சிதம்பரம் (சிறுகதை)

Old Evening Mirroring Building Waters Sky Water
-பாஸ்கர் சேஷாத்ரி
—————
அவன் அந்த இடத்தைக் காட்டிய போது எந்த சுவாரஸ்யமும் இல்லை. அகற்றப்படாத குப்பை, மலம் என, நெருங்க முடியாத அளவுக்கு ஒரே துர்நாற்றம்.
டேய், அந்தப் பக்கம் போகாதே என்றதை அவன் சட்டை செய்யவில்லை.
வாடா என்றான். போய் நின்றேன். அழுக்குக் கலவையாய் ஓடும் நீரோட்டம். சுற்றிலும் பாசி. எக்கச்சக்க செடிகள். மிதக்கும் டயர், சேற்றுப் படுகை.
பாசு, நம்புவியா… இங்கிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் கட்டு மர சவாரி. டப்பா கட்டு கட்டி கையில் தள்ளு குச்சியை வைத்துக்கொண்டு அவர்கள் தள்ளும் வேகம் நீரைக் கிழிக்கும். இரண்டு பேர். இரண்டு பக்கம். உள்ளே நாலு பேருக்கு மேல் இடமில்லை. குழந்தைகளை அனுமதிக்க மாட்டார்கள்.. எதிர்ப் பக்கம் உப்பு மூட்டை. இந்தப் பக்கம் சுள்ளிக் குச்சி.. ஓரத்தில குடம் தண்ணி. நடுவுல காய்கறி மூட்டை.. பெண்டிர் ஒரு பக்கம், பேச்சு பெரிதாய் இருக்காது. பூ தொடுத்துக்கொண்டு ஒரு அணி. இன்னொரு அணி மந்தார இலைகளைப் பின்னிக்கொண்டு. நாட்டமாய் எல்லோரும் அவரவர் வேலை செய்வார்.
நீ போயிருக்கியா?
என்னெல்லாம் உள்ள விடலை. நீச்சல் தெரியும்னு அப்பா சொன்னார்.
ஆனா பட்டாமணியம் ரொம்ப கண்டிப்பு. அவர் பேத்தியைக் கூட ஏத்தல.
எவ்வளவு ரூபாடா
ரூபாவா? ரெண்டணா…. நினைச்சா இறங்க முடியாது. விசில் எல்லாம் கிடையாது. தோ இங்க இந்தக் கட்டடம் முன்னால காய்கறிச் சந்தை. அதுக்குப் பேரே தண்ணித்துறை மார்கெட். பாஷ்யம் அய்யங்கார் கட்டினது. நூத்திப் பத்து வருஷம் ஆச்சு. எட்டரை கிரௌண்ட். அவர் ஜட்ஜ். நேர்மைக்குப் பேர் போனவர்.
காய்கறி வணிகம், கணக்குல கெட்டியாய் இருந்தா தான் சமாளிக்க முடியும். ஆளும் மாறும், விலையும் மாறும். புதினாவை உடம்பில் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்தால் அசதி தெரியாது. வாணிபம் அவர்கள் உடம்பில் ஓடும் ரத்தம். நேர்மைக்குப் பேர் போனவர்கள். அம்பதுக்கு அப்புறம் வந்த தலைமுறை பணத்தைப் பெரிசாகப் பார்த்தது. அதுதான் வீழ்ச்சி. கண்ணியம் போச்சு. மேல் விலைக்கு வித்தவன் முடக்கு வாதம் வந்து செத்துப் போனான். ஆனாலும் யாரும் மாறல. சாவு மனுஷனை மாத்தும்னா இன்னிக்கு ஊர்ல பாலும் தேனும் ஓடும். அதெல்லாம் தாவார பேச்சு .
எப்படிடா இதெல்லாம் உனக்குத் தெரியும்? என் வயசுதான்டா உனக்கு?
எல்லாம் எங்க தாத்தன் சொன்னதுரா. கண்கள் கலங்கின.
சிதம்பரம் அழுது, நான் அப்போது தான் பார்க்கிறேன். தோள்கள் கொஞ்சம் நடுங்கின. இது நிஜ அழுகை. அறுபது வயதில் பாசாங்கு செய்ய முடியாது.
டேய், ஆர் யு ஓகே?
நல்ல நினைவாற்றல் உனக்கு .
அது வலிடா என்றான்.
ஏன்?
அந்தப் பரிசிலை ஓட்டியது என் தாத்தன். முடக்கு வந்து செத்தவன் என் அப்பன்.
என் உடலும் உள்ளமும் மொத்தமுமாய் சிதம்பரமாய் இருந்தது…