வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்

பழுதற்ற பவுத்திர வரிகள் தான்!
உழுது உலகையெழுப்பும் வரிகள் தான்!
எழுது! எழுது! எழுத்து வாசிக்கப்படுகிறதா!
எழுதுவது யாரெனப் பார்ப்பதே தோல்வி
உழுத்த சிபாரிசு பேதம் பார்த்தல்
எழுத்தைக் காட்டினுள் வேகமாய்த் தள்ளுது.
எழுத்திற்கு வயதில்லை பிறகு ஏன்
எழுதுபவன் இளமையா, முதுமையாவென ஒப்பீடு!

தொழுதிடும் வரிகள் நேர்த்தியைப் பார்!
வழுவற்ற வரிகளா! கம்பன் பாரதியின்
விழுதுகளா  என்று தமிழைப்  பார்!
கழுவி ஊற்றாதே கருத்துடை எழுத்துகளை!
எழுத்து நான்கு வயதிலொரு கூறு
எழுமையாம் நாற்பது வயதிலொரு கூறு.
எல்லாமே இனிமை இல்லையது சேறு.
வல்லமையோடு  வாரியெடு இது ஆறு!

வாரியிறைக்க குளம் குட்டையல்ல
வல்ல தமிழை நெருங்கி அண்டு!
கொல்லாது குடையும் இன்ப வண்டு!
இல்லாத ஆனந்தம் நிச்சயம் உண்டு!
நல்ல எழுத்து தலைநிமிர்ந்து நிற்கும்
அல்லல் செய்யும் கரகாட்டத் தினவெடுப்பு
நில்லாது எழுத்தாணி எழுதி வடித்திடும்
நெல்லாக விளைந்து நூலாகி உருவெடுக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.