நாங்குநேரி வாசஸ்ரீ 

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-50

50. இடனறிதல்

குறள் 491:                                                       

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது

பகையாளிய வளைச்சு பிடிக்கதுக்கு எடத்த பாக்குத வர ஒரு காரியத்தயும் தொடங்கக்கூடாது. பகையாளிய எளச்சவன்னும் நெனையக்கக் கூடாது.

குறள் 492:

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்

வரக்கூடிய பகையாளிய எதுத்து நிக்குத பலம் இருக்கவனுக்குக் கூட பாதுகாப்பான எடத்துல நின்னு சண்ட போடுத வாய்ப்பு கெடச்சிதுன்னா அது பெரும் பயனக் கொடுக்கும்..

குறள் 493:

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்

பகையாளிய தாக்குததுக்கு ஏத்த எடத்த அறிஞ்சிக்கிட்டு, தன்னையும் காத்துக்கிட்டு சண்டபோட்டாம்னா தெம்பு (வலிமை) இல்லாதவனும் தெம்பு வந்து செயிச்சுடுவான்.

குறள் 494:

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

ஏத்த எடத்த அறிஞ்சுக்கிட்டு தொடர்ச்சியா தாக்கினாம்னா பகையாளிங்க  செயிக்கணும்னு நெனச்சிக் கூட பாக்க மாட்டாக.

குறள் 495:

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற

தண்ணிக்குள்ளார இருக்க வரைக்கும்தான் மொதலைக்கு பலம். வெளிய வந்திச்சுன்னா மத்த உசிருங்க அத சுளுவா செயிச்சிடும்.

குறள் 496:

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து

பலமான சக்கரங்களக் கொண்டிருக்குத தேரால கடல்ல ஓட முடியாது. கடல் ல ஓடுத கப்பல்களால நெலத்துல ஓட முடியாது.

குறள் 497:

அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி யிடத்தாற் செயின்

ஒரு காரியத்த செய்யுத வழிமொறைய நல்லா யோசிச்சு , எடத்த அறிஞ்சுக்கிட்டு செய்தாம்னா பகையாளிக்கு பயந்துக்கிடாத நெஞ்சுறுதி போதும். வேற தொண தேவையில்ல.

குறள் 498:

சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்

சிறுசா இருக்க படையா இருந்தாலும் தன் எடத்துல நின்னு சண்டபோட்டாம்னா பெரிசா இருக்க படையக் கூட சுளுவா செயிச்சிடலாம்.

குறள் 499:

சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது

பாதுகாப்பான கோட்டயும், மத்த படைகளும் பகையாளிக்கு இல்லாமப் போவுச்சுதுன்னாலும் அவன் இருக்க எடத்துல போயி சண்டபோடுதது சிரமம் தான். .

குறள் 500:

காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு

வேல் புடிச்சு நிக்குத வீரர்களக் கொன்ன கொம்பு கொண்ட யானையக் கூட சேத்து நெலத்துல அதோட கால் பொதஞ்ச நேரம் நரிகள் சுளுவா கொன்னு போடும்.

(அடுத்தாப்லயும் வரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *