்ப்பதை கர்ணன் கண்டான்.

    “நில்”

    பூட்டிய அம்பை கர்ணன் மேல் விடாமல் அர்ஜுனன் ஏதோ ஒரு கட்டளை வந்தது போல் தாமதித்தான்.

    அவனுக்கு நிராயுத பாணியான தன் மீது ஆயுதம் ஏவக் கூடாது என்ற தயக்கம் வந்து விட்டதா?

    இல்லை. இல்லை இந்த யுத்தம் எப்படி முடியும் என்று கர்ணனுக்கு நன்றாகத் தெரியும்.

    கிருஷ்ணன் தேரோட்டியாகச் சம்மதித்தான் என்று கேட்ட பொழுதே கர்ணன் மனதில் குருக்ஷேத்திர யுத்தம் நடந்து முடிந்து விட்டது. ஆனால் தர்மத்திற்குச் சிறிதளவாவது கிருஷ்ணன் மதிப்பு கொடுப்பான் என்று கர்ணன் நினைத்தான்.

    முடிவு என்னவாயினும் தான் சார்ந்திருக்கும் பக்கம் சாய்ந்து விடாமல் தனது பெயருக்குக் களங்கம் வராது நடந்து கொள்வான் என்று உள்ளே ஓர் நினைவிழை ஓடியது.

    நேற்றுப் போரிட்டு மூலையில் முடங்கிய தர்மன் கிளப்பிவிட்ட ரோஷம் கூடவா மறந்திருக்கும்?

    தேரோட்டி சல்லியன் பேச்சைக் கேட்டிருக்க வேண்டுமோ? தேரோட்டுவதில் நிகரற்ற சல்லியனை அவமானப் படுத்தியது குற்றம் தானா?

    தான் நாகாஸ்திரத்தை எடுத்ததுமே சல்லியன் சொன்னது நினைவு வந்தது.

    “கர்ணா! நீ நாகாஸ்திரத்தை எடுத்துவிட்டாய். சரி அஸ்திரம் வீணாகக்கூடாது.அதை அர்ஜுனனின் மார்புக்கு குறி வை” எந்த விதி என்னை வீர தர்மம் குறித்துப் பேச வைத்தது.

    “சல்லியா! மாட்டேன். அர்ஜுனன் ஒரு வீரன். நான் ஒரு வீரன். அதனால் நான் அவன் கழுத்துக்கு குறி வைப்பேன்” நடந்தது மீண்டும் நினைவில் புரண்டது.

    “கர்ணா! நான் சொல்வதைக் கேள். அர்ஜுனனின் மார்புக்கு குறி வை. கழுத்துக்கு வைக்காதே”

    நான் ஏன் எரிச்சலடைந்தேன்? எவர் பேச்சையும் கேட்க விடாது எந்தத்தீ என்னுள் எரிந்து கொண்டே இருக்கிறது!

    “சல்லியா! ஒரு வீரனைப் பற்றி, இன்னொரு வீரனுக்குத்தான் தெரியும். நீ கேவலம் ஒரு தேரோட்டி. நீ எனக்கு அறிவுரை கூறாதே”; என்று சொல்கிறான்.

    தேரோட்டி மகன், தேரோட்டி மகன் என்று பார்ப்பவர்கள் எல்லாம் மனசிற்குள்ளாவது நினைக்க விட்ட அந்தத் தீ மீண்டும் சுடர் விட்டுவிட்டது. பொறிகள் தெறித்து அற்புதமான தேரோட்டியான சல்லியன் மீதும் பட்டு அவனைச் சுட்டுவிட்டன.

    எனினும் மிகுந்த பெருந்தன்மையான சல்லியன் , “கர்ணா! ஒப்புக் கொள்கிறேன்.

    ஒரு வீரனைப் பற்றி, இன்னொரு வீரனுக்குத்தான் தெரியும். மெய்தான். ஒப்புக்கொள்கிறேன். அதுபோல் ஒரு தேரோட்டியைப் பற்றி இன்னொரு தேரோட்டிக்குத்தான் நன்றாய்த் தெரியும். இப்போது கிருஷ்ணன் அர்ஜுனனின் தேரோட்டி. மகா மாயாவி. என்ன சூழ்ச்சி செய்வான் என்று சொல்ல முடியாது. அவன் பொறுப்பிலே இருப்பது அர்ஜுனன். என் பொறுப்பிலே இருப்பது நீ. தயவு செய்து சொல்வதைக் கேள். அர்ஜுனனின் மார்புக்கு குறிவை”

    ஏன் கேட்காமல் போனோம்?

    மீண்டும் நடந்தது நினைவில் வந்தது. அர்ஜுனனின் கழுத்தை நோக்கிக் குறிவைக்கப்பட்ட நாகாஸ்திரம் எப்படி மேலே உயர்ந்து அவன் மகுடத்தைத் தட்டித் தூக்கிக் கொண்டு போயிற்று?

    அஸ்திரம் குறி தப்பிவிட்டதா? இல்லை. தேர் தான் கீழே தாழ்ந்துவிட்டது.

    கிருஷ்ணனின் மாயை. தேரைத் தனது காலால் ஒரு அழுத்து அழுத்தி அவன் செய்த வெற்றிப் புன்னகை மனசில் மின்வெட்டியது . தேர் சில அங்குலம் பூமியில் அழுந்தி விட்டது

    எதிராளியைத் தன்னுடைய திறமையினால் வில்லையும் தேரையும் இழக்கச் செய்துவிட்டு அவனை வீழ்த்தலாம், மாறாக வேண்டுமென்றே வில்லை. கீழே வைத்து விட்டோ அல்லது வேண்டுமென்றே தேரிலிருந்து இறங்கினாலோ தாக்கக்கூடாது. இது யுத்த தர்மம். அப்படியும் தாக்கினால் அது அதர்மம். தாக்குகிறவன் திறமையின்மையை வெளிப்படுத்தும் அதர்மம். அந்த யுத்த தர்மத்தை நினைவூட்டுவோம்

    “கிருஷ்ணா, உனக்கும் எனக்குமிடையே ஒன்றுமில்லை. நீ என் பகைவன் அல்ல. நான் உன் பகைவன் அல்ல. நான் யாரென்று உனக்கு நன்றாய்த் தெரியும், யுத்த பூமியில் உறவுகள் கூறி சமாதானம் கேட்க முடியாது. என்னைப் பெற்றவள் யாரென்றும் உனக்குத் தெரியும். அவள் கேட்டுக்கொண்ட வரம் என்னவென்றும் எல்லாம் அறிந்தவனாக உனக்குத் தெரியும். இது சார்ந்திருக்கும் சார்புகளால் வந்த பகை இது. ஆனால் எல்லோருக்கும் பொதுவாய் ஒன்று உண்டு. யுத்த தர்மம்.அதைமறந்து விடாதே” என்றான் கர்ணன்.

    அவன் மனதில் மரண திகிலின் கருமேகம் சூழ்ந்து வந்தது. சிறிது சிறிதாக நெஞ்சை அடைப்பது போல் அதன் ஆதிக்கம் பெருகியது. அவன் குரல் உடைந்தது. கம்மியது. விம்மல் பிறந்தது.

    “எதைப் பற்றி யார் பேசுவது கர்ணா? “ இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு கிருஷ்ணன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் காலதேவனின் தீர்ப்புத் தொனி ஒலித்தது.

    அப்போது வானின் கருமேகம் சிறிது சிறிதாகக் கலைந்து சென்றது. அர்ஜுனனின் குறிக்குத் தப்பாத அம்பு கர்ணனின் மார்போடு உறவு கொள்ளத் துடிப்பது போல் வெளிவாங்கிய வெளிச்சத்தில் மின்னியது.

    “கிருஷ்ணா..கிருஷ்ணா” மீண்டும் கர்ணன் கெஞ்சினான்.

    “யுத்தத்தின் தர்மம் ஒன்றே ஒன்றுதான். ஜெயிக்க வேண்டும். ஜெயிப்பவன் தான் இங்கே தலைவன். மற்றவன் கீழ்ப்பட்டவன்” கெஞ்சுகிற கர்ணன்..

    கிருஷ்ணனுக்குப் பரிதாபம் வரவில்லை.

    “அடடே! எங்கே போயிற்று உன் வீரம்?” மார்புக் கவசங்களையும், காது குண்டலங்களையும் கழற்றிக் கொடுத்த உன் தான வீரம் எதற்கு உயிர்ப்பிச்சை கேட்க வேண்டும்? தீரமாக மரணத்தைச் சந்தி. தீமையின் சகதிகளில், தீய உறவுகளின் சேற்றில் நீ ஆரம்பம் முதலே புதையுண்டவன். தேரோட்டியின் மகனாக இருக்க விதிக்கப்பட்டவன். அதிலிருந்து விடுபட்டு.. உன் பொறாமையிலிருந்து, செருக்கிலிருந்து விடுபடு” என்று எத்தனை பேர் உனக்கு புத்தி சொன்னார்கள். அந்தத் தீமைகளின் உறுதிப் பிடிகளில் இருந்து விடுபடமுடியாத உனக்கு உயிர் வாழ ஒரு கணம் வழங்குவது கூட அதர்மம் தான்”

    “கிருஷ்ணா” மீண்டும் கர்ணன் கெஞ்சுகிற குரலில் வேண்டினான்.

    “பாஞ்சாலியைச் சூதாடிகளின் அவைக்கு நிர்வாணமாக இழுத்துவரச் சொல்லி ஏவியவனை நீ தடுக்கவில்லை. ஊக்கப்படுத்தினாய். கர்ணா.. நீ தேரோட்டி மகன் என்று அவளது சுயம்வரத்திலே இகழ்ந்தவள் திரௌபதி. அவள் மீது உனக்கு வஞ்சம். அந்த வஞ்சத்தை மறக்காமல் துரியோதனன் போட்ட ராஜ்ஜிய பிச்சைக்கு யாசகம் போல் ஏற்ற சோற்றுக் கடன் தீர்க்கப் போராட வந்திருக்கிறாய். இப்போது தர்மம் பேசுகிறாய். எது தர்மம் சொல்? கர்ணா”

    கர்ணன் முகம் இருண்டது. பிறவியே மீண்டும் ஈனப்பட்டது போல் கிருஷ்ணனின் சொற்கள் அம்புகளாக மாறி அவன் இதயத்தைத் துளைத்தன.

    “அந்தண வேடமிட்டுப் பரசுராமரிடம் பொய் சொல்லி அஸ்திர வித்தை கற்று சாபத்திற்கு ஆளானாயே, அது தர்மமா? சக்கர வியூகத்திலிருந்து மீளத் தெரியாத பதினாறு வயது பாலகன் அபிமன்யுவைச் சுற்றி வளைத்துக் கைவேறு கால் வேறாக வெட்டிச் சிதைத்தீர்களே அது தர்மமா”

    கிருஷ்ணன் நீதிதேவன் போல் கம்பீரக் குரலில் திருப்பித் திருப்பி நினைவூட்டினான்.

    “கொல்”

    அர்ஜுனனின் அம்பு கர்ணனின் மார்பைத் தொடும் முன் தாய் குந்திக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவில் எழுந்தது.

    அம்பு கர்ணன் மார்பைத் துளைத்தது.

    “அம்மா “ என்று அவன் அலறி வீழ்ந்தான்.

    எங்கோ தூரத்தில் இருந்த குந்தியின் வயோதிக மார்பில் பால் சுரந்தது.

    கர்ணன் வீழ்ந்தான் என்று குருக்ஷேத்திரத்தில் குரல்கள் ஓங்கி ஒலித்தன.

    “மகனே”; அலறியபடி எல்லோரையும் விலக்கிக் கொண்டு குந்தி ஓடி வந்தாள்.

    Share
  • டல்லாஸ்

    டல்லாஸ்

    -சேஷாத்ரி பாஸ்கர் 
    =========

    டேய் .. நீ முகுந்து தம்பியா ?

    ஆமாம் சார் .உங்க பேரு

    அம்பின்னு சொல்லு எங்கிருக்கான் அவன்?

    தாம்பரம் சார் .பட் ரிடயர்ட் .

    என்னை விட ரெண்டு வயசு சின்னவன்

    நீ என்ன பண்ற?

    சொன்னேன் .

    பட் ஐ ஹேட் திஸ் கன்ட்ரி! எங்க போனாலும் துட்டு புடுங்கிறான் . ஏன் இங்க ஆறு மாசம் கழிச்சு வந்தேன்னு இருக்கு

    என்ன சார் ஆச்சு ?

    ஒண்ணா ரெண்டா .பர்க்ளர்ஸ்

    டெல்லாஸ் இப்படி இல்லை. நோ பொல்யூஷன். நோ டர்ட்டி ட்ராபிக் . மூணு மாசம் பெண் வீட்ல இருந்தேன். இட் வாஸ் ஹெவென்! அப்புறம் அங்கேந்து சிகாகோ . -காட் . அது தாண்டா ஊர்! குப்பா ஒரு கவுளி வெத்தலை . சுண்ணாம்பு போடாதே எப்பவும் போல தண்ணிலேந்து அங்கே பருப்பு வரைக்கும் ஹை கிளாஸ் ஸ்டப். முன்னை மாதிரி ஊறுகாய் , காபிபொடி தூக்கிண்டு போக வேணாம் . சீரங்கம் அய்யங்கார் மாப்ள கடையை போட்ருக்கான் .ஒரே மலிவு . என்ன மெட்ராஸ் மண்ணாங்கட்டி! நேத்து தானே வந்தேன் . இன்னும் ஜெட் லாக் போகலை .சித்த இரு .

    குதப்பிய வெத்தலையை அப்படியே பாதையோரம் துப்பி விட்டு நேஷனல் சீவல் பாய்கிட்ட குப்பன் பிச்சை வாங்கனும் .இவன் தர்றது ஒரே கமாற வெத்தலை புகையிலையில் ஒரே பச்சை கற்பூரம் பன்னீர் கொடுரா? எதுக்கு சொல்ல வந்தேன்னா .. இங்க உக்காந்துண்டு குண்டு சட்டில குதிரை ஒட்டக்கூடாது

    டல்லாஸ்ல இது போல துப்பலாமா மாமா என நானும் கேட்கவில்லை .

    Share
  • வலி (சிறுகதை)

    வலி (சிறுகதை)

    சு.திரிவேணி, கோயம்புத்தூர்

    “இங்க பாரும்மா.. ஒரு மனுஷனுக்கு திறமைதான் முக்கியம். ஆனால் இந்த உலகத்தில் வாழறதுக்கு திறமை மட்டும் பத்தாது. கொஞ்சம் சாமர்த்தியமும் வேணும். சொல்றத புரிஞ்சுக்கோம்மா… அப்பா உன் நல்லதுக்குதான்டா சொல்லுவேன்!”

    அப்பாவை மெல்ல நிமிர்ந்து பார்த்தேன். என் கண்களிலிருந்து சிந்திய கண்ணீர் அவர் நெஞ்சைத் தொட்டிருக்க வேண்டும்.

    “உனக்கு வரையறதுல ஆசை இருக்கு. திறமையும் இருக்கு! ஆனா வாழ்க்கைனு வர்றப்போ அதெல்லாம் ஒத்து வராது. இப்ப இருக்கிற நிலைமைக்கு பிஸினஸும் கம்ப்யூட்டரும் தான் நல்லா போயிட்டு இருக்கு. நீ அதைப் படிக்கறது தான் நல்லது”

    அவரைச் சொல்லியும் குற்றமில்லை. என்னுடைய ஓவிய ஆசைக்கு ஆரம்ப காலங்களில் எல்லாம் எந்தத் தடையும் சொல்லாமல் ஊக்குவித்தவர்தான். நாளாக நாளாக, நான் ஓவியத்தின் மீது தீராக் காதல் கொண்டு பிரஷும் கையுமாக அலைய, அவருக்கோ அது வெறுப்பாகத் தொடங்கியது.

    “இதெல்லாம் பொழுதுபோக்கா வேணா செய்யலாம். சோத்துக்கு உதவாது. போய்ப் படிக்கிற வழியைப் பாரு!” என்று அவர் அறிவுரை சொல்லத் தொடங்கியதும் நான் கொஞ்சமாய் அதிர்ந்தேன்.

    அவர் நிலைமையிலிருந்து யோசித்தால் அவர் சொல்வதில் தவறில்லைதான். அண்ணன் ஐ.டி முடித்துவிட்டு ஆரம்பத்திலேயே 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் போது, என்னை மட்டும் வருமானம் இல்லாத துறையில் தள்ள அவருக்கு மனமில்லை.

    அண்ணனுக்கு இணையாக என்னையும் படிக்க வைக்க நினைக்கும் அவரை நினைத்தால் எனக்குப் பெருமையாகத்தான் இருந்தது. அதே சமயம் என்னுடைய லட்சியம் என்று கூடச் சொல்ல முடியாது; வெறி என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஓவியக் கலையை விட்டு ஒரேயடியாய் விலகிட எனக்கும் மனமில்லை. இதன் மூலமாகவும் சம்பாதிக்க முடியும் என்று காட்டினால் அவர் மனம்
    மாறுவார் என்று நம்பினேன்.

    தங்க நகை டிசைன் செய்யும் போட்டியில் கலந்து கொண்டு 5000 ரூபாய் முதல் பரிசு பெற்றபோது “ஸ்கூல்ல படிக்கும்போதே எவ்வளவு திறமை!” என அனைவரும் பாராட்ட, கொஞ்சம் பெருமையுடனும் நிறைய கலக்கத்துடனும் தலையசைத்துச் சென்றார் அப்பா.

    லயன்ஸ் கிளப் இன் கிளே மாடல் வடிவமைப்புப் போட்டியில் முதலாவதாக வந்து 2000 ரூபாய் பரிசை வென்றேன். இரண்டு போட்டிகளிலும் பரிசு வழங்க வந்தவர் மிகப்பெரும் ஓவியரான மதன். ஓவியத்தில் ஆர்வம் உடைய எல்லோருக்குமே அவர்தான் இன்ஸ்பிரேஷன். எங்களுக்கு எல்லாம் கடவுள் போல!

    அப்படிப்பட்டவர் எனக்குப் பரிசு கொடுக்கும் போது, அங்கிருந்த எனது ஓவியத்தைப் பார்த்து புருவங்களை உயர்த்தியதையே நான் பெரும் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அவரோ என் தோளில் தட்டிக் கொடுத்து அந்த ஞாயிறு அவர் வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துச் சென்றார்.

    கோவிலுக்குச் சென்று தெய்வத்தை நேரில் பார்க்கப் போகும் பக்தனைப் போல நானும் போனேன்.
    “வாம்மா! வா! வா! இத்தனை சந்தோஷத்துடன் இந்த உயர்ந்த மனிதர் என்னை ஏன் வரவேற்க வேண்டும்? என் ஓவியத்தைப் பற்றிக் கொஞ்ச நேரம் பாராட்டியவர் தன்னுடைய ட்ராயிங் ரூமுக்கு என்னை அழைத்துச் சென்றார்.

    ரூமா அது? அது ஒரு கோயில்! உண்மையிலேயே அந்த இடம்தான் சொர்க்கம்! சந்தோஷத்தில் அங்கேயே உட்கார்ந்து அழ வேண்டும் போலிருந்தது எனக்கு. அவரும் நானும் பேச ஆரம்பித்தோம்.
    இத்தாலியின் வால்காவிலிருந்து நம் ரவிவர்மாவிலிருந்து, எல்லாம்… எல்லாம்… பேசினோம். என்னுடைய நிறைய வினாக்குறிகள் அவரால் ஆச்சரியக்குறிகளாக மாறின.

    “சார்! ஒரு ஓவியத்துக்கு எது முக்கியம்? இருக்கிறதை அப்படியே காட்டுவதா? அல்லது அதை அழகாக்கிக் காட்டுவதா?”

    “இரண்டுமே ஓவியத்துக்கு உயிர் தாம்மா! ஒரு சில இடங்களில் அழகு முக்கியம். ஒரு சில இடங்கள்ல உண்மை முக்கியம். இப்ப உதாரணத்துக்கு, ஒரு மல்லிகைத் தோட்டத்தை நீ வரையும் போது அழகு முக்கியமா இருக்கும். ஆனால் நல்லா சுட்டெரிக்கும் வெயில்ல, கட்டை வண்டியை ஒரு வயசானவர் இழுத்துட்டு வர்ற காட்சியை வரையும் போது, அவர் முகத்தில சின்னச் சின்னதா இருக்கிற வியர்வைத் துளியைக் கூட விடாம அப்படியே தான் வரையணும். அந்தக் காட்சியை அழகுபடுத்த
    முயற்சி செஞ்சா அது அபத்தமாயிடும். எந்த ஓவியம்னாலும் அதோட ஒரிஜினாலிட்டி மாறக் கூடாது. அதுதான் முக்கியம்”.

    “சார்! நான் நிறைய ஓவியங்களைப் பார்த்திருக்கேன். ரொம்ப அழகா இருக்கும்; ஆனாலும் நம்ம மனசுக்கு நெருக்கமாக இல்லாமல் ஏதோ ஒரு ‘கேப்’ ஓவியத்திற்கும் நமக்கும் நடுவுல இருக்குற மாதிரி தோணும். ஏன் அப்படி?”

    என்னுடைய எந்தக் கேள்விக்கும் ஒரு சின்னப் புன்சிரிப்புடன் பதிலைத் தொடங்கும் அவர், இப்போது மட்டும் ஒரு ஆச்சரியப் பார்வை பார்த்தார்.

    “நீ வரையறதை ரொம்ப அதிகமாகவே நேசிக்கத் தொடங்கி இருக்கேன்னு புரியுது. இல்லாட்டி இந்த உணர்வோ, கேள்வியோ தோணாது. நல்லா கவனிம்மா! இப்ப நான் சொல்லப் போவதுதான் ஓவியத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம், சரியா? இப்ப உன்னை மாதிரி ஒரு சின்ன பொண்ணு ஒரு பூனைக்குட்டி கூட விளையாடுது: அப்ப அது முகம் பூராவும் சந்தோஷம் பரவியிருக்கும்! அதே பொண்ணு சர்க்கஸ்ல சிங்கத்தின் வாய்க்குள்ள தலையை விட்டு வெளியே எடுக்கிறவரை பார்க்குது; அப்ப அந்த பொண்ணோட கண்ணில் மட்டும் ஒரு பெரிய ஆச்சரியம் தெரியும்! ஸ்கூல்ல, ஏதோ ஒரு போட்டியில ஜெயிச்ச கோப்பையை வாங்கிட்டு வந்து காட்டும் போது அந்தக் குட்டிப் பொண்ணு முகத்துல, ரொம்ப முக்கியமா.. அதோட கண்ணுல ஒரு பெருமிதம் தெரியும்! ‘சாதித்தேன் பாரு’ன்னு அந்தக் கண்ணு சொல்லாமல் சொல்லணும்! அது தான்.. அந்த உணர்வுதான் ஓவியத்தில் ரொம்ப முக்கியம்! அதை நுட்பமாகக் காட்டிட்டா அவர்தான் சிறந்த ஓவியர்!” என்று சொல்லிக்கொண்டே போனவர், இடையில் டெலிபோன் கூப்பிட எழுந்து போனார்.

    அவர் மனைவியும் பிஸியாக இருக்க, டீபாய் மேல் கிடந்த பேப்பரும் பென்சிலும் என் கண்ணில் பட்டது. மதன் சாரை உலகம் தெரிந்த ஒரு பாசமான அம்மாவைப் போலவும் அவரை நோக்கி ஓடும் ஒரு குழந்தையாக என்னையும் கற்பனை செய்து வரைந்து பார்த்தேன். என் கண்களில் அவர் சொன்ன அந்த ‘உணர்வு’ தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கும் போது பின்னாலிருந்து “ஃபென்டாஸ்டிக்!” என்று மதன் சாரின் குரல் கேட்டது.

    “நீ ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா வரைஞ்சுகிட்டு இருந்த.. உன்னை டிஸ்டர்ப் பண்ண மனசு இல்லாம நீ வரையறதை பின்னால நின்னு பார்த்துட்டு இருந்தேன். உண்மையைச் சொல்லனும்னா எனக்கு உன்னப் பார்த்தா ஆச்சரியமா இருக்கும்மா! உன்னோட இந்த அபாரமான திறமை கடவுள் உனக்குக் கொடுத்த வரம்! தயவுசெய்து இதை வீணாக்கிடாதம்மா! உன்னால நிறைய சாதிக்க முடியும்! நீ அதுக்காக தான் பொறந்திருக்க! நல்லா கத்துக்கோ! ஆயில் பெயிண்டிங், கலர் மிக்சிங், டார்க் கலர், லைட் கலர், இருட்டு ஓவியம், நாட்டுக்கு நாடு, கலைஞனுக்கு கலைஞன் வித்தியாசம் இருக்கு! நீ எல்லாத்தையும் தெரிஞ்சுக்கோ! ஒரு புது அவதாரம் எடு! வந்தோம் இருந்தோம்னு இருந்துட்டு திடீர்னு
    ஒரு நாள் காணாமல் போறதில்லை வாழ்க்கை! நமக்கப்புறமும் நம்மைப் பத்தி ஒரு சரித்திரம் இந்த உலகத்துல இருக்கணும். அதுதான் வாழ்க்கை. உன்னால அப்படி வாழ முடியும்மா!”

    என் மனத்தில் தெய்வமாய் இருந்தவர் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டார்.

    அதுவரை வெறும் ஆசையாக இருந்த ஓவியக் கனவு அதன் பிறகு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. ஆனால் இப்போது அப்பாவோ.. என்னை ஓவியக் கல்லூரியில் சேர்ப்பதில்லை எனப் பிடிவாதமாக இருக்கிறார். வேறு வழியும் தெரியவில்லை. என்னுடைய ஓவிய ஆசைக்கு சமாதி கட்டி விட்டு, கல்லூரியில் சேர்ந்தாகிவிட்டது!

    எல்லோரும் முதல் நாளில் ஏக எதிர்பார்ப்புகளுடன் போக, நானோ மனம் முழுக்க என் கனவைப் புதைத்துவிட்ட வேதனையைச் சுமந்து கொண்டு போனேன். ஓவிய ஆசையைத் தள்ளி வைக்கவேண்டும் என்ற எண்ணமே என் இதயத்தை அறுப்பது போல் இருந்தது. வருமான வரி எனக்கு வரவே வராமல் போனது. அக்கவுண்ட்ஸ் அறிவோ, பாதியிலேயே நின்று போனது. கல்லூரிப் படிப்பை முடிக்காமலே மூன்று ஆண்டுகள் முடிந்தன.

    “காமர்ஸ் எடுத்துட்டு அக்கவுண்ட்ஸ் வரலைன்னா நீ எல்லாம் உருப்படுவியா? ஒரு டிகிரி முடிக்கத் துப்பு இல்ல! வேற என்ன செஞ்சு கிழிக்கப் போற? உன்னைப் பெத்த கடமைக்கு எங்கேயாவது கல்யாணம் பண்ணித் தள்ளித் தொலைக்காமல் போனேன் பாரு… என் தப்பு.. தத்தி!… தத்தி!”

    அப்பாவின் வார்த்தைகளால் எனக்கு எதுவுமே வராது என்ற எண்ணம் என்னுள் ஆழமானது. இனி உருப்பட மாட்டேன் என எல்லோராலும் முத்திரை குத்தப்பட்ட நான் திருமணம் செய்து அனுப்பப்பட்டேன். ஒரு அழகான பெண் குழந்தை இப்போது எனக்கு! குடும்பம் மட்டுமே உலகமாகிப் போனது. என் அடையாளமே மாறிப் போய், முகவரி இல்லாதவளாகிப் போனேன் நான்.

    “எதுக்குமே நான் லாயக்கில்லை. இதையாவது ஒழுங்கா செஞ்சா போதும்”

    என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். இப்போது என் பிள்ளை அனைத்துப் பாடங்களிலும் முதலாவதாக வருகிறாள். கணக்கில் புலி! அவளும் அவள் அப்பாவும் போரடித்தால் கணக்கில் புதிர் போட்டு விளையாடுகிறார்கள். இவள் என் அப்பாவுக்குப் பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

    ஸ்கூல் முடிந்து அவள் வரும் நேரம் தான். இன்னைக்கு அவ ஸ்கூல் பங்க்ஷன்! எப்போதும் போல கோப்பையுடன்தான் வருவாள். நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே,

    “அம்மா இங்க பார்!”

    கோப்பையைக் கையில் தூக்கிக் காட்டியபடி ஓடி வந்தாள். ஷாக் அடித்தது போல் என் உடம்பு பூராவும் ஏதோ அதிர்வு தோன்றியது.

    ‘தன்னோட ஸ்கூல்ல எதுலயாவது ஜெயிச்சு கோப்பையை வாங்கிட்டு வந்து காட்டும்போது அந்த குழந்தை முகத்தில… முக்கியமா கண்ணுல… ஒரு பெருமிதம் தெரியும்!’

    மின்னல் அடித்த மாதிரி மதன் சாரின் வார்த்தைகள் என் மனத்துக்குள்.

    ‘உன்னால நிறைய சாதிக்க முடியும்! நீ அதுக்காக தான் பிறந்து இருக்க!’

    என்ன ஆகிவிட்டது எனக்கு? ஏன் இப்படி ஆனேன்? எவ்வளவு பெரிய கலையை எப்படி அழிய விட்டேன்?

    ஒரு புதுப் பரவசத்துடன் என் மகளைப் பார்த்தேன். அவள் கண்களில் அவர் சொன்ன அந்த ‘உணர்வு’! சீக்கிரமே என் வேலைகளை முடித்துக்கொண்டு, பரபரப்புடன் ஒரு சார்ட் பேப்பரை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன். மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா?

    என் மகளின் முகம் அப்படியே சார்ட்டில் பதிவானது. கண் மட்டும்தான் பாக்கி! முயற்சி செய்தேன்.
    இல்லை… அழித்துவிட்டு மீண்டும் முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.

    மீண்டும்.. மீண்டும்.. மீண்டும்..

    என் கைகளை விட அதிகப் பரபரப்பில் மனம் இயங்கியது.

    கடைசியில்…

    கையில் வெற்றிக் கோப்பையை ஏந்தியபடி கண்களில் பெருமிதத்துடன் என் மகளின் முகம்!

    என்னை பிரமிப்பாய்ப் பார்த்தபடி பின்னால் என் குடும்பத்தினர்!

    என் கலையை இழக்க நேர்ந்த நாள், கல்லூரியில் தோற்றுத் திரும்பிய நாள், இயலாமைக்குள் நான் புதைந்து கிடந்த நாட்கள், வேதனையுடன் என் கலை ஆர்வத்தை விட்டு விலகிய நொடிகள் என எல்லா வலிகளையும் என் மகளின் உருவத்தில், ஜெயித்து விட்ட கர்வமாய் மாறி இருந்தது!

    நான் கைவிட்ட போதும் என் திறமை என்னைக் கைவிடவில்லை.

    என் ஆறாத ரணத்தை, வலியை வென்று காட்டியது அது!

    படத்துக்கு நன்றி – https://ta.wikipedia.org/wiki/

    Share
  • ஹெல்மெட்

    ஹெல்மெட்

    -சேஷாத்ரி பாஸ்கர் 

    இந்தா மா , வண்டியை நிறுத்து

    ஏன் சார் இப்படி நடு ரோட்டில நின்னா எப்படி சார்

    நீங்க சொன்ன மரியாதைக்கு நிறுத்தினா நாங்க ஏம்மா அப்படி பண்ணறோம்.

    சார் . ஏதோ அவசரம் ஹெல்மெட் போட்டுக்கல.

    பெரிய அவசரம் . நான் வந்து ஸ்டஷேன்ல எல்லா தகவல்களையும் காட்டறேன் .

    சாரி . வண்டிய ஓரத்துல நிறுத்துங்க

    ஏன் சார் . திஸ் இஸ் அட்ராசியஸ்

    சாரி மேடம் ப்ளீஸ் கோஆபரேட்.

    நத்திங் டூயிங்

    ஐ வில் ரைட் டு யுவர் கமிஷனர்.

    என்ன வேணா செய்ங்க

    இப்ப இறங்கி அபராதம் கட்டுங்க

    சார் ஐ ஆம் அ ஜர்ணலசிம் ஸ்டூடன்ட் .

    மேடம் – சாரி . உங்களுக்கு எல்லாம் அடிபட்டா
    வலிக்காதா , உயிர் போகாதா

    இப்ப எங்க கிட்ட பணம் இல்லை .

    பரவாயில்லை . உங்க அப்பா , அம்மா யாரயணா கூப்பிடுங்க.

    சார் .தே ஆர் பிட் ஓல்ட்
    .
    சரி தமிழ்ல சொல்றேன்

    மேடம் .. சார் . ஸ்டஷேன் ரைட்டராய் இருந்தவரு

    ஒரு பெண் காவலர் இடையே புகுந்தார் .அவருக்கு இங்க்லீஷ் தெரியாதுன்னு நினைச்சிங்களா.

    மேடம் . நீங்களே சொல்லுங்க ..

    உங்க தப்புக்கு நான் உடந்தையா? .

    இப்ப நான் என்ன கொலையா பண்ணிட்டேன் .

    டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க .போய் பணத்தை ரெடி பண்ணுங்க.

    சார் . நீங்களும் பாமிலி ஆள் தானே சார் .எங்கப்பா மாதிரி நீங்களும் ஒரு பெரியவர் . இப்படி பண்ணலாமா ?

    அதனால தான் .

    வண்டியை நிறுத்தி விட்டு சாவியை அவரடிம் கொடுத்து விட்டு ஹெல வித் யு என்றாள்.

    அவர் அமைதியாக அவளை பார்த்து பிரிங் யுவர் பாதர் என்றார்

    மேடம் . நீங்க படிச்ச பொண்ணுதானே.இப்படியா ஒரு பெரியவரை பார்த்து , அதுவும் ஒரு அதிகாரியை பார்த்து சொல்வது .ஒரு செக்க்ஷன்ல கேஸ் போட்டா இரண்டு நாள் உங்களை ரிமாண்ட் பண்ணலாம்

    ஸ்டாப் இட் . யு ஆர் இன்சல்டிங் அ சிடிசன் .

    மேடம் – இங்க வாங்க .போன மாசம் வரை இவர் கண்டிச்சு பல பேரை புரிய வச்சுருக்கார் . ஏன் ஒரு பையனுக்கு ஒரு ஹெல்மெட்டே வாங்கி கொடுத்தாரு . இன்னிக்கு இப்படி பண்றாருன்னா

    கொஞ்சம் நிறுத்தி . “போன மாசம் இவர் பொண்ணு ஒரு அக்ரி ஸ்டுடென்ட் . குக்க்ஸ் ரோட்ல அடிபட்டு . ஸ்பாட்ல”. அதுக்கும் உன் வயசு தான் .

    சீ சீ என்ன பெரிசா குதிக்கிறீங்க .

    சார் சாவியை கொடுங்க அதுகிட்ட .. நீ போய் சாவு.இந்தா உன் டாகுமென்ட்ஸ் .

    வேணாம் மேடம் . நான் ஆட்டோல போய் பணம் எடுத்துட்டு வரேன்.

    ஏன் உங்கப்பாவை கூட்டிட்டு வாயேன் . உன் பவுஷை சொல்றேன் .

    வேணாம் மேடம் . இவரே எங்க அப்பா மாதிரி தான்

    Share
  • காட் ப்ளஸ் யூ

    காட் ப்ளஸ் யூ

    -சேஷாத்ரி பாஸ்கர்.

    சார். மன்னிக்கணும் ஒரு முப்பது ரூபாய் கொடுக்க முடியுமா ?

    யார் நீங்க , உங்களை எனக்கு தெரியாதே?

    எனக்கும் உங்களை தெரியாது , நான் தாம்பரம் போகணும் .எனக்கு ஒர்த்தர் மூவாயிரம் ருபாய் தரனும் பஸ்ல போக காசில்லை .இந்த பக்கம் நீங்க திரும்ப வரும்போது நான் பார்த்து கொடுத்துடறேன் .

    சார் உங்க வயசுக்கு நான் வச்சிண்டு இல்லன்னு சொல்றது தப்பு . இந்த அம்பது ரூபாயை வச்சுக்குங்க

    எதுக்கு சார் .நான் பாபா கோவில்ல சாப்டாச்சு . முப்பது போதும்

    இல்லை சார் .உங்களுக்குத் தர வேண்டியவர் இல்லேன்னா உங்களுக்கு பஸ்ல வர காசு .வேண்டாமா ?

    ஏன் சார் இப்படி அபசகுனமாய் சொல்றீங்க என் பணம் . என் உழைப்பு .எனக்கு உங்க பணம் வேணாம் –

    அய்யா , நான் நல்ல எண்ணத்துல சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க இந்தாங்க .

    கொஞ்சம் வேகமாக வாங்கி கொண்டு காட் ப்ளஸ் யு என்றார்

    சிரித்தேன் .

    என்ன சார் .

    இல்லை சொல்லுங்க .

    உங்களை அந்த காட் ப்ளஸ் பண்ணலையே என்றேன்

    கொஞ்சம் முறைத்து விட்டு என் பஸ் வருகிறது என்று புறப்பட்டார்.

    உள்ளே அமர்ந்து என்னை பார்த்து விட்டு அம்பது ரூபாய் நோட்டோடு கையாட்டினார் .

    நான் கை கூப்பினேன்

    மாலை என் மகன் என்னிடம் வந்து ஒரு குட் நியூஸ் என்றான்

    என்ன என கேட்டேன் .

    இல்லை . நீ எப்ப பார்த்தாலும் தானம் பண்ணு , தர்மம் பண்ணுன்னு சொல்வ இல்ல

    ஆமாம் . அதுக்கென்ன இப்ப ?

    இல்லை . இன்னிக்கு ஒருத்தர் குளத்து கிட்ட என்கிட்டே பத்து ரூபாய் கேட்டார் . பாவமா இருந்தது பா .

    என்ன சொன்ன .

    என்கிட்டே இருபது ரூபாய் இருந்தது .அப்பிடியே கொடுத்துட்டேன் .

    குட் .

    என்னப்பா என்னை பாராட்டுவேன்னு நினச்சேன் .

    அவர் உன்கிட்ட பணம் வாங்கிண்டு காட் ப்ளஸ் யூன்னு சொன்னாரா ?

    காட் . கரெக்ட் . எப்படிப்பா உனக்கு தெரியும் .

    கொஞ்சம் கெஸ் பண்ணேன் .

    அவருக்கு தரக்கூடாதாபா .

    இல்லை.அடுத்த வாட்டி பார்த்தா அவர் கேட்காவிட்டாலும் கொடு என்றேன் .

    Share
  • ஹொரர்

    ஹொரர்

    -முனைவர்.நா.தீபா சரவணன்

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

    நானிங்க சிட்டௌட்டில உட்காந்து பேப்பர் வாசிச்சிட்டிருக்கும் போது எம்மகன் ஹால்ல சோஃபாவில ரிமோட்கன்ட்ரோல கையில வெச்சிட்டு உட்காந்திருந்தான். அவனே வீடியோ லைப்ரரியிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்த ஏதோ ஒரு ஹொரர் படம் வி.சி.பியில் ஓடிக்கொண்டிருந்தது. அவனுக்குப் பிடித்தது ஹொரர் (திகில்) படங்கதான்.

    சமீபமா அவன் ஒரு படம் பார்க்க என்னயும் கூப்பிட்டான், அது ரொம்ப நல்லாருக்கும்னு அவனோட நண்பர்கள் சொன்னாங்களாம். சரி  பாக்கலாமேன்னு நானும் முடிவெடுத்தேன்.

    அது விசித்திரமான ஏதோ ஒரு நகரத்தில் உள்ள ஹைஸ்கூலைப் பற்றியது. முதல் காட்சில ஒரு ஆசிரியர் பாடம் நடத்தராரு. மாணவர்கள் யாருமே அப்படி ஒருவர் வந்ததாக கண்டுகொள்ளவில்லை. அவங்க பல குழுக்களாகப் பிரிஞ்ச பாராமுகமா இருக்காங்க. ‘குட்மானிங்’ ஆசிரியர் சத்தமாகச் சொல்றாரு. யாரும் அதைக் கேட்கறதில்ல.

    வகுப்பறைல ஒரு மூலைல ஒரு மாணவன் ஒரு மாணவியை பலமாகப் பிடித்து நிறுத்தி முத்தமிடத் தயாராகிக்கொண்டே மற்றொரு கையால் அவளது ஆடையை உயர்த்துகிறான். மாணவிகள் உட்பட நாலைந்து பசங்க அவங்கள சுத்தி நின்னு சத்தம் போட்டு மகிழறாங்க. மற்றொரு பக்கம் ரெண்டு மாணவர்கள் கட்டிப்புடிச்சிட்டும் அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டும் நிக்கறாங்க. அதற்கிடைல ஆசிரியர் மேசைமேல கையடித்து மாணவர்களோட கவனத்தத் திருப்ப பாக்கறாரு.

    முன் வரிசைல உட்கார்ந்த மாணவன் அவனுடைய தலைல பாதிமொட்டை அடிச்சிருக்கான், இடுப்பிலிருந்து ஒரு கத்திய உருவி டெஸ்கிலக் குத்தி வைக்கிறான். ஒரு காதில கடுக்கன் மாட்டின வேறொரு மாணவன் அவனுடைய முடியோ ஆந்த்ரே அகாஸினைப் போல. பெஞ்சில் ஏறி நின்று வாத்தியார்க்கு முன்பாக ஜீன்சோட ஜிப்பை தாழ்த்தறான். மொத்தத்தில் மோசமானச் சூழ்நிலை. இருந்தாலும் ஆசிரியர் கையிலுள்ள புத்தகத்தை விரித்தார். அது ஷேக்ஸ்பியரின் நூல். வாசிக்கத் தொடங்கினார். மாணவர்கள் பலரும் குதித்தெழுந்து வாசிப்பதை நிறுத்தக் கூறினார். ஆசிரியர் அதற்கு செவி மடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து சுயிங்கம் அசைத்துக் கொண்டிருந்த மாணவர்கள் அவரை நோக்கி நடந்தாங்க. ஆசிரியர் அவர்களை அவர்களுடைய இடத்தில் போய் உட்காருமாறு ஆக்ரோசமாகக் கூறுகிறார். மாணவர்கள் பின்வாங்கவில்லை. 

    அடுத்தக் காட்சில ஆசிரியர் காயங்களுடன் மூச்சு வாங்க நீளமான வழியில் நகர்கிறார். வாயிலிருந்து இரத்தம் சொட்டுகிறது.

    அவர் தலைமையாசிhரியர் அறைக்குக் கடந்து செல்கிறார். புகார் சொல்வதற்காக இருக்கலாம். ஆனால் அங்கே பார்ப்பதோ இருகைகளையும் உயர்த்திக்கொண்டு உதவுவார் யாருமின்றி நிற்கிற தலைமையாசிரியரை இரண்டு மாணவர்கள் அவருடைய கழுத்தில் கத்தி முனையை வைத்து ஊன்றிக் கொண்டு ஏதோ காரியத்தைச் சம்மதிக்க வைக்க முயன்று கொண்டிருந்தனர்.

    “வெரி இன்ட்ரஸ்டிங்க் இல்ல டாடி?’ என்மகன் கேட்டான் என்ன சொல்றதுன்னு தெரியாம நான் கஷ்டப்பட்டேன். சில நாட்களுக்குப் பிறகு அவன் ஸ்கூல்விட்டு வந்த விதம் ஒரு பாக்ஸிங் போட்டியில் தோல்வியடைந்தவனைப் போல இருந்தது. மூக்கு கிட்டத்தட்ட சதைக்கப் பட்டிருந்தது. முகத்திலும் ஆங்காங்கே இரத்தம் கட்டி இருந்தது. யூனிஃபோம் முழுக்க மண்ணும் சகதியும்

    ‘நத்திங் சீரியஸ்’ பசங்ககிட்ட சண்டைபோட்டேன் ‘அவன் கூறினான்.

    அவனோட அடி ஏற்று ஒருத்தன் ஹாஸ்பிட்டல்ல இருக்கான்னு எனக்குத் தெரிஞ்சதே அடுத்தநாள்தான். காலைல நான் ஹெட்மாஸ்டரெ பாக்க பள்ளிக்குப் போனேன். என் மகனோட அனுபவத்த முன்வெச்சு பள்ளில அச்சடக்க நடவடிக்கை மேற்கொள்ளனும்ன்னு நான் சொன்னத முழுக்க அவரு பொறுமையாக் கேட்டாரு. பிறகு சொன்னாரு “சரிதான், ஆனா உங்க மகன் என்ன செஞ்சானு அவங்கிட்டயே கேளுங்க. அவங்கிட்ட அடிவாங்கி ஒருத்தன் ஹாஸ்பிட்டல்ல இருக்கான்”

    நான் அவருகிட்ட மண்ணிப்பு கேட்டிட்டு சீக்கிரமா வெளில வந்திட்டேன்.

    “ஹாய்! ……….கேட்டுக்குப் பக்கத்தில ஒரு சத்தம்

    நான் முகத்தை உயர்த்திப் பார்த்தேன்.

    என் பையனோட நண்பன்.

    “இல்லையா?” அவன் கேட்டான்.

    “இருக்கான்” நான் கூறினேன்

    அவன் கேட்டைத் திறந்து உள்ளே வந்தான்.

    நடந்து வரவில்லை. கால்களில் ஷூக்கள் போலக் கட்டப்பட்ட ரோலர்களில் உருண்டு வந்தான்.

    பனிக்கு மேல் ஓடுவது போல் நகர்ந்தான். எம் பக்கத்துல வந்து உள்ளே எட்டிப்பார்த்து அவன் நண்பனைக் கூப்பிட்டான்.

    ‘வெயிட்’ என் மகன் ரிமோட் கன்ட்ரோலை அமர்த்தி சோஃபாவில் போட்டுவிட்டு குதித்து எழுந்ததைப் பார்த்தேன். அவன் நண்பன் ஓரிடத்தில் நிற்காமல் சக்கரங்களைச் சுழற்றி உற்சாகமாக வாசலில் வட்டமிட்டுக் கொண்டிருந்தான். நான் கையில நியூஸ் பேப்பரோட மூழ்கியிருந்தேன். அவன் தானாக சிரித்துக் கொண்டு இலைகளையும் கொம்புகளையும் தொட்டுக் கொண்டு வட்டமிட்டான்.

    சில நிமிடங்களில் என் மகன் உள்ளிருந்து வந்தான். அவனும் பாதங்களில் சக்கரங்கள் கட்டியிருந்தான். ஒரு பாலெ நடனம் போல நகர்ந்து வந்து சிட்அவுட்டின் தூண்களைப் பிடித்து கொஞ்சநேரம் நின்றுவிட்டு படிகளிறங்கி முற்றத்தை அடைந்தான். 

    அதற்குள் அவன் நண்பன் ஒரு வட்டம் முடித்துவிட்டு கைநீட்டி அவனுக்கு நேராக வந்தான்.

    அவங்க கை கோர்த்திட்டே கேட்டுக்குப் பக்கத்தில போனாங்க. பிறகு வெளில இறங்கினாங்க.

    நான் பார்த்துட்டு உட்கார்ந்திருக்கும்போதே மதில் சுவற்றுக்கு அப்புறம் ரெண்டு தலைகள் அதிவேகமாக நகர்ந்தன.

    முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    Share
  • சிதம்பரம் (சிறுகதை)

    சிதம்பரம் (சிறுகதை)

    -பாஸ்கர் சேஷாத்ரி
    —————

    அவன் அந்த இடத்தைக் காட்டிய போது எந்த சுவாரஸ்யமும் இல்லை. அகற்றப்படாத குப்பை, மலம் என, நெருங்க முடியாத அளவுக்கு ஒரே துர்நாற்றம்.

    டேய், அந்தப் பக்கம் போகாதே என்றதை அவன் சட்டை செய்யவில்லை.

    வாடா என்றான். போய் நின்றேன். அழுக்குக் கலவையாய் ஓடும் நீரோட்டம். சுற்றிலும் பாசி. எக்கச்சக்க செடிகள். மிதக்கும் டயர், சேற்றுப் படுகை.

    பாசு, நம்புவியா… இங்கிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் கட்டு மர சவாரி. டப்பா கட்டு கட்டி கையில் தள்ளு குச்சியை வைத்துக்கொண்டு அவர்கள் தள்ளும் வேகம் நீரைக் கிழிக்கும். இரண்டு பேர். இரண்டு பக்கம். உள்ளே நாலு பேருக்கு மேல் இடமில்லை. குழந்தைகளை அனுமதிக்க மாட்டார்கள்.. எதிர்ப் பக்கம் உப்பு மூட்டை. இந்தப் பக்கம் சுள்ளிக் குச்சி.. ஓரத்தில குடம் தண்ணி. நடுவுல காய்கறி மூட்டை.. பெண்டிர் ஒரு பக்கம், பேச்சு பெரிதாய் இருக்காது. பூ தொடுத்துக்கொண்டு ஒரு அணி. இன்னொரு அணி மந்தார இலைகளைப் பின்னிக்கொண்டு. நாட்டமாய் எல்லோரும் அவரவர் வேலை செய்வார்.

    நீ போயிருக்கியா?

    என்னெல்லாம் உள்ள விடலை. நீச்சல் தெரியும்னு அப்பா சொன்னார்.

    ஆனா பட்டாமணியம் ரொம்ப கண்டிப்பு. அவர் பேத்தியைக் கூட ஏத்தல.

    எவ்வளவு ரூபாடா

    ரூபாவா? ரெண்டணா…. நினைச்சா இறங்க முடியாது. விசில் எல்லாம் கிடையாது. தோ இங்க இந்தக் கட்டடம் முன்னால காய்கறிச் சந்தை. அதுக்குப் பேரே தண்ணித்துறை மார்கெட். பாஷ்யம் அய்யங்கார் கட்டினது. நூத்திப் பத்து வருஷம் ஆச்சு. எட்டரை கிரௌண்ட். அவர் ஜட்ஜ். நேர்மைக்குப் பேர் போனவர்.

    காய்கறி வணிகம், கணக்குல கெட்டியாய் இருந்தா தான் சமாளிக்க முடியும். ஆளும் மாறும், விலையும் மாறும். புதினாவை உடம்பில் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்தால் அசதி தெரியாது. வாணிபம் அவர்கள் உடம்பில் ஓடும் ரத்தம். நேர்மைக்குப் பேர் போனவர்கள். அம்பதுக்கு அப்புறம் வந்த தலைமுறை பணத்தைப் பெரிசாகப் பார்த்தது. அதுதான் வீழ்ச்சி. கண்ணியம் போச்சு. மேல் விலைக்கு வித்தவன் முடக்கு வாதம் வந்து செத்துப் போனான். ஆனாலும் யாரும் மாறல. சாவு மனுஷனை மாத்தும்னா இன்னிக்கு ஊர்ல பாலும் தேனும் ஓடும். அதெல்லாம் தாவார பேச்சு .

    எப்படிடா இதெல்லாம் உனக்குத் தெரியும்? என் வயசுதான்டா உனக்கு?

    எல்லாம் எங்க தாத்தன் சொன்னதுரா. கண்கள் கலங்கின.

    சிதம்பரம் அழுது, நான் அப்போது தான் பார்க்கிறேன். தோள்கள் கொஞ்சம் நடுங்கின.  இது நிஜ அழுகை. அறுபது வயதில் பாசாங்கு செய்ய முடியாது.

    டேய், ஆர் யு ஓகே?

    நல்ல நினைவாற்றல் உனக்கு .

    அது வலிடா என்றான்.

    ஏன்?

    அந்தப் பரிசிலை ஓட்டியது என் தாத்தன். முடக்கு வந்து செத்தவன் என் அப்பன்.

    என் உடலும் உள்ளமும் மொத்தமுமாய் சிதம்பரமாய் இருந்தது…

    Share
  • மணி சார்

    சேஷாத்ரி பாஸ்கர் 
    —————

    கே ஜே எஸ் மணி பற்றி சொல்ல வேண்டும் . எல்லோர்க்கும் அவர் மணி சார் . நான் பணி புரிந்த காலத்தில் ஏற்பட்ட சிநேகம்.முதல் நாள் வேலை விஷயமாய் பார்க்க போன போது அவர் தான் என்னை அழைத்து உட்கார சொன்னார் . முதல் நாள் ஒரு அலுவலகத்தில் உட்காரும்போது மிக பூரிப்பாகா இருந்தது .அவர் நெற்றியில் பெரிதாய் பழனி சித்தநாதன் விபூதி . அவர் பேச பேச கொஞ்சம் கொஞ்சமாய் உதிர்ந்து அவர் கருப்பு ப்ரேம் கண்ணாடியில் விழுந்தது .அவ்வப்போது துடைத்து பேச வாசனை அந்த அறை முழுதம் வியாபித்தது .

    எங்கேந்து வர ?
    மயிலாப்பூர் சார்
    இங்க என்ன வேலைன்னு சொன்னாங்களா ?
    இல்லை சார்
    இந்த டிப் டாப் டிரஸ்லாம் கொஞ்சம் இந்த வேலைக்கு அதிகம் . அதென்ன பெல்ட்ல கழுகு?
    ஜுக்னு சார் .
    அப்படினா ?
    சினிமா சார் .
    என்ன கருமமோ .
    கார்த்தால ஒன்பது மணிக்கு டாண்ணு வரணும்
    சைக்கிள் ஓட்டுவியா ?
    ம் தெரியும் சார்
    முதல்ல எல்லார்க்கும் காப்பி கொடுக்கணும்.உனக்கும் உண்டு
    பத்து மணிக்கு மேல லாரி ஆபிசுக்கு போகணும்
    ஏதான சரக்கு இருந்தா கொண்டு வரணும்
    கமிஷன் ஏதும் அடிக்க கூடாது .
    சரி சார்
    நடுவில் பேங்க் வேலை பாக்கணும்
    பேரு என்ன சொன்ன ?
    பாஸ்கர்
    முதல்ல கௌரவம் பாக்க கூடாது .சாயந்திரம் நான் சொன்னபுறம் தான் போகணும்
    கையில என்ன .
    சர்டிபிகேட் சார் .
    பேப்பர் மாதிரி இருக்கு
    ஆமா சார் . எக்ஸ்பிரஸ் பேப்பர் .அதுவுள்ள வச்சிருக்கேன் .
    பேப்பர்லாம் படிப்பியா ?
    ஆமா சார். எக்ஸ்பிரஸ் ..நான் வாங்கிடுவேன் .
    சம்பளம் என்ன தெரியுமா , இரு நூத்தி எழுபத்தி அஞ்சு .
    சரி சார் .
    அப்புறம் பாகிங் பண்ணனும்.செக்போஸ்ட்ல ஏதான பிரச்சனைனா போகனும் .இன்னொன்னு இங்க கட்டை வண்டி இருக்கு . வண்டிக்காரனுக்கும் ஹெல்ப் பண்ணனும் . கூட மாட தள்ளனும் .
    செய்வேன் சார் .
    உன் வயசு என்ன
    இருப்பத்தி அஞ்சு .
    வீட்ல போன் இருக்கா ?
    இல்ல சார் .எப்ப சார் சேரனும்
    இன்னிக்கே ?
    சார் நாளைக்கு தீபாவளி .
    ஏன் வெடிக்கனுமா ?
    இல்ல சார் . வெடிக்கரத பாக்கணும் .
    சரி .அப்ப்ளிகஷேனை எழுதி கொடு.
    தோ சார்
    .கச்சேரி ரோட்ல சாரதா ப்ளாஸ்க் தெரியுமா ? .
    தெரியும் சார் . பழைய போஸ்ட் ஆபிஸ் பக்கத்துக்கு அடுத்த பில்டிங்.
    சரி போய் உட்கார் .
    சரியாக ஒரு மணி கழித்து அவர் திரும்ப வந்தார் .
    இந்தா . இந்த பிளாஸ்கை அங்கு கொடுத்துட்டு ரிப்பேர் பில் வாங்கிக்கோ
    அஞ்சு ரூபாய் வச்சுக்கோ .ஏதான பப்பிர்மின்ட் வாங்கி சாப்பிடு .நாளான்னைக்கு வா .
    வெளியே வந்து சைக்கிளை எடுத்து பிளாஸ்கை தோளில் மாட்டிய பிறகு எனக்கு எந்த வெடி சப்தமும் கேட்கவில்லை .

    Share
  • செல்வி

    செல்வி

    பாஸ்கர் சேஷாத்ரி

    அவரின் மீசையைப் பார்த்தவுடன் அவளுக்குப் பயமாகிவிட்டது .

    “என்ன, உம்பேரு என்ன?”

    “செல்வி.”

    உடம்பு கொஞ்சம் நடுங்கியது

    “வேலையை பத்தி சுந்தரி சொன்னாளா?”

    “சொன்னாங்க சார்.”

    “காலைல எட்டரைக்கு வந்துடணும் .
    ஒம்போது மணிக்கு டீ கொடுப்ப்போம் .
    நாலு பிஸ்கட் கூட பொறையும் உண்டு .
    வேலைல கௌரவம் பாக்க கூடாது .
    முதல்ல இரண்டு கல்ல தூக்கணும் .
    அப்புறம் ஒரு வாரம் கழிச்சு நாலு கல்லு.
    மொத்தம் மூணு மாடி .
    முதல்ல தலைல.
    ஷோக்கெல்லாம் பாக்க கூடாது
    செல்போன்ல பாட்டெல்லாம் கேட்க கூடாது.”

    “எங்கிட்ட போனே இல்ல…..”

    “சிம்மோடு கட்டி விடுவாங்க .
    தலை கட்டு. துணில
    முதல்ல நடு மண்டை வலிக்காது.
    ஈர துணியோட ரெண்டு நாள் இருக்க பழகு .
    ரப்பர் செருப்பு தான் போடணும் .
    புடவை மேல ஒரு சட்டை போடணும்.”

    “சரிங்க சார்.”

    “அய்யான்னு கூப்பிடு – சுந்தரி”

    “சரிங்க அய்யா.”

    “நீ என்ன நடுல …
    உம் பேரு விலாசமெல்லாம் எழுதி
    அந்த வாட்சமேன்ட்ட கொடு.
    என்ன பண்றான் உன் அப்பன்?
    சம்பளம் பணத்தை சனிக்கிழமை சாயந்தரம் கொடுப்போம் .
    எந்த பொருளையும் நீ இங்கேந்து கொண்டு போக கூடாது.”

    “சரிங்க சார்.”

    “மணி என்ன ஒம்போது தானே.”

    “வாட்ச் இல்ல சார்.”

    “சரி சரி ராகு காலத்துக்கு முன்னாடி சேர்ந்துக்கோ.”

    “அய்யா. நான் நாளைலேந்து வரேன்யா.”

    “ஏன் …நாளைக்கு மட்டும் என்ன முஹூர்த்தம்?”

    “இன்னிக்கு பன்னெண்டு மணிக்கு பத்தாம் கிளாஸ் ரிசல்ட்யா.”

    மேஸ்திரி எழுந்துவிட்டார்!! .

    Share
  • ரங்கண்ணா (சிறுகதை)

    ரங்கண்ணா (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி

    ரங்கண்ணாவுக்கு நேற்றோடு எண்பது வயது முடிந்தது. போன வாரம் சொன்ன படி அவரைப் பார்த்தேன்.

    “டேய், என்னை வெளில கூட்டிண்டு போடா?”

    “இல்லை சித்தியா.நாளைக்கு போலாம்.”

    “டேய், கீப் அப் தி வோர்ட். கிளம்பு.”

    கிளம்பியாகிவிட்டது. கைத்தடியை தூக்கி வைத்துவிட்டார்.

    அழுத்தித் தோளில் கை வைத்து மெல்ல நடந்தார்.

    “அரை மணி காத்தாடா போலாமா?”

    “ஏன், வேறெங்கே ஜோலி?”

    “இல்லை, சொன்னேன்.”

    வெளிக் காத்து பட்டதும் ரொம்ப சந்தோஷமானார் .

    “கிட்டத்தட்ட ஆறு வருஷம் ஆச்சுடா, வெளில வந்து.
    அவ போனப்ப வெளில வந்தது.”

    “நீங்க இடது பக்கம் வந்தா, இன்னும் பொறுமையா நடக்கலாம்.”

    “நடக்க தான்டா வெளில வந்தேன். என்ன பொறுமை வேண்டி கிடக்கு?”

    “இந்த பிளாட்பாரம் கோவில் இப்ப பெரிசா கட்டிட்டான் போலருக்கு.”

    “ஆமாம். அந்தக் கடைக்காரன் இடத்தை வளைச்சு அவன் சாமானையும் வச்சுக்கிறான்.”

    “போறான் விடு. பகவான் பாத்துப்பான்.”

    “…….”

    “என்ன பதில காணோம்.”

    “ஒன்னும் இல்லை.”

    கடை வாசலில் நின்றார் .

    “டேய், மாரி பிஸ்கட் ஒன்னு வாங்குடா?”

    “தோ.”

    “வேறன்ன வேணும்?”

    கடைக்கார அம்மா எழுந்து, “தாத்தா சௌக்கியமா?” எனக் கேட்டாள்.

    “ம்ம், ராமு எங்கே?”

    “பேப்பர் போடப் போயிருக்குது.”

    “திரும்பிடலாம்” என்றேன் தோள் மாற்றிக்கொண்டு.

    “ஏன்டா?”

    “இல்ல, எதிர்க்க ஏதோ ஊர்வலம்.”

    “நல்ல சகுனம் தான்.”

    “இல்ல சித்தியா. எதிர்த்த சந்தில போயிடலாம்.”

    ஒரு கடை வாசலில் சின்ன பெஞ்ச் இருந்தது.

    “உட்காருங்கோ” என்றேன்.

    “இருக்கட்டும். எனக்கு ஒரு பன்னீர் சோடா வாங்கி கொடேன். அப்புறம் அந்த ஸ்ட்ராங் மிட்டாய்.”

    எதிர்ப் புறம் ஒரு கார் வந்து நின்றது.

    “அப்பா” எனக் குரல் கேட்டு திரும்பினால் வரது.

    “இங்கே எப்படி வந்தே?”

    “ஒன்னும் இல்லடா. இவன் தான் ஆத்துக்கு வந்து, இந்த க்ஷணம் என்னோடு வெளில வாங்கோன்னு ஒரே அடம்.”

    அவர் காரில் ஏறினார். எட்டிப் பார்த்து மிட்டாய் வாயுடன் சிரித்தபோது, இவர் அடுத்த வாரம் திரும்பக் கூப்பிடுவார் எனத் தோன்றியது.

    =================================

    படத்துக்கு நன்றி: https://www.maxpixel.net/Travel-Walking-Steps-Journey-Outdoors-Men-People-3525771

    Share
  • பிரம்மஹத்தி தோஷம் (சிறுகதை)

    பிரம்மஹத்தி தோஷம் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    தொலைக்காட்சி ஒத்திகை முடிந்து வீடு திரும்பியதும் களைப்புதான் மிஞ்சியது அபிராமிக்கு.

    `எத்தனைவித சமையல் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க!’ என்று புகழ்ச்சியில் ஆரம்பித்து, அவளைத் தன் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்திருந்தார் இயக்குநர் சற்குணம்.

    முதன்முதலாகத் தன்னைப் பல்லாயிரம் பேர் பார்ப்பார்களே என்று கவனமாக அலங்கரித்துக்கொண்டு போயிருந்தாள் அபிராமி.

    அவளை மேலும் கீழும் நோட்டமிட்ட சற்குணம், “பாக்கறவங்க ஒங்களையேதான் பாத்துக்கிட்டு இருக்கப் போறாங்க. சமையல் குறிப்பிலே மனசு போகாது!” என்றார் கேலியாக.

    உடனே, கழுத்திலிருந்த இரண்டு சங்கிலிகளில் ஒன்றைக் கழற்றி கைப்பைக்குள் போட்டுக்கொண்டுவிட்டு, தாயின் ஆமோதிப்பை வேண்டும் குழந்தையைப்போல் அவரையே பார்த்தாள் அந்த இல்லத்தரசி.

    “இப்போ சரியா இருக்கு!” என்ற ஆமோதிப்பு, அப்போது மகிழ்ச்சியைக் கொடுத்தது. தானும் ஒரு சின்னத்திரை நடிகை!

    நேரம் நெருங்க நெருங்க, அபிராமிக்குப் பயம் வந்தது. பரீட்சைக்கு எழுதுமுன்னர் மாணவர்கள் கழிப்பறையை நாடி ஓடுவதுபோல் உணர்ந்தாள்.

    “அதை ஏன் அங்கே எடுத்துக்கிட்டுப் போறீங்க? இப்படி சோபாமேல வெச்சுட்டுப் போங்க, என்று குரல் கொடுத்தவள், அவள் வயதை ஒத்த கலாராணி. கல்யாணி என்ற இயற்பெயரை தொலைக்காட்சிக்காக மாற்றிக்கொண்டிருந்தவள்.

    அவள் அவ்வப்போது அங்கிருந்தவர்களுக்கு டீ போட்டுக்கொடுக்கும் `எடுபிடி’. ஆனால், அவ்வாறு அவள் மதிப்பைக் குறைக்காது, `உதவி இயக்குநர்’ என்று அவள் பெயரும் திரையில் வரும்படி செய்திருந்தார் இயக்குநர்.

    “நீங்க போயிட்டு வாங்க. நான் பாத்துக்கறேன்!” என்றவளைப் பார்த்து, தர்மசங்கடத்துடன் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, அவசரமாக ஓடினாள் அபிராமி.

    திரும்பி வந்தபோது, கைப்பை அவள் வைத்த இடத்தில் இருக்கவில்லை.

    “என் ஹாண்ட்பேக்?” என்று அபிராமி அலறியபோது, சிறிய சமையலறைக்கு உள்ளிருந்து வெளிப்பட்டாள் கலாராணி. அவள் தோளில் அபிராமியின் கைப்பை!

    “மொதல்லே இந்த டீயைக் குடிச்சு ஆசுவாசப்படுத்திக்குங்க! ஒங்களுக்குன்னு ஸ்ட்ராங்கா போட்டிருக்கேன்”.

    நன்றியுடன் அதை வாங்கிக்கொண்டாள் அபிராமி. சூடான பானம் தொண்டையின்வழி இறங்கியபோது, சற்றுமுன் எழுந்த பயம் மறைந்து, சுறுசுறுப்பு வந்துவிட்டாற்போல் இருந்தது.

    அடுத்து, “இந்தாங்க. நான்தான் பத்திரமா எடுத்து வெச்சேன். இப்படி வெச்சுட்டுப் போகலாமா?” என்று அபிராமியிடம் அவள் பொருளை நீட்டினாள் கலாராணி. “எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்குங்க”. குரலில் திமிர் தெரிந்தது.

    இயந்திரகதியில் அபிராமி அதைத் திறக்கப் போனபோது, “ரெடி?” என்ற இயக்குநர் குரல் கேட்டது.

    ஆளுயரக் கேமராவையும் விளக்குகளையும் பார்த்து இன்னும் நடுக்கம் எழுந்தது.

    நாலைந்து முறை குளறிவிட்டு, ஒருவழியாக வீடு திரும்பினாள் அபிராமி.

    `இந்த ஒரு அனுபவமே போதுண்டா சாமி!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். உடலும் மனமும் ஒருங்கே களைத்திருந்தன.

    அடுத்த சில நாட்கள், தன் உருவத்தைத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவரும் தொலைக்காட்சிவழி பார்க்கப் போகிறார்கள், யாரெல்லாம் அழைத்துப் பாராட்டுவார்கள் என்ற இனிய கற்பனைகளில் கரைந்தன.

    ஆனால், தான் சமையல் குறிப்புகளைக் கொடுக்கும் காட்சியைப் பார்த்தபோது அபிராமிக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. கழுத்தில் ஒரே ஒரு மெல்லிய சங்கிலி இருப்பதுதான் கண்ணை உறுத்தியது.

    பதற்றத்துடன் கைப்பையில் தேடினாள் அபிராமி.

    இந்த நிகழ்ச்சிகளுக்குச் சன்மானம் எதுவும் இல்லாவிட்டாலும், தங்கள் முகம் எல்லாருக்கும் தெரிகிறதே என்ற பெருமையில்தான் பலரும் பங்கேற்க முன்வந்தார்கள் – அபிராமியைப்போல்.

    `நாங்க தெருவோரத்தில வெச்சிருக்கிற ஸ்டால்ல சாப்பிடுவோம்மா!’ என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் அவளும் அவர்களுடன் சேர்ந்து போவதைத் தவிர்த்திருந்தார் சற்குணம். அந்நிகழ்ச்சிக்கென்று அளிக்கப்பட்ட தொகையில் பெரும்பகுதியைத் தயாரிப்பாளர் தனதாக்கிக்கொண்டு, ஒரு சிறு விள்ளலை அதற்கென ஒதுக்கியிருந்த வயிற்றெரிச்சலை அவளுடன் முன்பே ரகசியமாகப் பகிர்ந்துகொண்டிருந்தார்.

    “அதுக்கென்ன! வீட்டிலே சமைச்சு வெச்சுட்டுத்தான் வந்திருக்கேன்!” என்று பெரியமனது பண்ணினாள் அபிராமி.

    கலாராணியோ, பகல் உணவின்போது, `நசி லெமாக்’ என்னும் தேங்காய்ப்பாலில் வெந்திருந்த சோறு நடுவில் இருக்க, அதைச் சுற்றி, வறுத்த நிலக்கடலை, கருவாடு மற்றும் வெள்ளரிக்காய் வில்லைகள், வறுத்தரைத்த மிளகாய்ச்சாறு எல்லாம் தனித்தனியாக வைக்கப்பட்ட கொழுப்பு சேர்த்த சாதம் ஓசியாகக் கிடைக்குமே என்று ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொண்டாள்.

    அவளால் கண்டிப்பாக ஆறாயிரம் வெள்ளி கொடுத்து, ஐந்து பவுன் சங்கிலி வாங்கியிருக்க முடியாது.

    நடந்ததையெல்லாம் நாடகத் தொடர்போல் ஒருமுறை நினைவுபடுத்திக்கொண்டாள் அபிராமி.

    ஏதோ உள்நோக்கத்துடன்தான் அவள் கைப்பையைக் கழிப்பறைக்குள் எடுத்துச் செல்லவேண்டாம் என்று தடுத்திருக்கிறாள்! அப்போது இருந்த பதற்றத்தில் அதைத் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை! முட்டாள்! முட்டாள்!

    பேரன்புடன், சூடான பானத்தைக் கொடுப்பதுபோல் கொடுத்து, தன் கவனத்தைக் கலைத்திருக்கிறாள்.

    அடுத்தடுத்து வந்த சமையல் நிகழ்ச்சிகளில் கலாராணியின் கழுத்தில் மின்னிய சங்கிலி தன்னுடையதுதான் என்பதில் அபிராமிக்குச் சந்தேகம் இருக்கவில்லை.

    எடுத்ததை அவள் பார்க்கவில்லைதான். ஆனால், எந்தத் திருடன்தான் பிறர் பார்க்கத் திருடுகிறான்!

    அவளைப்போய் கேட்க முடியுமா?

    ஒரு பேரங்காடியில் தன் குழந்தைக்காகப் பால் போத்தல்களையும், மிட்டாய் வகைகளையும் திருடிய ஏழைத் தாய்க்கு சிறைத்தண்டனை. ஆனால் இவ்வளவு பெரிய குற்றத்திற்கு எந்தவிதத் தண்டனையும் இல்லாமல் இவள் தப்பிவிட்டாள்! இது என்ன நியாயம்!

    தங்கத்தைத் திருடினால் பிரம்மஹத்தி தோஷம். அதாவது, கொலை செய்த பாவம் என்று அபிராமி படித்திருக்கிறாள். `தெய்வம் நின்று கொல்லும்!’ என்றெல்லாம் வேறு சொல்கிறார்களே! இந்தத் திருடிக்கு எப்போது, எப்படி தண்டனை கிடைக்கப் போகிறது?

    விரைவிலேயே அதற்கான விடையும் கிடைத்தது, தினசரியில் முதல் பக்கச் செய்தியாக.

    கலாராணியின் மகன் தன் காரில் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருளுக்காக கைது செய்யப்பட்டிருந்தான்.

    `பொருள் அங்கிருப்பதே அவனுக்குத் தெரியாது. அத்துடன், தனித்து வாழும் தாய்க்கு ஒரே மகன்!’ என்று வக்கீல் வாதாடினார். கலாராணி `அன்பளிப்பாக’ அளித்திருந்த சங்கிலி அவரை அப்படி உணர்ச்சிவசமாகப் பேச வைத்திருந்தது.

    மலேசியச் சட்டப்படி, ஒரு கிலோ வைத்திருந்தாலே மரண தண்டனை. இவன் வசமோ நான்கு கிலோ!

    அதற்கடுத்த வாரம் வந்த நிகழ்ச்சியில், சோர்ந்த முகத்துடன் காணப்பட்டாள் கலாராணி. கழுத்தில் ஒரு கருகமணி மாலை மட்டும்!

    `பிரம்மஹத்தி தோஷம் சும்மா விடுமா!’ என்று உரக்கவே சொல்லிக்கொண்டபோது, ஆறுதலாக இருந்தது அபிராமிக்கு.

    Share
  • சைக்கிளும் வலியும்

    -சேஷாத்ரி பாஸ்கர்

    எனக்கு சைக்கிள் கற்று கொடுத்தவன் என்னை விட வயது ரெண்டு சின்னவன். அவன் எங்கு கற்று கொண்டான் என தெரியாது . மந்தவெளி பக்கம் ஒரு மைதானம் . சுமார் ஒரு வாரம் இருக்கும் . அவன் என்ன சொன்னளாலும் கேட்பேன். வாடகை நான் தான் தர வேண்டும். ஒரு மணி நேரத்தில் பெரும்பாலும் அவன்தான் ஒட்டுவான். கேள்வி கேட்க முடியாது. என்னை மதித்து யார் எனக்கு கற்று கொடுப்பார்? வாடகை வண்டியே தர மாட்டான். சுதர்சன் அவன் பெயர். முதுகில் குத்தி கொண்டே வருவான்.  வலி ஒரு பக்கம். இதில் அவஸ்தையில் எங்கே எதை கற்று கொள்வது. மற்றவர்க்கு ஒரு வாரம் என்றால் எனக்கு ஒரு மாதம். மர மண்டை அப்பவே! ‘நேர பார்’ என்பான்.  பெடல் செய்ய மறந்து விடுவேன். பெடல் செய்யும் போது பிரேக்கை பிடித்துக் கொள்வேன். வண்டி நகராத . அவனுக்கு குத்த வசதி. நல்ல அந்த மைதானம் அளவுக்கு முதுகும் இருக்கும். அசட்டுத்தனம். காந்தியே வந்தாலும் ரெண்டு போடுவார். நான் நின்ற இடத்தில சர்ரென வந்து ப்ரேக் போடுவான். அவ்வளவு எக்ஸ்பெர்டாம். நான் மயங்கி போய் நிற்பேன். அப்படி நடிக்கவாவது செய்யனும். என் பக்கம் வண்டி வந்தது . மணி என்ன எனக் கேட்டேன். நாலு ஆக பத்து நிமிஷம் என்றான். இன்னும் பத்து நிமிஷம்… .அதற்குள் நான் கற்று கொண்டு, முதுகில் வாங்கி கொண்டு. பேசாம குரங்கு பெடல் போதுமா? அடுத்த சுற்று ஆரம்பம். இந்த முறை பின்னால் வந்தவன் மறைந்து போனான். அது தெரியாத வரை எதோ ஓட்டினேன். அவன் இல்லை என்றவுடன். உடல் தளர்ந்தது. ஒரு நிமிஷத்தில் கைக்குள் வேர்வை. போ போ என்றான். குரல் கேட்டது. திரும்ப தைர்யம் இல்லை. வண்டியை போட்டுக் கொண்டு விழுந்தேன். ஹான்ட்ல் பார் வளைந்தது. அவனை காணோம். வண்டியைத் தள்ளி கொண்டு கடைக்குச் சென்றேன். இனி வண்டி தர மாட்டேன் என்றார். முட்டி வலியில் கை சதை பிய்ந்ததில் எதுவும் ஏறவில்லை. பைசா பாக்கிக்கு வீட்டுக்கு ஆள் அனுப்புவேன் என்றார். நான் சட்டை செய்யவில்லை. வீட்டுக்கு வந்து சைபால் தேடினேன். அதை திறப்பதற்குள் வலி ஆறிவிடும் போல் அவ்வளவு கெட்டி பாக்கிங். அப்பா குரல் கேட்டது. அய்யா ..வாசல்ல சைக்கிளில் காய் பை இருக்கு ..எடுத்துண்டு வா. சைக்கிளைப் பார்த்தேன். வலி மறைந்தது!

    Share
  • பாட்டி பெயர்

    -நிர்மலா ராகவன்

    முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததில் கொள்ளை மகிழ்ச்சி கோபுவுக்கு. ஆண்பிள்ளையானால், பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு வயதானகாலத்தில் பெற்றோர்களைத் தனியே தவிக்க விடுவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு.
    எல்லாரும் தன்னைப்போல் இருக்க முடியுமா? எவ்வளவோ வற்புறுத்தியும், அப்பா தான் வாழ்ந்த வீட்டைவிட்டு இவனுடன் வர மறுத்துவிட்டார். அதனால் என்ன? அவன் மனைவி தன் அம்மாவை மட்டுமின்றி, பாட்டியையும் அவர்களுடனேயே தங்க வைத்திருந்தாள்.

    பெண்களுக்குத்தான் இப்படி அரவணைத்துப் போகும் குணம் என்று யோசித்த கோபு மனைவி கர்ப்பமாக இருந்தபோதே அவள் வயிற்றுக்கருவிற்குப் பெயரும் நிச்சயித்துவிட்டான்.

    “குழந்தைக்கு என்ன பேருடா வைக்கப்போறே?” அப்பா கேட்டார்.

    ”பாட்டி பேருதான்!”

    அப்பாவுக்கு லேசான அதிர்ச்சி. “அந்தப் பேரையா வெக்கப்போறே!”

    “போங்கப்பா. ஒங்களுக்கு எப்பவுமே பாட்டியைக் கண்டா ஆகாது”.

    “அதுக்குச் சொல்லலேடா,” என்று எதுவோ சொல்ல ஆரம்பித்த அப்பாவை மேற்கொண்டு பேச விடவில்லை கோபு. “பாட்டி இத்தனை வயசாகியும் அவங்கம்மாவை தன்கூட வெச்சுப் பாத்துக்கறாங்க. ஏன், அம்மாகூடத்தான்! என் பொண்ணும் நாளைக்கு அப்படி இருப்பா!”
    மகள் வளர, வளர, அவளுக்கு எந்த குறையுமில்லாது பார்த்துக்கொண்டான் கோபு.

    மேல்படிப்புக்கு வெளிநாட்டுக் கல்லூரியில் உபகாரச்சம்பளத்துடன் இடம் கிடைத்தபோது அவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. ஒரே மகளின் நிழலில் எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தை வசதியாகக் கழிக்கலாம்.

    “ஒன் பொண்ணு எப்போ திரும்பி வராளாம்?”

    சோகமாக கணினியை முதியவர்பக்கம் திருப்பினான் கோபு. “எனக்கு அவ அனுப்பி இருக்கிற ஈ-மெயில். படிச்சுப்பாருங்கப்பா!”
    `எனக்கு இங்கேயே நல்ல வேலை கிடைத்துவிட்டது. இங்கு ரொம்ப குளிர். அம்மாவாலும் உன்னாலும் தாங்க முடியாது. அதனால என்ன! எப்போ வேணுமானாலும் ஸ்கைப்பில பாத்து பேசிட்டாப் போச்சு!

    இங்க என் பேர் ஒருத்தர் வாயிலேயும் நுழையறதில்லே. அதனால சுருக்கி வெச்சுக்கிட்டேன். லவ் யூ.
    ஸாம்’.

    படித்து முடித்த அப்பாவின் முகத்தில் சிறு புன்னகை. மகனைப் பார்த்துப் பரிதாபப்படாமலும் இருக்க முடியவில்லை.

    “ஏம்பா? ரெண்டு மூணு குழந்தை இருந்தா, யாராவது ஒருத்தரோட இருந்திருக்கலாம், இல்லியா? இப்போ அதுக்கும் வழியில்லாம போச்சு. நானும் அவளும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பாத்துக்கிட்டு..!” பெருமூச்செறிந்தான் கோபு.”

    “அதுக்குத்தான் நான் மோதல்லேயே கேட்டேன், எதுக்கு பாட்டி பேருன்னு”.

    அவனுக்குப் புரியவில்லை.

    “பாட்டி பேரு என்ன, சொல்லு!” அவனை மடக்கிவிட்ட பெருமிதத்துடன் அப்பா கேட்டார்.

    “சம்பூர்ணம். தெரியாத மாதிரி கேக்கறீங்களே!”

    “ஒங்க பாட்டி அவங்க அப்பா அம்மாவுக்கு பதிமூணாவது குழந்தை. அவங்களுக்கு முன்னாடி பிறந்த ஏழெட்டு சின்ன வயசிலேயே செத்துப் போச்சு. குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுக்கவும் அவங்களுக்குத் தோணலே. இனிமே குழந்தையே வேண்டாம்னு சம்பூர்ணம்னு பேரு வெச்சாங்க. அதாவது, முழுமை அடைஞ்சிடுச்சு அப்படின்னு. பாட்டிதான் கடைசி!”

    சம்பூர்ணம் என்ற பெயர் வைத்தால், அதற்குப்பின் குழந்தைகளே பிறக்காதா?

    முதல் குழந்தைக்கே அப்பெயரை வைத்து, வேறு குழந்தைகள் பிறக்கவே வழியில்லாது செய்துவிட்டது தன் தவறோ?

    `நீங்க ஏம்பா மொதல்லேயே என்னை எச்சரிக்கலே?’ என்று அப்பாவைக் கேட்க நினைத்து, பின் வாயை மூடிக்கொண்டான்.

    `நான் சொல்ல வந்ததை நீ எங்கே முழுசா கேட்டே?’ன்னு அவன் மேலேயே பழியைத் திருப்புவார்!

    “ஸாம் என்கிற பேருதான் நாகரீகமா இருக்கு. இல்லேப்பா?” என்றான் கோபு.

    Share