-மேகலா இராமமூர்த்தி

PicturesQueLFS எடுத்த இந்தப் படத்தை சாந்தி மாரியப்பன் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இருவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!

நீரின்று அமையாது உலகெனில் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு எனவும்

நீரின்றி அமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனவும் நீரின் மாண்பைத் தெற்றெனக் காண்பிக்கின்றன வள்ளுவமும் சங்கப்பாடலும்.

மாந்த உயிர்களும் ஏனைய பயிர்களும் பிழைப்பதும் தழைப்பதும் நீரின்றி நடவாது. இனியும் நாம் நீரைச் சேமியாது வாழ்ந்தால் வாழ்க்கை நிலையாது என்பதை இம்மன்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

இனி கவிஞர்களின் முறை. அவர்களைக் கனிவோடு அழைக்கின்றேன் கவிபாட!

*****

”வாழ்வு நிலையில்லாதது என்பதை நீரின் மொழியால், நிலைக்காத அதன் வடிவால் புரிந்து நடந்திடு மனிதா!” என்று புகல்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

நீரின் மொழி…

நீரின் மொழியைத் தெரிந்திடுவாய்
நிலைக்கா தெதுவும் அறிந்திடுவாய்,
பாரிதை விழும்துளி கலந்துவிடும்
பெற்ற வடிவை யிழந்துவிடும்,
சேரும் ஒன்றாய் நீராக
சுழலும் வட்டம் நீர்மேலே,
பாரினில் வாழ்வின் தத்துவமாய்ப்
பார்த்திடு நீர்த்துளி கதையிதையே…!

*****

”பச்சைகளற்று வெளிறிக்கிடக்கும் வெளிகளுக்கு உன் துளிக்கருணையை இச்சையோடு அளி!” என்று மழையை இறைஞ்சுகின்றார் திருமிகு. பவித்ரா.

வான் நோக்கி..
இமைகள் கனமுற
விழிசெருகி
கன்னங்கள் கருகருக்க
உடல் தளர
நாவைப் பரத்தி
சகாப்தங்களாய்க் காத்திருக்கிறேன்…

பச்சைகளற்று
வெளிறிக்கிடக்கும்
வெளிகளுக்கு
உன்றன்
துளிக்கருணையை
தானமிட்டுச்செல்!

துக்கங்கள்
மழையெனப்
பொழிய

நூறாண்டுகளின்
சூல் நிரம்பட்டும்…!

*****

நிலாவுலக ஆராய்ச்சி ஒருபுறமிருப்பினும் நமக்குதவும் மழைநீரைச் சேகரித்து நிலவுலகையும் காக்க உறுதியேற்போம்! என்று காலத்துக்கேற்ற கருத்தை உரைத்திருக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

நீர்த்துளி நமதுலகின் உயிர்த்துளி!

நாம் மழலையாய் இருந்தபோது
நிலாவைக் காண்பித்து
நல்லமுதூட்டினாள் அன்னை..!!

நீல் ஆம்ஸ்ட்ராங்
நிலாவில் கால்பதித்ததைப் படித்தது
நன்றாய் நினைவிருக்கிறது..!!

நிலாவில் நீரிருக்கிறதா..?
நல்ல காற்றிருக்கிறதா..?
நாள்தோறும் நடக்கும் ஆராய்ச்சிகள்..!!

நிலவுலகில் பிறந்த நாள் முதலாய்..
நிலாவுலகில் சஞ்சரிக்கிறது மனம்..
நாம் வாழுமிந்த நீலக்கோளத்தில் வறட்சி..!!??

நீரின்றி அமையாது உலகென்று
நன்மொழி பகன்றான் வள்ளுவன்..
நாமனைவரும் அதனை மறந்துவிட்டோம்..!!

நீலவானத்தினின்று பொழியும் மழைத்துளியை
நமக்குதவும்படிச் செய்யாது வீணில்
நீலக்கடலில் கலக்கச் செய்துவிடுகின்றோம்..!!

நிலாவுலக ஆராய்ச்சி ஒருபுறமிருப்பினும்
நமக்குதவும் மழைநீரையும் சேகரித்து
நிலவுலகையும் காக்க உறுதியேற்போம்..!!

நீர்த்துளிதான் நமதுலகின் உயிர்த்துளி
நல்லபடியிதைக் காப்பதே நம்கடமை
நினைவிற்கொள்வோம் இதை என்றும்..!!

நீரின் அவசியத்தை, அதனைச் சேமிக்கவேண்டியதன் அவசரத்தை உள்ளந்தொடும் வகையில் உரைத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையெனத் தெரிவாகியிருப்பது…

நீரே!
முகிழ்த்த பேரண்டத்தில் முதன்முதலாய்த் தோன்றினாய்
உயிர்ப்பை விளைவிக்கும் ஊடகமாய் ஆனாய்
கங்கையாய் காவிரியாய் கடலாய்ப் பல் ஏரிகளாய்
எங்கும் பரந்தோடி இவ்வுலகை நிரப்பினாய்
அன்பைக் கலந்து அகிலத்தில் பல்லுயிர்கள்
தோன்றிச் சிறக்கத் துணையாக நிற்கின்றாய்
ஆனாலும்,
உன்றன் மகிமையுணராது மானிடரோ
வீணாக்கி விட்டுன்னை விழிபிதுங்கி நிற்கின்றார்
காற்றைத் தடுத்துக் கழனிகளை நீ நிரப்ப
ஏற்ற மழைக்காடுகளை எந்தப் பொறுப்புமின்றி
வெட்டியழித்து விட்டு வீணாயுனையிழந்து
ஊரூராய் மாந்தர் உனக்காய் அழுகின்றார்!
ஓடுமுனைக் கடலின் உப்பிற் கலக்க விட்டு
வாடும் பயிர்களுக்கு வழியேதும் காணாது
ஏங்கும் மனிதர்களை என்னென்று சொல்லுவது?
அளவாய் அகிலம் பயனடைய ஆழத்தில்
உன்னை நீ காக்க ஓடி ஒளித்தாலும்
ஆழத்துளையிட்டுறிஞ்சி வெளியெடுத்து
அளவுக்கதிமாய் உனை விரயமாக்கிவிட்டு
பாலையாய் மண்ணைப் பாழாக்கும் மாந்தர்களின்
பாவச் செயலுக்குப் பழிகாணாதன்னவரின்
தேவைகளைத் தீர்ப்பாய் தெரிந்து!

”மழைதரும் காடுகளை அழித்து, கடலில் வீணிற்கலக்கும் மழைநீரைச் சேமியாது விடுத்து, குடிநீருக்கு ஓடித்திரியும் மக்களின் பாவச்செயலை மன்னிப்பாய் நீரே!” என்று நீரிடம் ஈரம் வேண்டிநிற்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. சித்தி கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்.

   

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்

  1. எனது கவிதையை வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவு செய்து, என்னையும் சிறந்த கவிஞரெனப் பாராட்டிய மேகலா இராமமூர்த்திக்கும் வல்லமை குழுமத்தினருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். உடன் பங்கேற்ற கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.