Category: நறுக்..துணுக்…

  • பூமியின் புதல்வர்கள்

    சேசாத்ரி பாஸ்கர்

    DSCN1937

    இந்த வெயில் என்றில்லை.நமக்கு எப்போதும் தேவை பச்சை மரங்கள்.அவை பூமியின் புதல்வர்கள். குளிர்விக்க வந்த குட்டி தேவதைகள்.நம்மால் இயன்ற வரை மரங்களை பேண வேண்டும்.அவை நமக்கு என்றும் ஆதரவு.- மரங்கள் அடர்த்தியானால் சூரியன் உக்கிரம் குறையும்-.வாட்டும் வெயில் பூமியில் படர திணற வேண்டும். தனி நபர் முயற்சி, குழுக்களின் முயற்சி தாண்டி அரசு சட்ட ரீதியாக மரம் நடுதலை ஊக்குவித்தால் மனங்கள் குளிரும்.-மனம் குளிர்ந்தால் பதட்டமும் வன்மமும் கொஞ்சம் மறையும். அது தவிர மரங்கள் சப்தம் உள்வாங்கும் தன்மை கொண்டது.ஊரில் இரைச்சல் குறையும். பாண்டி பஜார் மற்றும் எஸ் ஐ இ டி கல்லூரி சாலை பக்கம் சென்று பாருங்கள் -நம் முன்னோர் செய்த நற்காரியம் இன்று பசுமை வ்யாபித்து இருக்கிறது.-கட்டிடங்கள் கட்டும்போது நாலு மரங்களை நட்டால்தான் சான்றிதழ் என்ற நிலை வர வேண்டும். முன்னர் தமிழ்நாட்டில் மழை நீர் சேகரிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது போல இந்த மரங்களை பெருக்கினால் மழை பெய்ய நல்ல வாய்ய்பு.ஒரு சின்ன கணக்கு. இன்று ஆளும் கட்சி பெரும் தொண்டர் படை கொண்ட ஒன்று . முதல்வர் தனது தொண்டர்களுக்கு மரங்களை வளர்க்க ஒரு அன்பான வேண்டு கோள் இட்டால் இது பெருஞ்சாதனயாக திகழும்.–நல்ல அக்கறையுள்ள நபர் யாரவது இதை முதல்வரிடம் சொல்ல முடியும் எனில் அவர் இதனை ஏற்றுக்கொள்வார். சமூக காடுகள் திட்டம் செம்மைப்பட வேண்டும் -மயிலை சட்டமன்ற உறுப்பினரிடம் இது குறித்து பேச உள்ளேன்.எனக்கு நம்பிக்கை இருக்கிறது .கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் தெருவின் இரு பக்கமும் நல்ல மரங்கள் இருப்பின் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? பறவைகள் சுகம் பெறும்.கறவைகள் இளைப்பாறும்.ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து அண்ணாந்து பாருங்கள்.உலகம் பிறந்தது எனக்காக பாட்டு பாடுவீர்கள்

    Share
  • ’நான்’

    சேசாத்ரி பாஸ்கர்

    என்னுள் இருக்கும் “நான்” போக வேண்டும்.சரி.அதை சொல்வது யார்.இந்த நான் தான். சரி நான் போய் விட்டது எனில் மிச்சமிருப்பது என்ன ? அதுவும் நான் தான்.போக சொல்வதும் அது தான்.போவதும் அது தான் எனில் விஞ்சியிருப்பது என்ன ? நானற்ற பெருநிலை எனில் அது போனதை மனதுக்கு உணர்த்தியது யார்? நான் வெளியே செல்லும் சுவாசம் அன்று.அது உணர்தல்.-உணர்தலில் வண்ணம் இல்லை. கசடு இல்லை. நினவு தகட்டின் கீறல் இல்லை.அப்படியே அது இருப்பினும் பெரு உணர்தலில் அது கரைசலுக்கு உட்பட்டது.நான் அகற்றும் புத்தி பின்னால் ஓடும் குதிரை-.இது உயிரில் கலந்தது.ஞானிகள் வாழ்க்கை பாதை தான் சொல்ல முடியும்.அவர் வாழ்க்கை அவர் அனுபவம்.ரமணரை போல உடை துறந்து குகை புகுந்து கௌபீனம் தரித்தால் கூட நமக்கு பக்கத்துக்கு வீட்டுக்காரன் பற்றிய சிந்தனை தான் உள்ளே புகும்.இது ஆழ் மனதை கிண்டி கடையும் செயல்.கும்பல் சமாசாரம் இல்லை. சறுக்கு மரத்தில் நாம் தான் சறுக்கி செல்கிறோம்.சறுக்கு மரம் அப்படியே.இது அவஸ்தை .பெருந்துயரம்.இதில் கலக்க வேண்டும்.கலங்க கூடாது. வானம் முட்டும் அளவு இலைகள் துளிர்த்தாலும் நீர் என்னவோ வேருக்கு தான்.வாழ்க்கை பிரம்மாண்டம்.-பிரம்மாண்டத்தில் கனவும் இல்லை. ஏழ்மை இல்லை.செல்வாக்கு இல்லை. செழிப்பு இல்லை.வாழ்வு ஜெயிக்க அல்ல. தோழமை கொள்ள.அது கூடவே சென்று திரும்பினால் பக்கத்தில் எதுவும் இல்லை—-.இங்கு தோற்று போவது கம்பீரம்.

    Share
  • சிவவாக்கியர்

    பவள சங்கரி

    im20110164sivavakkiyar

    ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமையே
    கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
    உயிராவது எதுவடா? உடம்பாவது எதுவடா ?
    உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது எதுவடா?
    உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானியே சொல்லடா ?

    – சிவவாக்கியர்

    பொருள் :

    ஒரு முழுமையான உயிரினமாய் இந்த பூமியில் வலம்வரும் உன்னால் உன் மூலம் அறிய இயலுமா? ஒரு துளி நீரில் உருவாகி, கை, கால், கண், மூக்கு, செவி என பல உறுப்புகளும் தோன்றியது எங்கனம்? ஒவ்வொன்றையும் தோற்றுவித்து அனைத்தையும் இணைத்து ஓர் உருவமாய் அதைச் செயல்படச் செய்தது யார்? இதற்கும் மேலாக உயிர் என்ற ஒன்றை அதனுள் புகுத்தி, ஆன்மா என்றொரு சக்தியையும் ஒளித்து வைத்திருப்பதை அறிந்தவர் எவர்? இவ்வுயிர் அந்த உடலோடு கலப்பது எப்போது? எங்கனம்? உயிரினால் உடலெடுத்து அலையும் ஆணவத்தின் அரசனே பதில் கூறும்!

    ஆம் நம் உயிரைச் சுமந்துத் திரியும் உடலின் ஆக்கத்தையே புரிந்துகொள்ள முடியாத அகங்காரமும், ஆணவமும் ஆட்டிப்படைக்கும் நிலையிலிருந்து மீண்டுவந்தால்தான் நம் பெருமூளை விரிவடைந்து இறைசக்தியை முழுமையாய் உணரும் பிரபஞ்சப் பார்வை விரிவடையும். ஆக, அகந்தையை அழிப்பது மட்டுமே இறை நிலையின் முதற்படி. இறைமையை உணரச்செய்வதும் இதுதான்!

    Share
  • ஆணவ மலம்

    பவள சங்கரி

    zw95

    இவ்வுலகில் அழிவின்றி நிலைத்திருப்பவையாக நம் சைவச் சித்தாந்தங்கள் கூறுபவை – பதி, பசு, பாசம் என்பன. பதி எனும் இறையை அடைவதற்கு பசு எனும் உயிர்களுக்குத் தடையாக இருப்பவை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களே.

    உயிர்கள் சத்தியம், அசத்தியம் எனும் இரண்டையும் பகுத்துணர இயலாத இருளாக அறிவொளியை மறைக்கக்கூடியதே இந்த ஆணவ மலம். இறை சக்தியை அண்டவிடாமல் நீச மயக்கத்தில் உழலச் செய்து, அறிவை கீழ் நிலைக்கு எடுத்துச்சென்று பொய் பக்தியை உருவாக்குவதும் இந்த ஆணவ மலமே.

    கன்மம் என்பது கர்ம வினையின்பாற்பட்டது. அவரவர் செய்யும் வினைக்கேற்ப அதனதன் பலாபலன்கள் மாறுபடுகிறது. நற்பண்புகளுடன் நல்வினையாற்றுவோர் நற்பலனையும், தீய பண்புகளுடன் தீவினையாற்றுவோர் தீய பலன்களையும் அனுபவிப்பர் என்பது நியதி.

    உடல், உலகு மற்றும் உலகில் காணும் அனைத்துப் பொருட்களையுமே மாயையைக் கொண்டே இறைவன் படைக்கிறான் என்பது சைவசித்தாந்தத்தின் வாக்கு. அந்த வகையில் இந்த மலம் உயிர்களுக்குப் பகையாகக் கருதப்பட்டாலும், அறிவின் மயக்கத்தை நீக்கவல்ல ஒளியைப் பாய்ச்சுவதானால் நல்வழியில் தீண்டப்படும் மாயையினால் இறைவனை அடைய முடியும் என்பது சித்தர் வாக்கு. தீய வழியில் பயன்படுத்தப்படும் மாயை ஒருவரை அதல பாதாளத்தில் கொண்டு தள்ளிவிடும் என்பதும் இயற்கை நியதி. இதற்கு இப்பூவுலகின்கண் காணும் ஆயிரம் நிகழ்வுகளே சாட்சி!

    Share
  • பஞ்சமாபாதகம்

    பவள சங்கரி

    கொலை, பொய், களவு, கள்ளூண், குருநிந்தை ஆகிய பஞ்சமாபாதகங்கள் என்பது மிகவும் பெரியதொரு பாவம் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கெல்லாம் கூடப் பரிகாரமும் கழுவாயும் உண்டு என்கிறது புறநானூறு.

    வேதத்தில் வல்லவர்களான அந்தணர்களைக் கொல்வது, பெண் கொலை புரிவது , குழந்தைகளை அழிப்பது போன்றவைகள் கொடும் பாவம் என்று கருதப்பட்டாலும் இந்தப் பாவங்களையெல்லாம் விடக் கொடுமையானது பொய் சொல்வதுதானாம்.

    பொன்ற வான்அந்தணர் பெண் புதல்வரைக்
    கொன்ற பாதகத்தில் கொடும் பொய்
    என்பது செஞ்சடை வேதிய தேசிகர் வாக்கு. – திருப்பனந்தாள் புராணம்

    “பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்ற பழமொழி உறுதியாகச் சொல்லும் உண்மையும் இதுதான்.

    வள்ளுவப் பெருந்தகை இதையே

    பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று (297)

    அதாவது பொய்யாமையை மட்டும் கடைபிடித்தால் போதும்; மற்ற எந்தவொரு தர்மமும் நீ செய்ய வேண்டிய தேவையில்லை என்கிறார்.

    Share
  • “ வழுக்கை “

    சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன் முடிமாற்று சிகிச்சையின் பலனாய் உயிரிழந்தவர் ஒரு மருத்துவர் என்று வழுக்கை விழுந்த யாரோ ஒருவர் தன்னை அறிவாளியாக நினைத்துக்கொண்டு அறிவாளிகளுக்கு வழுக்கை விழும் என்று சொன்னதை நம்பி வழுக்கை விழுந்த பலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்
    ( இளநீருக்கும் வழுக்கை உண்டு )

    நம் தலையில் வழுக்கை விழக் காரணம் அறிவை உபயோகப்படுத்துவது அல்ல ஏனென்றால் நமக்கிருக்கும் அறிவில் இரண்டு சதவிகதம் கூட நாம் இன்னும் உபயோகிக்கவில்லை என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். ஆகவே அதிகமான உபயோகத்தால் தலை சூடாகி வழுக்கை விழுவதாக யாரும் தவறாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். தலையில் மயிர்க்கால்களின் வேர் சத்து இழப்புதான் முடி கொட்டுவதற்கும் வழுக்கைக்கும் உண்மையான காரணம் பூமியில் சத்தில்லையென்றால் பயிர் வளராது தலையில் சத்தில்லையென்றால் ( நான் மூளையைச் சொல்லவில்லை ) கபாலத்தில் முடிவளரும் பூமியில் சத்தில்லை என்றால் முடி வளராது அப்படியே வளர்ந்தாலும் வேர்க்கால்கள் பலகீனமாய் பெயர்ந்து விழுந்து வழுக்கையை உண்டாக்கும்.

    நம் முன்னோர்கள் மூடர்களல்ல குழந்தைக்கு அடிக்கடி மொட்டை அடிப்பார்கள் அப்படி மொட்டை அடிக்கும் போது வேர்கால்களில் இருக்கும் ஒருவித திரவம் தலையெங்கும் பரவும் அது மட்டுமல்ல வெட்ட வெட்ட வேர்க்கால்களின் சக்தி அதிகமாகும்.

    நன்றாக யோசித்துப் பாருங்கள் நரை விழுந்தால் அந்த முடியைப் பிடுங்காதே என்பார்கள் ஏனென்றால் அந்த முடியைப் பிடுங்கும் போது அதன் வேர்க்கால்களில் இருக்கும் திரவம் மற்ற முடிகளின் வேர்க்காலிலே பட்டு அந்த முடிகளும் வெண்மைத் தன்மை பெற்று வளரும் இதுதான் நரைமுடி அதிகரிக்க காரணம்.

    அது மட்டுமல்ல தேங்காய்க்கும் வழுக்கைக்கும் தொடர்பு இருக்கிறது அதனால்தான் வழுக்கை விழாமல் முடியின் சக்தி அதிகரிக்க தேங்காய் எண்ணெய் உபயோகிக்கிறோம்.

    ஆக சிறு வயதிலிருந்தே மொட்டை அடித்து தேங்காய் எண்ணெய் தடவி பராமரித்தால் முடி நன்றாக வளரும் வழுக்கை விழாது இழுக்கையும் வழுக்கையும் வந்தபின் களைய இயலாது என்பதே உண்மை

    ( கேரளப் பெண்களின் கருகரு கவர்சிக் கூந்தல் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல )

    ( நான் மொட்டை அடித்து என்று சொன்னது அவரவர் தலைக்கு மற்றவர் தலைக்கு அல்ல )

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    Share
  • வீரச்சிறுவன்!

    பவள சங்கரி

    வீரர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் வீரர்களாகவே அவதரிக்கிறார்கள். விவேகமும், வீரமும் இணை பிரியாதது!

    வீரம்

    vvv13போக்குவரத்து நெரிசல் மிகுந்த கொல்கத்தா சாலையொன்றில் வெகு காலம் முன்பு நடந்த உண்மைச் சம்பவம் இது. குதிரை வண்டிகளே முக்கியமான போக்குவரத்து சாதனமாக இருந்த காலம் அது. ஒரு தாயும், குழந்தையும் குதிரை வண்டியில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். என்ன காரணமோ தெரியவில்லை. அந்தக் குதிரைக்கு திடீரென்று மதம் பிடித்துவிட, சாலையில் கண்மண் தெரியாமல் தாறுமாறாக வண்டியை இழுத்துக்கொண்டு ஓடுகிறது. கட்டுப்படுத்த இயலாத வண்டிக்காரரும் கீழே தள்ளப்பட்டார். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் செய்வதறியாது திகைத்து ஓடுகின்றனர். என்ன அதிசயம்! ஒரு சிறுவன் மட்டும் அந்த வேகத்தைக் கிழித்துக்கொண்டு அதனூடே புகுந்து அந்தக் குதிரையை கட்டுப்படுத்தி அந்தத் தாயையும், குழந்தையையும் காப்பாற்றிவிடுகிறார். யாரந்த பிறவி வீரர்? பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் என உலக மக்களால் கொண்டாடப்பட்ட சிறுவன் நரேந்திரன்தான் அந்த வீரச்சிறுவன்!

    Share
  • உலக சுற்றுச்சூழல் தினம்!

    13315785_911176185695591_4282757024133724492_n

    இன்று உலக சுற்றுச்சூழல் தினம்.. சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்பதற்கு என்ன செய்யலாம்? கோவையில் ஒரு பிரதான சாலையில் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமையன்று எந்த வாகனங்களும் செல்லாமல் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடவும், சுற்றுச்சூழல் மாசின்றி இருக்கவும் வழிவகுக்கும் வகையில் இந்து நாளிதழ், ரோட்டரி சங்கம், மற்றும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மக்களும் இணைந்து சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மனதார வாழ்த்துவோம்! நல்ல ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வு செயல்! தொடர வாழ்த்துகள்.

    Share
  • பொதுநலம்!

    ராமன் தனது ராமன் விளைவை செயல்முறை விளக்கத்துடன் விவரிக்கும் காட்சி

    பவள சங்கரி

    பௌதீக உலகின் முடிசூடா மன்னன் சர்.சி.வி.இராமன் தமது அரிய ஆய்வுகளுக்காக நோபல் பரிசு பெற்று உலக அரங்கில் நம் பாரதத்தின் பெருமையை உயரச்செய்தவர். முதலில் வங்காள மாநிலத்தின் உதவி கணக்காய்வுத் தலைவராக [Accontant General] ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் உயர் பதவியில் இருந்தவர். பகல் நேரங்களில் அலுவலகப் பணியை கவனித்துவிட்டு ஓய்வு நேரத்தில், பௌதிகத்தின் மீது தான் கொண்ட அதிக ஈடுபாடு காரணமாக, கல்கத்தா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்துக்குத் தினமும் அதிகாலையிலும், மாலையிலும் சென்று தமது பௌதிக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தார். இவருடைய நேர்மையான பணித்திறத்தினால் அலுவலகத்தில் இவருக்கு மேலும் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருந்தது.

    இந்த நேரத்தில்தான் கல்கத்தா பல்கலைக்கழக துணை வேந்தர் சர்.சி.வி. இராமனிடம் தம் அலுவலக, கணக்காய்வுத் தலைவர் பதவியை விட்டுவிட்டு முழு நேர பௌதிக ஆராய்ச்சியில் ஈடுபட்டால் நாட்டிற்கும், மக்களுக்கும் பெரும் சேவையாக இருக்குமே என்ற தம் கருத்தை எடுத்துரைத்தார். அக்கருத்தை மிக மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட இராமன் மிகப்பெரும் வருமானமும், கௌரவமும் கொடுத்த அப்பெரும் பதவியைவிட்டு விலகி அதைவிட மிகவும் குறைந்த வருமானமே தரக்கூடிய பௌதிக ஆராய்ச்சிப் பணியை மிக மகிழ்வுடன் தம் முழுநேரப் பணியாக ஏற்றுக்கொண்டார். அதன்பின் மீப்பெரும் சாதனைகள் பல செய்து நோபல் பரிசும் வென்றார்.

    இன்றைய மேதைகளின் நிலையை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது..   🙁

    Share
  • களப்பலி வீரர் சிற்பம்!

    பவள சங்கரி

    DSCN1622

    DSCN1620

    DSCN1616

    DSCN1615

    மூதுபுகழ் கொண்ட கொங்கு நாட்டில் வீரப்பெண்மணிகளின் வரலாறு எண்ணற்றவை. தங்கள் நாட்டு மன்னன் போரில் பகைவர்களை அழித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தங்கள் தலையை வெட்டி வெற்றித் தெய்வமாகிய காளி அன்னை அல்லது கொற்றவைக்கு காணிக்கையாக்கும் வழமை இருந்துள்ளது. நவ கண்டம் என்பர் இதை. கி.பி. 1265 – 1285 காலத்திய ராஜகேசரி வர்மன் என்கிற வீரபாண்டித் தேவரின் கல்வெட்டுகள் இதற்கு ஆதாரமாக உள்ளன. அவ்வழக்கத்தின்படி பெண் வீரர்களும் தங்களையே களப்பலி கொடுத்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக அந்தியூர் சிறீபத்திரகாளியம்மன் திருக்கோவிலில் தமது தலையைத் தாமே வெட்டிக்கொண்டு பலி கொடுக்கும் வீரப்பெண்மணிகளின் சிலைகள் கேட்பாரற்று குப்பைமேட்டில் மண்ணில் புதைந்து கிடக்கும் அவலத்தைப் பார்க்க வருத்தமாகத்தான் இருந்தது.. ஆலயங்கள் புதுப்பிக்கப்படும்போது இதுபோன்று வரலாற்று ஆவணங்களின் அருமை தெரியாமல் அழிக்கப்பட்டுவிடுகின்றன.

    Share
  • இராகவேந்திரரின் இறுதி உபதேசங்கள்!

    SriGuruRaghavendra-full;init_

    அருள்மிகு இராகவேந்திர சுவாமிகளின் இறுதி உபதேசங்கள்! அத்தனையும் சத்திய வாக்குகள்!

    1671 ஆம் ஆண்டு சுவாமிகள் சமாதி நிலை அடையும்பொருட்டு பிருந்தாவனம் செல்ல ஆயத்தம் செய்யும் இறுதி வேளையில் தம் பக்தர்களுக்கு இறுதியாக அளித்த முத்தான உபதேசங்கள்!

    வாழ்க்கையில் சரியான நடத்தை இல்லையெனில் சரியான சிந்தனையும் இராது.

    நல்லார் மற்றும் தகுதியுடையாருக்குச் செய்யும் உதவியோ, தர்மமோ கடவுளின் உளமார்ந்த பூசைக்கு நிகராகும்.

    சாத்திரத்தை முழுமையாகப் பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று சொல்லிக்கொண்டு அதிசயங்கள் செய்வோரை விட்டுவிலகியிருங்கள்.

    நானும், சிரீமத் ஆசாரியாரும் நிகழ்த்தியுள்ள அதிசயங்கள் அனைத்தும் இறையருளினாலும், அவர்தம் மகிமையை உலகோருக்கு உணர்த்தவும், இறை சக்தியால் எப்பேர்ப்பட்ட பெரும் சக்திகளையும் அடைய முடியும் என்பதை பறைசாற்றவும் நிகழ்த்தப்பட்டதேயன்றி அதில் எந்த பொய்யும், பித்தலாட்டமும் இல்லை.

    சரியான ஞானத்தை மிஞ்சிய அற்புதங்களோ, அதிசயங்களோ எங்கும் இல்லை. அத்தகைய ஞானம் இல்லாதோரின் செயலும், அதிசயங்களும், சூனிய வித்தைகள் மட்டுமே. அதைச் செய்பவருக்கும், நம்புபவருக்கும் எப்பயனும் விளைவிக்காது.

    கடவுள் மேல் வைக்கும் குருட்டு பக்தியால் எப்பயனும் இல்லை. இறைவனின் மேலாண்மையை முழுமையாக உணர்ந்து செலுத்தும் உண்மையான பக்தியே முழுமையான பயனளிக்கக்கூடியது.

    கடவுளிடம் உள்ள பற்றைக் கடந்து மற்ற இதர தேவதைகளிடமும் அவரவர்கள் தகுதிக்கேற்ப பக்தி செலுத்துதல் நலம்.

    இவ்வாறு உபதேசங்கள் செய்து முடித்தவர், பிரணவ மந்திரத்தை ஓத ஆரம்பித்து ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்துவிட, ஒரு தருணத்தில் கையில் இருந்த அவருடைய சபமாலை ஓய்ந்து நின்றுவிட, அவர்தம் சீடர்கள் அவருடைய முக்தி நிலையை புரிந்துகொண்டு அவரைச் சுற்றி பிருந்தாவனச் சுவர் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்!

    Share
  • உலக புத்தக தினம்!

    பவள சங்கரி

    harry-potter-500

    எழுத்தாளர்களின் தலைவிதி பெரும்பாலும் பல்வேறு நிராகரிப்புகளின் இடையேதான் நிர்ணயிக்கப்படுகிறது. இது இன்று நேற்று அல்ல..  பல காலமாக தொடர்வதுதான். உலகின் மிகச் சிறந்த படைப்பாளர்களின் ஒருவரான பிரித்தானிய எழுத்தாளரான ஜே. கே. ரௌலிங் என்பவரால் எழுதப்பட்ட ஏழு கனவுருப் புனைவுப் புதினங்களின் தொகுப்புதான்  ஹாரி பாட்டர் என்ற நூல். இந்த நூல் பிற்காலங்களில் எவ்வளவு பிரபலமடைந்திருக்கிறது என்பது நாம் அறிந்ததே. ஆனால் ரௌலிங் இந்த புதினத்தை எழுத ஆரம்பித்தபோது உணவு, உறைவிடம், உடை என அடிப்படைத் தேவைகளுக்குக்கூட அல்லாடிய நிலைதான் என்பதை எத்தனைபேர் அறிந்திருப்போம்? அவர் பெரும் மன வேதனையில் இருந்த காலம் அது. தெருவோரங்களிலும், காப்பி கடைகளிலும் அமர்ந்து ஒரு பழைய தட்டச்சு இயந்திரம் மூலமாக தட்டச்சிய புதினத்தை பல பதிப்பாளர்களிடம் கொண்டு சென்று தவம் கிடந்தும்  அவர்கள் பதிப்பிட மறுத்தனர். இறுதியாக  ஒரு மிகச் சிறிய பதிப்பு நிறுவனமான ப்ளும்ஸ்பரி என்ற நிறுவனம்  1,000 பிரதிகளுக்கு 2,250 பவுண்டு தருவதாக ஒப்புக்கொண்டு வெளியிட அத்துணையும் மிக விரைவிலேயே விற்றுத் தீர்ந்து வசூலிலும் சாதனை படைத்து சரித்திரம் படைக்க ஆரம்பித்துவிட்டது!

    Share
  • சட்டத்தின் உரிமை மீறல்

    — சு.காந்திமதி.

    சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்று நாம் அனைவரும் கூறுகிறோம். அது மட்டும் அல்ல மதம், இனம், மொழி, தேசியம், மற்றும் பாலியல் ரீதியாக எந்தவொரு பாகுபாடின்றி அனைவருக்கும் எல்லா இடங்களிலும் மனித உரிமை கிடைக்கப் பெற சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் தனி மனிதர் ஒருவருக்குப் பிரச்சனை என வந்தால் நாம் எல்லோரும் விலகி ஓடுகிறோம். வீட்டில் நிம்மதியாகக் கூட உறங்க முடிவதில்லை.

    பொதுவாகக் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் திருவிழாக்கள் பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் சூழ்நிலை தவறி சண்டை சச்சரவுகள் வந்து விடுகின்றது. இதில் சிலரது கோபத்தினாலும் சூழ்ச்சியினாலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்படப் பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இதில் எந்தத் தவறும் செய்யாத அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சண்டை சச்சரவுகளில் ஈடுபடாத அப்பாவிகள் வீட்டில் இருந்தாலும் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் எந்த ஒரு செயல்களிலும் ஈடுபடாத அப்பாவி பொது மக்களையும் பிரச்சனைக்கு உட்படுத்துகின்றனர். மேலும் சூழ்நிலையும் அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிடுகிறது. சூழ்நிலையும், அக்கம் பக்கத்தினர் கூறுவதையும் மதிக்காமல் சம்பந்தம் இல்லாத அப்பாவி பொது மக்கள் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்கின்றனர். இதனால் பொது மக்கள் அதிக மன உளைச்சலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது சட்டத்தின் உரிமை மீறல் தானே!

    ____________________________________________

    சு.காந்திமதி
    ஆராய்ச்சியாளர்
    அரசியல் அறிவியல் மற்றும் நிர்வாக வளர்ச்சித் துறை
    காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம், காந்திகிராமம்

    Share
  • எளிமையான தலைவர்!

    பவள சங்கரி

    லால்

    இத்தகைய மாமனிதர்களும், அரசியல் தலைவர்களாக வாழ்ந்த புண்ணிய பூமிதான் நம் இந்தியா! நம்புங்கள் நண்பர்களே..  ஆம், நம்ம லால் பகதூர் சாஸ்திரி பற்றித்தான் சொல்கிறேன். சாஸ்திரி அப்போது நேருவின் மந்திரி சபையில் இருந்தார். நம்முடைய அண்டை நாடான நேபாளத்திற்கு ஒரு விழாவிற்காகச் செல்ல வேண்டிய நேரத்தில், நேருவிற்குப் பதிலாக சாஸ்திரியை அனுப்பிவைத்தவர், அது கடுமையான குளிர் காலம் என்பதால் தம்முடைய கோட் ஒன்றை அந்தக் குளிருக்கு அவருக்குத் தேவைப்படும் என்று சொல்லி அவரிடம் கொடுத்தனுப்பினார். இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் சாஸ்திரி, அதாவது நேருவின் மறைவிற்குப் பிறகு நம் நாட்டின் பிரதமரானார். அப்போது இலண்டனில் நடந்த காமன்வெல்த் பிரதம மந்திரிகளின் மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டுக்கொண்டிருந்தார் சாஸ்திரி. அவருக்குத் தேவைப்படும் என்பதையறிந்த அவருடைய மனைவி சாஸ்திரி அவர்களுக்கு ஒரு கோட் தைக்க ஏற்பாடு செய்தார். இதையறிந்த சாஸ்திரி அதை மறுத்துவிட்டு நேரு பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்குக் கொடுத்த அதே கோட்டை தன்னுடைய அப்போதைய அளவிற்கு சரிசெய்து தரும்படி தையற்காரரிடம் சொல்லி, சரிசெய்த பின்பு அந்தக் கோட்டையே இலண்டன் மாநாட்டிற்கு அணிந்து சென்றாராம்!

    Share
  • படைப்பாளியின் படைப்பு பொதுவுடமையா?

    பவள சங்கரி

    11593728

    படைப்புகள் வெளியிட்ட பின்பு அது படைப்பாளிக்கு மட்டும் தனியுடைமை அல்ல .. பொதுவுடைமையாகிவிடுகிறது என்பார்கள். படைத்தவர்களே அதைத் தள்ளி நின்று ஒரு வாசகராகத்தான் காண முடியும்! இந்த யதார்த்த நிலைக்கு உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிகாசோ மட்டும் விதிவிலக்கா என்ன?

    the-blockbuster-mystery11-16-11-8

    ஆம், ஒரு முறை பிகாசோ வீட்டில் தம் நண்பர்களுக்கு மிகப்பெரிய விருந்து வைத்துக்கொண்டிருந்தாராம். எல்லோரும் ஆனந்தமாகக் கொண்டாடிவிட்டு மகிழ்ச்சியின் எல்லையில் திளைத்தவாறு அமர்ந்து அளவளாவிக்கொண்டிருந்தார்களாம்.. அப்போது அவர்களில் ஒரு நண்பர் வீட்டை சுற்றிப்பார்த்துவிட்டு வந்தவர், சுவர்களையெல்லாம் கவனித்துவிட்டு, பிகாசாவின் ஒரு ஓவியம்கூட அவருடைய வீட்டுச் சுவற்றை அலங்கரிக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் , ‘ஏனப்பா உன் ஓவியம் உனக்கே பிடிக்காதா, ஒன்றுகூட இங்கு இல்லையே’ என்று கேட்டாராம்.

    img276

    அதற்கு ஓவியர் பிகாசா மிக யதார்த்தமாக, ‘சுவரில் ஓவியங்களை மாட்டி அழகு பார்க்க எனக்கும் ஆசைதான். ஆனால் அதன் விலை எனக்குக் கட்டுப்படி ஆகாதே.. நான் என்ன செய்ய..?’ என்றாராம்!

    Share