சைக்கிளும் வலியும்
-சேஷாத்ரி பாஸ்கர்
எனக்கு சைக்கிள் கற்று கொடுத்தவன் என்னை விட வயது ரெண்டு சின்னவன். அவன் எங்கு கற்று கொண்டான் என தெரியாது . மந்தவெளி பக்கம் ஒரு மைதானம் . சுமார் ஒரு வாரம் இருக்கும் . அவன் என்ன சொன்னளாலும் கேட்பேன். வாடகை நான் தான் தர வேண்டும். ஒரு மணி நேரத்தில் பெரும்பாலும் அவன்தான் ஒட்டுவான். கேள்வி கேட்க முடியாது. என்னை மதித்து யார் எனக்கு கற்று கொடுப்பார்? வாடகை வண்டியே தர மாட்டான். சுதர்சன் அவன் பெயர். முதுகில் குத்தி கொண்டே வருவான். வலி ஒரு பக்கம். இதில் அவஸ்தையில் எங்கே எதை கற்று கொள்வது. மற்றவர்க்கு ஒரு வாரம் என்றால் எனக்கு ஒரு மாதம். மர மண்டை அப்பவே! ‘நேர பார்’ என்பான். பெடல் செய்ய மறந்து விடுவேன். பெடல் செய்யும் போது பிரேக்கை பிடித்துக் கொள்வேன். வண்டி நகராத . அவனுக்கு குத்த வசதி. நல்ல அந்த மைதானம் அளவுக்கு முதுகும் இருக்கும். அசட்டுத்தனம். காந்தியே வந்தாலும் ரெண்டு போடுவார். நான் நின்ற இடத்தில சர்ரென வந்து ப்ரேக் போடுவான். அவ்வளவு எக்ஸ்பெர்டாம். நான் மயங்கி போய் நிற்பேன். அப்படி நடிக்கவாவது செய்யனும். என் பக்கம் வண்டி வந்தது . மணி என்ன எனக் கேட்டேன். நாலு ஆக பத்து நிமிஷம் என்றான். இன்னும் பத்து நிமிஷம்… .அதற்குள் நான் கற்று கொண்டு, முதுகில் வாங்கி கொண்டு. பேசாம குரங்கு பெடல் போதுமா? அடுத்த சுற்று ஆரம்பம். இந்த முறை பின்னால் வந்தவன் மறைந்து போனான். அது தெரியாத வரை எதோ ஓட்டினேன். அவன் இல்லை என்றவுடன். உடல் தளர்ந்தது. ஒரு நிமிஷத்தில் கைக்குள் வேர்வை. போ போ என்றான். குரல் கேட்டது. திரும்ப தைர்யம் இல்லை. வண்டியை போட்டுக் கொண்டு விழுந்தேன். ஹான்ட்ல் பார் வளைந்தது. அவனை காணோம். வண்டியைத் தள்ளி கொண்டு கடைக்குச் சென்றேன். இனி வண்டி தர மாட்டேன் என்றார். முட்டி வலியில் கை சதை பிய்ந்ததில் எதுவும் ஏறவில்லை. பைசா பாக்கிக்கு வீட்டுக்கு ஆள் அனுப்புவேன் என்றார். நான் சட்டை செய்யவில்லை. வீட்டுக்கு வந்து சைபால் தேடினேன். அதை திறப்பதற்குள் வலி ஆறிவிடும் போல் அவ்வளவு கெட்டி பாக்கிங். அப்பா குரல் கேட்டது. அய்யா ..வாசல்ல சைக்கிளில் காய் பை இருக்கு ..எடுத்துண்டு வா. சைக்கிளைப் பார்த்தேன். வலி மறைந்தது!