சிறுகை அளாவிய கூழ் – 6

இவள் பாரதி

 
தூங்கும்போதுpapaa1
கனவில் அடித்துவிட்டதென
முகபாவம் செய்து
உதடு சுழித்து
அழும் குழந்தை

வீட்டுப் பெரியவர்கள் சொல்கிறார்கள்
சாமியுடன் விளையாடும்போது
சேட்டை செய்ததால்
‘சாமி’அடித்து விட்டதென

அதுசரி
குழந்தையை அடிக்கும் தைரியத்தை
யார் கொடுத்தது சாமிக்கு?

***

முதல் முடியிறக்கும்போது
நீயழுத அழுகையில்
உன்னெச்சிலிலும் வெண்நுரை வந்தது

உன் தாத்தாவின் பிடிதளர்த்தலில்
நீ இலேசாக திமிறியதில்
உச்சிக்குழி மேவிய
உன் இளந்தலையில் கீறல்பட்டு
இரத்தம் பரவியதுகண்டு
முகந்திருப்பியழுதேன்
குனிந்தபடியே ஏறிட்ட
நீ நிறுத்தியிருந்தாய்
உன் அழுகையை

உன் காயமாறுகிற
காலம் தேவைப்பட்டது
எனதழுகையை
நிறுத்துவதற்கு
***

Share

Comments

One response to “சிறுகை அளாவிய கூழ் – 6”

  1. சச்சிதானந்தம்

    “குழந்தையை அடிக்கும் தைரியத்தை
    யார் கொடுத்தது சாமிக்கு?”

    அருமை! வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *