-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 26 – புலால் மறுத்தல்

 

குறள் 251:

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

தன் ஒடம்ப வளக்குததுக்காக மத்த உசிரு குடியிருக்க ஒடம்ப தின்னுதவன் மனசுக்குள்ள இரக்கம் எப்டி இருக்கும்?

குறள் 252:

 பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு

பொருளுடையவரா இருக்குத சிறப்பு அத வச்சி காப்பாத்தாதவங்களுக்கு இல்ல. அருள் உடையவரா இருக்குத சிறப்பு மாமிசம் தின்னுதவங்களுக்கு இல்ல.

குறள் 253:

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை யுண்டார் மனம்

சண்ட போட ஏதுவா கொல செய்யுத ஆயுதத்த  வச்சிருக்கவனுக்கும், மத்த உசிரு குடியிருக்க ஒடம்ப ருசிச்சு சாப்பிடுதவனுக்கும் மனசுல இரக்க கொணம் இருக்காது.

குறள் 254:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்

ஒரு உசிர கொல்லாம இருக்குதது அருள்.  கொல்லுதது அருளில்லாத தன்ம. அதனால மாமிசம் சாப்பிடுதது அறம் ஆவாது. .

குறள் 255:

உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு

மாமிசம் சாப்புடாதவங்களாலதான் பல உசிருங்க சாவம வாழுது.  சாப்பிடுதவன நரகம் முழுங்கிப் போடும். வெளிய விடாது.

குறள் 256:

தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

மாமிசம் சாப்பிடுததுக்காக உசிர கொல்லுதவங்க ஒலகத்துல இல்லன்னா அத விக்குதவங்களும் இல்லாம போயிடுவாங்க.

குறள் 257:

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்

மாமிசம் ங்குதது இன்னொரு உசிரோட உடற்புண் னு புரிஞ்சவங்க அத சாப்புடாம இருக்கணும். .

குறள் 258:

செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

மாசுமருவில்லாத மனசு இருக்குதவங்க உசிரு போன ஒடம்பான மாமிசத்த சாப்பிட மாட்டாங்க.

குறள் 259:

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று

நெய்யயும் மத்த பொருளயும் வச்சி ஆயிரம் யாகம் செய்யுதத விட சாப்பிடுததுக்காக ஒரு உசிர கொல்லாம இருக்கது நல்லது.

குறள் 260:

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்

மாமிசம் சாப்பிடாம அதுக்காக மத்த உசிர கொல்லாம இருக்கவன ஒலகம் கையெடுத்து கும்பிடும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.