ஈகோவும் அகங்காரமும்
-நிர்மலா ராகவன்
நலம்… நலமறிய ஆவல் (165)
“எனக்கு ஈகோ (ego) இருக்கு!” பெண்பார்க்க வந்தவரிடம் நடிகை ரேவதி கூறியது – அவர் தன்னை மறுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில். மௌன ராகம் படத்தில். ஆனால், அது தகாத குணமல்ல.
பசியோ, தூக்கமோ, ஈரமோ, தனக்குத் தேவையானது கிடைக்கும்வரை குழந்தை ஓயாமல் அழுவது ஈகோவால்தான். பிறந்தவுடனேயே இயற்கையாக அமைந்திருக்கும் தன்மை இது.
(அழுகைதான் குழந்தையின் மொழி. கவனித்துக் கேட்டால், ஒவ்வொரு தேவைக்கும் வித்தியாசமான அழுகை ஒலிப்பது புரியும்).
சற்றே வளர்ந்தபின், பிறருடன் எப்படிப் பேசிப் பழக வேண்டும் என்று தீர்மானிக்கிறது ஈகோ. வெளியுலகத்தின் தொடர்பை மனத்தில் கொண்டு, தகுந்த முடிவுகள் எடுக்க வழிசெய்ய இன்றியமையாத குணம் இது.
இப்போதெல்லாம் இதை ஏன் தகாத குணம் என்று பழிக்கிறோம்?
முறைப்படி நடந்து, தனக்கு வேண்டியது கிட்டாவிட்டால், `பிறரது உணர்ச்சிகளுக்கு எதற்காக மதிப்புக் கொடுப்பது?’ என்று தோன்றிப் போக, எப்படியாவது நினைத்ததை அடைய முனையும்போது ஈகோ பிரச்னைக்கு உரியதாக ஆகிவிடுகிறது. அந்த நிலையில் அறிவு மங்கிவிடுகிறது.
“அறிவுக்கு நேர் எதிரான விகிதாசாரம் (inversely proportional) கொண்டது ஈகோ!” (ஐன்ஸ்டீன்)
இதனால்தான் பிறர் செய்வது பொறுக்காவிட்டால், அது தவறாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றிப் போக, தண்டனை கொடுக்கிறோம்.
கதை
ஸலீனா எங்கள் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களின் பொதுவறையில் உட்கார்ந்திருந்தாள். அவளருகே கட்டொழுங்கு ஆசிரியையான இஸ்னாயானி நின்றிருந்தாள்.
ஸலீனாவின் குற்றம்: காதில் இரு துளைகள்!
“நம் மதம் இதை அனுமதிப்பதில்லை!” என்று இஸ்னாயானி கண்டிப்புடன் கூறியது எல்லாருக்கும் கேட்டது.
`ஏதோ சுவாரசியமான விஷயமாக இருக்கும் போலிருக்கிறதே!’ என்று பலரும் தத்தம் வேலையை விட்டுவிட்டு, அந்த இருவரையும் சூழ்ந்துகொண்டார்கள்.
பதிலுக்கு, “அம்மா ஒன்றும் தடை சொல்லவில்லையே!” என்று துடுக்காகக் கேட்டாள் அப்பெண்.
அவ்வளவுதான்! மற்றவர்களும் வாய்க்கு வந்ததைக் கூறி, ஸலீனா செய்தது எவ்வளவு பெரிய பாவ காரியம் என்பதுபோல் பேச, அதற்கு மேலும் பொறுக்க முடியாத அப்பெண் கதறி அழ ஆரம்பித்தாள்.
“ஐயோ பாவம்!” என்றது ஒரு குரல்!
தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் அப்பெண் நடந்திருக்கிறாள். பதின்ம வயதில், எல்லாப் பெண்களுமே தம் தோற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.
அதை மறந்து, `இவள் நம் பேச்சை மீறுவதா!’ என்று சம்பந்தமே இல்லாத மற்ற ஆசிரியைகளின் ஈகோ தூண்டிவிட, அவளை அழவிட்டார்கள்.
இந்த ஈகோதான் `நான்’ என்ற அகங்காரம். அது பிறரது உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை.
“செய்வது தவறு என்று தெரிந்தும், அது சரிதான் என்று சாதிக்கிறார்களே, சில ஆசிரியைகள்! ஏன் அப்படி?” பிறிதொரு சந்தர்ப்பத்தில் கைரி என்ற மாணவன் என் மேசையருகே வந்து கேட்டான். (என் வகுப்பில்தான் எது வேண்டுமானாலும் கேட்கும் சுதந்திரம் இருந்ததே!)
“இவர்களை power crazy என்போம்,” என்றேன், ஒரு சிறு சிரிப்புடன்.
புரிந்ததுபோல், கைரி தலையாட்டினான். “இந்தப் பள்ளியில் நிறைய power crazy இருக்கிறார்கள்!”
என் சிரிப்பு விரிந்தது.
அப்படிப்பட்டவர்களுக்கு எப்போதும் பிறர் தம்மைக் குறை கூறிவிடக்கூடாது என்ற பதைப்பு எழும். அதனால் தாம் முந்திக்கொள்கிறார்கள்.
நாம் சொல்வதையோ, செய்யும் காரியத்தையோ பிறர் `தவறு’ என்று பழித்தால், அதிலுள்ள உண்மையை ஆராய்வது அறிவுடைமை. `இன்னும் சிறக்க வேண்டும்,’ என்ற எண்ணம் இல்லாது ஆத்திரம் அடைந்தால், பிரச்னை நம்மிடம்தான்.
சிலர் ஏன் எப்போதும் நம் குறையையே பெரிதுபடுத்தி, நாம் கேளாமலேயே அறிவுரை கூறுகிறார்கள் என்று அமைதியாக யோசித்தால், அநேகமாக, அது பொறாமையின் விளைவாகத்தான் இருக்கும் என்பது புலனாகும்.
இவர்கள் பேச்சை அலட்சியம் செய்தால் பிழைக்கலாம். இல்லையேல், நம் நிம்மதிதான் கெடும்.
இவர்களுக்கு நம் நலன் முக்கியமல்ல. நாம் எதிலும் அவர்களை மிஞ்சிவிடக் கூடாது என்பதில்தான் குறி.
ஒருவர் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கும் உயர்வான எண்ணம் ஆட்டங்காண, பிறர் ஏதாவது செய்தாலோ, சொன்னாலோ, ஈகோ தலைதூக்குகிறது. விளைவு: கோபம், வாக்குவாதம், அல்லது பாராமுகம்.
கதை 1
“எனக்கு எவ்வளவு காதலிகள் இருக்கிறார்கள் தெரியுமா?” என்று மணமான ஒருவன் பெருமை பேசுவான், தான் கவர விரும்பும் பெண்களிடம்.
பணத்தைக் கொடுத்தாவது பெண்களை நாடியவனுக்கு தன்னிடம் உள்ள ஏதோ ஒன்றைப் பார்த்துத்தான் எல்லாப் பெண்களும் மயங்குகிறார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எழுந்தது.
அதனால், அவனை ஒரு பெண் நிராகரித்தபோது, அடக்கமுடியாத ஆத்திரம் எழுந்தது. அவளுக்கு நிறைய தொல்லை கொடுத்தான்.
அவனுக்குச் சரி, தவறு எல்லாம் ஒரு பொருட்டல்ல. தனக்கு வேண்டியதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற உந்துதலே அவனை ஆட்டிவைத்தது.
இவனைப் போன்றவர்கள் ஏன் திருமணம் செய்துகொண்டு, அந்த அபாக்கியவதியான மனைவியையும் படுத்த வேண்டும்? ஈகோ அவனுடைய வியாதி. ஆனால், பாதிக்கப்பட்டவள் அவன் மனைவி.
கதை 2
புதிய தம்பதிகள் அவர்கள். எல்லாருக்கும் நடப்பதுபோல், அவர்களுக்கு இடையேயும் பூசல் வந்தது.
அவள் குறை கூற, அவன் கத்த, நிலைமை மோசமாகியது. ஒரு வாரம் இருவருக்கும் மௌன விரதம்!
அடுத்த முறை, அவனிடம் ஏதோ குறை கண்டு, அவள் வேறொரு சண்டையை ஆரம்பிக்க, அவன் யோசிக்க ஆரம்பித்தான். இனிமையாகக் கழியவேண்டிய பொழுதுகளை இறுக்கமான மௌனத்தில் வீணாக்க வேண்டுமா?
தான் தவறு செய்யவில்லை, தவறு அவளுடையதுதான் என்று மீண்டும் ஆரம்பித்தால், அது தன்னையே உயர்த்திக்கொள்வதுபோல் ஆகிவிடாதா! தான் உயர்வு என்று எதற்காகக் காட்டிக்கொள்வது!
“ஸாரி,” என்றுவிட்டு, அப்பால் நகர்ந்தான்.
இவன் தோற்கவில்லை. ஈகோவிற்கு அதிக மதிப்பு கொடுத்து நடந்தால் பிறர் நம்மிடமிருந்து விலகுவர் என்று புரிந்த அறிவாளி. இவனைப் போன்றவர்களுக்கு உறவுகள் முக்கியம். ஈகோ பெரிதில்லை.
புகழை எதிர்பார்ப்பதும் ஈகோவால்தான்.
“நான் உனக்காக எவ்வளவு செய்கிறேன்! உனக்கு நன்றியே இல்லை!” என்று தன் கணவர் பழித்ததாக ஒரு மாது என்னிடம் வருத்தமாகக் கூறினாள். அவளுக்கு அறுபது வயது.
அவள் கடமையை அவள் சரிவரச் செய்துகொண்டிருந்தாள்.
அவரை எதிர்த்து வாயாடவில்லை. மிகவும் அடங்கிப் போனாள், `மரியாதை’ என்று.
`நன்றி’ என்றால், அவர் என்ன எதிர்பார்த்தார்?
`உங்களைப்போல் உண்டா!’ என்ற புகழ்ச்சியை எதிர்பார்த்துச் செய்தால் இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சி கிட்டாது.
குழுவில் ஈகோ
ஒரு குழுவில் இணைந்து செயல்படுகையில், யாராவது ஒருவரின் ஈகோ தலைதூக்கினாலும், எடுத்த காரியம் வெற்றி அடையாது.
தன்னையொத்த பிறரிடம், `இப்படிச் செய், அப்படிச் செய்’ என்று ஓயாமல் விரட்டினால், பாதிக்கப்பட்டவர்கள் மனம் தளர்ந்துவிடுவார்கள். அடுத்த முறை, அவருடன் சேரவே அச்சம் பிறந்துவிடும்.
ஈகோவால் வருத்தம்
காதலர்களோ, தம்பதிகளோ பிரிவது இந்த ஈகோ தொல்லையால்தான். `நான் செய்வதுதான் சரி. நீதான் விட்டுக் கொடேன்!’ என்பதுபோல் இருவரும் நடந்தால், எந்த பிரச்னைக்கும் முடிவே கிடையாது.
பிரிந்த பின்னர் பலரும் துயரத்திலிருந்து மீள முடியாது, அதிலேயே நீண்ட காலம் ஆழ்ந்து கிடக்கிறார்களே, ஏன்?
மனத்துக்குப் பிடித்தவரைப் பிரிந்துவிட்டோமே என்பதாலா?
அல்லது, ஈகோ தோல்வியுற்றதாலா?