கட்டுரைகள்

நாளங்காடி – அல்லங்காடி – முழுநாள் அங்காடி

அண்ணாகண்ணன்

இரவில் கடைகளைத் திறந்து வைத்தால் என்ன என்று சில மாதங்களுக்கு முன்புகூட யோசித்திருக்கிறேன்.

இரவு சாப்பிடத் தாமதமாகி, சில நேரங்களில் 11, 12 மணிக்கு உணவகங்களைத் தேடிய அனுபவம், எனக்கு உண்டு. பலருக்கும் இருக்கலாம்.

இரவில் வெகு சில மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும். அவசரத்திற்கு ஒரு மருந்து தேவை எனக் கிளம்பி, எந்தக் கடை திறந்திருக்கிறது என்று வண்டி எடுத்துக்கொண்டு வீதி வீதியாகச் சுற்றியது உண்டு.

பின்னிரவுகளில் வண்டிச் சக்கரத்தில் பொத்தல் விழுந்துவிட்டால், பஞ்சர் ஒட்ட வழியின்றி, அங்கேயே வண்டியைப் போட்டுவிட்டு, பேருந்தில் வீடு திரும்பியது உண்டு.

பெட்ரோல் நிரப்பும் நிலையங்களை இரவு 11 மணிக்கு மூடிவிடுவதால், பலருக்கு இடர்ப்பாடுகள் உண்டு.

பேருந்து, ரெயில், ஆட்டோ, டாக்சி போன்றவை இரவில் சட்டென்று கிடைக்காது. கிடைத்தாலும் கட்டணம் அதிகம் கேட்பார்கள். தூக்கம், ஆளை அழுத்தும். அந்த நேரத்தில் நாம் சூழ்நிலைக் கைதியாய் இருப்போம். என்ன கேட்டாலும் கொடுத்தாக வேண்டிய நிலைமை.

இது போன்ற பல சிக்கல்களுக்கு இனி, தகுந்த தீர்வு கிடைக்கலாம். கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணிநேரமும் திறந்து வைக்கலாம் என்ற தமிழக அரசின் உத்தரவு, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கக் கூடியது.

நாளங்காடி, அல்லங்காடி ஆகியவை, தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ளவை. சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சியில் இவற்றைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நாளங்காடி என்பவை, பகல் நேரக் கடைகள். அல்லங்காடி, இரவு நேரக் கடைகள். அல் என்றால் இரவு. அல்லும் பகலும் என்ற இரட்டைச் சொற்களை நினைத்துப் பாருங்கள். எந்நேரமும் கடைகள் திறந்திருப்பதால், மக்கள் இயக்கம் தொடர்ந்து இருப்பதால், மதுரையைத் தூங்கா நகரம் என்றும் அழைப்பது உண்டு.

அடையா நெடுங்கதவம் எனச் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பு உண்டு. பரிசிலர் பரிசு பெறுவதற்கு எவ்விதத் தடங்கலும் இல்லாமல் அரண்மனை வாயில் கதவு மூடப்படாமல் எப்பொழுதும் திறந்தே இருப்பதை அடையா நெடுங்கதவம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இதுபோல், கடைகளின் கதவுகளும் அடைபடாமல் இனித் திறந்தே இருக்கும்.

தமிழக அரசின் இந்த முடிவால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். விற்பனை அதிகரிக்கும். மக்களுக்குக் கூடுதல் சேவைகள் கிடைக்கும். நள்ளிரவிலும் பொருட்களை வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். கடிதங்களும் பொதிகளும் கூட இப்படி வரலாம். நள்ளிரவிலும் வணிக அழைப்புகள் வரலாம்.

அதே நேரம், மின்சாரச் செலவு, மிகுதியாகும். பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்த வேண்டியிருக்கும். கூடுதல் இடங்களில், கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும். ஊழியர்களுக்கு உரிய போக்குவரத்து, உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும். இவற்றை முறையாகத் திட்டமிட்டுச் செய்தால், இரவிலும் சேவைகளை வழங்கலாம். இரவு என்பதால் மக்கள், வீட்டில் முடங்க வேண்டியதில்லை.

இந்த முடிவைக் கடைகள், வர்த்தக நிறுவனங்களுடன் நிறுத்தாமல், அஞ்சல் நிலையம், நூலகம், பூங்கா போன்றவற்றை எந்த நேரத்திலும் திறந்து வைக்கலாம். கடற்கரைக்கு எந்த நேரத்திலும் செல்ல, அனுமதிக்கலாம். திறந்த வாகனத்தில் இரவு நேரச் சுற்றுலாக்களை அமைத்து, ஊர் சுற்றலாம். ஆங்காங்கே கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஊக்கம் அளிக்கலாம்.

அரசு அலுவலகங்களையும் நீதிமன்றங்களையும் கூட, 24 மணி நேரமும் திறந்து வைத்து, தேங்கிக் கிடக்கும் பணிகளை முடுக்கி விடலாம். பணியாளர்களை 8 மணி நேரத்திற்கு ஒருவர் வீதம் சுழற்சி முறையில் பணியாற்ற வைக்கலாம். சில கடைகளையும் அலுவலகங்களையும் பகலில் ஒருவரும் இரவில் ஒருவரும் பயன்படுத்தலாம். தமிழகத்திற்கு இது புதிது என்பதால், முதலில் சிற்சில சங்கடங்கள் இருக்கலாம். ஆனால், தொலைநோக்குடன் செயல்பட்டால், இந்த முடிவினால் பயன்கள் மிகுதி. ஆக்கப்பூர்வமான இந்த முடிவிற்காகத் தமிழக அரசுக்குப் பாராட்டுகள்.

பழைய முறைப்படி, பகலில் மட்டும் திறந்திருக்கும் கடைகளை நாளங்காடி எனலாம். இரவில் மட்டும் திறந்திருக்கும் கடைகளை அல்லங்காடி எனலாம். 24 மணிநேரமும் திறந்திருக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்களை, எந்நேர அங்காடி அல்லது முழுநேர அங்காடி எனலாம்.

ஆனால், அண்மையில் ஒரு பலகையைப் பார்த்தேன். அதில் முழு நேரக் கிளை நூலகம் என இருந்தது. இங்கே இவர்கள் குறிப்பது, பகுதி நேரம் (4 மணி நேரம்) கிடையாது, முழு நேரம் (8 மணி நேரம் அல்லது 12 மணி நேரம்) என்பதே. ஊழியர்களுக்கு முழு நேரப் பணி என்றால், 8 மணி நேரப் பணி என்றே பொருள். எனவே முழு நேர அங்காடி என்றால், மக்களுக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்க, முழுநாள் அங்காடி எனலாம்.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க