a-handsimages

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா…… மெல்பேண் … ஆஸ்திரேலியா

நிலத்துக்கும் சண்டையடா நீருக்கும் சண்டையடா
நிலமுனக்குச் சொந்தமல்ல நீருனக்குச் சொந்தமல்ல
இயற்கையினைப் பங்குபோட்டு இணக்கமின்றி இருந்துவிடின்
நிலத்தினிலே நிம்மதியை எப்படித்தான் காணுவதோ?

ஓடிவரும் நீரென்றும் ஒருபக்கம் பார்ப்பதில்லை
வீசிவரும் காற்றென்றும் வீண்வாதம் செய்வதில்லை
பரந்துநிற்கும் கடல்கூடப் பாரபட்சம் பார்ப்பதில்லை
பார்மீது உள்ளவரோ பகைகொண்டே வாழுவதேன்?

பூமிதனைக் குடைந்து புதையல்பல எடுக்கின்றார்
காடுதனை அழித்துக் காசுபல தேடுகிறார்
நாடுதனை அழித்து நாகரிகம் என்கின்றார்
கேடெல்லாம் செய்துவிட்டுக் கீதைபற்றிப் பேசுகிறார்!

ஓடிவரும் நீரதனை உருப்படியாய் ஆக்கிவிடின்
நாடெல்லாம் நலன்விளையும் நன்றாகப் புரிந்திடுங்கள்
நீரதனைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை
பாருக்குப் பரிசாகக் கிடைத்தநீரைப் பறிக்கலாமா?

படித்திருந்தும் பண்பறியார் பறிப்பதையே எண்ணுகிறார்
குடிக்கின்ற நீரையுமே பறித்துவிட எண்ணுகிறார்
நடிக்கின்ற நாடகத்தை விட்டெறிந்து விட்டுவிட்டு
நாடுபற்றி எண்ணிவிட்டால் நலம்வந்து சேர்ந்துவிடும்!

கோபம்வந்தால் கொளுத்துவதும் கொலைசெய்து நிற்பதுவும்
வாழ்நாளில் நடப்பதற்கு வழிவகுத்தல் நல்லதல்ல
பாவம்செய்து வாழ்ந்துவிடில் பலனேதும் வருவதில்லை
ஆதலால் யாவருமே அமைதிபற்றி நினைத்திடுவோம்!

பலமொழிகள் பேசிடினும் பசியெவர்க்கும் ஒன்றேயாம்
பலவினமாய் இருந்தாலும் பசித்தவுடன் உண்டிடுவார்
இவையாவும் சமமாயின் ஏன்நீரைத் தடுக்கின்றார்
இவர்களது மனம்திருந்த இறைவாநீ அருளிவிடு!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.