ஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம்

கௌசி, ஜெர்மனி

இன்றைய சிறுவர்கள் நாளைய பெரியவர்கள். இன்றைய சிறுவர்களைச் சிறப்பான முறையில்
வளர்த்து எடுக்கும் போதே நாளைய உலகம் சிறப்பான உலகமாகத் திகழும். இந்த நோக்கத்துடனேயே கதைகளுக்கூடாகவும் பாடல்கள் மூலமும் அறிவுரை புகுத்தும் இலக்கியங்கள் தோன்றின.

சிறுவர்களுக்காக எழுதப்பட்ட இந்த இலக்கியத்தின் கதாநாயகர்களாக, பிள்ளைகள் விரும்புகின்ற பிராணிகளும் விலங்குகளும் அதிகமாக வந்து போவார்கள். குழந்தைகள் கற்பனாசக்தி மிக்கவர்கள். எனவே இக்கதைகளில் மிருகங்கள் பேசும், பறவைகள் பாடும். வண்ண வண்ண நிறங்களிலும் அழகான கண்ணைக் கவரும் படங்களுடனும் கவர்ச்சியாக சிறுவர்களைக் கவரும் வகையில் இந்த இலக்கியத்தைப் படைப்பார்கள்.

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலைமேலே ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா

என்று நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டிய தாயின் வாய்மொழி இலக்கியமாகத் தொடங்கியதே சிறுவர் இலக்கியம். பாட்டி வடை சுட்ட கதை போன்று குழந்தைகளை உறங்க வைக்கத் தாய் கூறிய
கதையிலிருந்து சிறுவர் கதைகள் ஆரம்பமாகின. தாயின் ஆராரோ ஆரிவரோ என்ற தாலாட்டுப்
பாடலுடன் சிறுவர் பாடல்கள் தொடங்கின.

சிறுவர்களுக்கான கதைகள் பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், அறிவியல் கட்டுரைகள், சித்திரக் கதைகள், நீதிக் கதைகள், துணுக்குகள் எனச் சிறுவர் இலக்கியத்துள் அடங்குகின்றன. ஈழத்திலும் மிகச் சிறப்பான சிறுவர் இலக்கியத்தின் கர்த்தாவாக அநு.வை. நாகராஜன் (1933 – 2012) அவர்களைக் குறிக்கலாம். இவர் சிறுவர்களுக்காக,

  • தேடலும் பதிதலும் என்னும் சிறுவர் அறிவியல் நூல் – 1992
  • அவன் பெரியவன் என்றும் சிறுவர் குறும் நவீனம்
  • சிறுவர் சிந்தனைக் கதைகள் – 2002
  • சிறுவர் கவிதையில் புதிய சிந்தனைகள் 2005
  • சிறுவரும் அவர்கள் அறிவுசார் சாதனங்களும் – 2005
  • சிறுவர் பழமொழிக் கதைகள்

போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

இவ்வாறு சிறுவர்களுக்கான நூல்களை எழுதிய அநு.வை. நாகராஜன் போன்றே குழந்தைகளுக்கான முதல் முதல் வெளிவந்த சிறுவர் மாத இதழாக வெற்றிமணியை வெளியீடு செய்து அதன் மூலம் சிறுவர் இலக்கியங்களுக்குப் பங்களித்த ஆ.மு.ளு என்று அழைக்கப்படும் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களும் பெருமைக்கு உரியவர்.

தொலைநோக்குச் சிந்தனை உள்ள ஒருவரால் மாத்திரமே இவ்வாறாக மாதம் ஒரு சஞ்சிகை அதுவும்
முழுக்க முழுக்கச் சிறுவர்களுக்காக மட்டுமே வெளியிட முடியும். இதற்கு ஆசிரியப் பணியை அவர்
மேற்கொண்டது மட்டுமல்லாமல் மாணவர்களுடன் உள்ளன்புடன் பழகியமையும் காரணமாகும்.

அத்துடன் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் 1980இல் மறைந்துவிட்டாலும், இன்றும் பேசப்படும்
மனிதராக இருப்பதற்கும் ஆசிரியத் தொழிலில் மட்டுமே நின்றுவிடாது மாணவர்கள் நலன் கருதி அவர் ஆற்றிய சேவைகளே முதன்மைக் காரணங்கள்.

இவர் மே மாதம் 14ஆம் திகதி, 1919ஆம் ஆண்டு குரும்பசிட்டியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் திரு.-திருமதி கந்தவனம் தம்பதியனருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஏழாவதாகப் பிறந்தார். கல்வியிலும்
சமூகத் தொண்டிலும் நேரத்தை அர்ப்பணித்தார். காங்கேசந்துறை வட்டாரக் கல்வி, விளையாட்டு, இவற்றின் அமைப்பாளராகவும் பரீட்சைக் காரியதரிசியாகவும் இருந்து அளப்பரும் தொண்டுகள்
ஆற்றி கல்விப் பணிப்பாளர், உதவி அரசாங்க அதிபர் போன்றோரின் பாராட்டுதலைப் பெற்றார். அகில இலங்கை ஆசிரியர் கலாசாலையின் தமிழாசிரியர் சங்க உப தலைவராகவும் நுவரெலியா, முல்லைத்தீவு கிளைகளின் தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்து பெரும் தொண்டாற்றினார். காங்கேகன் துறை ஆசிரியர் சங்கக் கிளையை ஆரம்பித்தவர்களில், இவர் முக்கியமானவர்.

இவர் 1964ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளம் குளத்தில் அரசினர் தமிழ்ப் பாடசாலை
தலைமை ஆசிரியராக இருந்தார். அப்போது அங்குப் பயின்ற மாணவர்களை அவர்களின் பெற்றோர், படிப்பை இடையில் நிறுத்தி, விவசாயத்திற்கு அழைத்துச் சென்றனர். அறுவடைக் காலத்தில் பெற்றோருக்கு பிள்ளைகளின் உதவி தேவை என்பதனை அறிந்து அந்த நாட்களில் அரச அனுமதியுடன் விடுமுறை கொடுத்து, பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் உதவினார். இதனால் மாணவர்களின் படிப்பை இடைநிறுத்தாது பாதுகாத்த பெருமை அமரர் சுப்பிரமணியம் அவர்களையே சாரும்.

ஆர்வம் மிகுந்த மாணவர்கள் பலரை யாழ்ப்பாணம் அழைத்து வந்து மேற்படிப்பிற்கு வழிசமைத்துக் கொடுத்தார். இவ்வாறு மாணவர்களுக்கான கற்றல் வளர்ச்சிக்கு தன் எண்ணம் முழுவதையும் ஈடுபடுத்தி வந்தார். அவ்வேளையில் மாணவர்கள் முன்னேற்றம் கருதி, யாரும் அக்காலத்தில் நினைத்திருக்காத மாதாந்த சஞ்சிகை ஒன்று வெளியிட வேண்டும் என்ற தன் கனவை நனவாக்கினார்.

மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்தல், அவர்கள் அறிவைத் தூண்டும் விதமான அறிவியல் கல்வியை மேம்படுத்தக் கூடிய கட்டுரைகளை கற்றோரிடம் இருந்து பெற்றுச் சஞ்சிகையில் பிரசுரித்தல் போன்ற நோக்கங்களைக் கொண்டு நாவலப்பிட்டியில் ஆசிரியராக இருந்த வேளை, தினகரன், சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் வந்த குறுக்கெழுத்துப் போட்டிகளின் சிறந்த விடை விமர்சனி என்னும் வெற்றி மணியை 1950ஆம் ஆண்டு வெளியிட்டார். போட்டிகளில் வெற்றி என்பதனைக் குறிக்க, வெற்றி என்பதனையும் சுப்பிரமணியம் என்பதில் உள்ள மணியினையும் இணைத்து வெற்றிமணி எனப் பெயர் இட்டார்.

08 பக்கங்களில் ஆரம்பித்துப் பின் 16, 32, 59 எனப் பக்கங்கள் தேவைக்கேற்ப அதிகரித்த வண்ணம்
இருந்தன. அதன்பின் 1954ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மாணவர் பத்திரிகையாக வெற்றிமணி உருவெடுத்தது. மலையக மக்களின் கல்வி திட்டமிட்டு நசுக்கப்பட்ட வேளையில், அவர்களது கல்விக்கும் ஆற்றலுக்கும் முதற்களம் அமைத்துக் கொடுத்தது. தான் ஆசிரியராக கடமை புரிந்த பாடசாலைகளில் எழுத்தாற்றல் மிக்க ஆசிரியர்களையும் மாணவர்களையும் வெற்றிமணியில் எழுத வைத்தார்.

வெற்றிமணியில் ஒரு சிறு மாணவன் மாடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தான். அக்கட்டுரைக்கு
முக்கியத்துவம் கொடுத்து வெற்றிமணி வெளியிட்டு இருந்தது. மாடு பற்றி எழுதிய சிறுவனிடம் ஏன்
மாடு வண்டி இழுக்கும் என்று எழுதவில்லை? எனக் கேட்டபோது, அவன் சொன்ன பதிலே ஆசிரியரை
கவர்ந்தது. அவன் சொன் பதில், மாடு பாவம், வண்டி இழுக்கும் என்று சொல்ல தனக்குக் கவலையாக
இருக்கும் என்றானாம். ஜீவகாருண்யம் அச்சிறுவனின் உள்ளத்தில் தெய்வீக ஒளிபாய்ச்சியது. உடனே
இக்கட்டுரையை சஞ்சிகையில் வெளியீடு செய்திருந்தார்.

மாடு
மாட்டிற்கு 2 கொம்பு உண்டு.
மாட்டிற்கு ஒரு வாலுண்டு.
மாட்டிற்கு நான்கு கால்கள் உண்டு.

இக்கட்டுரையைப் பார்த்த வாசகர்கள், “ஏன் இப்படி தரமில்லாத கட்டுரையை பிரசுரித்தீர்கள்? என்று
ஆசிரியரைக் கேட்டபோது “இந்தக் கட்டுரை வந்தபின்பே வெற்றிமணியில் பல சிறப்பான கட்டுரைகள்
வரத் தொடங்கின. வாசகர்கள் படைப்பாளிகள் எல்லோருக்கும் அட, இதனைவிட எம்மால் நன்றாக எழுத முடியும் என்று எண்ணத் தோன்றியது. எனவே எப்போதும் சிறப்பான ஆக்கங்கள்தான்
வெளியிட வேண்டும் என்பதில்லை. எழுத்தாளரைக் கிளர்ந்து எழச்செய்யும்வண்ணம் இப்படி சிலவற்றையும் செய்யத்தான் வேண்டும் என்றார். இதன் மூலம் இவருடைய ஆழ்ந்த தொலைநோக்குச் சிந்தனை புலப்படுகின்றது. ஊக்கமுள்ள ஒருவருக்கு இடம் கொடுத்தால், எதிர்காலத்தில் அவர் உச்சத்தைத் தொடுவார் என்னும் உயரிய நோக்கம் அவரிடம் இருந்ததனால், அந்த மாடு என்னும் கட்டுரை எழுதிய சிறுவன் பிற்காலத்தில் சிறந்த எழுத்தாளனாகவும் உருவெடுத்தார் என்பது யாம் அறிந்த செய்தியாகும்.

இதுமட்டுமன்றி வெற்றிமணியில் எழுதும் சிறுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் முகமாக
சிலசமயம் அவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு நேரில் சென்று புத்தகங்களை வழங்கி அவர்களை
மகிழ்ச்சியடையவும் வைத்துள்ளார். சிறுவர்களுக்காக இலக்கியம் படைப்பதிலும் சிறுவர்களே தமக்கான இலக்கியத்தைப் படைப்பது பாராட்டத்தக்கதே. மாணவர்களின் உயர்வே ஒரு நாட்டின் உயர்வு எனக் கருதி இத்தன்மையை ஊக்குவித்த அமரர் மு.க.சுப்பிரமணியம், எல்லோராலும்
போற்றப்படக் கூடியவர்.

இவருடைய இந்த நூற்றாண்டுக் காலப் பகுதியில் படைப்புலகம் இவரை நினைத்துப் பார்ப்பதுடன்
பாராட்ட வேண்டியதும் அவசியமாகின்றது.

சாதனையாளர்கள் என்றும் சாவதில்லை
சாதனைகள் என்றும் மறைவதில்லை – மனிதன்
வாழும்வரை மறக்கப்படுவதில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.