நந்திதா

ஏசி ரூம். நல்ல மெத்தென படுக்கை. படுக்கையில் இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டிருந்தான் ராமன். மனம் மட்டும் அசை போட்டுக் கொண்டே இருந்தது.  தலைக்குள் ஏதோ சுழன்று சுழன்று வந்து கொண்டே இருந்தது. தனக்குத்தானே புலம்பிக் கொண்டே இருந்தான்.

அவன் நிலை இப்படி ஆகும் என்று ஒருவரும் எதிர்ப்பார்க்கவில்லை. உறவினர் வந்து பார்த்து விட்டுச் சென்றனர். நல்ல வேளை. கல்யாணம் ஆகவில்லை. ஆகிருந்தால் அந்தப் பெண்ணின் கதி என்ன ஆகியிருக்கு​மோ என்று அலுத்துக் கொண்டும் அழுதுகொண்டும் அகன்றனர்.

ஆனால் பெற்றவள் அகலமுடியுமா? பொறுமையாக, இராப்  பகலாக, கண் அசராமல் பார்த்துக் கொள்கிறாள். இதோ இப்போ கூட நேரம் ஆகி விட்டதே என்று, கடிகாரத்தைப் பார்த்து விட்டு சாதம் பிசைந்து வாயிலிட்டாள். உடனே மாத்திரைகளை வாயிலிட்டு முழுங்கச் சொன்னாள்.

ராமனின் தலையை கோதி விட்டாள். மாத்திரை வயிற்றில் தஞ்சம் அடைந்ததும் படுக்கையில் வீழ்ந்தான்.  எங்கும் போகவோ, யாரையும் பார்க்கவோ பிடிக்கவில்லை. எந்த வே​லையிலும் மனம் லயிக்கவில்லை. அவனைச் சுற்றி டி.வி., மீயுசிக் சிஸ்டம், சி.டி. புஸ்தகங்கள்.. ஊஹூம்… ஒன்றும் பிடிக்கவில்லை. தலையை தலையணையில் புதைத்துக் கொண்டு அழுதான், புரண்டான்.

அவன் வாய் முணு முணுத்தது. உன் அருமை தெரியாமல் உன்னை உதாசீனம் செய்து விட்டேன். அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா. என்னை மன்னித்து விடு. இல்லை என்றால் மரித்து விடுவேன் போல இருக்கு.

விபரம் தெரிந்த நாள் முதல் நீ என்னருகில் வந்ததுமே உலகத்தையே உதறி விட்டு, உன் மடியில் தஞ்சமடைந்தேன். அதை நீ மறந்து விட்டாயா. என்னைச் சுற்றி என் கண்களைச் சுற்றி வந்து, என் இமைகளை வருடிக் கொடுத்த மறுகணமே நான் என்னை மறந்து உன் பிடியில் சிக்கிக் கிடந்தேன் விடியும் வரை. அந்த சுகமே அலாதி. மில்லியன் டாலர் கொடுத்தாலும் விலைக்கு வாங்க முடியாது.

உயர்நிலைப் பள்ளியில் படிக்க வேண்டியது மலை போல் இருக்க என்னை சீண்டிப் பார்ப்பாய். உன் பிடியிலிருந்து விலக பல முயற்சிகள், பல உத்திகள், எல்லாம் பயன் அற்றுப் போயின.சில சமயம் எனது பலஹீனத்தைப் பயன் படுத்த உன் சாகசத்தில் பலியானேன்.

பரிக்ஷை சமயத்தில் நான் இப்படி பலியாவதைக் கண்டு என் அம்மா பதறி எனக்கு காவலாக இருந்திருக்கிறாள். அவளைக் கண்டு நீ ஓடி ஒளிந்து கொண்டாய். பரிக்ஷைக்குப் பிறகு, பள்ளி திறக்கும் வரை நாம் இருவரும் உல்லாச பறவைகளாகி கனவு உலகில் பறந்து மெய் மறந்து இருந்தோம்.

சே! மறுபடியும் பள்ளி திறந்து படிப்பு, அதன் பிறகு, மேல் படிப்பு. பட்டங்கள். பொறுப்புகள் சேர சாதிக்க நினைத்தேன். அப்பொழுதுதான் முதன் முதலாக கொஞ்சம் உன்னிடமிருந்து விலகினேன். ஏதாவது ஒன்றைப் பெற வேண்டுமானால் மற்றொன்றை தியாகம் செய்ய வேண்டும் என்பது இயற்கையின் விதி. சத்தியமாக நிரந்தரமாக உன்னை விட்டு விலக நினைக்கவில்லை. தற்காலிகமாகத்தான். சாதனைகள் வெற்றிக​ளைக் குவித்தன. பெரிய வேலைகள் என் வீடு தேடி வந்தன. என் வேலையில் நான் கண்ட வெற்றி, அதைத் தொடர்ந்த பெருமைகள், பரிசுகள், ​கெளரவங்கள், பட்டங்கள் என்னை வெறியனாக்கியது. இப்பெருமைக​ளை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள பேராசைக் கொண்டேன். என் பதவி  பணம், வீடு, வாகனம், ஆடம்பர வாழ்க்கையை அள்ளிக் குவித்தன. அதே சமயம் நமக்குள் ஏற்பட்ட விலகல், விரிசலாகி நிரந்தரமாக உன்னை முழுவதுமாக இழந்து தொலைத்தும் விட்டேன். உன்னை மதிக்காத என்னை உதறி விட்டு எங்கோ ஓடி ஒளிந்து கொண்டு என்னைப் பழி வாங்குகிறாய். உன் அருமையை இப்பொழுது உணர்ந்து விட்டேன். நீ கொடுத்த தண்டனைப் போதும்.

நீ முழுவதுமாக என்னை விட்டு விலக என் உடல் கெட்டு விட்டது. உணவு செரிப்பது இல்லை. முன் போல் அலுவலத்தில் வேலையைக் குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் மேலதிகாரிகள் என்னை விட்டு வேறு ஆட்களைத்தேடி செல்ல எனக்கு வேலைப் போய்விட்டது. நண்பர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை.

அம்மா பாவம். எவ்வளவோ முயற்சி எடுக்கிறாள். நான் பழைய நிலைக்கு வர தினமும் கோவில், அர்ச்சனை, சதா வீட்டில் மந்திர ஓசை, யாகம் ஏன் மாந்திரீகம் கூட பார்த்து விட்டாள். பெரிய பெரிய டாக்டர்களிடமும் சென்றேன். என்னைச் சுற்றி மருந்துகள். இப்பொழுது 24 மணி நேரம் படுக்கையில் புரளுகிறேன்.

கண்ணாடியில் என் முகம்……. எனக்கே சகிக்கவில்லை. கண்கள் சிவந்து கன்னங்கள் ஒட்டி, தோல் சுருங்கி…நடந்தால் தள்ளாட்டம். சில சமயம் ஆள் மாறாட்டமாகத் தெரிகிறது. இதற்கு காரணம் நீதான். நீயேதான். உன்னை விட்டு விலகியதற்கு நீ கொடுக்கும் தண்டனை. கொஞ்சம் கொஞ்சமாக கொல்வதற்குப் பதில் ஒரே அடியாக கொன்று விடு.

ஐய்யோ.. நான் படும் அவஸ்தையைப் பார். எங்கே போய் விட்டாய். உன்னை எங்கே போய் தேடுவது. என் ஆஸ்தி பூராவும் செலவு செய்தால்கூட உன்னைக் கண்டு பிடித்துக் கொடுக்க முடியாது போல் இருக்கிறதே…

டாக்டர்கள், நண்பர்கள், உறவினர்கள் கூறுவது.. நான் படும் அவஸ்தைக்கு உன் பிரிவே காரணம். எனக்கும் புரிகிறது. ஆனால் உனக்குப் புரிய வில்லையே. அம்மாவின் மடிதான் சொர்க்கம் என்பார்கள். ஆனால் நீ இல்லாததால் அது கூட முள்ளாய்த் தெரிகிறது இப்பொழுது.

கெஞ்சிக் கேட்கிறேன். வந்து விடு. நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்து விட்டாய். எதை இழந்தாலும் உன்னை ஒருவரும் இழக்கக் கூடாது. உதாசீனம் செய்யக்கூடாது. உன்னை இழந்தால் வாழ்க்கையை இழக்க நேரிடும். பைத்தியம் போல் பேசுகிறேன் என்று நினைக்கிறார்கள். பைத்தியமாகி விடுவேன் என்ற பயத்தில் கதறுகிறேன்.

வா… தூக்கமே…என் மேல் கருணைக் காட்டு. இயற்கையாய்த் தூங்கி பல மாதங்களாகி விட்டது. நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு ஈடு இந்த உலகில் எதுவுமே இல்லை…

நித்திரா தேவியின் காதில் ஐ.டி.யில் வேலை செய்த ராமனின் புலம்பல் விழுமா?!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *