வலி (சிறுகதை)
சு.திரிவேணி, கோயம்புத்தூர்
“இங்க பாரும்மா.. ஒரு மனுஷனுக்கு திறமைதான் முக்கியம். ஆனால் இந்த உலகத்தில் வாழறதுக்கு திறமை மட்டும் பத்தாது. கொஞ்சம் சாமர்த்தியமும் வேணும். சொல்றத புரிஞ்சுக்கோம்மா… அப்பா உன் நல்லதுக்குதான்டா சொல்லுவேன்!”
அப்பாவை மெல்ல நிமிர்ந்து பார்த்தேன். என் கண்களிலிருந்து சிந்திய கண்ணீர் அவர் நெஞ்சைத் தொட்டிருக்க வேண்டும்.
“உனக்கு வரையறதுல ஆசை இருக்கு. திறமையும் இருக்கு! ஆனா வாழ்க்கைனு வர்றப்போ அதெல்லாம் ஒத்து வராது. இப்ப இருக்கிற நிலைமைக்கு பிஸினஸும் கம்ப்யூட்டரும் தான் நல்லா போயிட்டு இருக்கு. நீ அதைப் படிக்கறது தான் நல்லது”
அவரைச் சொல்லியும் குற்றமில்லை. என்னுடைய ஓவிய ஆசைக்கு ஆரம்ப காலங்களில் எல்லாம் எந்தத் தடையும் சொல்லாமல் ஊக்குவித்தவர்தான். நாளாக நாளாக, நான் ஓவியத்தின் மீது தீராக் காதல் கொண்டு பிரஷும் கையுமாக அலைய, அவருக்கோ அது வெறுப்பாகத் தொடங்கியது.
“இதெல்லாம் பொழுதுபோக்கா வேணா செய்யலாம். சோத்துக்கு உதவாது. போய்ப் படிக்கிற வழியைப் பாரு!” என்று அவர் அறிவுரை சொல்லத் தொடங்கியதும் நான் கொஞ்சமாய் அதிர்ந்தேன்.
அவர் நிலைமையிலிருந்து யோசித்தால் அவர் சொல்வதில் தவறில்லைதான். அண்ணன் ஐ.டி முடித்துவிட்டு ஆரம்பத்திலேயே 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் போது, என்னை மட்டும் வருமானம் இல்லாத துறையில் தள்ள அவருக்கு மனமில்லை.
அண்ணனுக்கு இணையாக என்னையும் படிக்க வைக்க நினைக்கும் அவரை நினைத்தால் எனக்குப் பெருமையாகத்தான் இருந்தது. அதே சமயம் என்னுடைய லட்சியம் என்று கூடச் சொல்ல முடியாது; வெறி என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஓவியக் கலையை விட்டு ஒரேயடியாய் விலகிட எனக்கும் மனமில்லை. இதன் மூலமாகவும் சம்பாதிக்க முடியும் என்று காட்டினால் அவர் மனம்
மாறுவார் என்று நம்பினேன்.
தங்க நகை டிசைன் செய்யும் போட்டியில் கலந்து கொண்டு 5000 ரூபாய் முதல் பரிசு பெற்றபோது “ஸ்கூல்ல படிக்கும்போதே எவ்வளவு திறமை!” என அனைவரும் பாராட்ட, கொஞ்சம் பெருமையுடனும் நிறைய கலக்கத்துடனும் தலையசைத்துச் சென்றார் அப்பா.
லயன்ஸ் கிளப் இன் கிளே மாடல் வடிவமைப்புப் போட்டியில் முதலாவதாக வந்து 2000 ரூபாய் பரிசை வென்றேன். இரண்டு போட்டிகளிலும் பரிசு வழங்க வந்தவர் மிகப்பெரும் ஓவியரான மதன். ஓவியத்தில் ஆர்வம் உடைய எல்லோருக்குமே அவர்தான் இன்ஸ்பிரேஷன். எங்களுக்கு எல்லாம் கடவுள் போல!
அப்படிப்பட்டவர் எனக்குப் பரிசு கொடுக்கும் போது, அங்கிருந்த எனது ஓவியத்தைப் பார்த்து புருவங்களை உயர்த்தியதையே நான் பெரும் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அவரோ என் தோளில் தட்டிக் கொடுத்து அந்த ஞாயிறு அவர் வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துச் சென்றார்.
கோவிலுக்குச் சென்று தெய்வத்தை நேரில் பார்க்கப் போகும் பக்தனைப் போல நானும் போனேன்.
“வாம்மா! வா! வா! இத்தனை சந்தோஷத்துடன் இந்த உயர்ந்த மனிதர் என்னை ஏன் வரவேற்க வேண்டும்? என் ஓவியத்தைப் பற்றிக் கொஞ்ச நேரம் பாராட்டியவர் தன்னுடைய ட்ராயிங் ரூமுக்கு என்னை அழைத்துச் சென்றார்.
ரூமா அது? அது ஒரு கோயில்! உண்மையிலேயே அந்த இடம்தான் சொர்க்கம்! சந்தோஷத்தில் அங்கேயே உட்கார்ந்து அழ வேண்டும் போலிருந்தது எனக்கு. அவரும் நானும் பேச ஆரம்பித்தோம்.
இத்தாலியின் வால்காவிலிருந்து நம் ரவிவர்மாவிலிருந்து, எல்லாம்… எல்லாம்… பேசினோம். என்னுடைய நிறைய வினாக்குறிகள் அவரால் ஆச்சரியக்குறிகளாக மாறின.
“சார்! ஒரு ஓவியத்துக்கு எது முக்கியம்? இருக்கிறதை அப்படியே காட்டுவதா? அல்லது அதை அழகாக்கிக் காட்டுவதா?”
“இரண்டுமே ஓவியத்துக்கு உயிர் தாம்மா! ஒரு சில இடங்களில் அழகு முக்கியம். ஒரு சில இடங்கள்ல உண்மை முக்கியம். இப்ப உதாரணத்துக்கு, ஒரு மல்லிகைத் தோட்டத்தை நீ வரையும் போது அழகு முக்கியமா இருக்கும். ஆனால் நல்லா சுட்டெரிக்கும் வெயில்ல, கட்டை வண்டியை ஒரு வயசானவர் இழுத்துட்டு வர்ற காட்சியை வரையும் போது, அவர் முகத்தில சின்னச் சின்னதா இருக்கிற வியர்வைத் துளியைக் கூட விடாம அப்படியே தான் வரையணும். அந்தக் காட்சியை அழகுபடுத்த
முயற்சி செஞ்சா அது அபத்தமாயிடும். எந்த ஓவியம்னாலும் அதோட ஒரிஜினாலிட்டி மாறக் கூடாது. அதுதான் முக்கியம்”.
“சார்! நான் நிறைய ஓவியங்களைப் பார்த்திருக்கேன். ரொம்ப அழகா இருக்கும்; ஆனாலும் நம்ம மனசுக்கு நெருக்கமாக இல்லாமல் ஏதோ ஒரு ‘கேப்’ ஓவியத்திற்கும் நமக்கும் நடுவுல இருக்குற மாதிரி தோணும். ஏன் அப்படி?”
என்னுடைய எந்தக் கேள்விக்கும் ஒரு சின்னப் புன்சிரிப்புடன் பதிலைத் தொடங்கும் அவர், இப்போது மட்டும் ஒரு ஆச்சரியப் பார்வை பார்த்தார்.
“நீ வரையறதை ரொம்ப அதிகமாகவே நேசிக்கத் தொடங்கி இருக்கேன்னு புரியுது. இல்லாட்டி இந்த உணர்வோ, கேள்வியோ தோணாது. நல்லா கவனிம்மா! இப்ப நான் சொல்லப் போவதுதான் ஓவியத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம், சரியா? இப்ப உன்னை மாதிரி ஒரு சின்ன பொண்ணு ஒரு பூனைக்குட்டி கூட விளையாடுது: அப்ப அது முகம் பூராவும் சந்தோஷம் பரவியிருக்கும்! அதே பொண்ணு சர்க்கஸ்ல சிங்கத்தின் வாய்க்குள்ள தலையை விட்டு வெளியே எடுக்கிறவரை பார்க்குது; அப்ப அந்த பொண்ணோட கண்ணில் மட்டும் ஒரு பெரிய ஆச்சரியம் தெரியும்! ஸ்கூல்ல, ஏதோ ஒரு போட்டியில ஜெயிச்ச கோப்பையை வாங்கிட்டு வந்து காட்டும் போது அந்தக் குட்டிப் பொண்ணு முகத்துல, ரொம்ப முக்கியமா.. அதோட கண்ணுல ஒரு பெருமிதம் தெரியும்! ‘சாதித்தேன் பாரு’ன்னு அந்தக் கண்ணு சொல்லாமல் சொல்லணும்! அது தான்.. அந்த உணர்வுதான் ஓவியத்தில் ரொம்ப முக்கியம்! அதை நுட்பமாகக் காட்டிட்டா அவர்தான் சிறந்த ஓவியர்!” என்று சொல்லிக்கொண்டே போனவர், இடையில் டெலிபோன் கூப்பிட எழுந்து போனார்.
அவர் மனைவியும் பிஸியாக இருக்க, டீபாய் மேல் கிடந்த பேப்பரும் பென்சிலும் என் கண்ணில் பட்டது. மதன் சாரை உலகம் தெரிந்த ஒரு பாசமான அம்மாவைப் போலவும் அவரை நோக்கி ஓடும் ஒரு குழந்தையாக என்னையும் கற்பனை செய்து வரைந்து பார்த்தேன். என் கண்களில் அவர் சொன்ன அந்த ‘உணர்வு’ தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கும் போது பின்னாலிருந்து “ஃபென்டாஸ்டிக்!” என்று மதன் சாரின் குரல் கேட்டது.
“நீ ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா வரைஞ்சுகிட்டு இருந்த.. உன்னை டிஸ்டர்ப் பண்ண மனசு இல்லாம நீ வரையறதை பின்னால நின்னு பார்த்துட்டு இருந்தேன். உண்மையைச் சொல்லனும்னா எனக்கு உன்னப் பார்த்தா ஆச்சரியமா இருக்கும்மா! உன்னோட இந்த அபாரமான திறமை கடவுள் உனக்குக் கொடுத்த வரம்! தயவுசெய்து இதை வீணாக்கிடாதம்மா! உன்னால நிறைய சாதிக்க முடியும்! நீ அதுக்காக தான் பொறந்திருக்க! நல்லா கத்துக்கோ! ஆயில் பெயிண்டிங், கலர் மிக்சிங், டார்க் கலர், லைட் கலர், இருட்டு ஓவியம், நாட்டுக்கு நாடு, கலைஞனுக்கு கலைஞன் வித்தியாசம் இருக்கு! நீ எல்லாத்தையும் தெரிஞ்சுக்கோ! ஒரு புது அவதாரம் எடு! வந்தோம் இருந்தோம்னு இருந்துட்டு திடீர்னு
ஒரு நாள் காணாமல் போறதில்லை வாழ்க்கை! நமக்கப்புறமும் நம்மைப் பத்தி ஒரு சரித்திரம் இந்த உலகத்துல இருக்கணும். அதுதான் வாழ்க்கை. உன்னால அப்படி வாழ முடியும்மா!”
என் மனத்தில் தெய்வமாய் இருந்தவர் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டார்.
அதுவரை வெறும் ஆசையாக இருந்த ஓவியக் கனவு அதன் பிறகு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. ஆனால் இப்போது அப்பாவோ.. என்னை ஓவியக் கல்லூரியில் சேர்ப்பதில்லை எனப் பிடிவாதமாக இருக்கிறார். வேறு வழியும் தெரியவில்லை. என்னுடைய ஓவிய ஆசைக்கு சமாதி கட்டி விட்டு, கல்லூரியில் சேர்ந்தாகிவிட்டது!
எல்லோரும் முதல் நாளில் ஏக எதிர்பார்ப்புகளுடன் போக, நானோ மனம் முழுக்க என் கனவைப் புதைத்துவிட்ட வேதனையைச் சுமந்து கொண்டு போனேன். ஓவிய ஆசையைத் தள்ளி வைக்கவேண்டும் என்ற எண்ணமே என் இதயத்தை அறுப்பது போல் இருந்தது. வருமான வரி எனக்கு வரவே வராமல் போனது. அக்கவுண்ட்ஸ் அறிவோ, பாதியிலேயே நின்று போனது. கல்லூரிப் படிப்பை முடிக்காமலே மூன்று ஆண்டுகள் முடிந்தன.
“காமர்ஸ் எடுத்துட்டு அக்கவுண்ட்ஸ் வரலைன்னா நீ எல்லாம் உருப்படுவியா? ஒரு டிகிரி முடிக்கத் துப்பு இல்ல! வேற என்ன செஞ்சு கிழிக்கப் போற? உன்னைப் பெத்த கடமைக்கு எங்கேயாவது கல்யாணம் பண்ணித் தள்ளித் தொலைக்காமல் போனேன் பாரு… என் தப்பு.. தத்தி!… தத்தி!”
அப்பாவின் வார்த்தைகளால் எனக்கு எதுவுமே வராது என்ற எண்ணம் என்னுள் ஆழமானது. இனி உருப்பட மாட்டேன் என எல்லோராலும் முத்திரை குத்தப்பட்ட நான் திருமணம் செய்து அனுப்பப்பட்டேன். ஒரு அழகான பெண் குழந்தை இப்போது எனக்கு! குடும்பம் மட்டுமே உலகமாகிப் போனது. என் அடையாளமே மாறிப் போய், முகவரி இல்லாதவளாகிப் போனேன் நான்.
“எதுக்குமே நான் லாயக்கில்லை. இதையாவது ஒழுங்கா செஞ்சா போதும்”
என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். இப்போது என் பிள்ளை அனைத்துப் பாடங்களிலும் முதலாவதாக வருகிறாள். கணக்கில் புலி! அவளும் அவள் அப்பாவும் போரடித்தால் கணக்கில் புதிர் போட்டு விளையாடுகிறார்கள். இவள் என் அப்பாவுக்குப் பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
ஸ்கூல் முடிந்து அவள் வரும் நேரம் தான். இன்னைக்கு அவ ஸ்கூல் பங்க்ஷன்! எப்போதும் போல கோப்பையுடன்தான் வருவாள். நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே,
“அம்மா இங்க பார்!”
கோப்பையைக் கையில் தூக்கிக் காட்டியபடி ஓடி வந்தாள். ஷாக் அடித்தது போல் என் உடம்பு பூராவும் ஏதோ அதிர்வு தோன்றியது.
‘தன்னோட ஸ்கூல்ல எதுலயாவது ஜெயிச்சு கோப்பையை வாங்கிட்டு வந்து காட்டும்போது அந்த குழந்தை முகத்தில… முக்கியமா கண்ணுல… ஒரு பெருமிதம் தெரியும்!’
மின்னல் அடித்த மாதிரி மதன் சாரின் வார்த்தைகள் என் மனத்துக்குள்.
‘உன்னால நிறைய சாதிக்க முடியும்! நீ அதுக்காக தான் பிறந்து இருக்க!’
என்ன ஆகிவிட்டது எனக்கு? ஏன் இப்படி ஆனேன்? எவ்வளவு பெரிய கலையை எப்படி அழிய விட்டேன்?
ஒரு புதுப் பரவசத்துடன் என் மகளைப் பார்த்தேன். அவள் கண்களில் அவர் சொன்ன அந்த ‘உணர்வு’! சீக்கிரமே என் வேலைகளை முடித்துக்கொண்டு, பரபரப்புடன் ஒரு சார்ட் பேப்பரை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன். மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா?
என் மகளின் முகம் அப்படியே சார்ட்டில் பதிவானது. கண் மட்டும்தான் பாக்கி! முயற்சி செய்தேன்.
இல்லை… அழித்துவிட்டு மீண்டும் முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.
மீண்டும்.. மீண்டும்.. மீண்டும்..
என் கைகளை விட அதிகப் பரபரப்பில் மனம் இயங்கியது.
கடைசியில்…
கையில் வெற்றிக் கோப்பையை ஏந்தியபடி கண்களில் பெருமிதத்துடன் என் மகளின் முகம்!
என்னை பிரமிப்பாய்ப் பார்த்தபடி பின்னால் என் குடும்பத்தினர்!
என் கலையை இழக்க நேர்ந்த நாள், கல்லூரியில் தோற்றுத் திரும்பிய நாள், இயலாமைக்குள் நான் புதைந்து கிடந்த நாட்கள், வேதனையுடன் என் கலை ஆர்வத்தை விட்டு விலகிய நொடிகள் என எல்லா வலிகளையும் என் மகளின் உருவத்தில், ஜெயித்து விட்ட கர்வமாய் மாறி இருந்தது!
நான் கைவிட்ட போதும் என் திறமை என்னைக் கைவிடவில்லை.
என் ஆறாத ரணத்தை, வலியை வென்று காட்டியது அது!
படத்துக்கு நன்றி – https://ta.wikipedia.org/wiki/
அருமை
அருமை.வாள் போன்ற வடிவமைப்பு.