இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)

0

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் இதோ அடுத்த மடலில் உங்களோடு உளக் கருத்தை பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

ஐக்கிய இராச்சியம், அதாவது இங்கிலாந்து, இன்று ஒரு முக்கியமான திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கிறது.

எமது அடுத்த பிரதமர் யார்? எனும் கேள்வி அனைத்து மக்களின் மனங்களிலேயும் தொங்கிக் கொண்டிருந்தாலும் அதற்கான விடை, பெரிதான ஒரு புதிராக ஒன்றும் இல்லை.

பொதுவாகப் பொதுத்தேர்தல் நடைபெறும் போதுதான் இந்தக் கேள்விக்குச் சரியான பதில், கொஞ்சம் புதிராக இருக்கும். இப்போது இது ஒன்றும் புதிர் இல்லையே!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் வெளியேற்றம், சர்வஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளின் மூலம் ஊர்ஜிதமாக்கப்பட்டதும் அதனோடு சம்பந்தப்பட்டு, பல நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன.

அப்போதைய பிரதமர் டேவிட் கமரன், பிரதமர் பதவியிலிருந்து மட்டுமல்ல, அரசியலிலிருந்தே ஒதுங்கி விட்டார்.

அவரோடு இணைந்து அரசமைத்த மிதவாத கன்சர்வேடிவ் கட்சிகள் பலவற்றின் பாராளுமன்ற அங்கத்தினர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டோ அன்றித் தாமாகவோ ஒதுங்கிக்கொண்டார்கள்.

இதோ மக்களே! உங்களில் பெரும்பான்மையினரின் அபிலாஷையை நிறைவேற்றுகிறேன் என்று கங்கணங் கட்டிப் பிரதமராகிய அம்மையார் தெரேசா மே அவர்கள், இன்று தீவிரவாதப் போக்குக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் அழுங்குப் பிடியினால் ஒதுக்கப்பட்டுவிட்டார்.

இன்றைய நிலையில் இரண்டு கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரைச் சுமார் 1,60,000 கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் முழு நாட்டிற்குமே பிரதமராகத் தெரிவு செய்யப் போகிறார்கள்.

இந்த வெறும் 1,60,000 மக்களின் முக்கிய பிரச்சினையாக ப்ரெக்ஸிட் எனும் ஐக்கிய இராச்சியத்தின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிகழ்வே திகழ்கிறது.

ஆனால் இன்றைய ஐக்கிய இராச்சியத்தின் பிரச்சினை இது ஒன்றுதானா? இல்லை நாட்டை முன்நோக்கியிருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் பல இருக்கின்றன.

இந்த ப்ரெக்ஸிட் பிரச்சினை, கடந்த மூன்றரை வருடங்களாக இங்கிலாந்து அரசியல் களத்தின் முழு நேரத்தையும் தனதாக்கிக் கொண்டது. இப்பிரச்சினையைத் தீர்த்தால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனும் வகையில் அரசாங்கச் செயற்பாடுகள் முடக்கப்பட்டுவிட்டன.

முழு நாடுமே இரண்டாகப் பிளவுபட்டு, மூர்க்கத்தனமான விவாதங்களுக்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டு இருக்கிறது.

இன்றைய மேற்குலக அரசியல் ஒரு பெரும் மாற்றத்துக்குள்ளாகி வருவது போன்றே தெரிகிறது. ஜனநாயக அடிப்படையில் இயங்கும் நாடுகளாகக் கருதப்படும் நாடுகளில் காலகாலமாக இருந்து வந்த அரசியல் தலைவர்களின் தெரிவுமுறைகளிலும், மக்களின் அதை நோக்கிய பார்வைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அரசியல்களத்திலே அனுபவம் பெற்றவர்களே நாட்டின் தலைவர்களாக பரிணமித்து வந்த முறைகள் மாறி, அரசியலிலேயே என்றுமே ஈடுபடாத, மக்களிடையே பிரபலமானவர்கள் அரசியலில் குதிப்பதை மக்கள் பெரிதும் வரவேற்கும் ஒரு சூழல் உருவாவதைக் காண்கிறோம்.

மிகவும் சர்ச்சைக்குரிய, மக்களின் மனங்களிலே துவேஷங்களை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளைப் பேச்சுரிமைச் சுதந்திரம் எனும் பெயரில் தெரிவிப்பதோடு அதைப் பற்றிய கேள்விகள் ஊடகங்களில் எழும்போது அதனை முற்றாக மறுத்துப் பேதலிப்போர் ஜனநாயகத்தின் உச்ச நாடுகளின் தலைவர்களாவதைக் காண்கிறோம்.

இத்தலைவர்களின், நாட்டு அதிபர்களின் நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக அவரும் சாதாரண மனிதர் தானே எனும் நியாயத்தை முன்வைத்து ஏற்றுக்கொள்ளும் பொது மக்களிடையே வாழும் ஒரு நிலையில் இருக்கிறோம்.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் இன்றைய ஐக்கிய இராச்சியப் பிரதமரின் தெரிவும் இடம்பெறுகிறது. தன்னைப் பிரதமராகத் தெரிவு செய்யப்போகும் மக்கள் எதைக் கேட்க விரும்புகிறார்களோ, அது யதார்த்தத்துக்குப் புறம்பாக இருப்பினும் அதனைத் தனது முக்கிய கொள்கைகளாகப் பேசி தருணத்திற்கேற்ற அரசியல் நடத்தும் ஒருவர் பிரதமராக வரக்கூடிய சந்தர்ப்பம் இன்று அதிகமாகக் காணப்படுகிறது.

தற்போதைய ஊடகக் கணிப்புகளின் படி பிரதமராகப் போட்டியிடும் போரிஸ் ஜான்சன், ஜெர்மி ஹண்ட் எனும் இருவரில் போரிஸ் ஜான்சனே வெற்றியடையும் வாய்ப்புகளிருப்பதாகத் தெரிகிறது.

யாரிந்த போரிஸ் ஜான்சன் ?

நியூயார்க் நகரில் 1964ஆம் ஆண்டு ஒரு நடுத்தர மேல்வகுப்பு குடும்பத்தில் முதலாவது குழந்தையாகப் பிறந்தார். வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்வியை பிரெஸ்ஸல்ஸ் நகரில் உள்ள யூரோப்பியன் பிஸினஸ் ஸ்கூல் எனும் பள்ளியிலும் பின்பு இங்கிலாந்தின் ஆஷ்டவுண் கல்லூரியிலும், பின்பு புகழ்பெற்ற ஈட்டன் கல்லூரியிலும் பயின்றார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், அக்கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஊடகத் துறையில் பணியாற்றத் தொடங்கிய இவர், இங்கிலாந்தின் புகழ் வாய்ந்த “தி டைம்ஸ்” பத்திரிகையில் நிருபராகப் பணிபிரிந்தார். அப்பணியிலிருந்து தவறான செய்தியொன்றை குறிப்பிட்டமைக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.(ஆதாரம் – விக்கிப்பீடியா).

தொடர்ந்து “தி டெய்லி டெலிகிராப்” பத்திரிகையில் பிரெஸ்ஸல்ஸ் நகர நிருபராகப் பணியாற்றினார். அப்போது இவர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பல தொகுப்புகளை வரைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துகள் கூட கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர் மத்தியில் ஏற்பட்ட ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பலைகளை ஊக்குவிப்பதற்குத் துணை நின்றன என்பதும் உண்மையே.

“தி டெய்லி டெலிகிராப்” பத்திரிகையின் உதவி ஆசிரியராக 1994-1999 வரையும் பின்பு “தி ஸ்பெக்டெட்டர்” எனும் இதழின் ஆசிரியராக 1999-2005 வரையும் கடமையாற்றினார். 2001ஆம் ஆண்டு அப்போதைய எம்.பி மைக்கல் ஹெசில்டைன் அரசியலிலிருந்து ஒதுங்கவும் , ஹென்லி எனும் தொகுதியின் கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

2008ஆம் ஆண்டிலிருந்து இரண்டு தடவைகள் லண்டன் நகர மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். இக்காலக்கட்டத்தில் ரூட் மாஸ்டர் எனப்படும் மாடலிலான லண்டன் பேருந்துகளை மீள ஓடவிட்டது, லண்டன் சைக்கிள் சேவை மற்றும் தேம்ஸ் கேபிள் கார் எனப்படும் திட்டங்கள் தன்னால் கொண்டு வரப்பட்டன என்று பிரச்சாரம் செய்துகொள்கிறார்.

2015இல் மீண்டும் எம்.பி. ஆகப் பதவியேற்றதன் பின்னால் 2016ஆம் ஆண்டு தனது மேயர் பதவியை இராஜினாமா செய்தார். 2016 ப்ரெக்ஸிட் சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று பிரச்சாரம் செய்த அணியின் முன்னணி பிரச்சாரகராகச் செயல்பட்டார்.

டேவிட் கமரன் விலகிய பின்பு, தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் வெளிநாட்டு அமைச்சராகப் பதவி வகித்தார். தெரேசா மே அவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையை எதிர்த்துத் தனது பதவியை போரிஸ் ஜான்சன் இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தடவைகள் திருமணம் செய்து விவாகரத்து செய்த இவர், தற்போது தன் காதலியுடன் வசித்து வருகிறார். இவருக்கு இவரது இரண்டாவது மனைவியின் மூலம் இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இதைத் தவிர, திருமணத்திற்கு அயலில் ஒரு தொடர்பூடாக மற்றொரு பெண்குழந்தையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவரது தந்தைவழியான ஒரு பூட்டனார் துருக்கி தேசத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய ஊடகவியலாளர் எனவும் மற்றொரு வழியான பூட்டனார் இங்கிலாந்தின் இரண்டாம் ஜார்ஜ் மன்னரின் வழி வந்தவர் எனவும், தாய்வழிப் பூட்டனார் ஒரு ரஷ்ய யூத இனத்தவர் என்றும் கூறப்படுகிறது.

இவரது அரசியல் கருத்துகள், காலத்துக்குக் காலம் மாறுபட்டு வந்திருக்கின்றன. இவரது ஊடகத் துறைக் காலங்களில் இவரது கட்டுரைகளில் சிலவற்றில் உபயோகித்த வார்த்தைகள், வேற்று இனத்தவர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. வெளிநாட்டவரின் குடியேற்றத்தில் இவரது கொள்கைகள் புரியாதவையாகவே இருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

இவர்தான் ஐக்கிய இராச்சியத்தின் அடுத்த பிரதமர் என்பது துல்லியமாகத் தெரிகிறது என்கின்றன ஊடகங்கள்.

ப்ரெக்ஸிட் எனும் இப்பாரிய பிரச்சினை, இங்கிலாந்து மக்களின் மனங்களிலே கசிந்துகொண்டிருந்த இனத் துவேஷம் எனும் உணர்விற்குத் தீனியாகி, கொஞ்சம், கொஞ்சமாகப் புகையைக் கக்கத் தொடங்கியுள்ளது. 4% அளவில் மட்டுமே பெரும்பான்மை பெற்றிருந்த ஐரோப்பிய ஒன்றிய விலகல் தீர்மானம், அதற்கு எதிரான மக்களை விசனத்தின் விளிம்புக்குத் தள்ளியுள்ளது.

இந்நிலையில்தான் புதிய பிரதமர், 2019 ஜூலை 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளார். ஊடகக் கணிப்புகளின் படி அவர் போரிஸ் ஜான்சனாக இருந்தால், நாட்டினை ஒன்றுபடுத்தி, மக்களின் மனங்களில் பரவியிருக்கும் இனத்துவேஷ உணர்வுகளைப் போக்கும் வல்லமை அவருக்கு இருக்கிறதா? என்பது கேள்விக்குறியே!

தன்னிடமிருந்து வெளிவரும் கருத்துகள், இருக்கும் பிரச்சினையை இன்னும் பெரிதாக்கி விடுமோ எனும் அச்சம் சிறிதுமின்றி, நான் வெளிப்படையாக எனது மனத்தில் பட்டதைக் கூறுவேன் என்று சொல்லும் இவர், பல சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு பல்லினக் கலாச்சார நாடான இங்கிலாந்தைச் சரியான வழியில் கொண்டு செல்வாரா?

இதே நேரம் எதிர்க்கட்சியான இங்கிலாந்தின் லேபர் கட்சி ஒரு இடதுசாரிப் பாரம்பரியத்தைக் கொண்டது. தொழிலாளரின் நலனை முன்வைத்தே ஆரம்பிக்கப்பட்டது. வட இங்கிலாந்து, பல தொழில் ஆலைகளைக் கொண்டது. அங்கு வாழும் மக்கள், அவ்வாலைகளின் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். முன்னைய காலத்து நிலக்கரிச் சுரங்கங்களும் இந்தப் பகுதிகளிலேயே அமைந்திருந்தன. கால காலமாக இப்பகுதிகளின் ஆதரவு, தொழிற்கட்சிக்கே இருந்து வந்திருக்கின்றது.

சமீப காலமாக ஐரோப்பிய ஒன்றியத்தில், பல முன்னைய சோவியத் யூனியனின் அங்கங்களாக இணைந்திருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்ததும் அந்நாட்டுப் பிரஜைகள் பலர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இடநகர்வுச் சட்டங்களின் வழி இங்கிலாந்துக்குள் இலகுவாக குடியேறி வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர்.

தொழிலதிபர்கள் பலர், தமது இலாபத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக, குறைந்த ஊதியத்தில் வேலைக்கமர்த்தக்கூடிய இந்தக் கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதால் உள்நாட்டுத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு குறைவதோடு அவர்களின் ஊதியமும் குறைக்கப்படுகிறது. இது இப்பகுதிகளில் வாழும் மக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்காரணத்தால் இப்பகுதிகளில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான வகையிலே வாக்குகள் விழுந்திருக்கின்றன. பாரம்பரியமாகத் தொழிற்கட்சிக்கு வாக்களிப்பவர்களின் இத்தகைய மனப் போக்குக்குத் தொழிற்கட்சி முகம் கொடுக்காத பட்சத்தில் அவர்களின் செல்வாக்கு இப்பகுதிகளில் மறைந்துவிடப் போகிறது எனும் அச்சம், இக்கட்சியைப் பிரதிநிதிப்படுத்தும் இக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதே நேரம் தொழிற்கட்சியின் உத்தியோகப்பூர்வமான கொள்கை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகினாலும், அதனுடனான உறவுகள் மிகவும் நெருக்கமாகப் பேணப்பட வேண்டும் என்பதுவே. இது இன்றைய இக்கட்சியின் நிலையைத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் இன்றைய ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் களத்தில் மிதவாதப் போக்குக் கொண்ட அரசியல் கட்சிகளின் செல்வாக்கு பலவீனமடையப் போகிறது போலவும், பாப்புலிசம் (populism) என்கிற பிரபலமான, மக்களின் தீவிர உணர்வுகளுக்குத் தீனி போடும் நபர்களின் அரசியல் தலைவிரித்தாடப் போகிறது போலவும் போன்றதொரு நிலையே தென்படுகிறது.

ஓ! ஹிட்லர் கூட முதன் முதலில் ஜனநாயக அரசியலின் மூலம் தான் பதவிக்கு வந்தவரோ?

எத்திசையில்? எப்பயணம்?

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *