ரங்கண்ணா (சிறுகதை)

Travel Walking Steps Journey Outdoors Men People
பாஸ்கர் சேஷாத்ரி
ரங்கண்ணாவுக்கு நேற்றோடு எண்பது வயது முடிந்தது. போன வாரம் சொன்ன படி அவரைப் பார்த்தேன்.
“டேய், என்னை வெளில கூட்டிண்டு போடா?”
“இல்லை சித்தியா.நாளைக்கு போலாம்.”
“டேய், கீப் அப் தி வோர்ட். கிளம்பு.”
கிளம்பியாகிவிட்டது. கைத்தடியை தூக்கி வைத்துவிட்டார்.
அழுத்தித் தோளில் கை வைத்து மெல்ல நடந்தார்.
“அரை மணி காத்தாடா போலாமா?”
“ஏன், வேறெங்கே ஜோலி?”
“இல்லை, சொன்னேன்.”
வெளிக் காத்து பட்டதும் ரொம்ப சந்தோஷமானார் .
“கிட்டத்தட்ட ஆறு வருஷம் ஆச்சுடா, வெளில வந்து.
அவ போனப்ப வெளில வந்தது.”
“நீங்க இடது பக்கம் வந்தா, இன்னும் பொறுமையா நடக்கலாம்.”
“நடக்க தான்டா வெளில வந்தேன். என்ன பொறுமை வேண்டி கிடக்கு?”
“இந்த பிளாட்பாரம் கோவில் இப்ப பெரிசா கட்டிட்டான் போலருக்கு.”
“ஆமாம். அந்தக் கடைக்காரன் இடத்தை வளைச்சு அவன் சாமானையும் வச்சுக்கிறான்.”
“போறான் விடு. பகவான் பாத்துப்பான்.”
“…….”
“என்ன பதில காணோம்.”
“ஒன்னும் இல்லை.”
கடை வாசலில் நின்றார் .
“டேய், மாரி பிஸ்கட் ஒன்னு வாங்குடா?”
“தோ.”
“வேறன்ன வேணும்?”
கடைக்கார அம்மா எழுந்து, “தாத்தா சௌக்கியமா?” எனக் கேட்டாள்.
“ம்ம், ராமு எங்கே?”
“பேப்பர் போடப் போயிருக்குது.”
“திரும்பிடலாம்” என்றேன் தோள் மாற்றிக்கொண்டு.
“ஏன்டா?”
“இல்ல, எதிர்க்க ஏதோ ஊர்வலம்.”
“நல்ல சகுனம் தான்.”
“இல்ல சித்தியா. எதிர்த்த சந்தில போயிடலாம்.”
ஒரு கடை வாசலில் சின்ன பெஞ்ச் இருந்தது.
“உட்காருங்கோ” என்றேன்.
“இருக்கட்டும். எனக்கு ஒரு பன்னீர் சோடா வாங்கி கொடேன். அப்புறம் அந்த ஸ்ட்ராங் மிட்டாய்.”
எதிர்ப் புறம் ஒரு கார் வந்து நின்றது.
“அப்பா” எனக் குரல் கேட்டு திரும்பினால் வரது.
“இங்கே எப்படி வந்தே?”
“ஒன்னும் இல்லடா. இவன் தான் ஆத்துக்கு வந்து, இந்த க்ஷணம் என்னோடு வெளில வாங்கோன்னு ஒரே அடம்.”
அவர் காரில் ஏறினார். எட்டிப் பார்த்து மிட்டாய் வாயுடன் சிரித்தபோது, இவர் அடுத்த வாரம் திரும்பக் கூப்பிடுவார் எனத் தோன்றியது.
=================================
படத்துக்கு நன்றி: https://www.maxpixel.net/Travel-Walking-Steps-Journey-Outdoors-Men-People-3525771